(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை)
அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி.
மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை – அதைப் பாதை என்று சொல்ல முடியாது – அவனாக உண்டாக்கிக்கொண்ட வழியில் சேறும் சகதியும் களிமண்ணுமாகச் சேர்ந்து கரிசல் நிலமாக இருந்தது. அவன் கால்வைத்த இடமெல்லாம் ‘ளொழக்’கென்று உள்ளே இழுத்துக்கொண்டது. ஏற்கெனவே சொறியும் சிரங்குமாக இருந்த அவனது கால்களில் முட்கள் குத்தியும் கீறியும் இரத்தத்தை வழியச் செய்தன. உடல் முழுதும் எரிச்சல்!
நம்பிக்கை ஒன்றுதான் மனிதனை வாழவைத்துக் கொண்டிருக்கும் மாமருந்து. நம்பிக்கை சரியும்போது வாழ்க்கையும் சரிந்து பள்ளத்திற்கு ஓடி வந்துவிடுகின்றது. நம்பிக்கைகளை இற்று விழச்செய்கின்ற அந்தத் தாய்லாந்துக் காட்டில் உயிர் பிழைத்து விட முடியும் என்று நம்பிக்கையோடுதான் நடந்தான் சந்தனசாமி.
ஜப்பானியர்களின் கையிலிருந்து தப்பிவிட்ட சந்தனசாமி, கடந்த ஐந்து நாட்களாக நம்பிக்கையை நெஞ்சில் நிறைத்துக்கொண்டு, அந்த நடுக்காட்டிலிருந்து வெளிவரத் துடித்துக்கொண்டிருந்தான். கண்ணாடித் தொட்டியில் விடப்பட்ட மீன் நான்கு வட்டத்துக்குள் சுற்றுவதுபோல் சந்தனசாமி திக்கும் திசையும் தெரியாமல் அந்தக் காட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தான்.
பசி வயிற்றைக் கிள்ளியது; சோர்வு உடலைக் கீழே தள்ளியது.
உள்ளத்தைப் பலப்படுத்த நம்பிக்கை உதவும். உடலைப் பலப்படுத்த முடியுமோ? கண்கள் மேலே சொருகிக்கொள்ள அப்படியே மழை நீரால் நசநசத்துப்போயிருந்த தரையில் தொப்பென்று விழுந்தான்.
அன்று வயிற்றுவலியால் மேரி துடித்துக்கொண்டிருந்தாள். அதுதான் அவளுக்கு ‘மாதம்’. நான்கு புறமும் ஜப்பானியர்களின் குண்டுகள் மனிதரின் உயிர்களை வாரி வாயில் போட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் மேரிக்கு அடிவயிற்றை வலித்தது. இயற்கை, சண்டையையும் சமாதானத்தையுமா பார்த்துக்கொண்டிருக்கிறது? அது தன் வேலையைச் செய்துகொண்டுதானே இருக்கும்!
மேரி வலியால் துடித்தபோது அந்தவலி தன்னைப் பற்றிக்கொண்டதாக நினைத்துத் துடிதுடித்தான் சந்தனம். அதுதான் மேரிக்கு முதல் பிரசவம். காமாட்சிப் பாட்டியை அழைத்து வர அவன் கிளம்பியபோது மேரி கதவில் கையை வைத்து அவனை மறித்துக் கொண்டாள்.
“இங்கே… பாருங்க! நான் செத்தாலும் சரி, நீங்க இங்கேயிருந்து நகரக் கூடாது. சியாமிலே ரயில்பாதை போட எல்லாத்தையும் பிடிச்சி இழுத்துக்கிட்டுப் போறாங்களாம்! நீங்க இந்த நேரத்திலே வெளியே போவாதீங்க!”
சந்தனம் வாயடைத்துப்போய் நின்றான். அவள் படும் பாட்டைக் காண அவன் கண்களில் நீர் கசிந்தது. எப்படியாவது காமாட்சிப் பாட்டியைக் கூட்டிவந்து மருத்துவம் பார்த்துவிட அவன் துடித்தான்.
வலி பொறுக்காமல் பக்கத்திலிருந்த நிலையைப் பிடித்துக் கொண்டு துவண்டாள் மேரி. பசியாலும் குண்டுவெடிப்பாலும் பல உயிர்கள் மாய்ந்துகொண்டிருந்த அந்த இழப்புகளைச் சமப்படுத்த இயற்கை சித்து வேலைகளைச் செய்துகொண்டிருந்தது.
“போய்விடுங்கள்… அடுத்த அறைக்குப் போய்விடுங்கள்!” மேரி அவனை விரட்டினாள். என்னதான் கணவன் ஆனாலும் பிரசவ நேரத்தில் அவனும் ஆண்தானே!
அவள் கூறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு அடுத்த அறைக்குப் போவதுபோல் தெருவில் இறங்கி காமாட்சிப் பாட்டி வீட்டை நோக்கி ஓடினான் சந்தனம்.
சந்தனம், காமாட்சி வீட்டை அடைவதற்குள் ஜப்பானியர்களின் லாரி அவனை வந்தடைந்துவிட்டது. சாலையில் ஓடிக்கொண்டிருந்த அவனை இழுத்து வண்டிக்குள் தள்ளினான் ஒரு குள்ளன். வண்டியின் ஒரு மூலையில் தொப்பென்று போய் விழுந்தான் சந்தனம். முகத்தில் இரத்தம் சுண்டி விக்கி விகசித்துப் போய்விட்டான்.
யாரோ தன்னைக் காலால் உதைப்பதை உணர்ந்து இலேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தான் சந்தனம்.
‘ஐயோ!’ – அவனுடைய நெஞ்சுக்குள்ளே உயிர்க் குரல்.
எந்த நம்பிக்கைகளை மூலதனமாகக்கொண்டு அவன் இதுவரையில் உயிர் பிழைத்து வந்தானோ அந்த நம்பிக்கைகளைப் பறித்துக்கொண்டு இடுப்பில் நீண்ட கத்தியுடன் நின்றுகொண்டிருந்தார்கள் ஜப்பானியர்கள்.
அவனைத் தூக்கி நிறுத்தினான் ஒரு குள்ளன். நிற்க முடியாமல் தள்ளாடினான் சந்தனம். முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டுபோய் பக்கத்தில் இருந்த சிறு ‘வேனில்’ தள்ளினார்கள். எந்த வழிகளையெல்லாம் அவன் கடந்து வந்தானோ அதே வழிகளில் ‘வேன்’ திரும்பி ஓடியது. எதை நரகமென்று எண்ணித் தப்பித்து ஓடிவந்தானோ, அதே நரகத்திற்கு இப்போது வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டிருந்தான் சந்தனம்.
கர்னல் ‘இம்மாசகி’யை நினைத்தபோது சந்தனத்தின் நெஞ்சை நெருப்பில் வாட்டுவதுபோல் இருந்தது. மனிதத் தத்துவத்துக்கு அப்பாற்பட்ட முரடன் அவன். அவனுடைய வாயைவிட இடுப்பில் சொருகியிருந்த ‘வாள்’தான் எப்போதும் அதிகமாகப் பேசக்கூடியது. அவனுடைய முரட்டுக்குணத்திற்கு ஏற்ற முகமா, இல்லை முகத்திற்கு ஏற்ற முரட்டுக்குணமா என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றை ஒன்று அணுகி நின்றன. பழிபாவத்திற்கு அஞ்சாத அவனுடைய குணத்தாலேயே ஜப்பானிய ராணுவத்தில் ‘கர்னல்’ பதவிவரை உயர்ந்துவிட்ட ‘இம்மாசகி’யின் முன்னே, தான் என்னென்ன துன்பத்திற்கெல்லாம் ஆளாக வேண்டுமோ என சந்தனம் அழுதான்.
இதுவரையில் தப்பிக்க முயன்று பிடிபட்டவர்களெல்லாரின் தலையும் வெட்டப்பட்டதைத் தன் கண்ணாலேயே கண்ட சந்தனத்திற்குத் தனது முடிவைப் பற்றிச் சிறிதும் ஐயம் ஏற்படவில்லை.
இரண்டு ஜப்பானிய வீரர்கள் சந்தனத்தை ‘இம்மாசகி’யின் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். நெருப்பைக் கக்கிய அந்த இரண்டு விழிகளே சந்தனத்தைக் கொன்றுவிடுவதுபோல் பயமுறுத்தின.
“ஏன் தப்பித்துப் போனாய்?” தகரத்தோடு தகரத்தை உராயும்போது ஏற்படும் கரகரத்த ஓசை ‘இம்மாசகி’யின் குரலிலும் எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டது.
கர்னலின் கேள்வியை மொழிபெயர்த்துச் சொன்னான் பக்கத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளன்.
கேள்வியைக் கேட்டுச் சந்தனம் திகைத்து நின்றான். ஏனென்றால், இதுவரையில் தப்பிக்க முயன்றவர்களை இப்படிக் கேள்வி கேட்டு விசாரித்துக் கொண்டிருந்ததில்லை. பிடிபட்ட மறுகணமே தலை தரையில் உருளும்.
முதல் கேள்விக்குப் பதில் வராமல் இருக்கவே ‘இம்மாசகி’ நாற்காலியைவிட்டு எழுந்து சந்தனத்தின் அருகில் வந்தான். அவனுடைய கை இடுப்பில் இருந்த வாளை இறுகப்பற்றியிருந்தது. அது பிரத்தியேக வாள். இம்மாசகியின் திறனைப்பார்த்து அரசாங்கமே பரிசாகக்கொடுத்தது. அதன் உறையின் பளபளப்பு அக்கொடிய இரவிலும் சட்டென ஒரு மின்னல் வெட்டாகப் பளிச்சிட்டது. அதன் பிடியின் பிரம்மாண்டம், கத்தியின் உறுதி குறித்த கற்பனையை யாருக்கும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இம்மாசகியினால் தலை வெட்டப்பட்டவர்கள் ஒருவிதத்தில் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் இணைந்து பெற்றவர்கள். அவர்களால் கத்தியின் கூர்மையை ஒருகணம் உணர்ந்திருக்க முடியும். அதன் பிரம்மாண்டத்தை கண்டிருக்கவே முடியாது. இம்மாசகியின் வேகம் அதற்கு அனுமதித்திருக்காது.
திடீரென்று கன்னத்தில் விழுந்த அறையைத் தாங்காமல் தரையில் விழுந்தான் சந்தனம். வாயிலிருந்து குருதி கசிந்தது. மின்னல் பளிச்சிடும் நேரத்தில் அது நடந்துவிட்டது.
“ஏன் தப்பிக்க முயன்றாய்? வேலை கஷ்டமாக இருக்கிறதா?” உள்ளத்தை அச்சத்தால் உலுக்கிவிடும் குரல்.
“இல்லை.” இரண்டாவது அறை விழுவதற்குள் பதில் தானாகச் சந்தனத்திடமிருந்து வெளிவந்தது.
‘இம்மாசகி’ ஒரு கணநேரம் திகைத்தான். பின் மீண்டும் பழைய முரட்டுத்தனத்தோடு, “பின் ஏன் தப்பிக்க முயன்றாய்?” என்று கேட்டான்.
மொழிபெயர்ப்பாளன் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
“என் மனைவியையும்… என் குழந்தையையும் பார்க்க ஆசையாய் இருந்துச்சு… என் குழந்தை… அது பொறக்கிற நேரத்திலேதான், என்னைப் புடுச்சிக்கிட்டு வந்துட்டாங்க. அதோட முகத்தைக்கூடப் பார்க்கல்லே… பொறந்தது ஆம்பிளப் புள்ளையா, பொம்பளப் புள்ளையான்னுகூடத் தெரியாது. அதைப் பார்க்கத்தான் இங்கே இருந்து தப்பிச்சுப் போனேன்…” – விக்கி விக்கி அழுதான் சந்தனம். அவனுடைய நெஞ்சில் இப்போது பயத்தைவிடப் பாசமே நிறைந்திருந்தது.
மொழிபெயர்ப்பாளன் சொல்லுவதைக் கேட்டுவிட்டு சந்தனத்திடம் பாய்ந்து வந்தான் ‘இம்மாசகி.’ மறுகணம் சந்தனத்தின் கன்னங்களில் தனது விரல்களைப் பதித்தான்.
சந்தனத்தின் சில்லுமூக்குடைந்து இரத்தம் ஒழுகியது. தனது ‘பளபளத்த’ பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான் ‘இம்மாசகி.’ அடி வாங்கிய வேகத்திலேயே சுருண்டு விழுந்தான் சந்தனம். வாய்விட்டுக் கதற முடியாத அளவுக்குத் தொண்டை அடைத்து, ‘ஐயோ’வென அலற முடியாத நிலையில் துவண்டான். கீழே விழுந்து கிடந்த சந்தனத்தின் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி மீண்டும் அவனது கன்னங்களில் அறைந்தான் இம்மாசகி. கோபத்தில் அவனால் பேசக்கூட முடியவில்லை. அருகில் இருந்த இரண்டு ஜப்பானியர்களை அழைத்து ஏதோ அலறினான்.
அந்த இரண்டு ராணுவக்குள்ளர்களும் சந்தனத்தைத் தூக்கிப் பக்கத்தில் இருந்த தூணில் கட்டினார்கள். அப்படியே சோர்ந்து தலையைத் தொங்கவிட்ட நிலையில் தூணோடு தூணாய் நின்றான் சந்தனம்.
கூடாரத்தின் வாயிலுக்குச் சென்ற ‘இம்மாசகி’ மீண்டும் அங்கிருந்து வேகமாகத் திரும்பி, தனது ஆத்திரத்தைக் காட்டினான். ஒரு மனிதனின் வன்முறைக்கு ஓர் அளவுக்குமேல் மற்றொருவனால் ஈடு கொடுக்க முடியுமா என்ன. ‘இம்மாசகி’யின் முரட்டுத்தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்படியே மயங்கிச் சாய்ந்தான் சந்தனம்.
உயிர் இருந்தது.
விசாரணையையும் அதோடு கலந்த தண்டனையையும் வழங்கிய வேகத்திலேயே வெளியேறினான் ‘இம்மாசகி.’ மற்றவர்களும் வெளியேறினர்.
ஒரு குழியில் இருபது பிணங்களைப் புதைக்கும்போது தனது பிணமும், அதில் ஒன்றாக இருக்குமென்று சந்தனம் நிச்சயப்படுத்திக்கொண்டான்.
சந்தனம் ‘கர்த்தரின்’ கருவியை நாடித் தனது மனத்தை ஓடவிட்டான். அந்தநேரத்தில் அதைவிட வேறு எதையும் நினைக்க அவனால் முடியவில்லை. அவன் கைகள் சிலுவைக்குறி இடத் தவித்தன. ஆனால், இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததால் அவனால் அதைச் செய்யமுடியவில்லை. மனத்தாலேயே குறியிட்டுவிட்டுச் சோர்ந்தான்.
சந்தனம் கட்டப்பட்டிருந்த இடம் சதுப்பு நிலத்தில் அமைந்திருந்தது. மூங்கில்களை வெட்டிப்போட்டு அதன்மேல் கூடாரத்தை அமைத்திருந்தார்கள். பூரான், பூச்சி, பாம்பு, அட்டை, இன்னும் பெயர் தெரியாத பிராணிகளெல்லாம் அங்கே ‘சுகவாசம்’ செய்துகொண்டிருந்தன.
‘மரண ரயில்வே’ என்பது எவ்வளவு உண்மை! இந்த ரயில் பாதையில் உயிர்விட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் தானும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் சேர்க்கப்படப்போவது மயக்கத்தில் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு மணி பன்னிரெண்டிருக்கும். கூடாரத்துக்குள் விளக்கே வைக்கப்படவில்லை. கையில் பிடித்துப் பிசைந்து விடக்கூடிய இருட்டு.
ஓர் உருவம் மெதுவாகக் கூடாரத்துக்குள் நுழைந்து சந்தனத்தை நோக்கி வந்தது. அந்த உருவம் ஒவ்வொரு முறையும் கீழே காலைத் தூக்கிவைத்தபோது சதுப்பு நிலத்தில் கிடந்த மூங்கில்கள் ‘சரச்சரக்’கென்று ஓசை எழுப்பின. அந்த உருவம் வேகமாகச் சந்தனத்தை நோக்கி வந்தது. வந்த வேகத்திலேயே சந்தனத்தின் கட்டுகளை அவிழ்த்தது. நள்ளிரவு மனிதனின் செய்கைகள் சந்தனத்தை அச்சத்தில் ஆழ்த்தியது. ரகசியமான முறையில் தன்னைக் கொல்ல இடப்பட்ட திட்டமாகவே எண்ணிக் கொஞ்சம் திமிறினான். பின்னர் அவ்வுருவம் தன் கண்களைத் துடைத்துக்கொள்வதில் அது தனக்காக அழுகிறது என உணர்ந்து தானும் அழத்தொடங்கினான். அவ்வுருவம் அவனது வாயைப்பொத்தியது. தனது முரட்டுக்கரங்களால் சந்தனத்தைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு கூடாரத்தைவிட்டு வெளியே வந்தது. “வேணாம்… நாளைக்கி நீயும் ஜப்பான்காரன்கிட்ட மாட்டிக்குவே” எனச்சொல்ல வந்த சந்தனத்தின் வாயை மீண்டும் அவ்வுருவம் பொத்தியது.
கடைசியாக இருவரும் ‘கூட்ஸ் வண்டி’ வந்து நிற்கும் இடத்திற்கு வந்தார்கள். சாத்தப்படாமல் இருந்த ஒரு ‘கூட்ஸ் வண்டி’யில் சந்தனத்தைப் பிடித்துத் தள்ளினான் அந்த மனிதன்.
சந்தனத்தின் திகைப்பை அடக்க முடியவில்லை. “நீ வரலயா?”
வெளியே நின்றுகொண்டிருந்த அந்த நள்ளிரவு மனிதன் ஒரு கூடையைச் சந்தனத்திடம் தூக்கி எறிந்தான். அதில் பழங்களும் ரொட்டியும் இன்னும் சில உணவுப் பொருட்களும் இருந்தன. அந்த நள்ளிரவு மனிதனைப் பார்க்க சந்தனம் செய்த முயற்சிகளை எல்லாம் இருட்டு பாழாக்கியது. மீறி கண்களை வற்புறுத்தினால் வீங்கியிருந்த பகுதிகள் முகம் முழுக்க வலியைப் பரப்பின.
‘கார்ட்’ பச்சை விளக்கைத் தூக்கிக்கொண்டு அவ்வழியாக நடந்து சென்றபோது அவ்வுருவம் சட்டெனத் தன்னை முற்றிலுமாக இருளில் மறைத்துக்கொண்டு காட்டைநோக்கி நடந்தது. ரயில் புறப்பட்டுவிட்டது. ரயில் நிலையத்தில் எஞ்சியிருந்த சிறிது வெளிச்சத்தில் காட்டை நோக்கி நடந்தவனின் இடுப்பில் இருந்து மின்னல் வெட்டுப் போன்ற ஒளி பளிச்சிட்டு சந்தனத்தின் கண்களைக் கூசச்செய்தது.
முரட்டுத்தனம் நிறைந்த மனிதரிடத்தில்தான் இறக்க குணமும் ஒளிந்திருக்கும் என்பதற்கு இம்மாசாகி சான்று.
இதுதான் ‘மரண ரைல்வெய்’யில் கட்டுமான தளத்தில் நிகழ்ந்த பெரும் அதிஸ்டவச சம்பவம் போல.
சந்தனம் மெரி மற்றும் பிள்ளையை அடைந்திருப்பானாக!
*இரக்க குணம்*