“பத்மா க்கா… நாந்தான் பேசறேன். எனக்கு ஒரு உதவி வேணும். நான் இப்ப அவசரமா வெளிய போக வேண்டிய சூழல். தங்கச்சிக்கு ஏதோ பிரச்சினைபோல.”
“ஏம்மா? என்ன பிரச்சினை? ஏன் இங்கிருந்துகிட்டே ரகசியமா போன் செய்யற?”
“உங்ககிட்ட நேரில் பேசிட்டு வெளியாவதை யாரும் பார்த்தா உங்களுத்தான் சிக்கல். மற்றதை வந்து சொல்றேன். எப்படியும் 2 மணி நேரத்துல போயிட்டு வந்திடுறேன். கொஞ்சம் சமாளிச்சிக்க முடியுமா க்கா?”
“ஆமா… வேலை செய்யாம தூங்கி வழியறவனுங்களும், காலையில் பஞ்ச் பண்ணீட்டு பத்து மணிக்கு வரவனுங்களும் நல்லாதான் இருக்கானுங்க. உன்னை மட்டும்தான் அவன் கண்ணு உருத்திக்கிட்டு நோட்டம் விடும். நீயும் முக்காடு போட்டுகிட்டா ஒரு பிரச்சினை இல்ல போல. சரி.. சரி.. போயிட்டு வா.. கடக்கறானுங்க! நான் பார்த்துக்கிறேன்!”
“ரொம்ப நன்றி க்கா. அடுத்த மாதம் எனக்கு வேலை கன்பர்மேஷன் இன்டர்வியூ இருக்கு. ஏற்கனவே இருமுறை இழுக்கடிச்சிட்டாங்க. இந்த முறை ஏதாவது சிக்கல் வந்தால் வேலையே போயிடும். அதான் கொஞ்சம் பயம். வெளியாக அனுமதி கேட்டாலும் கிடைக்காது. சீக்கிரமா திரும்ப வந்திடுவேன். வந்ததும் உங்களுக்கு அழைக்கிறேன். கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்க. ரொம்ப நன்றி க்கா.”
அலுவலகத்தைக் கடந்து மாடிப்படிக்கு வருவதற்குள் எட்டு தொலைபேசி அழைப்புகள். பதற்றத்தில் கைவிரல்கள் பத்தும் நடுங்கத் தொடங்கியதோடு விழியை முட்டிக் கொண்டு கண்ணீரும் வந்தது.
நேரில் எதிர்ப்பட்டவர்களிடமிருந்து விலகி மேலங்கியில் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
“அம்மா கொஞ்சம் இருங்க. நான் காரில் ஏறிட்டு கூப்பிடுறேன்.” அழைப்பைத் துண்டித்து, ஆறு மாடிகள் இறங்கி காரில் ஏறும்போது மணி மூன்று. ஐந்து மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அம்மாவுக்கு அவளால் எதையும் செய்ய முடியுமென எண்ணம். மகளுக்கு கவர்மண்ட் வேலை என அவர் அக்கம் பக்கத்தில் சொல்லிக்கொள்ளாத நாள் இல்லை.
கொளுத்தும் வெயிலில் காரின் இறுக்கைகள் வெந்துகொண்டிருந்திருக்க வேண்டும். சூடு கனன்று பிட்டத்தையும் பின்னந்தொடைகளையும் பதம் பார்த்தது. குளிரூட்டிய அறையிலிருந்து வெளிபட்டு அடுப்புக்குள் புகுந்துக்கொண்டதால் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல் ஆனது.
மீண்டும் கைப்பேசியில் அம்மாவிடமிருந்து அழைப்பு. எண்ணெயை அழுத்தினாள்.
“புனிதா…என்னானு தெரியல. ராத்திரியெல்லாம் அழுகை. நானும் என்னனென்னவோ சமாதானம் சொல்லி பார்த்துட்டேன். பேசும் எதையுமே காதில் வாங்கிக்கல. சரி அழுது மனசுல உள்ள பாரத்தையாவது குறைச்சிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்ப திரும்பவும் எனக்கு அழைத்து அழுகை. நான் என்ன புனிதா செய்ய? உங்கப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சினை இன்னும் பெருசாகும். நீதான் கவர்மண்டுல வேல செய்யுறியே…”
“நான் போறேன்மா.”
“என்னவோ போ. கொஞ்சமும் நிம்மதியில்ல. செத்து மண்ணா போற வரைக்கும் இப்படியேதான் எம்பொழப்பு போல,” அம்மா விம்மத் தொடங்கினாள். முகத்தில் விரவியிருந்த வரிகோடுகளில் நீர்துளிகள் சரம்விட்டு ஒழுகி நெஞ்சுக் குழிக்குள் வடிந்திருக்கும்.
“நான் கார் ஓட்டுறேன்மா. பிறகு கூப்பிடுறேன்.”
***
சங்கரி. புனிதாவின் தங்கை. அவள் பிறந்து பத்து வருட இடைவெளிக்குப் பின் பிறந்தவள். முதலில் பிறந்தது பெண் என்பதால் அடுத்து பிறப்பதாவது ஆணாக பிறக்க வேண்டி அம்மா ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு நடையாய் நடந்தாள். பன்னிரண்டு வருடத்துக்குப் பிறகு நடக்கும் குடமுழுக்கு திருவிழாவுக்காகக் கோயிலே அல்லோல கல்லோலப்பட்டு கிடந்தது. அம்மாவும் தன் பங்குக்கு நாற்பத்து எட்டு நாளும் கோயிலின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தாள். புதுசாயம் பூசுவது, கோபுரத்தில் தங்க கலசம் வைப்பது, எல்லா முனையிலும் சிலை நிறுத்துவது என கோயில் நிர்வாகஸ்தர்கள் நன்கொடை கேட்டு அலைந்துகொண்டிருந்தார்கள். சின்னப்பாட்டி எப்போதும் சொல்வதுபோல் ‘அப்பன்குடி பெருங்குடி; அவன நம்பினா செருப்படி’ என்பதற்கு பொருத்தமாய் குடிகார அப்பாவை லட்சியமே செய்யாமல் அம்மாவை நம்பிதான் குடும்பமே ஓடிக் கொண்டிருக்க, அம்மா காமாட்சி அம்மன் சிலை வைக்க இரண்டாயிரம் வெள்ளி நன்கொடை கொடுத்திருந்தாள். கழிவுகூட்டில் மிஞ்சிய பணம். எல்லாமும் அடுத்து பிறக்கப்போவது ஆம்பளையா பிறக்கனும் என்ற ஒரே வேண்டுதலுக்காக மட்டும்.
மூன்று வருட திருவிழாவில் தொடர்ந்து மண்சோறு சாப்பிட்டும் அப்பா குடியை விடாதது போல அம்மாவுடைய இந்த வேண்டுதலும் பொய்யாய் பொசுங்கி போனதுதான் மிச்சம். பிறந்தது பெண் என்பது ஒரு இடி என்றால் கருமாரி சிலையை ஒத்திருந்தது அதன் நிறம். அட்டக் கருப்பில் அலறிய குழந்தையை தூக்கவே அம்மா பயந்தாள். “இதை எவனுக்குப் பெத்த,” என்று அப்பா கேட்டாலும் கேட்பார். முதலில் ஏதோபோல் இருந்தாலும், பாட்டி வீட்டுக்கு வந்த பிறகு அம்மா கொஞ்சம் அசுவாசப்படுத்திக் கொண்டாள். “இவ என்னாடி இவ்வளவு கருப்பா இருக்கா? அதுசரி. அம்மா பரம்பரையில் தாத்தன்காரன் கரிகட்டை மாதிரி அப்பா வழியில் மாமனும் இருக்கான்ல அதான்… குடும்பத்துக்கு ஒன்னாவது பரம்பரையை சொல்லணுமே,” பாட்டி இதை தெரிந்து சொன்னாலோ தெரியாமல் சொன்னாலோ, ஆனால் அதுவே அம்மாவுடைய கற்புக்கு அரணாக இருந்து காப்பாற்றியது.
அம்மாவையும் பாப்பாவையும் கவனித்துக்கொள்ள மூன்று வாரம் வீட்டில் தங்கிய பாட்டி வந்த வேகத்திலேயே கோலாலம்பூருக்கு பஸ் பிடித்து கிழம்பிவிட்டார். அதன்பிறகு ஒரு மாதம்தான் அம்மா விடுப்பில் இருந்தாள்.
காலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த புனிதா ஒரு மணிக்கு வீடு வந்ததிலிருந்து பாப்பாவை பார்க்கும் பொறுப்பு அவளுடையது. பாப்பா குப்புற திரும்பியது, தவழ்ந்தது, முட்டிப்போட்டது, தத்தித் தடுமாறி நடந்தது, பள்ளிக்குப் போனது என அனைத்தையும் மிக அருகில் இருந்து கவனித்தவள் புனிதா. நாள்கடந்து பிறந்த பிள்ளை என்பதாலோ என்னவோ சங்கரியின் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் வயதுக்கு மீறிய முதிர்ச்சி வெளிபட்டுக் கொண்டே இருக்கும். அம்மா வீட்டில் பதுக்கி வைக்கும் பணத்தை அப்பா அலசி ஆராய்ந்து எடுத்துக் கொண்டு போய் ஆ சோ கடையில் தைசோங் குடிப்பது வீட்டில் பலநாள் வாடிக்கை. அம்மாவால் வீட்டு வாசல் வரை மட்டுமே அவரிடம் மல்லுக்கட்டி திருடிய பணத்தை மீட்க வாய்ப்புண்டு. மறுஅடி வாசலைத் தாண்டினால் அம்மாவின் ஐம்புலன்களும் அடங்கி முடங்கிவிடும்.
அப்போதெல்லாம் சங்கரிதான் அப்பாவிடம் மல்லுக்கு நிற்பாள். அப்பாவின் முரட்டுத்தனமான அடியை வாங்கிக் கொண்டே அவர் கையில் இருக்கும் பணத்தைப் பிடுங்குவதும், கால்சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டு காசெடுப்பதும் அவளுக்கு மட்டும் அத்துப்படி. அப்படியும் சிலமுறை அப்பா சில நூதனமான சித்து வேலைகளையெல்லாம் செய்து யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விடுவதுண்டு. அப்போதும் ஆ சோ கடைவரை சென்று பாதி பணத்தையாவது மீட்டுவரும்போது அதை அவளது சாதனைகளின் உச்சமாக அம்மா கொண்டாடுவாள்.
ஒருமுறை இருவரும் பள்ளிமுடிந்து வந்துக் கொண்டிருக்கும்போது இப்படியான ஒரு சம்பவம் நடந்தது. அப்பா பயங்கர குடியில் கடைத்தெருவே அதிரும் அளவுக்கு ஆர்பாட்டம் செய்துக் கொண்டிருந்தார்.
“அக்கா ! அங்க பாருங்க அப்பா கழுத்தில்…”.
அப்பா கழுத்தில் ஆறு ஏழு தங்கச் சங்கிலிகள். அம்மா விரும்பி வாங்கிய அரக்கு பட்டையும், ரெட்டை இலை வாத்து சங்கிலியும் அதிலொன்று. கைச்சங்கிலி, விரல்களெல்லாம் மோதிரங்கள் என அப்பா இந்தமுறை நகைக்கடையில் தன் கைவரிசையை காட்டிவிட்டாரொ என குழப்பமும் அவமானமுமாய் புனிதா நடையைத் துரிதப்படுத்த, சங்கரி அப்பாவை நோக்கி ஓடினாள். கையைப் பிடித்திழுத்து சரித்து கீழே தள்ளி எல்லா நகையையும் கழற்றினாள்.
மப்பும் மந்தாரமுமாய் அப்பா “ஏய் நாயி. என்னையா தள்ளிவிடுற. இரு உன் மண்டைய ஒடைக்கிறேன். … சொல்லிகிட்டே இருக்கேன்,” எச்சில் தெரிக்க துதிபாடிக் கொண்டே அடிக்கும் தோரணையில் கைகளை காற்றில் அறைந்துக் கொண்டிருந்தார். ஒருவழியாய் எல்லா நகைகளையும் அள்ளி பள்ளிப்பைக்குள் போடும்போது ஆ சோ கிழவன் சங்கரியின் சட்டை காலரை பிடித்தான்.
“உங்கப்பன் எனக்கு ஆயிரம் வெள்ளி கடன். இந்த நகையை என்னிடம் கொடு. பணத்தைக் கொடுத்துவிட்டு உங்கம்மாவை வந்து நகையை எடுத்துப்போகச் சொல்லு,” என்றான் அறைகுறை மலாயில். அந்த சம்பவம் நடக்கும்போது சங்கரி நான்காம் ஆண்டு மாணவி.
அவனது கையை அறைந்து உதறி, “உனக்கு காசு வேணும்னா அவருகிட்டயே போய் கேளு. இது எங்கம்மாவோட நகை. இதை எடுத்தா நான் எங்க சிலம்பம் மாஸ்டருகிட்ட சொல்லி போலீஸை கூட்டிக்கிட்டு வருவேன்,” என்றாள்.
ஆ சோ கிழவன், “பறையனுங்களுக்கு வெட்கமே இல்ல,” என்றபடி பின்னங்கால்களில் அப்பாவை எத்திவிட்டு சங்கரியை காரி உமிழ்ந்தான். அன்று மட்டும் சங்கரி அப்படி செய்யாமல் இருந்திருந்தால் அம்மாவின் எல்லா நகையையும் அப்பா சல்லிக்கூத்தாடி ஆ சோ கிழவனுக்கு அளந்துவிட்டு வந்திருப்பார்.
அந்த மாரியம்மன் தான் வேண்டியதில் பாதியையாவது கொடுத்திருக்கே என்று அம்மா அன்று மட்டும் கொஞ்சமாய் மகிழ்ந்து கொண்டாள். சங்கரி ஒரு பக்கம் அம்மாவுக்கு இப்படியான உதவிகளையெல்லாம் செய்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் வேறுவிதமான தொல்லைகளையும் உருவாக்கிக் கொண்டே இருந்தாள்.
விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று மலாய்க்கார பையனை தள்ளி காயம் ஏற்படுத்தி விட்டாள்; ‘பறையா’ என்று சொல்லி கிண்டலடித்த பையனின் வாயில் குத்திவிட்டாள்; ‘ஓய் அனா மாபோக்’ என்று சொல்லி கூப்பிட்ட எதிர்வீட்டு தோக் வானை ‘முட்டாள்’ என்று திட்டிவிட்டாள் என்றும் அடுக்கடுக்காய் குற்றாச்சாட்டுகள் வரும்போது அம்மா அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சங்கரியை விளக்குமாறு, தண்ணிர் குழாய் என கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு கிழித்தெடுப்பாள். சாதாரணமாகவே நேரோட்டம், நெடுவோட்டம் என வட்டார அளவில் ஓடி பரிசுகளைக் குவித்து வைத்திருக்கும் சங்கரியை அம்மா மிக லாவகமாக அவள் குளிக்கும்போது அறையில் புகுந்து பதம் பார்ப்பாள்.
எவ்வளவு அடிவாங்கினாலும் மரக்கட்டைபோல் விறைத்துக் கொண்டு நிற்பாளன்றி கண்களில் துளியளவு கண்ணீர் வராது. அம்மாவே கையசந்து “ச்ச்சி ! போ! நாயே” வென விட்டாலொழிய சங்கரி காலடி பிசகாமல் நட்டு வைத்த தென்னைமரம்போல நிற்பாள்.
***
கைப்பேசியில் பாடல் அலறியது. சங்கரியிடமிருந்து அழைப்பு.
“அக்கா…! அக்கா..!”
“ஹ்ம்ம் சொல்லு. அழுகையை நிறுத்திவிட்டு பேசு. உனக்கு எவ்வளவு அறிவுரை சொன்னேன். ஏன் இப்படி செய்த? அம்மா பாவமில்லையா?” புனிதா குரலில் நிதானத்தைத் தொடர்ந்து கடைபிடித்தாள்.
“இல்லக்கா. நீங்க பேசனதுக்கு அப்பறம் நானும் படுக்க போயிட்டேன். என் ஸ்க்குவார்ட் சட்டை, மெத்தை உறை எல்லாத்தையும் அதுங்க ஒழிச்சி வச்சிருச்சிங்க… என்னால முடியலக்கா….” குரல் தழுதழுத்து இறுகியிருந்தது. இரவெல்லாம் அழுதிருக்க வேண்டும்.
“சரி அதுக்கப்பறம் நீ என்ன செய்த சொல்லு! இந்த மாதிரி சிக்கல் வந்தால் அதை கைபேசியில் படம் எடுத்து உன் சார்ஜனுக்கு உடனே மெயில் அனுப்ப சொன்னேன்தானே.”
“நெட் வேலை செய்யல. சார்ஜனுக்கு அழைத்தேன். அவர் அழைப்பை எடுக்கல. வார இறுதி விடுமுறைன்னா அவங்க அழைப்பை எடுக்க மாட்டாங்க. அதுவும் நான் அழைத்தா சுத்தமா கண்டுக்கவே மாட்டாங்க. வேறு வழியில்லாம அந்த சீனியருங்ககிட்டயேதான்கா திரும்ப போய் நின்னேன்,” தொடர்ந்து பேச முடியாமல் குரல் தளர்ந்தது.
புனிதாவின் கண்களில் சரசரமாய் கண்ணீர் கொட்டியது. உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த உலையிலிருந்து கண்ணீர் சூடாய் கன்னங்களில் நூல்விட்டது. “ம்ம்ம் சொல்லு….,” இப்போது நிதானம் குரலில் மட்டும் வெளிபட்டது.
“சீனியர் என் பேஜ்ச்சிலிருந்த மொத்த ஸ்குவார்ட்டையும் அப்போதே திடலுக்கு இறங்கச் சொல்லி என்னை முன்னுக்கு கூப்பிட்டு நடந்ததை எல்லாருக்கும் கேக்கற மாதிரி கத்தி சொல்ல சொன்னாங்க. நானும் சொன்னேன். என் முகத்துக்கு எதிரில் வந்து நின்னு ஏளனமா சிரிச்சி ‘உன் சுக்மா மெடலும் காணாம போயிருக்குமே. அத கவனிக்கலியா? ஐய்யோ பாவம். கெலிங்! நீயெல்லாம் எதுக்கு இங்க வர. உன்மாதிரி வந்த எல்லாரும் பாதியிலேயே ஓடிருச்சிங்க. அப்பறம் நீ மட்டும் ஏன் திமிறா சுத்தற’னு சொல்லி அத்தனைப் பேரையும் என் கன்னத்தில் அறைய வச்சிட்டாங்க.”
புனிதாவின் மூச்சு அடைபட்டது.
“அறுபத்து எட்டு பேரு. எல்லாரும் வேகவேகமா அறைந்தாங்க. நான் அழல. அப்படியேதான் நின்னேன். பேசாமல் போய் படுத்துட்டேன். ஆனால் தூங்க முடியல. அவமானம். அதான் அம்மாவுக்கு….”
“சங்கரி நீ போனை வை. நான் இப்போதே இதற்கு ஒரு வழி செய்கிறேன். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு போவதாக இருந்தாலும் இவங்களுக்கு பாடம் கற்பிக்காம போகக்கூடாது,” எனச் சொல்லி தங்கையின் அழைப்பைத் துண்டித்தாள்.
உடம்பை செல்லறித்துக் கொண்டிருந்த கோபத்துக்கு மத்தியில் அடுத்து என்ன செய்வது என்று மூளை அதர பாதாளம்வரை சென்று வாய்ப்பு தேடி அலைந்தது. கைப்பேசியில் பெயர்களை நகர்த்தினாள். அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. எடுக்கலாமா வேண்டாமா என கொஞ்ச நேரம் தயங்கினாள். எதுவாக இருந்தாலும் பத்மா அக்கா பார்த்துக்கொள்வாள் என தனக்குத்தானே கூறிக்கொண்டாள். அழைப்பது மேலாளராக இருந்தால் சாலையின் இரைச்சல் ஒலியை வைத்து வெளியேறியுள்ளதை கண்டுப்பிடித்துவிடலாம்.
மூர்த்தி சுங்கத்துறை அதிகாரி. எதிர்பட்ட அவர் எண்ணுக்கு அழைப்பைச் சொடுக்கினாள்.
“அம்மா புனிதா… இதெல்லாம் சகஜம். மற்றவங்களுக்கு தங்கத் தட்டில் வைத்து வருவது நமக்கு வீசியாவது எறியப்படுதேனு சந்தோசப்பட்டுக்கனும். உங்கள் நிலைமை எனக்குப் புரியிது. முதலில் கொஞ்சம் கடினமா இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. தாக்குப்பிடிக்க முடியுமானால் இருக்கச் சொல்லுங்க. இல்லையென்றால் வெளியாகிட சொல்லுங்க. ஆனால் அவனுங்களே எண்ணிஎண்ணி கொடுக்கும் இடத்தை நாமளும் இப்படி விரயம் செய்வது சரியில்லனு உங்களுக்கே தெரியும்”
அவரது பதில் புனிதாவை சுழலுக்குள் தள்ளி தலையைத் தனியாகப் பீய்த்தெடுப்பதுபோல் இருந்தது.
***
தங்கையின் நினைவுகள் ஒவ்வொன்றாய் சுருளிட்டது. ஆறாம் ஆண்டு, படிவம் மூன்று என எல்லா அரசாங்கத் தேர்வுகளிலும் மிகச் சிறந்த அடைவுநிலைகள். சுக்மா சிலம்பப்போட்டியில் வெள்ளிப் பதக்கம், வட்டார ரீதியில் அஞ்சல் ஓட்டம், நெடுவோட்டம் என ஒவ்வொன்றாய். விளையாட்டுகளில் பரிசுகளோடு வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மா அவளிடம் எதிர்முகம் காட்டியது சில கணங்கள் நினைவில் உறைந்து நின்றது.
“இதெதுவும் உன்னோட எதிர்காலத்துக்கு உதவாது. உன் மாமங்காறன் பந்து விளையாட்டுனு எத்தனை வருடமா அலையறான். இப்பவரைக்கும் ஸ்கூல் பிள்ளைங்களுக்கான கோச்சிங் லைசண்ஸ்கூட கிடைக்கல. அதான்… இந்த விளையாட்டெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. ஒழுங்கா படிச்சி யூனிவர்சிட்டுக்கு போயிடு. வீட்டுல இந்த ஆளோட தொல்லையில உன் கவனம் சிதறக் கூடாதுனு மட்டும்தான் சிலம்பம், ஜோகிங்னு நீ கேட்கிற இடத்துக்கெல்லாம் அனுப்புறேன்”.
அதிகம் இந்தியர்கள் மட்டுமே பங்கெடுக்கும் போட்டி என்பதால் சிலம்பத்தில் ஒலிம்பிக் வரை போய் தங்கம் வென்றாலும் பயனில்லை என்பது அம்மாவின் வாதம். நடந்ததும் அதுவே. படிவம் ஐந்து தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று சங்கரி வட்டார ரீதியில் சிறந்த மாணவியாக தேர்வாகியிருந்தும் வாய்ப்புகளுக்கான கதவுகள் அடைபட்டு கிடந்தன.
குறைந்த புள்ளிகளைப் பெற்ற நாட்டுப் புத்திரர்களை ஒன்றன்பின் ஒன்றாய் கல்லூரிகளும், தொழிற்பயிற்சிகூடங்களும் உள்ளிழுத்துக் கொள்ள, எப்போதும் போல் பணம் படைத்த சில இந்திய, சீன நண்பர்களும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு போய்விட்டனர்.
“ஆரம்பத்திலிருந்தே படிச்சி படிச்சி சொன்னேன். விளையாட்டெல்லாம் வேணாம். ஒழுங்கா படினு. இன்னும் கொஞ்சம் நல்ல ரிசால்டு எடுத்திருக்கலாம்ல.”
‘இதுக்கு மேலெ எப்படி நல்லா படிக்கிறது?’ என்ற கேள்வி சங்கரியைக் குடைந்து கொண்டிருந்தது. படிவம் ஆறில் பயில்வது அல்லது தனியார் கல்லூரிக்குப் போவது எனச் சுறுங்கிவிட்ட வாய்ப்புகளில் செலவு அதிகமில்லாத படிவம் ஆறை தொடர்ந்தாள்.
முதல்தவணை தேர்வே சறுக்கிவிட, பல்கலைக் கழகத்துக்கு மீள்விண்ணப்பம் செய்யும் நாளுக்காக காத்திருந்தாள். முதல் சுற்றில் பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்கள் சிலர் வெளியேறிவிட அடுத்த வாய்ப்பை திறந்து விட்டிருந்தது பல்கலைக்கழக நிர்வாகம். தேர்வுநிலை உடல் பரிசோதனைக்குச் சென்றவள் இரண்டு செண்டிமீட்டர் குட்டை எனக் காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டபோது கைக்கொடுத்தது சுக்மா பதக்கம்.
இப்படி வராது வந்த வரமாய் சங்கரி அந்த பல்கலைக்கழகத்தில் நுழைந்து வெறும் மூன்று மாதங்களே ஆகிறது. அதற்குள் ஆயிரமாயிரம் அழைப்புகள்; புலம்பல்கள். இதெல்லாம் பல்கலைக் கழகங்களில் சிலகாலம் மட்டுமே நடக்கும் ரேகிங் என்று சொல்லி புனிதா சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தாள். நேற்றிரவு நடந்து சம்பவம் அத்துமீறல். இப்படியே விட்டால் கேட்பாரற்றவள் என்று அத்துமீறல் உடல்வதையாக நீளும் வாய்ப்புண்டு என்று நினைக்கையில் காரின் வேகம் முன்பைக் காட்டிலும் வேகமானது.
பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலில் பெயர் பதிவு செய்துவிட்டு சங்கரி தங்கும் இடத்திற்கு காரை விட்டாள். இவள் வருகைக்காய் காத்திருந்த சங்கரி மூட்டை மூட்டையாய் கருப்புப் பைகளில் துணியைக் கட்டிக் கொண்டு நின்றாள். காருக்குள் ஏறியதுதான் தாமதம், பொளபொளவென்று கண்ணீர் வடிந்தது. கதறி அழ ஆரம்பித்தவள், “என்னை கூட்டிக்கொன்டு போங்க. இங்க இருந்தா அவளுங்க என்னை சாகடிச்சிடுவாளுங்க. இல்லை நானே வலியும் அவமானமும் தாங்காம செத்திடுவேன்,” சிவசங்கரி அரற்றினாள்.
அவளது கன்னம் பளுத்திருந்தது. கருத்த முகத்தில் விரல்கள் பதிந்ததும், வீங்கி சிவந்திருந்ததும் அத்தனை துள்ளியமாய்த் தெரிந்தது. புனிதாவால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தங்கையை அழவிட்டாள்; சுரப்பிகளிலிருந்து கண்ணீர் துளிகள் தீரும்வரை அல்லது மனதில் மூலை முடிச்சுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அவமானம் கரைந்து ஓடும்வரை அழவிட்டாள். ஒருவாறு சமாதானம் ஆகியவளின் கண்களுக்குள் மிக ஆழமாய் ஊடுருவி, “இந்த உலகத்தில் உனக்கானதை வேறெவரும் உன்னிடமிருந்து பரித்துக் கொள்ள அனுமதிக்காத சங்கரி. நீதான் உன்னை காப்பாற்றிக்கனும். இங்கேயே இத்தனை சிக்கல்னா வெளிய வந்தா இன்னும் யார் யாருகிட்ட என்னென்ன ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டிவரும் என யோசித்துப் பார். கோபம் எப்போதும் உன் உள்ளுக்குள் இருக்கட்டும். வெளியில் வளைந்துப்போ. இங்கு காசு பணத்தோடு கொஞ்சம் சுயகெளரவமாக வாழ்னும்னா வேறு வழியில்ல,” என்று அசுவாசப்படுத்தினாள்.
“உங்களுக்கு என்ன… நல்ல வேலையில இருக்கீங்க. நானு…” அழுதாள்.
“முதலில் உன் சார்ஜனக்கு இந்தப் படங்களை மின்னஞ்சல் அனுப்பிட்டு பிறகு மற்றதைப் பற்றி யோசிக்கலாம்.” கைப்பேசியில் மின்னஞ்சலை திறந்தாள். இன்பாக்ஸில் அலுவலகத்தில் இருந்து தலைமை நிர்வாகி ஐந்து நிமிடத்திற்கு முன் மின்னஞ்சல் அனுப்பியிருப்பதைக் காட்டியது. என்ன மின்னஞ்சல் என திறக்காமலேயே ஊகிக்கக் கூடியதாய் இருந்தது. தங்கையின் கன்னத்தில் இருந்த வடுவை இன்னொருதரம் கூர்ந்து பார்த்தாள்.
அருமையான கதை தோழி
பலகலைக் கழகங்களில் ரேகிங் அத்துமீறும் போது ஒரு புதிய மாணவிக்கு உண்டாகும் மனோவியல் பாதிப்பு கதையில் அழுத்தமாய்ப் பதிவாகியிருக்கிறது. சிறுபான்மையினரை இழிவாக நடத்தும் தன்மை மனதை நெருடுகிறது. மின்னஞ்சலி ல் வந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.சங்கரி பல்கலைப் படிப்பைத் தொடரமாட்டாள் என்றே வாசகன் யூகிக்கும்போது ஒரு நல்ல மாண்வியின் கல்வி இடையிலேயே நின்றுவிடும் ஆபத்தை தெளிவாக முவைக்கிறது கதை. தோல் நிறம் பார்த்து நடத்தும் அரசியலை அடையாளப்படுத்தும் கதை. சீரான நடை வாசிப்ப்பபைத் தூண்டுகிறது.
அப்பாவைக் குடிகாரனாகக் காட்ட்டுகிறார், வீட்டுப் பணம் நகை யாவற்றையும் குடிக்கென்றே அழிக்கும் அப்பாவைத் தடுக்கும் முயற்சியில் சங்கரிக்கும் விழும் அடிகளைத் தாங்கிக்கொண்ட ஒரு வலிமையானப் பெண்ணாகக் காடுகிறார் . ஆனால் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ரேகிங்கை அல்லது அவமானபடுத்தலை சங்கரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லும் போது ரேகிங் எந்த அளவுக்கு சங்கரியைப் பாதித்திருக்கிறது என்ற குறிப்பையும் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர்.
அருமையோ அருமை. அற்புதமான கதை ஓட்டம். நல் வாழ்த்துகள். நன்றி நன்றி நன்றி..
வாழ்த்துகள், சிறப்பான கதை
கட்டுரை வழி அறியப்பட்ட விஜயலட்சுமியின் முதல் பிரசமான சிறுகதை ‘அறை’. நம் நாட்டுச்சூழலில் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களை சொல்வற்கும் எழுதுவதற்கும் ஏதோ தடை இருப்பதாக பலர் சொல்லிக் கேட்டிருக்கலாம். இருந்தும் சொல்ல வந்ததை செல்லவேண்டியதை புரியும் வகையில் சிறுகதையயாக்கியுள்ளார் எழுத்தாளர். படிக்கும் மாணவி எதிர்நோக்கும் சிக்கல் ஒரு பக்கம் என்றால், அரசாங்க பணியில் இருப்பதாக பார்க்கப்படும் புனிதா எதிர்நோக்கும் சிக்கல் கதையில் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது நேர்த்தி. வாசிக்க வைக்கும் எழுத்து. தொடர்ந்து எழுதவேண்டும்.
கதை நீரோட்டமாக எழுதப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. இனப் பாகுபாடு, புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் போராட்டம், அவற்றிற்காக எடுத்துக் கொள்ளப்படும் பகடிவதை ஒருபுறம் நிற்க, மறுபுறம் ஒரு தமிழ்த்தாயின் அவலம், குடிகாரத் தந்தை, சீனரின் ஏளனப் பேச்சு ஆகியவற்றைக் காண்கிறோம். ஆனால், சங்கரி படைக்கப்பட்ட விதம்…. ஒரு போராட்டக்காரி. அவள் வீழலாமா? அவளுக்கே இந்த நிலையென்றால்…..?
வாழ்த்துக்கள் விஜயா. தேசிய ஒருமைப்பாட்டிற்கு பெரும் சிக்கலாக விளங்கும் இனப்பாகுப்பாட்டையும் அதன் தீவிரத்தையும் மிக எளிமையான காட்சிகளால் பதிவுபடுத்தியுள்ளீர்கள். வரவேற்தக்க முயற்சி. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.
வணக்கம். தோட்டப் புறத்திலும் ஏழ்மையானக் குடும்பத்திலும் பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகப் போராடும் போராட்டங்கள்…இனப்பாகுபாட்டால்
நம் சமுகத்தினர் எதிர்நோக்கும் பல இன்னல்கள்..கதையில் நம் கண் முன் வலம்வந்துள்ளன..இதற்கு தீர்வுதான் என்ன?..அதில் நம் பங்கு என்ன?…என சிந்திக்க வைத்த எழுத்தாளருக்கு நன்றி.