மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம்kavithai1

வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை

நோய்க்கூறுகளை துல்லியமாக

உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்

 

ஒவ்வொரு புள்ளிகளிலும்

ஒரு கதையை செருகச்சொல்லி

தீவிரமாக வேறெதையோ தேடலானார்

 

உடன்பாடில்லையென்றாலும்

கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்

 

முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக

எழுதிக்கொடுத்தார்

சின்ன வயதில் யாரையோ

கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை

அங்குச் செருகினேன்

நெற்றிப் பொட்டு வலித்தது

 

இரண்டாவது புள்ளி என் கண்களில் இருப்பதாக

எழுதிக் கொடுத்தார்

ஒரு முறை தோழி தன் காதலனுக்கு

முத்தம் கொடுத்தகதையை அங்குச் செருகினேன்

என் இதழ் எச்சிலானது

 

மூன்றாவது புள்ளி என் கட்டை விரலில் இருப்பதாக

எழுதிக் கொடுத்தார்

அப்பாவின் கையெழுத்தை ஏமாற்றி போட்டுவிட்ட

கதையை அங்குச் செருகினேன்

நகத்தின் முனை உடைந்தது

 

நான்காவது புள்ளி என் நாவின் நுனியில் இருப்பதாக

எழுதிக் கொடுத்தார்

இதுதான் முதல் முறையென

சொல்லி அணைத்தக் காதலியின்

கதையை அங்குச் செருகினேன்

நாவு கடிபட்டது

 

இப்படியாகப் பல புள்ளிகளைக் கண்டறிந்து

அதற்கான கதைகளை செருகியும்

நிம்மதியை முழுமையாக அடைய முடியாதபடி

 

மனைவியை வன்கலவி செய்த கனவினை

செருகிவைக்கவேண்டிய புள்ளியை மட்டும்

கண்டுபிடிக்கவே முடியாதபடி கண்கலங்கி தோல்வி கண்டார்

3 comments for “மருந்தென்னும் மாயப்புள்ளி

 1. July 1, 2017 at 8:40 pm

  வல்லினத்தில் மலறும் கவிதைகள் பேருக்கேற்றவாரு வன்மையாகவே இருக்கின்றது. யதார்த்தங்களை அள்ளித் தினித்து நம் வாழ்வின் ஒவ்வொரு எல்லைக்கும் இழித்துச் சென்று சுட்டிக் காட்டுகின்றது. சில சமயங்களில் கவிஞரையும் காட்டிக் கொடுக்கின்றது. நன்றி. சிறப்பான இக்கவிதை என்னை வெகுவாய் ஈர்த்தது.

 2. ஸ்ரீவிஜி
  July 5, 2017 at 5:01 pm

  வாவ்வ்வ்வ் தம்பி சூப்பர்

 3. peer mohamed bin syed mohamed
  November 1, 2017 at 11:25 pm

  நவீனத்துவத்தை அதிகம் கொண்டுவந்து
  வாழ்வின் எதார்த்தத்தைக் காட்டும் கவிதை .நல்ல கவிதைகள் கூட சொல்லும் மொழியால் சிதையுறுவதை
  பல சமயங்களில் பார்த்துள்ளோம்..
  தயாஜியின் இந்த கவிதையும் அதன்
  மொழியும் அருமை.எந்த ஒரு எழுத்துக்கும் வாசிப்பே மூலதனம்.
  சி.முத்து சாமி சொல்வது போல் மேம்போக்கான படைப்பு மேம்போக்காகவே இருக்கும். தயாஜி நிறைய வாசிக்கிறாரென்று இக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தவுடனே அறியமுடிகிறது.
  இறுதியில் கவிதை முடியும் பொழுது
  திடுக்கிட வைக்கிறார். காதலியுடனான
  கனவு நெருக்கத்தை எந்த டாக்டரால் தான் சொல்ல முடியும்.?அடுத்த தலைமுறை வீரியத்துடன் வந்துவிட்டது.
  சை.பீர்முகம்மது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *