கலை இலக்கிய விழா 8 : தொடங்கும் முன் சில வரிகள்.

addvertisment‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆளுமைகளும் ஆவணங்களும்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய ஐவரை ஆவணப்படம் எடுப்பதென முடிவானபோது அப்பட்டியலில் மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோர் இடம்பெற்றனர். ஆனால், சீ.முத்துசாமிக்கு வல்லினம் மூலம் ஆவணப்படம் தயாராவதில் மனவிலகல் இருந்ததால் நால்வரைக் கொண்டே இந்த ஆவணப்பட முயற்சி நிறைவு பெற்றது. இந்த ஆவணப்படத்திற்குத் திட்டவட்டமான கேள்விகள் தயார் செய்யப்படவில்லை. அவரவர் ஆளுமையின் அடிப்படையில் அதன் போக்கு அமைந்தது. இந்த ஆவணப்படத்துக்கென மேற்கொள்ளப்பட்ட சை.பீர்முகம்மது மற்றும் அரு.சு.ஜீவானந்தனின்  நேர்காணல்கள் அவர்கள் அக்காலத்தில் இயங்கிய இலக்கியச்சூழலின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் மா.சண்முகசிவாவின் நேர்காணல் அவர் மேல் மெல்லிய விமர்சனத்தைப் படரவிட்டு அதன் வழி அவரது மனஓட்டத்தைப் பதிவு செய்வதிலும் கோ.புண்ணியவானின் நேர்காணல் அவரது ஆளுமை உருவாக்கம் குறித்து அறிவதிலும் கவனம் செலுத்தியிருந்தன. இதன் வழி இந்த நான்கு நேர்காணல்களும் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களையும் இணைக்க முடிந்தது. சிறந்த ஆவணத்தின் தன்மைகளை உருவாக்கவென திட்டமிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒளிப்பதிவு மற்றும் செறிவாக்கத்தை நண்பர் செல்வன் முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர் இம்முயற்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டது கூடுதல் பலம்.

விமர்சன நூல்

பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டன. மா.சண்முகசிவா சிறுகதைகள் குறித்து க.கங்காதுரையும், அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள் குறித்து ம.நவீனும், கோ.புண்ணியவான் சிறுகதைகள் குறித்து அ.பாண்டியனும் சை.பீர்முகம்மது சிறுகதைகள் குறித்து மஹாத்மனும் தத்தம் கருத்துகளை வைத்து, விவாதித்து, விமர்சனங்களை முன்வைத்து விரிவாக எழுதியுள்ளனர். அவ்வாறான விமர்சனத்தில் ஒவ்வொரு எழுத்தாளரின் சிறுகதைகளில் இருந்தும் மிகச்சிறந்ததாக இரண்டு சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அவை :

அட இருளின் பிள்ளைகளே – அரு.சு.ஜீவானந்தன்cover-02

புள்ளிகள் – அரு.சு.ஜீவானந்தன் (வாசிக்க)

சாமி குத்தம் – மா.சண்முகசிவா (வாசிக்க)

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும் – மா.சண்முகசிவா (வாசிக்க)

வாள் – சை.பீர்முகம்மது (வாசிக்க)

வெண்மணல் – சை.பீர்முகம்மது

குப்புச்சியும் கோழிகளும் – கோ.புண்ணியவான்

கரகம் – கோ.புண்ணியவான் (வாசிக்க)

இக்கதைகளில் சில செறிவாக்கப்பட்டும் பெயர் மாற்றம் பெற்றும் தொகுக்கப்பட்டன. இந்நூல் அடுத்தடுத்து விவாதங்களை உருவாக்கவும் அதன் வழி மேலும் பல நல்ல படைப்புகளை அடையாளம் காணவும் துணை செய்யும் எனும் நம்பிக்கையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு நூல்

cover-01தொகுக்கப்பட்ட இச்சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதென முடிவானது. தமிழ் வாசகர்கள் மத்தியில் பரவலான அறிமுகம் இக்கதைகளுக்கு இருப்பதாலும் தமிழில் பதிப்பிக்க இன்னும் பிற சாத்தியங்கள் உள்ளதாலும் ஆங்கிலத்தில் இக்கதைகளை மொழியாக்கம் செய்து உலக வாசகர்கள் மத்தியில் மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டு செல்வதென முடிவானது. மொழிபெயர்ப்புக்கு எழுத்தாளர் திலீப் குமார் அவர்களை அணுகியபோது அவர் சிங்கப்பூரில் கவிதா அக்கலையில் தேர்ந்தவர் என்றும் அவர் நடத்தியப் பயிற்சிப்பட்டறையில் அடையாளம் காணப்பட்டவர் என்றும் தெரியவர கவிதாவையும் அவர் மூலம் யமுனாவையும் அணுகினோம். இருவரின் முயற்சியால் சுமார் ஏழு சிறுகதைகள் மொழியாக்கம் கண்டன. மேலும் அவற்றைச் செறிவுபடுத்த சிங்கை இளங்கோவன் மற்றும் இராம.கண்ணபிரான் ஆகியோர் பெரிதும் துணை இருந்தனர். எட்டாவது சிறுகதை மற்றும் முன்னுரை உள்ளிட்ட விபரங்களை  மலேசியாவைச் சேர்ந்த திரு,புருஷோத்தமன் ஆகியோர் மொழிபெயர்த்து உதவினார்.

சிறுகதைப்போட்டி

மூத்த படைப்பாளிகளை முன்னிலைப்படுத்தும் அதேவேளை புதியப் படைப்பாளிகளையும் கண்டடைய இவ்வாண்டு திட்டமிட்டோம். அவ்வகையில் சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டது. சுமார் 132 எழுத்தாளர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இது மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. புதிய எழுத்தாளர்களை அடையாளம் காண முடிந்தது. சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களை விமர்சனம் செய்து அதைச் செழுமையாக்கும் பணி ஜனவரி 2017இல் நடத்தப்படும். சடங்கு பூர்வமாக எதையும் நடத்த விரும்பாத வல்லினம் ஒரு போட்டிக்குப் பின் அதன் ஆக்கங்களை வெற்றி – தோல்வி என இரு நிலையில் பகுக்காமல் அதில் பங்குபெற்றவர்களை மேலும் வளப்படுத்த பட்டறைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு முன்னமே வல்லினம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் வழிநடத்திய இந்தக் கலந்துரையாடலில் போட்டியில் பங்கெடுத்த 40 எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எனவே வல்லினம் இந்தப் போட்டியைச் சடங்கு பூர்வமானதாக அல்லாமல் எழுத்தாளர்களை உருவாக்கும் பெரும்பணியாக முன்னெடுக்கிறது.

நாஞ்சில் நாடன் வருகைnanjil-nadan

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இம்முறை கலை இலக்கிய விழாவில் கலந்துகொள்கிறார். மொழிபெயர்க்கப்பட்ட நான்கு எழுத்தாளர்களின் 8 கதைகள் குறித்து அவர் உரையாற்றுவார். சிறுகதையின் நுட்பங்கள் குறித்து அமையும் அவரது உரையால் எழுத்தாளர்கள் புதிய வழிகாட்டல்களை அறிவர்.

இறுதியாக

தனிமனிதர்களால் பெரும் முயற்சிகள் தவறுகளோடு நடக்க வாய்ப்புள்ளவை. வல்லினத்தில் இப்பெரும்முயற்சி கூட்டு உழைப்பால் உருவானது. மலேசிய இலக்கியத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் ஒரு பணியில் அதன் கருத்தோடு ஒத்திசைந்தவர்கள் வல்லினத்திற்குத் தொடர்ந்து கைகொடுக்கிறார்கள். அவர்கள் மூலமே அனைத்தும் சாத்தியமாகின்றன. நேர்மையான செயல்பாடு அவர்கள் வந்திணைய பாதை அமைத்துக்கொடுக்கிறது என நம்புகிறோம்.

 

3 கருத்துகள் for “கலை இலக்கிய விழா 8 : தொடங்கும் முன் சில வரிகள்.

 1. செல்வராஜா முருகேசன்
  November 3, 2016 at 6:02 am

  வணக்கம். அரிய முயற்சிக்கு வாழ்த்தும் நன்றியும் பலகோடி.

  நான் சிறுகதைத் துறைக்குப் புதியவன். இவ்வாண்டு வல்லினம் நடத்தும் சிறுகதைப் போட்டி நான் பங்குகொள்ளும் இரண்டாவது போட்டியாகும். தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் நடத்திய போட்டிக்கும் ஒரு சிறுகதையும் கவிதையும் அனுப்பியுள்ளேன்.

  எழுத்துலகில் உலாவந்துள்ள தத்துக்குட்டி நான். உங்கள் போட்டியும் சிறுகதைகளும் எனக்கு வழிகாட்டியாகும். இருப்பினும்,

  ‘இந்தப் போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு முன்னமே வல்லினம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் வழிநடத்திய இந்தக் கலந்துரையாடலில் போட்டியில் பங்கெடுத்த 40 எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எனவே வல்லினம் இந்தப் போட்டியைச் சடங்கு பூர்வமானதாக அல்லாமல் எழுத்தாளர்களை உருவாக்கும் பெரும்பணியாக முன்னெடுக்கிறது.’

  இந்தச் சந்திப்புக்கான எந்தத் தகவலும் நான் பெறவில்லை. இஃது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  அடுத்த முறை இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.

  முபா.செல்வா24

 2. Kalaishegar
  November 4, 2016 at 9:50 am

  இது நான் பங்குபெறும் முதல் ‘கலை இலக்கிய விழா’. மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்.
  க.இ.வி 8 என் வாழவில் ஒரு பயனான/முக்கியமான நிகழ்ச்சியாய் அமையும் என்பதை உறுதியாய் உணர முடிகிறது.

 3. ஸ்ரீவிஜி
  November 4, 2016 at 11:26 am

  தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...