மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு, உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும் குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம் பலரும் அறிந்திருக்கலாம். பள்ளிக்குச் சென்று நான் சுயமாக வாசிக்கத் தொடங்கிய அனேகமான தினங்களில் ஈசாப் என் உடன் இருந்தார். அழகிய படங்களுடன் அவரது கதைகள் வீட்டில் இருக்கும். அவர் ஓர் அடிமை என்பதோ அவர் கதைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோ எனக்கு அப்போது தெரியாது. அவரது கதைகள் மூலம் அப்போதே விலங்குகளின் மேல் இயல்பாக ஓர் ஈடுபாடு வந்தது எனக்கு.
ஈசாப் கதைகளை வாசிக்கும் முன்பே என் பாலிய உலகை விரிவாக்கியவர் ஆத்தா. ஆத்தா நல்ல கதைச்சொல்லி. கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குரலை மாற்றி மிரட்டுவார். ஆத்தாவிடம் மூன்று நான்கு கதைகள் கைவசம் இருந்தன. அவற்றை அந்தக்காலத்துத் தோட்டத்துப் பெரிசுகளின் வாய்வழியாகவே சேமித்து வைத்திருந்தார்.
இந்த மூன்று நான்கு கதைகளே இரவுகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும் எனக்கும் அக்காவுக்கும் சோர்வளிப்பதில்லை. கதை கேட்காமல் நாங்கள் தூங்கிய இரவுகள் குறைவு. அப்படி நான் மறுபடியும் மறுபடியும் சொல்லச் சொல்லி கேட்டக்கதை ‘தோலிருக்க சொளா முழுங்கி.’
ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் விறகு வெட்டச் சென்றான். செல்லும்போது அம்மா ஒரு மண்பாண்டத்தில் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தனுப்பினார். விறகு வெட்ட அப்பா தேர்ந்தெடுத்த மரம் ஆற்றோரம் இருந்தது. ஆற்றைப் பார்த்த சிறுவன் தன் அப்பாவிடன் இந்த ஆறு எங்கே போகிறது என்றுக்கேட்க, அப்பாவும் வேலை கடுப்பில் “ம்… நம்ம நடுவீட்டுக்குப் போவுது” எனச்சொன்னார்.
சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம். அதுவரை வீட்டின் நடுவில் ஆறு ஓடுவதை அவன் கவனிக்கவில்லையே என வருந்தினான். துரிதமாக ஒரு முடிவெடுத்து அப்பா மரத்தின் மேலேறி வெட்டிப்போடும் விறகுகளை ஆற்றில் தூக்கிப் போட்டான். அப்படிச் செய்வதால் விறகுகள் தானாகவே வீட்டுக்கு அடித்துச் சென்றுவிடும் என நம்பினான். அப்பா கீழே வர தாமதமானது. தனக்குப் பசிப்பதாக அவன் கூற அப்பா மண்பானையில் இருக்கும் கஞ்சியை தனக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு குடிக்கச் சொன்னார்.
பானை சிறுவனுக்கு எட்டவில்லை. எனவே ஒரு கல்லை எடுத்து எறிந்து பானையில் துளையிட பானையிலிருந்து கஞ்சி ஊற்றத்தொடங்கியது. சிறுவனும் பானைக்கு நேராக வாய் வைத்து ‘எனக்குக்கொஞ்சம் எங்க அப்பாவுக்குக் கொஞ்சம்’ என மொத்தக் கஞ்சியையும் குடித்து முடித்தான். கடும் களைப்பில் கீழே இறங்கிவந்த அப்பா கஞ்சிப்பானைக் காலியாக இருந்ததைப் பார்த்துக் கடும் சினம் கொண்டார். சிறுவன்தானே என பொறுத்துக்கொண்டார். சற்று நேரம் பொறுத்து விறகுகளைத் தேடினார். விறகுகள் நடுவீட்டிற்குச் சென்றதாகச் சொன்ன மகனின் பதில் கோபத்தை மூட்டியது. “நீயும் நடுவீட்டுக்கே போ,” என அவனை அடித்து ஆற்றில் தூக்கிப்போட்டார்.
சிறுவன் ஆற்றில் ஒரு மரத்தைப் பிடித்து மிதந்து சென்றான். ஆற்றில் மிதந்து வரும் அவனை வாழைத்தோப்புக்குச் சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டார். அவனைப்பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தார். வாழைத்தோப்பிலிருந்து கொண்டுவந்த வாழைத்தாரை விற்பதற்கு அடுத்த ஊர் செல்ல அவர் படகுக்குக் காத்திருந்தார். அவனை ஓய்வு எடுக்க வைக்கும் முன் அவன் பெயரைக் கேட்டார். “தோலிருக்க சொளா முழுங்கி,” எனச்சொன்னான். அந்தப்பெயர் அவருக்குப் புதிதாக இருந்தது. வாழைத்தாரை பாதுகாக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றவர் ஒரு மணி நேரத்தில் உணவுண்டுவிட்டு அவனுக்கு உணவைப் பொட்டலம் கட்டிக்கொண்டு திரும்பி வந்தார். அப்போதுதான் வாழைப்பழத்தாரில் தோல் மட்டும் இருப்பதை கவனித்தார். “தோலிருக்க சொளா முழுங்கி,” என அவன் சொன்ன காரணம் புரிந்தது. வாழைப்பழங்களைத் திருடித்தின்ற அவனை அடித்து மீண்டும் ஆற்றிலேயே வீசினார்.
அவன் மீண்டும் ஆற்றில் மிதந்து சென்றான். ஆற்றின் ஓரம் ஒரு வண்ணானும் வண்ணத்தியும் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் காப்பாற்றினர். அவனை கரையோரம் ஓய்வெடுக்க வைத்தனர். வண்ணாத்தி அவன் பெயர் என்னவென்று கேட்டாள். “வந்தான்,” என்றான். வண்ணான் அவனிடம் பெயர் என்னவென்று கேட்கும்போது “போனான்” என்றான். அவர்கள் துவைத்து உலர்த்திக்கொண்டிருந்தது பெரும் செல்வந்தர்களின் ஆடைகளாக இருந்தன. சிறுவன் அந்த உடைகளின் ஆடம்பரத்தைப் பார்த்து மயங்கினான். அவர்கள் அசந்த நேரமாகப் பார்த்து துணிகளை எடுத்துக்கொண்டு ஓடினான்.
தூரத்தில் ஓடுவது அந்தச் சிறுவனைப் போல இருந்ததால் வண்ணான் “ஏய்! போனான் …போனான்,” என அவருக்குத் தெரிந்த அவனது பெயரைச் சொல்லிக்கொண்டு ஓடினார். அப்போது அவரது மனைவியின் குரல் கேட்டது. “ஏய்! வந்தான் … வந்தான்,”. இதைக்கேட்ட வண்ணான் விரட்டுவதை நிறுத்திவிட்டு “எங்க வந்தான்… எங்க வந்தான்….” என மனைவியை நோக்கி ஓடினார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்வதற்குள் அவன் ஊரை விட்டே ஓடி இருந்தான்.
இக்கதையைக் கேட்ட வயதில் நான் ஆற்றைப் பார்த்ததுகூட இல்லை. ஆனால் என்னால் ஓர் ஆற்றை கற்பனை செய்ய முடிந்தது. ஆற்றில் மரம் மிதக்கும் என அறிய முடிந்தது. துணி துவைப்பதற்கென்றே ஒரு சமூகம் இருந்ததை அறிய முடிந்தது. அந்தச் சின்னஞ்சிறிய அறைக்குள் புதிய வாழ்வையே வாழ்ந்து பார்க்க முடிந்தது. ஆத்தா அந்த வாழ்வனுபவத்தை உருவாக்கிக் கொடுக்கும் தேவதையாக இருந்தார்.
ஆத்தா சொன்ன கதைகளில் பெரும்பாலும் நீதி இருக்காது. அதில் வரும் சிறுவர்கள் குறும்புப்பிடித்தவர்களாக இருப்பார்கள். வீட்டுக்கு அடங்காமல் வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆத்தாவால் நன்றாக நடிக்க முடியும். அவர் சொல்லும் ஒரு கதையில் இரு சிறுவர்கள் நாவல் பழம் பறிக்கச் செல்வார்கள். அப்போது ஓர் ஓநாய் அவர்கள் அருகில் வரும். “ஏய் தம்பி… உன் கையால ஒரு பழம் பறிச்சிப்போடு,” எனக் கேட்கும். பறித்துப்போடுவான் ஒரு சிறுவன். மீண்டும் “ஏய் தம்பி உன் காலால ஒரு பழம் பறிச்சிப்போடு,” எனக்கேட்கும். சிறுவன் பறித்துப்போடும்போது காலை பிடித்து இழுத்துவிடும் ஓநாய். இந்தக் கதையில் ஆத்தா ஓநாயாக இருப்பார். நானும் அக்காவும் நாவல் பழம் பறித்துப்போடுவதாகப் பாவனை செய்யும்போது உண்மையில் காலை பிடித்துக்கொள்வார். நரியைப் போல உறுமுவார்; ஊளையிடுவார். எவ்வளவு கெஞ்சினாலும் விடமாட்டார். சில சமயம் நானும் அக்காவும் அழுவோம். ஆனால் ஆத்தா முழுமையாக ஓநாயாக மாறியிருப்பார். உறுமல் சத்தம் உக்கிரமாக இருக்கும். பின்னாட்களில் அசோகமித்திரனின் பிரயாணம் சிறுகதை வாசித்தபோதெல்லாம் எனக்கு ஆத்தாவின் நினைவே வந்தது.
எனது பாலிய பருவமும் ஆத்தா கதைச்சொல்லியாக இருந்த காலமும் ஒருசேர கம்பத்திலேயே தொடங்கி முடிந்தது. வீட்டைச் சுற்றி வளர்ந்த கோழி, ஆங்சா, வான்கோழி, ஆடுகளுக்கு மத்தியில் அவர் ஒரு மகாராணியாகவே உலாவந்தார். அவர் சொன்னால்தான் அவை கேட்கும். கம்பம் அழிக்கப்பட்டபோது அவை கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்பட்டன. ஆத்தா தன் ராணி பட்டத்தை இழந்தபோது கதைச் சொல்வதும் குறைந்து போனது. வீட்டுக்கு வெளியே அவருக்கான உலகம் இல்லாத குடியிருப்புக்கு வந்தபோது அனேகமாக அவர் கதைச்சொல்வதை நிறுத்தியிருந்தார். அவருக்கு நவீன குடியிருப்புப் பகுதி என்னவாக இருந்தது என அனுமானிக்க முடியவில்லை.
ஈசாப் தனது கடைசி காலங்களில் சிறையில் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. கிரேக்க அரசுக்கு எதிர்ப்பாகக் கருத்துச்சொன்னார் என்பதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. வரலாற்றில் அவர் குறித்த தெளிவான சித்திரங்கள் இல்லை. ஒருவேளை ஆத்தா தன் வரலாற்றை எழுதியிருந்தாலும் திறந்த வெளியில்லாத நவீன குடியிருப்பைச் சிறை என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
Mikavum nanru!
ஆத்தா யாரு.? பாட்டியா.!