மலேசிய இலக்கிய வரலாற்றில் வல்லினம்

dr.sivaகருவில் உதித்ததில் இருந்து வல்லினத்தை நான் பார்த்து வருகின்றேன். அதன் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வல்லினம் குறித்து எப்போது பேசினாலும் எனக்குள் ஒரு நிறைவும் சந்தோஷமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் தெரிகிறது. நானும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டில் இலக்கியம் குறித்து பேசிவருகிறேன். நான் பார்த்துப்பேசி பழகக்கூடிய மனிதர்கள் எல்லாம் கொஞ்சம் பழைய சிந்தனைகள் இருக்கக்கூடிய முதிர்ச்சியான மனிதர்களாக இருக்கிறார்கள்.  புதிய சிந்தனையுடன்புதிய பார்வையில் விஷயத்தைப் பார்க்ககூடிய தன்மை பலருக்கு மிகக்குறைவாக இருந்தது. அதை மரபு வழி சிந்தனை என சொல்லுவார்கள். இப்படியானதொரு காலக்கட்டத்தில்தான் இந்த இளைஞர் குழு உருவானது. ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடன் நான் நெருக்கமாக இருப்பதால் எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. வேறு விதமான பார்வைகள் சிந்தனைகள், முரண்கள், முரண்பாடுகள், அதனை எப்படி எதிர்கொள்வது என இந்தக்குழுவால் சிந்திக்க முடிந்தது. இலக்கியமும் வாழ்வும் மாறிக்கொண்டே வருகிறது. எனவே அந்த மாற்றத்தை இம்மண்ணில் எப்படி நாம் கொண்டு வர முடியும் என்றும் அதற்கு எப்படி மற்ற முதிர்ந்த தமிழகத்து எழுத்தாளர்களை நாம் அழைத்து வந்து அவர்களுடன் ஓர் உரையாடல் நடத்த முடியும் என்கிற எனது கனவை இந்த இளைஞர்கள் நிறைவேற்றி வந்தார்கள்;வருகிறார்கள்.

வல்லினத்தின் தொடக்கமே, எனக்கு மிகவும் பிடித்திருக்கிற தொடக்கம். எதற்காக என் மனம் ஏங்கிக்கொண்டிருந்ததோ அம்மாதிரியான சூழலில் இந்த இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். மலேசிய தமிழ் இலக்கியத்தை நாம் இன்னொரு பக்கத்துக்கு இன்னொரு தளத்துக்கு இன்னொரு பரிணாமத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையில் அதனை நிறைவேற்றும் உந்து சக்தியுடன் ஒருபுதிய பார்வையுடன் வல்லினம் வந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதுவரையில் வல்லினத்தின் வளர்ச்சி குறித்து நாம் சொல்லும் போது வல்லினம் இலக்கியம் சார்ந்த ஒரு குழவாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த இளைஞர்கள் இலக்கியம் சார்ந்த புற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பது வேறெந்த இலக்கிய குழுக்களும் மலேசியாவில் செய்யாததை இவர்கள் செய்திருப்பதாக சொல்லலாம். இது எனக்கும் பெருமையாக இருக்கிறது. அதில், புதிய நூல்களை வெளியீடு செய்வது, ஆவணப்படங்கள் தயாரிப்பது, இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்களை நிகழ்த்துவது போன்றவை முக்கியமான நகர்ச்சி.

இதுவரையில் தமிழ்நாட்டில் இருந்து இங்கு சினிமா மூலம் பிரபலமான எழுத்தாளர்களைத்தான் அழைத்துக் கொண்டு வருவார்கள். அவ்வாரானவர்களின் கூட்டங்களை இங்கு நடத்தி அந்த சினிமா நட்சத்திரத்தின் வெளிச்சத்தில், நிகழ்ச்சி நடத்துபவர்களும் தங்களை வெளிச்சத்தில் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளாகத்தான் இருந்ததே ஒழிய தீவிரமான இலக்கியம் பற்றி பேசக்கூடிய ஓர் இயக்கமாகவோ குழுவாகவோ இங்கு யாரும் செயல்படவில்லை. அந்த விசயத்தில் வல்லினம், கலாப்பிரியா, அ.மார்க்ஸ், தமிழவன், ஷோபா சக்தி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா, இமையம், பேராசிரியர் நுஃமான் என பல ஆளுமைகளை மலேசியாவிற்கு கொண்டு வந்து இலக்கியம் குறித்த உரையாடலை நிகழ்த்தியது  பாராட்டத்தக்கது. ஏனெனில் இவர்கள்தான் தீவிரமான இலக்கியம் குறித்து பேசுகின்றவர்கள். அதற்கான விழிப்புணர்வையும் மலேசிய  இளம் படைப்பாளிகளிடம் கொடுத்தவர்கள்.

அந்த விதத்தில் மலேசிய இலக்கியத்திற்கான வல்லினத்தின் சேவையாகவே இம்முயற்சிகளைச் சொல்லலாம், இலக்கியம் குறித்த அவர்களின் பார்வையும் செயலும் மிகவும் பாராட்டத்தக்கது. எழுத்து எழுத்தாளன், அவன் கொண்டுள்ள ஆளுமை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக வல்லினம் இருந்து வருகிறது. எழுத்தாளன் என்பவன் தன்னுடைய நூல் வெளியிடுவதற்காக பெரிய தனவந்தர்கள் காலில் விழுவதும் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் புகுந்து அவர்களின் தயவில் நிற்பதும் என சிறுமைப்பட்டுப்போய் இருக்காமல் அவனுடைய எழுத்திலும் அவனுடைய ஆளுமையிலும் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளம் எழுத்தாளர்களுக்கு வல்லினம் திரும்ப திரும்ப சொல்கிறது. ஏனெனின் எழுத்து எழுத்தாளன் எனும்போது சமரசம் இல்லாது சமூகத்துக்கும், சமூகத்தில் நடக்கக்கூடிய சீரழிவுக்கும் எதிர்த்து குரல் கொடுக்ககூடிய ஆளுமையும் தைரியமும் ஆண்மையும் இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் அதனை சமரசம் செய்து போகும்போது எழுத்தும் அதே மாதிரிதான் மொண்ணையாக இருக்கும். எழுத்திற்கும் எழுத்தாளனுக்கும் ஆளுமை மிக முக்கியம். சமரசம் காணாத, தான் சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லக்கூடிய, எழுத்தை ஒரு பண்டமாக்கி அதை விலைக்கு விற்பதற்கான எண்ணமில்லாமல் அதற்கான நேர்மையுடன் எழுத்தையும் எழுத்தாளனையும் பார்க்கக்கூடிய தன்மை எனக்கு மிகவும் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த விதத்தில் இந்த எழுத்தாளர்களின் எதிர்காலம் குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்ன விரும்புகின்றேனோ அதுவெல்லாம் என்னால் பார்க்க முடிகிறது. வல்லினம் மென்மேலும் வளர வேண்டும். வல்லினம் குறித்து பெருமையாக சொல்வதற்கு முன்பாக இனிவரும் காலங்களில் மலேசிய தமிழ் இலக்கியம் பற்றி யாரும் எழுதினால், வல்லினத்தை தாண்டி அவர்கள் எங்கும் சென்றிட முடியாது. வல்லினம் குறித்து பேசாமல் அதனை புறக்கணிக்கமுடியாது. அந்த அளவுக்கு இலக்கியத்தில் விமர்சனத்தில் புனைவில் என பலவற்றில் வல்லினம் தனது சிறப்பான ஆற்றலில் செயலில் நிறுவிக்கொண்டது என்பதை கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...