புள்ளிகள்

arusu(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை)

“டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது, எடுக்கப் போறயா? ரெண்டு சாத்தட்டுமா?” இடிகள் திசைகளில் எதிரொலித்தன.

இந்த இரைச்சலில், அருகே இருந்த வேப்பமரத்திலிருந்த காக்கைகள் அச்சம் கொண்டு சிறகடித்ததில் சலசலப்பு அலைந்தது. எதிர்வரிசையில், தெருவோரம் சோம்பல் முறித்த பூனை சட்டெனக் குறுகி மண்ணில் படிந்தது. நான் எட்டிப் பார்தேன். பெரியவர் ஒருவர் ஐந்தடியில் நின்று கொண்டிருந்தார். சலவைசெய்த தூய்மையான வேட்டியும் கையில்லாப் பனியனும் அணிந்திருந்தார். படிய வாரிய நரைத்த முடி.

அல்லூரின் கோடியில், அதன் கரையில் கால்களைப் பரப்பிக்கொண்டு பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க பையன், சுருண்ட கரிய முடியும் வேர்வையில் நனைந்த ஊதாநிறச் சட்டையும் தேய்ந்த ஜீன்சுமாய், குண்டா கிண்டெ (ரூட்ஸ்) மாதிரி நிமிர்ந்து இந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பொழுது புலர்ந்து கொண்டிருந்த நேரம். ஒரு புதிய உற்சாகமும் தெம்பும் பிறந்தன போலவும் மறுபிறவி எடுத்தது போலவும் அந்தத் தெரு முழுவதும் தோன்றியது. அது ஆசாரிகள் பட்டறை வைத்திருந்த தெரு. காலைப் பலகாரம் செய்ய வருவோரும் போவோரும் நேற்றைய குசலத்தைத் தொடர்வோரும் ஊர்ச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வோரும் மச்சான் மாமன் என்று உறவுகளுடன் பாசம் பொங்க அழைத்துக் கொள்வோரும் தீனியைத் தேடிப் புறப்பட்ட பூனைகளும் நாய்களும் உற்சாகம் பொங்க மரக்கிளைகளில் குதூகலிக்கும் பறவைகளுமாய் அடடா! அந்தத் தெருவிற்கு ஓர் அற்புதக் களையே சொட்டிற்று.

நான் இந்த இரைச்சலில் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் இயற்கையில் இலயிக்கவே விரும்பினேன். அது நடவாமல் போயிற்று.

“எத்தனை தடவடா சொல்றது? எருமைப்பயலே, எட்றா கல்ல, இப்ப எடுக்கிறியா, உதைக்கட்டுமா?”

மனிதன் விலங்குகளே போலும். ஆயினும் பிற உயிரினங்கள் இந்த வேளையில் உற்சாகமாய் இருக்க, மனிதனுக்கு மட்டும் ஏன் இந்தக் கொந்தளிப்பு? என்னை அறியாமலேயே, இந்த வலையில் நானும் சிக்கிக் கொண்டேன்.

கடையில் இருந்த ஆசாரியிடம் கேட்டேன். “என்ன விஷயம்? ஏதும் குழப்பமா?”

”அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. ஒரு பய தினந்தோறும் வந்துடறான்; அல்லூர் கோடியிலே கல்லை வச்சு அடைச்சுடறான்; தண்ணி தேங்கி நாத்தம் வீச ஆரம்பிச்சிடறது.” பத்திரி வைப்பதில் ஆழ்ந்து போனார். இந்தத் தொழில் மௌனத்தை நான் கலைக்க விரும்பவில்லை.

“சுத்தப் பயித்தியக்காரத்தனமாக இருக்கிறதே.”

என் மனத்துக்குள் சந்தேகங்கள் கேள்விகளாய்ப் பெருக ஆரம்பித்தன. நான் இந்த மனக் கொந்தளிப்புகளுக்குள் சிக்கிக்கொள்வதை அப்போதும் உணர முடியாமல் போயிற்று. யார் என்ன என்பவை மேலோங்கின.

கடையைவிட்டு வெளியே வந்து, சாவகாசமாய், அல்லூரின் கோடியை நோக்கி ஐந்தடியில் மெதுநடை போட்டேன். கோடியை நெருங்கி விஷயங்களை ஈர்க்கத்தொடங்கினேன்.

குண்டா அல்லூரின் மத்தியில் இரண்டு பெரியகற்களை வைத்து அடைத்திருந்தான், நீர் ஓட்டம் தடைபட்டு தேக்கம் உயர்ந்திருந்தது. கற்களின் இருபுறமும் கால்களைப் பரப்பிக் கரையில் உட்கார்ந்து கொண்டு, இரும்புச் சட்டி போன்ற ஒரு பாத்திரத்தில் நீரை மண்ணோடு அள்ளி, அலசி அலசி நீரை நிலத்தில் ஊற்றிவிட்டு, மீந்த மண்ணை இன்னொரு குவளையில் கொட்டிக் கொண்டிருகிறான் என்பதை ஊகித்துக்கொண்டேன்.

நான் போய் நின்றதும் வேறு ஒரு பொற்கொல்லர் கடைக்கு வெளியே ஓடிவந்து, “எட்றா எட்றா” என்று சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தார்.

குண்டாவுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை போலும். அவன் சீறி வந்தவரை அல்லது வந்ததை ஓர் அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, அச்சமின்றி ஆனால், அல்லூரின் நடுவிலிருந்த இரண்டு கற்களையும் பிடுங்கிக் கரையில் எறிந்தான். முழங்கையால் புருவத்தில் தேங்கித் தொங்கிய வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டான். அந்தச் செயலில் அவன் கையில் இருந்த மண்ணை முன்நெற்றியில் ஈஷித்துக்கொண்டான்.

நீர் ஓடத்தொடங்கியது. வீச்சம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. நீரின் ஓட்டத்தில் சிவந்த வெற்றிலைத் குதப்பும் காறி உமிழ்ந்த எச்சிலும் கோழையும் இன்னதென்று அடையாளம் காணமுடியாத எச்சங்களும் சுருட்டு, பீடித்துண்டுகளும் காகிதங்களும் சுற்றிச் சுருட்டி எறிந்த வேண்டாதவைகளும், அழுக்கான நுப்பும் நுரையும் கலங்கிக் கருமையாகி, அந்தத் தூய்மைக் கேடு அடைந்த நீரில் மிதந்து ஓடிக்கொண்டிருந்தன. எனக்குப் பார்க்கவே சகிக்க முடியாமல் போயிற்று. பையன் தன் தளவாடங்களை பொறுக்க ஆரம்பித்தான்.

நான் கேட்டேன், “என்னப்பா செய்ற?”

“பவுனு தேடறங்க”

“பவுனா” நான் மனசுக்குள் அதிர்ச்சிகளையும், ஆச்சிரியங்களையும் விழுங்கிக்கொண்டேன். பட்டறையின் ஓரத்தில் சென்ற கொடிப்பாதையில் சென்று மறையும் குண்டாவையே பார்த்திருந்துவிட்டு முன்னம் இருந்த கடைக்கே திரும்பிவந்தேன்.

ஆசாரி தன்னுடைய பத்திரியைக் கச்சிதமாக முடித்திருக்க வேண்டும். செய்த நகையைக் கையில் வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்து மிகத் திருப்தி அடைந்தவராய் நெற்றியில் பொடித்த வியர்வையைக் கைத்துண்டால் துடைத்துக் கொண்டார்.

இரைச்சல் அடங்கினாலும் என் மனம் இரையத் தொடங்கியது.

“யார் இந்தப் பயல்? இங்கே வந்து என்ன செய்கிறான்?”

ஆசாரி தலையைத் தூக்காமலே பதில் அளித்தார். “ஓ அதுவா?” விஷயத்தை மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். “நாங்க தங்கத்தை அடிக்கும்போது, உருக்கும்போது சிதறித் தெறிக்கும் பாருங்க. அதெல்லாம் எங்கே போகும். கண்ணுக்குக் கிடச்சா எடுத்துக்குவோம். இல்லாட்டி இந்தப் பய இருக்கானே காலைல வருவான். அப்படிச் சிதறி அல்லூர்லே அடிச்சிக்கிட்டுப் போகுதில்ல அந்த மண்ணெல்லாம் அள்ளி அலசிப் பொறுக்கி எடுத்து உருக்கி, பின்னாலே யாரோ ஒரு சீனன்கிட்டே கொண்டுபோய் வித்துவிடுவான். நல்ல வரும்படிதான். ஆனா அன்றாடம் கிடைக்கும்னு சொல்ல முடியாது,”

இந்தச் செய்தி எனக்குப் புதியது. நான் கேட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை. ஈயவயல்களில் ‘டுலாங்’ கொண்டு ஈயத்தை அலசி எடுப்பார்கள் என்று படித்திருக்கிறேன். இப்படி ஒரு பிழைப்பு இங்கே நடைபெறும் என்று என்னால் அப்போது நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

எனினும் இது மேன்மையானதுதான். பிச்சை எடுப்பதைக் காட்டிலும் வேலைவெட்டி ஏதும் இன்றி ஊன் வளர்ப்பதைக் காட்டிலும் மனைவியின் உழைப்பை எதிர்பார்த்து, உண்ணக் காத்திருப்பதைக் காட்டிலும் இது மேன்மையானதுதான்.

ஒருவனின் கட்டளைக்குக் காத்திருந்து கடமைகளை இயந்திரத்தனமாய் செய்வதைக் காட்டிலும் போதையை உண்டு திரிவதைக் காட்டிலும் குடித்து அழிவதைக் காட்டிலும் இந்த உழைப்பு அருமையானதுதான். சிந்தனையால் அசிங்கப்பட்டு நிற்கிறவர்களைப் பார்க்கிலும் அசிங்கத்தை தொட்டு அச்சமின்றி வாழுகிற இவன் வாழ்க்கையை கண்டு நான் நாணினேன்.

இப்போது மனக்கொந்தளிப்பில் நான் வசமாக மாட்டிக்கொண்டேன் என்பதையும் இனி அதிலிருந்து விடுபடுவது சிரமம் என்பதையும் நான் அப்போதும் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

என்னுடைய இனிமையான காலையும் போயிற்று. வந்த வேலையும் மறந்துபோயிற்று. வரவேண்டியவர் இன்னும் வரவில்லை. வீட்டுக்கு இரண்டொரு தடவை தொலைபேசியில் கூப்பிட்டாயிற்று. அப்போதே புறப்பட்டுவிட்டாராம். அது என்ன பதிவு செய்யப்பட்ட நாடாவின் பதிலா?

கூரையில் உணவு தேடிய காக்கைகளை யாரோ முகம் தெரியாதவர் ‘சூ’ என்று கைகளைக்காட்டி விரட்ட, காக்கைகள் சிதறிப்பறந்தன. வெயிலின் உக்கிரம் பத்து மணிக்கெல்லாம் உறைக்கத் தொடங்கியது. தெருவோடு போன இரண்டு இளம்பெண்களையும் ஏறெடுத்துப் பார்க்க மன அவசம் அனுமதிக்கவில்லை. தூரத்தில் உடைந்து கிடந்த கண்ணாடிச் சில்லில் சூரியக்கதிர் பட்டுக் கூச்சம் கண்ணில் தெறித்தது. உடம்பு கசகசவென்று வெப்பக் காற்றால் அவதிப்பட்டது.

குண்டா வாசலைத் தாண்டாமல் ஐந்தடியிலேயே நின்று பட்டறைக்குள்ளிருந்த ஆசாரியைப் பார்த்துக் கேட்டான், “ஐயா, இந்தப் பவுன உருக்கிக் கொடுக்கிறீர்களா?”

“போடா பயலே, நிறைய வேல இருக்கு.”

அது விரட்டுகிற தொனி அல்ல என்பதைப் பையன் அறிந்து, “கொஞ்ச நேரத்துல உருக்கிடலாம்யா” என்று கெஞ்சினான்.

“எவ்வளவு வச்சிருக்கே”

இந்த ஆர்வம் அதிசயக்கத்தக்கதே.

“இதோ” என்று ஒரு காகிதப்பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினான் குண்டா. பவுன் சிதறலும் சில்லும், துகளுமாய் ஒரு சிட்டிக்கைக்கு மேல் இருந்தது.

“எங்க இங்க கொடு பார்க்கலாம்”

குண்டா நீட்டினான்.

“இத எங்கேடா உருக்கறது.” ஆர்வம் உடைந்து சலிப்பாயிற்று.

“முத்தும் ஒண்ணு தனியா வச்சிருக்கேன்”

“எங்க காட்டு பார்க்கலாம்.” ஆர்வம் மறுபடியும் பிறந்தது.

குண்டா இன்னொரு பொட்டலத்தில் மடித்து வைத்திருப்பதைப் பிரித்துக் காட்டினான். வாங்கிய ஆசாரிக்குக் கொஞ்சம் ஆச்சரியம் உண்டாயிற்று.

“நேற்று தொலைஞ்சு போச்சுன்னு சொன்னியே. இந்த முத்தா பார்” என்று பக்கத்தில் இருந்த பட்டறைப் பையனிடம் காட்டினார்.

பட்டறைப் பையன் கையில் வாங்கி உருட்டிப்பார்த்து இல்லை என்று பதில் அளித்தான். ஆசாரி ஏமாற்றம் அடைந்தவர் போல் தென்பட்டார்.

“எல்லாத்தையும் சேர்த்து உருக்க மூணு வெள்ளிடா”

“இப்ப எங்கிட்ட ஒரு வெள்ளிதாங்க இருக்கு. கொடுக்கிறேன். உருக்கித் தந்தீங்கன்னா வித்துவிட்டு வந்து மீதியைக் கொடுக்குறேன்.”

பதில் ஒன்றும் சொல்லாமல் ஆசாரி ரோஸ் காகிதத்தில் சுற்றிக் குகைக்குமேல் பிடித்துக்கொண்டு நெருப்புக் காட்டினார். பையனின் கையில் கொடுத்தார். பையன் ஆசாரியிடம் ஒரு வெள்ளியைக் கொடுத்துக்கொண்டு ‘இதோ வந்திடறேன்’ என்று உருக்கிய பொன்னை ஒரு காகிதத்தில் சுருட்டிக்கொண்டு வாசலுக்கு அப்பால் நின்றபடியே சொல்லிப் போனான்.

ஆசாரி அவராகவே பேசத் தொடங்கினார். “நல்ல பையனுங்க. அசிங்கம் பார்க்காம இந்த அழுக்குத் தண்ணிலெ எவ்வளவு போகுது, கையைப் போட்டு எடுக்கிறானே. யாருக்கு மனசு வரும். எப்படியும் சராசரி அம்பது அறுபது சம்பாரிச்சுடுவான். கெட்டுத் தொலையாமெ உருப்படியா ஏதாச்சும் செய்றானே. பாராட்டணும். நம்ம ஊர்ல இதவிட மோசம். மனுச மலமெல்லாம் மெதக்கும். அதை அள்ளிப்போட்டுத் தேடுவாங்க. ஆனா, பய நம்மகிட்ட கொடுக்கமாட்டான். கொடுத்தா நல்ல விலை போட்டுக் கொடுக்கலாம்தான். இப்பக் கொண்டு போறது எப்படியும் இருநூத்தி அறுபது தேறும். எங்காச்சும் சீனங்கிட்ட கொடுத்து அவன் கொடுத்தத ஏமாந்து வாங்கிட்டு வருவான். இவனுக்கு இங்க யாரும் உருக்கிக் கொடுக்கமாட்டாங்க. போறான் போன்னு நாந்தான் செய்றது. போட்டும்.”

பேச்சு அதோடு வெட்டுண்டது.

மனக்கொந்தளிப்பில் வகையாகச் சிக்கிக்கொண்டு மேலே வருவதற்கு முடியாமல், மூழ்கியும் தொலைக்காமல் தத்தளிக்கிறேன் என்பதை அப்போதும் நான் உணரவில்லை. குண்டாவிடம் அவன் யார் என்ற பூர்வீகங்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மனம் உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகளால் தத்தளித்துக் கொண்டிருந்தபடியால், வாய்ப்பேச்சு ஒருபயனும் இல்லை என்று மௌனமாய் இருந்தேன்.

ஆசாரி நெருப்பை ஊதிக் கொண்டிருந்தார்.

குண்டா திரும்பி வந்தான்.

வாசலுக்கு அந்தப் பக்கமே நின்று, “இந்தாங்க ஐயா அஞ்சி வெள்ளி. பாக்கியக் கொடுங்க” என்றான்.

ஆசாரி ஐந்து வெள்ளியை வாங்கி இழுப்பறையில் போட்டுவிட்டுச் சில்லறையைத் தேடிக் கொண்டே, “எவ்வளவுடா வித்தே” என்றார்.

குண்டா “இருநூத்தி அஞ்சி வெள்ளிங்க” என்று நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுகளை எடுத்துக் காட்டினான். ஆசாரி பார்த்துக்கொண்டே சில்லறையை நீட்டினார்.

பையன் எண்ணிப் பார்த்து, “இன்னொரு வெள்ளிங்க” என்றான் ஏமாற்றமாய்.

“போறும் போடா, வேற என்ன? போடா போடா,” என்று வேலையில் மும்முரம் காட்டுகிறவர் போல், கைச்சுத்தியால் பொற்கம்பியை வெறுமனே அடித்தார்.

“என்ன ஐயா மூணுவெள்ளிதானே சொன்னீங்க. முதல்ல ஒரு வெள்ளி கொடுத்துட்டேன் இப்ப நீங்க மூணு வெள்ளிதானே திரும்பக் கொடுக்கணும். ரெண்டு வெள்ளி குடுக்கிறீங்களே” என்றபடி வாசல் தாண்டி உள்ளே வந்தான்.

“போடா வெளியே. உள்ளே வராதே. கை வேலையைப் போட்டுட்டு உனக்கு உருக்கித் தந்திருக்கேன் இல்ல. பேசாமப் போடா. வேற யாரும் உனக்கு உருக்கிக் கொடுக்கப் போறாங்களோ?”

“நீங்க என்ன ஏமாத்தப் பார்க்கிறீங்க. சின்னப் பையன்னு என்ன ஏமாத்தப் பார்க்கிறீங்க. இன்னும் ஒரு வெள்ளி கொடுங்க.” குண்டாவின் முனகலும் தாழ்வான குரலும் முறுக்கேறின. அவனுடைய பையத்தன்மை வாய்ந்த முகத்தில் ஏமாற்றம் குரூரமாய் வெளிப்பட்டது. அவன் ஒரு யாளியைப்போல் முகம் சுளித்தான்.

நெருப்பை வேகமாய் வீசி, கம்பியைப் பழுக்க காய்ச்சிச் சுத்தியலால் வேகவேகமாய் அடிக்கத் தொடங்கினார் ஆசாரி. வெயிலும் நெருப்புமாய் உஷ்ணத்தின் உக்கிரத்தில் வியர்வை ஊற்றியது. அவர் முகம் நிமிந்தார்.

“உன்ன என்னடா ஏமாத்றது. ஏமாத்ற ஏமாத்றனு சொல்றியே.” இடி இடித்தது.

“இனிமே இந்தக் கடைப்பக்கம் வந்தா காலை உடைப்பேன். எட்றா அந்தக் கல்ல. எங்க இங்க இருந்த கல்லக் காணோம். போடா போடா. இல்ல இந்தக் கல்லாலேயே உன் காலை உடைப்பேன்” என்று ஆசாரி பரபரத்துக் கூவினார். இடிகள் திசைகளில் எதிரொலித்தன.

குண்டாவிடம் அச்சம் ஒன்றும் இல்லை. அவன் முனகியபடியே வெளியேறினான். ஆசாரியின் உடம்பு என்ன காரணத்தினாலோ நடுங்கிக்கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பையனின் பூர்வீகம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

ஆசாரி என்னவோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்.

2 comments for “புள்ளிகள்

  1. Kalaishegar
    November 3, 2016 at 11:32 am

    விரயமாவதை புத்திசாலித்தனமாய் உழைப்பு போட்டு பொறுக்கி,
    பொறுக்கியதை அதன் உரிமையாளரிடமே பணம் கொடுத்து உருவமாக்கி,
    உருவானதை விற்று பணமாக்கி, பணத்தை கராறாய் கையாளும் குண்டா ஒரு மிகச்சிறந்த வியாபாரியாவதற்கான எல்லா தகுதிகளும் உடையவனாகிறான்.

    கதாசியார் கதையை கவரும்படி காட்டியிருக்கிறார்.

    நன்று.

    கலைசேகர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...