இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1)

imayam cover“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.”

இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் இந்தக் குரல்தான் அவரது படைப்பு மனதின் மையமும் என அறிவேன்.

இமையம் வாழ்க்கையை எழுதுகிறார். ஆனால் அவர் கதைகளில் காட்டும் வாழ்க்கையில் அவருக்கு எந்தப் பற்றுதலும் இல்லை. அதனால் அக்கதைகளில் வரும் கதாமாந்தர்களின் உரையாடலில் தலையிடும் நோக்கமும் அவருக்கு இல்லை. நிசப்தமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கதாசிரியன் ஒருவன் தங்களைப் பதிவு செய்து உலகத்துக்குக் காட்டப்போகிறான் என அறியாத அக்கதையின் கதாபாத்திரங்கள் கவித்துவமான வரிகளைத் தப்பித்தவறிக்கூட உதிர்க்காமலும் தங்களை கவனிப்பவருக்கு ஆர்வமூட்ட வேண்டும் என்ற துளியளவு அக்கறை இல்லாமலும் இமையம் உருவாக்கும் மாய காமிரா சட்டகத்திற்குள் பதிவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

இமையத்தின் சிறுகதைகளை விவாதிக்க முடியாது. வாழ்வில் முடிவுறாத துன்பத்தின் ஒரு கீற்றை அவர் வாசகனிடம் சிறுகதையாகப் பகிர்கிறார். அந்தக் காட்சியின் உச்சம் கொடுக்கும் அனுபவத்துடன் ஒன்றிப்போவதும் விலகிச்செல்வதும் மட்டுமே வாசகன் செய்யக்கூடியது. குறியீட்டுத்தன்மையையோ உள்மடிப்புகளையோ முற்றிலும் துறந்து நேரடித்தன்மையுடன் வாசகனை அணுகக்கூடியவை அவரது சிறுகதைகள். புரியாத தன்மைக்கு இமையம் சிறுகதையில் இடமே இல்லை. மலேசியாவில் இருக்கும் ஒரு வாசகனுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நிலத்தில் சஞ்சரிக்கும் அவர் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயலும் ‘இவர்கள் இவ்வாறு மட்டுமே நடந்துகொண்டிருக்கக்கூடும்’ என முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அனுபவமே கிடைக்கும். அதற்கு வாசகனின் பட்டறிவின் சேமிப்புக்கிடங்கை அவர் புனைவுகள் திறந்துவிடுவதும் காரணம். சூழலின் ஒரு பகுதியாக மட்டுமே வரும் அவர் கதாபாத்திரங்களின் அக ஓட்டங்களும் விளக்கப்படுத்தாமல் அழுத்தம் கொடுக்காமல் சொல்லப்படுபவை.

சாலையில் சென்றுகொண்டிருக்கும்போதும் சட்டென உயிர் பயத்தோடு பாய்ந்து வந்து நம்முன் விழும் மான்குட்டி மீண்டும் அடுத்த எல்லையில் இருக்கும் காட்டுக்குத் தாவியபின், பின்னாலேயே துரத்தி வந்து நம்மை ஒரு வினாடி முறைத்துவிட்டுச்செல்லும் புலியின் கண்கள் வரைதான் சிறுகதைகள் என இமையம் பதிவு செய்பவை.  அந்தக் கணத்தின் உக்கிரம் மட்டுமே அவர் வாசகனுக்குள் கடத்துவது. ஒருவேளை வந்த புலி சாலையின் வாகனங்களுக்குப் பயந்து திரும்பிச் சென்றாலும் அவர் காமிரா பதிவு செய்யுமேயொழிய ஒருபோதும் அந்தப் புலி தன் இயல்பில் இருந்து மாறி மான் குட்டியை நக்கிவிடுவதோ, குட்டி மான் வீறுகொண்டு புலியை பின்னங்கால்களால் எட்டி உதைப்பதோ, மான் மாரீசனாக மாறி மாயமாவதோ, சட்டென ஒப்பனையைக் கலைத்த புலியினுள் இருந்து டகர்பாயிட் காதர் எட்டிப்பார்ப்பதோ அவர் கதைகளில் நிச்சயம் நிகழாது.

தற்செயலாக இயல்புவாதத்தின் [naturalism] அடிப்படையான தன்மையும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. இமையத்தை இயல்புவாத எழுத்தாளர் என வகைப்படுத்துவதை அவர் விரும்பமாட்டார். இலக்கியத்தை வகைமைப்படுத்துதல் அவருக்கு உவப்பில்லாதது. மேலும் அவர் தனது புனைவுக்கு அவ்வாறான ஒரு வடிவத்தை தேர்ந்தெடுப்பவரும் இல்லை. ஆனால் வாசகர்களுக்கு இமையத்தின் புனைவுலகத்தை அறிமுகப்படுத்த இவ்வகைப்படுத்துதல் துணைக்கருவியாக உள்ளது.

2005க்குப் பின் இலக்கியத்தில் நுழையும் என்னைப் போன்றவர்களின் வாசிப்புக்கு முதலில் தட்டுப்பட்டது ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யுவன் சந்திரசேகர், பிரேம் – ரமேஷ் போன்றவர்களின் யதார்த்தத்தைக் கடந்த எழுத்துமுறைதான். அவை அப்போது மலேசியாவில் கிடைத்த உயிர்மை, காலச்சுவடு, தீராநதி மூலமாகவும் சில இணைய இதழ்கள் மூலமும் அறிமுகமாயின. விளைவாக 2005க்குப் பின் உருவான ஒரு தலைமுறை மலேசிய எழுத்தாளர்களின் புனைவுகளில் மிகையதார்த்தமும், கட்டற்ற கனவுகளும் அதிகம் புகுந்தன. முதிராத முயற்சிகளாக இருந்தாலும் இளம் படைப்பாளிகளின் தொடக்கக்கால புனைவுகளில் அதுபோன்றதொரு பாணி ஒட்டிக்கொண்டது. ம.நவீன் (எனக்கு முன் இருந்தவனின் அறை) சு. யுவராஜன் (சிறகு), கே.பாலமுருகன் (கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது). அப்போதைய மலேசிய வாசகர்களுக்கு இவ்வகை எழுத்துமுறை ஒவ்வாமையையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அவற்றை இலக்கியப் பாசாங்காக வர்ணித்தவர்களும் உள்ளனர். ஆனால் புதிதாக எழுந்துவரும் ஒரு தலைமுறையிடம் இவ்வாறான ‘போலச் செய்தல்’ இயல்பான பண்பே.

2005க்கு முன்பு (90களில்) நவீன இலக்கியம் குறித்த விரிவான உரையாடல்கள் எதுவும் மலேசியாவில் நிகழவில்லை. அதற்கான ஆளுமைகளும் உருவாகவில்லை. ஆனால் 1970 – 1980களில் உருவான எழுத்தாளர்களில் சிலர் (மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது) தொடர்ந்து வாசிப்பையும் ரசனையையும் அடுத்த தலைமுறைகளுக்கு எழுத்திலும் பேச்சிலும் கடத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் மூலம் யதார்த்தவாத [realism] ரக எழுத்துகளே கோலோச்சியிருந்தன. நுண்ணுணர்வுகளை வாசகனிடம் கடத்துவதற்கு புற யதார்த்தத்தை இவர்கள் கதைகள் கட்டமைத்தன. அப்போதைய இலக்கிய வாசிப்பும் விவாதமும் அதிகபட்சம் பூடகமான அந்த மன உணர்வினை கதையில் காட்டப்படும் புற நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தியும் முடிச்சிட்டும் அறிந்துகொள்வதோடு நிறைவுபெற்றன. வடிவக்கச்சிதமும் தர்க்கபூர்வமான தன்மைகளும் அக்கதைகளில் பெரும்பாலும் சிலாகிக்கப்பட்டன.

இவ்வாறு யதார்த்தவாத – மிகையதார்த்தவாத இலக்கிய வாசிப்புக்குப் பழக்கப்பட்ட மலேசிய இலக்கியச் சூழலில் இமையம் சிறுகதைகளின் அழகியலை அறிந்துகொள்வதுதான் அவர் புனைவுலகத்தை அறிய உதவும். அதுவும் மலேசியா போன்ற வரம்பான வாசிப்பு சூழல் உள்ள நிலத்தில் இலக்கிய வாசிப்பு குறித்தும் அதன் அழகியலை அணுகும் முறை குறித்தும் அறிமுகம் அவசியமாகிறது. ஒரு குறிப்பிட்ட வாசிப்பு முறைக்கு பழக்கப்பட்டவர்கள் தங்கள் அளவுகோளுக்குள் வராத ஒரு புனைவை தரமற்றது என புறக்கணிக்காமல் இருக்க புனைவுலகின் பல்வேறு சாத்தியங்களை அறிந்திருப்பதும் அவசியமாகிறது.

                                                                             (2)

மொத்தமாக அவரது ஐந்து சிறுகதை தொகுப்புகளை வாசித்தபோது (மண்பாரம்,index 00 கொலைச்சேவல், சாவுச் சோறு, வீடியோ மாரியம்மன், நறுமணம்) இமையத்தின் சிறுகதைகளில் வரும் பெரும்பாலான மையக் கதாபாத்திரங்களைத் தீர்வுகளற்ற பிரச்னைகளாலும் தீர்மானிக்க முடியாத எதிர்காலத்தாலும் பயத்தைச் சுமந்த மனிதர்கள் என உள்வாங்க முடிந்தது. அவர்கள் வீம்பு செய்கிறார்கள், உக்கிரமாகப் பேசுகிறார்கள், விதாண்டவாதம் புரிகிறார்கள், இறைஞ்சவும் செய்கிறார்கள். ஆனால் எல்லா செயல்பாட்டுக்கும் அடியில் அவர்களிடம் இருப்பது அச்சம். தங்களை மீறி நகரப்போகும் நிஜத்தை எண்ணிய அச்சம். நிஜத்தின் முன் நம்பிக்கை பொய்த்துவிடும் என அறிந்தவனின் பதற்றமான கோஷங்களையே இமையத்தின் கதாபாத்திரங்கள் வசனங்களாக உதிர்க்கிறார்கள்.

உயிர்நாடி சிறுகதையில் தனியார் நிறுவனம் அதிக விலை கொடுத்து விவசாய நிலங்களை வாங்கிக் கொண்டிருக்க, ஒரு கிழவர் மட்டும் விற்க மனமில்லாமல் இருக்கிறார். ஊரில் அனைவரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்ட சூழலில் இனி அவர் விற்காமல் இருப்பதால் பலனில்லை. வாங்கிய நிலங்களில் சுவர் எழுப்பி கிழவரை தன் நிலத்தினுள் நுழைய முடியாதபடி நிறுவனத்தால் செய்ய முடியும். இருபதாயிரம் விலைபோகும் நிலத்துக்கு இரண்டு லட்சம் வரை கொடுக்க நிறுவனம் தயாராக இருந்தும் கிழவர் சம்மதிக்காமல் இருக்கிறார். கிழவருக்குத் தெரியும் நிலம் தன் கையைவிட்டு போகுமென. ஆனால் அவர் அனைவரையும் எரிச்சலடைய வைப்பவராக இருக்கிறார். அத்தனை பேரையும் எதிர்க்கிறார். ஆனால் அவர் உள்ளுணர்வு தான் தோல்வி அடைந்துவிடுவேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

இமையம் காட்டும் முதியவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்தாலும் தனியாக இருந்தாலும் நிலம் சார்ந்த தங்கள் உணர்வை தக்க வைத்துக்கொள்பவர்களை திரும்பத் திரும்ப காண முடிகிறது.

நறுமணம் சிறுகதையில் விருதாசலத்தைச் சுற்றிச் செல்லும் நெடுஞ்சாலை போடுவதற்கான வரைபடத்தையும் அதற்கான நிலத்தையும் அளந்துகொண்டிருக்கிறார்கள் ஆனந்தனும் அவன் உதவியாளர் கதிரேசனும். வேலை முடிந்த மாலையில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க அப்பகுதியில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு கூரை வீட்டை நோக்கிச் செல்கிறார்கள். அங்கிருக்கும் கிழவன் கிழவியிடம் நடக்கும் உரையாடல்தான் கதை. அந்த உரையாடலில் அவ்விரு முதியவர்களும் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அறிகிறான். அவர்களின் தற்போதைய ஆதரவு அந்த மண்ணும் அருகில் இருக்கும் கள்ளவீரன் சாமியும்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நடந்த எல்லா கொடுமைகளையும் ஆனந்தனால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. அன்று ஆனந்தன் அளவெடுத்ததில் கள்ளவீரன் கோயில் அழியப்போவதும் நாளை அளவெடுக்கும்போது முதியவர் நிலம் அபக்கரிக்கப்படப்போவதும் ஆனந்தனுக்குப் புரிகிறது. முதியவருக்கும் அது புரிந்திருக்கக்கூடும். அந்த அச்சத்துடன்தான் அவர் தனக்கு முன் இருக்கும் அதிகாரியிடம் பேசுகிறார். ஆனந்தன் புறப்படும்போதும் ஏதோ புரிந்தவராய், “இந்தக் கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல” என்கிறார்.

இமையம் காட்டும் பயம் என்பது படிமங்களோ குறியீடுகளோ அற்றது. அது நிஜத்தை நிஜம்போலவே சொல்லும் பாவனை வழி வாசகனிடம் கடத்தும் பயம். ஆச்சரியமாக இமையம் ஒரு சிக்கலான சூழலை வெவ்வேறு கோணங்களில் சொல்லி ஒரு கதையை நகர்த்துகிறாரே தவிர அச்சத்துக்கான படிமம், உவமை என எதையும் உருவாக்கவில்லை. துபாய்க்காரன் பொண்டாட்டி சிறுகதை ஒரு உதாரணம். உவமைகளால் உருவாக்கவேண்டிய பயத்தின் அத்தனை சாத்தியங்களையும் புறக்கணித்துவிட்டு இமையம் நிஜக் காட்சிகளை மட்டுமே மிகையில்லாமல் இக்கதையில் பதிவு செய்திருப்பார்.

துபாயிலிருந்து கணவன் ஊருக்கு வருவதாகச் சொல்கிறான். அப்படி அவன் திடீரென வருபவனல்ல. ஆனால் இம்முறை இந்தியா திரும்பிய பின்பே அழைத்துச்சொல்கிறான். அது ஓர் மழை இரவு. அவன் பேசுவது தெளிவாகக்கேட்காமல் ஏன் அவன் வருகிறான் என யோசிக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளால் ஊகிக்க முடிகிறது. கண்ணன் என்பவனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அது ரகசியமாகவே இருந்தது. அவசரமாக அவன் கேட்டான் என நகையைத் தூக்கிக் கொடுத்தாள். ஆனால் கண்ணன் அதை திரும்பக்கொடுக்காமல் இழுத்தடிக்கவே தெருவில் அவனிடம் சண்டையிட ஆரம்பித்தாள். அப்போது கண்ணன் எல்லோர் முன்பும் வார்த்தையை விடுகிறான். “ஒன்னெ ஒரு வருஷம்கிட்ட வச்சி வேல செஞ்சேன்ல்ல. அதுக்கு சரியாப் போச்சு” என்றவனின் சொற்களை அவள் மாமனார், மாமியார், நாத்தனார் எல்லாரும் கேட்டுவிடுகிறார்கள். அவள் பேய் பிடித்தவளாகிறாள். கணவன் வரும் பயத்தில் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறாள். அந்த மழையிரவு அவளுக்குக் கொடுக்கும் பயமும் அதன் பினாத்தல்களுமே கதை. திரும்ப திரும்ப இமையம் அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த சம்பாஷணைகளை எழுதுகிறார். ஆனால் அது படபடப்பைக் கூட்டுகிறதே தவிர சோர்வளிக்கவில்லை. அவள் பயம் அப்படி மட்டும்தான் இருந்திருக்கும் என்று வாசகனால் மழையில் நனைந்தபடி உடலை உதறிக்கொண்டே உணர முடியும்.

அணையில் ஏற்பட்ட பல்வேறு துளைகளை தன் இரு கைகளைக்கொண்டு மட்டும் அடைக்கும் அந்த ஒருவன்தான் இமையத்தின் மையப்பாத்திரம். அந்த நேரத்துப் படபடப்பும் துடிப்பும் திகிலும் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் வாசகனுக்குக் கடத்துவது. நாம் அவர் உருவாக்கும் காட்சியில் காண்பது அந்தக் கணத்து சாகசங்களையும் வீழ்ச்சிகளையும் மட்டுமே. அவர் கதைகளை வாசிக்கும் ஒருவர் கவனமாக அக்கதாபாத்திரங்களை வேடிக்கை பார்க்கும் மனநிலையை மட்டுமே முதலில் கற்க வேண்டியுள்ளது.

ஆனால் இமையத்தின் கதைகளின் தொடர்ந்து வாசிக்கும்போது சில கதாபாத்திரங்கள் ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல உள்ளதும் வாசிப்புச் சலிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. அரசாங்க பள்ளிக்கூடம் சிறுகதையில் வரும் வள்ளிதான் எழுத்துக்காரன் சிறுகதையில் வரும் செல்லம்மா. பரிசு கதையில் வரும் ராமசாமிதான் உயிர்நாடி கதையில் வரும் கிழவர். இருவரும் ஒருவர் அல்ல. ஆனால் பெரும்பாலும் ஒரே குணம் கொண்டவர்கள். ஒரே வகையான மௌனத்தையும் உக்கிரத்தையும் காட்டுபவர்கள். பிரிதொருவரை நினைவுபடுத்தும் செயலை செய்பவர்கள். கொஞ்சம் ஆய்வு நோக்கில் வாசித்தால் இமையம் உருவாக்கும் வயோதிகர்களையும் பெண்களையும் திட்டவட்டமான ஒரு சட்டகத்திற்குள் அடக்கி அச்செடுக்கலாம். அவர்கள் அவ்வாறுதான் செய்வார்கள் என்றும் அவ்வாறுதான் சிந்திப்பார்கள் என்றும் அடுத்தடுத்த கதைகளில் முன்னமே கண்டுகொள்ளலாம். இது பலவீனம் அல்ல. கதாபாத்திரங்கள் கதையை நகர்த்தும்போது அக்கதாபாத்திரங்களை முன்பே வேறெங்கோ அறிந்து வைத்திருக்கும் வாசகர்களின் அனுமானங்கள் கதையின் முடிவை முந்திச்செல்வது இயற்கையே.

                                                                         (3)

இமையம் சிறுகதைக்குத் தேர்ந்தெடுக்கும் வாழ்வின் பகுதி என்பது முரண்களால் கட்டமைந்த உக்கிர கணம் எனலாம். இரு முரண்பட்ட தருணங்கள் இணைந்து முறுக்கிக்கொள்ளும்போது எழும் உஷ்ணமே அவர் புனைவுலகம். அந்த முரணை அந்த மனிதர்களின் யதார்த்தமான பேச்சு மொழியில் சூழலை நகர்த்துவதே இமையத்தின் சிறுகதைகளை வாசகனுக்கு நெருக்கமாக்குகிறது. யதார்த்தம் X நம்பிக்கை என்பது அவர் மையப்படுத்தும் ஒரு கணம் என்றால் புறக்கணிப்பு X அன்பு மற்றுமொரு கணம்.

அம்மா இமையத்தின் மிக முக்கியமான சிறுகதை. குடும்பத்தோடு நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட்ட இளைஞன் கருப்புசாமிக்கும் அவன் தாய் செல்லம்மாவுக்கும் நடக்கும் உரையாடலின் தருணத்தைக் கதையாக்கியிருப்பார். ஊரில் மனைவி உறவினர் சாவு என்பதால் நெடுநாட்களுக்குப் பின் வரும் மகன் அம்மாவையும் ஒரு எட்டு பார்க்கச் செல்கிறான். தன்னைத் தனியாக விட்டுச்சென்று விட்ட மகனிடம் தனது ஆதங்கங்களை கொட்டி தீர்க்கும் தாயின் புலம்பலே இக்கதை. புலம்பலுக்கு நடுவிலும் மகனிடம் நேசம் காட்டிக்கொண்டே இருக்கிறாள். அவனுக்காகச் சேகரித்து வைத்திருந்த புளி உருண்டையைக் கொடுக்கிறாள். மொச்சைப் பயிரைக் கொடுக்கிறாள். பிடித்த மீனை கருவாடாக்கி வைத்து மகனுக்குக் கொடுக்கிறாள். பின்னர் மீண்டும் அவன் அக்காளையும் சென்று கவனிக்காமல் இருப்பதை புகாராகச் சொல்கிறாள். அவள் புகாரை புலம்பத்தொடங்கும் போதெல்லாம் கருப்புசாமிக்குக் கோபம் வருகிறது. செல்லம்மா அவனை ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒன்றைக் கொடுத்து சமாதானம் செய்கிறாள். கடைசியாக பழைய பெட்டியில் இருந்து நூறு ரூபாய் கொண்டு வந்து கொடுக்கிறாள். கருப்புசாமி எல்லாவற்றையும் சிறு முறுக்கோடு பெற்றுக்கொள்கிறான். ஆனால் அவனுக்கு அம்மாவின் வீடு அந்நியமாக உள்ளது. அந்த அந்நியத்தன்மையை அம்மாவிடமும் காட்டிக்கொண்டே இருக்கிறான். கதையின் இறுதியில் “ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தன். போடா” என்கிறாள் அம்மா. ஒரே வீச்சில் அதுவரை நீட்டிய அன்பின் கரங்கள் அத்தனையையும் உடைத்து தூர எரிந்துவிட்டு சுயத்தின் வலுவுடைய கிராமத்து பெண்ணாக ஆகிவிடுகிறாள்.

அதேபோல நாளை என்னை அதிகம் பாதித்த மற்றுமொரு சிறுகதை. சின்னசாமி உடையார் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழும் செல்லமாவைப் பார்க்கச் செல்கிறார். அவர்கள் உரையாடலில் சின்னசாமி உடையாரின் தொணி உயர்ந்து ஒலிக்கிறது. எரிச்சலுடன் பேசுகிறார். பின்னர் தனது மகன் வீட்டில் மருமகளிடம் தனக்குக் கிடைக்காத மரியாதை குறித்து அங்கலாய்க்கிறார். செல்லம்மாவை தன்னுடன் அழைக்கிறார். மாட்டுக்கொட்டகையிலோ மோட்டார் கொட்டகையிலோ தங்கி வாழலாம் என்றும் இனி யாரிடமும் தன்னால் கையேந்த முடியாது என்றும் சொல்கிறார். செல்லம்மாள் அவனுடன் செல்ல மறுக்கிறாள். அந்த உரையாடல்தான் சிறுகதை. கணவன் இறந்த ஆறாவது வருடத்தில் இருந்து செல்லமாளுக்கு சின்னசாமியுடன் உறவு இருக்கிறது. ஆனால் இதுவரை அவளுக்கு ஒரு ரூபாய் பணமோ அரிசியோ கொடுக்காதவர் சின்னசாமி உடையார். செல்லம்மாளின் மகள் வள்ளி அவளுக்கு ஆதரவாக இருந்து காப்பாற்றுகிறாள். இரண்டு ஊரில் பெயர் கெட்டு வாழும் செல்லம்மாளுக்கு சின்னசாமி உடையாரின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும் வெறுப்பு அவரை அவமதிக்க வைக்கிறது. கதையின் தொடக்கத்தில் சின்னசாமி குரலில் இருக்கும் கம்பீரம் முறிந்து போகிறது. நிமிர்ந்து வந்த சின்னசாமி உடைந்தும் அதுவரை வாஞ்சையாகப் பேசிய செல்லம்மாள் வெறுத்தும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள முடியாமல் பிரிகிறார்கள்.

நிஜமும் பொய்யும் என்றொரு சிறுகதை. மகன் ராகவன் அம்மாவுக்கும் அம்மா மகனுக்கும் எழுதும் கடிதம்தான் கதை. மகன் சென்னையில் இருந்து பம்பாய்க்கு வேலை மாற்றலாகிப் போகிறான். அப்போது ரயிலில் அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறான். மனதில் உள்ள அன்பை சொல்லி விரிவாக எழுதுபவன் பின்னர் அதனைச் சுருட்டி வைத்துவிட்டு சுருக்கமான தகவலை மட்டும் அனுப்புகிறான். இதே சமயத்தில் அம்மா தனக்கு எழுதத் தெரியாததால் சேகர் என்பவனை அமர வைத்து தான் சொல்வதை எழுதச் சொல்கிறாள். அம்மா விரிவாக தன் எண்ணங்களைச் சொல்கிறாள். சேகர் அம்மா சொல்வதை தான் எழுதுவதாகவே பாவனை செய்கிறான். கடிதம் முடிந்தபபின் அவனை வாசித்துக்காட்டச் சொல்கிறான். அவன் தான் அனைத்தையும் எழுதிவிட்டதாகக் கூறவும், அவன் தான் சொல்வதை எழுதவில்லை என்பதை அவள் அறிந்தே வைத்திருப்பதைக் கூறுகிறாள். வெடுக்கென கடிதத்தைப் பிடுங்கியவள் ‘எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி’ என்கிறாள்.

இமையம் சிறுகதையில் வரும் அம்மாக்கள் அபார துணிச்சல் படைத்தவர்கள். அவர்கள் தாங்கள் அபலைகள் எனச் சொல்லிக்கொண்டே யாரையும் எதற்கும் தூக்கி எறியத் தயங்காதவர்கள். தன் முன் உள்ள மனிதர்களை அறிந்தவர்கள். அதன்வழி உலகம் தெரிந்தவர்கள்.

எழுத்துக்காரன் சிறுகதையில் வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பெண்ணை அதன் அருகில் உள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் மனு எழுதுபவர்கள் அழைக்கிறார்கள். அவள் அங்கிருந்த ஐந்து மனு எழுத்தர்களில் சிவராமனிடம் செல்கிறாள். தன் மகனை அரசாங்க விடுதியில் சேர்க்க சுய விபரங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு வந்திருக்கும் அவளுக்கு அலுவலக நடைமுறைகளை எண்ணி அச்சம் உள்ளது. அவள் அலுவலகத்திற்கு செல்வதை எண்ணி அச்சம் கொண்டவளாக இருக்கிறாள். அந்நிலையில் சிவராமனை உதவி செய்ய வந்த கடவுளாக நினைக்கிறாள். சிவராமன் அவளுக்குத் தேவையான கடிதத்தை எழுதிக்கொடுத்தப்பின் ஐந்து ரூபாய் கேட்கப்போக சிக்கல் தொடங்குகிறது. ‘இன்னா ஊர், இன்னாரு மவன்னு எயிதினதுக்கா கூலியா’ என சத்தமிட்டு மறுக்கிறாள். ஐந்து ஆண்கள் கூச்சலிட்டும் அவள் ஒற்றை ஆளாக நின்று சத்தமிட்டு சமாளிக்கிறாள்.  சாமி சாமி என அழைத்தவள் சிவராமன் தன்னை சனியன் என்றதும் பேய் பிடித்தவள் போல கத்த ஆரம்பிக்கிறாள். ஒரு ரூபாய் மட்டுமே முடியும் என வழங்க சிவராமன் ரோஷமாக மறுத்தும் தூக்கிப்போட்டு செல்கிறாள்.

அம்மா கதையில் வரும் செல்லம்மா தொடங்கி எழுத்துக்காரன் கதையில் வரும் பெண் வரை அனைவருமே முதலில் காட்டும் முகம் ஒன்றாகவும் இறுதி வேறொன்றாகவும் இருக்கிறது. எல்லா பெண்களிடமும் அநாசயமாக அந்தரங்கமாக வெளிப்படும் குரல் ஒன்றுதான். ‘எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி.’

இவ்வாறு ஒரு சூழலில் சந்தித்துக்கொள்ளும் இரு முரண்பட்ட நபர்களின் உரையாடல்களும் அதன் வழி கண்டடையும் தீர்வுகளும் தீர்வுகளற்ற சமயங்களில் ஏற்படும் வெறுமையும் இமையம் சிறுகதைகளில் பல இடங்களில் வந்து போகிறது. இவ்வாறு முரணில் உக்கிரமாகும் வாழ்வின் தருணங்களை பதிவு செய்யும் கதைசொல்லி மட்டும்தானா இமையம் என்றால் இல்லை என்றே சொல்வேன். எது அவரை கலைஞனாக்குகிறது என்பதை அறிவதே அவரது புனைவுலகை அறிவதாகிறது.

                                                                             (4)

download-131இராஜநாகத்தின் முழு வாழ்வை ஆவணப்படுத்திய தொகுப்பு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் இராஜநாகத்துக்காக இரு ஆண் நாகங்கள் சண்டையிட்டுக்கொண்டன. சண்டையின் சட்டதிட்டங்கள் ஆச்சரியமானவை. ஒன்று மற்றதைக் கடிக்கக்கூடாது. படம் விரித்து மூன்று அடி தலையை உயர்த்தி மற்றப் பாம்பின் தலையை தரையில் வைத்து அழுத்த வேண்டும். தலை மூன்றடிக்கு மேல் உயரக்கூடாது. இப்படி மாறி மாறி செய்து இறுதியில் ஒரு இராஜநாகம் சோர்வடைந்து பின்வாங்கிச் சென்றது. அந்தப் பெண் இராஜநாகம் ஓடிவிட்ட ஆண் நாகத்தின் ஜோடி. வென்ற ஆண் நாகம் அதனுடன் உறவு கொண்டபின் கடித்து கொன்றுவிட்டது. பெண் நாகத்தின் மரணத்துடன் ஆவணப்படம் நிறைவடைந்தது.

ஆவணப்படங்கள் ஒரு விலங்கின் வாழ்வை அதன் இயல்பினைப் பதிவு செய்கின்றன. முழு உண்மையைப் பதிவு செய்கின்றன. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முழு உண்மை. அதில் வரும் இராஜநாகம் காமிராவுக்கு ஏற்ப நடிக்கவில்லை. அதன் இயக்குநர் நாகம் கொல்லப்படுவதைத் தடுக்கவும் இல்லை. ஆனால் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் அவ்வாழ்வின் தொடர்ச்சியை உச்சத்தை நோக்கிக் கொண்டு செல்கிறார். அதுவே ஆவணப்படத்துக்கான கலைநுட்பம். இந்தக் கலையே ஓர் அவணப்படத்தில் காட்டப்படுவது மட்டுமே உண்மை என்பதையும் மீறி அதற்கு அடியில் ஊடுறுவி ஓடும் இன்னொரு உண்மையைத் தேடவைக்கிறது. ஏன் அந்தப் பெண் நாகம் அந்தச் சண்டையில் தலையிடவே இல்லை? ஏன் தன் காதலுக்காகப் போரடவில்லை? இறக்கப்போகிறோம் எனத் தெரிந்தும் ஏன் எதிரியுடன் உறவுகொள்கிறது? என எழும் எண்ணற்ற கேள்விகளே நிஜ வாழ்வு கொடுக்கக் கூடிய தரிசனங்களுக்கான வழிகள்.

இமையத்தின் சிறுகதைகளில் இயல்பாக உருவாகும் கலை நேர்த்தி என்பதும் அதுதான். ஒரு திறமையான ஒளிப்பதிவு கலைஞன் போலவே இமையம் தனது கேமராவின் கோணத்தைத் திட்டமிட்டு நகர்த்துகிறார். அவர் அதில் தலையிடுவதில்லை. கூடுதலாக வேறொன்றையும் செய்வதில்லை. ஆனால் அவர் பதிவு செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜக் காட்சியின் அடியில் இயல்பாக இன்னொரு ரகசியக் காட்சி உருவாகிறது. எல்லா சிறுகதைகளிலும் அவ்வாறான மற்றுமொரு கதை உருவாகவில்லை என்றாலும் சில சிறுகதைகள் அசாத்தியமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுப்பவை.

குடும்பம் சிறுகதையில் மத்துக்கழியால் மஞ்சாயியை (மனைவி) வெறிபிடித்தமாதிரி முருகன் (கணவன்) அடிக்கிறான். வேலையிடத்தில் ஒருவனிடம் பேசினாள் என சந்தேகப்பட்டு அவ்வாறு அடிக்கிறான். அடிதாங்க முடியாமல் கால்பட்டு உடைந்த கீரைச்சட்டியில் இருந்து கொதித்துக்கொண்டிருந்த கீரையை அவள் முகத்தில் கொட்ட தாங்க முடியாமல் துடித்தபடி வீட்டை விட்டு ஓடுகிறாள். அவள் மகன் கண்ணன் அம்மாவை தேடிப் போகிறான். புதருக்குள் ஒளிந்திருந்த அம்மா முதலில் அவனை அடிக்கிறாள். பின்னர் அனைத்துக்கொண்டு அழுகிறாள். மகனுடன் வருபவளை மீண்டும் அடிக்கும் கணவனை, கண்ணன் ‘எங்கம்மாவ வுடுறா, ஒக்கால ஓழி’ என மத்தால் அடிக்கிறான். அடிப்பதை விட்டு வெலவெலத்துபோய் எழுந்த முருகன் சிரிக்கிறான். கூடி வேடிக்கைப் பார்ப்பவர்களும் சிரிக்கிறார்கள். அவர்களை விரட்டிவிட்டு வீட்டுக்குள் போகிறாள் மஞ்சாயி.

கணவன் சிரிப்பதும் மனைவி கூட்டத்தினரை விரட்டுவதும் தற்செயலானதல்ல. தன்னை வீழ்த்திவிடுவானோ என பயம் வரும்போது இறங்கிச்செல்லும் குணமும் தன்னை இனி வீழ்த்த முடியாது என தெரியும்போது ஏற்படுத்திக்கொள்ளும் பெருந்தன்மையும் மிக இயல்பாய் ஒன்றினையும் இடம் அது. அது அவ்வளவு விரைவாக நடக்கிறது. அதுவரை நடந்ததெல்லாம் கணவனும் மனைவியும் செய்யும் ஒரு பாவனைதான். பாவனை என்பதும் நிஜ பாவனையல்ல. ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் மற்றுமொரு விலங்கை ‘கூடுமானவரை தாக்கிக்கொள்’ என அனுமதிப்பதில்லை. ஒன்று அது தப்பிச்செல்ல முயல்கிறது. அல்லது எதிர்த்துத் தாக்குகிறது. தாக்கும் அல்லது தாக்கப்படும் விலங்குகளுக்கு இடையில் ‘குறைந்தபட்சம் அல்லது கூடியபட்சம்’ என்ற வரையறைகள் இல்லை. ஆனால் மானுட உறவுகளில் அது உண்டு. மனிதன் உணர்வுகளால் இயங்குகிறான். தனது நேசத்துக்குரிய இன்னொரு உயிரைக் கோபத்தில் தாக்கும்போது அந்த விசையில் வேகத்தை பிரியமும் எச்சரிக்கை உணர்வும் கட்டுப்படுத்துகின்றது. இந்த மறைந்துகிடக்கும் பிரியத்தை நம்பியே தன் அன்புக்குரியவரை ஒரு பெண் தாக்க அனுமதிக்கிறாள். அவளால் அவனை வீழ்த்த முடியும். அவளால் அவனை மிக எளிதாக சொற்களில் தூக்கி எறிய முடியும். ஆனாலும் அவள் அதற்கிடையில் எங்காவது கிடைக்கக்கூடிய சின்னஞ்சிறிய அன்புக்காகக் காத்திருக்கிறாள். இந்தக் கதையில் அவ்வன்பு அவளுக்கு மகனிடமிருந்து கிடைக்கிறது. அவள் மேலெறி வர அதுபோதும். எல்லா அவமானங்களையும் துடைத்து அவள் தன் கம்பீரத்தை மீட்டுக்கொள்கிறாள். அவள் கதவை அடைத்து காட்டும் பெருந்தன்மை மூலம் கணவனை கூனிக்குறுக வைக்கிறாள். அதுதான் பெண்ணின் தாக்குதல். ஆண் மீண்டு வர முடியாத தாக்குதல். கருணையும் மன்னிப்பும் கொடுத்து ஆணைச் சிறுமையாக்கும் தாக்குதல்.

அம்மா சிறுகதை கதையின் வசனங்களில் வெளிப்படையாக புறக்கணிப்புக்கும் அன்புக்குமான முரண் நிகழ்கிறதென்றால் அதன் அடியில் தன்னிடம் ஒன்றும் இல்லை துன்பத்தில் இருக்கிறேன் எனச்சொல்லும் அம்மா கொடுப்பவளாகவும் எல்லாம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் மகன் பெறுபவனாகவும் வருவது மற்றுமொரு முரண். இந்த தனி ஒருவனின் அனுபவத்தில் இருந்து தாய் என்பவள் கொடுப்பவள் என்றும் தாய் என்பவள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அருள்பவள் மட்டுமே என்றும் பொதுத்தளத்துக்கு வாசகன் தன் வாசிப்பை அகழ்த்தும்போது இக்கதை உச்சத்தை அடைகிறது. நாளை சிறுகதையில் சின்னசாமி எதிர்பார்க்கும் நெருக்கமும் செல்லம்மாள் காட்டும் புறக்கணிப்பும் ஒரு முரண் என்றால் தான் நம்பிய அத்தனை பேரும் கைவிட்டபின் தனக்குச் சேவகம் செய்ய தான் தேடி வரும் செல்லம்மாள் தனக்கான ஓர் அடிமை என நம்பும் சின்னசாமியின் எண்ணத்திலிருந்து செல்லம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கணத்தில் விடுதலையாவதும் விடுதலையின் சுவையை அவள் அந்த நேரத்தில் பேசிப் பேசி அடைந்து, அவர் பிடியில் இருந்து முழு முற்றாக விலகுவதும் அதன் அடியில் இருக்கும் மற்றுமொரு கதை.

அதுபோலவே நிஜமும் பொய்யும் சிறுகதை. இமையம் சிறுகதைகள் நிஜத்துக்கு அடியில் இருக்கும் இன்னொரு நிஜத்தை இழுத்துவைத்துக்கொள்கிறது என்பதற்கு இந்தச் சிறுகதை நல்ல உதாரணம். தன் மகன் வயதே ஆன ஒரு இளைஞன் தான் எவ்வளவு அன்பை பகிர்ந்தாலும் எப்படியும் சடங்கான வார்த்தைகளை மட்டுமே எழுதுவான் என தன் மகனின் கடிதங்கள் மூலமே அம்மா தெரிந்து வைத்திருக்கிறாள். தனக்கு எல்லாம் தெரியும் என்பது தன் மகனின் அன்பும் தனக்கு தெரியும் என்பதுதான். அந்த அன்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சொற்பமான வார்த்தைகளில் வெளிப்படும் என்பதுதான். எப்படி காரணமே இல்லாமல் சேகர் அந்த அன்பைச் சுருக்கி அனுப்புகிறானோ அப்படியே காரணமற்ற காரணத்தால் மகனும் தன் அன்பை சுருக்கித் தருகிறான் எனத் தெரிந்த அம்மா அவள். உலகின் அத்தனை மகன்களும் தன் மகனின் நகல்கள்தான் என நம்புபவள்.

இமையம் இவ்வாறு திட்டமிட்டு அடியில் உள்ள சொல்லப்படாத கதையை உருவாக்கவில்லை. பெண் நாகம் மரணத்துக்கு தயாராகும் அதிசயம் போல சில வாழ்வின் தருணங்கள் அவ்வாறான கதைகளை தனக்குள் வைத்துள்ளது. அவற்றை எழுதும்போது அவரால் அதையும் சேர்த்து பதிவு செய்ய முடிவதே அச்சிறுகதைகளின் சிறப்பு. சக மனிதனின் சொல்லுக்கும் எண்ணத்துக்குமான முரணை மட்டுமே இமையம் எழுதிப் பார்க்கிறார். அந்த இரண்டு உண்மைகளையும் கோர்த்து துல்லியமாகக் காட்சிப்படுத்தும் கோணம் அவரைக் கலைஞனாக்குகிறது.

                                                                               (5)

இமையம் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரம் குறித்து எவ்வித சித்திரமும் இருக்காது. அதில் வரக்கூடிய கிழவி கூன் விழுந்தவளா? அதில் உள்ள கிழவர் நெடிந்து வளர்ந்தவரா? இளைஞன் கறுப்பா, சிவப்பா என எவ்வித வர்ணனைகளும் இல்லாதவை அவர் கதாபாத்திரங்கள். ஒரு சிறு அடையாளத்தைக்கூட அம்மனிதர்களை நாம் கற்பனை செய்துகொள்ள இடம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால் கதை வளர வளர நம்முள் உருவாகும் அந்த நபர்கள் அவர்கள் பேசும் மொழிகளால் மனதில் உருவாகிறார்கள். உண்மையில் வசனங்கள்தான் இமையம் உருவாக்கும் கதாபாத்திரங்களின் ஆன்மா எனலாம். அந்த ஆன்மா இந்த உடலில்தான் இருக்கமுடியும் என வாசகனாகக் கற்பனை செய்துகொள்கிறான்.

நிஜமான பேச்சுமொழியின் வீரியம் எவ்வகையான பாதிப்புகளை வாசகனிடம் உருவாக்கும் என இமையம் கதைகள் வழி அறியலாம். ஒருவகையில் அவர் கதைகளில் உரையாடல்களே அடர்ந்து கிடக்கிறது. உரையாடல்களே கதையை நகர்த்தியும் செல்கிறது. அவ்வாறு உரையாடலுக்கு அதிக பங்களிப்பு இருக்கும்போது காட்சிப்படுத்துதல் குறைகிறது. ஆசிரியரின் குரல் முற்றிலுமாகத் தன்னை பின்னிழுத்துக்கொள்கிறது. அதன் வழி ஒவ்வொரு பாத்திரமும் அவரவர் கொண்டுள்ள வாழ்க்கைப் பார்வையை வெளிப்படுத்துகின்றனர். அது பன்மைத்தன்மையானது. வாழ்க்கை குறித்த பார்வை எவ்வளவு விரிவாக உள்ளதோ, அந்தளவு பார்வை அவர்கள் வழி வெளிப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்வை தாங்கள் மட்டுமே தீர்மானிக்கும் அதிகாரமற்றவர்கள், தலித்துகள் என்ற புற ஒற்றுமையைத் தவிர எண்ணங்களால் வெவ்வேறானவர்கள்.

அவ்வாறு வரும் ஒருவரிடமும் ஜோடனையற்ற மொழி இருப்பதே இமையம் உரையாடல்களில் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது. அவர்கள் தங்கள் எல்லையைத் தாண்டி சிந்திப்பதில்லை. அந்த நம்பகத்தன்மையான மொழியே திடமான ஓர் உருவத்தை வாசகனுக்குள் உருவாக்குகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்தச் சம்பவம், அந்தக் கதாபாத்திரம் நமது வாழ்விலிருந்தும் நம்மிலிருந்தும் எடுக்கப்படும் ஒரு துளி என்பதுதான்.

இமையத்தின் வசனங்கள், கதைகளை வாசிப்பவரின் வாழ்வுடன் இணைக்கின்றன. அது அவர்களுக்குள் ஓர் உருவத்தை வரைகிறது. அந்த உருவம் அவரவர் வீட்டில் நடமாடும், அவர்கள் சுற்றத்தில் நடமாடும், வேலையிடத்தில் நடமாடுபவர்களின் உருவம். ஐஞ்சிக் கண்ணன், அம்மாவிடம் இடம், தொடரும் போன்ற மாமியார் மருமகள் பிரச்னையை மையப்படுத்திய சிறுகதைகளை வாசிக்கும் எவரும் அது தனக்கு அறிமுகமான ஒரு வாழ்க்கை என ஆச்சரியப்படவே செய்வார். இந்த ஆச்சரியமே இமையம் கதைகளை தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது.

இந்த மொழி சாகசம் இமையத்தின் எல்லா கதைகளுக்கும் பொருந்துவதில்லை. வட்டார வழக்குச் சொற்களையும் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான உரையாடலையும் உயிர்ப்பாய் தன் புனைவுகளில் கொண்டு வரும் இமையத்திடம் நகரத்து மனிதனின் மொழி தள்ளியே நிற்கிறது. அவரால் ஒரு நவீன மனிதனின் அசைவுகளை உள்வாங்க முடியவில்லை. ராணியின் காதல் சிறுகதையில் வரும் ராஜன் எனும் ஆசிரியர் கதாபாத்திரத்தின் இருப்பும், வீடும் கதவும் சிறுகதையில் வரும் பிரசிடண்டு ரேவதி மற்றும் அவள் கல்லூரி தோழியும் பேசிக்கொள்ளும் உரையாடல்களும் அவர்கள் எந்தக் காலத்து மனிதர்கள் என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. கிராமத்து மனிதனிடமிருந்து இயல்பாக வெளிபடும் வட்டார மொழியைப் போலவே நகரத்து மனிதர்களிடமும் தனித்த சில சொல்லாடல்கள் உள்ளன. கிராமத்து மனிதர்கள் கையாளும் பொருள்கள் போலவே நகரத்து மனிதர்களின் கைகளிலும் ஒட்டிக்கொண்டே திரியும் சில பொருள்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் இமையம் சிறுகதையில் வரும் நவீன மனிதர்கள் அவர்களின் சொற்களில் மொழியில் இல்லாமல் இமையம் உருவாக்கும் ஒரு மொழியில் புழங்குவதால் ஒரு எளிய சம்பவமாக மட்டுமே நினைவில் நிற்கிறார்கள்.

                                                                                (6)

இமையத்தின் சிறுகதைகளை வாசிக்கும்போது அவரது ஆளுமை நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அவரது கதைகள் போலவே அவரும் பாசாங்கற்றவர். எந்த உரையாடலிலும் மிக இயல்பாக வெளிப்படும் தனது சொற்களைத் தணிக்கை செய்யத் தெரியாதவர். தன்னை உருவாக்கியது திராவிட இயக்கம் எனச் சொன்னாலும் கலைஞனுக்கு புற உலகத்துடனான இடைவெளியற்ற நெருக்கமே அவசியம் என உணர்ந்தவர். மலேசியாவில் பத்துமலை முதல் தமிழகத்தில் ஶ்ரீரங்கம் வரை அவருடன் பயணித்துள்ளேன். ‘இங்கு வீசும் இந்த பூக்களின் அழுகிய நாற்றமும், விபூதியின் மணமும், வாழைப்பழப் பிசுபிசுப்பும் அறியாத ஒருவன் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை தன் புனைவுகளில் எழுதிவிட முடியாது. நம்முடைய அறிவின் தேர்வு என்பது வேறு. ஆனால் கலைஞன் ஒற்றைப்படையானவன் அல்ல. அவன் வாழ்விலிருந்து கதைகளை எடுக்க வேண்டும். அதற்கு சக மனிதனுடன் இருக்க வேண்டும்’ என பலமுறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் திராவிடக் கழக வேட்டியைத்தான் கட்டியிருந்தார்.

இந்த இயல்பு அவருக்கு மனிதர்களை நெருக்கமாக அறிமுகம் செய்கிறது. தாயினுள், மகளினுள், மகனினுள், அநாதை கிழவனினுள், காமம் கொண்ட பெண்ணினுள், வற்றாத அன்பைச் செலுத்தும் குழந்தையினுள் தகிக்கும் தருணங்களைச் சேகரிக்கிறார். அவர்களுக்குள்ளிருந்த மொழியைச் சூசகமாகக் கடத்துகிறார். நிஜம் கொடுக்கும் பிரம்மாண்டம் என்னவென்று அம்மொழி வழி உணர வைக்கிறார். ஆனால் அவர் அவர்களுள் கூடுவிட்டுக் கூடு பாய விரும்பவில்லை. அதனால் இன்னும் ஆழம் சென்று அவர்கள் சொல்லில் வெளிப்படாத பின்னிக்கிடக்கும் உணர்வுத் தளங்களை அவர் கதைகள் தொடவில்லை. அதற்கு பலநூறாகவும் பல்லாயிரமாகவும் தன்னை உடைக்க வேண்டியுள்ளது. உடலால், மொழியால் மட்டுமல்லாமல் மனதாலும் முரண் எண்ணங்களாலும் வாழ்ந்து பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் தனக்கேற்ற கதைசொல்லல் முறையை ஒருவர் தேர்வு செய்வது அக்கலைஞனின் விருப்பம். இமையம் தனக்கென ஒரு முறையைத் தேர்வு செய்துள்ளார். அதன் வழி அவர் உச்சத்தைத் தொட முயல்கிறார்.

இமையம் பூவேலை செய்யும் நூலை எடுத்து பட்டம் விடும் படைப்பாளி. அவரால் சொற்களைப் பிண்ணிப் பிண்ணி அலங்கரிக்க முடியாது. அவர் மொழி பட்டத்தைச் சுமந்த நூலைப்போல காற்றின் அலைதலுக்கு ஏற்றபடி இயல்பாக அசைகிறது. அது ஓர் உணர்வை உச்சத்துக்கு எடுத்துச்செல்லத் துடிக்கிறது. பட்டத்தைச் சுமக்கும் நூல் என்றுமே பூவேலையின் அழகியல் உணர்வைக் கொடுப்பதில்லை. ஆனால் அத்தனை தடியான அவ்வளவு வண்ணமயமான ஒரு நூல் வான் நோக்கி நேராக நிமிர்ந்து நிற்பதும் ஆச்சரியம்தான். ஆனால் நூலின் ஒரு முனை இமையம் கைகளில் இறுக்கமாக உள்ளது. ஒருவேளை அந்த நூலை அவர் கைவிடும்போது வானில் அது காற்றின் உதவியால் உருவாக்கூடிய பின்னல் இன்னும் அபாரமாக இருக்கலாம்.

4 comments for “இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

 1. Kumar A
  March 3, 2019 at 8:02 pm

  ஒரு கட்டுரையைப் படிக்கும் போதே வாசகனுக்குப் புரியும் அதன் உழைப்பு என்னவென்று. உழைப்பின் மேல் வரும் மரியாதையாக கருத்தின் மேலும் நம்பிக்கை ஏற்படுகிறது. சுனில் கிருஷ்ணன் கட்டுரையும் உங்கள் கட்டுரையும் இம்மாதம் எனக்கு பெரும் மனநிறைவை கொடுத்தது. உங்கள் வயது குறைவு என கருதுகிறேன். ஆயினும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன். சரஸ்வதி உடனிருப்பாளாக.

 2. vasan
  March 7, 2019 at 6:42 pm

  நான்விமர்சனங்களை வாசிப்பதில்லை. அதில் எழுதுபவரின் ஈகோவே இருக்கும். பிரமிளின் சில கட்டுரைகளையும் சுந்தர ராமசுவாமியின் கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். கைலாசபதி, நுஃமான் ஒம்பவில்லை. வெங்கட் சாமிநாதனுடன் நிறுத்திவிட்டேன். ஜெயமோகன் விமர்சன கட்டுரைகள் புனைவுகளை வாசிக்கும் எனர்ஜியை கொடுக்கும். உங்கள் கட்டுரை நல்லெண்ணத்தை கொடுத்துள்ளது எனக்கு ஒரு எழுத்தாளரை நீங்கள் அணுகியுள்ள விதமும் அதன் பேலன்ஸ் தன்மையும் கவர்ந்தது. நன்றி

 3. ஸ்ரீவிஜி
  March 15, 2019 at 5:11 pm

  நவீன் அவர்களின் எழுத்துகளில் நிறைய தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்ளலாம். அத்தோடு மட்டுமல்லாது, இக்கட்டுரை கவிதை வாசிப்பின் உணர்வைக்கொடுக்கிறது. வரிக்குவரி கவிதை வடிப்பதைப்போன்று உவமைகளைக் கொடுத்து கட்டுரையினை வடித்துள்ளார். வாசிப்பு அனுபவத்தில் அவ்வளவு உற்சாகத்தைக்கொடுக்கிறது.கிறங்கவைக்கும் எழுத்துநடையில் வாசகனைக் கட்டிப்போட வைக்கின்ற உத்தியினைக் கைவரப்பெற்ற நவீனுக்கு வாழ்த்துகள்.
  இமையத்தின் சிறுகதைகள் நல்ல அறிமுகம். அருமையும் கூட. ஒவ்வொரு சிறுகதையும் மூளைக்குள் ஒரு சிறு பொறியினைத் தட்டிவிட்டுச்செல்கிறது. இத்தனைச்சிறுகதையையும் நானே வாசித்து முடித்ததுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நன்றி வல்லினத்திற்கு.

 4. perumalmurugan
  March 17, 2019 at 9:11 pm

  இயல்புவாதத்திற்கு நாகத்தின் ஆவணப்படத்தை ஒப்புமை காட்டியது அருமை. எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்தது. உவமைகளைக் காட்டும்போதே அறிவு சார்ந்த கட்டுரைகள் புனைவுபோல மனதில் பதிகின்றன. அதேபோல உவமைகாட்ட ஒருவருக்கு அது குறித்து நன்கு தெளிவிருக்க வேண்டும். உங்களுக்கு இமையத்தின் கதைகள் மீதும் இலக்கிய மதிப்பீட்டின் மீதும் அழுத்தமான அறிவுள்ளதை இக்கட்டுரையில் நீங்கள் பயன்படுத்தும் உவமைகளே காட்டுகின்றன,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *