வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது.

வழக்கம்போல பட்டறை கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 14 செப்டம்பர் 2013 நண்பகல் 12 மணிக்கெல்லாம் பட்டறைக்கான மாணவர் பதிவு தொடங்கியிருந்தது. சரியாக 2.00 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்பதில் இம்முறை கூடுதல் உறுதி இருந்தது. வகுப்புக்கு வருவதாக உறுதி அளித்திருந்த பெரும்பாலான மாணவர்கள் இம்முறை வந்திருந்தனர். பல புதிய முகங்கள் இம்முறை இணைந்துகொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தது.

பட்டறையின் முதல் அங்கமாக பேராசிரியர் அ.மார்க்ஸ் குறித்த அறிமுகவுரையினை யோகி வழங்கினார்.

அறிமுகவுரை

vallinamclasses4aமார்க்ஸ் அந்தோணிசாமி என்ற அ.மார்க்ஸ் 37 ஆண்டுகளாக இந்திய அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவர் எழுத்தாளர், பேச்சாளர், களச் செயற்பாட்டாளர் என பன்முகங்களில் தனி முகவரியோடு அறியப்படுவர். இவரின் தந்தை கூலித் தொழிலாளியாக சிலாங்கூர் மாநிலத்தில் 14 ஆண்டுகளாக வேலை செய்திருக்கிறார். அதோடு பொதுவுடமை கட்சியை நிறுவிய பெருமையும் அவரைச் சாரும்.

இதனால், மலேசியாவுக்கும் அ.மார்க்ஸ்சுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. இலக்கிய வெளியில் நன்கு அறியப்பட்ட அ.மார்க்ஸ் தமிழகத்தின் ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவிலும் ஒருவராக பங்கு வகித்தவர். இவர் அரசியல், இலக்கியம், மனித உரிமைகள் குறித்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவெளியில் இயங்கி வருகிறார். இவரின் கருத்துகள் பல வேளைகளில் பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அறம் எனப் பட்டதை பேசுவதற்கும் எழுதுவதற்கும் விவாதிப்பதற்கும் அவர் தயங்கியதில்லை.

இவரது படைப்பாக இதுவரை 50 நூல்கள் வெளியீடு கண்டுள்ளன. இன்று இவர் முழுநேர எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் மனித உரிமைகள் சார்ந்த களப்பணியிலும் பங்குபற்றி வருகிறார். நவீன சிந்தனைக்கு மனம் திறப்பவர்களுக்கு இவரின் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எழுத்துகளின் மீதான தொடர் வாசிப்புகள், நேரடி களப்பணி அனுபவங்கள் ஆகியவற்றைப் பின்புலமாக கொண்டு வெளிப்படும் இவரது எழுத்துகள் இவரை விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கு உதவுகிறது. நவீன இலக்கிய உலகில் தனக்கென தனி பாணியை வைத்திருக்கும் பேராசிரியர் அ. மார்க்ஸை மலேசிய இலக்கிய வெளிக்கு அறிமுகப்படுத்துவதில் வல்லினம் பெருமை கொள்கிறது என தனது அறிமுகவுரையில் யோகி குறிப்பிட்டார்.

யோகியின் அறிமுகவுரைக்குப் பின் பட்டறையில் பங்கு கொண்ட மாணவர்கள் தங்களையும் தங்களின் இலக்கிய பின்புலம் மற்றும் பரிட்சயம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

மாணவர்களின் அறிமுகப்படலத்திற்குப் பின் பேராசிரியர் அ.மார்க்ஸின் நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறையின் முதலாம் அமர்வு தொடங்கியது.

நவீனத்துவம்  – பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம்

vallinamclasses4cஅதிகமாக இளைஞர்களில் குறிப்பாக பெண்கள் பட்டறையில் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அ.மார்க்ஸ் தான் 37 ஆண்டுகள் இயற்பியல் பேராசிரியராக இருந்த காலகட்டத்தையும் அப்போதான தனது இலக்கிய நகர்வுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். இலக்கியம் என்பது மாணவர்களால் இரசித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விசயம். ஒரு ஆசிரியராக தன்னால் இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலையும் ஆனால் வகுப்புக்கு வெளியே தான் ஒரு இலக்கியவாதியாக எவ்வாறு வெளிப்பட்டார் என்பதையும் அ.மார்க்ஸ் நினைவு கூர்ந்தார். நவீன இலக்கியங்கள், நவீன படைப்புகள் என்பதை தேடிப் படிப்பவர்கள் எல்லா இடங்களிலும் குறைவாகவே இருப்பதாக பேராசிரியர் குறிப்பிட்டார். தொடக்கமாக, இரண்டு நாள் பட்டறையில் இடம்பெறப்போகும் உரையாடல் குறித்த அறிமுகத்தினைக் பேராசிரியர் வழங்கினார். நவீனத்துவம் – பின்நவீனத்துவம் குறித்த அறிமுகம் – இரண்டு நாள் பட்டறையில் அறிமுகத்தினை மட்டும்தான் தன்னால் செய்ய இயலும் என அவர் குறிப்பிட்டார். இவ்விரு இலக்கிய பரிமாணங்களும் அகன்ற துறையாக இருப்பதாலும் தத்துவங்களை சார்ந்திருப்பதாலும் அறிமுகம் நிகழ்வது மட்டுமே சாத்தியமானது.

நவீனத்துவம் – பின்நவீனத்துவம் வெறும் இலக்கியம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. இலக்கியத்தில் “Literary Modernism” என்று சொல்லப்படுவது வழக்கம். இலக்கியம், ஓவியம், சிற்பக் கலைகள்,மற்றும் கட்டக் கலைகளிலும் நவீனத்துவம் – பின்நவீனத்துவம் என்பது தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ‘Modernity’ என்ற சொல்லும் பரவாலான பயன்பாட்டில் இருப்பதைப் பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.  ‘Modernity’ என்பது சமூக சிந்தனை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சொல்லக்கூடிய ஒரு பயன்பாட்டு வார்த்தை. அதைப்போல ‘Post Modernity’ என்பது அதற்கு அடுத்த கட்டமாக தத்துவம், சிந்தனை போன்றவற்றில் உருவாகியிருக்கக்கூடிய ஒன்றைச் சொல்லக் கூடிய விசயம். இது எல்லாவற்றையும் விட ‘‘Modern’ அல்லது நவீனம் என்ற வார்த்தையை நாம் பரவலாக பயன்படுத்துகின்றோம். எல்லாம் புதிதாய் இருப்பதையும் பழமையிலிருந்து வேறுபட்டிருப்பதையும் நாம் ‘Modern’ என்கிறோம். இலக்கியத்தில் உள்ள ஒரு வெளிப்பாட்டு முறையை நவீனத்துவம் – பின்நவீனத்துவம் என்று சொல்வதும் தத்துவ வளர்ச்சிப் போக்கில் ‘Modernity – Post Modernity’ எவ்வாறு பேசப்படுகிறது என்பதையும் இதற்கு என்ன வேறுபாடு என்பதையும் கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது.

இலக்கியம் என்பது எப்போதும் தன்னைப் புதிதாக சொல்லக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றை மீண்டும் எழுதுவதென்பது யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது. எனவே, புதிதாக ஒன்றைச் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது. அப்படி புதிதாக சொல்லக் கூடியவற்றில் பேசப்படுகிற விசயங்கள் புதிதாக இருக்க வேண்டும், அல்லது பேசுகிற முறை புதிதாக இருக்க வேண்டும், அல்லது விசயம் முறை இரண்டும் புதிதாக இருக்க வேண்டும். எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலக்கியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

கல்வியலாளர்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிற வகையில் தமிழர்களான நமக்கு குறைந்தபட்சம் 3000 ஆண்டுகால இலக்கிய வரலாறு இருக்கிறது. சங்க காலம் தொடங்கி இன்றைய பின்நவீனத்துவம் வரை நமது இலக்கியம் இருக்கிறது. சங்க காலத்தில் அகவல் என்கிற வடிவத்தில் பாடல்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் சங்க கால முடிவில் இலக்கியத்தின் தன்மை மாறுகிறது. சங்க கால பாடல் அகம், புறம், வீரம் என்ற நிலையில் அதற்குப் பின்பான திருக்குறள், நாலடியார் போன்ற பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஒழுக்கம், கற்பு போன்றவற்றைப் பேசக் கூடிய நிலை காணக்கூடியதாய் இருக்கிறது. அதற்குப் பின் காப்பியங்கள் வருகிறது. இலக்கியத்தின் வெளிப்பாட்டு முறை என்பது இங்கு மேலும் அகற்சி அடைந்திருப்பதைக் காண முடிகிறது. சொல் வளம் பெருகிறது. சொல்லக் கூடிய தன்மையும் மாறுகிறது. பின் இதற்கெல்லாம் இலக்கணம் எழுதப்படக் கூடிய தன்மையும் காணப்படுகிறது. பின் சிற்றிலக்கியங்கள் தோன்றுகிறது.

18-ஆம் நூற்றாண்டில் அச்சு கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு முன்பதாக உரையாசிரியர்கள் எழுதிய உரை தவிர மற்ற எல்லாம் கவிதையாகவே இருக்கிறது. அச்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் உரைநடை என்பது வெளிப்பாட்டுச் சாதனமாக வருகிறது. உரைநடை  என்பது இலக்கியத்தை ஜனநாயகப்படுத்துகிறது. உரைநடை என்பது எல்லாரும் படிக்கக் கூடிய விசயமாக மாறுகிறது. இலக்கியத்தில் இதுவரை காலமும் இருந்த சாதிமத வேறுபாடுகளை உடைத்து, ‘உரைநடை’ இலக்கியத்தை ஜனநாயக்கத்தின் குறியீடாக மாற்றுகிறது. அச்சு என்பதும் யார் வேண்டுமானாலும் புத்தகத்தைப் பதிப்பித்து வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. எல்லாம் கவிதையாக எழுதப்பட்ட காலம் மாற்றம் கண்டு உரைநடையில் பயன்பாடு தொடர்கிறது. இங்கிருந்துதான் சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் பிறக்கின்றன. எனவே, இலக்கியம் என்பது புதிது புதிதாக தன்னை உள்ளடக்க ரீதியாகவும் வெளிப்பாட்டு ரீதியாகவும் தன்னை மாற்றிக் கொண்டே வருவதும் மாறிக் கொண்டே வருவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

vallinamclasses4bநவீன இலக்கியத்தின் தன்மை என்பது முதலில் தன்னை நவீனமாக இருத்திக் கொள்ளுதல் என்பதாகும். இப்படியாக இலக்கியம் தன்னை நவீனப்படுத்திக் கொண்டே இருக்கும்போது ஏன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் நாம் நவீன இலக்கியம் என்கிறோம்? ஐரோப்பாவில் நவீன இலக்கியம் என்பது 18-ஆம் நூற்றாண்டு இறுதி, 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம், இறுபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரைக்குமான காலகட்டத்தைதான் நவீனத்துவம் என்று சொல்லக் கூடிய இலக்கிய வெளிப்பாட்டு முறை வருகிறது. இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம் எல்லாம் தனித்தனியாக பிரித்து பார்க்கக் கூடிய துறைகள் அல்ல. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வருகிற பொழுதெல்லாம் தத்துவம் தன்னை வளர்த்துக் கொள்கிறது. தத்துவம் மாறுகிற நிலையில் இலக்கியம் தன்னை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலையினை அடைகிறது.

சமூகம் மாற்றம் காண்கிற போது எல்லாமும் அதனோடு இணைந்து மாற வேண்டிய சூழல் உருவாகிறது. தத்துவத்தை நாம் புராதன தத்துவம் என்றும் மத்திய கால தத்துவம் என்றும் நவீன கால தத்துவம் என்றும் பிரிக்கின்றோம். இந்த நவீன கால தத்துவத்தை அறிவொளி காலம் என்றும் மறுமலர்ச்சிக் காலம் என்றும் அழைக்கிறார்கள். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வருகிற பொழுதெல்லாம் வாழ்க்கைப் பற்றிய பழைய நம்பிக்கைகள் உடைகிறது அல்லது மாறுகிறது. நாம் எப்படி இருக்கிறோம், வாழ்கிறோம், எப்படியான பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்பது குறித்த உலக கண்ணோட்டம் தத்துவம் எனப்படுகிறது. அதைத் தொடர்ந்து மனிதனுடைய அறிவின் மூலம் உலக இயக்கங்களைத் துல்லியமாக வரையறுக்க முடியும் என்ற நிலை வருகிறது. எல்லாவற்றையும் கருவி கொண்டு அளந்து வாய்ப்பாடுகள் மூலமாக சொல்லி விளக்கி இந்த உலக இயங்கங்களை விளக்கிவிட முடியும் என்ற  நிலை வருகிறது. இங்குதான் மனிதனின் பகுத்தறிவை முன்னிலைப்படுத்தும் நவீனத்துவ காலம் பிறக்கிறது.

ஆனால், அதை தொடர்ந்து வந்த காலகட்டம் இவை எல்லாவற்றையும் கேள்விக் குள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் வாய்ப்பாடு கொண்டு சொல்லி விட முடியும் என்பதும் எல்லா பொருளுக்கும் உறுதியான தன்மை இருக்கிறது என்பதும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கான தெளிவான விளக்கங்களும் முன்வைக்கப்படுகிறது. எதுவும் நிலையானதும் முழுமையானதும் இல்லை என்கிற நிலை உருவாகிறது. இந்த நிலையில் எல்லாவற்றையும் உறுதியற்ற நிலையில் அணுகும் பின்நவீனத்துவம் முன்வைக்கப்படக் கூடிய நிலை உருவாகிறது.

இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் மாறுபடுகிறது. தத்துவத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிறது. உலகத்தின் பார்வை மாறுகிறது. இப்படியாக ஒன்றின் தொடர் நிகழ்வாக எல்லாம் மாறியபடியே இருக்கிறது. இலக்கியமும் தன்னையும் தன் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடிய நிலை உருவாகிறது.

நவீன காலம் என்றறியப்படும் 14ஆம் – 15ஆம் நூற்றாண்டின் காலக் கட்டத்தில் மேற்குலகில் இதுவரை காலமும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த மதமும் இலக்கியமும் பிரிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்நிலையானது மாற்றம் காணவில்லை. மதத்திலிருந்து பிரித்தெடுத்து பகுத்தறிவு கண் கொண்டு பார்ப்பதுதான் நவீனத்துவம். தமிழ்நாட்டில் இது நடக்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பியவர்களில் மிக முக்கியமானவர் பெரியார். இவர் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிந்தனையாளர். உலகிலுள்ள மற்ற சமுதாயங்களைப் போல அறிவும் மானமும் உள்ள சமுதாயமாக தமிழ்ச்சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்பதை தனது பணியாக கொண்டவர். உலக மொழி வரலாற்றில் தமிழ் இன்னும் முன்னேறவில்லை என்றும் இதற்கு காரணம் மதத்திலிருந்து மொழி பிரியாததே என தொடர்ந்து கூறுகிறார் பெரியார். மொழி மூலமாகத் தான் நாம் அடையாளம் காட்டப்படுகிறோம். ஆகவே, அந்த மொழி என்பது மதத்திலிருந்து கண்டிப்பாக பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்பதை பல்வேறு சான்றுகளுடன் பெரியார் தொடர்ந்து வற்புறுத்தினார்.

எழுத்துகளையும் பாவகைகளையும் கூட சாதி ரீதியாக பிரித்துப் பார்க்கும் தமிழிலக்கியத்தில் மட்டுமே இருக்கும் கொடுமைகள் களையப்பட வேண்டும் என்பதே பெரியாரின் முக்கிய பணியாக இருந்தது. இப்படியான காலக்கட்டத்தில் தமிழில் உருவான நவீனத்துவம் என்பது மேல்நாட்டில் உருவான நவீனத்துடன் எல்லா வகையிலும் மாறுபட்டே இருந்தது. நடை, வடிவம் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் மத குப்பைகளே நவீன தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் பகுத்தறிவு என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு பின்நவீன சிந்தனையின் வெளிப்பாடு வெளிவரத் தொடங்கியது. பகுத்தறிவு என்பதை மையப்படுத்தியிருந்ததை உடைத்து வெளிவர வேண்டும் என்ற சிந்தனைக்குப் பிறகே பின்நவீனத்துவ வெளிப்பாடு எழுந்தது. எல்லாவற்றையும் நாம் ஆய்வு செய்துவிட முடியாது. இந்த உலகத்தில் நாம் உறுதிபட சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற பிரகடனத்தை பின்நவீனத்துவம் முன்மொழிகிறது. அது எவ்வாறு இலக்கியத்தில் பேசப்படுகிறது என்பதை நாம் தொடர்ந்து காணலாம்.

மதம் தத்துவத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு பிரமாண்டமான தத்துவ வளர்ச்சி மேலை நாடுகளில் ஏற்பட்டது. ஆனால் இந்த வளர்ச்சி இந்தியாவில் ஏற்படவில்லை. இந்த பின்னணியில் தமிழில் நவீனம் என்பது எப்படி ஏற்பட்டது என்பது மிகவும் சுவாரசியமானது. சாதிகள் தங்களை நிருவிக் கொள்வதற்கும் பதிப்பித்துக் கொள்வதற்கும் முதலில் அச்சு என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. 1800-ஆம் காலக்கட்டத்தில் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞர் இந்தியாவில் 2 மொழிக்குடும்பங்கள் இருந்ததாக நிறுவுகிறார். வடமொழிக் குடும்பம் வேறு எனவும் தென்மொழிக் குடும்பங்கள் வேறு எனவும் கால்டுவெல் நிறுவுகின்றார். அப்படி அவர் நிறுவும்போது தமிழ்நாட்டில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதுவரை காலமும் வடமொழியே மூலம் என்றிருந்த நிலை மாறி தமக்கென ஒரு தனி பண்பாடு  இருப்பதை தமிழர்கள் உணர்கின்றனர். இந்த காலகட்டத்தில்தான் சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால், மிகப் பெரும் எழுச்சி தமிழர்களிடையே ஏற்பட்டது. மொழியில் ஏற்பட்ட புரட்சியாக உணரப்பட்டது. இந்த காலகட்டத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் பரவலாக அச்சிடப்பட்டன. தமிழில் முதல் உரைநடை நாவல் சிறுகதைகளை ராஜம் ஐயரும் வேதநாயகம் பிள்ளையும், மாதவய்யாவும் எழுதுகின்றனர்.

இலக்கியத்திலிருந்து மதம் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு வந்த நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களில் கூட மதம், சாதி, வர்ணம் போய்விடக் கூடாது என்றே எழுதினார்கள். இதை முதல்கட்ட நாவல்கள் எனக் கூறலாம். தமிழ் நவீன இலக்கியத்தின் மைல்கல்லாக கருதப்படுவது மணிக்கொடி பத்திரிகை – 1933-ஆம் ஆண்டு தீவிர இலக்கியத்தை நோக்கி தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக உருவானவர்கள்தான் மௌனி, புதுமைப்பித்தன், எஸ்.பி. வெங்கட்ராம், போன்றவர்கள். இவர்கள் தமிழில் நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள் என அழைக்கப்படுகின்றனர்.

நவீனத்துவம்பின் நவீனத்துவம் கலைப் படைப்புகள்சில உரையாடல்கள்

vallinamclasses4dநவீனத்துவத்தை நன்கு விளங்கிக் கொள்ள பயன்படும் என்று பரவலாக நம்பப்படும் தெரிதா, மிஷேல் ஃபூக்கோவின் நூல்கள் தமிழில் வெளிவரவில்லை. அதற்காக தமிழைக் குறை சொல்ல முடியாது. விளங்கிக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இங்கு குறைவாகவே நிகழ்கின்றன. மிகவும் பழைய மொழியாக இருப்பதும் இன்னும் பழைய மொழியாகவே இருப்பதும் கூட பலவேளைகளில் ஒரு சிக்கலாக மாறிவிடுகிறது. இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்குரிய மொழியாக அது இல்லாததே இன்று பல நூல்கள் தமிழில் வராததற்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் முயன்றுதான் ஆக வேண்டியிருக்கிறது.

இங்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில் கூட இதே சிக்கல்தான் தொடர்கிறது. பின்நவீனத்துவம் என்றால் ஆபாசமாக எழுதுவது, பின்நவீனத்துவ அரசியல் என்றால் எல்லாவித ஒற்றுமைக்கும் எதிராக பேசுவது, சிதறுண்டு போவதைச் சொல்வது. உண்மையில் அரசியல் என்றால் அது எல்லாரும் சேர்ந்து நிற்பதுதான். ஆனால் பின்நவீனத்துவவாதிகள் பெண்கள் தனியாகவும் தலித்துகள் தனியாகவும் முஸ்லீம்கள் தனியாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர். இதனால் இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஏன் என்றால் அரசாங்கம் பிரித்து வைப்பதைதானே விரும்புகிறது. தெரிதா, மிஷேல் ஃபூக்கோ போன்ற மேலை ஏகாதிபத்திய ஆட்கள் ஏதேதோ சொல்லி குழப்பி விட்டு போயிருக்கிறார்கள். அது தெரியாமல் இங்குள்ளவர்களும் அது குறித்து பேசுகின்றனர் என குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இலக்கிய வெளியில், அறிந்து கொள்ளுதலும் புரிந்து கொள்ளுதலுமே முக்கியமானது. புரிந்துக் கொள்வதற்கு நமக்கு சில விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதிகளுக்காக நாம் பயிற்றுவிக்கப்படுகின்றோம். ஒரு விசயத்தை விளங்கிக் கொள்வதற்கான மொழியும் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அந்த மொழியைத் தாண்டி வேறு மொழியில் பேசக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. ஆய்வு முறை என்றாலும் அந்த ஆய்வு எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் பார்த்தோமானால் யார் யாரெல்லாம் ஆய்வு முறைக்கு எதிராக நடந்திருக்கிறார்களோ அவர்கள்தான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உண்மை என்பது எல்லா இடத்தில் உண்மையாக செயல்பட முடியாது. ஒரு காலத்தில் நல்ல விசயமாக பார்க்கப்படுவது இன்னொரு காலக்கட்டத்தில் கெட்ட விசயமாக பார்க்கப்படும். காலங்கள் மாறும்பொழுது ஒன்றிற்கான மதிப்புகளும் தொடர்ந்து மாறியபடியே இருக்கிறது.

vallinamclasses4eதலித் இலக்கியம் தமிழ் நாட்டில் தொடங்கியபோது வார்த்தைகளைக் கொச்சையாக பயன்படுத்துகின்றனர் என் குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. வேறுபாட்டைச் சுற்றிக் காண்பிப்பதற்கும் ஏற்கனவே இருக்கிற மனநிலையிலிருந்து வாசகர்களை அதிரடியாக மாற்றுவதற்கும் பல்வேறு விதமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வேளையில் மொழியிலும் நாம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

பாமா என்ற தலித் எழுத்தாளர் கருக்கு போன்ற நாவல்களை எழுதியுள்ளார். பல மொழிகளில் கூட அவரது படைப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பேச்சு நடையிலான மொழியில் அவரது கருக்கு நாவல் எழுதப்பட்டிருக்கும். பழைய நாவல்களில் எழுதுபவர், கதைசொல்பவர், கதைமாந்தர்கள் இப்படி எல்லாருமே ஒரே மொழியில்தான் பேசுவார்கள். ஆனால் பாமாவின் நாவல் அப்படியல்ல. தீப்பெட்டித் தொழிற்சாலையில்  வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்கள் தங்களின் முதல் நாள் வேலை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதை அவர்கள் மொழியிலேயே அவர் பதிவு செய்திருக்கிறார். சில வேளை அந்த மொழி நமக்கு அருவறுப்பை ஏற்படுத்தலாம். ஆனால், ஏன் அருவறுப்பு ஏற்படுகிறது என்பதை நாம் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலக்கியம் என்பது நம்மை தொல்லைப்படுத்த வேண்டும். வாசிப்பவர்களுக்குச் சுகம் கூட்டுவதாக மட்டும் இருக்கக் கூடாது. அது நம்மை கேள்வி கேட்க வேண்டும். நம்மை அதிரடிக்க வேண்டும். அப்படி அதிரடிக்க வில்லை என்றால் நாம் அதைத் தாண்டி வெளியே வரவில்லை என்று அர்த்தம். ஒரு விசயம் நமக்கு புரியவில்லை என்றால் நமது சட்டகத்தை தாண்டி வேறு எதுவோ பேசப்படுகிறது என்று பொருள். புரிகிறது என்றால் சட்டகத்திற்குள் வந்து விட்டோம் என்று பொருள்.

ஒரே சட்டகத்திற்கு இடையிலான உரையாடல்கள் புதியதாக எதையும் கொண்டு வராது. இருவேறு சட்டகத்திற்கு இடையிலான உரையாடல்களை  சாத்தியப்படுத்திக் கொள்வதில் புதிய எழுத்து மொழிகள் உருவாகும்.

புரிதல் புரியாமை, எழுத்துக்களில் வரக்கூடிய ஆபாசம், அங்கீகரிக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட சொற்களுக்கு அப்பாற்பட்ட சொற்களைச் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள், அதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைப்பது என்பது எந்தளவிற்கு சரி என்பததை கேள்வி எழுப்ப வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்த நிலையில், எல்லாருக்குமான பொது அறம் என்று ஒன்றில்லை என பின்நவீனத்துவம் சொல்கிறது. ஆனால்  எல்லாருக்குமான பொது அறம் என்று ஒன்றில்லை என பின்நவீனத்துவம் சொல்கிறதே தவிர உங்களுக்கும் எனக்கும் இடையிலான அல்லது ஒரு குழுவுக்கான அல்லது ‘subject’-க்கும் Object–க்குமான உறவுகளைத்தான் நாம் எழுத்துகளில் பேசி வருகிறோம். தன்னிலை அதாவது நான் அல்லது நாம் வெளியிலிருக்கும் குரலை பார்க்கிறோம். அதை எழுதுகிறோம். எழுதுபொருள் என்பது ஒரு நபராக இருக்கலாம். நபருடைய வாழ்க்கையாக இருக்கலாம். அல்லது வேறு ஒன்றாக இருக்கலாம். அதைப் பற்றி நாம் எழுதுகிறோம். அல்லது மழை பெய்வதாக இருக்கலாம். அதை ஒரு கவிதையாக நாம் எழுதுகிறோம்.

நவீனம் என்ன சொல்கிறது என்றால் ‘subject’-க்கானது Object–கை துல்லியமாக கண்டுபிடிக்கும். ஆனால் பின்நவீனத்துவம் அது மாதிரி கண்டுபிடிக்க முடியாது என சொல்கிறது. Subject-க்கும் object– க்குமான உறவு இரண்டு தனித் தனி உறவு. ஓன்று மற்றொன்றை ஆய்வு செய்வதினாலேயே இரண்டுக்கும் இடையில் ஒரு உறவு ஏற்படுகிறது. பின் அது ஒரு நிகழ்ச்சியாக மாறுகிறது.

நாம் எல்லாருமே எப்போதும் ஏதாவதொரு முன்தீர்மானங்களுடன் வருகின்றோம். இலக்கியத்தில் கூட அப்படித்தான். அந்த முன்தீர்மானத்திற்கு அப்பாற்பட்டு நாம் சில விசயங்களைப் பேசும்போது அது நமக்குப் புரியாமல் போகிறது. ஆக முன்தீர்மானம் இல்லாமல் வாசிக்கக் கூடிய நிலைக்கு நாம் மாற வேண்டும்.

எல்லாருக்கும் பொதுவான அறமும் ஒழுக்கமும் இல்லை என்று சொல்வதால் தனிநபர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ள வேண்டும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. ஒழுக்கத்தை ஒரு பெருங்கதையாக நடத்திச் செல்வதைத்தான் பின்நவீனத்துவவாதிகள் மறுக்கிறார்கள். எல்லாருக்குமான ஒன்றாக, காலங்கடந்ததாக, எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடியதாக, எல்லா மக்களுக்கும் விடுதலை அளிக்கக் கூடியதாக, பேருண்மையாக என எதுவும் கிடையாது என்கின்றனர் பின்நவீனத்துவவாதிகள்.

இப்படியாக எளிய பல விளக்கங்களுடன் சோர்வின்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் வழிநடத்திய நவீனத்துவ-பின்நவீனத்துவ பட்டறை மிகுந்த பயன்மிக்க ஒன்றாக அமைந்தது.

1 comment for “வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

  1. valarmathi
    October 27, 2013 at 7:07 pm

    TARAPPADDA TAKAVALKAL PAYANULLAVAIYAGA ULLANA…NANDRI VALLINAM @ POONGKULALI

    VALARMATHI

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...