என் தாத்தாவுக்கு, மீன் தூண்டிலொன்று வாங்க…

9780007170395FSமீன்பிடி உபகரணங்கள் விற்கும் புதிய கடையொன்றை கடந்து செல்கிறேன். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட தூண்டில்கள், தாத்தாவை நினைவூட்ட, அவருக்கு ஒன்று வாங்க வேண்டுமென எண்ணுகிறேன். இறக்குமதி செய்யப்பட்டதென முத்திரை பொறித்த ஒரு பத்துப் பாகங்களைக் கொண்ட தூண்டிலொன்று. பத்துப் பகுதிகளும், ஒன்றின் மேல் மற்றொன்று படிந்து, அநேகமாய், இறுதியில் ஒரு துப்பாகியின் பிடி போன்றமைந்த, அந்த கறுப்பு குழலுக்குள் உள்வாங்கி, மறைந்துவிட்டிருந்தது. அதுவொரு நீளமான துப்பாக்கிபோல் இருந்தது. எனது தாத்தா இதுபோன்ற ஒரு மீன் தூண்டிலை கனவிலும் கண்டிருக்கமாட்டார்.

அவரது தூண்டில்கள் மூங்கில் கழிகளால் ஆனவை. நிச்சயமாக அவர் அது எதனையும் வாங்கியிருக்க மாட்டார். அவர் ஒரு நீளமான மூங்கிலை தேடிப்பிடித்து, தீயின் மேலிட்டு, கைகளில் துளிர்த்த வியர்வை உலர, மூங்கில் கழியை புகையில் வாட்டி பழுப்பு நிறம் தோன்ற, நேராக்குவார். அது பல தலைமுறைகளாக மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய தூண்டில் கழி போன்றிருக்கும்.

என் தாத்தா  வலைகளும் பின்னினார். ஒரு சிறிய வலையில் சுமார் பத்தாயிரம் முடிச்சுக்கள் இருந்தன. அவர் இடைவிடாது இரவும் பகலும் அதைப் பின்னினார். அதைப் பின்னி முடிச்சிடும்போது அதனை எண்ணுவதுபோலவோ பிரார்த்திப்பதுபோலவோ உதட்டை அசைத்தபடி இருப்பார். என் தயாரின் பின்னல் வேலையைவிட இது கடினமான வேலை. அவர் அதில் குறிப்பிடும்படியாக ஏதும் மீன் பிடித்ததாக என்னால் நினைவுகூர இயலவில்லை; அதிகம்போனால், பூனைக்கு உணவாக தகுதியுள்ள ஒரு இஞ்ச் நீளமேயுள்ள சிறு மீன்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது நடந்தது நினைவிருக்கிறது. எனது தாத்தா, யாராவது மாவட்ட தலைநகருக்குச் செல்லப்போவதாக கேள்விப்பட்டாரானால், அவரிடம் மீன் தூண்டில் முள் வாங்கிவரும்படி கேட்டுக்கொள்வார்; என்னவோ பெரிய நகரத்தில் வாங்கிய தூண்டில் முட்களால் மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்பதுபோல். அவர், நகரத்தில் வாங்கும் தூண்டில் கழிகளில் ரீல்( reel) இருக்கும் என முனுமுனுத்தது நினைவிருக்கிறது. தூண்டில் முள்ளை நீருக்குள் செலுத்திய பின், ஓய்வெடுத்தபடி, தூண்டில் கழியிலுள்ள மணி சிணுங்கும் வரை, புகை பிடிக்கலாம். உருட்டி சிகரெட் தயாரிக்க வசதியாக கைகள் சுதந்திரமாக இருக்க வேண்டி, அதுபோன்றதொரு கழியை விரும்பினார். அவர் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை விரும்புவதில்லை. அவை காகிதப் புகை என்று கிண்டலடித்தார். அதில் புகையிலையைவிட புற்களே அதிகமிருப்பதாகவும், புகையிலையின் சுவை அதில் கொஞ்சமேனும் இருப்பதில்லை என்பார். அவரது முடிச்சிட்டு வளைந்த விரல்கள், உலர்ந்த புகையிலையை நார்நாராக கிழிப்பதை நான் பார்த்திருப்பேன். பின் அவர் செய்ய வேண்டியதெல்லாம், நாளிதழிலிருந்து கொஞ்சம் கிழித்து, புகையிலையை அதில் வைத்துச் சுருட்டுவார். அவர் அதை பீரங்கியைச் சுருட்டுதல் என்பார். அது அவருக்கு இருமல் ஏற்படுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. ஆனால், அது அவர் சிகரெட் சுருட்டுவதை தடை செய்யவில்லை. பிறர் பரிசாக கொடுக்கும் சிகரெட்டுகளை அவர் என் பாட்டியிடம் கொடுத்துவிடுவார்.

நான் கீழே விழுந்தபோது, தாத்தாவுக்குப் பிரியமான தூண்டில் கழி உடைந்துபோனதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் மீன் பிடிக்கச் சென்றபோது, நான் அந்தக் கழியைக் கொண்டுச் செல்வதற்கு முன்வந்திருந்தேன். முந்திச் செல்ல ஓடியபோது அது என் தோளில் இருந்தது. நான் எச்சரிக்கையுடன் இல்லாததால், கீழே விழுந்தபோது தூண்டில் கழி ஒரு வீட்டின் ஜன்னலில் சிக்கிக்கொண்டது. அந்த உடைந்த கழியைத் தடவியபடி, தாத்தா அழும் நிலைக்குச் சென்றுவிட்டிருந்தார். அது பாட்டி தன் விரிசலிட்ட மூங்கில் பாயைத் தடவியதுபோலிருந்தது. அந்த நேர்த்தியாக பின்னப்பட்ட, அடர்ந்த சிவப்பு நிறத்திலிருந்த  மூங்கில் பாய், எங்கள் வீட்டில் பல காலம் தூங்குவதற்கு பயன்பட்டுள்ளது.

பாட்டி அதில் தூங்கினாலும், அவள் என்னை அதில் படுக்க அனுமதித்ததில்லை. அப்படி தூங்கினால் எனக்கு வயிற்றுப்போக்கு வருமென்று சொன்னாள். அதை மடிக்கலாம் என்றும் சொல்லியிருந்தாள். ரகசியமாய், அதை மடித்தபோது, அது விரிசலிட்டது. அதை அவளிடம் சொல்லும் தைரியமில்லை; ஆனாலும் அதை மடிக்க முடியுமென்பதை நான் நம்பவில்லை என்று மட்டும் சொன்னேன். அவள், அது கறுப்பு மூங்கிலால் பின்னப்பட்டதால், மடிக்கலாம் என்று வலியுறுத்தினாள். அவளுக்கு வயதாகிறது என்பதால், நான் அவளுடன் வாதிட விரும்பவில்லை. அவளுக்காக இரக்கப்பட்டேன். அவள் மடிக்கலாம் என்று சொன்னால், அது மடிக்க முடியும்தான். ஆனால் நான் மடித்த இடத்தில் அது உடைந்து விரிசலிட்டது. ஒவ்வொரு கோடையிலும் அந்த விரிசல் பெரிதாக, அவள் பாய் செப்பனிடுபவரின் வருகைக்காக காத்திருந்தாள்; பல ஆண்டுகள் காத்திருந்தும், எந்த செப்பனிடுபவரும் வரவில்லை. இதுபோன்ற வேலைகளை இப்போதெல்லாம் எவரும் செய்வதில்லை என்றும், அந்தப் பாய் மிகவும் பழையதாகிவிட்டதால், அவள் புதிதாக ஒரு பாய் வாங்கிக்கொள்வது நல்லதென்றும் சொன்னேன். ஆனால், என் பாட்டி அந்தக் கோணத்தில் அதைப் பார்க்கவில்லை. எந்த அளவுக்கு பழமையானதோ அந்த அளவுக்கு அது சிறந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அது அவளைப் போன்றது; வயது முதிர மேலும் பரிவு கொண்டு, மீண்டும் மீண்டும் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

என் தாத்தா அப்படியில்லை. மேலும் வயதாக, பேசுவது குறைந்து, உடல் மெலிந்து, ஒரு நிழலைப்போல ஓசையின்றி வந்து போய்க்கொண்டிருந்தார். ஆனால், இரவில் அவர் இருமினார். ஒருமுறை தொடங்கினால், அவரால் நிறுத்த முடிவதில்லை. என்றாவது ஒருநாள் அவரால் மூச்சுவிட இயலாமல் ஆகலாம் என்று பயந்தேன். இருந்தாலும், முகமும் விரல் நகங்களும் புகையிலையின் நிறமாகும் வரை, அவர் தொடர்ந்து சிகரெட் பிடித்தார். காய்ந்த புகையிலையைப் போலவே, அவரும் மெலிந்து நொறுங்கும் நிலையிலிருந்தார். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், அவர் எதிலேனும் மோதி சின்னஞ்சிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கிப்போகலாம் என்று கவலைக் கொண்டிருந்தேன்.

என் தாத்தா வெறுமனே மீன் மட்டும் பிடிக்கவில்லை; அவர் வேட்டையாடுவதிலும் பிரியம் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் நன்கு பசையூட்டப்பட்ட ஒரு வேட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருந்தார். ஒரு வேட்டைத் துப்பாக்கி செய்வதென்பது எவருக்கும் மிகச் சிரமமான ஒன்று. அப்படியொருவரைக் கண்டுபிடிக்க அவருக்கு ஒரு அரையாண்டு பிடித்தது. ஒரு முயலைத் தவிர வேறெதையும் அவர் கொண்டு வந்ததாக, எனக்கு நினைவில்லை. உள்ளே வந்து ஒரு பெரிய முயலை, சமையலறைத்  தரையில் வீசினார். பிறகு, காலணிகளைக் கழற்றிவிட்டு, என் பாட்டியை அழைத்து, கால்களை ஊறவைக்க, சுடுநீர் கொண்டுவரச் சொல்லி, தன் பையிலிருந்து புகையிலையை எடுத்து உருட்டத் தொடங்கினார். மிகுந்த உற்சாகத்துடன் நான் எங்கள் வீட்டு செல்ல நாய் பிளேக்கியுடன், இறந்துபோன அந்த முயலை வட்டமிட்டேன். எதிர்பாராத நிலையில் அம்மா அங்கே வந்து கூச்சலிட்டாள்.” அந்த முயலை நான் சொன்ன விதத்தில் ஏன் செய்யவில்லை? எதற்காக அந்த துப்பாக்கியை வாங்கினாய்?” எனது பாட்டி எதையோ முணுமுணுக்க, அம்மா மீண்டும் கூச்சலிட்டாள். “முயலை அவசியம் சாப்பிட வேண்டுமானால், இறைச்சி கடைக்காரனிடம் கொடுத்து தோலை உரித்து வீட்டுக்குள் கொண்டு வா!” அப்போது பார்க்க என் தாத்தா மிகுந்த முதுமையுடன் தோன்றினார். அம்மா போனபின், அவர் ஜெர்மன் நாட்டு எஃகு தரமானது என்றார். ஜெர்மன் நாட்டு எஃகு வேட்டைத் துப்பாக்கி தன்னிடமிருந்தால், தன்னால் முயலைத் தவிர்த்து பிற பிராணிகளையும் சுட முடியும் என்று நம்பினார்.

நகருக்கு சற்றே தள்ளியுள்ள மலைகளில், குறிப்பாக, புற்கள் வளரத் தொடங்கிவிடும் இளவேனில் காலத்தில், நரிகள் இருந்ததாக அவர் சொன்னார். குளிர்காலம் முழுக்கவும் கொலைப் பட்டினியில் கிடந்து, கடும் பசியுடன் கிராமத்துக்குள் நுழைந்து, அவை பன்றிக்குட்டிகளைத் திருடியும், பசுக்களைத் தாக்கியதோடல்லாமல், ஆடு மேய்க்கும் சிறுமிகளையும் தின்றன. ஒருமுறை அவை ஒரு சிறுமியைத் தின்றுவிட்டு, அவளது சடையை மட்டும் விட்டுச் சென்றிருந்தன. அப்போது அவரிடம் ஒரு ஜெர்மன் வேட்டைத் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால்.

அவரால், அந்த நாட்டு வேட்டைத் துப்பாக்கியைக்கூட தன்னுடன் வைத்திருக்க முடியவில்லை. புத்தகங்களை எரிக்கும் அந்த கலாச்சார புரட்சி காலத்தில்,அவர்கள் அதை ஆபத்தான ஆயுதம் என்று சொல்லி பறிமுதல் செய்துவிட்டிருந்தனர். அவர் ஒரு சிறு மர நாற்காலியில் உட்கார்ந்து,எதிரே வெறித்து நோக்கியபடி,ஒரு சொல்லும் இல்லாமல் இருந்தார்.

அதை நினைக்கும்போதெல்லாம், என்னுள் அவர் குறித்து பச்சாதாபம் மிகுந்தெழ, அவருக்கு ஒரு தரமான ஜெர்மன் நாட்டு வேட்டைத் துப்பாக்கி வாங்கித் தர வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் இயலவில்லை. ஒருமுறை, ஒரு கடையில், ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கண்டேன். அவர்கள், அதை என்னிடம் விற்க அந்த மாவட்ட உச்சநிலை விளையாட்டுத்துறையின் அதிகாரிகளிடமிருந்து ஒரு அறிமுகக் கடிதமும், பொது பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து ஒரு அனுமதி பத்திரமும் வேண்டும் என்றனர். எனவே என் தாத்தாவுக்கு ஒரு மீன் தூண்டிலை மட்டுமே என்னால் வாங்கித் தர இயலும் என்பது தெளிவானது. ஆனாலும், இந்தப் பத்துக் குழல் மீன்பிடி தூண்டிலால்கூட அவரால் எதையும் பிடிக்க இயலாது. காரணம் எங்கள் வீடு பல ஆண்டுகளுக்கு முன்பே மணல் மேடாகிவிட்டிருந்தது.

எங்கள் வீடிருந்த நன்னு சாலையிலிருந்து, சற்று தொலைவில், ஒரு ஏரி இருந்தது. நான் ஆரம்பப் பள்ளியிலிருந்த காலத்தில், அந்த ஏரியை வழக்கமாய் கடந்து சென்றதுண்டு. ஆனால், நான் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, அந்த ஏரி, கொசுக்கள் உற்பத்தியாகும் ஒரு துர்நாற்றமடிக்கும் குளமாகிவிட்டிருந்தது. அதன் பின் ஒரு சுகாதார பிரச்சார நடவடிக்கையின்போது அந்தக் குளம் மண் நிரப்பி மூடப்பட்டது. எங்கள் கிராமத்தில் ஒரு ஆறும் இருந்தது. அது நகரிலிருந்து தொலைதூரத்தில் எங்கோ இருந்ததை, சிறுவனாக இருந்தபோது சிலமுறைகள் அங்கே சென்றதை நினைவுகூர்கிறேன். ஒருமுறை என்னைக் காண வந்த தாத்தா, ஆற்றுக்கு மேலே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டபோது, அது வரண்டுபோனதாகச் சொன்னார்.

இருந்தபோதிலும், நான் அவருக்கு ஒரு மீன் தூண்டிலை வாங்க விரும்புகிறேன். இதை விளக்குவது கடினம். நான் முயற்சிக்கவும் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை, அந்த மீன் தூண்டில் என்பது என் தாத்தா, என் தாத்தா என்பது அந்த மீன் தூண்டில்.

அதன் கறுமை கண்ணாடித் துண்டுகள் முழுமையும் விரிக்கப்பட்ட ஒரு மீன் தூண்டிலை தோளில் சுமந்து, சாலையில் கால் வைத்தேன்.எல்லோரும் என்னை பார்ப்பதை உணர்கிறேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அதிகமும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படியான ஒரு பஸ்சில் ஏறிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால், நீண்டிருக்கும் தூண்டிலைச் சுறுக்க இயலவில்லை. பிறர் என்னை வெறித்து நோக்குவதை நான் வெறுக்கிறேன். சிறுவயது முதலே கூச்ச சுபாவம் கொண்டிருப்பதால், புதிய உடைகளில் இருப்பது அசௌகரியமாகவும், நன்கு உடையணிந்திருப்பது  சன்னல் காட்சிப் பொருளாக நின்றிருப்பது போலவுமிருக்க, இந்த  நீளமான அசைந்தாடிவரும் மினுங்கும் தூண்டிலைச் சுமந்து செல்வது கூடுதல் அசௌகரியமாய் இருந்தது. நான் சற்றே விரைந்தால், மீன் தூண்டில் அதிகமும் அசைந்தாடுகிறது. எனவே எனது காற்சட்டையைக் கிழித்துக்கொண்டது போன்றோ, அல்லது மர்ம உறுப்பிருக்கும் அதன் ஜிப்பை இழுத்து மூட இயலாமல் இருப்பது போன்ற குறுகுறுப்பான உணர்வுடன் தெருவில் மெதுவாக நடந்து சென்றேன்.

மீன் பிடிக்கச் செல்லும் நகரத்து மக்களின் நோக்கம் மீன் பிடிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். பூங்காக்களில், அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் ஆண்களின் நோக்கம் பொழுதுபோக்கும் சுதந்திரம் மட்டுமே. அது மனைவியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் தப்பித்து ஓடி சிறிது அமைதியைப் பெறுவதற்கே. இப்போதெல்லாம் மீன் பிடிப்பது என்பது ஒரு விளையாட்டுப் போட்டி போலாகிவிட்டது. தூண்டில்களின் வகைமைக்கேற்ப வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் உண்டு; மாலைப் பதிப்பு தினசரிகள் அந்தப் போட்டிகளை மிகவும் உயர் தரத்தில் நிறுத்தி, அதன் முடிவுகளை வெளியிடுகின்றன. அவை குறிப்பிடும் இடங்களில் மீனகள் ஏதும் இல்லை.

இத்தகைய போட்டிகளை நம்பாதவர்கள் சொல்வதுபோல்,போட்டி நடைபெறுவதற்கு முதல்நாள் இரவில், அதை நடத்தும் பொறுப்பாளர்களில் சிலர் வந்து, வலைகளில் மீன்களை நிரப்பிச் செல்வதாகவும், போட்டியாளர்கள் பிடிப்பது அந்த மீன்களைத்தான் என்பதுவும் உண்மையாக இருக்கலாம். நான் அதுபோன்றதொரு தூண்டிலை சுமந்து போவதால், மக்கள் என்னையும் அந்த மீன்பிடி பைத்தியங்களில் ஒருவனாக கட்டாயம் எண்ணலாம். ஆனால், என் தாத்தாவுக்கு அது என்ன பொருளைக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன். என்னால் அவரைப் பார்க்க முடிகிறது – நிமிர முடியாத அளவுக்கு முதுகு வளைந்து, புழுக்கள் நிறைந்த தனது சிறு கூடையை எடுத்துச் செல்கிறார். நான் இந்த ஏக்க நினைவுகளைக் களைய,எங்களது பழைய வீட்டைச் சென்று காண வேண்டும்.

ஆனால், முதலில் நான் இந்த தூண்டிலை வைக்க ஒரு பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண வேண்டும். எனது இளைய மகன் அதைக் கண்டால்,அவன் அதை நாசப்படுத்திவிடுவான். என் மனைவி என்னை நோக்கி கூச்சலிடுவதைக் கேட்கிறேன் – அதை எதற்காக வாங்கினாய்? இங்கே போதுமென்ற அளவுக்கு அடைத்துக்கொண்டிருக்கிறது. அதை எங்கே வைப்பாய்? ஒரு நாற்காலியின் மேல் நின்றாலொழிய, மகனால் எட்ட முடியாத,குளியலறை மலத்தொட்டிக்கு மேலுள்ள அதன் நீர்த்தொட்டியின் மேல் வைத்தேன். என்ன ஆனபோதிலும்,ஒருமுறை கிளர்ந்துவிட்டால் பிறகு உதிர்க்கவே இயலாமலாகிவிடும் இந்த வாழ்விட ஏக்கத்தைப் போக்க, நான் கட்டாயம் கிராமத்துக்குத் திரும்பிப் போயாக வேண்டும்.

பெரியதொரு ஓசைக் கேட்கிறது. அது அடுப்படியில் என் மனைவி இறைச்சி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தும் ஓசை என எண்ணிக்கொள்கிறேன். நீ அவள் கூச்சலிடுவதைக் கேட்கிறாய் –போய் அதை பார்! பிறகு,குளியறையிலிருந்து வரும் என் மகனின் அழுகைக் குரலைக் கேட்கிறாய். அந்த மீன் தூண்டிலுக்கு ஏற்பட்டுள்ள விபரீதத்தை உணர்கிறாய்.முடிவு செய்துவிட்டாய். நீ அந்தத் தூண்டிலை உனது பழைய வீட்டுக்கு கொண்டு போகிறாய்.

ஆனால், அந்தக் கிராமம் அதிகமும் மாறியிருக்க, உன்னால் அதை அடையாளம் காண இயலவில்லை. பழைய மண் சாலைகள் இப்போது தார்ச் சாலைகளாகவும், ஒன்று போலவே புதிய கல் கட்டிடங்கள். ஒவ்வொரு வீட்டுக் கூரையின் மேலும்,வீட்டில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு ஒளிவாங்கி (ஏரியல்) இருப்பது போலவே,தெருவில் நடமாடும் அனைத்து வயது பெண்மணிகளும் மார்க்கச்சை அணிந்தும்,அதைக் காட்டும் விதமாக மிக மெலிதான சட்டைகளை அணிந்துமிருக்கிறார்கள். ஒளிவாங்கி இல்லாத வீடு தனித்தும் குறைபட்டும் இருப்பதாக கருதப்படுகிறது. அத்தனைபேருமே, ஒரே வகையான நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறார்கள்.7 மணியிலிருந்து 7.30 வரை உள்நாட்டுச் செய்திகள், 7.30 முதல் 8 வரை உலகச் செய்திகள். பிறகு தொலைக்காட்சிப் படங்கள், விளம்பரங்கள், காலநிலை அறிவுப்புக்கள், விளையாட்டுச் செய்திகள், மேலும் விளம்பரங்கள். எப்படியாயினும், அந்த ஒளிவாங்கிகள் கவர்கின்றன. அது, கூரையில் ஒரு சிறு காடு வளர்ந்திருந்தது போலவும், ஒரு குளிர்காற்று வந்து அதன் இலைகளனைத்தையும் உதிர்த்துவிட, வெறும் கிளைக் குச்சிகள் மட்டுமே மீந்திருப்பது போலவும். இந்த வெறுமைக் காட்டில் நீ காணாமல் போக, எனது பழைய வீட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

நனு சாலை எங்கே என்று கேட்கிறேன். ஆனால் மக்கள், நீ சொன்னது புரியாததுபோல் ஆச்சர்யத்துடன் உன்னைப் பார்க்கிறார்கள். நான் இன்னமும் கிராமத்து மொழியையே பேசுகிறேன். அதைப் பேசுகிறவர் எவராக இருந்தாலும் அதில் கிராமத்துத் தொனி இருக்கும். இரண்டு இளம் பெண்களை நிறுத்திக் கேட்டபோது, அவர்கள் வெறுமனே சிரித்தார்கள். பதில் சொல்ல முடியாத அளவுக்குப் பெரிதாகச் சிரித்தார்கள். அவர்களின் முகங்கள் இரண்டு சிவப்பு துணிபோல் தோன்றியது. அவர்களின் முகம் சிவப்பாக மாறக் காரணம் அவர்களும் மார்க்கச்சை அணிந்திருப்பதால் அல்ல. ஆனால், நான் ‘நன்னு சாலை’ என்று சொல்லும்போது, ‘நன்’ என்றதை, நான் உச்சரித்த விதம், அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம். பிறகு, நான் ஒரு முதியவரைக் கண்டு, ஏரி இருந்த இடத்தைக் கேட்டேன். அந்த ஏரி இருந்த இடத்தைத் தெரிந்துகொண்டால், அந்தக் கற்பாலத்தைக் கண்டுபிடித்துவிடலாம். அதைக் கண்டுகொண்டால், நன்னு சாலையைக் கண்டுகொள்வது சுலபமாகிவிடும். அதைக் கண்டபின், எனது பழைய வீட்டைச் சென்றடைய இயலும்.

“அந்த ஏரி?எந்த ஏரி?” மண் மூடப்பட்ட ஏரி. ஓ,அந்த ஏரி? மண்ணால் மூடப்பட்ட அந்த ஏரி, இதோ இங்குதான் உள்ளது. தன் காலால் சுட்டிக் காட்டினான். இந்த இடம்தான் அந்த ஏரி இருந்த இடம். எனவே நாம் அதனடியில் நின்றுகொண்டிருக்கிறோம். இதனருகே, ஒரு காலத்தில் ஒரு கற்பாலம் இருந்ததா?எங்கும் தார்ச் சாலைகள் இருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? எல்லா கற்பாலங்களும் தகர்க்கப்பட்டு புதிதாக  காங்கிரீட் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உனக்குப் புரிகிறதா? முன்பு இருந்ததெல்லாம் இப்போது இல்லை என்பதைப் புரிந்துகொள். எப்போதோ இருந்த ஒரு தெருவையும் அதன் எண்ணையும் இப்போது கேட்பது வீண் வேலை. நீ உனது நினைவாற்றலையே நம்ப வேண்டும்.

எனது இளமைக்கால வீடு ஒரு கம்பீரமான, புராதன வடிவான வெளிமுற்றம் கொண்டிருந்தது.pic_4 அதன் கதவில் அதிர்ஸ்டம், செல்வம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி என்பதை குறிக்கும் கற்சிற்பங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கதவுத் திரையில் ஒரு புள்ளிமானின் உருவமும் செதுக்கப்பட்டிருந்தது. நாங்கள் உள்ளே செல்லும்போதோ, வெளியே செல்லும்போதோ அதன் கொம்புகளை தொட்டுச் சென்றதில், அவை மிகுந்த பளபளப்புக் கொண்டிருந்தன.அந்த முற்றம் இரு வாசல்களைக் கொண்டிருந்தது. முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றும். திவாலான அந்த வீட்டின் சொந்தக்காரர் பின்புற முற்றத்திலிருந்தார். அந்தக் குடும்பத்தில் ஜோவா என்கிற ஒரு சிறு பெண் இருந்தாள். அவள் விரிந்த விழிகளுடன் என்னைப் பார்த்திருப்பாள்; அது விநோதமாக இருந்தாலும் இனிமையாகவும் இருந்தது.

என் தாத்தா நட்டு வளர்ந்திருந்த பேரீச்சம்பழ மரங்களைப்போலவே, அந்த முற்றமும் நிச்சயமாக இருந்தது. ஓட்டு விளிம்பில் தொங்கிய கூடுகளில் தாத்தா வளர்த்த குருவிகள் இருந்தன. அதில் ஒரு மைனாவும் இருந்தது. என் அம்மா அந்த மைனா அதிகமும் கூச்சலிடுவதாக புகார் செய்ததால், என் தாத்தா அதை விற்றுவிட்டு ஒரு சிகப்பு முகம் கொண்ட சிறு பாடும் குருவி ஒன்றை வாங்கி வந்தார். ஆனால், அது சில நாட்களிலேயே இறந்துபோனது. இந்த வகைப் பறவைகள், நிலையற்ற உணர்வுநிலை கொண்டவை என்பதால், அவற்றைக் கூடுகளில் அடைத்து வைப்பது ஆகாது. என் தாத்தா அந்தக் குருவியின் சிகப்பு முகம்தான், தான் அதன் மேல் காதல் கொண்டதற்கான காரணம் என்று சொன்னபோது, என் பாட்டி அவரை வெட்கமற்றவர் என்று திட்டினார்.

எனக்கு இவை அனைத்தும் நினைவிலிருக்கிறது. அந்த வெளி முற்றம் எண். 10 நன்னு சாலை. ஒருவேளை அந்த சாலையின் பெயரையும் எண்ணையும் மாற்றியிருந்தாலும், நாற்ற குளத்தை மூடியதுபோல், அந்த நல்ல முற்றத்தை மண் நிரப்பி மூடியிருக்கமாட்டார்கள். ஆனால், நான் எங்கும் கேட்டவாறு, ஒவ்வொரு தெருவாக சந்துபொந்தெல்லாம் தேடுகிறேன். பாக்கெட்டில் கை துழாவி, எல்லாவற்றையும் எடுத்த பின்பும், நான் தேடியது கிடைக்காத ஏமாற்றம்போல் உணர்கிறேன். தளர்ந்த கால்களை இழுத்துக்கொண்டு நடக்கிறேன்.

சட்டென மூளையில் ஒரு மின்னலடிக்க,குவாண்டி கோயிலை நினைவுகூர்கிறேன். அது நான் பள்ளிக்குச் செல்லும் வழிக்கு எதிர்த்திசையில் மூவி தியேட்டர் இருக்கும் திசையில் இருந்தது. என் அம்மா என்னை படம் பார்க்க கூட்டிச் செல்லும் போதெல்லாம், நாங்கள் குவாண்டி கோயில் என்கிற ஒரு தெருவைக் கடந்து செல்வோம். குவாண்டி கோயிலைக் கண்டுபிடித்துவிட்டால், எங்களது வீடு இருந்த இடத்தை அடையாளம் காண்பதில் சிரமமிருக்காது. எனவே நான் மக்களிடம் குவாண்டி கோயிலை எப்படி கண்டுபிடிப்பதென விசாரிக்கிறேன்.

ஓ, நீ குவாண்டி கோயிலை தேடுகிறாய்? என்ன எண்? இது குவாண்டி கோயில் இன்னும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. நான் எதிர்கொண்ட மனிதர் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்ற பெரும் விருப்பு கொண்டிருந்தமையால், அவர் வீட்டு எண்ணைக் கேட்டார்.உடனடி எந்த எண்ணையும் எண்ணிப்பார்க்க முடியாததால், நான் அந்த விலாசம் இன்னமும் உண்டா என்று அறியவே அதை விசாரித்ததாக முணுமுணுத்தேன். விலாசமிருந்தால், நிச்சயமாக அது இருக்கும்.நீ யாரைத் தேடுகிறாய்? உனக்கு எந்தக் குடும்பம் வேண்டும்? அவருக்கு மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன. அநேகமாக, அவர் என்னை வெளிநாட்டிலிருந்து தனது வேர்களைத் தேடி வந்திருக்கும் ஒரு மனிதனாகவோ அல்லது தனது கிராமத்தைத் துறந்து சென்ற ஊர்சுற்றியாகவோ நினைக்கலாம். நான், எங்கள் குடும்பம் அதில் வாடகைக்கு இருந்ததையும், அது எனது தாத்தாவுக்குச் சொந்தமில்லை என்பதையும் விளக்கினேன். அந்த வீட்டுச் சொந்தக்காரரின் பெயரென்ன? எனக்குத் தெரிந்ததெல்லாம், அவருக்கு ஜோவோ என்கிற மகள் இருந்தாள் என்பதே. ஆனால், அதை நான் அவரிடம் கூற இயலாது. நான் தொடர்ந்து முணுமுணுக்க, அந்த மனிதரின் முகத்தில் எரிச்சல் மூண்டு கண்கள் அந்நியமாயின. போலீசில் புகார் செய்யலாமா என்று யோசிப்பதுபோல், அவர் என்னை மேலும் கீழும் அளந்தபடியிருந்தார்.

நீ எண்.1த் தேடினால், நேராகச் சென்று, வலது பக்கமுள்ள முதல் சந்தில் நுழையவும்; சாலையின் தெற்குத் திசையில் அது உள்ளது. நீ எண்.37த் தேடினால், அந்தப் பக்கமாகப் போ, ஒரு நூறு காலடிகளுக்குப் பின் இரண்டாவது சந்தில் நுழைந்து,அதன் இறுதி முனை வரை செல். அது வடக்கில், வலது பக்கம் உள்ளது. நான் மீண்டும் மீண்டும் அவருக்கு நன்றி சொல்கிறேன்.ஆனல் நான் அவரை நீங்கிய பிறகு,அவரது கண்கள் என் முதுகை துளைப்பதை உணர்ந்தேன்.

வலது பக்கமிருந்த முதல் சந்தைப் பார்த்தேன். ஆனால், அதில் திரும்பும் முன், ஆண்களின் பொதுக் கழிப்பறைக்கு பக்கமிருந்த புதிய சாலை வழிகாட்டியைப் பார்க்கிறேன். அதன் மேல், மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது -குவாண்டி கோயில். ஆனால், ஒரு சிறுவனாக என்னுள் பதிந்திருந்த அதன் தோற்றம் இதுவல்ல. நான் உண்மையில் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்கே வந்துள்ளேன் என்பதையும், வேறெந்த விஷம நோக்கமும் இல்லை என்பதைக் காட்ட, அந்தச்  சந்தில் நுழைகிறேன். எண்.1லிருந்து 37 வரை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பார்வையில் அந்தச் சந்தின் முட்டுவரை என்னால் பார்க்க முடிந்தது; அது என் நினைவிலிருப்பதுபோல் அத்தனை நீளமோ வளைவுகளோ கொண்டிருக்கவில்லை. அப்போது அங்கே ஒரு கோயில் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. அதன் இரு பக்கமும் உயரமான கட்டிடங்கள் ஏதுமில்லை; பழைய காலத்து கட்டிடங்களுக்கு இடையில் ஒரே ஒரு மூன்று அடுக்கு கட்டிடம் மட்டும் இருந்தது.

திடீரென அது நினைவுக்கு வந்தது. எதையும் நினைவில் வைத்துக்கொள்ளும் வயதடையும் முன்பே, அது மின்னலடித்து எரிந்துபோனது. அது பற்றி எனது தாத்தா கூறியிருந்தார். அந்த இடம் மின்னலை ஈர்த்ததற்குக் காரணம், அதன் அடியிலுள்ள குய்( qi)சக்தி சமன்குலைவுற்றிருந்தமையால், அதிலிருந்த தீய சக்திகளைத் துரத்த, அங்கே கோயில் கட்டினர். ஆனாலும், அது மனிதர்கள் குடியிருக்க ஏற்ற இடமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மின்னல் தாக்கியது. எப்படியாயினும்,என் வீடு குவாண்டி சாலையில் இருக்கவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா என்னை அழைத்துச் சென்ற வழிகளை மீட்டெடுக்க வேண்டும். மக்களிடம் தொடர்ந்து விசாரிப்பது வீண்வேலை என்பது புரிந்தது.

நான் அந்த ஏரியையே மீண்டும் மீண்டும்  வட்டமடித்துள்ளேன். ஏரிக்கு அப்பால், ஏரிக்கு நடுவில், ஏரியைச் சுற்றி. உண்மையில், எனது பழைய வீடு, எனக்கு எதிரிலுள்ள, அந்த ஒளிவாங்கி காடுகள் நிறைந்த பழைய புதிய கட்டிடங்களுக்கு அடியில் எங்கோ புதைந்துள்ளது. ஆனால், எப்படிச் சுற்றி வந்தாலும் உன்னால் அதைக் காண முடியவில்லை.

எனவே, உன்னால் அதை நினைவிலிருந்து மட்டுமே கற்பனை செய்ய முடியும். ஒருவேளை, அந்தச் சுவருக்கு அப்பால், நகர சூழியல் அமைப்பால், பொது குடியிருப்பாக மாற்றப்பட்டுவிட்ட இடத்தில் இருக்கலாம்; அல்லது, ஒரு நெகிழி புத்தாக்க தொழிற்சாலையாக, ஒரு இரும்புக் கதவும் காவலாளியும் கொண்ட ஒரு கிடங்காக மாற்றியிருக்கலாம். எனவே, உனது நோக்கத்தை தெளிவுபடுத்தாமல் அதன் உள்ளே நுழைந்து ஆராய்வது குறித்து நினைக்கவே வேண்டாம்.

உன்னிடம் சொல்லிக்கொள் – தனது திரையில் செதுக்கு உருவங்கள் கொண்டிருந்த அந்த புராதனக் கதவைச் சிதைக்கும் அளவுக்கு மனிதர்கள் குரூரமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால், சீனாவிலும் மேலைநாட்டிலும் உள்ள கடந்த கால நிகழ்கால ஞானிகளும் தத்துவவாதிகளும், மனிதர்கள் தீயவற்றிற்கான மனச்சாய்வும், தீயவை அவர்களின் மனதில், நல்லதைவிடவும் மிக ஆழத்துள் வேரூன்றி இருப்பதாகவும் நம்புகிறார்கள். நீ மனிதர்களிடமிருக்கும் நல்ல தன்மைகளை நம்ப விரும்புகிறாய்.மனிதர்கள், அவர்களுக்கும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு ஒரு இளமைக்காலம் இருக்கும் என்பதால், உனது இளமைக்கால நினைவுகளை சிதைக்கும் அளவுக்கு அற்பர்களாக இருக்கமாட்டார்கள். இது ஒன்றுடன் ஒன்றைக் கூட்டினால், மூன்று ஆகாது என்பதற்கு நிகரானது.

இந்தவகை எண்ணங்களை ஒழிக்க வேண்டுமானால், நீ இந்த ஒரே மாதிரி அமைந்த தார்ச் சாலைகளையும்,கண்ணுக்கு எட்டிய தூரம் இலை உதிர்ந்த கிளைக்குச்சிகளின் காடாக விரிந்துள்ள ஒளிவாங்கிகளின் கீழுள்ள பழைய புதிய கட்டிடங்களையும், இந்த அடுக்கடுக்காக உள்ள பாதி புதிய, பாதி பழைய மலிவு அபார்ட்மென்ட்களையும் விட்டு விலகிப்போய்விட வேண்டும்.

நான், எனது தாத்தா மீன் பிடிக்க கூட்டிச் சென்ற அந்த ஆற்றுக்கு போய்விட வேண்டும். அங்கே நாங்கள் ஏதேனும் மீன் பிடித்த நினைவில்லையென்றாலும், எனக்கு ஒரு தாத்தாவும் ஒரு இளமைக்காலமும் இருக்கிறது என்பது தெரியும். அந்த வீட்டின் வெளி முற்றத்தில், என் அம்மா, நான் குளிக்க வேண்டி,எனது உடைகளை முழுமையாக களையச் செய்தபோது,சங்கோஜப்பட்டது நினைவிருக்கிறது.சிறுவனாக நான் வாழ்ந்த மற்ற வீடுகளையும் நான் தேடியுள்ளேன். பொழுது விடியும் முன் எழுந்து நான் வேட்டைக்குச் சென்றது நினைவிலுண்டு. ஆனால், அது என் தாத்தாவுடன் சென்றதல்ல.ஒருநாள் முழுக்க வேட்டையாடி நரி என்று நினைத்து ஒரு காட்டுப் பூனையைக் கொன்றிருந்தோம்.நான் எழுதிய கவிதையில்,என் உடலெங்கும் ஓசையிடும் வேட்டைக் கத்திகளை செருகியிருந்தேன்.நான் ஒரு புல்வெளியில் பறக்கும் வாலில்லாத தட்டான்.ஒரு பூச்சியை மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு நான் உன்னதமான ஒரு நாவலை எழுதவிருக்கிறேன்.

நான், ஒரு மர நாற்காலியில் முதுகு வளைந்து உட்கார்ந்திருக்கும் என் தாத்தாவைப் பார்க்கிறேன். தாத்தா! நான் அவரை அழைக்கிறேன். ஆனால், அது அவருக்கு கேட்கவில்லை. நான் அவரை நெருங்கி மீண்டும் அழைக்கிறேன், தாத்தா! அவர் திரும்பிப் பார்க்கிறார், ஆனால் கையில் முன்பிருந்த பைப்( pipe) இல்லை. புகையினால் ரத்தச் சிவப்பாகியிருந்த அவரது முதுமைக் கண்களிலிருந்து, கண்ணீர் வழிகிறது. குளிர் காலத்தில், அடுப்பில் விறகுகளை எரித்தபடி, அதனருகில் ஒரு நாற்காலியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பது அவருக்கு விருப்பம். தாத்தா, ஏன் அழுகிறீர்கள்? நான் கேட்கிறேன் அவர் என் பாட்டி தைத்துக் கொடுத்த, தடித்த அடிப்பாகம் கொண்ட, துணி சப்பாத்தை அணிந்திருக்கிறார். ஒரு வார்த்தையும் சொல்லாமல், அவர் தன் ரத்தச் சிவப்பான கண்களால், என்னைப் பார்க்கிறார். நான் உனக்கொரு கைச் சுற்றோடு( hand reel) கூடிய மீன் தூண்டில் ஒன்று வாங்கி வந்துள்ளேன், நான் சொல்கிறேன். அவர் எந்த ஆர்வமுமின்றி அடித்தொண்டையிலிருந்து முனகினார்.

நான் அந்த ஆற்றங்கரைக்கு வருகிறேன். காலடியிலுள்ள மணல் என் பாட்டியின் பெருமூச்சுபோல முணகல் ஒலி எழுப்புகிறது. அவள் முடிவில்லாமல் பேசிக்கொண்டிருப்பதில் விருப்பம் கொண்டிருந்தாள் .எவரும் அதைப் புரிந்துகொண்டதில்லை. நீ அவளிடம்,’பாட்டி என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டாள், அவள் வெறித்து பார்த்திருந்து, சற்று பொறுத்து சொல்வாள். ‘ஓ,பள்ளியிலிருந்து வந்துவிட்டாயா?பசிக்கிறதா? அங்கே சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருக்கிறது. அவள் பேசும்போது, அதில் குறுக்கிடாமல் இருப்பது நல்லது; அவள் இளம் பெண்ணாக இருந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால், நீ அவளது நாற்காலிக்குப் பின்னாலிருந்து ஒற்றுக் கேட்டால், அவள்,’ அது மறைந்துள்ளது, அது மறைந்துள்ளது, எல்லாமும் மறைந்துள்ளது, எல்லாமும்… இந்த நினவுகளெல்லாம், உனது காலடியிலுள்ள மணலில் கூச்சலிடுகின்றன.

new_2இது, பாறைக்கற்கள் மட்டுமே பெருக்கெடுத்தோடும் ஒரு வரண்டுபோன ஆறு. நீ, ஆற்று நீரால் கரைக்கப்பட்டு மென்மையான உருளைக் கற்களாக மாறிவிட்டிருந்த பாறைக்கற்களின் மேல் நடக்கிறாய். ஒவ்வொரு கல்லாக தாவிச் செல்ல, உன்னால் அந்த தெளிந்த நீரோட்டத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த மலை வெள்ளம் வந்தபோது, பெரும் பரப்பிலான கலங்கிய நீர், நகருக்குள் விரவிச் சென்றது. சாலையைக் கடக்க, மக்கள் தங்கள் காற்சட்டையை மடித்துவிட வேண்டியிருந்தது. மக்கள், தேய்ந்துபோன சப்பாத்துக்களும், மக்கும் தாட்களும் மிதந்துபோன நீரில் விழுந்து எழுந்தபடி சென்றுகொண்டிருந்தனர். வெள்ளம் வடிந்தபோது, எல்லா சுவர்களின் அடிப்பாகமும், சேறு அப்பிக் கிடந்தது. சில நாட்கள் வெயிலில் காய்ந்து, மீனின் செதில்கள்போல் உதிர்ந்தன. இதுதான் என் தாத்தா என்னை கூட்டிப் போன ஆறு. ஆனால், இப்போது அந்தப் பாறைகளின் இடுக்குகளில்கூட நீரில்லை. ஆற்றினடியில், இப்போது இருப்பது, எங்கே மக்கள் வந்து தங்களை  அங்கிருந்து விரட்டிவிடுவார்களோ என்கிற பயத்தில் ஒன்றோடொன்று அணைத்துக் கிடக்கும் செம்மறியாட்டுக் கூட்டம்போல கிடக்கும், வட்டமான பெரிய நகராத பாறைகள் மட்டுமே.

நீ, மரங்களின் வேர்கள் மீந்திருக்கும் ஒரு மணல் திட்டுக்கு வருகிறாய். அந்த வில்லோவ்         (willow) மரங்கள் வெட்டி திருடப்பட்டு வீட்டு தளவாடப் பொருட்களான பின், இங்கு ஒரு இனுக்கு புல்கூட முளைப்பதில்லை. அங்கே நின்றிருக்க, நீ மெல்ல புதைகிறாய். திடுமென மணல் உனது கணுக்கால் அளவுக்கு வந்துவிட்டது. நீ விரைந்து போய்விட வேண்டும். இல்லையெனில், கெண்டைக்கால், முட்டி, தொடை என புதைய, ஒரு புதைகுழியை நினைவுறுத்தும் இந்த மணல் திட்டில் புதைந்துபோவாய். எல்லாவற்றையும் விழுங்க விரும்புவதாக மணல் முணுமுணுக்கிறது. அது ஆற்றுப் படுகையை விழுங்கிவிட்டது. இப்போது, இந்த நகரோடு சேர்த்து, உனதும் என்னுடையுதுமான இளமைக்கால நினைவுகளையும்  விழுங்க விரும்புகிறது.

நிச்சயமாக அதற்கு நல்லெண்ணமில்லை. என் தாத்தா அங்கிருந்து ஓடாமல், ஏன் இன்னமும் அங்கு உட்கார்ந்திருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் அங்கிருந்து விரைந்து விலக முடிவெடுத்தேன். ஆனால், திடுமென என் முன் ஒரு மணல் திட்டு எழுந்து நின்றது. தகிக்கும் சூரியனுக்குக் கீழே ஒரு அம்மணச் சிறுவன் எழுகிறான்; அது நான்தான், ஒரு சிறுவனாக. என் தாத்தா எழுந்து நின்றுவிட்டார். அவர் முகத்திலுள்ள வரிகளில் இப்போது அதிக ஆழமில்லை. அந்தச் சிறுவனின் கையைப் பற்றியிருக்கிறார். அந்த அம்மணச் சிறுவனாகிய நான், அவர் அருகில் குதித்துக்கொண்டிருக்கிறேன்.

“ இங்கு காட்டு முயல்கள் இருக்குமா?”

“ம்ம்”

“பிளேக்கி நம்முடன் வருகிறதா?”

“ம்ம்”

“பிளேக்கிக்கு முயல்களைப் பிடிக்கத் தெரியுமா?”

“ம்ம்”

பிளேக்கி, காணாமல்போன எங்கள் வீட்டு நாய். பிறகு ஒருநாள், அதன் தோல் ஒரு வீட்டு முற்றத்தில் காய்வதைப் பார்த்ததாக யாரோ என் தாத்தவிடம் சொன்னார்கள். என் தாத்தா அங்கே போனார். அந்த வீட்டு மனிதர்கள், பிளேக்கி அவர்களது கோழியைக் கொன்றுவிட்டதாகக் கூறினார்கள். அது பொய். எங்கள் பிளேக்கி மிகுந்த கட்டுப்பாடு கொண்டவன். ஒரேயொரு முறை மட்டும் அவன் எங்கள் வீட்டுச் சேவலிடம், அதன் சில இறகுகளை பிய்த்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டான். அதற்காக, என் பாட்டியிடமிருந்து, முன்னங்கால்கள் மண்ணில் படிய அழுது மன்னிப்புக் கேட்கும்வரை, விளக்குமாற்றால் அடி வாங்கி தண்டிக்கப்பட்டான். என் தாத்தா, தானே அந்த விளக்குமாற்றால் அடி வாங்கியதுபோல், விசனமுற்றிருந்தார். அந்த சேவல் பாட்டியின் செல்லம். அது முதல், நல்ல மனிதர்கள் பெண்ணிடம் முற்றிலுமாக சண்டையிடுவதை தவிர்த்துவிடுவதுபோல், பிளேக்கி,எந்தக் கோழியையும் தொல்லைப்படுத்தியதில்லை.

நான் வளர்ந்த பிறகே, உண்மையான வேட்டைக்காரர்கள், அதிகம் பேசுவதில்லை என்பதை உணர்ந்தேன்.

“தாத்தா, அந்தப் புலியை பார்த்தபோது நீங்கள் பயந்தீர்களா?”

“கெட்ட மனிதர்களே என்னை பயமுறுத்துகிறார்கள், புலிகள் அல்ல.”

“தாத்தா நீங்கள் கெட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறீர்களா?”

“புலிகள் அதிகமில்லை, ஆனால் கெட்ட மனிதர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆனால்,மனிதர்களை நாம் சுட முடியாது.”

“ஆனால், அவர்கள் கெட்டவர்கள்!”

“நல்லவர் கெட்டவர் யார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.”

“சொல்ல முடிந்தால், அவர்களை சுடலாமா?”

“அது சட்டத்தை மீறுவது.”

“கெட்டவர்கள் சட்டத்தை மீறுபவர்கள்தானே?”

“கெட்டவர்களை சட்டம் கட்டுப்படுத்த முடியாது.காரணம்,கெட்டவர்கள் தங்கள் இதயத்தில் கெட்டவர்களாக இருக்கிறார்கள்.”

“தாத்தா, இன்னும் நீண்ட தூரம் போக வேண்டுமா?”

“ம்ம்”

“தாத்தா, என்னால் இனிமேல் நடக்க முடியாது.”

தாத்தா, குனிந்து உட்கார, அந்த அம்மணச் சிறுவன் அவர் முதுகில் ஏறிக்கொள்கிறான். அவனை முதுகில் சுமந்தபடி, ஒவ்வொரு அடியாக, மணலில் நடக்கிறார். அந்தப் பையன், குதிரை மேலேறியதுபோல், சந்தோசத்தில் கால்களை உதைத்துக்கொண்டு கூச்சலிடுகிறான். நீ உன் தாத்தாவின் முதுகு தூரத்தில் மெல்ல பின்னகர்ந்து, ஒரு மணல் திட்டுக்குப் பின்னால் மறைவதைப் பார்க்கிறாய். அதன் பின் அங்கே நீயும் அந்தக் காற்றும்தான்.

மணலின் விளிம்பில், மஞ்சல் புகை வரிசையொன்று எழுந்து, ஒரு மாயக்கரம்போல், மணல்images திட்டைக் கலைத்து விரியச் செய்கிறது. நீ ஒரு பாலைவனத்தில் இருக்கிறாய். அது தொடுவானம் வரை, சிவப்பு எரிதழல், மரணம் போல அசைவற்ற ஒரு வரண்ட கடல். நீ ஒரு விமானத்தில், தக்லமக்கான் பாலைவனத்திற்கு மேல் பறந்துகொண்டிருக்கிறாய். அந்தப் பிரம்மாண்ட மலைத்தொடர், ஒரு மீனின் எழும்புக்கூடுபோல் தோன்றுகிறது. அந்த விரிந்த மலைத்தொடர் நிச்சயமாக இந்த எரியும் வரண்ட கடலால் விழுங்கப்படும். ஆனாலும், மார்ச் மாதத்தில், தக்லமக்கன் (taklamakan) கடுங்குளிருடனிருக்கும். அந்தச் சில நீல வட்டங்கள் ஒருவேளை உறைந்த ஏரிகளாகவும்,வெள்ளை விளிம்புகள் ஆழமற்ற கடற்கரையாகவும், இறந்த மீனின் கண்களைப்போல இருக்கும் அந்தக் கரும்பச்சை புள்ளிகள், கடலின் ஆழப் பகுதியாகவும் இருக்கலாம். அது என்ன புராதன நகரான,லௌலானா? அதன் இடிபாடுகள் கீழே. உன்னால் அதன் சிதைந்த சுவர்களைப் பார்க்க முடிகிறது. அரண்மனைகள் எல்லாம் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இங்கே ஒரு காலத்தில் புராதன  பெர்சிய, சீன கலாச்சாரங்கள் சங்கமித்து, பின் இந்த பாலைவனத்துக்குள் புதைந்தன. இந்த ஒரு வாழ்நாளில் நீ லௌலானுக்குச் சென்றுவர இயலாது.

குனிந்து, கீழே சிதைந்த லௌலானைப் பார்க்க, நீ உன்னை, ஒரு கடற்கரையில் படுத்திருப்பதைப் பார்க்கிறாய். உனது விரல்களுக்கிடையில் உதிரும் மென்மணல் ஒரு திட்டாகிறது. அதனடியில் ரத்தம் வராமல் உன் விரலைக் காயப்படுத்திய அந்த இறந்த மீன் கிடக்கிறது. காயத்தின் வலியைப் பொருட்படுத்தாமல், நீ தொடர்ந்து தோண்டி, ஒரு இடிந்த சுவரைக் காண்கிறாய். அது நீ இளமைக்காலத்தில் வாழ்ந்த வீட்டின் முற்றத்துச் சுவர். அதன் பின்னால், நீ ஒருநாள் உனது தாத்தாவின் மீன் தூண்டிலை எடுத்துச் சென்று பழம் பறித்து, அவளுடன் பங்குபோட்டுக்கொண்ட அந்த பேரிச்சம்பழ மரம் இருந்தது. அவள் அந்த இடிபாடுகளிலிருந்து வெளியேற, நீ அது நீ பேரிச்சம்பழத்தைப் பங்குபோட்டுக்கொண்ட, அந்தப் பெண்தானா என்பதை உறுதிசெய்துகொள்ள அவளைத் தொடர்கிறாய். உன்னால் அவளது முதுகுப்புறத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. பதட்டத்துடன், நீ அவளைத் தொடர, அவள் ஒரு மென்காற்றுபோல் நடந்து போகிறாள். உன்னால்,அவளை நெருங்க முடியாது.

பெரியதொரு ஓலத்துடன், இடம்பெயரும் மஞ்சல் மணல் மெதுவாக ஒரு திட்டாகி, பின் அலையலையாக சரிந்திறங்குகிறது – மூச்சுப்போல, பாடுவதைப்போல, அலைகள் எழுந்தும் விழுந்தும் விரிந்து செல்கிறது. இடம்பெயரும் மணலுக்குக் கீழே அழுவதுபோல் பாடுவது யார்? உன் காலடியிலிருக்கும் அந்த ஓசையை தோண்டி எடுக்க தவிக்கிறாய். துயரம் தோய்ந்த அந்தக் குரலை, ஒரு துளையிட்டு வெளியேற்ற விரும்புகிறாய். ஆனால், நீ அதைத் தொட்டதும் அது மேலே வர மறுத்து, மேலும் கீழ் நோக்கி துளையிட்டுச் செல்கிறது. அது, தக்கவைத்துக்கொள்ள முடியாத ஒரு நீர்ப்பாம்பின் வழுவழுப்பான வாலைப் பிடித்ததுபோல, நழுவிச்செல்கிறது. நீ வெறித்தனமாக, இரு கைகளாலும் மணலைத் தோண்டுகிறாய்.

கைகளில் ஒருவித உராய்வு ஏற்பட, ஏதோ கூர்மையான ஒன்று விரலைக் காயப்படுத்தியிருந்தது. ஆனால், ரத்தம் வரவில்லை. அது என்னவென்று பார்க்கும் உறுதிகொள்கிறாய். தொடர்ந்து தோண்டி, இறுதியில் ஒரு இறந்த மீனை மேலே எடுக்கிறாய். அதன் தலை தரை பார்த்திருக்க, அதன் வால்தான் உன்னைக் காயப்படுத்தியிருக்கிறது. விறைத்து கடினமாக இருந்த அந்த மீன் அந்த ஆற்றைப்போலவே வரண்டிருந்தது; வாய் இறுக மூடி, விழிமணிகள் சுருங்கி. நீ அதை நோண்டுகிறாய், பிழிகிறாய், மிதித்துத் தூக்கி வீசுகிறாய். ஆனால், அது எந்த ஒலியும் எழுப்பவில்லை. அந்த மணல்தான் ஒலி எழுப்புகிறது, மீன் இல்லை. அது உன்னைக் கேலி செய்யும் அதன் முணுமுணுப்பு. அந்த இறந்த மீன், எரிக்கும் சூரியனில் விறைத்து, வாலைத் தூக்குகிறது. நீ திரும்பிக்கொள்கிறாய். ஆனால், அதன் வட்டக் கண்கள் தொடர்ந்து உன்னை வெறிக்கிறது. அதைக் காற்றும் மணலும் புதைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு நீ அங்கிருந்து அகன்று செல்கிறாய். நீ அதை மீண்டும் தோண்டி எடுக்கமாட்டாய்.இனி ஒளியை அது பார்க்க வேண்டாம்: அது அங்கேயே, மணலில் புதையுண்டு இருக்கட்டும்.

நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்?

நீ உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறாய்,ஒரு காலத்தில் நீ சிறுவனாய் இருந்தாயே அந்தச் சிறுவனோடு.

உடை இல்லாமல் அம்மணமாய் இருந்தவனா?

அம்மணமான ஆன்மா.

உனக்கு ஆன்மா உண்டா?

இருக்கலாம்.இல்லையெனில் இந்த உலகம் இன்னும் தனிமை மிகுந்ததாக இருக்கும்.

நீ தனிமையில் இருக்கிறாயா?

இந்த உலகில்,ஆம்.

வேறென்ன உலகம் உண்டு?

 பிறர் கண்களுக்குத் தெரியாத அந்த உனது உள் உலகம்.

உனக்கு ஓர் உள் உலகம் உண்டா?

அப்படித்தான் நம்புகிறேன்.அங்கு மட்டுமே நீ நீயாக இருக்க முடியும்.

என் மனைவியின் பேச்சுக்குரல் கேட்கிறது.அவளுடைய அத்தையும் மாமாவும் தொலைவிலிருந்து வந்திருக்கிறார்கள்.அதிகாலையிலிருந்து ஒளிபரப்பான உலகக் கோப்பைக்கான ஜெர்மனி அர்ஜென்டினாவுக்கிடையிலான இறுதிக் காற்பந்து போட்டி,முடிந்துவிட்டிருந்தது.

எழுந்து, நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துபோன என் தாத்தாவுக்காக,நான் வாங்கிய பத்துக் குழல் கொண்ட மீன் தூண்டில், டாய்லெட் நீர்த்தொட்டிக்கு மேல் இன்னமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மூலம்: Buying a fishing rod for my grandfather, GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...