கச்சடா பேச்சு!

d12bbb977c7c3b81_badwords.xlargeகெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை.  தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று எப்படியும் அவர்கள் காதுகளுக்குள் புகுந்துவிடும் வல்லமையைக் கொண்டிருந்தன.

முதலில் எனக்கு அறிமுகமான கெட்டவார்த்தை ‘காதல்’தான். காதல் என்பது தவறான செயல் என வீட்டில் சொல்லி வைத்திருந்தார்கள். வீடியோவில் படம் பார்க்கும்போது காதல் காட்சிகள் வந்தால் அதைச் சட்டென வேகம் அதிகரித்து ஓட்டிவிடுவார்கள். எனவே ‘காதல்’ எனும் சொல்லை நானோ நண்பர்களோ அந்த வயதில் பிரயோகித்ததில்லை. அப்போதெல்லாம் நான் பள்ளியில் முக்கியமான பாடகர்களில் ஒருவனாக இருந்ததால் ‘காதல்’ என்ற சொல் வராத பாடல்களையே தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்படியும் அதுபோன்ற பாடல்களைப் பாட நேர்ந்தால் ‘டொய்ங்’ என ஓசையிட்டு நானே தணிக்கை செய்துவிடுவேன்.

ஒருசமயம் நண்பன் ஒருவன் ஒரு விடுகதையோடு முன்வந்தான். அவன் என் உடலில் காட்டும் உறுப்புகளோடு நான் ‘லி’ என்ற எழுத்தை இணைத்துச்சொல்ல வேண்டும் என்பது விளையாட்டு. அவன் என் கன்னத்தைக் காட்டினான். “கன்னலி” என்றேன். மூக்கைக் காட்டினான். “மூக்கலி” என்றேன். காதைக் காட்டினான். “காதலி” என்றேன். “ஐயோ…நவீன் காதலின்னு சொல்லிட்டான். காதலியா கேக்குது உனக்கு… இரு உங்க அம்மாகிட்ட சொல்றேன்…” எனச்சொல்லியபடி ஓடிவிட்டான். நான் ஆடிப்போனேன். என் வீடு பள்ளிக்கு அருகில்தான் இருந்தது. “டேய்… சொல்லாதேடா ” எனக்கெஞ்சியபடி ஓடினேன். இரவுவரை அவன் வீட்டில் வந்து சொல்லிவிடுவானோ என்ற அச்சம் பற்றியிருந்தது.

பன்னிரண்டு வயதை நெருங்கும்போதெல்லாம் பிட்டமும் ஆண்,பெண் குறியும் கெட்டவார்த்தைகளில் சேர்த்தி எனத் தெரிந்தது. கூடவே மூத்திரம், மலம் போன்றவையும் கடுமையாகத் திட்ட உபயோகிக்கப்படும் கெட்ட வார்த்தைகளாயின. இவை கடும் கோபத்தில் மட்டும் இல்லாமல் கிண்டல்களுக்காகவும் உபயோகிக்கப்பட்டன. இவற்றை வைத்து வகை வகையான நகைச்சுவைக் கதைகள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் பரவலாகியிருந்தன. ‘ஒரு வெள்ளைக்காரன் உள்ளூர் வேடனிடம் “shoot the கிளி” என்றதை தவறாகப் புரிந்துகொண்ட வேடன் வெள்ளைக்காரன் சூத்தைக் கிழித்துவிட்டான்’ என்ற மொக்கையான ஜோக்கைப் பலமுறை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துள்ளோம். என் கற்பனையிலும் அப்படியான அபாரமான ஜோக்குகள் உருவாகும். அடிப்படையில் நான் சமத்தான மாணவன் என்பதாலும் வீட்டில் அப்படிப் பேசுவதெல்லாம் பிடிக்காது என்பதாலும் என் கற்பனையில் உருவான ஜோக்குகளை நானே நினைத்துச் சிரித்துக்கொள்வேன். அப்படியும் ஒருமுறை ‘படைப்பாற்றலின் வேட்கை’யால் ஜோக்கைச் சொல்லியே விடுவது என முடிவெடுத்து நண்பர்கள் மத்தியில் சொல்லப்போக நாக்கு திக்கித்தொலைத்தது. அன்று நண்பர் அனைவருமே ஜோக்கைக் கேட்டுச் சிரிக்காமல் நான் திக்கிப்பேசுவதைப் பார்த்துச் சிரிக்கவே அன்றிலிருந்து கெட்டவார்த்தை ஜோக்கை சபையில் சொல்வதை நிறுத்திக்கொண்டேன். ஜோக்கை விட அதைச்சொல்லும் பாணியே அவசியம் என அப்போதுதான் புரிந்தது.

இடைநிலைப்பள்ளியில் புகுமுக வகுப்பில்தான் எனக்கு சீனமொழியிலும் கெட்ட வார்த்தைகள் உண்டெனத் தெரிந்தது. குறிப்பிட்ட சில சீன கெட்டவார்த்தைகளை அடையாளம் கண்டபின் சீனர்கள் மிக சகஜமாக அதைப் பிரயோகிப்பதை அறிந்தேன். அதன் அர்த்தத்தைத் தேடியபோது ஆண் – பெண்ணின் மர்மப்பகுதிகளையும் தாயின் அந்தரங்க உறுப்புகளையும் அவை குறிக்கின்றன என அறிந்துகொள்ள முடிந்தது. கெட்டவார்த்தைகள், சீர்செய்யப்பட்ட ஒரு வாழ்க்கைமுறையின் மீறல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன என நான் ஓரளவு புரிந்துகொள்ளத் தொடங்கியது அப்போதுதான்.  இந்நிலையில் பொதுவில் கெட்ட வார்த்தைகளைப் பேசத்தயங்கிய தமிழ் மாணவர்கள் சீன கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்ளத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ‘தனித்தமிழ் பற்றாளர்களாக’ எங்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சீன மொழியே கெட்டவார்த்தைகளுக்கான பிடிமானம் ஆனது. பொதுவாகத் தமிழ் மாணவர்களுக்கு, பிறமொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் திட்டப்படும்போது அதிகம் கோபம் வருவதில்லை. அவர்களுக்கு அது ஒரு சத்தம். ‘பாஸ்டர்ட்ஸ்’ என ஒருவன் திட்டும்போது எழாத கோபம் அதே சொல்லைத் தமிழாக்கித் திட்டும்போது பொங்கிவருகிறது. என்னால் கெட்ட வார்த்தைகள் எவ்வாறு ஒருவனின் மனநிலையைப் பாதிக்கிறது என்றும் யார் எந்த சொல்லால் அதிகம் நொந்துபோகிறார்கள் எனவும் வகைப்படுத்த முடிந்திருந்தது.

இடைநிலைப்பள்ளியின் கலாச்சாரம் புரியத் தொடங்கியபோது எனக்கு வயது 16. கொஞ்சம் குளிர் விட்டிருந்தது. தமிழ் ஓரளவு நாக்கில் நர்த்தனம் ஆடியது. மலாய் நண்பர்களுடன் நெருக்கம் கூடியிருந்தது. மலாய்க்காரர்களின் கெட்டவார்த்தை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதைப் போகப்போக புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் குறிகளின் பெயர்களைச் சொல்லாமல், ‘உன் அப்பாவின் குறி’ என்றும் ‘தவறான முறையில் பிறந்த குழந்தை’ என்றும் ஒருவனைத் திட்ட நீண்ட சொற்றொடர்களை உபயோகித்தனர். வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவையாகவே அவர்களின் கொச்சை மொழிகள் இருந்தன.

என்னுடைய வன்முறை மனமும் இலக்கிய அறிவும் இணையத்தொடங்கியது அப்போதுதான். துல்லியமாகக் கெட்டவார்த்தைகளை ஆராயத்தொடங்கினேன். வெளியில் காட்ட அனுமதிக்கப்படாத உடலின் ஒரு பகுதியையோ சகோதரி அல்லது தாயைத் திட்டுவதாகவோ கலவியை மையமிட்டதாகவோ இல்லாத சில புதிய கெட்ட வார்த்தைகளை உருவாக்கினேன். சட்டெனக் கேட்டால் அதன் உள் அர்த்தம் ஒன்றும் இல்லாதது போன்றும் இருப்பது போன்றும் ஒரே நேரத்தில் தோன்றக்கூடிய ‘மேஜிக்கல் ரியலிச’ வகை வார்த்தைகள் அவை. எதிராளிகள் அவற்றைக் கேட்டு மிரண்டனர். அவர்கள் ஆழத்தில் என் சொற்கள் காயங்களை ஏற்படுத்தின. அவர்களுக்கு இருக்கும் சொற்ப மொழி அறிவை வைத்துக்கொண்டு அதன் அர்த்தம் புரிபடாமல் திண்டாடினர். கோபம் கொண்டனர். சொல்லாராய்ச்சியெல்லாம் நடத்தினர். நான் புதிய புதிய சொல் உருவாக்கத்தில் தீவிரமாக இருந்தேன். அந்தச் சொல்லாடல்கள் பரவலான புழக்கத்துக்கும் போயின.

படிவம் ஐந்தை முடித்தபோது கெட்டவார்த்தையில் என் சொற்களஞ்சியம் பெருகியிருந்தது. அப்போது ‘மன்னன்’ இதழில் தொடர்கதை எழுத வாய்ப்புக் கிடைத்தது. ‘பருவகால பறவைகள்’ என்ற தலைப்பில் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாழ்வைத் தொடராக்கினேன். அதில் இடைநிலைப்பள்ளி மாணவனின் மொழியையே பயன்படுத்தினேன். கெட்ட வார்த்தைகள் அதில் பிரதானமானது. தொடர் பரபரப்பாகப் பேசப்பட்டது. முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் அதை ‘கெட்ட வார்த்தைக் கதை’ என்றே அடையாளம் கண்டனர். அக்கினி உள்ளிட்ட, என் மீது அக்கறை வைத்திருந்த படைப்பாளர்கள் ‘இந்த வயதில் இப்படி எழுத வேண்டாம்’ என ஆலோசனை கூறினர்.  கொஞ்சநாளில் நான் கெட்டவார்த்தை எழுத்தாளனாகவே சில மூத்த படைப்பாளர்களால் அடையாளம் காட்டப்பட்டேன். ஒரு தீண்டாமைக் குரல் அவர்கள் மத்தியில் இருந்தது.

காலஓட்டத்தில் ஒருவர் உபயோகிக்கும் கெட்டவார்த்தையைக் கொண்டே அவன் மனநிலையையும் உளவியலையும் எளிதாகக் கண்டுக்கொள்ள முடிந்தது. இன்னும் சில கெட்ட வார்த்தைகள் ஒரு சமூகத்தில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் காத்திரத்தை இழந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. ‘ஃபக் யூ’ அல்லது ‘ஷிட்’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் அவ்வாறு காத்திரம் இழந்து அவர்கள் வாழ்வுக்குள் வழக்கமாகிவிட்டவை. ஆங்கிலப்படங்களில் மிகச்சரளமாக உபயோகிக்கப்படும்போது அதற்கு ‘பீப்’ ஓசை கொடுத்து தணிக்கை செய்பவர்கள்தான், பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் ‘நாதாரி’ என்ற சொல்லையோ தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்திய ‘சண்டாளர்’ எனும் சொல்லையோ மலேசியாவில் தாராளமாகவே தணிக்கை இன்றி வடிவேலு வசனங்கள் மூலம் நகைச்சுவையென அனுமதிக்கிறார்கள். ‘பேடி, பெட்டை, பொம்பள’ என பெண்களை அல்லது மாற்றுப்பாலினத்தவர்களைக் குறிக்கும் சொல்லும் கெட்டவார்த்தைகளில் இணைவது ஆச்சரியமானது.

கொஞ்சம் ஆழமாகச் சென்று இன்று கொச்சையென தணிக்கையாக்கப்படும் சொற்களை ஆராய்ந்தால் அவை அனைத்துமே நல்ல தமிழ் சொற்கள்தான். ‘ஊம்புதல்’ என்றால் சூப்புவது என அர்த்தம். ‘உவத்தம்’ என்றால் மகிழ்தல். இதில் ‘உ’ எனும் எழுத்து ‘ஓ’ வாக மாறி ‘ஓத்தல்’ என ஆனது. இவை இரண்டும் கலவியோடு நேரடியாகப் பொருள்கொள்ளாத சொற்கள். சாதாரண தொழிற்பெயர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் அச்செயல்கள் கலவியோடு சம்பந்தம் கொள்வதால் அச்சொற்கள் அதற்கேயான பொருளோடே இன்றும் அணுகப்படுகின்றன. அதன்மூலம் அவை அந்தரங்கம் ஆகின்றன.

நன்கு யோசிக்கும்போது சமூகத்தில் இன்று அனுமதிக்கப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகள் ஆதிக்க சாதியினர் இன்னொரு சமூகக் குழுவை பகடி செய்யவே உபயோகப்படுகின்றன. அவற்றை ஊடகங்களும் நகைச்சுவையாக்கிவிடுகின்றன. தடைசெய்யப்பட்டவை அல்லது அநாகரீகமானதாகக் கருதப்படுபவை அதிகார சமூக வரைமுறைகளை மீறி ஒலிப்பதாக உள்ளது. “நமது மொழி சாதி காப்பாற்றும்” என பெரியார் சொன்னது மட்டும் சட்டென நினைவுக்கு வருகிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...