நேற்றுத்தான், போனவனுக்கு, கல் நிறுத்தி காரியம் செய்து முடிந்திருந்தது.
சீனன் கடைச் சாராயம் சல்லடைக் கண்ணாகி இதயத்தைத் துளைத்தெடுத்திருப்பது, ஆஸ்பத்திரிக்காரன், எக்ஸ்ரே எடுத்து, வெளிச்சம் போட்டுப் பார்த்துச் சொன்னபோதுதான் தெரிந்தது. சொல்லச் சொல்லக் கேட்காமல், வீட்டில் கிடந்ததையெல்லாம் எடுத்துப்போய், விற்றுக் குடித்தது, ஆஸ்பத்திரியில் ஒருமாதம் கிடத்திவைத்தது.
அப்போதெல்லாம், கை ஒத்தாசைக்காக, கோயில் கூத்து மேடையில் அடைக்கலம் தேடியிருந்த தமிழ்ப் பள்ளியில், ஆறாங் கிளாசில் பெயர் போட்டு வந்த சின்னப் பொண்ணை, பெரிய வாத்தியாரிடம் லீவு போட்டு, அவன் பக்கம் நிற்கவைத்துப் பார்த்தாள் லெட்சுமி.
மரம் அறுத்து, அரக்கப்பரக்க பாலெடுத்து, கொட்டாயில் கொண்டுபோய் வைத்து, கங்காணி ஐயாவிடம் பாலை ஊத்தச் சொல்லி, வீட்டுக்குப் போய், சோறு கறி ஆக்கி, பன்னிரண்டு மணி பஸ்ஸில் ஏறிப்போய், அவனைத் தூக்கி மடியில் கிடத்தி, குழைந்த சோற்றைப் பிசைந்து, மெதுவாக ஊட்டி, கொஞ்சம் பொறுத்து வெதுநீரில் துணியை நனைத்துப் பிழிந்து, உடம்பைத் துடைத்துவிட்டு, சின்னப்பொண்ணுக்குத் தைரியம் சொல்லி, வீடு வந்து சேரும்போது- அந்தி வேலைக்குப்போன பெண்கள் மம்பட்டிக் கணை தோளில் படுக்க, வீடு போய்க்கொண்டிருப்பார்கள்.
அப்படி விழுந்து விழிந்து பார்த்தவன்தான், ஒருநாள் காலையில், மிரள மிரளப் பாத்தபோது, சின்னப்பொண்ணு பயந்துபோய் மிஸ்ஸியைக் கூப்பிட, அவசரமாகப் பொருத்திய பிராணக் காற்றையும் ஏமாற்றிவிட்டு, போய் சேர்ந்திருந்தான்.
தோட்டத்து லாரியில் போய்ப் பிணத்தைக் கொண்டு வந்து, வசூல் பண்ணித்தான் எடுத்துப்போட்டார்கள். தாராளமாக நிதி கொடுக்கும்படி வேண்டும் போஸ்டர்கள் சாவு வீட்டில் ஒட்டப்பட்டிருந்தன. அதன்கீழ் ஒரு உண்டியல், ஒரு நோட்டுப்புத்தகம். குளிருக்கு நெருப்பு மூட்டம் போட்டு, சீட்டாடும் கூட்டத்திற்கு அந்தப் பக்கம்- பறை முழக்கம், தோட்டத்து இரவில் பாறையாகக் கனத்தது.
காரியம் முடிந்து போகும்போது, அண்ணன் கேட்டான்- “என்ன தங்கச்சி.. இனிமே இங்க என்ன செய்யப் போற… என்னோட அங்க வந்துடேன்….”அவள் நிதானமாகவே பதில் சொன்னாள் – “ வரலாம்… அதப்பத்தி ஒண்ணும் இல்ல.. உங்கள நம்பி அங்க வந்தாலும்… உங்க நெலமயல.. அந்த ஆறு புள்ளைங்களோட, இந்த அஞ்சு ஜீவனையும் வச்சி வச்சி எத்தனை நாளக்கிச் சமாளிக்க முடியும்… செவப்பு பாஸ்போட்டோட இருக்கற எனக்கு, புதுசா அங்க வேலயும் கெடக்கப் போறதில்லை…”
அவள் பதிலில் இருந்த உண்மை, அவனுக்கு முன்பே புரிந்ததுதான். ஆறோடு, இப்போது மூன்று மாசமாக முழுகாமலிருக்கும் அவளையும் வைத்துக்கொண்டு, துண்டு போட்டுச் சிதறிப்போன தோட்டத்தில் ஆயிரம் பிரச்சினைகளுக்கிடையே, பல சமயங்களில், மத்தியானம் எல்லோருமாகக் கஞ்சி குடித்துக் காலம் தள்ளும் தன் அவல நிலை – எல்லாமே நன்றாகவே தெரிந்திருந்தது, என்றாலும், அது தன் கடமை என்ற காரணத்தினாலும் நாலுபேர் நாலு விதமாகத் தன் முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாதே என்ற எண்ணத்தினாலுமே, அப்படிக் கேட்டு வைத்தான்.
மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பிசைந்த மாவை வட்ட மங்கில் தட்டித் தட்டி, அப்பச் சட்டியில் போட்டு எடுக்கும் இந்தக் காலை வேளையிலும் மனசுள் கோலம் போடும் அந்தக் காட்சி – அவள் மனச்சுவர்களைக் கணைகளாக நெருடத்தான் செய்கின்றன.
மனசை அதிலிருந்து பிய்த்தெடுத்துப் பார்த்தபோது, பக்கத்து வீட்டு முனியம்மாள், புருஷனைச் சீக்கிரம் பெரட்டுக்குப் போய் ஆஜர் கொடுத்து வர, அவசரப்படுத்திக் கொண்டிருப்பதும், மேட்டுக்குச்சிப் பக்கம் எழுந்த வீராசாமி தண்டலின் குரலும் தெரிந்தது. எதிர்த்த லயத்து, குசினிப் பக்கங்கலில் இன்னும் விளக்கு எரியாமல் இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பதினைந்தாம் நம்பர் தண்டல் சின்னசாமி. இன்று கொஞ்சம் உரக்கவே விசிலை ஊதுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. முதல் கோழி கூவி வெகு நேரமாவதை நினைத்தபோது, அவர் உரக்க விசில் அடிப்பதன் அவசியம் புரிந்தது. நடுச்சாமம் வரை பணியில் உட்கார்ந்து படம் பார்த்தது, இப்போது மூக்கை அறுத்தது.
அவன் போனதிலிருந்து சின்னப் பொண்ணை, பள்ளியை விட்டு நிறுத்துயிருந்தாள். அவளையும் வேலைக்காட்டுக்கு, கை ஒத்தாசைக்குத் தன்னுடன் அழைத்துப் போகிறாள். இவள் கத்தியைப் போட்டு, பட்டையைக் கீறி, பஞ்சரில் பாலைச் சரிப்படுத்தி, மங்கில் முதல் சொட்டு இறங்குவதற்குள்- சின்னப்பொண்ணு, நாலைந்து மரங்கள் முந்தி, மங்கில் காய்ந்து நாறும் கட்டிப்பாலை இழுத்து, வக்குலுக்குள் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கக் சங்கடமாகத்தான் இருக்கிறது. அப்போதெல்லாம் அவள், பள்ளியில் இருக்கும் தன் இரண்டு பையன்களை நினைத்துக் கொள்கிறாள்.
நேற்றே கொட்டாயில் பாலூத்தும்போது கிராணி சொல்லியிருந்தார். இன்று, டபுள் வெட்டு என்று. டபுள் வெட்டித்தான் ரெண்டு நாட்களுக்கு முன்பு, இரவெல்லாம் அடித்த மழையில், மரம் காயாமல் திட்டு விழுந்துபோனதை ஈடுகட்ட வேண்டும். இன்னும் சின்னப்பொண்ணு, பாயில் சுருண்டு கிடப்பது அப்போதுதான் நினைவு வர, மாவைத்தட்டி சட்டியில் போட்டு, தீயைக் கொஞ்சம் இறக்கிவைத்து, உள்ளே போனாள். எல்லாமாக, குளிருக்கு அணைந்து சுருண்டு கிடந்தன. எழுப்பி, முகம் கழுவி, பசியாறக் கொடுத்து பழைய கறியில் ரொட்டியைத் தொட்டு வயிற்றுக்குப் போட்டு, அவளும் கொஞ்சம் வரக் காப்பியைக் குடித்து வைத்தாள்.
காண்டா வாளியை எடுத்து, முன் வாசலில் வைத்து, கடைக்குட்டிகள் இரண்டையும் ஆயக்கொட்டாயில் விட்டுவரப் போய் வந்தாள். கங்காணி வழியில் போனவர். “என்ன லட்சுமி… இன்னும் நெரக்கிப் போறப்படலியா. டபுளாச்சே.. சுருக்க போனாத்தான் வெல்லன முடிக்க முடியும்… ம்… பொறப்புடு…”என்று குரல் கொடுத்துப்போனார்.
சின்னப்பொண்ணு, கையில் சோத்துப் பானையுடன், அவள் பின் போக, பையன், அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். தோளில்படுத்த காண்டா கம்பின் நுனிகளில், துளையிட்டுத் தொங்கிய கம்பிகளின் கீழ், வாளிகள் அசைந்தன. கோடை இலையுதிர்ந்து மொட்டையாயிருந்த ரப்பர்க் காடு, இப்போது வேகமாகத் துளிர் ஏறி, பூக்களைச் சொரிந்து, சில இதற்குள் காய்த்து, குரங்குகள் பறித்துக் கும்மாளம் போடுவதை, சின்னப்பொண்ணு, பின்னால் வேடிக்கை பார்த்து வந்தாள்.
வானத்தின் கிழக்கில் ஏறிய வெளுப்பு, மேலே இலைகளினூடாகத் தெரிந்தது. மழைக்குச் சாய்ந்த மரங்களை முனையில் நறுக்கி, நாலாபக்கமும் கம்பி கட்டி, தூக்கி நிறுத்த வெளிக்காட்டு ஆட்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். சில நெரைகளில், இதற்குள் இரண்டு மூன்று பத்திகளில் பால் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் பின் திரும்பி, “சின்னவளே… வேடிக்கை பார்க்காம வேகமா நடடீ…” என்று தானும் நடையைச் சற்று எட்டிப்போட்டாள்.
ஐந்தாவது பத்தியில், முதல் மரத்தின் கோட்டுப்பாலை விசுக்கென இழுத்துக் கத்தியைப் போட்டு பட்டையை நைசாகக் கீறி எடுத்து, மங்கை கம்பியில் சரிபடுத்த, குச்சிகள் நொறுங்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தபோது, கங்காணி, வாயில் குதப்பிய எச்சில் சாறை அப்போதுதான் துப்பி, அவளைப் பார்த்து வந்துக் கொண்டிருந்தார்,
“என்ன லட்சுமி.. இன்னிக்கு சின்னப் பையனையும், கூட்டிக்கிட்டு வந்துட்டாப்பல இருக்கே…”
“ஆமாங்க… பள்ளிக்கூடமும் இல்ல… வெள்ளிக் கெழம லீவுதான்… வீட்டுல இருந்தாலும் கண்ட எடத்திலயும் போயி ஆடி கையக் கால ஒடிச்சுக்குவான்… இங்கயாவது ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கூட்டிட்டு வந்தேன்…”
“அது சரி லட்சுமி.. போன வாரம் பிரஜா உரிம மலாய்ப் பரிச்சைக்குப் போனயே… என்ன ஆச்சி? பாசாக்கிட்டானா?
“எங்க பாசாகறது… நானுந்தான் அந்த அசான் பொண்டாட்டி அமினாகிட்ட , போறதுக்கு முன்னாடி, நாட்டுக் கொடிக்கு என்ன பேரு… எம் பேர எப்படிச் சொல்றதுன்னெல்லாம் கேட்டுத்தான் போனேன்… அதெல்லாம் எங்கங்க தலையில் தங்குது. போய்ச் சேரதுக்குள்ளார எல்லாமே மறந்துபோயிடுது.. இந்தத் தடவயும் போச்சுங்க.. இனிமே பரிச்சைக்குப் போறதாயும் இல்லிங்க..”
“என்ன லட்சுமி பண்றது. அந்தக் காலத்தில தோட்டந்தோட்டமா வந்து கையத் தூக்கிச் சத்தியம் பண்ணச்சொல்லி, பெரஜா உரிமை கொடுத்தாங்களாம். அப்ப, அப்பனுங்க, நமக்கெதுக்கு அதெல்லாம், என்னைக்காவது கப்பல் ஏறப்போறவந்தான், அப்படீன்னு அசட்டையா இருந்துட்டாங்க… இப்ப, நாம அதுக்காக நாயா அலைய வேண்டி கெடக்கு… எம்ம எம்.ஐ.சி தலைவர்கிட்ட அன்னிக்கு இது சம்பந்தமா பேசிக்கிட்டிருந்தேன்… அப்பா அம்மா பெரஜா இல்லன்னா, பெரஜா கெடக்கிறது ரொம்பக் கஷ்டம்னு சொன்னாரு… ஆமா, பெர்மிட்ல சாப்பு குத்திட்ட இல்ல…”
“அன்னிக்கித்தான் குத்திட்டி வந்தேங்க… இன்னும் மூணு மாசந்தான் செல்லுமாம். அதுக்குப் பின்னால என்ன பண்றதுன்னுதான் ஒரே கவலையா இருக்கு,” என்று மரத்தில் ஒரு கையை ஊன்றி நின்றபடி சொன்னாள்.
“கவலைப்படாத லட்சுமி… கிராணி ஐயாகிட்ட சொல்லி வக்கறேன்.. அவரு எல்லாம் பார்த்துக்குவாரு. ஐயாகிட்ட கொஞ்சம் நல்லா நடந்துக்க..”
“ரொம்ப ஒபகாரங்கையா. ஏதோ அந்த மனுஷனும் இப்படி விட்டுட்டுப் போய் தொலச்சிடுச்சு.. இந்தப் பிள்ளைங்கள ஒடியேத்த ஒதவனீங்களா போதுங்க…”
“சரி கவலைப்படாத… நேரமாயிடப்போவுது… கிராணி ஐயா வர்ற நேரம்… மரத்த வெட்டு..” என்று, அடுத்த நெரையை நோக்கி நகர்ந்தார்.
பேச்சு வாக்கில், நினைவு தப்பிய ‘டபுள்’ அப்போதுதான் உள்ளே கிறீச்சிட, அவசரமாக, வெட்டுக் கோட்டைப் பார்த்துக் குனிந்து, கோட்டுப் பாலின் முனையை நெருடிப்பிடித்து இழுத்தபோது.. வெண் முத்துக்களாய்க் கொப்பளித்த பால்போல, ஒருகணம், அவள் மனசுள், நினைவுகள், தூரத்துக் காட்சியாகக் குபுகுபுவெனப் பெருகின.
புயலாய் வீசிய சிவப்பு பாஸ்போர்ட் பிரச்சினையில் மூட்டை கட்டிக்கொண்டு, தர்மார்டர் எடுத்து, குஞ்சுங்குழுவானுமாகக் கப்பலேறிய கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள, தன் அப்பனும் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, தர்மார்டருக்கு ஏற்பாடு செய்துவிட்டு, வாசலில் வந்து நின்று அதை சொன்னபோது, காச நோயோடு சுவரைப் பார்க்கப் படுத்துக்கிடந்த அம்மா.. ‘என்னால எங்கயும் வர முடியாது’ என்ற தீர்மானத்துடன், அவர் பக்கம் திரும்பிக் கூறியதைக் கேட்டு, நீண்ட நேரம் வாசல் பிராஞ்சாவில் ஒரு காலை மடக்கிப் போட்டு சுருட்டுப்புகை, நாசித் துவாரங்களில் கரகரக்க உட்கார்ந்திகருந்தது- பின் அதைப் பற்றி பேசுவதையே நிறுத்திக்கொண்ட விஷயமும் – அதே மூலையில் ஒரு நாள், கூரையைப் பார்க்க அம்மா கண்மூடிப் போயிருந்ததைப் பார்த்து, குத்துக்காலிட்ட கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அப்பன் சின்னப் பிள்ளையாக , அதிர்ந்து குலுங்கிய காட்சியும்…
“மரம் அறுத்து முடிந்து, வாளிக் கடைக்கு வந்தபோது, தனக்கு முன்பே சின்னப்பொண்ணும் சின்னவனும், சோத்துப்பானையைத் திறந்து, காட்டு இலையில் சோத்தைப் பங்கிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவள் படுத்துக்கிடந்த வேரில் உட்கார்ந்து… பானையைத் திறந்து சோற்றை அள்ளப்போனபோது – அவன், பால்கொட்டாயில், மேலே இருந்த தாங்கியில் பாலை ஊற்ற ஏணியில் ஏற, சரிந்து விழுந்து ஒரு காலை ஒடித்துக் கொண்டு இப்போது இழுத்து இழுத்து நடக்கும் பக்கத்து நெரை கிருஷ்ணன், மனசுள் ஓடினான்.
அவன், அன்று தயங்கிச் சொன்னது உள்ளே நிழலாக அசைந்தது – ‘உங்கிட்ட இத ரொம்ப நாளாச் சொல்லணும்னு ஆச. நீ இத தப்பா எடுத்துக்காம உண்டு இல்லன்னு சொன்னாப் போதும். என் நெலம ஒனக்கு நல்லாத் தெரியும். அவ ரெண்டு பிள்ளைங்கள கையில குடுத்துட்டு அக்கடான்னு போயிட்டா. என்னாலும் இந்தக் காலோட இந்த அறுநூறு மரத்த சீவறதே பெரிய பாடா இருக்கு. எல்லாரும் நெரய முடிச்சிப் பாலெடுக்கும்போதுகூட, எனக்கு நெர முடியறதுல்ல… வீட்டுல போயிப் புள்ளைங்களோட வேற ஓடியாட வேண்டி இருக்கு. ஒன் நெலமயும் இப்படி ஆயிடிச்சி… நீ விரும்பினா, ஒம் புள்ளங்களோட என்னோடயே வந்து இருக்கலாம்… எல்லாருக்குமே நல்லதா இருக்கும்…”
நிமிர்ந்து சின்னபொண்ணைப் பார்த்து, ஒரு காட்டு இலையையும் பறித்து வரச் சொல்லி, அதில் கொஞ்சம் சோற்றை அள்ளிவைத்து, மீதிச் சோற்றை, சாய்ப்பானையோடு அவனிடம் கொடுத்துவரச் சொன்னபோது – தன் அம்மாவின் இந்தப் புதுச் செய்கையைப் புரிந்துகொள்ள முடியாத கேள்விக் குறியுடன், பக்கத்து நெரைப் பக்கம் நகரந்த சின்னப்பொண்ணைத் தொடர்ந்த, அவள் பார்வையில், காலை இழுத்து இழுத்து, அடுத்த மரம் நோக்கிப் போகும் கிருஷ்ணன் தெரிந்தான்.
நேற்று இருட்டி, வாசலில் மண்ணெண்ணெய் விளக்கு வைத்து, தீட்டுக்கல்லைக் குவளைத் தண்ணீரில் நனைத்து, கத்திக்கு சுணையேற்றும்போது, ‘அவருக்கென்ன… குடி கேடி இல்லை. சூதாடி இல்லை… நாலுபேருக்கு நல்லதச் செய்யற மனசிருக்கு… நமக்கும் இந்த பயலுங்க மத்தியில் ஒரு ஆம்பளத் தொண தேவதான். நாளக்கி அண்ணங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு, சரின்னு சொல்லிட வேண்டியதுதான்’- என்பதாக அவள் போட்ட கோலம், சின்னப்பொண்ணுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
மண்ணுக்குள் போனவன், இவனைப் போல அல்ல. பகலெல்லாம், அடிக்கொருதரம் சீனன் கடைக்குள் போய், வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே வரும் போதெல்லாம், இரத்த பழமாக மேலும் சிவக்கும் கண்களுடன், உட்கார்ந்து போடும் சீட்டாட்டம், பெரும்பாலும் கொடுக்கும் தோல்வியில், இருட்டிப்போய் வீடு வந்து, உழைத்து களைத்து, பாயில் சுருண்டு கிடப்பவளை, வம்புக்கிழுத்து, எதன் மேலோ ஏற்பட்ட எரிச்சலையெல்லாம் அவள் மேல் தீர்த்துக்கொள்ள, இருளில் கலந்து தோட்டமெங்கும் எதிரொலிக்க அவளிட்ட ஓலங்கள்…
கொட்டாயில் பாலை ஊத்தி, வீடு போனபோது, மணி மூன்றாகியிருந்தது. பக்கத்துத் தோட்டத்திலிருக்கும் தன் அண்ணனைப் பார்க்கப் போனாள்.
செய்தியைக் கேட்டு அவன் குதித்தான். “என்ன சொல்ற நீ? தாலிய அறுத்துட்டு எப்படி இன்னொருத்தனோட போயி இருக்க முடியும்… சனங்க என்ன பேசுவாங்க…”
“யாரு என்ன பேறாங்கன்றதப் பத்தி எனக்குக் கவல இல்ல… எனக்கு ஒரு பாதுகாப்பு தேவ. இப்ப எனக்கு அதுதான் முக்கியம்,” என்று அவள் தீர்மானத்துடன் சொன்னதைக் கேட்டு, அவனும் மௌனமானான்.
மறுநாள், கிருஷ்ணன் சீக்கிரமே மரம் முடித்திருந்தான். சின்னப்பொண்ணு, அம்மா நெரையை முடித்துவிட்டு அவனுக்கு ஒத்தாசை பண்ண வந்திருந்தாள். இப்போதெல்லாம், அவள் சுமாராக மரமும் சீவினாள். லட்சுமி கூட வந்திருந்து, கொஞ்சம் சீவிவிட்டாள். அவளுடைய வாளிக்கடையிலேயே அவனும் அன்று உட்கார்ந்து, இலையில் சோறு வைத்துச் சாப்பிட்டான்.
விசயம் தெரிந்த தோட்டம், பரபரத்து நின்றது. கிருஷ்ணனுக்கு வீட்டைவிட்டு வெளிவருவதே சங்கடமாக இருந்தது. லட்சுமி மாத்திரம் அதை எல்லாம் சட்டை செய்யாதவளாய் நடமாடினாள்.
குச்சிகளில் நொடநொடப்புக் கேட்டு ‘அவர்’ என்று நிமிர்ந்தபோது, கிராணி ஐயா வந்துக்கொண்டிருந்தார்.
“என்ன லட்சுமி… ஓன் நெரயல வர வர பாலு கொறஞ்சிகிட்டே போவிதே .. மொதலாளிகூட ஒரு மாதிரியா சொல்றாரு… மரத்த ஏதும் வெட்டாமப் போட்டுடறியா?” என்று குனிந்து, வெட்டைப் பார்த்து, சோப்புக்குள் கையைவிட்டு இஞ்சு பட்டையை எடுத்து, வெட்டை அளந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.
“வேல பெர்மிட்கூட இந்த மாசத்தோட முடியராப்பல இருக்கே…”
“ஆமாங்க.. ஐயாதான் கொஞ்சம் தயவு பண்ணி ஒதவணும்…”
“அதுக்கென்ன லட்சுமி… ஒதவலாம்… நான் சொன்னா மொதளாளி ஒன்னும் சொல்லப் போறதில்ல… மொதலாளி சரினாருன்னா பெர்மிட்ல சாப்பு தொடர்ந்து குத்திக்கலாம்… இல்லன்னா கஷ்டந்தான்.. நீ கிருஷ்ணனோட சேர்ந்துக்கப்போறதா தோட்டத்தில பேசிக்கிறாங்களாமே… ஏதோ இரு… நம்மளயும் கவனிச்சுக்க…” என்று கண்களை நாலு பக்கமும் சுழலவிட்டுத் தொடர்ந்தார்…. “சாயங்காலம் சும்மாதான இருப்ப… அப்படியே பங்களா பக்கம் வந்துட்டு போயேன்…”
அவள் விதிர்விதிர்த்து… நின்றுபோனதைக் கண்டு கொள்ளாமலேயே, கிராணி அடுத்த நெரைக்குள் நுழைந்தபோது, வானம் இருண்டு வந்தது. “சீ..என்ன மனுஷங்க” என்று அவள் மனம் முணுமுணுத்தது.
வானத்தை அண்ணாந்து பார்த்து, வாளிக்கடை நோக்கிப் போய்க்கொண்டிருந்த கிருஷ்ணன், சின்னப்பொண்ணின் குரல் வர, பக்கத்து நெரைப் பக்கம் பார்த்தபோது – லட்சுமி, தன் பின்னால் கூப்பிட்டு வரும் தன் மக்களின் குரலுக்கு, பதில் கொடுக்காமல் கூடப் போவதைக் கண்டு –தான் குரல் கொடுக்கலாமா என்று நினைத்தபோது – லட்சுமி பின் திரும்பி, சின்னப்பொண்ணைக் கோபமாகத் திட்டுவது, அவள் குரல் தொனியில் அனுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. அவள் இப்படிக் கோபப்பட்டு அவன் பார்த்ததில்லை.
மத்தியானம் பிளாஞ்சாவுக்குத் தண்டல் விசில் ஊதியபோது, வழக்கமாக அந்த நேரத்தில் தூங்கி வழியும் தோட்டம் துளிர்விட்டது. ஐஸ்காரர் தன் வண்டியை ஆபிஸ் வாசலிலேயே நிறுத்திவைத்து, மணியடித்துக்கொண்டிருந்தார்.
பிளாஞ்சா வாங்கவந்த கிருஷ்ணன், அங்கே லட்சுமி இல்லாததைக் கண்டு, ஏமாற்றத்துடன், பின்னால் திரும்பி, வருகிறாளா என்று பார்த்தான். தீம்பாரில் சின்னப்பொண்ணின் மேல் அவள் அப்படி எரிந்து விழுந்தது, இப்போது நினைவு வந்தது. தீம்பாரிலேயே அப்போதே கேட்க கேட்க நினைத்திருந்தான். பொட்டென இறங்கிய பாலெல்லாம் தண்ணீரில் போக, காண்டாவாளியைத் தூக்கிக்கொண்டு, சொட்டச் சொட்ட நனைந்துகொண்டு வீடு ஓடிய அவசரத்தில், அதற்கெல்லாம் அவகாசம் இல்லாமல் போயிருந்தது.
மீண்டும் திரும்பி, பின் பார்த்தபோது, அவள் வந்துக்கொண்டிருந்தாள். நெருக்கத்தில் பார்க்க, அவன் ரொம்பவும் கலங்கி இருப்பது பளிச்செனத் தெரிந்தது. சுருங்கிப்போன முகத்தில் கண்கள் மருட்சியுடன் சுழன்றன. திடீரென அப்படி என்ன நடந்திருக்கக்கூடுமென அவனும், தனக்குப் பிடிபட்ட காரண காரியங்களை எல்லாம் கற்பித்து கடைசியில் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் திணறினான். இங்கே அதுபற்றி விசாரிப்பதும் அவனுக்கு உசிதமாகப்படவில்லை. நாளை வேலைக்காட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று, பிளாஞ்சாவை வாங்கிக்கொண்டு போகும்போது, அவளைப் பார்த்து ‘எங்க புள்ளைங்கள காணோம்’ என்பதாகக் கேட்டு வைத்துப் போனான்.
அவள் குனிந்து, கோட்டுப் பாலை இழுத்து, கத்தியை வெட்டுக்கொண்டுபோனபோது, அவன் காலை இழுத்து இழுத்து வந்துகொண்டிருந்தான். அவளை நெருங்கி, நேற்று நினைத்ததை யதார்த்தமாகக் கேட்டபோது, அவள் அப்படி உடைந்துபோவாள் என்று அவன் நினைக்கவில்லை. அவன் அப்படி கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவள் போல, அவள் பொட்டென உடைந்துபோனாள். கொஞ்சம் பொறுத்து, அவள் அதைச் சொன்னபோது, ஊனமான அந்தக் கால், திடீரென விழுந்த இந்தப் பளுவைத் தாங்க முடியாமல் தெறித்துவிடுவதுபோல், உணர்ந்தது. காய்ந்த கித்தா காயாக அவனுள் எல்லாம் வெடித்துச் சிதறின.
“சரி… லட்சுமி… நீ இத்தனை பிடிவாதமாக இருக்கிற அப்ப நான் என்ன செய்ய முடியும்… ஆனா, உம்மனசு இப்படித் திடீர்னு மாறனுதுக்கான காரணத்த நீ சொல்ல மறுக்கறதுதான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு…” என்று அவளின் பிடிவாதத்தைத் தளர்த்த முடியாத தோல்வியில், கலங்கி வரும் கண்களை மறைத்துக்கொள்ளத் திரும்பி, காலை இழுத்து இழுத்து அவன் போவது, அவளது கலங்கிய கண்களூடே மங்கலாகத் தெரிந்தபோது- மனசுள் கள்ளி முட்களாகக் கொதறிய அது, மீண்டும் ஒலித்தது.
“ என்ன லட்சுமி… அன்னிக்கி ரொம்ப வீறாப்பா இருந்துட்ட போல இருக்கு…. அந்த நொண்டு கிருஷ்ணனோட சேந்து இருக்கப்போற திமிர்தான? பெர்மிட்ல, என்னோட தயவுல வேல பாக்கற பயதான அவன்… இந்த மாசத்தோட அவன் வேலக்கிப் புள்ளி வெச்சிடறேன்.”
பொழுது போய் இருட்டி, வீடுகளில் விளக்கு வைத்தாகி இருந்தது.
லட்சுமி… பாயில் சுருண்டுகிடக்கும் குழந்தைகளைத் தீர்க்கமாகப் பார்த்து, அடங்காமல் வெட்டுக்கோட்டில் கொப்பளிக்கும் பாலாகக் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கும் எண்ணம்கூட இல்லாதவளாக, உட்கார்ந்திருந்தாள்.
எதிர்த்த லயத்து காஸ்லைட் விளக்குகளும் அணைந்த போது, லட்சுமி, பங்களாவை நினைத்துக்கொண்டு எழுந்துநின்றாள்.
மண்மனம் சொல்லும் கதை. அருமை
ரப்பர் காடுகளில் கசியும்
பால்வாசனையோடு
உழைப்பின் வியர்வைத்துளிகளும் மனதில் ஊடுறுவுகிறது
லட்சுமிகளின் நிலை இப்படித்தான் தொடர்கிறதா?.காலங்காலமாக.
மாற்றுத்திறனாளி கிருஷ்ணனும்
கணவனை இழந்த லட்சுமியும் சேர்ந்து…அவர்களின் குழந்தைகளும் சேர்ந்து
புதிய குடும்பமாக உருவாக முடியாத
சமூக அவலத்தோடுதான் இருக்கிறோம்.
ஆம்.
எல்லா தமிழ் தேசங்களிலும்.
மாறனும்.
மாற்றனும் .
அந்த மாலை நேர பங்களாக்கள் இருக்கும் வரை “இரைகளின் நெடிய வரலாறுகளும் தொடர்வது மனிதஅவலம்”.
அல்லிராஜ்