வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்

ஹ்வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.  ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே  வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம்  என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத்  தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற விழாக்களினால் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிவிடுகிறது. ஆசி வழங்குவதை விட நமக்கு அங்கே வேறு வேலை ஏதும் இல்லை. ஆனால், பண்பாட்டின் கற்பிதத்தால் ஒரு ஸ்தூல வடிவமாக அங்கே இருக்க வேண்டியது ‘பெரிய மனுஷன்’ கடமையாகிவிடுகிறது.

அ.பாண்டியனிடம்  எனக்கொரு வல்லினம் 100-ஐ வாங்கி வரும்படி சொல்லியிருந்தேன். கோணங்கியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து வல்லின நிகழ்ச்சியின் மறுநாளே அதனை கையில் கொடுத்துவிட்டார். ஒரு வளர்ப்புப் பிராணி தாவி வந்து ஏறிக்கொள்வது போன்ற உணர்வெழுச்சியும்  குதூகலமும் உண்டானது. தடிமனான அட்டையில் கைப்பிடியிலிருந்து நழுவிவிட முடியாத  பிடிமானத்தை அது தன்னகத்தே கொண்டிருந்தது.  ஒரு வாசகனுக்கும் விருந்துடன் தன்னைத் திறந்து காட்டத் துடித்துக்கொண்டிருந்த அட்டை. மென்மையான சிவந்த அட்டையில் மேலெழும்பி நின்ற  100 என்ற இலக்கு,  வல்லின இதழ்கள் எட்டிப்பிடித்த எண்ணிக்கையைத் தாண்டி  அதன் அடைவுநிலையின் குறியீடாகவும் பார்க்கிறேன். 100 என்ற எண்ணுக்கு மேல் பறக்கும் இறக்கை கோடு, வல்லினத்தின் அடுத்தடுத்த பரிமாணத்தின் குறியீடு என்றும் மனித விடுதலைக்கு வித்திடும் நவீன இலக்கியத்தின் இலக்கு என்றும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த  140 ஆண்டுகளில், மலேசிய தீவிர இலக்கியம் அழுத்தமான தடத்தைப் பதிக்க முடியாமலேயே போனது.  கோலாலம்பூரில் ஒரு குழு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தோன்றி நீட்சி காணாமலேயே  சோர்ந்து போனது  தீவிர இலக்கியச் செயல்பாட்டுக்கு நேர்ந்த ஓர் அவலம். டாக்டர் ரெ. கார்த்திகேசு, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது போன்றவர்கள் உண்டாக்கிய சிறு குழுவும் அது முன்னெடுத்த சிற்றிதழும் இலக்கிய வரலாற்றில் சிறு புள்ளியளவே. அதன் உடனடி தொடர்ச்சி, ‘தமிழ் மையமிடும்’ கோலாலம்பூரில் கூட நடைபெறவில்லை. அதற்குப் பிறகு ஒரு பத்தாண்டு முடிந்து மா.சண்முகசிவா, சை.பீர், டாக்டர் ரெ.கா, பாதாசன் போன்றவர்கள் ஆரம்பித்த ‘அகம்’ குழுமம்  சிறுகல் பட்ட சிறு ஓசையோடு நீட்சியற்று நின்றுபோனது.  மரபின் மகத்துவத்தை விட்டு இறங்கி வந்து, புதுக்கவிதை வடிவத்தைக்கூட அங்கீகரிக்காத  யாப்பிலக்கணக் கவிதையைச் சார்ந்த சிறு கூட்டம் நவீன இலக்கிய முன்னெடுப்பை முற்றிலும் நிராகரித்தது என்று டாக்டர் சண்முக சிவா சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

ஞாயிற்றுக் கிழமை இலக்கிய ஏடுகள் முன்னெடுத்ததெல்லாம் வெகுசன இலக்கியத்துக்கும் குறைந்த ஒன்றே.  எழுபதுகளிலும்  புத்தாயிரத்தின் தொடக்கத்திலும் இந்த வெகுசன ஏடுகளின் வாசகர் எண்ணிக்கை அதிகம். எழுத்தாளர் எண்ணிக்கையும்தான். ஆனால் அவை வணிக நோக்கோடு செயல்பட்டதால்  இலக்கிய முன்னெடுப்பில் தீவிரத்தைத் தொடவில்லை. இன்றைய நிலை இன்னும் மோசமாகிவிட்டது. தங்க மோதிரமும் ரொக்கப் பரிசுகளும் வெகுசன இலக்கியத்தை விடவும் தரம் குன்றிய ஒன்றையே திரும்பத் திரும்ப  வாசிக்கக் கொடுத்து வருகிறது. இதற்கு   நவீன இலக்கியம் சார்ந்த புரிதல் இந்த வெகுசன இதழ்களுக்குத் தெரியாமல் இருந்ததே முக்கியக் காரணம் என்றே சொல்வேன். நவீன இலக்கியப் பிரக்ஞை  பரவலாக வாசகப் பரப்பைச் சென்றடைய வைக்கும் இவ்வகை ஏடுகளுக்கே இல்லையென்றால் அது படைப்பாளனை எப்படி அசைத்து முன்னகர்த்தும். ஏனெனில் அன்றைக்கு அதிகமாக ஞாயிற்றுக்கிழமை இலக்கிய ஏடுகளையே  எழுத்தாளர்கள் நம்பவேண்டியிருந்தது.  வார மாத ஏட்டின் நிலையும் இதேதான். ஞாயிறு இலக்கிய ஏடுகளுக்கு ஆசிரியர்களாக வருபவர்கள் பத்திரிகைத் துறையில் நிருபராக, சங்கச் செய்தி ஆசிரியராக, நியூஸ் எடிட்டராக, விளம்பர பொறுப்பாசிரியர்களாக, இருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று இலக்கிய இதழாசிரியர்களானவர்கள். புனைவெழுத்தின் நுணுக்கத்தை ஆழ்ந்தறியாத இவர்களிடன் நவீன இலக்கியம் சார்ந்த புரிதலுக்குள் நுழைய முடியவில்லை.  அவர்கள் கைவண்ணங்கள், பிரசுரத் தேர்வுகள், பிற ஏடுகளிலிருந்து செய்யும் பதிவிறக்கம் போன்ற செயற்பாடுகள் இலக்கியப் பிரக்ஞயைக் கட்டியம் கூறுகின்றன. அப்படியே மாற்று இலக்கிய முயற்சிகளைப் படைத்து  இவர்களுக்கு அனுப்பும்போது அது அவர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி  அவர்களைக் கடந்து வர முடியாமல் சுவரில் மோதி ஸ்தம்பித்து விடுகிறது. “இதெல்லாம் பத்திரிகையில் போட முடியாது.” என்ற எதிர்க்குரலே வெகுசனச் சுவரில் மோதிச் சரிந்துவிடுகின்றது. எனவே இங்கே நவீன இலக்கியச் செயல்பாடு நடைபெறாமலேயே போய்விட்டது. இது இணையச்சேவை பரவலாகக் கிடைப்பற்கு முன்பான நிலை.

எழுபதுகளில்  இலக்கியச் செயல்பாடு எந்த நிலையில்  இருந்தது என்பதற்கு சுந்தர ராமசாமியின் சிங்கை மலேசிய வருகை அழுத்தமான ஒரு முடிவைப் பதிவு செய்கிறது. நான் எதேச்சையாக  கலாப்ரியாவின் முகநூலைப் பார்வையிட்டபோது  சுந்தர ராமசாமி கலாப்பிரியாவுக்கு எழுதிய ஒரு மடலைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். சு.ரா மலேசிய சிங்கை இலக்கியம் ஜனரஞ்சகம் சார்ந்ததாக இருந்தது என்றும் இருநாடுகளிலும் இலக்கியத் தரம் சைபர் நிலையிலேயே இருக்கிறது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  நம் மலேசியத் திறனாய்வாளர்களின் கருத்துக்கு எதிரான கருத்து இது. எழுபதுகளில்தான் இங்கே புனைவிலக்கியம் குறிப்பாகச் சிறுகதை மரபுக்கவிதை இலக்கிய வடிவம் உச்சத்தில் இருந்தது என்ற கருத்தியலை உடைத்து நொருக்குகிறது சு.ராவின் இந்த அபிப்பிராயம். நான் சு.ராவின் இக்கருத்தை மலேசிய இலக்கிய அடைவு நிலையின் அளவீடாக வைத்துப் பார்க்கிறேன். இதே காலக்கட்டத்தில் சிங்கை சிறுகதைப் போட்டிக்கு நடுவராக அழைப்பட்டிருந்த சு.ரா ஒரு கதையைகூட  பரிசுக்குத் தேர்வு செய்ய முடியாது என்று கறாராக கை கழுவிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஆனால் இந்த 2017 ஆண்டு வல்லினம் 100 நூல் மூலமும் அதற்கு முந்தைய அதன் தீவிர செயல்பாட்டின் மூலமும் ஜெயமோகன், அ.மார்க்ஸ், எம்.ஏ. நுக்மான், ஷோபா சக்தி போன்றவர்களின் கருத்து மலேசிய தீவிர இலக்கியத்தின் ஒரு புதிய தொடக்கம் எனக் குறிப்பிடுகிறது. அதிலும் தமிழவன், வல்லினம் மலேசிய  நவீன இலக்கியத்தின் ஒற்றை முகம் என்று சொல்கிறார். ஒற்றை என்ற சொல் இதற்கு முன்னரான சராசரி நிலைப்பாட்டைச் சுட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில் வல்லினத்தின் இடைவிடாத  செயல்பாட்டின் காரணமாக  இந்தச் சொற்சான்றிதழை அது பெற்றிருக்கிறது. பொதுவாகவே நம் இலக்கியச் செயல்பாட்டுக்குத் தமிழகம் முத்திரை வழங்க வேண்டும் என்ற நம் ஏக்கம் இதனால் சாத்தியமாகியிருக்கிறது என்பது நற்செய்தியே.

வல்லினம் 100இல் .நான் முதலில் கட்டுரைகளைத்தான் வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு எது உவப்பானதோ அதனைபற்றிக்கொண்டு அடுத்தடுத்து நகர்வதையே என் இலக்கிய மனத்தின் கட்டளை. இதற்கு முந்தைய ஆண்டுகளில், வல்லினம் சில தேர்ந்த பெண் எழுத்தாளர்களை அடையாளம் காட்டியே வந்திருக்கிறது. பெண்ணிய எழுத்து வகையை இவர்கள் அழுத்தமாகப் பதிவிடுவார்கள் என்ற அறிகுறி இது துலக்கமாகக் காட்டியது. அவர்கள் வளர்ச்சியை நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்கள் துவக்கம் அதனை மெல்ல நிறுவிக்கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவராய் வல்லினத்திலிருந்து இல்லாமல் போனது வருத்தம் அளித்தது. மலேசியாவின் பெண் எழுத்தின் துவக்கம் என்று இதை நான் கருதிய வேளையில் இந்தப் பின்னடைவு  ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஆனால் விஜயலட்சுமியின் எழுத்து இந்த இழப்புகளை மெல்ல நிவர்த்தி செய்து வருகிறது. அவருடைய சமீபத்திய எழுத்துகள் அதிலும் யாரும் தொடாத ஆங்கில படைப்பிலக்கியப் பக்கம் திரும்பி, கே.எஸ்.மணியம் போன்ற ஆளுமைகளை மீட்டுருவாக்கம் செய்திருப்பதானது  விஜயாவின் தனித்துவத்தைக் கட்டியங்கூறுகிறது. மலேசிய சில பெண் இலக்கியவாதிகளின் கூச்சல் மிகுந்த இலக்கியச் செயல்பாடும், அவர்கள் தூக்கிப்பிடித்த பெண்ணிய தீப்பந்தங்களும் நெருப்பணைந்த வெற்றுப் பொறிகளையே உதறிக்கொண்டிருந்ததே ஒழிய அழுத்தமான பதிவை இதுவரை  வாசிக்கக்   கொடுக்கவில்லை. பெண்ணியம் என்ற சொல் மட்டுமே உரத்து ஒலித்தது! அதனை நோக்கிய ஆய்வோ தீவிரமோ இல்லை இவர்களிடம்.

விஜயா எடுத்துக் கொண்ட கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள், நாவல்களின் விமர்சனம் அவர் வாசிப்பு விரிவையும், நுண்ணோக்கையும்,  விமர்சன முகத்தையும் தெளிவாகவே காட்டுகிறது. என் இளமைக் காலத்தில் கே.எஸ்.மணியத்தில் சிறுகதை ஒன்று ஆங்கில ஏடான ஸ்டேரெய்ட்ஸ் டைம்சில் வாசித்திருக்கிறேன். அது தேசிய ரீதியில் நடந்த  ஆங்கில சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்று பிரசுரமாகியிருந்தது. அதன் பிறகு நான் அவரைத் தேடிப் போகவில்லை. காரணம் தமிழ்போல எளிதாகக் கைக்குக் கிடைக்காததே காரணம். கே.எஸ் மணியத்தின் எழுத்து புலம்பெயர்   சமூகத்தை மைய மிடுவதையும், தேசிய நீரோட்டத்தில் அதனைக் கலக்கவிடாது கரையிலேயே நிற்பதையும் அவர் எழுதிச் செல்கிறார். அதே வேளையில்  எழுபதுகளிலேயே ‘பெண்டாத்தாங்’ என்ற பிற சமூகம் பாவிக்கும் இழிசொல்லை வைத்தும் எழுத்தைத் தந்ததானது அவரின் தீவிர எழுத்துச் செயலைக் கூறுகிறது. விஜயா பெண்டாத்தாங் போன்ற சொற்பிரயோத்தின் பாதிப்பை தன் விமர்சனத்தினூடாகப் பயன்படுத்துகிறார். ‘இந்நாட்டை தனது தாய்நாடாகக் கருதும் ஒருவன் ’வந்தேறி’ என  ஒதுக்கப்படுவதால், அவன் தொடர்ந்து தனக்கான அடையாளத்தை மட்டும் கட்டமைக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் முற்படுவான்’ என்கிறார். இது அவருடைய கண்டடைதல்.  இந்த அறுபது ஆண்டுகளாக இந்த அடையாளச் சிக்கல் சார்ந்த பின்னடைவை அச்சத்தோடு கடந்தே வந்திருக்கிறோம்.  சிறுபான்மை இனங்களின் தாய்மொழிக் கல்வியையும், பண்பாட்டு விழுமியங்களையும் கலையெடுக்கும் அரசின் போக்கை  சீன இந்திய சமூகம் எதிர்க்குரல் வழி சமாளித்தே வருகிறது. இதைத்தான் விஜயா குறிப்பிடுகிறார். தமிழ் மொழியின் ஊடாக  இன ஒற்றுமை சார்ந்து சொல்லப்படும் புனைவெழுத்தை விடவும் கே.எஸ் மணியம் போன்றவர்களின் ஆங்கில மொழி ஊடாக சொல்லப்படும் பிரச்னைகள் அரசின் சுவரில் சிறு வெடிப்பையாவது நிகழ்த்தும்.  கே.எஸ்.மணியத்தை நமக்கு அறிமுகம் செய்த விஜயா தன் தீவிரத்தைத் தொடர்ந்து தருவார் என நம்புவோம்.

க.கங்காதுரையின் ‘தோங் ஜியாவ் சோங்:ஓர் அறிமுகம்’  இன்னொரு முக்கியமான கட்டுரை.  சீன மொழிக்கல்வியையையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் எந்தவித சமரசத்துக்கோ அரசின் கெடுபிடிகளுக்கோ விட்டுக்கொடுக்காத தன் சமூகத்தின்  போராட்டக்  குரலாக தீவிரமாக இயங்கும் தோங் ஜியாவ் சோங் இயக்கம் செயல்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை. சீன இனம், மலாய் இன மக்கள் தொகைக்கு அடுத்த நிலையில் இருக்கும் இனம். கிட்டதட்ட மலேசிய மக்கள்தொகை எண்ணிக்கையில் 30 விகிதத்தினர் சீனர்கள். இந்திய சமூகத்தின் மக்கள் தொகை எட்டு விகிதத்தை எட்டவில்லை. முப்பது விகிதத்தினராக இருந்து தங்களின் நிலைபாட்டை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு pressure group ஆக இருந்து இந்த அறுபது ஆண்டுகளாய்ப் போராடி வருகிறது. அதில் அவர்களின் மொழி பண்பாட்டு விழுமியங்களை நிலைநாட்டிக்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஏதோ அவர்கள் புண்ணியத்தால், பிற இன பட்டியலில் நம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருப்பதால்  தமிழ்க்கல்வியையும் பண்பாட்டு விழுமியங்களையும் இதுநாள் வரை ஓரளவுக்கு நிலைநிறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம்.  இந்த நீண்ட ஆய்வுக்கட்டுரையைப் படித்தவுடன் நமக்கு இப்படிப்பட்ட pressure group இதுநாள் வரை உருவாகி வரவில்லை என்ற ஏக்கம் உண்டாகிறது. ஹிண்ட்ராப் போன்ற அமைப்புகள் ஒட்டுமொத்த நிலையில் இருந்து சமூக மேம்பாட்டுக்குக் குரல் கொடுத்தாலும் தமிழ்க் கல்விக்கும் பண்பாட்டுக்கும் தனியான ஓர் இயக்கம் நம்மால் முன்னெடுக்க முடியவில்லை என்பது எத்துணை இழுக்கு! அதற்கான சிறு சிறு முயற்சிகள் நடந்தன. ஆனால் அரசியல் இந்தியப் பிரநிதித்துவத்துக்கு இதுபோன்ற எதிர்க்குரல் ஊறு விளைவித்துவிடும் என்ற அச்சத்தில் இந்தக் குரல்கள் தொடக்க நிலையிலேயே நெரிக்கபட்டுவிட்டன அல்லது மான்யம் என்ற வாய்க்கரிசி வாய்களை அடைத்துவிட்டன.

நேர்காணல்களில் மலேசிய சினிமா சார்ந்து சஞ்சை குமாரின் ‘நான் திரைப்படத்தின் வழி கேள்விகளை உருவாக்குகிறேன்‘ நமக்குள்ளும் சில கேள்விகளை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே மலேசிய தமிழ்ச் சினிமா நமக்கு மிகுந்த சோர்வை உண்டாக்கிவருகிறது. தமிழகச் சினிமாவை ‘போலச் செய்தலும்’  மிகை நடிப்பால் ரசிகனை இம்சிப்பதும், கதை உருவாக்கத்தில் கவனம் செலுத்தாமையும், உச்சரிப்பில் பிசகுவதும், மண்ணின் மணம் இல்லாமையும்,எல்லாவற்றுக்கும் மேலாகக் கலைத் தன்மை குன்றிய காரணத்தாலும்,நம்மை அதிலிருந்து தூரப் படுத்திவிடுகிறது.  வானொலி டி ஜே வாகப் புகழ் பெற்றுவிட்டால் உடனே நாயக நாயகியாகத் திரையிலும் தோன்றி  ரசிகனின்  பொறுமையைச் சோதிப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர்கள் தயாரித்த சினிமா தோல்வியடைந்துவிட்டால் தமிழனிடமிருந்தே  தமிழ் சினிமா முயற்சிக்கு ஆதரவு இல்லையென்று தோல்வியின் திசையை நம் பக்கம் திருப்புவது நடந்தே வருகிறது.இதற்கெல்லாம் மாற்றுச் சினிமாவாக’ ஜகாட்’டைத் தந்து நம்மை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் சஞ்சய். தேசிய விருது மலாய்ப்படத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற போர்க்குரலை அப்புறப்படுத்தி ஜகாட்டை கௌரவித்திருப்பானது,  மண்ணின் அசல் தன்மையையும் தீவிரச் செயல்பாட்டையும் அங்கீரித்து சஞ்சை என்ற நவீன முகத்தை காட்ட உதவியது. ஒரு இடத்தில் ஒரு மலாய் நண்பர் சொல்லும் வாக்கியம் இங்கே நினைவு கூர்கிறேன். மலாய்க்காரர்கள் போலவே நலிந்த இந்திய சமூகத்துக்கும் நிலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அரசு உங்களுக்கு ஏதும் செய்யாமல் கைவிட்டுவிட்டது என்று சொல்வதாகப் பதிவிடுகிறார். ஒரு முறை நான் பேங்க் ரக்யாட் வங்கிக்குப் போயிருந்தேன். அன்றைக்கு நிறைய மலாய்க்காரர்கள் இருந்தார்கள். ஏன் இன்றைக்கு இவ்வளவு கூட்டம் என்று விசாரித்தபோது, ஒருவர் சொன்னார் இன்றைக்கு 15 விகிதம் டிவிடன் கொடுக்கிறார்கள். நீயும் அதற்குத் தானே வந்திருக்கிறாய் என்று கேட்டார். நான் இல்லை 15 விகிதம் டிவிடண்ட் என்பது மலாய்க்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு வாய்ப்பு. அப்படியா உங்களுக்கு அப்படியேதும் அரசு செய்து தரவில்லையா என்று வியப்போடு  கேட்டு வைத்தார். பெரும்பாலான மாலாய்க்காரர்களுக்கு  அரசு நம்மினத்தை ஓரங்கட்டியது தெரியாமலே இருக்கிறது. பிற மொழிவெகுசன ஊடகங்கள் இதனை விரிவாக  எழுதவில்லை.  ஜகாட் பார்த்தபின்னரே ஒரு சிறுபான்மை இனத்தை கண்டுகொள்ளாமை பரவலாக்கப்பட்டிருக்கிறது.  ஜகாட்  சென்றடைந்த தூரம் பிற ஊடகங்காளால் சாதிக்க முடியாத ஒன்றுதான். சஞ்சையின்  இப்படத்தை வெற்றியடையச் செய்தது பிற மலேசியத் தமிழ் சினிமாக்கள் பக்கம் திரும்பாத அதே ரசிகர்கள்தான் என்று யோசிக்கும் போது மலேசியர்களின் ரசிப்புத் தன்மையில்  எந்தக் குறைபாடும் இல்லையென்றே சொல்லலாம்.

பிற நேர்காணல்களும் போராட்ட குணத்தையும், உள்முகத்தையும் பதிவு செய்திருக்கிறது.

பத்திகளில் அ.பாண்டியனின்’ புகை சூழ் உலகு’, ம.நவீனின் ‘கச்சடா பேச்சு’, கங்காதுரையின் ‘அடையாளம்’,  தயாஜியின் ‘நல்ல புழுதியும் நலங்கெட்ட வீணையும்’தீவிர எழுத்து கோறும் படைப்பாளனின் நிதர்சன முகத்தை நமக்குக் காட்டுகிறது.  இவை சுவாரஸ்யமான வாசிப்பைக் கொடுத்தன.

ம.நவீனின்  ‘மசாஜ்’ சிறுகதை முன்னரே வாசித்திருந்தாலும், அதனை மறுவாசிப்புக்கு எடுத்துக்கொண்டபோது மேலும் சில திறப்புகளைக் காட்டியது.  பிற வரிய ஆசிய நாடுகளிலிருந்து,  கூலித் தொழிலாளிகளாக இறக்குமதி செய்து கொத்தடிமைக்கு ஆளாகும் ஒரு இளம் தாயின் கதை.  இது சற்று புதிய கதைக் களம்.  இங்கே இன்னும் சரிவர எழுதப்படாத அபலைப் பெண்களின் உண்மை நிலை. வல்லினம் அறிமுகப்படுத்திய சிறுகதை ஆசிரியர்களில், செல்வம் காசிலிங்கம் ஒரு குறிப்பிடத்தக்கக் கதை சொல்லியாகப் பரிணமிக்கிறார். கதைக்குள் வாசகனுக்கான இடைவெளி விடும் உத்தி தொடக்க நிலை படைப்பளருக்கு எளிதில் கூடி வராது. ஆனால் செல்வம் அதன் நுட்பத்தை அறிந்து வைத்திருக்கிறார்.

சில மூத்த எழுத்தாளர்களின் கதைகள் என் எதிர்பார்ப்பை சோர்வடையச் செய்தது. அவர்களிடம் கதைகளை வல்லினம் விரட்டி வாங்கியிருக்கக் கூடும். அதன் பாதிப்பை இவர்கள் கதைகளில் பார்த்தேன்.

ம.நவீனின் ‘கவிதை என்பது’ என்ற தலைப்பிட்ட கவிதை மனுஷ்ய புத்திரன் எழுத்து வகைமையை நினைவு படுத்துகிறது.

‘பூச்சாண்டி’ கவிதையில் கவித்துவமிக்க வரியாக, கீழே உள்ள வரிகளைச் சொல்வேன்.

நான் தொடர்ந்து மாயாவுக்காக

பூச்சாண்டியாக வேண்டியிருந்தது

அவள் பூச்சாண்டியினால்

தேவதையாக உலாவுவதால்.

லதாவின்,

ஊஞ்சலில்

இன்னம்

ஒட்டிக்கொண்டிருக்கிறாள்

சற்று முன் ஆடிச் சென்ற

சிறுமி

என்ற வரிகள்  அழகான படிம அலைகளாக மோதிச் செல்கிறது வாசக மனதில்.

இந்நூல் பிழையறத் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆறுதலான விடயம். நான் பதிப்பித்த என் நூல்கள் ஒவ்வொன்றும் பத்து முறைக்கு மேல் மெய்ப்புப் பார்த்திருக்கிறேன். அப்படியும் கண்களை ஏமாற்றிவிடும். எழுத்துப் படிவங்களில் கருத்துப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும்  நீக்க தொகுப்பாசிரியரும், பதிப்பாசிரியரும், ஆசிரியர்களும் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அது அவர்களுடைய கடமைதானே என்று எளிய சொற்களால் கடந்து விட முடியாத நேர்த்தியான உழைப்பு. படைப்பாளர்களிடமே சில முறை சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி வேலைகளை முடித்ததும் இங்கே சொல்லியாக வேண்டும்.

நவீன இலக்கியம் சார்ந்த எழுத்தின் தொடக்க முகமாக வல்லினத்தின் அழுத்தமான, சமரசமற்ற பதிவாக இதனைப் பார்க்கிறேன்.  தமிழ் கூறு நல்லுலகத்தின் மலேசிய நிலப்பகுதி இலக்கியம் மீதான கீழான அபிப்பிராயங்கள் கலையும் அரிய தருணமாகவும்  இந்நூலை மதிப்பிடுகிறேன். மலேசிய சிங்கை முழுதும் தீவிர எழுத்தின் முகங்களை தேடி அலைந்து தேர்ந்து எடுத்த மெனக்கெடலும் பாராட்டத்தக்கது.

இறுதியாக, வல்லின இணைய பக்கத்தில் வாசித்த சில படைப்புகளை மீண்டும் வாசிப்பது சோம்பல் மனநிலையை உருவாக்குகிறது. இது ஒரு வரலாற்று ஆவணம் என்பதால் மலேசிய மண்ணின் மேலும் சில தேர்ந்த எழுத்தாளர்களின் நல்ல படைப்பைக் கேட்டு வாங்கியிருக்கலாம். அவர்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

தன் படைப்பு இடம்பெறவில்லையே என்ற ஓர் அபுனைவு எழுத்தாளர் ஒருவரின் கூக்குரல் வல்லினம் 100இன் தரத்தை  அழுத்தமாகவே நிறுவிவிடுகிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...