ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்


26.5.2017 – வெள்ளி

10முதலில்  நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று.  நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில் ‘வைட் காப்பி’ உணவகங்களில் கிடைக்கிறது. நாஞ்சில் நாடன் சுவைத்துச் சாப்பிட்டார். இதற்கு முன் அ.மார்க்ஸை அவ்வுணவு கவர்ந்திருந்தது.

ஜெயமோகன் வந்து சேர மாலை நான்கானது. அதற்கு மேல் காத்திருக்க முடியாது. சாலை நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரும் என அவரைப் பட்டினிப்போட்டே கோலாலம்பூரை நோக்கி விரைவதென நானும் தயாஜியும் முடிவெடுத்தோம். பள்ளி விடுமுறை அன்றுதான் தொடங்குவதால் கடுமையான வாகன நெரிசல். நெடுநாளாகியிருந்தது அப்படியொரு நெரிசலில் மாட்டி.

ஜெயமோகன் வழக்கம் போல உற்சாகமாகவே இருந்தார். அவர் புதிதாக வளர்த்திருந்த மீசை அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. கூறினேன். ‘அப்படியா!’ என தடவிப்பார்த்துக்கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர்தான் ஜெயமோகன் வல்லினம் ஏற்பாட்டில் சிறுகதை பட்டறை நடத்தியிருந்தார். தோற்றத்தில் பெரிய வித்தியாசம் தெரிந்தது.

மனதளவில் பெரும் குழப்பத்தில் இருந்தேன். மறுநாளைய பட்டறை குறித்த குழப்பங்கள் அவை. பட்டறையில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்ற ஊகங்களும் வரலாற்றில் அப்படி நடந்ததற்கான தடயங்களும் அலைக்கழிப்பை ஏற்படுத்தியிருந்தன. ஜெயமோகனிடம் கூறினேன். 80களில் சுந்தர ராமசாமி மலேசியா வந்தபோது அவருக்கு ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்துக்கூறினார். அது இன்னும் குழப்பத்தைக் கூட்டியது. பெரும்பாலும் உறக்கம் இல்லாமல் இருந்தேன். கண் மூடினாலும் மூளை விழித்திருந்தது.   அன்று இரவு ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் ‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியம் நடத்தும் உணவகத்திற்கு (De’Divine Cafe) அழைத்துச்செல்லும்  திட்டம். அனைத்து முன் திட்டங்களையும் நிறுத்திவிட்டு எட்டு மணிக்கெல்லாம்  தங்கும் விடுதியில் இறக்கிவிட்டு கொஞ்ச நேரம் அறையில் பேசிக்கொண்டிருந்தோம்.

பேச்சு சங்க இலக்கியம் பற்றி போனது. நாஞ்சில் நாடனும் ஜெயமோகனும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி அதன் நுட்பங்களைப் பேச ஆரம்பித்துவிட்டனர். திடீரென பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சென்று இரு புலவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் ஒரு பாமரனின் மனநிலையில் இருந்தேன்.

27.5.2017 – சனி

18740549_1567629956583410_6853650080967052125_nநிகழ்ச்சியில் மைக் கோளாறு ஏற்பட்ட கடுப்பின் உச்சத்தில் இருப்பதாய் கனவு கண்டு விழித்தபோது மணி காலை 6 இருக்கலாம். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. எம்.கே.குமாரும் விஜிப்ரியாவும் சிங்கையில் இருந்து வந்து சேர ஏழு ஆகலாம் எனக்கணித்திருந்தேன். எனவே சாவகாசமாக அழைத்தேன். பேருந்து சீக்கிரமே வந்துவிட்டது என்றும் முகவரி கொடுத்தால் டாக்சி பிடித்து வந்துவிடுவோம் என்றனர். அது சரியல்ல. அதிகாலை டாக்சி ஓட்டிகளுக்கு ஆங்கிலத்தின் விலை பேசும் வாடிக்கையாளர்கள் அல்வா போல. திட்டமிட்டபடி நானே வந்து ஏற்றிக்கொள்வதென புறப்பட்டேன். பகல் வேளைகளில் அத்தனை உக்கிரமாக இருக்கும் ‘இம்பி சாலை’ அப்போதுதான் நெளிந்து எழத்தொடங்கியது. இருவரையுமே வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

எம்.கே.குமாரை இலக்கிய உலகம் நன்கு அறியும். நான் அவரது நல்லிணக்கம் சிறுகதையை வல்லினத்தில் மீள் பிரசுரம் செய்துள்ளேன். விஜிப்ரியாவை சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டு நிகழ்ச்சியில் பார்த்தது. ஜெயமோகனின் வாசகி எனலாம். உண்மையில் அப்படி ஒரு வாசகர் பரப்பு தமிழ்ச்சூழலில் உருவாகியே உள்ளது. ஜெயமோகனின் இணையத்தளம் வழி நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தவர்களில் நான் பார்த்த ஒரு சாட்சியம் விஜிப்ரியா. ஜெயமோகனுக்கு மீசை வைத்தப்பின்புதான் அழகாக இருக்கிறார் என்றார். பெண்கள் பார்வையில் ஆண்கள் வேறாகவே இருக்கிறார்கள். அம்மா கலக்கிய டீயைச் சுவைத்தபடி விடிவதற்காகக் காத்திருந்தோம். கிளம்பி பட்டறை நடக்கும் கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதிக்குச் சென்றபோது அழகு நிலாவும் ராம் சந்தரும் விமான நிலையத்தில் இருந்து கெ.எல் சென்டருக்கு வந்திருந்தனர். அங்கு அந்நேரம் செல்வது ஆபத்து எனத்தோன்றியது. நெரிசல் மிக்க இடம். நேற்று ஹாட்டலில் இருந்து வீடு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் நெரிசலில் மாட்டியது நினைவுக்கு வரவே அவர்களே டாக்சி பிடித்து வரவேண்டியதாகப் போனது.

அழகு நிலாவும் ராம் சந்தரும் தொடர்ந்து வல்லினத்தில் எழுதி வருபவர்கள். உண்மையில் சிங்கையில் இவர்கள் நால்வரும் கலந்துகொண்டது அவ்வளவு உற்சாகமாக இருந்தது. நால்வரையும் ஜெயமோகன் அறைக்கு அனுப்பிவிட்டு பட்டறைக்கான வேலைகளைத் தொடங்கினோம். பாண்டியன், தயாஜி, ஶ்ரீதர், விஜயலட்சுமி,  சரவணதீர்த்தா, கங்காதுரை என ஒவ்வொரு முகமாகத் தோன்றத்தோன்ற நிதானமானேன். நண்பர்கள் இருக்க பயமேன்.

பட்டறை

பட்டறை திட்டமிட்டபடி சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கியது. அ.பாண்டியன் 18699871_1567629689916770_7273487555918747846_nபட்டறையின் நோக்கத்தை விளக்கியதோடு எழுத்தாளர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்து வரவேற்புரையாற்றினார்.

சிறுகதை – குறுநாவல் – நாவல் ஆகியவற்றின் வித்தியாசம் குறித்து ஜெயமோகன் விளக்கினார். பல தரப்பட்ட வாசகப் பின்புலத்தைக் கொண்டவர்களை சினிமா கதைகளின் உதாரணங்கள் மூலம் சட்டென ஒன்றிணைக்க அவரால் முடிந்தது.  நாஞ்சில் நாடன் ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய மொழி ஆளுமை குறித்து பேசினார்.

பட்டறை 50 பேருக்கு மட்டுமே எனத் திட்டமிட்டிருந்தோம். இதற்கு முன் வல்லினம் நடத்தியப் பட்டறைகளின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள், அவதூறு செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் கலந்துகொள்ள அனுமதி கேட்டும் மறுத்துவிட்டோம். ஆயினும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 55 – ஐ தாண்டியது.

முதல் நாள் மூன்று அமர்வுகள். ஒவ்வொரு அமர்வும் ஒன்றரை மணி நேரம் எனத் திட்டமிடப்பட்டது. பெரும்பாலும் அனைவருமே சரியான நேரத்தைக் கடைப்பிடித்தனர். கேள்விகள் விவாதங்கள் என பட்டறை நகர்ந்தது. உண்மையில் நான் சந்தித்த பல மலேசிய எழுத்தாளர்களுக்கு விரிவான வாழ்க்கை அனுபவமுண்டு. நுட்பமான அனுபவங்களை நேரடி பேச்சின்போது வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் சிறுகதை வடிவம் கைக்கூடாத அவர்களுக்கு நாவல் எனும் மிக நீண்ட வடிவம் அச்சமூட்டக்கூடியதாகவே இருந்துள்ளது. மலேசியப்படைப்புகள் உலக அளவில் கவனிக்கப்பட அதிகமும் எழுதப்பட்டுவிட்ட தோட்ட வாழ்வை துண்டித்து வர வேண்டியுள்ளது. இந்நிலத்துக்கான சொல்லப்படாத புதிய அனுபவங்கள் எழுத்தாக்கும்போது அது கவனிக்கப்படும். எனவே குறுநாவல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தோம். அளவில் அது அச்சம் கொள்ளச் செய்யாதது. ஓர் அம்பு புறப்பட்டுச் சென்று இலக்கைத் தாக்கும் சிறுகதை வேகமும் அதற்கு வேண்டாம். ஒருவேளை திட்டமிட்டபடி நல்ல குறுநாவல்கள் வந்தால் மலேசிய இலக்கியத்தில் அது ஒரு பாய்ச்சலாக இருக்கும். அதைக்கூட எழுத முடியவில்லை என சோம்பேறியாக உதட்டைப் பிதுக்குபவர்களால் மலேசிய இலக்கியத்திற்கு எந்த நட்டமும் இல்லை என நினைத்துக்கொண்டேன்.

குறுநாவலுக்கான வடிவம், ஒரு கருவை குறுநாவலாக்கும் முறை எனத்தொடர்ந்து பங்கேற்பாளர்கள் எழுதிவந்த கதைச் சுருக்கத்தை எவ்வாறு குறுநாவலாக்கலாம் என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னேற்பாட்டிற்காக ஜெயமோகனிடம் தொலைப்பேசியில் பேசும்போது ஐந்து ஆறு பேர் சுருக்கம் எழுதி வருவார்கள் அதை விவாதிக்கலாம் என்றார். இருபது பேருக்கு மேல் சுருக்கம் எழுதி வரவே கொஞ்சம் வியந்துதான் போயிருப்பார். (யாருக்கிட்ட!) ஒவ்வொரு கருவும் குறுநாவலாக மாற்றப்பட வேண்டிய சூத்திரங்கள் போதிக்கப்பட்டன. சில கருக்கள் ஏன் கலை வடிவம் எடுக்காது எனவும் விவாதிக்கப்பட்டன.

இதுபோன்ற பட்டறைகளில் உற்சாகமே நண்பர்களுடன் உரையாடுவதுதான். இரவில் கொஞ்ச நேரம் உரையாடல் போனது. உறக்கம் தன் கோரப்பிடிகளை நெருக்கும் வரை அது தொடர்ந்தது.

28.5.2017 – ஞாயிறு

18700137_10213694573388130_5821501574472055098_nமறுநாள் இரண்டு அமர்வுகள். மேலும் சில கதை கரு விவாதமும் கலந்துரையாடலும் நடைப்பெற்றது. ஜெயமோகன் இருநாள் பட்டறையில் கூறியவைகளை மீண்டும் தொகுத்துக்கூறினார். சரியாக 12.30க்குப் பட்டறை நிறைவடைந்தது. (பட்டறை குறித்து கி. உதயகுமாரி எழுதியுள்ள பதிவு)

அறை சாவிகளுக்கான பொறுப்பை அ.பாண்டியனும் கங்காதுரையும் ஏற்றுக்கொண்டனர். அடுத்து 2 மணிக்கு ஆவணப்பட வெளியீடு. இருக்கின்ற நேரத்தில் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும். அவ்வாறான நேரங்களில்தான் ஏதாவது கோளாறு ஏற்படும். அன்றும் ஏற்பட்டது.

ஆவணப்பட முன்னோட்டத்துக்காகச் செய்யப்பட்ட காட்சித்துணுக்கின் ஒலி அரங்கின் ஒலிப்பெருக்கியோடு பொறுந்தாமல் தகராறு செய்தது. கொஞ்சம் பதற்றமாகிவிட்டேன். பாண்டியன் வந்து ஏதோ  நோண்டினார். வேலை செய்தது. என்ன வித்தை கற்றிருக்கிறார் எனத் தெரியவில்லை.

ஆவணப்பட வெளியீடு

18765736_10213694571948094_6120603309483898867_n18740260_10213694572308103_7672512246645740700_n

சிறப்பு நிகழ்ச்சிக்காக சிங்கையில் இருந்து நண்பர் ஷாநவாஸ் வந்திருந்தார். அரங்கில் 120 நாற்காலிகள் போடச்சொல்லியிருந்தேன். பெரும்பாலும் நிறைந்திருந்தது. அது நீண்டப் பள்ளி விடுமுறையின் தொடக்க தினங்கள். பொதுவாக இவ்வாறான நாள்களில் நிகழ்ச்சி எதுவும் வைக்க மாட்டார்கள். பலரும் வெளியூர் பயணங்களில் இnaveen 01ருப்பர். அத்தனையையும் மீறி 100 வாசகர்களுக்கு மேல் வந்திருந்தது ஆச்சரியம்தான். இம்முறை ஆவணப்படம் வல்லினம் மற்றும் சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் கூட்டு முயற்சியில் ஏற்பாடாகியிருந்தது. பி.கிருஷ்ணன், மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான் ஆகியோரது ஆவணப்படங்களை நண்பர் ஷாநவாஸ் உதவியுடன் செய்து முடித்திருந்தேன். முதல் நாளிலிருந்து நிகழ்ச்சி என்பதால் கழுத்தெல்லாம் இறுக்கமாகி இருந்தது. கொஞ்சம் நிதானம் இல்லாமல் இருந்தேன். விளைவாக நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றும்போது வாசகர் வட்டம் குறித்து ஒருவார்த்தையும் பேசவில்லை. பொதுவாக ஆவணப்படத்தின் தேவை குறித்தும் அதன் தொடர்ச்சியாக வல்லினம் முன்னெடுத்திருக்கும் ஒன்றிரண்டு திட்டங்கள் குறித்தும் பேசினேன்.(முழு உரையைக் காண)

shanavasஇருக்கையில் அமர்ந்தபோதுதான் பெரும் பிழை செய்துவிட்டதை உணர்ந்தேன். வாசகர்  வட்டம் குறித்தும் இம்முயற்சிக்கு அவர்கள் பங்களிப்பு, ஷாநவாஸின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச வைத்திருந்த குறிப்புகள் எதுவும் பரபரப்பான சூழலில் மூளைக்குச் சென்று சேரவில்லை. ஷாநவாஸிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்.

தொடர்ந்து ஷாநவாஸ் பேசினார். சுருக்கமாகவும் தெளிவாகவும் அவர் உரை அமைந்தது.(முழு உரையைக் காண)

ஆவணப்பட தொகுப்புக்காட்சி ஒலிச்சிக்கல் இல்லாமnaveen 02ல் ஒளிபரப்பானது. தொடர்ந்து எழுத்தாளர் மா.சண்முகசிவா ஆவணப்படங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.(முழு உரையைக் காண) நாஞ்சில் நாடன் மரபிலக்கியம் குறித்தும் (முழு உரையைக் காண) ஜெயமோகன் நவீன இலக்கியம் குறித்தும் உரையாற்றினர்.(முழு உரையைக் காண) ஐந்து மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் உணவகத்திற்குப் புறப்பட்டோம்.

IMG-20170528-WA0006சண்முகசிவா அங்குச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சிங்கை நண்பர்கள் புறப்பட்டிருந்தனர். விஜிப்ரியாவுக்கு இரவில் பேருந்து. அவரையும் உடன் அழைத்துக்கொண்டோம். ஜெயமோகன் மகாபாரதத்தின் வரலாற்று பின்புலத்தை விளக்கிக்கொண்டிருந்தார். நாஞ்சில் நாடன் மை ஸ்கில்ஸ் மாணவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின்தான் சோர்வு கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. பின் மண்டை மேலும் அதிகமாக இழுத்தது. உறங்க வேண்டுமென பொருள். விஜிப்ரியா சொந்தமாகவே டாக்சி பிடித்து சென்று விடுவதாகக் கூறியதால் விரைவாகவே அனைவரிடமும் விடைப்பெற்றேன்.

29.5.2017 – திங்கள்

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் பலமுறை மலேசியா வந்திருந்தாலும் நான் வீட்டிற்கு18698253_10213694581148324_344051375126717287_n அழைத்துச் செல்வது அதுவே முதன் முறை. சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் அம்மா தேறியிருந்தார். ஜெயமோகன் நினைவில் வைத்து ஏன் சிரமம் கொடுக்கிறேன் எனக்கேட்டார். அறைக்குள் எப்போது நுழைந்தாலும் மடிக்கணினியில் வெண்முரசுவை டைப் செய்துக்கொண்டிருந்தார். இடது கண்ணின் ஓரம் அவருக்குச் சிவந்திருந்தது. ஏன் எனக்கேட்டேன். மருத்துவரைப் பார்க்கச் செல்லலாம் என்றேன். நாஞ்சில் நாடன், “நீர் வடிகிறதா? கண்ணில் துருத்தல் இருக்கா?” என இரு கேள்விகள் கேட்டார். ஜெயமோகன் இல்லை என்றார். “அப்படியானால் சிக்கல் இல்லை. ஆபத்தான அறிகுறி இல்லை” என்றார். அந்தச் சின்ன அறையில் நோயாளியும் மருத்துவரும் எழுத்தாளர்களாகவே இருக்க சுமூகமாகத் தீர்வு கிடைத்தது.

IMG-20170531-WA0018கொஞ்ச நேரத்தில் எப்படியோ யானை குறித்த பேச்சு வந்தது. ஜெயமோகனின் பேச்சு பலரையும் கவரக்காரணம் அவரது உடல் பாவனை என்றே நினைக்கிறேன். மனிதர்கள்போல் மட்டுமல்ல விலங்குகளின் பாவனையையும் அவரால் செய்ய முடியும். யானைகள் ருசித்து உண்ணும் குணம் உள்ளவை என தனது சின்ன வயது நினைவைச் சொல்ல ஆரம்பித்தார். தொட்டாச்சிணுங்கியில் உள்ள சின்னஞ்சிறிய பூக்களை தனது தும்பிக்கையால் சேகரித்து அதனை மட்டும் யானை எப்படி மென்று தின்னும் எனக்கூறும் போது கண் முன் ஒரு யானையை வரவைத்தார். நான் ‘ஹோய்டி டோய்டி’ என்ற ரஷ்ய அறிவியல் புனைகதை குறித்து பகிர்ந்துகொண்டேன். யானைக்கு மனித மூளையைச் செலுத்தியப்பின் ஏற்படும் விபரீதங்கள் குறித்து அந்த நாவல் சுவாரசியமாக விரிவாகிச்செல்லும்.. சுவாரசியமாகப் பேசிக்கொண்டே வீட்டுக்குச் சென்றபோது ‘பப்பி’ ஆச்சரியமாக எங்களை வாஞ்சையுடன் பார்த்தது.

‘பப்பி’யைக் கண்டு அவ்வளவு எளிதில் யாரும் நுழைவதில்லை. பெயரில்தான் பப்பியே தவிர நன்கு வளர்ந்த நாய். ஜெயமோகன் காரை விட்டு இறங்கியவுடன் நேராகச் சென்று அதன் தலையை தடவத் தொடங்கினார். அதுவும் சாவகாசமாக அவ்வன்பை ஏற்றுக்கொண்டது. பின்னர் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தது. எஜமான பக்தி வந்திருக்க வேண்டும். கொஞ்சம் உறுமி ஜெயமோகன் அதன் மீது கரங்களை வைப்பதைத் தடுத்தது. மீண்டும் கொஞ்சம் ஒப்புக்கொடுத்தது. நாய்களுக்கு மோப்பச்சக்தி அதிகம். ஜெயமோகன் வளர்க்கும் டோராவின் மணம் அதற்கு வீசியிருக்கலாம். நம்ம ஆளுதான் என நினைத்து வாலை ஆட்டியிருக்கலாம்.

நாஞ்சில் நாடன் அம்மாவின் சமையலை நன்கு சுவைத்துச்18838878_1568826333130439_7550616681642489857_n சாப்பிட்டார். விருந்து வைப்பவர்களுக்கு நாஞ்சில் நாடன் போன்றவர்களால் நிறைவடைகின்றனர். அவர் தட்டில் சோற்றை எடுக்கும்போது தட்டில் விரல்களை நன்கு அழுத்துகிறார். விரல்கள் கண்ணாடி தொட்டியில் பாசியைத்திண்ணும் மீன்கள் உதடுகள் போல நுனிமட்டும் விரிந்து தட்டை அழுத்த முத்தமிடுகின்றன. நாஞ்சில் நாடனின் சிறுகதைகளில் உணவு குறித்து அவர் பேசும் இடங்கள் தோறும் பசி தொற்றிக்கொள்ளும். ஜெயமோகனைப் பார்த்தேன். வெறும் சோற்றை மென்றுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.  அவரது விரல்கள் பெரும்பாலும் சோற்றை மேலேயே பொறுக்குகின.  ஜெயமோகன் எதைச் செய்தாலும் அவர் மனதில் வெண்முரசு ஓடிக்கொண்டே இருப்பது தெரிந்தது. ‘எனக்குள் ஒருவன்’ சித்தார்த் போல அவர் அதற்குள்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். அவ்வப்போது நிஜ வாழ்க்கையில் வந்து ஹாய் சொல்லிவிட்டு மீண்டும் வெண்முரசில் வாழத்தொடங்கினார். உணவு முடிந்ததும் வீட்டிலேயே அமர்ந்து வெண்முரசு எழுதத்தொடங்கினார். அதற்கேற்ற தனித்த அறையை ஏற்பாடு செய்துக்கொடுத்தேன். அது விருந்தினர் வந்தால் தங்கும் அறை.

IMG-20170531-WA0044நான்கு மணிக்கு கோலாசிலாங்கூர் புறப்பட்டோம். எனக்குப் பிடித்த இடம். அங்கு இருக்கும் குரங்குகள் நட்பானவை. இயல்பாக மனிதனின் தோள்களில் ஏறி அமர்ந்து கொள்ளும். முன்பு ஒரு சமயம் அங்கே இரவைக் கழித்ததுண்டு. களங்கரை விளக்கத்தில் உள்ள ஒளி சுழன்று அவ்விடத்தைப் புதுமையாகக் காட்டும். எங்களுடன் தயாஜி மற்றும் ஶ்ரீதர் வந்திருந்தனர். குரங்குகளுக்கு உணவு கொடுத்தனர். ஜெயமோகன் அதன் கரங்களைப் பற்றி மனிதக்கரம் போல உள்ளது என்றார். அத்தனைப் பிடிவாதமாக அவர் தோளில் ஏறி அமரும் குரங்கின் அன்பை தடுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டார். நாஞ்சில் நாடன் பேரக்குழந்தைகளை விளையாட விட்டு ரசிக்கும் தாத்தாவைப் போல மொத்த விளையாட்டில் பங்குபெறுவது போலதொரு பாவனையில் தள்ளியே நின்றார். சப்பானிய காலத்தில் கழுத்தை வெட்ட பயன்படுத்தப்பட்டதாக முன்பிருந்தே கூறப்பட்ட கல்  ஒன்று அங்கு பிரபலம். ஜெயமோகன் அது பெருங்கற்கால நடுகல் அல்லது அறைக்கல்லின் கூரை என்றார். உலகமெங்கும் இத்தகைய சிறுகுன்றுகளில் அவை இருக்கும் இடங்கள் என்றார் . கொஞ்ச நேரம் அப்படியே பேச்சு போனது. அங்கிருந்து ஆற்றோரம் இருக்கும் சீன உணவகம் சென்றோம்.

கோலாசிலாங்கூரில் நீர்வாழ் உணவு பிரபலம். புதிய மீன்கள் உண்ணக்கிடைக்கும். சாப்பிட்டுIMG-20170531-WA0014 அலையாத்தி காடுகளுக்கு அருகில் மின்மினிப்பூச்சிகளை இயந்திரப்படகில் பார்க்கச் சென்றோம். 2000 ஆம் ஆண்டில் நான் அதனைப் பார்க்க சென்றிருக்கிறேன். அப்போது உடன் கவிஞர் பா.அ.சிவம் இருந்தார். இலக்கியம் குறித்த வற்றாத கற்பனைகளோடு ஆற்றில் மிதந்தோம். அவன் ஞாபகம் அப்போது வந்தது. மின்மினிப்பூச்சிகள் இப்போது கணிசமாகக் குறைந்திருந்தன. தேய்பிறையில் பார்த்தால் அதிகம் இருக்கும் எனக்கேள்விப்பட்டதுண்டு.

நாஞ்சில் நாடன் பெரும்பாலும் தனது பேரக்குழந்தைகளின் நினைவில் இருந்தார். பேரக்குழந்தைகளுக்குச் சில பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கினார். ஜெயமோகனின் கண்கள் இப்போது நன்கு சிவந்துவிட்டிருந்தன. “அருண்மொழியிடமிருந்து தொற்றியிருக்கக் கூடும் நாங்கள் மணமொத்த தம்பதிகள் அல்லவா?” என்றுக்கூறி சிரித்தார். அவரால் வேடிக்கைகளில்தான் அத்தனையையும் முடிக்க முடிந்தது.

30.5.2017 – செவ்வாய்

காலையில் கேமரன் மலை புறப்படுவதென திட்டம். டத்தோ சரவணன் நாஞ்சில் நாடனைச் சந்திக்க விரும்பவே காலை உணவுக்காக மெட்ராஸ் கேப்பேயில் சந்தித்தோம். அவர் நாஞ்சில் நாடனின் சில கட்டுரைகளை வாசித்திருந்தார். மலேசியத் தமிழர் நிலை குறித்த பேச்சு அவரது இலக்கிய ஆர்வம் என பேச்சு நகர்ந்தது. பத்து மணி அளவில் இரண்டு கார்களில் 9 பேர் கேமரன் மலை நோக்கி பயணமானோம்.  மற்றுமொரு காரை நண்பர் ராவணன் ஓட்டினார். அவரும் ஜெயமோகன் வாசகர்தான். புகைப்பட நிபுணராகவும் யோகா பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

முந்தைய இரவில் பதிவேற்றம் கண்ட ஜெயமோகனின் ‘வெற்றி‘ சிறுகதை வாசித்திருந்தேன். ரங்கப்பர் எனும் கதாபாத்திரம் தனது தோல்வியைப் பொய்களால் எப்படி வெற்றியாக மாற்ற முனைகிறது என்றும் அவர் தனக்குள் அடையும் தோல்வி மற்றவர்களுக்கு வெற்றியாக இருப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். வெற்றி, தோல்வி என்பது உண்மையில் என்ன என்ற கேள்வியை முன்வைத்து உரையாடல் அமைந்தது. மேலோட்டமாக வாசித்து இக்கதையைக் கடுமையாக விமர்சிக்க இடம் உண்டு என்றேன். ஆனால் கதை தொடக்கத்திலேயே எஸ்.ஆர்.நமச்சிவாயத்தின் பொருளாதார நிலையை அறிந்து கொண்டவரால் சிறுகதையின் முடிவை எப்படியும் ஊகிக்க முடியும். ஆனால் அந்த ஊகத்துக்கும் சிறுகதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என உணர்ந்தால் மட்டுமே சிறுகதையின் அடுத்தப்பரிணாமத்தைப் பார்க்க முடியும். அதில் ரங்கப்பர் குறித்த விரிவான சித்திரமே கதைக்குள் நுழையும் வாசல்.

செல்லும் வழியில் ஓர் அருவியின் அருகில் இறங்கினோம். கால்களை நனைத்தோம். சாரல்naveen 03 குளிர்ந்தது. கேமரனில் ‘தானா ராத்தா’வை அடைந்தபோது கலை சேகர் காத்திருந்தார். கலை சேகர் மிக அண்மையில் இலக்கியம் மூலம் அறிமுகமாகி அணுக்கமாக இருப்பவர். கேள்விகளற்று வாசகராக இருப்பவருடனான உறவு பெரும்பாலும் நீடிப்பதில்லை. அல்லது அது அவ்வளவு சுவாரசியமற்றது. கலைசேகருக்கு அனைத்தையும் ஒட்டிய ஒரு விமர்சனப்பார்வை உண்டு. அங்கத உணர்வுண்டு.

IMG-20170604-WA0009நாங்கள் தங்கிய விடுதியின் அந்த சிறப்பறை பெரும்பாலும் யாருக்கும் வாடகைக்குத் தரப்படுவதில்லை என்றார். கடைசியாக ஐ.லியோனி வந்தபோது தங்கியதாம். விசாலமான அறை. கலைசேகரின் முயற்சியால் எங்களுக்கு அவ்வறை வழங்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று கவனித்துக்கொண்டார். பத்தாவது மாடியில் இருந்த அந்த அறைக்குள்ளேயே மேலே மேலே என இன்னும் இரு மாடிகள் இருந்தன. ஓர் இரவுக்கு ஆயிரம் ரிங்கிட்டு மேல் வாடகை. கலை சேகர் பரபரப்பான நபர்தான். எப்படியோ நேரம் ஒதுக்கி எங்களுடன் இரவு வரை இருந்தார். சில தோட்டங்களைப் பார்த்தோம். மழை பிடித்துக்கொண்டபோது ஐஸ் கிரிம் சாப்பிட்டோம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஜெயமோகன் வெண்முரசு எழுத வேண்டும் என்றார். மற்றவர்கள் மேலும் பயணத்தைத் தொடர நான் அவருடன் அறைக்குச் சென்றுவிட்டேன்.

naveen 04கேமரன் மலை சில முறை பார்த்த ஊர்தான். அதன் குளிர்த்தன்மை கணிசமாகக் குறைந்திருந்தது. இரவில் அனைவரும் வந்ததும் பேச ஆரம்பித்தோம். ஜெயமோகன் அறையில் இருந்தார். எனக்கும் சரவண தீர்த்தாவுக்கும் வைன் பாட்டில் இருந்தது. நாஞ்சிலுக்கு ஸ்டௌவ்ட். பேச்சு எங்கெங்கோ சென்று ஜெயமோகனில் வந்து நின்றது. நாஞ்சில் நாடன் கூறினார், “நான் இயங்கும் தமிழில் சமகாலத்தில் நிகழும் அற்புதமாகவே ஜெயமோகனைப் பார்க்கிறேன்”. நாங்கள் சற்று நேரம் அமைதி காத்தோம். இலக்கியத்தில் ஜெயமோகனுக்கு இருக்கும் அற்பணிப்புக் குறித்து நாஞ்சில் நாடன் பேசத்தொடங்கினார். அது ஆத்மார்த்தமான பேச்சாக இருந்தது. அந்தக் கணம் கிடைப்பது அபூர்வம். ஒரு படைப்பாளி தன் சமகால படைப்பாளி குறித்து  மனம் திறக்கும் இடம் அது.

ஜெயமோகன் அறையில் இருந்து வந்தபோது பேச்சு வேறு திசை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. இப்போது அவரது இடது கண் ஓரளவு குணமாகி வலது கண் பெரும்பாலும் மூடியிருந்தது. இடது கண்ணால் பார்த்து மட்டும் டைப் செய்திருந்தார். “இம்முறை வெண்முரசில் நிச்சயம் இடதுசாரி பார்வை இருக்கும்” என்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய நிகழ்ச்சியில் என் உரை மிக பலவீனமாக இருந்ததாகவும் ஓர் உரை எப்படி இருக்க வேண்டும் என்றும் போதித்தார். அவரது பெரும்பாலான உரைகள் சுவாரசியமாக இருக்கும் சூட்சுமத்தை என்னால் அறிய முடிந்தது. உள்வாங்கிக்கொண்டேன்.

1.6.2017 – புதன்

jமறுநாள் எங்கள் பயணத்துக்கு பேருந்து ஏற்பாடாகி இருந்தது. நான் பலமுறை சென்று பார்த்த இடங்கள்தான். எனவே தேனி தோட்டம், ஸ்ட்ரோ பேரி தோட்டம், ரோஜா தோட்டம் ஆகியவற்றின் உள்ளே செல்லாமல் இருந்துவிட்டேன். நான் விரும்பிச்செல்லும் இடம் ஒன்றுதான். பாரத் தேயிலை தோட்டத்தின் மேலே அமர்ந்து தேநீர் பருகும் அனுபவம். அது எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. கண்முன் விரிந்துகிடக்கும் தேயிலை மலையின் இன்னொரு வடிவம் சின்னஞ்சிறிய கோப்பையில் புகை விட்டுக்கொண்டிருப்பது அற்புதமான அனுபவம். நான் அனைவருக்கும் முன்பே அங்கு சென்றுவிட்டேன். முதலில் ஒரு கோப்பைத் தேனீரை வாங்கி தனியாகக் குடித்துவிட்டு நண்பர்கள் வந்து சேர்ந்ததும் இன்னுமொரு கோப்பை நிரம்பியது.

விடுதிக்குச் சென்றபோது கலைசேகர் காத்திருந்தார். எங்களுடன் உணவருந்த வந்தார். ராவணனின் காரில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் புறப்பட நாங்கள் கோலாலம்பூரை நோக்கி புறப்பட்டோம்.

கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் காத்திருந்தார். கெடாவில் நடக்கும் முகாமில் கலந்துகொள்ள அவருடன் பத்துப்பேர் அடங்கிய குழுவினர் வந்திருந்தனர். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனின் நூல்களை கெடாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் நடந்த இலக்கிய முகாமில் கிருஷ்ணனை சந்தித்தேன். பெட்டிகளை காரில் அடுக்கும் இடைவெளியில் எனது சில கதைகள் குறித்து பேசினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. இந்த மலேசியப் பயணத்தை ஒட்டியேகூட அவர் அவற்றை வாசித்திருக்கலாம். ஆனால் படைப்பாளிகளிடம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அவர்களது படைப்புகள் குறித்து பேசுவது இனிய அனுபவம்.

2.6.2017 – வியாழன்

naveen 12தயாஜி, ஶ்ரீதர் ரங்கராஜ், விஜயலட்சுமி ஆகியோருடன் மாலையில் கெடா நோக்கி புறப்பட்டேன். சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் கட்டுமானத்தில் இருந்தபோது சுவாமி பிரம்மானந்தாவுடன் சென்று பார்த்ததுண்டு. முழுமை பெறாத முன்பே அதன் பிருமாண்டம் என்னை வியக்க வைத்தது. முழுமை பெற்ற அதனைக் காண ஆவல், நெருங்கும் வரை அடங்கவில்லை.

அங்குச் செல்லும் முன் பாயா பெசாரில் உள்ள சுவாமிnaveen 10யின் மற்றுமொரு ஆசிரமத்தில் ஜெயமோகன் , நாஞ்சில் நாடன் ஆகியோரின் உரை ஏற்பாடாகியிருந்தது. விஜயலட்சுமி அதற்கு முன் நடக்கும் குரு பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்றதால் வண்டியை ஆசிரமத்தில் விட்டேன். சுவாமி பிரம்மானந்தா, ஜெயமோகன், கோ.புண்ணியவானுடன் சிங்கப்பூர் நண்பர் சரவணனும் இருந்தார். ஒரு நடனக்கலைஞர் போல தோற்றம் அவருக்கு.

naveen 11குளித்து முடித்துவிட்டு ஶ்ரீதர் மற்றும் தயாஜியுடன் அருகில் இருந்த உணவகம் சென்றேன். கொடுமையான உணவு. மீண்டும் வந்தபோது நாஞ்சில் நாடன் மரபிலக்கியம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தார். வல்லினம் நிகழ்ச்சியில் பேசியதின் சாரம்தான் என பாதியில் கேட்டவுடன் தெரிந்தது. கெடா மக்களுக்கு அது புதிதானது. ஜெயமோகன் ‘இந்து ஞான மரபு’ எனும் தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் சுங்கை கோப்பில் அமைந்துள்ள ‘பிரம்ம வித்யாரண்யம்’ ஆசிரமம் நோக்கி பயணமானோம். செம்பனை மரங்களும் பாதுகாக்கப்பட்ட வனமும் சூழ மலைப்பகுதியில் அமைந்திருந்தது ஆசிரமம்.  இரவில் அது இன்னும் அழகாகக் காட்சிக்கொடுத்தது. விரிவுரைஞர் குமாரசாமி அவர்களின் மாணவர்கள் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். பெயர் பதிவு உள்ளிட்ட வேலைகளை அவர்களே முன்னின்று செய்தனர்.

நானும் தயாஜியும் ஓர் அறையில் தங்கினோம். களைப்பு அழுத்தியது.

2.6.2017 – 4.6.2017 (வெள்ளி – ஞாயிறு)

naveen 09கெடா மாநிலத்தில் சுவாமி பிரம்மானந்தாஆலோசனையில் இயங்கும் நவீன இலக்கியக்களம் இரண்டாவது முறையாக நடத்தும் முகாம் இது. முதல் முகாமிலும் நான் கலந்து கொண்டேன். அது பினாங்கு கொடி மலையில் நடந்தது. இம்முறை சற்று அதிகமான இலக்கிய ஆர்வளர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் ஆசிரியர்களாக இருப்பதை அறிய முடிந்தது. நிகழ்ச்சியில் சீ.முத்துசாமி கலந்துகொள்கிறார் என அறிந்ததிலிருந்தே படபடப்பு தொற்றிக்கொண்டது. ஒரு சின்ன மனவருத்தத்தால் நாங்கள் பேசியே சில ஆண்டுகள் கடந்திருந்தன. நான் அவரிடம் பேச விரும்பினேன். அவர் திட்டினாலும் வாங்கிக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அப்போதும் பேசாவிட்டால் அந்த இடைவெளி அதிகமாகும். காரில் நண்பர்களிடம் என் மனப்போராட்டத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் நிச்சயம் பேசுவார் என ஊக்கம் கொடுத்தனர். பிரம்ம வித்யாரண்யம் வளாகத்தில் நடந்து வந்தவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன். இன்னும் கோவமா? இல்லையென்றால் கட்டிப்பிடியுங்கள் என்றேன். சிரித்துக்கொண்டே “இரு.. யோசிச்சி கட்டிப்பிடிக்கிறேன்” என்றார். அருகில் சுவாமி இருந்தார். “எல்லாம் சரியாச்சா…” எனச்சிரித்தார். சீ.முத்துசாமி, “இவ்விடம் எல்லாவற்றையும் சரியாக்கிவிடும்” என்றார். எல்லாம் சரியானது. மனம் லேசானது.

எனக்கு இடைநிலைப்பள்ளியில் தமிழ் போதித்த ஆசிரியர் வாசுகி வந்திருந்தார். என்னால் எழுத முடியும் என முதன் முறையாகக் கண்டுப்பிடித்த ஆசிரியர் அவர். தனிப்பட்ட முறையில் சில சிறுகதை பட்டறைகளுக்கும் போட்டிக்கும் அழைத்துச்சென்றுள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அவர் வரவைப் பார்த்துவிட்டேன். உணவுக்கையோடு ஓடினேன். எத்தனை வயது ஆனாலும் குரு பக்தி மனதை விட்டு போவதில்லை.

naveen 07நவீன இலக்கியம் மற்றும் சங்க இலக்கியம் ஒட்டி பல்வேறு தலைப்புகளில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் உரையாற்றினர். ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் பல்வேறுவிதமான கேள்விகள் மனதில் எழவே செய்தன. கடந்தமுறை வட்டமான முறையில் அமர்ந்திருந்தபோது ஏற்பட்ட உரையாடலுக்கான வெளி இம்முறை இருந்த மேடை அமைப்பின்  முறையால் குறைந்தது. ஆனால் நூறுக்கும் மேற்பட்ட வருகையாளர்களை வட்டமாக அமர வைப்பதில் சிக்கல் இருக்கலாம். மனதில் எழுந்த கேள்விகளை நண்பர்களுடன் விவாதித்தேன். கேள்விகள் எழுவதுதான் முக்கியம். பதில் என்றாவது கிடைக்கும். ஈரோடு கிருஷ்ணன் வாசிப்பின் நுட்பம் குறித்தும் ராஜமாணிக்கம் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் குறித்தும் பேசினர். அன்றுதான் வருகை புரிந்திருந்த பவா செல்லதுரை தனக்கே உரிய பாணியில் சில கதைகளைக் கூறி அரங்கை உற்சாகமாக்கினார்.

மூன்றாவது நாள் மலேசிய இலக்கியம் குறித்து சீ.முத்துச்சாமி, கோ.புண்ணியவான்,4 யுவராஜன்  ஆகியோரு நானும் பேசினேன். ஜெயமோகன் முதல் கேள்வியை முன் வைத்தார். மலேசியாவில் விமர்சனப் போக்கு இல்லாததையும்  அதனால் திட்டவட்டமாகப் படைப்பாளிகளை அடையாளம் காட்ட முடியாதது பற்றியும் கேள்வி எழுப்பினார். நான் தான் முதல் பேச்சாளர். ‘காதல்’ இதழுக்கு முன் – பின் என இருந்த இரு சூழல்கள் குறித்து விளக்கினேன்.  அப்போது தினசரி இதழ்கள் முன்னெடுத்த படைப்பாளிகளே முக்கியமான படைப்பாளிகளாகக் கருதப்பட்டதையும் நாளிதழ் நடத்துபவர்களின் இலக்கிய அறிமுகப் போதாமையையும் அவர்கள் சிவசங்கரி, வைரமுத்துவின் வாசகர்களாக இருந்ததையும் சுட்டிக்காட்டினேன். விளைவாக எம்.ஏ.இளஞ்செல்வன் முன்னெடுக்கப்பட்டு அரு.சு.ஜீவானந்தன் அல்லது சீ.முத்துசாமிக்கான கவனம் கிடைக்காமல் போனதைச் சுட்டிக்காட்டினேன். அரங்கை விட்டு வெளிவரும்போது சிலர் நான் எம்.ஏ.இளஞ்செல்வனை அவமதித்ததாகக் கோவித்துக்கொண்டனர். என் நோக்கம் எம்.ஏ.இளஞ்செல்வனை அவமதிப்பல்ல.  அவரே என் எழுத்துலகுக்கு வழியமைத்துக்கொடுத்தவர். புதுமைப்பித்தனை அறிமுகம் செய்தவர். ஆனால் இன்றைய வாசிப்பில் அவரது சிறுகதைகள் மிக எளிமையாகத் தேங்கிவிடுகின்றன. நாவல்கள் வாசக ருசிக்காக எழுதப்பட்டதென எந்த நல்ல வாசகனும் கூறிவிடுவர். ஒருவேளை அப்போது கறாரான விமர்சனப்போக்கு இருந்திருந்தால் இளஞ்செல்வனின் படைப்புகள் கூட மேழுந்து வந்திருக்கலாம். இறுதியாகக் ‘காதல்’ இதழின் மூலமும் அதன் பின் உருவான ‘வல்லினம்’ இதழ் மூலமும் தொடரும் விமர்சனப்போக்கைச் சுட்டிக்காட்டினேன்.

naveen 05இரண்டாவது கிருஷ்ணன்.  மலேசியாவில் காத்திரமான படைப்புகளை உருவாவதில் இங்குள்ள பொருளாதாரச் செலுமையோ அரசின் கெடுபிடியும் காரணமா என வினவினார். கோ.புண்ணியவான் மற்றும் சீ.முத்துசாமி ஆகியோர் அரசின் கெடுபிடிகள் குறித்து பேசினர். கெடுபிடிகள் உள்ளது எனும் எண்ணத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது. மலேசியா, ஈரான் போன்று அதிக கெடுபிடியான நாடு இல்லை. ஈரான் சினிமா மூலம் அவர்கள் அரசியல் சூழலை அத்தனை நுட்பமாக முன்வைக்க கலைத்தன்மையே காரணம். கலை என்பது ஒன்றை நேரடியாகச் சொல்வதல்ல. நேரடியாகச் சொல்வது பிரச்சாரம். பிரச்சாரத்தை அதிகாரம் அடக்க நினைப்பது இயல்பே. கலை வெகுமக்கள் மத்தில் அக எழுச்சியை மெல்ல மெல்லவே உருவாக்கும். ஆனால் அது மிக ஆழமானதாக இருக்கும். என் எண்ணத்தைக் கூறி அமர்ந்தேன்.

விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

இறுதியாக ஜெயமோகன் பேசினார். மலேசியாவின் naveen 13தோட்ட வாழ்வு நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளதா எனும் கேள்வியை முன் வைத்தார். பதில் தர சீ.முத்துசாமி எழுந்தார். தனது படைப்புகள் அதை சார்ந்ததே என்றார். அதை ஆமோதித்த ஜெயமோகன் “அதனால்தான் உங்கள் படைப்பு குறித்து நான் ஒரு நூல் எழுதலாம் என இருக்கிறேன். அதுவும் விஷ்ணுபுரம் விருதை ஒட்டி எழுதலாம் என இருக்கிறேன். விஷ்ணுபுரம் விருதை சீ.முத்துசாமிக்கு வழங்கலாம் என நண்பர்களுடன் கலந்துரையாடி முடிவெடுத்துள்ளோம்” என்றவுடன் அரங்கம் கைத்தட்டலால் மூழ்கியது.

அனைவருமே அது தங்களுக்குக் கிடைத்த விருதாகவே எண்ணி மகிழ்ந்தனர். அந்த விருதின் மூலம் மலேசிய இலக்கியத்தின் மீது கவனம் விழும் என பலரும் பேசுவதைக் கேட்க முடிந்தது. அந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்பே சீ.முத்துசாமியிடம் பேசி அவரை ஆவணப்படம் எடுக்க நானும் பாண்டியனும் அனுமதி வாங்கியிருந்தோம். ஜெயமோகனிம் இந்த அறிவிப்பால் ஆவணப்படத்தை இன்னும் தரமாக அமைக்கும் கடப்பாடு உள்ளதாகப்  பாண்டியன் கூறினார்.

5.6.2017  – திங்கள்

18951198_1623370267673778_1972204146209181896_nபவா செல்லதுரையில் உறவினர்கள் Royale Chulan Kuala Lumpur எனும் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் இரவுணவை ஜெயமோகனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். பவாவுக்கு மலேசியாவில் உறவினர்கள் அதிகம். என்னையும் அவர் அழைக்கவே சென்றிருந்தேன். கொஞ்ச நேரம் மலேசிய இலக்கியம் குறித்த பேச்சு எழுந்தது. நோன்பு மாதம் என்பதால் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு இருந்தது. விரும்பியதை ஒரு கை பார்த்தேன்.

6.6.2017 – செவ்வாய்

ஜெயமோகனை நான் விமானநிலையத்தில் விடுவதாகவும் நாஞ்சில் நாடனை ராவணன் விடுவதாகவும் முடிவாகி இருந்தது. இருவருக்கும் வெவ்வேறு விமானம்; வெவ்வேறு விமான நிலையம்; வெவ்வேறு நேரம். அறைக்குச் சென்றபோது ஜெயமோகன் உற்சாகமாக இருந்தார். ராஜா எனும் வாசகர் ‘வெற்றி’ சிறுகதை குறித்து எழுதியுள்ள கருத்தே அக்கதைக்கு மிக நெருக்கமான புரிதல் என்றார். இவ்வளவு நுட்பமான வாசிப்பு தமிழ்ச்சூழலில் ஆறு மாதங்களுக்குப் பின்பே நிகழும். இவ்வளவு சீக்கிரம் நடப்பது ஆச்சரியம் என்றார்.

ஜெயமோகன் மலேசியா வருவது இது ஐந்தாவது முறை என நினைவு. ஒவ்வொரு சமயமும் அவரது பேச்சில் நித்ய சைதன்ய யதி அல்லது சுந்தர ராமசாமியின் பெயர்கள் அதிகம் இடம்பெறும். இம்முறை அருண்மொழி நங்கை எனும் பெயரே அதிகமாக இடம்பிடித்தது. விமான நிலையத்தில் அமர்ந்து உறவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

“அப்பா – மகனின் உறவு மிக நுட்பமானது. சிறுவயதாக இருக்கும் போது அப்பா மகனுக்கு தன் முதுமையில் ஒரு பகுதியைக் கொடுத்து அவனது சிந்தனையைப் பக்குவமாக்குகிறார். மகன் இளைஞனாகும்போது தனது இளமையில் ஒரு பகுதியைக் கொடுத்து உடை, உணவு என தன் அப்பாவை உற்சாகம் அடைய வைக்கிறான். இது அப்பா மகள் உறவில் வித்தியாசம் அடைகிறது. எனக்கு என் மகள் இன்னமும் குழந்தை. அருண்மொழி அவளுக்கு விடும் வேலைகளை அவளால் செய்ய முடியுமா என நான் பதறுவேன். ஆனால் அருண்மொழியால்தான் மகளின் சிந்தனை பக்குமாகிறது. அவள் தன் முதுமையின் ஒரு பகுதியை தன் மகளுக்குக் கொடுக்கிறாள் ” என்றார்.

கண் சிவந்திருப்பதால் விமான நிலையத்தில் அனுமதிப்பார்களா என்ற பதற்றம் அவருக்கு இருக்கவே செய்தது. வாசலைக் காட்டியவுடன் சட்டென விடைபெற்றுச் சென்றார். திரும்பிப்பார்க்கவும் இல்லை. நான் கொஞ்ச நேரம் அங்கேயே நின்று காத்திருந்தேன். அருகில் இருந்த உணவகத்தில் மீண்டும் ஒரு காப்பி. ஜெயமோகன் அழைத்தார். “ஒரு சிக்கலும் இல்லாம உள்ளே போயாச்சி” என்றார். சட்டென ஒரு வெறுமை.

3 comments for “ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்

  1. Saminathan
    June 25, 2017 at 8:38 am

    படிக்கும் போது உங்கள் கூடவே இருந்தது போல் இருந்தது.. படித்து முடிக்கும் போது சட்டென நீங்கள் கூறின வெறுமையை உணர முடிந்தது. நன்றி நவீன் அவர்களே.

  2. ஸ்ரீவிஜி
    July 4, 2017 at 4:30 pm

    அருமை நவீன். வாசித்து முடித்தபோது, உங்களின் வெறுமையில் நானும் மாட்டிக்கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *