சு. யுவராஜனின் அல்ட்ராமேன் சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை

12806074_107760769619361_6004662501850992085_nமலேசிய இலக்கிய பரப்பில் 2000த்தாம் ஆண்டுகளில் முனைப்புடன் எழுத வந்த இளைஞர்கள் சிலரில் சு.யுவராஜன் குறிப்பிடத்தக்க சிறுகதைப் படைப்பாளியாவார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் இருந்து எழுதிவருவதோடு தேசிய அளவில் நடத்தப்பட்ட பல சிறுகதைப் போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக எழுதுவதில் இருந்து ஒதுங்கி இருந்த சு. யுவராஜன் இந்த ஆண்டு தனது ‘அல்ட்ராமேன்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டின் வழி இலக்கிய உலகிற்குள் மறுபிரவேசம் செய்துள்ளார்.

சில ஆண்டுகளாக எழுத்துக்கு விடுப்பு விட்டிருந்தாலும், இவரின் நூலில் பழைய கதைகளோடு புத்தம் புதிய சில கதைகளையும் இணைத்துள்ளார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து கதைகளில் பல ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளதாயும் ஒரு பொது நிகழ்வின் வெவ்வேறு நிலை உணர்ச்சி வெளிப்பாடுகளைக் காட்டுவதாயும் அமைந்துள்ளன. தோட்டப்புற மண்ணையும் அதன் அழகையும் உள்வாங்கிச் செரித்த மனதில் இருந்து வெளிப்படும் நகர்ப்புற ஏமாற்றங்களும் தனிமையும் இவரின் கதைகளில் தனித்த இடம் பெறுகின்றன.

கோட்பாட்டுச் சிக்கல்களோ கனமான மொழிநடையோ இக்கதைகளில் இல்லை. வடிவத்திற்காகப் பெரும் மெனக்கெடல்கள் எதுவும் இல்லை. தீவிர அரசியல் பார்வைகளோ, சமுதாயப் படிப்பினைகளோ இக்கதைகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் மிக எளிய மொழிநடையில் (ஆனால் வாசிப்பதற்கு ஆர்வமூட்டும் நடை) படைப்பாளியின் மன அடுக்குகளில் உறைந்து கிடக்கும் நினைவுகளில் இருந்தும் மனிதமுகங்களில் இருந்தும் மனிதம் சார்ந்த புதிய தேடல்களையே இக்கதைகள் முன்னெடுக்கின்றன.  மேலும், இக்கதைகள் வாசகர்கள் அறியாத தகவல்களையோ புதிய வரலாற்று உண்மைகளையோ சொல்லும் வகையைச் சார்ந்தவையல்ல. எல்லாம் நாம் அறிந்த களம்தான். நாம் வாழும் அதே உறவு வட்டம்தான்.  ஆனால் நமக்குத் தெரிந்த வாழ்க்கையின் உணராத தருணங்களை இக்கதைகள் சட்டெனத் திறந்துகாட்டிச் செல்கின்றன. ஆகவே இக்கதை கூறல்முறை பேரிரைச்சலோடு பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சி போலல்லாது அமைதியாக அசைந்தோடும் ஆழம் மிகுந்த ஆறாக அமைந்துள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் பலமுறை பல ஊதுவத்தி பையன்களைப் பார்த்திருப்போம். அன்னம்மா கிழவிகளையும், கருப்பண்ணன்களையும், பிட்டு பாபுவையும் நெத்திவெள்ளையையும் கூட நாம் கடந்து வந்திருப்போம். இவர்கள் அனைவரும் நம்முடன் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற சக உயிர்கள். ஆனால் அந்தச் சாதாரண மனிதர்கள் ஊடாக உறவுகள் குறித்தும் மனிதம் குறித்தும் புதிய தேடல்களை நோக்கி இக்கதைகள் நகர்வதாலேயே தனிச்சிறப்புப் பெருகின்றன.

பொதுவாக ‘அல்ட்ராமேன்’ னின் அனைத்துக் கதைகளிலும் தோட்டப்புறத்தை விட்டு வெளிவந்த ‘ஏக்கம்’ அதிகமாகவே உள்ளது. மண்சார்ந்த பிடிமானம் விடுபட்டுப்போன விரக்தியும் நகர்ப்புற வாழ்க்கை தந்த நிலைகொள்ளாமையும் பொதுவாக நாம் மலேசிய மூத்த படைப்பாளிகளின் எழுத்துகளில் காணக்கூடிய அம்சங்களாகும். மூத்த தலைமுறையைப் போல் அல்லாமல் உயர்கல்வி கற்கும் அளவு வளர்ந்துவிட்ட நிலையிலும் கட்டுக்கடங்காத தோட்டப்புற ‘ஏக்கம்’ சு.யுவராஜனின் கதைகளிலும் வெளிப்படுகின்றன.

ஆயினும் சு. யுவராஜன் காட்டும் தோட்டப்புறம் சற்றே நவீனமானது. அவை சில அடிப்படை வசதிகள் கொண்ட 80-ஆம் ஆண்டுகளுக்குப் பிந்திய தோட்டப்புறங்கள். இத்தொகுப்பில் ‘சாவி’, ஊதுவத்திப்பையன்’ நீங்கலாக மற்ற அனைத்துக் கதைகளும் அழுத்தமான தோட்டப்புற பின்னணி சார்ந்தவை. ‘அப்பாவும் நெத்திவெள்ளையும்’ நகர்ப்புற வாழ்க்கையில் காலூன்ற முடியாத அளவு வியாபித்து நிற்கும் தோட்டப்புற வாழ்க்கையின் மனப்பதிவுகளைக் காட்டுகிறது. ‘நெத்திவெள்ளை’ தோட்டப்புற வாழ்க்கையின் மிக அழகிய குறியீடாகும். தோட்டப்புறத்தில் வாழ்ந்த  பலரின் மனதிலும் இன்றும் ஒரு நெத்திவெள்ளை  சாதுவாக படுத்து அசைபோட்டுக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதேபோன்று சு.யுவராஜனின் கதைகளில் குடும்ப அமைப்பில் இருந்து அன்னியப்படும் நகர்ப்புறவாழ்க்கைக்கு எதிரான நிலையில்,  தன்னை மீண்டும் மீண்டும் குடும்ப உறவுகளோடு தொடர்புபடுத்திக் கொள்வதை காணமுடிகிறது. பாட்டியிடமிருந்து கதை கேட்டு வளர்ந்த ஒரு படைப்பாளிக்கு, குடும்ப நெருக்கம் குறித்த பிரக்ஞை அதிகமாக இருப்பதில் வியப்பில்லைதான்.  எனவேதான் அண்ணனும் தம்பியும் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். அக்காவின் சைக்கிளில் தம்பி கவலைகள் அற்றுப் பயணம் செல்கிறான். அப்பாவின் முகம் ஒரு நேரத்தில் விகாரமாகவும் மறு நொடியில் அன்பின் வடிவாகவும் மாறிமாறித் தோன்றுகிறது. அம்மாவுக்காகத் தம்பி அல்ட்ராமேனாகிறான். சாமந்தி அத்தையுடன் பேசாத வார்த்தைகள் பெரும் துக்கமாகப் பொங்கிவருகிறது. கருப்பண்ணன் ஒரு தளிர்கையின் தொடுதலில் தன் வாழ்க்கைக்கான பொருளை மீட்டெடுக்கிறான்.

அவ்வகையில், உறவுகளின் அன்பிலும், பிடிவாதத்திலும், தியாகத்திலும், விட்டுக்கொடுத்தலிலும் கனிந்த வாழ்க்கையின் பரிமாணங்களை உறவுகள் வழியாகவே ஆராயும் கதைகளாகவே இவை அமைந்துள்ளன. ஆகவே இக்கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவரக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. புரியாத விடயங்களை புரிந்து கொள்ளும் சிரமம் வாசகனுக்கு இல்லை. ஆனால் புரிந்த விடயத்தை மேலும் அணுகிப் பார்க்கவும் நுணுக்கிப் புரிந்து கொள்ளவும் இக்கதைகள் உதவுகின்றன.

அதோடு திறந்த அல்லது தொங்கும் முடிவுடைய சிறுகதைகள் பொதுவாக வாசக இடைவெளியை கொண்டவையாகக் கூறலாம். அவ்வகையில், சு.யுவராஜனின் சிறுகதைகள் பல வாசக பங்கேற்பைக் கோருபவையாகும். “அல்ட்ராமேன் ‘ துஞ்சல், ‘தாத்தா சாமந்தி அத்தை மற்றும்’ போன்ற கதைகளின் முடிவுகள் புதிய திறப்புகளைக் கொடுக்கின்றன. ‘சாவி’ திருப்பம் நிறைந்த முடிவைக் கொடுக்கிறது.

சு.யுவராஜனின் கதைகள் பொதுவாசிப்புக்கு மிகவும் தகுதியானவை என்பதற்கு மற்றொரு காரணம் இக்கதைகள் சிறுவர் உளவியலோடு தொடர்புடையவை.  ‘அல்ட்ராமேன்’, சிறகு, துஞ்சல். ஊதுவத்திப்பையன் போன்ற கதைகளை சிறார் உளவியல் அடிப்படையில் தனியாக ஆய்வு செய்யலாம். ‘அல்ட்ராமேன்’ என்கிற தலைப்பும் விநோதமான முகப்பு ஓவியமும் சிறுவர் மனநிலையை பிரதிபலிப்பனவாக உள்ளன. ஆகவே,  இக்கதைகள் வாழ்க்கையின் மிக மென்மையான மையங்களையும் வெளிச்சமான பகுதிகளையும்  அன்பின் தேடுதல்களையும் அதிகம் பேசுகின்றன.

ஆயினும் ஒரு முதிர்ந்த படைப்பாளியாவதற்கு இது மட்டும் போதாது என்பதை மறுக்க முடியாது. வாழ்க்கையின் இருண்மையும் மனப் பிறழ்வுகளும், முரண்களும், உறவுகளுக்குள் ஒளிந்து நிற்கும் சுயநலன்களும் அன்பின் மாற்றாகும் அதிகாரங்களும் நம் அன்றாட வாழ்வில் நாம் காணும் வாழ்க்கை நிதர்சனங்களாகும். அல்ட்ராமேன் தொகுப்பில் இந்தப் பரிமாணங்களுக்கு இடம் இல்லை. “எதன் பொருட்டும் எதிலும் சிக்கிக் கொள்ளாத உணர்வு இவருக்கு முன்னால் இவரை திரும்பிப்பார்த்தவாறு அழைத்துச் செல்லும். தரையெங்கும் பொறிகள் இருப்பது போல் பார்த்துப் பார்த்து நடப்பார்”  என்று மருத்துவர் மா. சண்முகசிவா,  சு.யுவராஜனின் குண இயல்பு குறித்து முன்னுரையில் குறிப்பிடும் அதே அம்சம் அவரது கதைகளிலும் மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது. தன்னை, கதைகளின் மையமாக நிறுவிக் கொள்வதால் சு. யுவராஜனால் சில எல்லைகளைத் தாண்ட முடியவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது. கதைகளில் இருந்து தன்னை முற்றாக நீக்கிக் கொண்டு நோக்கும்போது சூழல்களில் பொதிந்துள்ள மாற்றுக் கோணங்கள் வெளிப்படவாய்ப்புண்டு.

இறுதியாக, இந்நூலை வாசிக்க பெரும் தடையாக இருப்பது அதில் மலிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளுமாகும். இது உண்மையில் படைப்பு சார்ந்த பிரச்சனை அல்ல. பதிப்பகத்தின் தொழில்நுட்பப் பிரச்சனை. கவனமான பிழைதிருத்த வாசிப்பின் வழி இக்குறையைத் தவிர்த்திருக்கலாம். இந்நூல் சிறுவர்களும் வாசிக்க வேண்டிய நூல் என்பதால் எழுத்துப்பிழைகள் அச்சுப்பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். தோழி பதிப்பகத்திற்கு இது முதல் முயற்சி என்பதனால் இக்குறை ஏற்பட்டிருக்கலாம். அடுத்த முயற்சிகளில் இக்குறைகள் இருக்காது என்று எதிர்பார்கிறேன்.

3 comments for “சு. யுவராஜனின் அல்ட்ராமேன் சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை

  1. சை.பீர்முகம்மது
    June 10, 2016 at 5:37 pm

    அல்ட் ரா மென் இன்னும் வாசிக்கக்கிடைக்க வில்லை என்றாலும்
    இந்த விமர்சனத்தில் குறிக்கப்பட்டடுள்ள
    ஊதுவத்திப்பையன் கதையை பத்திரிக்ககையில் படித்தபொழுதே இவரின் தனித்துவம் புரிந்து மகிழ்ந்தேன்.அடுத்த தலைமுறை உருவாகிவிட்ட பெருமகிழ்வு ஏற்பட்டது.
    தொடர்ந்து எழுதுவதால்
    இவர் மலேசிய சிறுகதை உலகில்
    ஒரு ‘அல்ட்ரா ‘மேன் என்பதை நிருபிக்க முடியும். எனக்கு இவரின் எழுத்தில் பூரண நம்பிக்கை உள்ளது.
    நிறைய உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தானே வராத வரையில்
    இலக்கியத்தில் பலர் வந்த வேகத்திலேயே காணாமல் போனவர்கள்
    பட்டியலில்சேர்ந்து விடுகிறார்கள்..
    இந்த முதல் நூல் அவரை இன்னும்
    வேகப்படுத்துமென்ற நம்பிக்கையை
    அவருக்கே ஏற்படுத்த வேண்டும்.
    சை.பீர்முகம்மது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...