வாசிக்கும் முன்பு: இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த வசைகள் உதவலாம்.
அண்மைக் காலமாக எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் (http://www.jeyamohan.in/) தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் இலக்கிய விமர்சனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது ஒரு போலிஸ் புகாரினால். ‘பொய்யெழுத்தின் திரை’ எனும் தலைப்பில் சூர்யரத்னா சிறுகதைகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனத்தால் சிங்கப்பூரில் போலிஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எழுத்தாளர் சூர்யரத்னா அந்தப் போலிஸ் புகாரைச் செய்தார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக்கழகம் மூலம் இரண்டு மாதங்கள் அங்கு தங்கி மாணவர்கள் மத்தியிலும் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியிலும் நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கவும் புனைவிலக்கியத்தில் ஆற்றலை ஏற்படுத்தவும் வரவழைக்கப்பட்ட ஜெயமோகன் கூடுதல் பொறுப்பாக சிங்கை இலக்கியங்கள் குறித்து எழுதவும் தன்னை உட்படுத்திக்கொண்டார்.
மலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும்போக்கில் குற்றச்சாட்டுகள் இருக்கும். இங்கு, அவர்கள் ‘பேசுவதில்லை‘ எனும் சொல்லை ‘பாராட்டுவதில்லை‘ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர். அதாவது நீ ஏன் தமிழக இலக்கியவாதிகளை மேற்கோள் காட்டிப் பேசுவதுபோல எங்கள் இலக்கியங்களை முன் வைத்துப் பேசுவதில்லை என்பதுதான் அக்குற்றச்சாட்டு. சரி, எந்த நூலைப் பாராட்ட வேண்டும் என்ற அடுத்த கேள்வியை முன்வைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். அதில் அவர்களுடைய நூலும் நிச்சயம் இருக்கும். அடுத்து, ஏன் பாராட்ட வேண்டும் எனக்கேட்டால் அதற்குமுன் அதை அந்நாட்டு எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்ட யாராவது ஓர் எழுத்தாளரும் பாராட்டி உள்ளதாகவும் உள்நாட்டு விருதுகளை அது பெற்றுள்ளது எனவும் பதில் வரும். கொஞ்சம் விவரமானவர்கள் அந்தப் படைப்பின் உள்ளடக்கம் குறித்துப் பேசுவர். உள்ளடக்கம் புதியது என்பதால் அந்த நூலும் சிறந்தது என்பது அவர்கள் கருத்தாக இருக்கும்.
இளங்கோவன், பாலபாஸ்கரன், முனைவர் ஶ்ரீலட்சுமி என சிங்கப்பூர் இலக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஆளுமைகளால் விமர்சனத்துக்குட்படுத்தப் படுவதையும் அந்த விமர்சனத்தை முன்வைப்பவர்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாவதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான அளவீடுகளில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதன் மூலம் உரையாடல்களை உருவாக்கியுள்ளனர். அதேபோல வை.தி.அரசு மற்றும் நா.கோவிந்தசாமி போன்றவர்கள் சிங்கப்பூரில் இலக்கிய விமர்சனம் வளர களம் அமைத்துக் கொடுத்தார்கள் என அறியமுடிகிறது. இலக்கிய வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்ற செயல்பாடுகள் சாத்தியம். இவ்வகையில் ஜெயமோகனின் விமர்சனங்கள் முற்றிலும் ரசனை சார்ந்தது.
ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. வாசிப்பின் நுட்பங்களை அறியக்கூடியவன்தான் இரசனை விமர்சனத்தை முன்னெடுக்கிறான். ஒரு ரசனை விமர்சகன் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்கள், தன் வாசிப்பனுபவங்கள் மற்றும் படைப்பனுபவங்கள் மூலம் பெற்ற ஒட்டுமொத்த ரசனையின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுகிறான். அப்படைப்பு மீதான தனது மதிப்பீட்டைச் சொல்கிறான். அந்த மதிப்பீட்டில் மாறுபட்ட தரப்புகளின் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து வெளிப்படுகிறது. அதன் விளைவாகப் புதிய மதிப்பீடுகள் உருவாகின்றன. இவ்வாறு மாறி மாறி உருவாகும் மதிப்பீடுகளின் மூலமே கால ஓட்டத்தில் சில படைப்புகள் நிராகரிக்கப்படவும் சில கொண்டாடப்படவும் செய்கின்றன. ஆனால் அதுவும் நிரந்தரமானதல்ல. மீண்டும் இன்னொரு காலகட்ட வாசகர்களால் அவை மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன. புதிய கண்டடைவுகளை உருவாக்குகின்றன. அதுதான் விமர்சனத்தின் பணி. அது குறிப்பிட்ட காலகட்டத்துக்கானது மட்டுமே. விமர்சனம் ஒரு கட்டத்தில் பழமையாகிக் காணாமல் போகிறது. ஆனால், நல்ல படைப்புகள் விமர்சனத்தைக் கடந்து தங்கள் ஆயுளை நீட்டித்துக்கொள்கின்றன. அது தன்னை நீட்டித்துக்கொள்ள விமர்சனம் ஏதோ ஒருவகையில் காரணமாகவே இருக்கிறது. காரணம், நல்ல விமர்சனம் சமூகத்தின் முன் ஒரு படைப்பைத் திறந்துகாட்டி விவாதப்பொருளாக மாற்றுகிறது. அதன் மூலமே இன்னொரு வாசகனுக்கு அதைக் கடத்துகிறது. இலக்கியப்பிரதி ஒரு மரம் என்றால் விமர்சனம் அதில் உருவாகும் பழங்கள்தான். மரத்தின் தன்மையைப் பழத்தில் காணமுடியும். பழத்தின் மூலமே ஒரு மரம் சட்டென அடையாளம் காணப்படுகிறது. ஆனால், பழம் நிரந்தரமானதல்ல. அது பழுத்துப் பின் உதிரும். மரத்துக்கே எருவாக மாறும். ஒரு மரத்தின் செழுமைக்கு, காலம் முழுவதும் அதைச் சுற்றிவிழுந்த எருவான பழங்களும் முக்கியக்காரணம். விமர்சகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உருவாக்கும் கருத்துகள் பழங்கள் போல உதிர்ந்து காணாமல் போகும் என அறிவர். அந்த அறிதலோடுதான் விமர்சனங்களைச் செய்கின்றனர். ஆனால், அவை மிகச்சரியான வாசகர்கள் குறிப்பிட்ட படைப்பை வந்தடைய வழியமைக்கும் என்பதில் குழப்பமே இருக்காது.
மலேசியா – சிங்கை போன்ற சூழலில் இவ்வாறான ரசனை விமர்சனப்போக்கு தொடர்ந்து நிகழாமலேயே, அதன் ஆரம்பகட்ட விவாதங்கள் நடக்காமலேயே ‘எழுதப்பட்ட அனைத்துமே சிறந்தது’ எனவும் எனவே அதைத் தமிழ் இலக்கியத்தின் செழுமையான பகுதியில் இணைத்துக் கொள்ளுதல் தகும் என்ற நடைமுறை அபத்தமானது. முன்பே சொன்னதுபோல இந்த அபத்தத்தை எப்படியாவது நடத்திக்காட்ட எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் மூன்று. முதலாவது, அவர்கள் அரசியல்வாதிகளை வைத்து நூல் வெளியீடு செய்வது. அரசியல்வாதிகளின் மிகையான பாராட்டுகளை மறுநாள் பத்திரிகைச் செய்திகளாக்குவது. அந்தப் பாராட்டே அப்பிரதிக்குக் கிடைக்கும் விமர்சனம். அதன் மூலம் தங்கள் இலக்கிய அந்தஸ்து உயர்ந்து விட்டதாக எழுத்தாளர்கள் ஒரு பிம்பத்தை நிர்மாணிப்பர். அதைத் தக்க வைத்துக்கொள்ள மூர்க்கமாகப் போராடுவர். இதுபோன்ற செய்கையால் ஓர் எழுத்தாளரின் பெயர் வெறும் நாளிதழ்களை மட்டுமே வாசிக்கும் ஒருவனுக்குக்கூட அறிமுகமாகிறது. தரமான ஓர் ஆக்கத்தைப் படைக்காவிட்டாலும் பரவலாக அறியப்பட்டிருப்பது இந்த முறையில்தான். கறாரான விமர்சனங்களை இவர்கள் எதிர்கொள்வதும் பத்திரிகையில் வெளிவந்த இந்தச் செய்திகளை எதிர்வினையாகக் காட்டுவதன் மூலம்தான்.
இரண்டாவது, கிடைக்கப்பெறும் ஏதாவது விருது அல்லது பரிசை அடையாளப்படுத்தி அதன் மூலம் ஒரு நூலுக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டுவிட்டதாக பாவனை செய்வது. இதுபோன்ற விருதுகளுக்கு மலேசியாவைப் பொறுத்தவரை பெ.ராஜேந்திரன் போன்றவர்களின் கால்களில் விழுந்துகிடக்க வேண்டியுள்ளது. அவர் இப்போது இயக்கத்தின் தலைவராக இல்லாத பட்சத்தில் அவராக ஏற்படுத்திக்கொண்ட ‘அயலக உறவுப் பிரிவின் தலைவராக’ இயக்கத்தில் நீடித்து எழுத்தாளர்களுக்கு அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் நிலை வேறானது. அங்கு அரசாங்கம் பிற இலக்கியங்கள் போல தமிழ் இலக்கியமும் வளர முக்கியத்துவம் வழங்குகிறது. சிங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க அவ்வரசு வழங்கும் விருதுகளைச் சுமந்துகொண்டு எழுத்தாளர்கள் ஒரு தீவிரமான விமர்சகன் முன் காட்டும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. விமர்சகன் எல்லா விருதையும் புறந்தள்ளிவிட்டு படைப்பை நோக்குகிறான். படைப்பாளன் பிரமாண்டமான விருதை படைப்பாளன் கண்முன் கிடத்தி பிரமிப்பை உண்டாக்கத் தவிக்கிறான். ஒருவேளை விமர்சகனிடமிருந்து எதிர்மறையான விமர்சனம் வந்துவிட்டால் தான் வாங்கிய கனத்த விருதுகளை விமர்சகன் மேல் வீசி எறிகிறான்.
மூன்றாவது நிலையே மிக ஆபத்தானது. அதற்கு அண்மைய உதாரணம் மாலன். மாலன் நெடுநாட்களாக தமிழ் இலக்கிய உலகில் ஒரு பத்திரிகையாளராக, ஊடகவியலாளராக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த வகையிலும் அவரை அடையாளப்படுத்த முடியவில்லை. சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சில குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியுள்ளார். அவ்வகையில் மாலன் போல பல இலக்கியவாதிகள் மலேசியாவிலும் தமிழகத்திலும் ஏராளமே உண்டு. ஆனால், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அவர்தான் அடிக்கடி ஏதாவது ஒரு போட்டிக்கு நடுவராக வருகிறார். இப்படி அடிக்கடி பயணம் செய்வதற்காக அவர் இங்குள்ள அமைப்புகளுடன் நல்ல நெருக்கம் காட்டுகிறார். மற்றபடி அவரிடம் ஒரு நல்ல இலக்கியக் கட்டுரையாவது வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அண்மையில் அவர் எழுதிய ‘இலக்கியம் – சில அடிப்படைகள்’ என்ற கட்டுரை அந்தச் சந்தேகத்தை வலுவாக்குவதாய் உள்ளது. மாலன் போன்றவர்கள்தான் இந்த இடைவெளியை நிறைக்கிறார்கள். மொண்ணையான பிரதியையும் வாயாரப் பாராட்டுகிறார்கள். ஊக்குவிப்பதாகக் கூறி பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறார்கள். பல ஆண்டுகள் இலக்கிய உலகில் தன்னைத் திணித்துக் கொண்டிருப்பதாலும் ஊடகங்களின் பலத்தால் எழுத்தாளர்களின் நெருக்கத்தைப் பெற்றிருப்பதாலும் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளில் இருப்பதால் சில செயல்பாட்டுத் திட்டங்களை உருவாக்க முடிவதாலும் இதுபோன்றவர்களுக்கு ஒரு நகலான பிம்பம் உருவாகிறது. அந்தப் பிம்பம் உருவாக எழுத்தல்லாத பிற கூறுகள் காரணமாக இருந்தாலும் அவற்றைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாத எழுத்தாளர்கள் அவர் போன்றவர்களின் குரலுக்கு மதிப்பளிக்கின்றனர். உண்மையில் இதுபோன்றவர்களால்தான் மலேசிய – சிங்கை இலக்கியம் கீழிறங்கிச் செல்கிறது. அந்தத் தேசத்தில் ஒரு விமர்சன மரபை உருவாக்க நினைப்பவர்களை இவர்கள் தங்கள் போலியான பிம்பத்தால் தடுத்து நிறுத்த முயல்கின்றனர்.
சூரியரத்னாவின் எதிர்வினையை படிக்கும்போது அவருக்கு இலக்கியச் சூழல் குறித்து அவ்வளவாகப் புரியவில்லை என்றே தெரியவருகிறது. “தனக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெளிவாகக் கூறிவிடும் பதிப்பகம், அல்லது நிறுவனங்களுக்காகவும் எழுதுகிறேன்,” என மிகத்தெளிவாகவே அவர் தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஒரு தீவிரமான இலக்கியப்போக்குக் கொண்ட எழுத்தாளர் இவ்வாறான வார்த்தைகளை உதிர்ப்பதில்லை. அவ்வாறு சொல்லாமல் மறைத்து வைக்கும் பாவனையான முகம்கூட சூரியரத்னாவுக்குக் கிடையாது. ஆனால் மாலன் போன்றவர்கள் முகநூலில் ஆதவரவு என்ற பெயரில் மீண்டும் அவரை உசுப்பேற்றுகின்றனர். அவர் தன் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்வதைத் தங்கள் அபிப்பிராயம் மூலம் தடுக்கின்றனர். மாலன் பாராட்டும் சூரியரத்னாவின் கதை எதனால் ஏன் நல்ல கதை என்பதை மாலன் சொல்லவில்லை மற்ற கதைகளை எப்படி இன்னும் மேம்படுத்தலாம் என்பது பற்றி அவர் பேசவில்லை.
சூரியரத்னாவின் சிறுகதைகள் குறித்து ஜெயமோகன் விரிவாக முன்வைத்த கருத்துகளுக்கு மாற்றுக் கருத்தை உருவாக்கத் திராணியற்றவரால் ‘இலக்கியம் – சில அடிப்படைகள்’ போன்ற ‘ரெடிமேட்’ கட்டுரைகளை மட்டுமே படைக்க முடியும். தன் சொந்த ஊரின் இலக்கிய வெளியில் எந்த அடையாளமும் இல்லாத மாலன் போன்றவர்கள் மலேசிய – சிங்கையில் இலக்கியம் வளர வழிகாட்டுவதாகச் சொல்லி குரு பீடம் தேடுவதெல்லாம் உச்சபட்ச நகைச்சுவை.
ஜெயமோகன் எப்படி சிங்கப்பூர் இலக்கியம் குறித்துப் பேசலாம் என்றும் அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று பரவலான பேச்சு முகநூலில் வந்துகொண்டிருக்கும் சூழலில் பொதுவில் வந்த ஒரு இலக்கியப் பிரதி குறித்து யாரும் தன் கருத்துகளைக் கூற உரிமை உள்ளது என்பதுதான் பதில். மேலும், ஜெயமோகன் கருத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அதற்கான மறுப்பை எழுதும் பட்சத்தில் அதுவே உரையாடலுக்கு வழிவகுக்கும். இங்கு ஜெயமோகனின் கருத்துகள் சரியா? தவறா? என்ற விவாதத்துக்குள் நான் நுழையவில்லை. ஓர் ஆரோக்கியமான இலக்கியச் சூழலில் பொதுவெளிக்கு வந்துவிட்ட நூல் எதுவாயினும் அதுகுறித்து கருத்துச்சொல்ல யாருக்கும் உரிமை உண்டு. அது அவரது தனிப்பட்ட டைரியாக இல்லாத பட்சத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் ஒரு படைப்புக்குறித்துக் கருத்துக் கூறலாம். அப்படித்தான் இன்று வேறுமொழி இலக்கியங்கள் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டு பொதுவாசிப்புப் பரப்புக்குக் கொண்டுச்செல்லப்படுகின்றன.
மறுப்பு என்பது வெறுமனே ‘அந்த நூலைப் பற்றி ஏன் எழுதவில்லை? இந்த நூலில் என்ன குறையைக் கண்டார்?’ என்று சவடால் பேச்சு பேசுவதல்ல. ஜெயமோகன் சுட்டிக்காட்டாத ஒரு நூலை முழுமையாகப் படித்து அதனை, கதை சொல்லுதல், இலக்கிய நயம், அதன் தனிச்சிறப்புகள் என எல்லாவகையிலும் ஆய்வுசெய்து தகுந்த விமர்சனத்தை முன்வைப்பது. சிங்கப்பூர் வாழ்க்கையைச் சொல்கிறது, எளிய தமிழில் உள்ளூர் மக்களுக்கு புரியும் தமிழில் எழுதப்பட்டுள்ளது போன்ற பொதுப்படையான பாராட்டுகள் அல்ல விமர்சனம். ஒருவேளை இப்படியான ஒரு சூழலில் குழு மனப்பான்மையை அதிகரிக்கரிக்கச் செய்து அதன் மூலம் தன்னை எதிர்த்தரப்பின் சக்தியாக நிருவ முயன்று, அதில் லாபம் சம்பாதிக்கும் வணிகர்களுக்கு இந்த மேம்போக்கான விமர்சனங்கள் உபயோகப்படலாம்.
ஜெயமோகன் விமர்சனங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கடிதங்களை எழுதி வருபவர்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றின் பாரம்பரியத்தைத் தெரியாதவர்களாகவே இருப்பதைக் காணமுடிகிறது. எனவே, அவர்கள் கருத்துகள் பெரும்பாலும் பொதுப்படையாகவும் அடுத்தவரின் கருத்தைத் தொடர்வதாகவுமே இருக்கிறது. சிங்கப்பூரின் நீண்ட இலக்கிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் அதனை நன்கு அறிந்தவர்கள் எவராவது காத்திரமான விவாதத்தை முன்னெடுக்கும்போதுதான் உண்மையான தரமான இலக்கிய வளர்ச்சிக்கான வித்து இடப்படும். பல ஆண்டுகளாகத் தொலைத்துவிட்ட இலக்கிய மனத்தையும் மீட்டெடுப்பது இலகுவானதல்ல ஆனால் அதைச்செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்மையான சிங்கப்பூர் மலேசிய இலக்கியவாதிகளுக்கு உள்ளது.
இல்லாவிட்டால் பண ஆதாயமும் பீடங்களும் தேடி அலைபவர்களுக்கே இடம்கொடுத்து ஏற்படக்கூடிய இலக்கிய வளர்ச்சியையும் இல்லாமல் செய்துவிடுவதுடன் ஒரு பெரும் பண்பாட்டு வளர்ச்சிக்கே முட்டுக்கட்டை போட்டுவிடுவோம்.
கருதுவதை உரிமையோடு உறக்கச்சொல்லும் வீரியம், வியக்கச் செய்கிறது.
பதிலுக்கு எதிர்முனையிலிருந்து எது வந்தாலும் நிர்வாகிக்க உகர்ந்த ஆற்றல் அற்றவர்கள் இவ்வாறு கர்ஜிக்க சாத்தியமே இல்லை. கடுமையாக கற்பிக்கிறீர்கள். நன்றி நண்பரே!
உண்மையினை சொல்லுகிற பதிவு.. நகைச்சுவை ததும்பும் பாணியில்.. சிறப்பு.
கசப்பது உண்மை. அதனை நோயாளிகளுக்குத் தந்துள்ளீர்.
கருதுவதை உரிமையோடு உறக்கச்சொல்லும் வீரியம், வியக்கச் செய்கிறது.
பதிலுக்கு எதிர்முனையிலிருந்து எது வந்தாலும் நிர்வாகிக்க உகர்ந்த ஆற்றல் அற்றவர்கள் இவ்வாறு கர்ஜிக்க சாத்தியமே இல்லை. கடுமையாக கற்பிக்கிறீர்கள். நன்றி நண்பரே!
சாய்வற்ற பதிவு!