அணையா அனல் – இமையத்தின் ஐந்து நாவல்களை முன்வைத்து

sunil1எழுத்தாளர் இமையம் தமிழின் தற்கால கதைசொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவர். அவருடைய கதைகள் நடுநாடு என்று விளிக்கப்படும் வட தமிழக – புதுச்சேரி நிலப்பரப்பை களமாக கொண்டவை. இயல்புவாதத் தன்மையிலானவை. அந்நிலத்தின் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் கையாள்பவை. இக்கட்டுரை அவருடைய ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதே’ மற்றும் ‘செல்லாத பணம்’  என இதுவரை அவர் எழுதிய ஐந்து நாவல்களைப் பற்றி ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை அளிக்க முயல்கிறது.

நவீன இலக்கியத்தின் பொதுவரையறை என ஏதாவது ஒரு கூறை இயம்பலாம் எனில், அது ‘சாமான்யனின் சமூக விமர்சனம்’ என்பதை நோக்கமாகக் கொண்டது. வரலாறு, சமூகக் கட்டமைப்பு, அரசு, குடும்பம் என எல்லா அமைப்புகளையும் தனி மனிதனை அலகாகக் கொண்டு அளக்க முற்படுவது நவீன இலக்கியத்தின் இயல்பு. ஆகவே அவற்றின் மீதான விமர்சன நோக்குகளை இயங்கு விசையாக கொண்டவை. பின்நவீனத்துவ காலகட்டத்தில் ‘விளிம்பு நிலை கதை மாந்தர்களை’ மையமாகக் கொண்ட கதைகள் எழுந்து வந்தன. அவை தனி மனிதனை ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக்கின. தனி மனிதர்களின் கதைகள் ஒரு சமூகத்தின் கதைகளாகவும் ஆயின. இமையத்தின் ஐந்து நாவல்களை இரு பிரிவுகளாக, நாவல் களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து வகுத்துக்கொள்ளலாம். ‘கோவேறு கழுதைகள்’ ‘ஆறுமுகம்’ மற்றும் ‘செடல்’ ஆகிய மூன்று நாவல்களும் மேற்கூறிய வகையில் குறிப்பிட்ட நிலப் பகுதி, அங்கு வாழும் குடியினரின் தனித்துவமான வாழ்வுமுறை மற்றும் சிக்கல்களை விரிவாக பேசுபவை. இவைத் தவிர்த்து அவருடைய அண்மையகால நாவல்களான ‘எங்கதே’ மற்றும் ‘செல்லாத பணம்’  ஆகியன முந்தைய மூன்று நாவல்களின் களத்திலிருந்து நகர்மய மத்திய வர்க்கத்து வாழ்வைப் பேசுகின்றன. அறக் கேள்விகளை எழுப்புகின்றன.

‘கோவேறு கழுதைகள்’ இமையத்தின் முதல் நாவல். வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் நாவல்களில் முக்கியமான ஒரு பாய்ச்சலாக இது கொண்டாடப்படுகிறது. ஒரு ஊரின் பறையர்களுக்குக் குடி வண்ணானாக இருக்கும் சவுரி- ஆரோக்கியம் குடும்பத்தின் கதை. அவர்களின் மகள் மேரி மருமகன் திரவிய ராஜ், மகன் ஜோசப் மருமகள் சகாயம் மற்றும் கடைசி மகன் பீட்டர் ஆகியோரை கதை மாந்தர்களாகக் கொண்டது. ஆரோக்கியமே நாவலின் தலையாய பாத்திரம். வீடுவீடாக துணிகளை அள்ளி வருவது மட்டுமின்றி பிரசவம் பார்ப்பது, மாரில் பால் கட்டிக்கொண்டிருக்கும் போது அதை சரி செய்து மீட்பது, களத்துக்கு சென்று நெல் தூற்றுவது, மரண வீடுகளில் முக்கியமான சடங்குகளை நிகழ்த்துவது என ஒரு ஊருக்கு எல்லாமுமாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு முறையாக சேர வேண்டிய தானியத்தையும், பன்றி தலையையும் குடலையும்கூட  அவளுக்கு அளிக்க மறுக்கிறார்கள். வாழ்க்கை மாறி வருகிறது. முந்தைய காலகட்டங்களின் உரிமையும் சலுகையும் குறைந்தோ இல்லாமலோ ஆகி வருகிறது. ஆனால் அதே வேளையில் அதன் பொருட்டு அவ்வாழ்வை உதறிச் செல்ல அவர்களுக்கு உரிமையில்லை என வகுக்கப்படுகிறது. வெளியேறிச் சென்ற ஜோசெப்பின் பொருட்டு அவள் கண்டிக்கப் படுகிறாள். சவுரிக்கும் கருப்பாயிக்குமான உறவு சன்னமாக கோடிட்டு காட்டப்படுகிறது. சடையன் மேரியை வன்புணர்வு செய்தபோது எவ்வித எதிர்வினையும் இன்றி அமைதியாக அவர்கள் அதை கடக்க வேண்டியிருக்கிறது. ஆரோக்கியத்திற்கும் மருமகள் சகாயத்திற்குமான உறவு இந்நாவலின் முக்கிய சரடு. ஒருவகையான அன்பும் ஊடலும் கடந்த உறவு. இரு தலைமுறை, இருவேறு வாழ்க்கைப் பார்வைகளுக்கு இடையிலான முரண். ‘ஆரோக்கியத்திற்கு சகாயத்தை பிடித்திருந்தது. ஆனால் தனக்குப் பிடித்திருக்கும் விஷயம் சகாயத்திற்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சியே சண்டை போடுவாள்’. கோவேறு கழுதைகள் உணர்ச்சிகரமான வாழ்வாவணமாக துலங்குகிறது.

‘ஆறுமுகம்’ நாவல் 1999 ஆம் ஆண்டு வெளியானது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரarumugam_FrontImage_709 பகுதிகளை களமாகக் கொண்டது. இந்நாவலும் கால மாற்றத்தையே பேசுகிறது. புதுச்சேரியின் வளர்ச்சி, ஆரோவில்லின் தோற்றம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியது என காட்டுகிறது. ஆரோவில்லையும் கூட சற்றே விமர்சன நோக்குடன் அணுகுகிறது. ‘ஆண்ட வீட்டு பொண்ணு’ வசந்தாவும் அவர்களின் குடி பறையர் வீட்டு ஆறுமுகமும் ஒன்றுபோலவே நகரமயமாக்கலில் சிக்கிச் சிதைவதை சொல்கிறது. சிறுவனாக துவங்கி ஆறுமுகம் இளைஞனாக வளரும் காலத்தில் அவன் வாழ்வில் நிகழும் இடையீடுகளை, சவால்களை, குழப்பங்களை பேசுகிறது நாவல். குழந்தைகளின் உலகை அவர்களின் மகிழ்ச்சியை, குழப்பத்தை, மிரட்சியை, பதின்மத்தின் அடையாள சிக்கலை, தன் மீட்சியை இமையம் வலுவாக சித்தரிக்கிறார். ‘ஆறுமுகம்’ நாவலையே நாம் அயல் இலக்கியங்களில் பாலியத்தில் துவங்கி பதின்மத்தில் வளர்ந்து இளமையில் தன்னை கண்டடையும் ‘ஒரு ஆளுமை உருவாக்க நாவல் வகைமாதிரியாக’   அடையாளப் படுத்த முடியும்.  (coming of age). பாலியல் தொழிலாளிகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறார்கள். ஆறுமுகத்தின் தாத்தாவுக்கும் அவனுக்குமான உறவு அழகாகவும் முழுமையாகவும் உருவாகியுள்ளது. நொச்சி வெட்டி கூடை பின்னும் தாத்தா தன் இடத்தை விட்டு வர மறுப்பவர். தன் மகளின் பாலியல் பிறழ்வை அறிந்து மனமுடைந்து தூக்கிட்டு மரிக்கிறார். ஒழுக்கமான, நியாயமான அதேசமயம் வளைந்து கொடுக்காத பிடிவாதம் பிடித்த இறுக்கமான தந்தை. இந்த தந்தையே சற்று படித்து நல்ல நிலையில் இருக்கும்போது ‘செல்லாத பணம்’ நாவலின் நடேசனாக பரிணாமம் கொள்கிறார் எனத் தோன்றியது. ‘செல்லாத பணம்’ நாவலில் அவமானத்தில் இறந்த தந்தையின் இழப்பை குடும்பம் எதிர்கொள்ள இயலாமல் தவித்து சிதறுகிறது. தந்தை தன் இறுக்கத்தால் மகளை இழந்து தத்தளிக்கிறார் ‘ஆறுமுகம்’ நாவலில். ‘ஆறுமுகம்’ நாவலில் வசந்தாவின் கதையையும் இத்துடன் சேர்த்து காணமுடியும். பிழைக்க வழி தேடி அட்டை கம்பனிக்கு சென்ற இடத்தில் அவளுடைய மேலாளர் அளிக்கும் தொல்லைக்கு வேறுவழியின்றி பணிகிறாள். அதையறிந்த அவள் ஊரைச் சேர்ந்த அதே நிறுவனத்தில் பணியாற்றும் வாயில் காப்பாளனும் அவளை மிரட்டி பணிய வைக்கிறான். அச்செய்தி அறிந்து அவள் அண்ணன்களும், அண்ணிகளும், ஊராரும் காறியுமிழ்ந்து கட்டி அடித்து துரத்தி விடுகிறார்கள். அவள் எப்படியெல்லாம் தவித்திருப்பாள்? அவமானப்பட்டிருப்பாள்? ‘அறியாப் புள்ள, தெரியா வயசு’ என்று விட்டுவிட்டு அவள் பிழைக்க வழியமைத்து கொடுத்திருக்கக் கூடாதா? அவளுடைய தாய் தந்தை இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்றெல்லாம் ஆறுமுகம் சிந்திக்கிறான். ‘யாரோட திங்கற சோத்துல நான் மண்ணயள்ளிப் போட்டன்? குடிக்கிற தண்ணீயில வெசத்தக் கலந்தனா, நடக்குற தடத்துல முள்ளப் போட்டனா? நான் செஞ்ச பாவமென்னா? என்னிஷ்டமா எவன்கிட்ட நான் மனசார சேர்மானமா இருந்தன்? பொணக்கட்டி அடிக்கிறாப்ல அடிச்சாங்களே எதுக்கு? ராவோ பகலோ எனக்குத் தூக்கமில்ல. சூத்தக் கழுவிவிட்டா ஒடம்புல பீ  இல்லன்னு ஆயிடுமா?’ எனும் வசந்தாவின் கேள்வி நம்மை தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. ஒருவகையில் சென்ற யுகத்து ‘தங்கப் பதக்க’ மனநிலைக்கு எதிரான பரிணாமம். விழுமியங்கள், இலட்சியங்கள், கொள்கைகள் அன்பின் விலையில் வளர வேண்டியத் தேவையில்லை என்பதை திரும்பத் திரும்ப இந்நாவல்கள் சொல்கின்றன. பரிவையும் கனிவையும் இவற்றுக்கு மேலானதாக முன்வைக்கின்றன. அர்த்தமற்ற பிடிவாதத்தை, இறுக்கத்தை, போலி கவுரவத்தைச் சுமப்பதினால் எந்தப் பலனும் இல்லை. ஒழுக்கவாதத்தின் வன்முறையை அடையாளப்படுத்துகிறது எனவும் சொல்லலாம். ஆறுமுகம் தனபாக்கியத்தின் நடத்தையை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்து அவளை மீண்டும் சந்திக்கும் புள்ளியில் நாவல் நிறைவுறுகிறது. அப்போது அவன் அவளை முழுவதுமாக மன்னித்து ஏற்க தயாராக இருக்கிறான். அவளுடைய பிழைகள் ஒன்றுமில்லை எனத் தோன்றும் அளவிற்கான வாழ்வனுபவங்களை அடைந்திருந்தான். தனபாக்கியத்திடமே திரும்பியிருக்க வேண்டும், அவளைத் தேடி அடைந்திருக்க வேண்டும் எனும் உணர்வே அவனை வதைக்கிறது. ‘தனபாக்கியம், சின்னப் பொண்ணு, வசந்தா, பாக்கியம்’ என ஆறுமுகம் நாவல் வலுவான பெண் பாத்திரங்களால் பின்னப்பட்டது.

31538452‘செடல்’ 2006 ஆம் ஆண்டு வெளியானது. பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்தில் மழை தருவிக்க பொட்டு கட்டிவிடுதல் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. பறைக் குடியிலேயே கூத்தாடிகள் மேலும் கீழானவர்களாக கருதப்பட்டார்கள். அக்குடியிலிருந்து ஒரு கன்னிப் பெண்ணுக்கு செல்லியம்மனுக்கு பொட்டு கட்டிவிடுகிறார்கள். இசை வேளாளர் சமூகத்தில் பொட்டு கட்டிவிடுவதைப் பற்றிய வழக்கங்கள் ஓரளவிற்கு பரிச்சயம் என்றாலும் இந்நாவலின் களம் புதிதாக இருந்தது. செடல் அப்படி ஊராரின் அழுத்தத்தின் விளைவாக ஊருக்காக நேர்ந்துவிடப் படுகிறாள். சிறுமியாக அவளுடைய இயல்பான குறுகுறுப்பு மறைந்து கைவிடப்பட்ட நிலையை அடைகிறாள். செடலுக்கும் அவளை காபந்து செய்யும் சின்னம்மாள் கிழவிக்குமான உறவு இந்நாவலின் சிறப்பான பகுதிகளில் ஒன்று. கிழவி வயிற்று பசி உடையவள். செடலை கவனித்தால் அவளுடைய வயிற்றுப்பாடு தீரும். உறைவிடமும் உண்டு எனும் கணக்குகள் துவக்கத்தில் அவளை இயக்குகிறது. அதை மீறி சிறுமி செடலின் மீது நேசம் கொள்கிறாள். அவளுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறாள். அவளை எவரிடமும் எத்தருணத்திலும் விட்டுக்கொடுப்பதில்லை. செடலை திட்டித் தீர்க்கவும் மறப்பதில்லை. பிரியத்திற்குரியவர்களின் மரணம் இமையத்தின் கதை மாந்தர்களின் வாழ்வை நிரந்தரமாக குலைத்துவிடுகிறது. ஆறுமுகம் நாவலின் ராமன் மற்றும் கிழவன், கோவேறு கழுதைகளின் திரவிய ராஜ், செடலின் சின்னமாள் கிழவி ஆகியோர் நல்லியல்புகள் கொண்டவர்கள். குடும்பத்தை பாதுகாப்பவர்கள். அவர்களின் மரணம் நிரந்தரமான அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. கூரையற்று மனிதர்களை நிற்கச் செய்கிறது. கொலைசிந்து அருணாசலம் எனும் பாத்திரம் சுவாரசியமான ஆளுமை. நியாயவான். பெரும் குரல் எடுத்து பாடுபவன். அதுவும் ஊர் ஊராக கொலை சிந்து பாடுபவன். அதிலிருந்து தனக்கான வரும்படியை தேற்றிக் கொள்பவன். அவனே ஒரு தனி நாவலுக்கான கருப்பொருள் என்று தோன்றியது. அவனுடைய பாடல்கள் நாவலில் இடம்பெறுகின்றன. சிறுமியாக செடல் தன்னைப்போன்றே பொட்டு கட்டிக்கொண்ட உறவு முறை பெண்ணான லட்சுமியை சந்திக்கிறாள். ஒருவகையில் அவளே செடலுக்கான ஆதர்சம். பின்னர் அவளைக் காட்டிலும் மூத்த ஆட்டக்காரி பாஞ்சாலியை நாவலின் இறுதியில் சந்திக்கிறாள். அவளே செடலின் எதிர்கால பிம்பம். பாஞ்சாலியும் செடலும் சந்திக்கும் அத்தியாயம், அவர்களுக்கு இடையிலான உரையாடல் முக்கியமானது. மாரியம்மன் திடலில் ஊர் ஊராக பிழைக்கும் தொம்பக் குடியினரும் குறவர்களும் தங்குவது செடலுக்கு பிடிக்காது. அவ்விடத்தையே அவர்கள் அசுத்தமகாக்கிவிடுவார்கள். தொம்பக் கிழவி செடலிடம் சொல்கிறாள் “ஒங்கள அண்டிப் பொயக்கத்தான தேசம் வுட்டு தேசம் சட்டியத் தூக்கிட்டு வர்றோம்.” என்பாள். என் வாசிப்பின் எல்லையில் இதுவே தமிழ் நவீன இலக்கியத்தில் இக்குடியைப் பற்றி பதிவான முதல் ஆவணம். செடல் ருதுவான இரவு பேய் மழையில் அங்கும் இங்குமாக அலைகிறாள் ஆனால் யாரும் அவளுக்கு உதவவில்லை. தன்னை ஏன் எவரும் நினைக்கவில்லை என ஏங்குகிறாள். பொன்னன் கிழவியின் இடத்தை ஏற்றுக்கொள்கிறான். அவன் செடலின் பாதுகாவலனாக ஆகிறான். பொன்னனுக்கும் செடலுக்குமான உறவு எந்த வகையிலும் சேர்த்தி அற்றது. ஏறத்தாழ தந்தையின் இடம் அவனுக்கு ஆனால் உள்ளூர தனக்குள் அவள் மீது மோகம் உண்டோ என ஐயம் கொள்கிறான். அவனுடைய மனைவியும் மகன்களும் செடலை இழிவாகவே நடத்துகிறார்கள். ஆண்ட வீட்டு வீரமுத்து செடலின் மீது காதல் கொள்கிறான். அவன் மீது செடலுக்கும் ஈர்ப்பு உள்ளது. ஆனால் ஒரு புள்ளியில் அவன் மீதும் ஏமாற்றம் கொள்கிறாள். சமூக வரையறையை தாண்ட அவள் விரும்பவில்லை. இறுதிவரை தன் நோன்பிற்கு உண்மையாகவே இருக்கிறாள். ஆரான், விட்டம் போன்ற சக ஆட்டக்காரர்கள் வலுவான கதை மாந்தர்களாக உருக்கொள்கிறார்கள். பொட்டுகட்டிவிடப்பட்டவர்களும் ஒன்றும் சாமணியமானவர்கள் இல்லை என்பதை இந்நாவல் பல இடங்களில் சுட்டுகிறது. இளைத்தவர்களை ஏமாற்றி சுரண்டிவிடுவார்கள். செடலில் ஊடாடி வரும் வாய்மொழி பாடல்களும் பாரதக் கதைகளும் இந்நாவலின் ஆழத்தை கூட்டுகிறது. கர்ண மோட்சமும் பொன்னுருவி கதையும் இழவு வீட்டில் பாடப்படுகிறது. பீஷ்மரும், துரியனும், தருமனும் வருகிறார்கள். நிகழ்துகலைப் பற்றிய ஆவணமாகவும் ஆகிறது. இக்கதைகள் மைய இழைகளோடு ஊடாடி மேலதிக பொருள் அளிக்கின்றனவா என மறுவாசிப்பில் கவனிக்க வேண்டும்.

engkate‘எங் கதே’ 2015 ஆம் ஆண்டு வெளியான நாவல் அல்லது நெடுங்கதை. மொத்த நாவலும் விநாயகம் எனும் கதை சொல்லியின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவருடைய நாவல்களில் இந்நாவல் மட்டுமே தன்னிலையில் விரிவது. கதைசொல்லி இயம்புவது போல் எங்கதே விநாயகத்தின் கதை மட்டுமல்ல கமலாவின் கதையும் கூட. இதற்கு முன்பான நாவல்களில் இருந்து மத்திய வர்க்க வாழ்வை நோக்கி இந்நாவலில் நகர்கிறார். இமையத்தின் கதை மாந்தர்கள் திரும்பிப் பார்க்காமால் திசை வழி தேர்பவர்கள். செடலும், ஆறுமுகமும் அப்படித்தான். இந்நாவலின் விநாயகமும் கமலாவும் அதே மாதிரித்தான். ‘செல்லாத பணம்’ ரேவதியும் கூட. தர்க்க மனம் எச்சரிக்கும். அப்பாதையை விட முடியாமல் சிக்குண்டு தவிக்கும். மேலும் மேலும் என சிக்கலான சுழற்சியில் சிக்கிக் கொள்வார்கள். திரும்ப வேண்டும் எனும் ஆசையும் கூட அடியாழத்தில் இருக்கும் ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்ப முற்படுவதில்லை. தங்களை மீட்டுக்கொள்ள முடிந்ததில்லை. உணர்ச்சிபூர்வமான பேச்சு மொழியில், இரு பெண் பிள்ளைகளைப் பெற்ற கணவனை இழந்து பள்ளியில் பணியாற்ற வரும் கமலாவிற்கும், கல்வி கற்று ஆனால் எந்தப் பணியிலும் தரிக்காமல் உள்ளூரில் சுற்றித் திரியும் வினாயகத்திற்கும் இடையிலான திருமணத்திற்கு அப்பாலான உறவை சித்தரிக்கிறது. இப்படியான கதைகள் நமக்கு நன்கு பரிச்சயமானவைதான். ஆனால் தன்னிலையில் அதன் முழு தர்க்கமின்மையுடன் உக்கிரமாக வெளிப்படும்போது இவ்வகையான உறவு நிலைகளை நாம் வெறும் பாலியல் தேவையாக சுருக்கிக்கொள்ள முடியாது என்பது விளங்குகிறது. ‘நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லெ. சண்ட வந்தா யாரும் சேத்துவைக்க மாட்டாங்க.’ எனும் விநாயகத்தின் சொற்கள் இவ்வுறவுகளின் தவிப்பையும் தகிப்பையும் கடத்துகிறது. எவ்வித தர்க்க சட்டகங்களிலும் அடக்க முடியாது. இது ஏன் இப்படி என்றொரு கேள்வி கேட்டால் அதற்கு தெளிவான பதில்கள் ஏதுமில்லை. விநாயகம் அம்மாவின் மீதும் சகோதரிகளின் மீதும் பிரியமுடையவனாக இருக்கிறான். தங்கைகளும் அண்ணனின் பேரில் பெரும் அன்பு கொண்டவர்கள். அவனுக்காக கமலாவின் வீட்டிற்கே சென்று பேசுகிறார்கள். கமலா இறந்த தன் கணவன் வீட்டு சொத்துக்களையும் தானே நிர்வகிக்கிறாள். மாமியார் மாமனாரின் அம்மா அப்பாவின் நம்பிக்கையை பெற்றவள். இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலையும் அச்சமும் கொள்பவள். இருவருக்கும் உறவை விட்டு எழ எல்லா தர்க்க நியாயங்களும் இருந்தபோதும் அவர்களால் அது முடியவில்லை. மதுவில் மிதக்கும் எறும்பென எழ முடியாமல் தவிக்கிறார்கள். வழமையாக இவ்வுறவுகள் தற்கொலையிலோ அல்லது கொலையிலோ சென்று முடியும். இரண்டிற்கும் மாறாக சட்டென மனவிரிவு கொண்டு விநாயகம் இவ்வுறவை பிரிந்து எழுகிறான். உறவின் உடைமை உணர்வு உடைந்து போகிறது. அன்பின் தளை, அது உருவாக்கும் எதிர்பார்ப்புகள், கசப்புகள் மற்றும் மீறல்கள் இமையத்தின் அனைத்து நாவல்களிலும் ஒரு பேசுபொருளாக உள்ளன. கமலா அழுத்தமான வலுவான பாத்திரமாக உருவாகி வருகிறாள். வினாயகத்திற்கு இருக்கும் குழப்பமோ பிணைப்போ அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அரிதாக அவள் தன் தரப்பை பேசும்போது தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறாள்.

இமையத்தின் அண்மைய நாவல் ‘செல்லாத பணம்’ 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது.sellaatha-panam_FrontImage_991 இத்தலைப்பும், இந்த நாவல் வெளிவந்த ஆண்டும், நாவல் நிகழும் வருடமும் நமக்கு இந்நாவல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சார்ந்ததோ எனத் தோன்ற செய்யும். ஆனால் நாவல் அதுவல்ல. எல்லாவற்றையும் பணத்தால் அளந்துவிட முடியும், அடைந்துவிட முடியும் என எண்ணி என்றைய தேவைக்காகவோ பணத்தை சேர்த்து வைக்கும் மத்திய வர்க்க மனநிலையின் மீதான விமர்சனமே இந்நாவல். பணம் பயன்படாத, செல்லுபடியாகாத தருணங்களை சுட்டிக் காட்டுகிறது. பணமும், படிப்பும், அன்பும் இருந்தும் ரேவதி எல்லாவற்றையும் மீறி பர்மா அகதி ஆட்டோக்கார ரவியின் சினிமாத்தனமான காதலை ஏற்கிறாள். அவனையே திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்து சாதித்து கொள்கிறாள். திருமணம் ஆகி இரு குழந்தைகளைப் பெற்று சில ஆண்டுகளுக்கு பின் ரேவதி தீக்காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறாள். அதற்கு பின்பான பதட்டமான நான்கு நாட்கள் தான் நாவல். நிகழ்வுகளும் நினைவுகளும் அடர்த்தியாக பின்னிச் செல்கின்றன. ரேவதி, ரவி, அமராவதி, நடேசன், முருகன், அருண்மொழி ஆகிய ஆறு முக்கிய கதை மாந்தர்கள். அத்தனை கதை மாந்தர்களின் நினைவுகளும் ரேவதியை சுற்றியே வருகிறது. மருத்துவமனையில் இருக்கும் சக நோயாளிகளின் அட்டன்டர்கள் வழியாக அவர்களின் கதைகள் சொல்லப்படுகின்றன. உலகம் ஒரு மகாமசானமாக சட்டென தோன்றி நம்மை அச்சுறுத்துகிறது. கேட்கும், பார்க்கும், படிக்கும் எல்லாவற்றிலும் மரணங்களே உள்ளன. ரவி ஒருவகையில் தமிழ் சினிமாவின் வார்ப்புரு. தன் சகோதரிக்கு காதல் திருமணம் நிகழக்கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பவன். வாசகன் அவன் மீது கோவம் கொள்ளவும் எரிச்சல் அடையவும் வாய்ப்பு அதிகம். அதுவே இமையத்தின் வெற்றியும் கூட. அவன் தரப்பு நியாயம் என்பது மிகவும் பலவீனமானது எனினும் அவன் சொல்வது உண்மையும் கூட. முருகன்- அருண்மொழியும் காதலித்து திருமணம் செய்தவர்களே. சொந்த சாதியில், உறவு முறையில், சம படிப்பு உள்ளவர்கள். இத்தகைய எந்த கணக்குகளும் ரேவதி- ரவி உறவில் இல்லை. ஒருவகையில் ரேவதியின் கதை ஒரு நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்திருந்தால் அவள் ஒரு சிறு தெய்வமாக வழிபடப் பட்டிருப்பாள் எனத் தோன்றியது. சிறு தெய்வக் கதைகளின் நவீன வடிவம் தான் ‘செல்லாத பணம்’. பெருவஞ்சம் கொண்டு தன்னை எரித்து கொள்பவள், அன்பில் குளிர்ந்து அனைவரையும் ஆற்றுபடுத்தி அருள்பவள். நாவலின் புறச்சூழல் என்பது ஜிப்மர் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதைச் சுற்றிய சிறிய வட்டம் மட்டுமே. இந்த சூழல் எனக்கு தனிப்பட்ட முறையில் பரிச்சயம் என்பதால் நாவலோடு மேலும் நெருங்க முடிந்தது. ஜிப்மர் மிகத் தரமான சிகிச்சைக்கும் மிகக் கறாரான நடைமுறைகளுக்கும் பேர்போனது. பணம் செல்லுபடியாகாத மருத்துவமனை. முழுக்க முழுக்க உரையாடல்களால் எழுப்பப்படுகிறது. வாசகனையும் ரேவதியின் குடும்பத்தையும் ரேவதியின் மரணத்திற்கு பக்குவப் படுத்துவதே நாவல். மரணத்தின் வாயிலில் நின்று வாழ்க்கைப் பற்றிய விசாரணையாக விரிகிறது.   அறக் கேள்வியாகவோ, அற போதனையாகவோ எஞ்சாமல் உணர்வுபூர்வமான மனிதர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களின் மோதலில் உருவாகிறது நாவல் மரணத்தின் முன் வஞ்சங்கள் பொருளிழந்து போவதை அப்பட்டமாக சொல்கிறது. ரேவதி வஞ்சத்தை கடந்து வருகிறாள். முருகனை, நடேசனை, அமராவதியை வஞ்சத்திலிருந்து மீட்கிறாள்.

***

இமையத்தின் மொழியில் சில இடங்கள் அபாரமாக வெளிப்படுகிறது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் ஆரோக்கியம் உறங்கிக்கொண்டிருக்கும் அவளுடைய இளைய மகனை நகர்த்துவாள். ‘பீட்டரை உயிர்முடிந்து போன ஒன்றை நகர்த்துவதுபோல் நகர்த்திப் போட்டாள்.’ இங்கே பிணம் என்று எழுதியிருக்கலாம் ஆனால் பிரக்ஞைப்பூர்வமாக அந்தச் சொல்லைத் தவிர்க்கிறார். ஒரு அன்னை தன் மகனை அப்படி கருதி நகர்த்த மாட்டாளே. கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களுக்கு ஏற்ற உவமைகளையே பயன்படுத்துகிறார். நேரத்தை குறிப்பிடும்போது ‘ஒரு குழம்பிற்கு மிளகாய் அரைக்கும் நேரத்திற்குள்ளாகவே அவர்களோடு சேர்ந்து கொண்டாள்’ என எழுதுகிறார். பாடல் கற்றுகொடுக்கும்போது ‘எளஞ்செடிக்கு தண்ணீ ஊத்துராப்ல சன்னமா, அடி வவுத்துல ஆரம்பிச்சி மொள்ளமொள்ளமா முன்னால கொண்டா’ என எழுதுகிறார். மற்றோர் இடத்தில் ‘கிணற்றிலிருந்து வாளியை எடுப்பதுபோல் நினைவுகளை எடுத்தாள்’ என சொல்கிறார். புற விவரணைகளை அகச் சலனத்தின் பிரதிபலிப்பாக எழுதும் போக்கும் இமையத்திடம் வலுவாக தென்படுகிறது. பாதிரியாரின் சமையற்காரன் பீட்டரை சாமியார் படிப்பிற்கு அழைக்க வரும்போது பெருமழை கொட்டுகிறது. சுவர் சரிந்துவிடுமோ எனும் அச்சம் மேலெழுகிறது. ஆரோக்கியம் பீட்டரை அனுப்ப மறுக்கிறாள். வந்தவன் தர்க்க நியாயங்களைச் சொல்கிறான். சுவர் என்பதும் மழை என்பதும் இந்த ஊடாட்டத்தில் குறியீட்டு தளத்தில்  பொருள் கொள்கிறது. அனைத்து நாவல்களிலும் இருள், அந்தி கவிவது, ஒளி எழுவது புறத்தை குறிக்கும் அளவிற்கே அகத்தையும் குறிக்கிறது. செடல் நாவலில் செடல் ஓரிரவு தனித்து நடக்கும் போது காரணமின்றி வெகுதூரம் இருளில் வந்துவிட்டதை உணர்கிறாள். “விட்டுவிட்டுக் கேட்கும் நரியின் ஊளை, வானத்தில் நிலவை விட்டு விலகிவிலகி ஓடும் மேகங்கள், குளிர்ந்து கிடக்கும் பூமிப் பரப்பு என்று ஒவ்வொன்றையும் வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். பயமென்பது துளியும் அவள் மனத்தில் இல்லை. இரவு விரைத்துகொண்டிருந்தது. அவளுடைய கண்களில் நட்சத்திரமும் நிலவும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அந்த ஒளிர்வு மனத்திலிருந்த அனைத்தையும் துடைத்தெறிந்துவிட்டது.” இவ்வரிகள் ஒருவகையில் செடல் தன்னை கண்டடையும் கவித்துவமான தருணமாக மனதில் எஞ்சி விடுகிறது.

***

செடல், ஆறுமுகம், ஆரோக்கியம் (கோவேறு கழுதைகள்) ஆகிய தனி மனிதர்களின் கதை வழியாக இவை சமூகத்தின் கதையாகவும் பரிணாமம் கொள்பவை. இம்மூன்று நாவல்களையும் ஒரே நாவலாக வாசிக்கவும் இடமுண்டு. அல்லது  ஒன்றின் தொடர்ச்சியாகவும் கூட வாசிக்கலாம். மூன்று நாவல்களிலும் பஞ்சத்தின் சித்திரம் உருபெருகின்றன. குறிப்பாக செடல் நாவலில் பஞ்சம் மக்களை நிலத்தை விட்டே விரட்டுகிறது. செடலிடம் சொல்லிக்கொள்ளாமல் அவளுடைய மொத்த குடும்பமும் ஒரே இரவில் கண்டிக்கு புறப்பட்டுச் செல்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு ஒரேயொரு சகோதரியும் அவளுடைய மகனும் மட்டுமே திரும்புகிறார்கள். கதை மாந்தர்கள் அனைவருமே சோற்றுக்காக அலைகிறார்கள். மூன்று நாவல்களிலும் பெருமழை பொழிந்து அவர்களின் குடிசைகளை, இருப்பிடத்தை நாசமாக்கி ஒண்டுவதற்கு இடமின்றி குளிரிலும் மழையிலும் அவதியுறுகிறார்கள். ஒழுகும் கூரையின் கீழ் இருக்கும் பாத்திரங்களில் நீர் பிடித்து சமாளிக்கிறார்கள். ஒரு மழைநாளில் செடல் தன் குடிலை விட்டு வெளியேறிச் செல்கிறாள். செடலில் மழை ஒரு கொண்டாட்டமாகவும் உருபெறுகிறது. ‘ஆறுமுகம்’ நாவலின் தன பாக்கியத்தின் கணவன் ராமனும் ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் மேரியின் கணவன் திரவிய ராஜும் ஒரே சாயலுடையவர்கள்தான். மென்மையான கணவர்கள். இக்கட்டான வாழ்வின் ஊடாக பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்தவர்கள். அகாலமாக மரணமடைந்தவர்கள். இமையத்தின் கதை மாந்தர்கள் சூழ்நிலை கைதிகள். சூழல் அவர்களைப் பாதாளத்தில் தள்ளுகிறது. சமூக அமைப்பு அவர்களை அங்கேயே கட்டுண்டு கிடக்கச் செய்கிறது. ராமனின் மரணம் தனபாக்கியம் மற்றும் ஆறுமுகத்தின் வாழ்வை நிரந்தரமாக மாற்றிவிடுகிறது. சமூக நிர்பந்தம் செடலுக்கு பொட்டு கட்ட வைக்கிறது. அவளின் குடும்பம் அவளை விட்டுவிட்டு கண்டிக்கு பிழைக்கப் போகிறது. செடல் எல்லோருக்குமானவள். ஆகவே யாருமற்றவளும் கூட. ஆரோக்கியத்தின் நிலையும் அதுவேதான். ஊர் குடிக்கே போதுவானவள் என்பதாலேயே நாதியற்றவள். இவ்விருவரையும் அலைக்கழிக்கும் கேள்வியும் இதுவே. தான் அனாதையாக தூக்கிப்போட ஆளின்றி மரித்துவிடுவோம் எனும் அச்சம் ஆரோக்கியத்தை வாட்டுகிறது. செடலும் ஆரோக்கியமும் ஊர் தங்கள் நன்மைக்காக சக்கையாக பிழிந்து பயன்படுத்தி கசக்கி எறிந்தவர்கள். செடலை ஆடச் சென்ற இடத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயல்கிறார்கள். ஒரு மோசமான நினைவாக எப்போதும் அது அவளை துரத்துகிறது. மேரி துணியெடுக்க சென்ற இடத்தில் சடையனால் வன்புணர்வு செய்யப்படுகிறாள். வசந்தா அட்டை கம்பனி மேலாளராலும் பின்னர் வேறு சிலராலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுகிறாள். ஊரார் அறிந்து அவளை அவமானப்படுத்தி அடித்து துரத்துகிறார்கள். சமையல் வேலைக்கு சென்ற இடத்தில் காய்ச்சலில் வதங்கி படுத்திருக்கும் பதின்மவயது ஆறுமுகத்தை சமையல்கார குப்புசாமி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறான். பணியிடம் சார்ந்த பாலியல் அத்துமீறல்கள் இமையத்தின் கவனத்தில் இருக்கிறது. ‘எங்கதே’ நாவலிலும் கமலா மற்றும் பணி ஓய்வு பெறவிருக்கும் சி.ஈ.ஓ சார்ந்த உறவு பூடகமாக துலங்குகிறது. யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது சார்ந்து இறுதி தீர்மானம் எதுமில்லாமலே நகர்கிறது. ஜெரி ஆல்பர்ட்- தனபாக்கியம் உறவும் இத்தகைய ஒரு தீர்மானமற்ற உறவு முறையாக தோன்றினாலும் அதன் சுரண்டல் அம்சம் புலப்படவே செய்கிறது.

செடலின் ராமலிங்க ஐயர் கோவேறு கழுதைகளின் தட்சிணாமூர்த்தி ஐயரின் அதே வார்ப்பு தான். பறக் குடிக்கு என்றே ஒரு ஐயர் இருப்பது எனக்கு புதிய தகவலாக இருந்தது. அவர்கள் ஆரூடம் சொல்பவர்களும் கூட. கோவேறு கழுதைகளில் லேசாக கோடிட்டு காட்டப்படும் தொம்பக் குடி மற்றும் குறவர்கள் வருகை செடல் நாவலில் விரிவாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு நிகழ்வாக இழவு வீட்டு ஆட்டம் கோவேறு கழுதைகள் நாவலில் சுட்டப்படுகிறது. அந்த ஆட்டக்காரர்களின் விரிந்த வாழ்க்கைச் சித்திரம் செடல் நாவலில் மைய ஓட்டமாக மாறுகிறது. செடலுக்கும்  ‘கோவேறு கழுதைகளின்’ ஆரோக்கியத்திற்குமான பாத்திர வார்ப்புகளில் மிக முக்கியமான ஒற்றுமை என்பது இருவருமே சமூக அமைப்பின் பலிகடாக்கள் என்பதே. அத்தனை இழிவுகளை சுமந்தபடி இருந்தாலும் அவ்வமைப்பை விட்டு வெளியேறாமல் தவிப்பவர்கள். இமையம் இந்நாவல்களில் ஒன்றையொன்று சார்ந்து வாழும் சமூக அடுக்குமுறை ஒன்றை காட்டுகிறார். அங்கு ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குபவர்களாகவும் உள்ளார்கள். அந்த அமைப்பு அத்தனை ஒடுக்குமுறைகளை நிகழ்த்தினாலும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையிலான பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள். அதைவிட்டு வெளியேறும்போது அதையும் இழக்க நேரிடும் எனும் அச்சம் அவர்களை வாட்டுகிறது. சாதி இந்துக்களை சார்ந்து பறையர்களும், பறையர்களை சார்ந்து கூத்தாடிகளும், வண்ணானும், இவர்கள் அனைவரையும் சார்ந்து நாடோடி கூட்டமான குறவர்களும் தொம்பக் குடியும் வாழ்கிறார்கள். பறையர் சமூகம் அவர்களில் நடனமாடும் கூத்தாடிகளை எப்படி இழிவாக காண்கிறது என்பதை செடல் பேசுகிறது. பறையர் தெருவில் குடியமர்த்தப்படும் குடி வண்ணான் குடும்பம் சந்திக்கும் இடர்களை ‘கோவேறு கழுதைகள்’ காட்டுகிறது. இளைய மகன் பீட்டரை சாமியார் படிப்பிற்கு அழைத்துச் செல்ல சமையற்காரன் வரும்போது தான் ஆரோக்கியம் முதன்முறையாக தான் செய்யும் தொழில் இழிவோ என குழம்பி குலுங்கி அழுகிறாள். அதுவரை அவளுக்கு அதுபற்றிய பிரக்ஞை ஏதுமில்லை.  ‘செடல்’ மற்றும் ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் உள்ள மற்றுமொரு பொதுக்கூறு என்பது காலமாற்றத்தை, சமூகம் நவீனம் அடைந்து வருவதை, எதிர்கொள்ள இயலாமல் தவிப்பது. ஆரோக்கியம் இஸ்திரி காரனையும் தையக்காரனையும் தனது எதிரியாகவே காண்கிறாள். அவள் தன் உரிமை என்றும் மரபு என்றும் எண்ணிவந்த பணிகளை வேறொருவன் தொழிலாக செய்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செடலுக்கு சினிமா இத்தகையதொரு சவாலாக ஆகிறது. தனது மரபான இடம் பற்றிய நிச்சயமின்மை அவளை வதைக்கிறது. பெயர் பெற்ற மூத்த ஆட்டக்காரியான பாஞ்சாலியை செடல் சந்திப்பது முக்கியமான கட்டம். ஒருவகையில் அவளுடைய கையறு நிலையே நாளை தன்னுடையதும் என அவள் உணரும் இடம் அது. செடல் சிறுமியாக இருக்கும்போது அவளை சந்திக்க வரும் லக்ஷ்மி இளமைகால செடலுக்கான ஒரு முன்னறிவிப்பு என்றால் பாஞ்சாலி செடலின் எதிர்கால பரிணாமத்தின் வெளிப்பாடு. ஆறுமுகமும் காலத்தின் சவாலையே எதிர்கொள்கிறான். ஆனால் அவன் இவர்கள் இருவரைப் போல் அதற்கு அஞ்சாமல் காலத்துடன் ஒட்டி தன்னை தகவமைத்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேலேறி வர முயல்கிறான். ஊரைவிட்டு தாத்தாவிடம் செல்கிறான், அங்கிருந்தும் வெளியேறி பட்டணத்திற்கு செல்கிறான், வீட்டை விட்டு வெளியேறுகிறான், ரிக்ஷா ஓட்டுகிறான், அட்டைபெட்டி கம்பெனிக்கு செல்கிறான், சமையல் செட்டுடன் சேர்ந்து சமைக்க செல்கிறான், சாலையோர கடையில் தோசை சுடுகிறான்.

ஆரோக்கியமும் செடலும் மரபான அமைப்புகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதை விட்டு வெளியேறுபவர்களை ஐயுருபவர்கள். ஆரோக்கியத்தின் மருமகள் சகாயம் வேறொரு தலைமுறையைச் சேர்ந்தவள். மாமியாரின் மீது மரியாதையும் அன்பும் இருந்தாலும் அவளுடைய மரபான வாழ்க்கைமுறை மீது நம்பிக்கையற்றவள். எடுப்புச் சோறுக்குச் செல்லச் சுனங்குபவள். கணவன் ஜோசப்பை அழைத்துக்கொண்டு சின்ன சேலம் சென்று இஸ்திரி கடை போட்டு பிழைக்கிறார்கள். கிராப்பு தலையுடன் வரும் ஜோசப்பைக் கண்டு ஆரோக்கியம் திகைக்கிறாள். அவனுடைய பிரிவை எண்ணி எப்போதும் அழுகிறாள். தனக்கு பின் இந்த ஊரில் யார் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என அஞ்சுகிறாள். ஊரை விட்டு வெளியேறிச் சென்ற ஜோசெப்பும் சகாயமும் வளமாக, கௌரவமாக வாழ்கிறார்கள். அவர்களின் தேர்வையும் வாழ்வையும் முழுமையாக ஏற்கத் தயங்கினாலும் புரிந்துகொள்ள முயல்கிறாள். செடல் அவளுடைய அக்கா மகன் பரஞ்சோதியை தன்னோடு சேர்த்து வளர்க்க முயல்கிறாள். பதின்ம பிராயத்தைத் தொட்டு கொண்டிருக்கும் அவனை ஆட்டங்களுக்கு தயார்படுத்த வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால் அவன் பாதிரியாருடன் சென்று சேர்ந்து கொள்கிறான். ‘கோவேறு கழுதைகள்’ நாவலிலும் ‘செடல்’ நாவலிலும் கிறிஸ்தவத்தின் வருகை முக்கியமான சித்திரத்தை அளிக்கிறது. சாமியார்கள் ஊர் முடிவுகளில் முக்கிய பங்கு ஆற்றுவதை இரண்டு நாவல்களுமே பதிவு செய்கின்றன. ஒருவகையில் மரபான கிராம வாழ்க்கையில் நவீனத்தின் இடையீடு அங்கே துவங்குகிறது. அதுவரை உயிர்த்திருந்த ஓர்மையான வாழ்வுமுறை சிதையத் துவங்குகிறது. செடல் காய்ச்சல் என்று தன்னிடம் வருபவர்களுக்கு வேண்டிக்கொண்டு துண்ணூறு பூசிவிடுவது வழக்கம். அனலாக கொதிக்கும் ஒரு குழந்தையைப் பாதிரியாரிடம் கொண்டுச்செல்லச் சொல்வாள். அவரிடம் நவீன மருத்துவத்தின் குளிகைகள் உள்ளன என்பாள். பாதிரியார் வரும்போதெல்லாம் ரொட்டியும் மாவும் அளிப்பார். வேதப் பறையர்களுக்கும் பறையர்களுக்கும் இடையிலான உறவு சிக்கலாவதை செடல் கோடிட்டு காட்டுகிறது. கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் பாதிரியாரின் உதவியை எதிர்பார்ர்த்து ஏமாறுகிறாள். பீட்டரை சாமியார் படிப்பிற்கு அழைத்து செல்ல கேட்கும்போது அதை மறுக்கிறாள்.

‘செடல்’ நாவலின் பரஞ்சோதி, ஆறுமுகம், ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் பீட்டர் மூவரும் ஒரு நேர்கோட்டு பாத்திர வார்ப்புகள். ‘ஆறுமுகம்’ நாவலே கூட பதின்மத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறிச் சென்ற பீட்டர் அல்லது பரஞ்சோதியின் கதையாக வாசிக்கலாம். பரஞ்சோதி அவனை வளர்க்கும் செடலின் ஆட்டம் சார்ந்த நடத்தைகளின் மீதான அதிருப்தியை வெறுப்பாக்கிக் கொண்டு வெளியேறுகிறான். ஆறுமுகம் அவனுடைய அன்னை பிழைப்பிற்காக வெளிநாட்டவன் ஒருவனோடு உறவு கொள்வதை கண்ணுற்று வெறுப்படைந்து வெளியேறுகிறான். பீட்டர் பட்டணத்தின் மீதான வசீகரத்தில் திடிரென்று காணாமல் போகிறான். ஊரைவிட்டு வெளியேறிய பிள்ளைகள் பிழைத்து கொள்கிறார்கள். ஊரைவிட்டு நகர மறுத்த ஆறுமுகத்தின் தாத்தா தூக்கிட்டு சாகிறார். குடி வண்ணானாக வேறொரு ஊரில் காலம் தள்ளும் ஆரோக்கியத்தின் மருமகன் திரவிய ராஜ் பாம்புக்கடியில் இறக்கிறான். கோவேறு கழுதைகள் நாவலை வெளியேறிச் சென்ற சகாயத்தின் பார்வையில் எழுதாமல் ஆரோக்கியத்தின் பார்வையில் எழுதியதில் இமையத்தின் கலைத் தேர்ச்சி வெளிப்படுகிறது. மரபான பார்வையுடைய கதை சொல்லிகளின் வழி, அவர்களுடைய வாழ்வை கண்ணியமாகவும், சகல நியாயத்துடனும் அணுகி காலமாற்றத்தை எதிர்கொள்வதன் சிக்கலை அவர் எழுதும்போது அவர் உத்தேசிக்கும் செய்தி நேரடி பிரச்சாரமாக இல்லாமல் இன்னும் வலிமையாக வெளிப்படுகிறது.

***

‘கோவேறு கழுதைகள்’ ஆரோக்கியம் பற்றி எழுதும்போது “அவளால் சதா நேரமும் அழ முடியும். பேச முடியும். வேலை செய்ய முடியும்” என எழுதுகிறார்.  இமையத்தின் நாவலில் உள்ள மிக முக்கியமான சிக்கல் என கதை மாந்தர்களின் இந்த இயல்பையே சொல்வேன். குறிப்பாக அழுகை. ஆரோக்கியமும் சரி ‘ஆறுமுகம்’ நாவலின் தனபாக்கியமும் சரி நாவல் முழுக்க அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் வாசகனுடன் அரிதாகவே உணர்வுரீதியான பிணைப்பு ஏற்படும் தருணங்கள் வாய்க்கின்றன. எப்போதும் சொல்லப்படும் ஒன்றுதான். எழுத்தாளன் தீ எனச் சொன்னால் சுட வேண்டும். அபூர்வமான சிலத் தருணங்கள் நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக ‘கோவேறு கழுதைகளில்’ மேரியின் திருமணத்திற்கு முன் அதே ஊரைச் சேர்ந்த அவளுடைய உயர்சாதி தோழி ராணியின் வருகை மற்றும் மிகச் சில வரிகளில் சொல்லப்படும் அவர்களுடைய நட்பும் உறவும் பிரிவும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. ‘செல்லாத பணம்’ நாவலில் அமராவதி நாவல் முழுக்க அழுகிறார். நடேசனும், முருகனும், ரவியும், அருண்மொழியும் மாறி மாறி அழுகிறார்கள். எனினும் நாவலின் களமும் கணமும் அந்த அழுகைக்கு நியாயம் சேர்க்கிறது. ஆனாலும் சில இடங்களில் மிகையாக செல்வதை உணர முடிகிறது. காவலர் ஆனந்தகுமார் பாத்திரம் ஜிப்மருக்கு வரும்போது பேசுவதும் நடந்துகொள்வதும் உன்னதமாக இருக்கும்போது அவர் நாவல் இறுதியில் அப்போது கொடுத்த ஆயிரத்தை திருப்பி அளிப்பது மிகை நாடகீயமாக நம்பகம் இன்றி தென்பட்டது. எனினும் மிகை நாடகீயம் என்பது தனிப்பட்ட வாசிப்பு சார்ந்ததே.  உணர்வுகளை ஆழப் பதியவைக்க மெனக்கிடும் போது அது சில வெகுசில புள்ளிகளில் மிகையாகி விடுகிறது. அதிகாரத்தின் இழுபறிகளை பேசும் இறுதி அத்தியாயங்கள் ஒருவித அயர்ச்சியை அளித்தன. ‘எங்கதே’ நாவலில் கமலாவின் இரு மகள்களின் பாத்திர வார்ப்பு மிகவும் பலவீனமாக நம்பகத்தன்மை குறைவானதாக தோன்றியது. பதின்மத்தில் இருக்கும் பெண்கள் அன்னையின் நடவடிக்கைகளை இத்தனை விட்டேற்றியாக எடுத்து கொள்வார்கள் என்பது விநாயகத்தின் விருப்பக் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். காலமாற்றத்தை குறிப்பிட சாதுர்யமாக திமுக கட்சி கொடியை நாவலுக்குள் கொண்டு வருகிறார்(செடல், ஆறுமுகம்). பிழை என்று சொல்வதற்கில்லை ஆனால் கச்சிதம் மற்றும் கறார்த்தன்மைக்கு பேர்போன இமையம் இவற்றை பயன்படுத்தும்போது மேலதிகமாக அவை அந்நாவலுக்கு ஏதேனும்  பொருள் அளிக்கிறதா என்றால் இல்லையென்றே தெரிகிறது.

இமையத்தின் நாவல்களின் கதை மாந்தர்கள் இடையே ஒரு பொதுத்தன்மை உள்ளது. அவர்களுக்கு நவீன இலக்கியத்தின் அடையாளச் சிக்கல் ஒரு பொருட்டே அல்ல. கோவேறு கழுதைகள் நாவலில் பெரியானின் கூற்றாக வரும் இவ்வரிகள் மூன்று நாவல்களின் பாத்திரங்களுக்கும் பொருந்தும். எந்த மாற்றமும் எதையும் நிகழ்த்திடாத அடித் தளத்தில் வாழ்பவர்கள். “அந்தக் காலமோ, இந்தக் காலமோ, நமக்கென்னங்கறன் அதெப்பத்தி. அது நமக்கு வாண்டாம். இது ராவு, இது பகல்ன்னு பேச நமக்கேது நேரம். குண்டி கஞ்சிக்கு அய்வுறப்ப, எதப் பத்தி புத்தி பேசச் சொல்லும்? சொல்லு பாப்பம். எல்லாக் காலமும் நமக்கு ஒண்ணுதான். எனக்கு கண்ணு தெரியல. போட்டாப் போச்சி. ராவு பகல்னு வித்தியாசமில்லாமப் போச்சி. வித்தியாசம் தெரிஞ்சப்பத்தான் நான் என்ன பண்ணுனன்? மொட்டத் தலையில இருக்கும் பேனுக்கும் வேல எண்ணங்கறன்”. ஏறத்தாழ இதேபோன்ற ஒரு இடத்தை ‘ஆறுமுகம்’ நாவலிலும் காண முடியும். வசந்தாவிற்கும் ஆறுமுகத்திற்கும் இடையிலான உரையாடலில் வரும் இப்பகுதி இமையத்தின் கதை மாந்தர்களைப் பற்றிய கூர்மையான பார்வை.

“நமகெல்லாம் எதுக்கு பேரு?”

“தேவையில்லைதான்”

பெயரிலிகள், வெறும் எண்ணிக்கைகளாக அறியப்பட்ட உதிரிகள். கோடிக்கணக்கான ஆறுமுகங்களில் எவ்வித தனித்த இயல்புகளும் இல்லாத சாகசங்கள் அற்ற ஒரு ஆறுமுகம். ஒரே இடத்தில் செக்கு மாட்டைப் போல் செடல் சுற்றி வருபவர்கள். சமூகத்தின் மொத்த பொதியையும் ஏன் சுமக்கிறோம் என்று கேள்வி கேட்காத கோவேறு கழுதைகள். அவர்களுக்கு மேல் எங்கோ வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது.

இமையத்தின் நாவல்களில் இருந்து திரண்டு வரும் பொதுவான மானுட தரிசனம் அல்லது ஒரு எழுத்தாளனாக அவருடைய தலையாய தத்துவக் கேள்வி என இதைச் சொல்லலாம். “எனக்கு வவுரே சாமியாப் போச்சி. வவுறு வளக்கறதுதான் தொயிலாப் போச்சி. வவுறு என்ன சமுத்திரமா? ரவ வவுறு நெறைய மாட்டங்குது. என் ஆயுள் பூரா உயச்சாலும் அது நெறையாது. நான் பாடுபட்டதெல்லாம் வவுறு நெறப்பத்தான். வவுறு நெறையல. ..நாங்குறதே வவுறுதான். உலகங்குறதும் வவுறுதான்.” கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியத்தின் கூற்று இது. ‘செல்லாத பணம்’ நாவலிலும் கூட “வவுத்துக்குத் தெரியுமா இது சாவுச்சோறு, இது கல்யாணச் சோறுன்னு” என்றொரு வரி உள்ளது.

ஏறத்தாழ இதே போன்ற வரிகளை செடல் நாவலிலும் காணலாம். “எல்லாம் உயிரை வைத்திருப்பதற்காகத்தானே! உயிரை எதற்காக வைத்திருக்க வேண்டும்? உயிர் என்பது வயிறு தானே! இரவும் பகலும் ஓயாமல் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி வெந்து கொண்டிருக்கும் இந்த வயிறு அணையாத அக்கினிக் குண்டம். என்று தணியும், என்று அணையும் அந்த நெருப்பு? என்றைக்குமே அனையாதா அந்த நெருப்பு?” இவ்வரிகள் செடல் நாவலில் அவளுடைய அகத்தை குறிப்பவை. இமையத்தின் மனிதர்கள உயிரை வயிறில் பொதிந்தவர்கள். ‘ஆறுமுகம்’ நாவல் நேரடியாக இம்மாதிரியான வரிகளை கொண்டதில்லை என்றாலும் ஏறத்தாழ இதே கேள்விகளை உள்ளீடாக கொண்டவை. இமையத்தின் படைப்புகளைப் பிணைக்கும் மைய இழை என இந்தக் கூற்றையே கருதுகிறேன். எங்கதே மற்றும் செல்லாத பணத்தில் இப்பசியும், அக்கினியும் உடல் சார்ந்ததாக காமத்தின் பாற்பட்டதாக மாறுகிறது.

***

இமையம் பலவகையிலும் அவருடைய சமகாலத்து எழுத்தளாரான சு. வேணுகோபாலுடனும், அவருடைய அதே நிலபரப்பை களமாகக் கொண்டு வலுவான பெண் பாத்திரங்களைப் படைத்த கண்மணி குணசேகரனுடனும் ஒப்பிடத்தக்கவர் எனத் தோன்றியது. கோவேறு கழுதைகள் வந்த அதே காலகட்டத்தில்தான் சு. வேணுகோபாலின் ‘நுண்வெளி கிரகணங்கள்’ எனும் அவருடைய முதல் நாவல் வெளிவந்தது. வயிற்று பசியும் உடற்பசியும் இவர்களின் பொதுவான கருப்பொருள் என்றும் கொள்ளலாம். ‘எங்கதே’ வாசிக்கும்போது இணையாக ‘கூந்தப்பனை’ தொகுப்பில் உள்ள ‘அபாயச் சங்கு’ குறுநாவல் நினைவுக்கு வந்தபடி இருந்தது. வேணுகோபாலின் திணை மருதம். இமையமும் மருதம் மற்றும் நெய்தல் பரப்பை சுற்றி எழுதுகிறார். வேணுகோபாலின் சூழல் விவரணைகள் நிலத்தின் மீதான பிடிப்பு அவருடைய தனித்துவமான கூறு. இமையத்தின் மிகப்பெரிய பலம் வட்டார வழக்கு உரையாடல் வழி கதையை நகர்த்துதல். உளமொழியும் கூட புழங்கு மொழியிலேயே வெளிப்படுகிறது. சூழல் விவரணைகள் இயல்பாக சில இடங்களில் புலப்படுகின்றன. முக்கிய காரணம் அவருடைய கதை மாந்தர்களுக்கு நிலம் சார்ந்து பிணைப்பு என ஏதுமில்லை என்பதாக இருக்கலாம். இவ்வகையில் அவர் கண்மணி குணசேகரன் படைப்புகளில் இருந்தும் தனித்து தெரிகிறார். இமையத்திடம் கதை கூறும் முறையில் ஒருவித பயின்று  வந்த கச்சிதத்தன்மை உள்ளது. அதுவே நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. வேணுவின் புனைவுகளில் உள்ள அலைவுறும் கச்சிதமின்மை வழியாக அவருடைய புனைவுகளில் அரிதான சில உன்னத தருணங்களை அடைகின்றன. இமையத்தின் நாவல்கள் அதிகமும் அறவுணர்வு நோக்கிய கேள்விகளைப் பக்கச் சார்பின்றி முன்வைக்கின்றன.

இமையத்தின் முதல் மூன்று நாவல்களில் ‘செடல்’ நாவலை சிறந்த நாவலாக மதிப்பிடுவேன். காரணம் அது ஒரு கலைஞனின் வாழ்வைப் பேசுகிறது. இக்கட்டுகள் சூழ் உலகில் செடல் தன் கலையை இறுகப் பற்றிக்கொள்ள முயல்கிறாள். கர்ண மோட்சம் போன்ற நாட்டுப்புற பாடல்கள் நாவலின் முக்கியமான இடங்களில் வருவது நாவலை பெரும் உயரத்திற்கு நகர்த்துகிறது. அவருடைய அண்மைய நாவலான ‘செல்லாத பணம்’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்றே மதிப்பிடுவேன். எனினும் மீள்வாசிப்பில் முதல் வாசிப்பின் அதே பதட்டம் நீடிக்குமா என்றொரு ஐயம் உண்டு. ஆனால் செடல் மேலும் பல ஆழங்களையும் அடுக்குகளையும் காட்டக்கூடும்.

ஒட்டுமொத்தமாக கூர்மையான உரையாடல்கள் மற்றும் இறுக்கமான சொல்முறையாலும் தனித்துவமான வாழ்க்கை களங்களை கையால்வதாலும அவருடைய நாவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.  காலமாற்றத்தின் பிரதிநிதியாகவும், வெவ்வேறு நியாயங்களின் ஊடாட்டமாகவும் அவருடைய நாவல்கள் திகழ்கின்றன. இமையத்தின் நிலம் வள்ளலாரின் நிலம். பெரும் பஞ்சங்களில் கொத்து கொத்தாக மரிக்கும் மனித உயிர்களைக் கண்டு இரங்கி அணையா அனல் மூட்டி அமுதளிக்கும் மண். ‘செல்லாத பணம்’ நடேசன் வள்ளலார் பக்தராக வருகிறார். இமையத்தின் அத்தனை கதை மாந்தர்களும் அனலை சுமந்து அலைபவர்கள். அதை அணைக்கவும் ஆற்றுபடுத்தவும் வழியின்றி தவிப்பவர்கள். மனிதர்களின் கையறு நிலையை கலையாக்கி உரையாடச் செய்யும் ஆற்றல் கொண்ட தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் இமையம்.

3 comments for “அணையா அனல் – இமையத்தின் ஐந்து நாவல்களை முன்வைத்து

  1. Kumar A
    March 3, 2019 at 7:59 pm

    எழுத்தாளர் என சிலரை அழைக்கிறோம். எழுத்தை ஆழ்வதென்பது எழுதுவது மட்டுமல்ல. அது சிந்திப்பதும். அப்படி நான் வைத்திருக்கும் பட்டியலில் இந்தக் கட்டுரையால் நீங்களும் இணைகிறீர்கள். உங்கள் புத்தகங்களை எங்கிருந்தாலும் தேடி வாங்கி வாசிப்பேன். மிக்க நன்றி.

  2. Venky
    March 5, 2019 at 9:27 pm

    அருமையான கட்டுரை சுனில். நன்றி. இப்போதுதான் “கோவேறு கழுதைகள்” படித்து முடித்தேன். செடலைப் படிக்க மனம் பரபரக்கிறது. இமையம் சந்தேகமில்லாமல் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர். வல்லினத்தின் இமையம் சிறப்பிதழுக்கு நன்றி

  3. amilan
    March 5, 2019 at 10:26 pm

    Suneel sir. Oru novel padittu muditatu pola iruntatu. Koveru kalutaikal vasitullen. ungal kaddurai avar pira novel vasikkum aarvam kodukkirathu. manamarnta nandrikal

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...