16.9.2018இல் சென்னையில் அமைந்துள்ள இக்சா மையத்தில் வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகம் இணைந்து மூன்று நூல்களின் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ (மலேசிய – சிங்கை ஆளுமைகளின் நேர்காணல்கள்), போயாக் (ம.நவீன் சிறுகதை தொகுப்பு), ஊதா நிற தேவதைகள் (இரா.சரவணதீர்த்தாவின் சினிமா கட்டுரைகள்) ஆகிய மூன்று நூல்களின் விரிவான அறிமுகம் செய்யப்பட்டது.
பி கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜீவகரிகாலன் நிகழ்ச்சியின் தேவை குறித்தும் இரு பதிப்பகங்களின் இணைவு குறித்தும் அதன் தேவை குறித்தும் பேசினார்.
ஊதா நிற தேவதைகள் தொகுப்பு குறித்து கவிதைக்காரன் இளங்கோ பேசினார். நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முன்வைக்கும் சினிமா குறித்தும் இரா.சரவண தீர்த்தாவின் அரசியல் பார்வை குறித்தும் அவரது உரை இடம்பெற்றது. (உரையைக் காண) தனது நூலுக்கான ஏற்புரை வழங்கிய சரவணதீர்த்தா கட்டுரைகள் உருவான சூழலையும் அது செறிவாக்கம் காணும் பணியையும் விரிவாக விளக்கிப் பேசினார். (உரையைக் காண)
‘போயாக்’ சிறுகதை குறித்து எழுத்தாளர் சு.வேணுகோபால் உரையாற்றினார். அந்நூலுக்கு அவர் முன்னுரை கொடுத்திருந்தாலும் முற்றிலும் புதிய கோணத்தில் அவர் நூலை அணுகி தனது பர்வையை முன்வைத்தார். போயாக், யாக்கை, வண்டி ஆகிய சிறுகதைகளை வெகுவாகப் பாராட்டிய அவர் ம.நவீன் புனைவுகளில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.(உரையைக் காண)
எழுத்தாளர் ஜெயமோகன் ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூல் குறித்து தனக்கே உரிய பாணியில் விமர்சனத்தின் தேவை என்ன என்பதில் இருந்து தொடங்கினார். அத்தகைய விமர்சனப் போக்கில்லாத மலேசிய சிங்கை சூழலில் இலக்கியம் எவ்வாறான பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்றும் விமர்சனங்கள் வழி ஒரு சரியான தரமான படைப்பாளிகளைப் பட்டியலிடும் முன் உருவாகியிருக்கும் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய நூல் ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ எனவும் அவரது பேச்சின் சாரம் இருந்தது. (உரையைக் காண)
இரு நூல்களின் ஆசிரியரான ம.நவீன் ஏற்புரை நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்றது. மலேசியாவில் மூத்தப்படைப்பாளிகளிடம் இல்லாத விமர்சனப் போக்குக் குறித்து பேசிய அவர் அது தனக்கு மணணுளிப்பாம்பை நினைவுப்படுத்துவதாகக் கூறினார். சீற்றம் இல்லாமல் அடங்கி போகும் குணம் சூழலுக்கு எத்தனை நன்மை செய்தாலும் கலை வெளிபாட்டுக்கு ஒருவகையில் அது போதாமையைக் கொண்டுள்ளது என அவரது உரையில் குறிப்பிட்டார். (உரையைக் காண)
நன்றியுரையை வேல் கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சி இரண்டரை மணி நேரத்தில் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவு கண்டது.