வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை

01கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

மேலும் சரவணதீர்த்தா முயற்சியில், மலாக்கா முதலமைச்சர் இந்நிகழ்ச்சிக்கென மலாக்காவில் இருந்து கோலாலம்பூருக்கு இலவச பேருந்து சேவையை வழங்கியிருந்தார். மலாக்கா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலவசமாக வழங்கவும் மலாக்கா முதலமைச்சர் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

14

மா.சண்முகசிவா

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ‘வல்லினம் 100’ களஞ்சியம் குறித்துப் பேசிய எழுத்தாளர் மா.சண்முகசிவா அதன் உள்ளடக்கத்தில் உள்ள புதுமைகள் பலவற்றையும் சுட்டிக்காட்டினார். சீன இலக்கிய அறிமுகம், பூர்வ குடிகள் இலக்கியம், மலேசியப் பத்திரிகை அரசியல் என பல புதிய களங்களை இந்நூல் கொண்டுள்ளதன் முக்கியவத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் வல்லினத்தில் 100 மாத பயணம் குறித்த ஆவணப்படம் (வல்லினம் வளர்ந்த கதை) ஒளிபரப்பப்பட்டது. செல்வன் இயக்கியிருந்த இந்த ஆவணப்படம் 35 நிமிடங்கள் ஒளிபரப்பானது. வல்லினத்தில் பயணம் குறித்து பலரும் அறிய இந்த ஆவணப்படம் துணைசெய்தது. வல்லினத்தில் இத்தனை கால வளர்ச்சிக்குத் துணை நின்றவர்களின் நினைவுகள் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டதோடு சமகாலத்தில் அதன் முயற்சிகளுக்குத் துணை நிற்பர்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.

ம.நவீன்

ம.நவீன்

தொடர்ந்து, வல்லினம் இணைய இதழின் ஆலோசகர் ம.நவீன் உரையாற்றினார். இளைஞர்கள் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும்போது அதன் தொடர் நகர்ச்சிக்கான பண உற்பத்தி விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் எனச்சொன்னவர் வாசகர்களும் பிரமாண்டமாகக் காட்டப்படும் எதுவும் சிறந்தது எனும் மனப்பக்குவத்திற்குள் செல்லக்கூடாது என வழியுறுத்தினார். பிரமாண்டங்களுக்குப்  பின் உண்மையான உழைப்பும் முன்னெடுப்பும் இருந்தால் மட்டுமே அதை வரவேற்க வேண்டும் எனக்கூறியவர் வல்லினம் குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். மேலும் வல்லினம் 100 தயாரிப்பின் தன்னை பிணைத்துக்கொண்ட வடிவமைப்பாளர் தென்னரசுவையும் அரங்கின் முன் அழைத்தார். இவ்வாறு வல்லினம் குழுவினர் மேடையில் சூழ வழக்கறிஞர் பசுபதி அவர்களை நூலை வெளியீடு செய்தார்.

02

பசுபதி சிதம்பரம்

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் பசுபதி அவர்கள் சமூகத்தின் சமகாலப் பிரச்னை குறித்து பேசினார். நாட்டில் அண்மையில் சமயப்பள்ளியில் நடந்த தீவிபத்தில் பலியான 2 பொறுப்பாளர்கள் மற்றும் 21 மாணவர்கள் மட்டும்தான் உண்மையில் பலியானவர்களா எனச் சிந்திக்க வேண்டும் எனக்கேள்வியெழுப்பிய அவர், அந்தத் தீ விபத்தை நிகழ்த்திய குற்றவாளிகளாகக் கருதப்படும் இளைஞர்கள் அவ்வாறு செயல்பட சமூகமும் ஒரு காரணம் என்றார். அவ்வகையில் தன் பார்வையில் குற்றவாளிகளாகக் கருதப்படும் இளைஞர்களும் பலியாக்கப்பட்டவர்கள் என்றார். ஒரு நிகழ்வை இவ்வாறு பல கோணங்களில் பார்க்கும் ஆற்றலை இலக்கியம் வழங்குகிறது. வல்லினம் போன்ற இயக்கங்கள் இந்தச் சிந்தனையை வழங்குவதை தான் முக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

‘வல்லினம் 100’ களஞ்சியத்தில் இடம்பெற்றிருந்த படைப்புகள் குறித்த விமர்சன அங்கம் இடம்பெற்றது. சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்களான சிவானந்தன், உமாகதிர், ராம் சந்தர் ஆகியோர் முறையே விமர்சனக்கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள் குறித்து தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மலேசிய எழுத்தாளர் இளம்பூரணன் கிராமணி ஆய்வு கட்டுரைகள் தொடர்பாகத் தன் விமர்சனத்தை முன்வைத்துப் பேசினார்.

சிவானந்தன் நீலகண்டன் உரைஹ்ஹ்

ராம் சந்தர் உரை

இளம்பூரணன் கிராமணி உரை

உமா கதிர் உரை

தொடர்ந்து வல்லினம் வளர்ச்சிக்குப் பலகாலமாகத் துணை நின்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. எழுத்தாளர் மா.சண்முகசிவா அப்பரிசுகளை எடுத்து வழங்கினார்.

0304

நிகழ்ச்சியில் பலரும் காத்துக்கொண்டிருந்த வல்லினம் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பத்தி எழுத்துக்காக ஈப்போவைச் சேர்ந்த கலைசேகர், கட்டுரைக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மணிமாலா மதியழகன் ஆகியோருக்கு தலா 1000 ரிங்கிட் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்ற சிறுகதைகளில் பலவும் சிறந்தவையாக இருந்ததால் எழுத்தாளர் கோணங்கி மூன்றாவது பரிசுக்கு ஐஸ்வரியா மற்றும் கி.இ.உதயகுமாரி சிறுகதைகளையும் இரண்டாவது பரிசுக்கு செல்வன் காசிலிங்கம் சிறுகதையையும் தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு முறையே 500 ரிங்கிட் மற்றும் 750 ரிங்கிட் என யாழ் பதிப்பகத்தால் வழங்கப்பட்டது.  சிறுகதைக்கான முதல் பரிசை எழுத்தாளர் எஸ்.பி.பாமா தட்டிச்சென்றார். அவருக்கு பரிசுத்தொகையான 1000 ரிங்கிட்டை மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழங்கியது. பரிசளிப்பு வீடியோவைக் காண

17எழுத்தாளர் கோணங்கி தனது சிறப்புரையில் ஒவ்வொரு சிறுகதைகள் குறித்தும் பேசினார். அதன் சிறப்பாம்சங்களை உலக இலக்கியப்போக்குடன் ஒப்பீடு செய்து பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் விளக்கியது பலரையும் கவர்ந்தது. தமிழ்ச் சிறுகதைகள், சிற்றிதழ் சூழல், கல்குதிரை இதழ் என அவரது பேச்சு பல தளங்களையும் தொட்டுச் சென்றது.

நிகழ்ச்சி சரியாக 5.15க்கு நிறைவு பெற்றது. வந்திருந்த அனைவரது முகத்திலும் புதிய உற்சாகம் தெரிந்தது. அது மலேசிய நவீன இலக்கியத்துக்கான உற்சாகம் என எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...