ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனை நுலைவாயிலின் நேர் எதிர் அமர்ந்து அவன் மர சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான். வேலைபாடுகள் முடிந்த ஒரு சில சிற்பங்கள் மட்டும் அவனைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஓவியன் ஒருவனின் முழுமைப்பெற்ற ஓவியங்கள் மருத்துவமனை வேலிகள் நெடுக சாய்த்து வைக்கப்பட்டிருந்தன.
அடர்த்தியான அச்சிறுநகரத்தில் கார்களின் பேரிரைச்சல், வழிந்தோடும் மக்களின் பெருங்கூட்டம், உயர்ந்தெழும் அவர்களது பேச்சொலிகள் என அனைத்தையும் கிழித்தெறிந்து அவசரப் பிரிவை நோக்கி விரைந்தது ஒர் ஆம்புலன்ஸ். ஒளிரும் அதன் ஆரஞ்சு வெளிச்சம் எதிர்கொண்டு வரும் அனைத்திற்கும் எச்சரிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. தான் உருவாக்கும் யானைகள், விந்தையான கோணக்கழுத்து ஒட்டகச்சிவிங்கிகளென சிற்பி ஒரு வனத்தையே இச்சிறுநகரத்துக்குள் கொண்டுவந்துக் கொண்டிருந்தான். அவன் செதுக்கிய விலங்குகள் யாவும் நாளிதழ்களின்மேல் நடமாடிக் கொண்டிருக்க, அவன் மட்டும் அவை உயிர்புடன் இல்லை என சதா புலம்பிக்கொண்டே இருந்தான். மருத்துவமனை வாயிலில் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருக்கும் மக்களின் அசைவுகளைப் பார்த்து நிலைகொள்ள முடியாமல் சமயங்களில் கோபம் தலைக்கேறியவன் உயிரற்று வெற்றுவடிமாகி நிற்கும் தனது சிற்ப விலங்குகள் அத்தனையையும் பொருக்கி படபடக்கும் வேகத்துடன் அட்டைப்பெட்டிக்குள் போடுவதுண்டு.
‘அந்த முதலை பிடிச்சிருக்கா? அது ரொம்ப நல்ல முதலை. உனக்கு அது வேண்டுமா?’ மருத்துவமனையிலிருந்து அழுதபடி வந்துகொண்டிருந்த சிறுவனிடம் தாயொருத்தி கனிவாய் பேசி தன்வசப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள். அச்சிறுவனின் வலது முழங்கையைச் சுற்றி வெள்ளைக் கட்டு இறுக்கிப் பிடித்திருந்தது. மற்றொரு கையால் அதற்கு ஊன்றுகொடுத்து தன் தற்காலிக குறைப்பாட்டைக் காட்டி தாயின் கவனத்தை ஈர்ப்பதிலேயே அவன் கவனம் மொத்தமாய் குவிந்திருந்தது. சிறுவனக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்து, அவனது கண்களுக்குள் மெல்ல ஊடுருவிச் சென்று மன்றாடத் தொடங்கினாள்.
‘பையனுக்கு ஊசி போட்டிருக்காங்க. குழந்தைகள் ஊசிக்கு பயப்படும்னு உங்களுக்கும் தெரியும்தானே,’ அவள் சிற்பியிடம் பேசியவாறே முதலைச் சிற்பம் ஒன்றை வாங்கி சிறுவனின் கைகளுக்குள் தினித்தாள். தன்னுடைய விலங்கொன்று அச்சிறுவனின் குட்டி விரல்களுக்கு இடையே பிடிகொண்டிருப்பதில் சிற்பியின் பார்வை நிலைகுத்தியது. அவன் செதுக்கிய விலங்குகளுக்கு உயிரில்லை. அவற்றை மீண்டும் பெட்டிக்குள் போட்டு வைப்பதே அவனது தேர்வாகவும் இருந்தது. முற்றிலும் தரிசாகிப்போன இந்நகரத்தின் மிஞ்சிய ஒற்றை நதியும் இப்போது கருஞ்சாலைகளாகி விட்டது. இனி இச்சிறுவன் எப்போதாவது ஒரு உயிருள்ள முதலையை இந்நகரில் பார்க்க வாய்ப்பிருக்குமா என்ற வியப்புக்குள் சிற்பியின் நினைவுகள் வியாபிக்கத் தொடங்கின.
சிற்பத்தையும் அவனையும் வெள்ளை அங்கியணிந்த ஒருவன் தொடர்ந்து கவனித்தபடி நின்றிருந்தான். உடலோடு இணைத்து செதுக்கப்பட்ட தும்பிக்கை இருந்த சிவப்பு யானையொன்றை கையிலெடுத்தான். சிவப்பு நிற யானை? தும்பிக்கையை சற்றும் உயர்த்த முடியாதபடி செதுக்கப்பட்டிருந்த அந்த யானையைத் திகைப்பும் வேடிக்கையையும் பரவ பார்த்தான். மோசமான வேலைபாட்டுடன் இருந்த அதை வாங்கவும் முடிவு செய்தான். அதை அவன் தன் அலுவலக ஜன்னலோரம் வைப்பான். அங்கிருந்துபடி யானையும் வரிசையில் நிற்கும் நோயாளிகளைப் பார்க்கும். ஏன் யானைக்கு கண்கள் வைக்கப்படவில்லை? ஒருவேளை சிவப்பு சாயம் அதன் கண்களை மறைத்திருக்கலாம்.
திடீரென்று சிற்பி புலம்பத் தொடங்கினான்.
‘என்ன நடந்தது?’ என ஓவியன் கேட்க,
‘இந்த ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தைப் பார்.’
ஓவியன் ஒட்டகச்சிவிங்கியைக் உற்றுப் பார்த்தான். இருவரும் சட்டென வெடித்துச் சிரித்தார்கள். நோய்மையின் மிக அருகில் இருக்கும் ஒருவன் இப்படி சிரிப்பது எளிதான காரியமில்லை. தன் உருவத்தையோ அல்லது தான் வடிக்கும் உயிரற்ற விலங்குகளை அவ்வப்போது நின்று பார்க்கும் நோயாளிகளையோ இதுவரை தான் செதுக்கியதே இல்லை என எண்ணி சிற்பி தனக்குள் வியந்துகொண்டான். ஒரு கணம் அருகிலிருந்த அட்டைப்பெட்டிக்குள் எட்டிப்பார்த்து யார் கண்ணுக்கும் படாதபடி அனைத்தையும் மறைவான இடத்தில் வைக்க எத்தனித்தான்.
‘நீ ஏன் மற்ற விலங்குகளையும் செதுக்கக்கூடாது. சிங்கம், சிம்பன்சி போன்ற வேறு மிருகங்கள்? எப்போதும் ஒட்டகச்சிவிங்கிகளை மட்டும் செதுக்குகிறாய். நீ செதுக்கிய ஒரேயொரு முதலையும் விற்பனையாகி விட்டது!’ இவ்வாறு சிற்பியின் வேலைபாடுகளில் அவ்வப்போது ஓவியனின் தாக்கமும் சேர்ந்திருக்கும். விலங்குகளுக்கு வண்ணம் தீட்ட தனது வண்ணங்களை இரவல் கொடுப்பது போல. சிவப்பு யானைகூட ஓவியனின் யோசனைதான்.
‘யானை நீண்ட காலமாக காட்டை ஆட்சி செய்கிறது. அது அந்தக் காட்டைவிடவும் பழையது. ஆனால் ஒட்டகச்சிவிங்கி இந்த காடே தன்னுடையதுபோல, மரங்களின் உச்சிவரை தனது கழுத்தை ஆணவமாய் நீட்டிக் கொண்டிருக்கிறது. போதாகுறைக்கு மரத்தின் மிக உயர்ந்த பகுதி இலைகளையும் தின்கிறது. இந்த யானை மட்டும் நாள் முழுக்க சேற்றில் உழல்கிறது. காட்டின் மிக உயர்ந்தப் பகுதி இலைகளை யார் தின்பது எனும் இந்தப் போராட்டத்தைப் பார்க்க உனக்கு வேடிக்கையாக இல்லையா?’
ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனையில், ஆம்புலன்ஸுகள் மின்னலென அவர்களைக் கடந்து அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்தது.
அப்போது, ஓவியன் நாளிதழ்கள், சஞ்சிகைகள் என வாசித்து தன் நினைவகத்தில் சேகரித்து வைத்திருந்த ஞாபகங்களை திரட்டி வரைந்திருந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி ஓவியத்தின் இறுதி வேலைபாடுகளில் மூழ்கியிருந்தான். சிற்பியின் வார்த்தைகள் ஓவியனின் சிந்தனையில் மேலோட்டமாக வந்துபோனது. இதுவரை அவன் நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை. நீர் என்பது நீல நிறமாகத்தான் இருக்க வேண்டும், அவன் தன் ஓவியத்திற்கு உயிர்கொடுக்க எத்தனித்து சிந்தனையில் ஆழ்ந்தான். வரைபடத்தில் காட்டப்படும்போது நீர் நீலமாக இருக்க வேண்டும் என்றும், கடலைப்போன்று மிகத் தத்ரூபமாகக் காட்ட தண்ணீரின் நிறம் வானத்தை ஒத்த நிறத்தில் இருக்க வேண்டும் என்றும் அவனுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவனும் செங்குத்தான பாறைகள்மீது கட்டுக்கடங்காத கதிர்நீல அலைகளை வரைந்து, அசாத்தியமான சித்தரிப்புகளைச் செய்யத் தொடங்கினான்.
‘முதுகின் தோல் பகுதி அழகான கம்பளம் போன்றிருப்பதால்தான் ஒட்டகச்சிவிங்கிக்கு இவ்வளவு கர்வம். இத்தனை போராட்டங்களுக்கும் அது மட்டும்தான் காரணம். அழகான அந்த தோல் மட்டும் இல்லையென்றால் இரண்டுமே ஒப்பீட்டளவில் சமம்தான். அதற்கு நீண்ட கழுத்து இருப்பது போலவே யானையாலும் தன் நீண்ட தும்பிக்கையால் உயர்மட்ட இலைகளைப் பறித்து தின்ன முடியும்.’
அவன் ஓவியத்தின் ஒரு பகுதியில் இரண்டு காதலர்களை வரைந்தான். ஒருவருக்கொருவர் அணைத்தபடி அந்த நீல-நீரில் தங்களது காதலை ரசிப்பதுபோல. அந்த நீர் அவர்களை நோக்கி பாட வேண்டும் என நினைத்தவன் ஒரு பறவையை வரைந்தான். நீர்வீழ்ச்சியில் அது தன் அலகுகளை திறந்து பாடுவது போல. அது கருப்பான காகமாக இல்லாமல் ஒரு புறாவாக இருந்திருக்கலாமோ என வரைந்தபின் யோசித்துப் பார்க்கிறான்.
சிற்பி சில வண்ணங்களை இரவல் வாங்கி ஒட்டகச்சிவிங்கியின் குட்டைக் கழுத்துக்கு கருப்புப் புள்ளிகளை வைக்கிறான். தன்னால் விலங்குகளை நிறைவான தோற்றத்துடன் செதுக்க முடியாதென அவனுக்குத் தெரியும். இருந்தும் செதுக்கி வைக்கும் எதையும் வீசுவதில்லை. காரணம், ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமேயான அந்த மருத்தவமனைக்கு வரும் யாரொ ஒருவர் இந்த சிற்பத்தில் தனக்கான மகிழ்வைக் காணக்கூடும். புள்ளிகளை வைத்து முடிக்கும் தருணம் ஒட்டகச்சிவிங்கியின் இரு பக்கமும் கரும்புள்ளிகள் வழிந்தொழுகத் தொடங்கியது. இப்போது அது ஒரு குட்டி வரிக்குதிரையைப் போல காட்சியளித்தது.
‘நீ ஏன் நாயையோ அல்லது பூனையையோ செதுக்குவதில்லை? இந்த நகரத்து மக்கள் பார்த்து பழகிவிட்ட ஒன்றை ஏன் செதுக்க மறுக்கிறாய்? ஒரு எலியையாவது செதுக்கலாம். இந்த நகரத்தில் எலிகள் நிறைந்துவிட்டன!’ சட்டென அவ்விடத்தில் சிரிப்பொலிகள் நிறைந்தன. நீர்வீழ்ச்சியிலிருந்து வெளிபடும் நீர்தெளிப்புகள் அக்காதல் ஜோடிகள் மீது படக்கூடும் என்பதை உணர்ந்த ஓவியன் அவர்களது தலைமேல் சிவப்பு குடையொன்றை வரைந்தான். ஓவியத்தில் மேலும் ஏதோ ஒன்று குறைவதை உணர்ந்தவன், அவர்களின் வெற்றுக் கைகளில் மஞ்சள் பனிக்கூழை வரைந்தான். இப்போது அந்த ஓவியத்தில் உயிரோட்டம் நிரம்பியிருந்தது.
‘ஒரு யானையைச் செதுக்குவதால் என்ன பயன்? ஏன் நீ நாய்களையோ பூனைகளையோ அல்லது எலிகளையோ செய்ய வேண்டியதுதானே?’ தான் செதுக்கிய யானையையோ ஒட்டகச்சிவிங்கியையோ சிற்பி ஒருமுறைகூட கவனித்து பார்த்ததில்லை. சிற்பி மரத்கட்டை ஒன்றை எடுத்தான்.
அது ஒட்டகச்சிவிங்கியாகுமோ அல்லது யானையாகுமோ? அவன் செதுக்குவது அவனது கனவுகளைத்தான்.
– இவோன் வேரா (Yvonne Vera)
தமிழில் : விஜயலட்சுமி
1 comment for “நீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது? (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை)”