வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர்.
நிகழ்வின் முதல் அங்கமாக நவீன் வரவேற்புரை வழங்கினார். அவர் தமதுரையில் வல்லினம் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலக்கிய சர்ச்சைகள் குறித்தும் அதன் உண்மை நிலை குறித்தும் விளக்கினார். நாளிதழ்களில் தொடர்ந்து வெளிவந்த சர்ச்சைகள் குறித்து தெளிவான விளக்கத்தினை வழங்கினார்.
தொடர்ந்து வல்லினத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அறிமுகமொன்றினை கே.பாலமுருகன் வழங்கினார். வல்லினம் அச்சு இதழாக வெளிவந்தது தொடங்கி இப்போது இணைய இதழாக வெளிவருகிற நிலையில் முன்னெடுக்கும், முன்னெடுத்திருக்கும் தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், ஜனவரி தொடங்கி வல்லினம் மீண்டும் அச்சு இதழாக வெளிவரவிருக்கும் மகிழ்வான தகவலையும் அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து, இதுவரை நூல் வெளியீடுகளில் இல்லாத புதிய முயற்சியாக “நூல்கள் ஒரு பார்வை” என்ற தலைப்பில் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியிடப்படும் நூல்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கே.பாலமுருகனின் இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள் சிறுகதை தொகுப்பு குறித்து அ.பாண்டினும் ம.நவீனின் விருந்தாளிகள் விட்டு செல்லும் வாழ்வு கட்டுரை தொகுப்பு குறித்து சுவாமி பிரமானந்தாவும் பூங்குழலி வீரனின் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் கவிதை தொகுப்பு குறித்து டாக்டர் மா.சண்முகசிவாவும் கலந்துரையாடினர். இம்மூன்று நூல்களில் வெளிப்படும் பொதுவான சமூகவியல்; பார்வைகள் குறித்து செம்பருத்தி ஆசிரியர் கா.ஆறுமுகம் கருத்துரைத்தார். இவர்கள் நால்வரையும் மிகச் சரியான முறையில் ஒன்றிணைத்து அறிவார்ந்த முறையில் கேள்விகள் கேட்டு இக்கலந்துரையாடலை தயாஜி திறம்பட வழிநடத்தினார்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து நூலாசிரியர்கள் உரை இடம்பெற்றது. நூலாசிரியர்களின் உரையினைத் தொடர்ந்து கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வல்லினத்தால் வெளியிடப்பட்ட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இறுதி அங்கமாக குவர்னிகா வெளியீடும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் இலக்கிய உரையும் இடம்பெற்றது. குவர்னிகாவில் இடம்பெற்றுள்ள சில படைப்புகள் குறித்தும் பொதுவான இலக்கிய வெளிபாடுகள் குறித்தும் பேராசிரியர் அ.மார்க்ஸ் உரையாற்றினார்.
வல்லினத்தின் 5-வது கலை இலக்கிய விழா மாலை மணி 5.30 மணிக்கு முடிவுற்றது. நிகழ்வு முடிவுற்ற பிறகும் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பிரிந்து இலக்கிய உரையாடல்கள் இடம்பெற்றபடி இருந்தன. நண்பர்கள் பலர் நூல்களை வாங்குவதிலும் பரபரப்பாக காணப்பட்டனர்.
நிகழ்வு மட்டுமே முடிந்திருக்க எங்களுக்கான கடமைகளும் பணிகளும் தொடர்ந்து நிகழ்ந்தபடியும் நிகழ்வதற்கான தருணம் ஒன்றை நோக்கி காத்திருப்பதையும் இந்த 5-ஆவது கலை இலக்கிய விழா எங்களுக்கு உணர்த்திப் போயிருக்கிறது.