பார்ச்: தரிசும் தாகமும்

IMG-20170701-WA0003கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப் பகிர்ந்து கொண்ட பெண்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். அப்பெண்களின் வாழ்க்கையையும் மனத்தின் வெளிப்பாடுகளையும், குறிப்பாகப் பாலுணர்வு, பெண் உடல் குறித்த அவர்களின் உரையாடல்களையும் உள்வாங்கிய இயக்குனர் அதனை வெளி உலகத்திற்கு, குறிப்பாக ஆணாதிக்கத்திற்குப் புரியும் படி கலையாக்கியுள்ளார்.

ராணி(Tannishtha Chatterjee), பிஜ்லி(Surveen Chawla), லஜ்ஜோ(Radhika Apte), ஜானகி ஆகிய நான்கு வகையான பாத்திரங்கள் வழி சமுதாயத்தில் பெண்கள் அனுபவிக்கும் மனத்துன்பங்களையும் அவர்கள் மனத்தின் ஆழத்தில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் அந்தரங்கத் தேடல்களையும், மனம் விரும்பும் வாழக்கையை அமைத்துக்  கொள்ளும் உரிமையையும்  விடுதலையையையும் மிகவும் எளிமையான காட்சிகளின் மூலமும் ‘நச்’ வசனங்கள் மூலமும் ரசிகனின் தீர்ப்புக்கு முன் வைக்கிறார் லீனா யாதவ்.

முதல் காட்சி பஸ்  பயணத்தில் ஆரம்பிக்கிறது.  மகிழ்ச்சியாக பயணத்தைIMG-20170701-WA0006 மேற்கொள்கிறார்கள் ராணியும் அவளுடைய தோழி லாஜ்ஜோவும். அடிமைக்குக் கிடைத்துவிட்ட விடுதலையைப்போல் அவர்கள் பயணத்தைக் கொண்டாடுகிறார்கள். வெளியிலிருந்து வீசும் காற்று ராணியின் துப்பட்டாவை கலைத்துப்போடும் போதெல்லாம் அவள் தலைமுடி வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளும் காட்சியில் ராணி பிறருக்குப் பயந்து வாழும் போலி தனம் வெளிப்படுகிறது. இவளுக்கு எதிர்மாறான குணத்தைக் கொண்ட லஜ்ஜோ சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தபடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள். “என்னமா கடுமையான காற்று. அது என் உடல் பாகம் எங்கிலும் தொடுகிறது” என்று லாஜ்ஜோ ராணியிடம் சொல்லும்போது பெண்கள்  உடலாலும் மனத்தாலும் முழுமையான வாழ்க்கையை முழுமையான விடுதலைக்காக ஏங்குவதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. குடிகார கணவனால் நிதமும் அடி உதை வாங்கும் லஜ்ஜோ போன்ற பெண்களுக்கு உடல் உறவு வன்முறையாகக் கையாளப்படுகிறது. ஆண்களின் தொடுதல் அவள் அப்போது அனுபவிக்கும் தென்றல் போல் இன்பம் கொடுப்பதில்லை என்ற மற்றோரு பார்வையையும் இக்காட்சியில் அடக்கியுள்ளார் இயக்குனர்.

லஜ்ஜோ கதாப்பாத்திரத்தைப்  புதுமையை ஏற்றுக்கொள்ளும் பெண்ணாகவும், போராடத்  துணியும் பெண்ணாகவும், அமைத்திருக்கும் இயக்குனர் , தான் நினைக்கும் வாழக்கையை அமைத்துக் கொள்ள பெண்களுக்கு இதுபோன்ற குணங்கள் இருக்கவேண்டியது அவசியம் என்பதை இக்கதாபாத்திரத்தின் மூலம் வலியுறுத்துகிறார்.

தான் பிள்ளை பெற முடியாதவளாகத் தன் கணவனால் நம்பவைக்கப்பட்டு வந்த லஜ்ஜோ, குகையில் வாழும் பரதேசியிடம் செக்ஸ் உறவு  வைத்துக் கொண்ட பிறகு கருவுறும் காட்சியைக் காணும் ரசிகனுக்கு இது பண்பாடு மீறும் செயலாகத் தெரியலாம். குறையே இல்லாதப்  பெண்ணைச் சமுதாயப் பார்வையில் பயன்படாத பிண்டமாக நடத்திய கணவனின் வஞ்சகத்திற்கு  ஒரு பெண் தரும் பரிசு இது. மகாபாரத இதிகாசத்தில் வாரிசில்லாத பிரச்சினை தோன்றுகிறது. குருவம்சத்தின் அரசன் விசித்திர வீரியன். இவன் வாரிசில்லாமல் இறக்கிறான். விசித்திர வீரியனின் தாய் சத்தியவதி தான் பெற்ற மகன் வியாசரை நினைத்து வரவைக்கிறாள். தன் மருமகள்கள் இருவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுகிறாள். அம்பிகாவும் அம்பாலிகாவும் இதற்கு உடன்படுகிறார்கள். பிறகு தாதியுடனும் வியாசர் உடலுறவு கொள்கிறார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறக்கிறார்கள்.

இதே சத்தியவதி கன்னியாக இருந்த வேளை பராசர முனிவர் யமுனா நதிக்கரைக்கு வருகிறார். அவர் யமுனா நதிக்கரையில் படகு செலுத்தும் சிறுமியிடம் நதியைக் கடக்க உதவி கோருகிறார். படகில் சென்று கொண்டிருந்த போது முனிவர் சிறுமியிடம் உபாயம் கேட்டார். “இப்பொது நல்ல நேரம். ஒரு மகான் பிறக்கும் நேரமிது. நீ என்னோடு இனங்ககுவதற்கு சம்மதம் தெரிவித்தால் இந்த உலகம் பயன்பெறும் மகன் பிறப்பான்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார் முனிவர். அவர்களின் உறவின் வழி வியாசர் பிறந்தார். புராணங்களில் நல்ல நோக்கங்களுக்காக இதுபோன்ற உறவுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கையில் எந்த சுகத்தையும் கண்டிராத லஜ்ஜோ தனக்கென்று ஒரு மகிழ்ச்சியைப் பிள்ளை வடிவில் காண ஆசைப்படுகிறாள். அவளது ஆசையை எந்த இச்சையும் இல்லாமல் குகை சாமியார் நிறைவேற்றி வைக்கிறார். இக்காட்சியைச் சதைப்பிண்டங்களின் உறவாகக் காட்டாமல் பரதேசியுடனான ஆன்மிக உறவாகக் காட்டுகிறார் இயக்குனர். இதிகாசத்தைப் புனிதமாக ஏற்றுக் கொள்ளும் சமுதாயம் இதையும் ஏற்றுக் கொள்ளட்டும் என்று முடிவை ரசிகனிடமே  பகுத்தறிய விட்டுச் செல்கிறார் லீனா.

பிஜ்லி எனும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் பிழைப்புக்காகக் கிளுகிளுப்பூ நடனம் ஆடும் நாட்டியக்காரி. ஆண்களின் இச்சைக்கு நிபந்தனையுடன் இணங்கும் விலைமகளும் கூட. ஒரு பெண் தமது வாழ்க்கையை மனம் விரும்புவதைப்போல்  வாழும் உரிமையைப் பெற்றவள்  என்று நம்புகிறவள். இவளுடன் சினேகமாக இருக்கும் ராணிக்கும் லஜோவுக்கும் தன்னம்பிக்கை ஆசிரியராகவும், சிந்தனைப் புரட்சியைத் தூண்டி விடுபவளாகவும் ஆண்களின் அன்பான வார்த்தைகளை நம்பாதப் பெண்ணாகவும் பிஜ்லி கதைக்குள் வருகிறாள்.

மேடையில் ஆடும்பொழுது ஆண்களின் ராணியாகக் கொண்டாடப்படுகிறாள். இருப்பினும் இரவுகளில்   ராணியாகக் கொண்டாடப்பட்டாலும் சமூகத்தில் அவளொரு விலைமகள்தான் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் ஆழமாக ஊன்றி நிற்கிறது. எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் ஆனாலும் விலைமகளை நல்லது கெட்டதுக்கு அழைப்பதில்லை. ராணி பிஜ்லியின் நெருக்கமான தோழியாக இருந்தாலும் அவளுடைய மகன் திருமண வைபவத்திற்கு பிஜ்லிக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. வைபவத்தைக் கேள்விப்பட்டவுடன் நட்பின் அடிப்படையில் ராணியின் வீட்டிற்கு வரும் பிஜ்லியை வரவேற்பதா இல்லையா என்ற சங்கடத்திற்கு ஆளாகிறாள் ராணி. பிஜ்லிக்கு முன் எதையுமே பேசாமல் நிற்கும் ராணியின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டுச் செல்கிறாள் பிஜ்லி. ஒருமுறை விலைமகளாகிவிட்டவள் அதிலிருந்து விடுபட முடியாமல் இறுதி வரை அத்தொழிலை கைவிடமுடியாமல் வாழ்கிறார்கள். அவர்களை மரியாதையுடன் ஏற்க இச்சமூகம்  மறுக்கிறது.

IMG-20170701-WA0002மற்றுமொரு சம்பவத்தில் ராணியின் மகன் குலாப்பின் நடவடிக்கை குறித்து பிஜ்லி ராணியிடம் எச்சரிக்கை செய்கிறாள்.  அந்த உரையாடலில் கோபம் அடையும் ராணி “ஊரிலுள்ள ஆண்களை நீ வளைத்துப் போடுவதாக பெண்கள் ஊர் பெரியவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். நீ ஆட்டம் போடும் முகாம் மூடு விழா காணப்போகிறது” என்று கூறி இதற்கெல்லாம் பிஜ்லி போன்ற பாலியல்தொழிலாளிகளே கரணம் என்று மறைமுகமாகச் சுட்டுகிறார். ராணியின் உள் அர்தத்தைப் புரிந்து கொண்ட பிஜ்லி “உங்களின் புனிதமான கணவனை கெடுத்தது நானா? சுய விருப்பத்தின் பேரில் என்னைத் தேடி வரும் ஆண்களுக்கு நான் பொறுப்பா?” என்று கேள்விகளை எழுப்புகிறாள். “கல்யாண நெக்லஸை விற்று மகனை விலைமகளிடமிருந்து காப்பாற்றும் சங்கடம் உனக்கில்லை காரணம் உனக்கு குடும்ப வாழ்க்கை இல்லை. அதனை நிர்வகிக்கும் பொறுப்பு உனக்கில்லை” என்று ராணி பிஜிலியின் வாழ்க்கை குறித்து விமர்சிப்பதோடு அவளை ஒரு விலைமகள் என்று கூறி அறைந்தும் விடுகிறாள். தன் மகன் பொறுப்பற்று சுற்றுவதற்கு பிஜ்லி போன்ற பாலியல்தொழிலாளிகளே காரணம் என்று சுட்டும் காட்சியில், நெருங்கிய நண்பராக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் விலைமகள்  என்பவள் குடும்பத்தைக்  குலைப்பவள் என்றும் சமூகத்துடன் சேர்த்து பார்க்க முடியாதவள் என்றும் நிலைத்துவிட்ட சமூக மனப்போக்கு விவரிக்கப்படுகிறது.

பிஜ்லியுடன் வேலைபார்க்கும் பணியாளன் ஒவ்வொரு முறையும் அவளை தனியே சந்தித்துப் பேசும்போதெல்லாம் அவளுடைய அழகையும் அவளை மதித்தும் பேசுவான். இந்தப் பேச்செல்லாம் அவளுடன்  உடல் உறவு கொள்ளுவதற்கான உள் நோக்கமே என்று பிறகு தெரிந்து கொள்கிறாள். தன்னைக் காதலிப்பதாக பிஜ்லி  நம்பிய பணியாளன், பிஜிலியிடம் பணத்தைக் கொடுத்து நாம் இருவரும் மும்பைக்கு ஓடிவிடலாம். நாம் இருவரும் இத்தொழிலை அங்கே ஆரம்பிக்கலாம் என்று கூறும் காட்சியில் விலைமகளை மணமகளாக ஏற்றுக் கொள்ளும் மனம் ஆண்களிடம் இல்லை என்பதும் ஆண்வர்க்கம் விலைமகளை  செக்ஸ் பிண்டமாகவே  பார்க்கப்  பழகிவிட்டது   என்பதும் வெளிப்படுகிறது. ” உனக்கு என்னோடு உடல் உறவு வைத்துக் கொள்ள இவ்வளவு தொகையை எனக்குக் கொடுத்திருக்க வேண்டாம். மரத்தடியிலோ, புதரிலோ, கிணறு பக்கத்திலோ என்னுடன் நீ படுத்துக் கொள்ளலாம் என்று பிஜ்லி கோபத்தோடு கூறுகிறாள். “கறந்த இடத்தை காணுதே கண் பிறந்த இடத்தை நாடுதே மனம்” என்று பெண்களின் உறுப்புகளை மட்டுமே பார்க்கும் கண்களுடைய ஆண்களை இக்காட்சியில் மூலம் சாடுகிறாள் இயக்குனர். உடலை விற்கும் பெண்களுக்கும் மனதில் காதல் உண்டு, அவளுக்கும் இந்த நரக வேதனையிலிருந்து  வெளியேற்ற ஒருவன் வரமாட்டானா? என்ற ஏக்கங்களும் உண்டு என்பதை பிஜ்லியின் கோபத்தில் உணரமுடிகிறது.

பெண்களை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளில் கெட்ட வார்த்தைகளும் உண்டு. நாகரிகம் முறுக்கேறிய அமெரிக்கா முதல் பெண்களை மையப்படுத்தி கெட்டவார்த்தைகளைப் புழங்குகிறார்கள். இதனைச்  லீனா அமைத்திருக்கும் காட்சி நகைப்பதாகவும் நையாண்டியாகவும் உள்ளது. ‘தாயோளி’, ’அக்காலோளி’ போன்ற கெட்டவார்த்தைகள் பெண்களை வைத்தே சொல்லப்படுகிறது. அப்பா, அண்ணன், மாமா போன்ற ஆண் பாலில் கேட்ட வார்த்தைகளைச் சொல்ல முடியாதா என்ற கேள்விகளை பிஜ்லி மூலம் முன் வைக்கிறார் இயக்குனர். மலை உச்சியின் மீது ஏறி ஆண்பாலில் கெட்ட  வார்த்தைகளை உருவாக்கி அதனை எதிரொளிக்கக் கத்தி கூறும் அந்த மூவரின் முகத்திலும் ஆண் வர்க்கத்தின் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்ட அமைதி நிலவுகிறது.

“என் மனைவியை எனக்குப் பிடிக்காவிட்டாலும் கணவன் என்ற கடமையை நிறைவேற்றி விட்டேன்,” என்று குலாப் நண்பர்களுடன் பேசும் காட்சியில் ஓர் கணவனுக்கான தகுதி மனைவியுடன்  செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதில் அடங்குவதாக ஆண்கள் கொண்டிருக்கும் ஆதிக்க நம்பிக்கையைப் பேசுகிறது. ஒரு கணவனின் முக்கிய கடமை மனைவியை கர்ப்பமாக்குவது என்று நம்பும் ஆணாதிக்க புத்தியைச் சாடி பல இடங்களில் பேசியிருக்கிறார் இயக்குனர்.   “உன் சிறிய குறியைப் பார்த்து விட்டதால் உன் மனைவி அழுகிறாளா?” என்று ஜானகி திருமண வைபவத்தில் அழும்போது நண்பர்கள் குலாப்பை எள்ளி  நகையாடும் காட்சியில் ஆண்குறியின் வீரியத்தில் மட்டுமே பெண்களின் மகிழ்ச்சி இருப்பதாக ஆண்கள் அசட்டுத்தனமாக நம்பியிருக்கும் முட்டாள்தனத்தையும் லீனா சுட்டிக் காட்டுகிறார். மனைவி என்பவள் கட்டில் சுகத்துக்காக ஏங்குபவள் அல்ல. அன்பு, கருணை, பாசம் போன்ற உளவியல் அரவணைப்புகளுக்கு ஏங்குபவள் என்பதை ஜானகி தன் காதலனை எதார்த்தமாகச் சந்திக்கும் காட்சியில் சொல்லப்படுகிறது. அவளுடைய கண்களில் ஏக்கங்கள் குவிந்து கண்ணீராக வழிந்தோடுகிறது.  குலாப் நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் கணவனின் படுக்கையறை கடமை ஜானகியின்  ஏக்கங்களைத் தடுக்க முடிந்ததா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

மனைவியாக இருந்தாலும் சரி காதலியாக இருந்தாலும் சரி ஆவலுடன் வைத்துக்கொண்டIMG-20170701-WA0005 அந்தரங்க உறவை நண்பர்களுடன் கொச்சையாகப் பகிர்ந்து கொள்ளும் ஆண்வர்க்கம் உண்டு. “என் மனைவியின் முலைகளைப் பிடித்துக் கசக்கினேன். பிறகு அவளின் அதற்குள் மோதினேன். ”பாஸ்” யாரென்று அவளுக்குக் காட்டினேன்” என்று குலாப் தன் மனைவியுடன் வைத்துக் கொண்ட உடலுறவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். திருமணத்திற்கு முன் பெண் வீட்டுக்குக் கொடுக்கப்பட்ட பணத்திற்கு நிகராக திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் முலைகள் இருக்குமா? அல்லது பணத்தைத் திரும்பக் கொடுக்கும் நிலை ஏற்படுமா? போன்ற கேள்விகளைக் கேட்டு நண்பர்கள் கிண்டல் செய்கின்றனர். பெண்ணுடன் வைத்துக் கொள்ளும் செக்ஸ் உறவை பெரிது படுத்தி பேசும் ஆண், தான் ஒரு “ஆண் சிங்கம்” என்று  நண்பர்கள் மத்தியில் நிலை நிறுத்த முயற்சிக்கிறான். மன்மத லீலைகளில் தன்னை மிஞ்ச முடியாது எனும் தோரணையை சக நண்பன் மத்தியில் காட்டிக் கொள்ளும் பொழுது தன் ஆண்மையைக் குறித்து நண்பர்கள் சிறுமைப்படுத்தி பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். தன்னிடம் பலவீனம் இருக்குமானால் மனைவி வேறொரு ஆணைத் தேடக் கூடும் அல்லது சக நண்பனே அதற்கு முயற்சிக்கலாம் எனும் தாழ்வு மனப்பான்மைக்  கொண்டவர்கள் பாலியல் உறவில் தன்னை தலைவனாகக் காட்டிக் கொள்ளவதால் இதுபோன்ற சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர்.

நேற்று இரவு படுக்கை அறையில் என்ன நடந்தது எனும் ஆர்வம் ஆண் நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல  பெண்கள் மத்தியிலும் உண்டு. குலாப்புக்குப் பெண் (ஜானகி)  பார்க்கச் செல்லும் இடத்தில் ஜானகியின் பாட்டி(பாருக் ஜாபர் )ஜானகியின் அம்மாவைக் குறித்துப் பேசும்போது இவள் எப்போதும் தனது பாவாடையைத்  தூக்கியே வைத்திருப்பாள் என்று சொல்லி சிரிக்கிறாள். இருப்பினும் குலாப்பின் பேச்சில் ஆண் திமிர் நிறைந்திருந்தது. இப்படத்தில் வரும் பெண் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் மகிழ்ந்து  சொல்ல எதுவும் இல்லாததால் செக்ஸ் வாழ்க்கையின் ஏக்கங்களை  பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு முறை கைத்தொலைபேசி அதிரும் போது அந்த அதிர்வை செக்ஸ் தூண்டலுக்கான சுகத்தைத் தருவதாக பாவனை செய்கிறார்கள் ராணியும் லஜ்ஜோவும்.

ஆண்களற்ற உலகத்தில் கைத்தொலைபேசிக்கு ஒரு ஜே என்று காண்பிக்கப்படும் காட்சிகளில் செக்ஸ் தொடர்பான பேச்சுக்களைப் பேச ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் ஆர்வம் உண்டு என்பதைக் காட்டுகிறது.

லீனாவின் முக்கியக்  கதாபாத்திரங்களில் ஒருவரான ராணி ஒரு கைம்பெண். 14 வயதில் திருமணமாகி 16 வயதில் கணவனை இழந்தவள். 17 வயதில் வளர்ந்துவிட்ட ஆண் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கத்   தயாராகும் தாய். எழுந்து நடமாட முடியாத மாமியாரின் இம்சைக்கும்  கணவனின் கொடுமைக்கும் ஆளாகி வாழக்கையைக் கடத்திவிட்ட ராணி, ‘பிறர் என்ன சொல்வார்கள்’ என்ற அச்சத்திலேயே தனக்கான வாழ்க்கையை வாழாதவள். கணவனை இழந்தவள் இறந்த கணவனின் நினைப்பிலேயே வாழக்கையை வாழ்ந்து மரித்துவிடவேண்டும் என்பது பழமைவாதிகளின் கட்டுப்பாடு.

இந்தக் கட்டுப்பாடு ஆண்களுக்குக் கிடையாது. விதவைப் பெண்கள் சிறுமியாக இருந்தாலும், குமரியாக இருந்தாலும் மறுமணத்தை ஆதரிக்காத வழக்கம் இன்னும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விலைமகளோடு சகவாசம் வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்திய கணவன் இறந்த பிறகும் அவனை நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்து என்று கட்டிப்போடும் பழமைவாதங்கள் ராணி அனுபவித்த கொடுமைகளைவிடக் குரூரமானது என்பதை இயக்குனர், ராணி கடந்து விட்ட இளமையை எண்ணிப்  பார்த்து ஏங்கும் தருணங்களில் காட்சிப்படுத்திக்  காட்டுகிறார்.

என் முடி நரைத்து விட்டது.  பார்வை மங்குகிறது. என்னைப்பார்க்க பெண்ணாகத் தெரிகிறதா? என்று ராணி லஜ்ஜோவிடம் கேட்கும் கேள்விகள்   இளமை குறித்து ஒரு பெண்ணின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. முகம் தெரியாத ஆணிடம் தன்னுடைய வயதையும் பெயரையும், தன்னைப்பற்றிய தகவலையும் சொல்லாமல் இருந்து பிறகு அவனிடம் உண்மையைச் சொல்லி மன விடுதலையைப் பெறுகிறாள்.

பெண் என்பவள்  புகுந்த  வீட்டை விட்டு தாய் வீட்டுக்குத்  திரும்பி வருவது அவமானச் செயலாகக் கருதப்படுகிறது. இதனால் மாமியார் வீட்டுக் கொடுமையாக இருந்தாலும் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவதில்லை. “கணவனின் அண்ணன் என்னை சீண்டுகிறான். மாமனார் என்னை சீண்டுகிறார். யாருடைய பிள்ளை என்று தெரியாமல் பிள்ளையைக் களைத்து விட்டேன். நான் அங்கே போகமாட்டேன்” என்று சம்பா  (Sayani Gupta) கதறி அழுதாலும் ஆணாதிக்கப் பஞ்சாயத்து அப்பெண்ணை தாய் வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. செத்தாலும் பரவாயில்லை பழமைவாதத்தையும்  கட்டுப்பாட்டையும் வீட்டுக் கொடுக்க முடியாது என்ற பிடிவாதமே பல பெண்களின் தற்கொலைக்கும் கொலைக்கும் காரணமாகிறது.

பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து பேதமையிலிருந்தும் விடுதலைப் பெற கல்வி அவசியம். தன்னம்பிக்கையுடன் வாழ சுய வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அறிவுரையை அக்கிராமத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல ஆணாகக் காட்டப்படும் கிஷன் (Sumeet Vyas),அவரது மனைவி நஓபி (Nancy Nisa Beso) ஆகிய இருவரின் கதாபாத்திரங்களின் காட்சிகளில் சொல்லப்படுகிறது.

IMG-20170701-WA0004கல்வி பெண்களைக் கெடுத்து விடும். கெட்ட மனைவிகளை உருவாக்கும் போன்ற பழமைவாதங்கள் பெண்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது. 14 வயது கொண்ட ஜானகியின் திருமணப் பரிசாக புத்தகங்களை கொடுக்கிறாள் நஓபி. இவர்கள் இருவரும் கல்வியைத் தந்து, சுய வருமானத்தை ஈட்டும் ஆற்றலைத் தந்து பெண்களின் மனத்தைக் கெடுத்து வைக்கிறார்கள் என்று குலாப் தன்  நண்பர்களுடன் சேர்ந்து கோபப்பட்டுக் கொள்கிறான். ஒரு காட்சியில் ஜானகி தமக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள். அந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்குகிறாள் ராணி. புத்தகம்  கெட்ட மனைவியை உருவாக்கும். கணவனை கவனிக்கக் கற்றுக் கொள். நரகம் உன்னை விழுங்கி விட்டால் திரும்ப வர முடியாது என்று ராணி தன மருமகள் ஜானகியைத் திட்டும் காட்சியில் பெண்களுக்கான கல்வியை தந்திர வார்த்தைகளால் தொன்று தொட்டு மறுக்கப்படுவதைக் காணலாம். கல்வி கற்ற பெண்களைப் பழமை வாதிகள் சமூகத்தில் ஆபத்தானவர்களாகக் கருதி ஒதுக்கிவைக்கிறார்கள். கிஷனின் மனைவி நஓபி படித்தப் பெண் என்பதால் அவளை கிராமத்து விவகாரங்களில் தலையிட மறுக்கப்படுகிறது. சம்பாவுக்கு, கிராமத்துப் பஞ்சாயத்தில்  வழங்கப்பட்ட   நியாயமற்ற தீர்ப்பை எதிர்த்து அவ்விவகாரத்தில் தலையிட முயன்ற கிஷனை பஞ்சாயத்துத் தலைவர் தடுத்து நிறுத்துகிறார். படித்த மனைவியைக் திருமணம் செய்து கொண்டதைக் குற்றமாகப் பார்க்கின்றன பஞ்சாயத்தை ஆக்கிரமிக்கும் ஆண்  சமூகமும் அவர்கள் நம்பும் பழமைவாதமும்.

ஆணாதிக்கத் தகப்பன்களைப்  பின்பற்றும் ஆண்பிள்ளைகளால் குடும்ப வன்முறைகள் தொடர்கின்றன. குலாப் மற்றும் அவனின் கூட்டாளிகள் போன்ற ஆண்கள், தங்களின் தகப்பன் தங்களின் தாய்மார்களை எப்படி நடத்தினார்களோ அதனையே தங்களின் தலைமுறையிலும் கடைப்பிடிக்கின்றனர்.  தன் கணவனின் மூர்க்க குணங்களை அப்படியே தன் மகனும் கொண்டிருப்பதை ஜானகி  விவகாரத்தில் குலாப் நடந்து கொள்ளும் முறைகளில் காண்கிறாள் ராணி. மாமியார் கொடுமைக்கு ஆளாகிய ராணி,  அதே கொடுமைகளுக்கு மருமகளை உட்படுத்தி  வார்த்தைகளால் சாகடிக்கிறாள். சமையல் அறையில் சமையல்  உதவி க்காக அமர்ந்திருக்கும் ஜானகியின் வேலையில் திருப்தி அடையாத ராணி, “எதற்கும் லாயக்கு இல்லாத ஆட்டை விற்று விட்டனர்” என்று  கூறும்போது, தங்களின் மேல் சுமத்தப்பட்ட கொடுமைகளையும், கோபங்களையும் சேமித்து வைத்திருந்து அடுத்த தலைமுறையின் மேல் திணிக்கிக்கும் மூத்தவர்களின் மனவிகாரத்தைக் காணமுடிகிறது. மருமகளை கொடுமைப்படுத்தாமல் பெண்ணுக்கு பெண் அரணாக இருக்க வேண்டும் என்பதை ராணி-ஜானகி தொடர்பான காட்சிகளில் வலியுறுத்திக் கூறுகிறார் லீனா.

15 வருடங்கள் எந்த ஆணும் தீண்டாத ராணியும், தினமும் தன் கணவனால் வன்முறையால் தீண்டப்படும் லஜ்ஜோவும் இரு வேறு தேடல்களின் உணர்வுகளை தங்களுக்குள் பெற முனைகிறார்கள். இவர்களின் அணைப்பு இருவருக்கும் ஆறுதல் சொல்வதாக அமைகிறது.

கைத்தொழில் மூலம் லஜ்ஜோ சம்பாரிக்கத் தொடங்குகிறாள். பிள்ளையை சுமக்கவேண்டும் என்ற ஆசையும் நிறைவேறி விட்டது. தான் பிள்ளைப்பேறு கொடுக்க இயலாதவன் என்று லஜ்ஜோவின் குடிகார கணவன் ஒத்துக்கொண்டாலும் லஜ்ஜோவிடம் காணும் மாற்றங்கள் தன்னை  கையாலாகாதவன் என்ற குற்ற உணர்வுக்குத் தள்ளிவிடுவதால் அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். பிறகு தீப்பிடித்து வீட்டோடு எரிந்து சாகிறான். மகன் கைவிட்ட ராணியும், கணவனை விட்டுத் தொலைந்த லஜ்ஜோவும், காமக் கலியாட்டத்திலிருந்து தப்பித்து வந்த பிஜ்லியும் ஒன்று கூடி ஆணாதிக்க வன்முறை இல்லாத உலகத்தைத் தேடித் புறப்படுகின்றனர். நீண்ட தலைமுடிக்கு முக்கியத் துவம் கொடுத்து வந்த ராணியும், அழகு முடியால் ஆண்களைக் கவர்ந்த பிஜ்லியும்,  முடியைப்பிடித்து  அடிக்கும் கணவனால் துன்பப்பட்ட லஜ்ஜோவும் தங்களின் தலைமயிரை வெட்டி மிகவும் மகிழ்ச்சியாக புது உலகத்தைத் தேடி செல்லும் நாளன்று,  கிராமத்தில் ராமன் ராவணனை வதம் செய்யும் திருவிழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருப்பதாக இயக்குனர் காட்சி[ப் படுத்தியுள்ளார், ராவணனை கொன்று சீதையை மீட்டெடுத்த ராமனின் வெற்றியை உலகமே கொண்டாடியது போல, இந்த மூன்று பெண்களும் தங்களின் விடுதலைக்கான வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

தங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பண்பாட்டுக் கட்டமைப்புகள், பழமைவாதங்கள், ஆணாதிக்கக் கொடுங்கோண்மைகள் ஆகியவைகளை எதிர்த்து நின்று வதம் செய்த இந்த மூன்று பெண்களும் வழிப்பாட்டுகுறிய ராமர்களே எனும் புரிதலை ரசிகனுக்குத்  தருகிறது படத்தின் இறுதி காட்சியில் வரும் ராமன்-இராவணனை  வதை படலம். பெண்களின் விடுதலைக்கு எதிரான அனைத்திற்கும் ராவணனை குறியீடாகவும், அவர்களின் விடுதலைக்கான குறியீடாக ராமனும் காட்டப்படுகின்றனர்.

பெண்களின் நிர்வாணங்களை வெளிப்டையாகக் காட்டும் பார்ச் திரைப்படம் நிர்வாணமான விடுதலையை நோக்கி ஏங்கிக் கொண்டிருக்கும் பெண் மனங்களைப் பற்றி பேசுவதை லஜ்ஜோ-ராணி இருவரும் தங்களின் மேலாடைகளைக் கழற்றி அணைத்துக் கொள்ளும் காட்சியின்  வாயிலாக உணரமுடிகிறது. தாளாத ஏக்கங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை அணைத்தல் வழி பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த உணர்வின் பரிமாற்றம் ஓரினப் புணர்ச்சி உணர்வைக் கடந்து தொடுதலின்  ஏக்கத்தை ரசிகனின் உள்ளுக்குள் கடத்துகிறது.

 

1 comment for “பார்ச்: தரிசும் தாகமும்

  1. Viji
    July 17, 2017 at 8:56 am

    நல்ல விமர்சனம்!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...