தனது புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்யும் எழுத்தாளர் இமையம். அவர் எழுத்துகளில் கோட்பாடுகளின் தாக்கம் இருப்பதில்லை. அசலான வாழ்க்கை அதன் அத்தனை முரண்களுடனும் பதிவாகியிருக்கும். தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கான தனிபோக்கை உருவாக்கிக் கொண்டவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ என நாவல்களும் பல சிறுகதை தொகுப்புகளும் என காலத்தை வென்று நிற்கும் நுட்பமான படைப்புகளைத் தந்தவர். இவரது ‘பெத்தவன்’ நெடுங்கதை தொடர்ந்து வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. அண்மையில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2018க்கான ‘இயல்’ விருது இமையத்தின் வாழ்நாள் சாதனைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இமையத்தின் இந்த நேர்காணல் அவரது படைப்புகளைப் போன்றே அவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது அறிவிக்கிறது. இலக்கியத்திற்கும் இலக்கியத்தை அரசியலாக முன்னெடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்தவராக கருத்துகளை முன்வைக்கிறார். அரசியல், சித்தர் மரபிலக்கிய ஈடுபாடு போன்ற பன்முக ஆர்வலராக இருந்தாலும் இமையம் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்த அடையாளம் என்பதில் சந்தேகம் இல்லை.
இமையம் என்று புனைப்பெயர் வைத்துகொண்டதற்கான காரணம் என்ன? இப்பெயர் எனக்கு ஆன்மீகத்தை நினைவுப்படுத்துகிறது.
இமையம்: கிறுக்குத்தனம்தான். கோவேறுகழுதைகள் நாவலை அச்சிடுவதற்கு முன்புகூட க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் ‘அண்ணாமலை’ என்றே இருக்கட்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும். பொதுவாக மனிதர்கள் ரொம்பவும் சின்னச்சின்ன விஷயங்களுக்காகத்தான் அதிகம் ஆசைப்படுகிறார்கள். பிறகு சிறகு முறிந்து கிடக்கிறார்கள்.
1980-90 காலக்கட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களில் பாதிபேருக்குமேல் புனைப்பெயர் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெயரிலும் புரட்சி, விடியல் இருந்தது. எனக்கும் அந்தத் தாக்கம் இருந்தது. புனைப்பெயரை வைத்துக்கொண்ட சமயத்தில் உருப்படியாக நான் ஒரு வாக்கியத்தைக்கூட எழுதியிருக்கவில்லை.
என்னுடைய புனைப்பெயர் ஆன்மீகத்தோடு தொடர்புகொண்டதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு பெயர் வைத்தது திருவண்ணாமலையில். ஐந்து வயதுவரை நான் பேச்சுவராமல் ஊமையாக இருந்ததாகவும், அண்ணாமலையாரின் அருளால்தான் எனக்கு பேச்சு வந்தது என்றும் என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வாள். என்னுடைய அம்மா சொன்ன கதைகளிலேயே – அதுதான் மேலான சரிர்யலிச, மேஜிக்ரியலிச கதை.
கையெழுத்துப் பிரதியாக கோவேறு கழுதைகள் நாவலை யார்யார் படித்தார்கள்? படித்தவர்களின் கருத்து என்னவாக இருந்தது?
இமையம்: திருச்சி எஸ்.ஆல்பர்ட்டிடம்தான் முதலில் கொடுத்தேன். அவர் ஓராண்டுவரை படிக்காமலேயே திருப்பித்தந்தார். பிறகு பேரா.க.பூரணச்சந்திரனிடம் தந்தேன். படித்துவிட்டு ‘போடலாம்’ என்று சொன்னார். அதன்பிறகு க்ரியாவிடம் கொடுத்தோம். ஆல்பர்ட்டிடம், பூரணச்சந்திரனிடம், க்ரியா எஸ்.ராமகிருணனிடம் நாவல் எப்படி இருக்கிறது என்று நானும் கேட்டதில்லை. நாவல் இப்படி இருக்கிறது என்று அவர்களும் சொன்னதில்லை. ‘நாவல் நல்லா இல்ல. போடமாட்டேன்’ என்று க்ரியா பதிப்பகம் நிராகரிக்காததே எனக்கு கிடைத்த வெகுமதிதான்.
முதல் படைப்பாக நாவலை எழுதியவர் நீங்கள். உங்களுடைய எழுத்துக்கு முன்னோடி என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?
இமையம்: நான் நாவல் எழுதுவதற்கு இவர்கள் எல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் என்று நான் ஒரு பட்டியலை தரமுடியும். அப்படி தந்தால் அது பாசாங்கு. பட்டியலை தந்து நான் நிறைய படித்திருக்கிறேன் என்ற பிம்பத்தை உருவாக்க முடியும். யாருமே முன்னோடி இல்லையென்று சொன்னால் அது என்னுடைய திமிர்த்தனத்தை, அறியாமையைக்காட்டும்.
நான் கோவேறு கழுதைகள் நாவலை எழுதியது, குப்பையை சீய்த்துக்கொண்டிருந்த கோழியை சிறு குழந்தை பிடித்தது போன்றது. பெரிய மலைபாம்பு தன்னை ஒரு விளையாட்டுப் பொருளாக்கி சிறுகுழந்தையிடம் தந்ததைப் போன்றது. பெரியவர்களுக்குத்தான் பாம்பு விஷம்கொண்டது. குழந்தைக்கு அது ஒரு விளையாட்டுப் பொருள்தான்.
இப்போதும் நான் குழந்தைதான். சிறுவெங்காயத்தை நறுக்கிப்போட்டு, ஈரத்துண்டால் சத்தம் எழுப்பாமல் கோழியை அமுக்கிகொண்டுபோகிற கைதேர்ந்த திருடனாகிவிடவில்லை. ஆளற்ற வீட்டில் திண்ணையில் கோழி இட்டிருக்கிற முட்டையைக்கூட திருடுவதற்கு தெம்பற்றவன்தான்.
ஒரு படைப்பு செயல்பாடு என்பது உங்களுள் எப்படி நிகழ்கிறது?
இமையம்: காற்றின் வழியாக வந்து விழும் விதை ஒன்று மரமாவதுபோல, பறவைகளின் எச்சங்களின் வழியாக வந்து விழும் விதை ஒன்று மரமாவதுபோலத்தான் எழுத்து உருவாகிறது.
கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்தபோது தலித் இலக்கிய விமர்சகர்கள் எதிர்த்தார்கள். அப்போது உங்களுடைய மனநிலை என்னவாக இருந்தது?
இமையம்: திட்டியதும், கொண்டாடியதும் உடனுக்குடன் தெரியாது. இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் தெரியவரும். அப்போது புண்கள் ஆறிப்போயிருக்கும். சந்தோஷங்கள் வடிந்துபோயிருக்கும். ஒரு சிலர் இலக்கிய அரசியல் செய்தார்கள். எனக்கு இலக்கியத்தின் மீதுதான் ஆர்வம். இலக்கியத்தை வைத்து செய்யும் அரசியல் மீது அல்ல. சில அளவுகோல்களை வைத்துக்கொண்டு இலக்கிய விமர்சனம் செய்கிறார்கள். நான் எழுதும்போது அளவுகோல்களை வைத்துக்கொண்டு எழுதுவதில்லை.
மார்க்சிய இலக்கியத்துடனான உங்களுடைய தொடர்பு எத்தகையது?
இமையம்: பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கவிதைப் போட்டியில் எனக்கு தாய் நாவலை ஆறுதல் பரிசாக தந்தார்கள். நான் முதன்முதலாக படித்த கதைப் புத்தகம் அதுதான். திருச்சியில் படிக்கும்போது NCBH அறிமுகமானது. விலைமலிவாக இருந்ததால் எல்லா நூல்களையும் வாங்கிப்படித்தேன். அப்போது தமிழ் இலக்கிய சூழலில் ரஷ்ய இலக்கியம் குறித்த பேச்சு, கூடுதல் கவனம் பெற்றிருந்தது. புரட்சி வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, படித்த, செயல்பட்ட காலமது. ஒரு பெட்டிக்கடையில் சார்த்தரின் ‘மீள முடியுமா?’ என்ற நாடக நூலைப் பார்த்தேன். அந்த நூலின் வழியாகத்தான் எனக்கு பிரஞ்ச் இலக்கியம் அறிமுகமானது. க்ரியா என்ற பதிப்பகமும் தெரியவந்தது.
பயிற்சிபட்டறையின் வழியாக எழுத்தாளர்களை உருவாக்க முடியாது என்ற கருத்து பரவலாக உண்டு. நீங்கள் ஒரு பயிற்சிபட்டறையின் வழியாகத்தான் உருவானீர்கள் இல்லையா?
இமையம்: ஆமாம். அந்தப் பயிற்சிபட்டறை இல்லையென்றால் இமையம் என்ற எழுத்தாளர் இல்லை. அந்தப் பயிற்சி முகாம் எனக்கு பூட்டியிருந்த வீட்டை திறந்துவிட்டது போலிருந்தது. காகிதத்தையும், பேனாவையும் கொடுத்து, மனதில் உள்ளதை அப்படியே எழுது என்று சொன்னார்கள். அந்த சொல் ஈர மண்ணில் விதையை ஊன்றிவிட்டதுபோலிருந்தது. அங்குதான் எழுத்தாளராவது என்ற முடிவெடுத்தேன். அதே முடிவில்தான் இன்றும் இருக்கிறேன். அந்த முடிவுதான் என்னை எழுத்தாளராக்கியது.
இப்போதும் பயிற்சி பட்டறையின் மூலம் எழுத்தாளர்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
இமையம்: ஆமாம். பயிற்சிபட்டறை என்பது கைக்காட்டி மரம். நீங்கள் கைக்காட்டி மரத்திடமே நின்று விடுகிறீர்களா? கைக்காட்டி மரம் காட்டிய திசையில் பயணிக்கிறீர்களா என்பதைப் பொருத்தது. எழுத்திற்காக உங்களை அர்ப்பணிக்க வேண்டும். பலி கொடுக்க வேண்டும்.
ஜெயகாந்தனைப் பார்த்து இருக்கிறீர்களா? பழகி இருக்கிறீர்களா? அவருடைய எழுத்து எந்த விதத்தில் உங்களுக்கு உதவியிருக்கிறது?
இமையம்: நான் ஜெயகாந்தனுடைய எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்த 1984-90 காலத்திற்கு முன்னாலேயே அவருடைய எழுத்து வாழ்க்கை முடிந்துபோயிருந்தது. தன்னுடைய எழுத்தின் வழியாக உருவாக்கிய சர்ச்சைகளைவிட, தன்னுடைய பேச்சின் வழியாக, நடத்தையின் வழியாக அதிக சர்ச்சைகளை உருவாக்கியவர். அவர் ஒரு விவாத எழுத்தாளர். தன்னுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும் விவாதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தினார். தனக்குப்பிடித்த, தான் விரும்பிய கருத்துக்களை சொல்வதற்கு ஏற்றவகையில் பாத்திரங்களை உருவாக்கி, விவாதம் செய்தவர். கதாபாத்திரங்களைவிட அவரே அதிகம் பேசுவார். சளசள பேச்சு. ஓயாத பேச்சு ஜெயகாந்தனுடைய எழுத்துக்கள். ஜெயகாந்தனின் எல்லா எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். என்னை வசீகரித்த எழுத்தாளர் அல்ல அவர்.
ஜெயகாந்தனை பல மேடைகளில் பார்த்திருக்கிறேன். இருவரும் ஒரே மேடையில் இரண்டுமுறை பேசியிருக்கிறோம். ஆனால் ஒருமுறைகூட அவரிடம் பேசவேண்டும், பழக வேண்டும் என்று தோன்றியதில்லை. ஜெயகாந்தன் தன்னை ஒரு பீடாதிபதியாக கற்பிதம் செய்துகொண்டவர். அந்தக் கற்பிதத்திலிருந்து அவர் ஒருபோதும் விடுபட முனைந்ததில்லை. சக எழுத்தாளர்களை அவர் படித்தது மாதிரியும் தெரியவில்லை. பக்கத்திலிருக்கும் மனிதர்களையும், வாசகர்களையும் அவர் கௌரவமாக நடத்தினார் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி நான் பார்த்ததுமில்லை.
உங்களுடைய சிறுகதைகள் பெரும்பாலும் அகவயமான உணர்வு நிலைகளைக் காட்டிலும் புறவயமான உணர்வு நிலைகளே மேலோங்கியிருப்பதாகக் கருதுகிறேன்.
இமையம்: உங்களுக்கு அப்படிதான் தோன்றுகிறது என்றால் அது சரிதான். நீங்கள் சொல்வது தவறு, நான் இப்படி எழுதியிருக்கிறேன், அதனால் நான் சொல்கிற முறையில் படியுங்கள், புரிந்துகொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்ய மாட்டேன். வியாக்கியானம் செய்ய மாட்டேன். எழுதுவது மட்டும்தான் என் வேலை. விளக்கம் சொல்வதல்ல.
உங்களுக்கும், உங்களுடைய கதாபாத்திரங்களுக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்கிறது?
இமையம்: எல்லாமுமாக இருக்கிறது. அதே நேரத்தில் எதுவுமற்றதாகவும் இருக்கிறது. நீர் நிறைந்திருக்கும் சொம்புபோல. நீரற்ற சொம்புபோல. ஒரு நிலையில் சொம்பும் இருப்பதில்லை. நீரும் இருப்பதில்லை. வானில் கரைந்த மேகம்.
மார்க்சிய, தலித்திய, பெண்ணிய அடையாளங்கள் குறித்து உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா? அவ்வாறான அடையாளங்கள் வேண்டுபவர்கள் குறித்து, அடையாளப்படுத்திக்கொள்கிறவர்கள் குறித்து உங்களுடைய கருத்தென்ன?
இமையம்: எனக்கு எந்த ஒவ்வாமையும் இல்லை. அடையாளங்கள் அவசியமில்லை. அடையாளங்கள் எழுத்தின் வீச்சை குறைக்கும். வாழ்க்கை எந்த அடையாளத்திற்குள்ளும் அடங்காது. வாழ்க்கையைப்பற்றி எழுதப்படுகிற இலக்கியமும் எந்த அடையாளத்திற்கும் அடங்காது. அடையாளம் வேண்டும் என்பவர்கள், குறிப்பிட்ட அடையாளத்திற்குள்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அரசியல் செய்கிறார்கள். அந்தந்த கால அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். அரசியல் மாறும். சூழல் மாறும். போக்குகள் மாறும். போக்குகளுக்காக எழுதிய எழுத்தாளர்கள் எளிதில் மறைந்து போவார்கள். படைப்புகளும் மறைந்துபோகும்.
ஆனால் நீங்கள் தி.மு.க. அடையாளத்தோடு இருப்பவர். கட்சியை விமர்சிக்க உங்களால் முடிந்திருக்கிறதா? முடியுமா?
இமையம்: விமர்சிக்க முடியும். விமர்சித்திருக்கிறேன். கட்சிக்காரன் என்ற கதையைப் படித்தால், கட்சியையும், கட்சியின் தலைமையையும் எவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்பது புரியும். நான் யாருக்கும் அடிபணிவதில்லை. நான் எழுத்தாளன். நான் திராவிட இயக்க ஓட்டரசியல் மரபிலிருந்து உருவான எழுத்தாளன் அல்ல. திராவிட இயக்க சிந்தனை மரபிலிருந்து உருவான எழுத்தாளன்.
மனித உறவுகளின் முரண் குறித்தே உங்கள் பல சிறுகதைகள் பேசுகின்றன. உண்மையில் மனித உறவுகள் குறித்து உங்களுடைய அபிப்ராயம் என்ன?
இமையம்: மனிதர்களோடு இணைந்திருப்பதுதான் வாழ்க்கை. மனிதர்களோடு இணைந்திருப்பதுதான் நரகம். மரணம். என்னுடைய ‘திருட்டுப்போன பொண்ணு’ என்ற சிறுகதையின் கடைசி வாக்கியம் இதுதான் – “எஞ் சோத்த நாந்தான் திங்கணும். என் சாவ நாந்தான் சாவணும்.”
இயல் விருந்து உங்களூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து வாழ்க்கையில் சாதித்திருக்கிறோம் என்ற உணர்வு எப்போதாவது மேலோங்கி இருக்கிறதா?
இமையம்: இல்லை. நிச்சயமாக இல்லை. நான் இதுவரை எழுதியிருப்பதாக நினைப்பதெல்லாம் கையில் அள்ளிய நீராகவும், கையில் பிடித்த ஒளியாகவும், ஒலியாகவும், கையில் பிடித்த காற்றாகவுமே இருந்திருக்கிறது. என்னுடைய எழுத்து மட்டுமல்ல, இதுவரை படித்தது வாழ்ந்ததுகூட அப்படித்தான் இருக்கிறது. நான் உலகத்தைப் பார்த்ததும், புரிந்துகொண்டதும் நான் மேலே சொன்ன அளவில்தான்.
வாசிப்பின் வழியாக, எழுத்தின் வழியாக நீங்கள் அடைந்தது, பெற்றது என்ன?
இமையம்: நான் படித்த புத்தகங்களும், நான் எழுதிய எழுத்துக்களும், ’நீ ஒண்ணுமில்ல’ ‘நீ வெறும் சும்மா’ என்பதையே ஓயாமல் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. அதோடு மரணத்தையும். படித்ததின் வழியாக, எழுதியதின் வழியாக நான் பெற்றது, உணர்ந்தது இவ்வளவுதான்.
மரணம் பற்றி பேசியதால் கேட்கிறேன். அதை வலிந்து அணுகும் கதாபாத்திரங்கள் பல உங்கள் கதைகளில் வருகின்றன. என்ன நினைக்கிறீர்கள் மரணம் பற்றி?
இமையம்: பசியிலிருந்து, நோயிலிருந்து, கவலையிலிருந்து, ஆசையிலிருந்து, பகையிலிருந்து, துரோகத்திலிருந்து, வஞ்சகத்திலிருந்து விடுவிப்பது. மனிதனுக்கான நிரந்தரமான சொத்து, செல்வம், பிறர் பிடுங்கிக்கொள்ள முடியாது, திருடிக்கொள்ள முடியாது. எனக்கென்று இருக்கும் ஒரே சொத்து அது மட்டும் தான்.
அவ நம்பிக்கை உணர்வில் நீங்கள் பேசுவதாக எடுத்துக்கொள்ளலாமா?
இமையம்: மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், பணப்புழக்கமும் அவநம்பிக்கையை மேலும் வளர்ப்பதாகவே இருக்கிறது. மனித உணர்வுகளை, உறவுகளைக் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அவநம்பிக்கை பெருகுகிறது.
சித்தர் இலக்கியங்களில் தங்கள் விருப்பம் அறிவேன். பிடித்தமான வரி ஏதும் சொல்ல முடியுமா?
இமையம்: சித்தர்கள் தங்களுடைய காலடி தடத்தை தானே அழித்தவர்கள். தங்களுடைய நிழலையே சுமையென கருதியவர்கள். தனக்குதானே சவக்குழி வெட்டிக்கொண்டு காத்திருந்தவர்கள். தங்களுக்கென்று பெயர்கூட வைத்துக்கொள்ளாதவர்கள். பிராமணர்கள் மாதிரி மடம் வைத்துக்கொள்ளாதவர்கள். மடத்தின் பெயரால் சொத்து சேர்க்காதவர்கள்.
நான் விரும்பிப் படித்த இலக்கிய வகைகளில் சித்தர் பாடல்கள் முக்கியமானவை. அது நிலையாமையைப் பேசியது. மனித உடலை ஆட்டை அறுப்பதுபோல அறுத்துக்காட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் இலக்கிய மரபில் முதன்முதலாக அறிவியல் மனப்பான்மை பேசியது. சித்தர் பாடல்கள் என்பது வெறும் இலக்கிய மரபு மட்டுமல்ல. அது ஒரு அறிவு மரபும்கூட. சித்தர்களின் அறிவு மரபை, சிந்தனை மரபை நாம் தவறவிட்டது பெரும் இழப்பு. “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்ற வரி எனக்கு முக்கியமானது. அடிக்கடி நினைவுக்கு வருவது.
சித்தர் இலக்கியம் போல பக்தி இலக்கியங்களைப் படிப்பதுண்டா?
இமையம்: படிக்கிறேன். இலக்கியமாக மட்டுமே. பக்தியாக இல்லை.
வள்ளலார் ஜோதிமயமான வடலூருக்கு மிக அருகில் வசிப்பவர் நீங்கள். வள்ளலாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இமையம்: அன்பை பரிபூரணமாக உணர்ந்தவர். அதை பாசாங்கின்றி வெளிப்படுத்தியவர். சித்தர் இலக்கியத்தின் கடைசி மூச்சுக்காற்று வள்ளாலருடையது.
தொடர்ந்து 25 வருடமாக எழுதுகிறீர்கள். அடையாள பரபரப்பு இல்லாமல் நிதானமாக அவற்றை நூலாகக் கொண்டு வருகிறீர்கள். இலக்கியங்களின் வழியாக நீங்கள் உருவாக்கிக்காட்ட விரும்புவது என்ன?
இமையம்: என்னைப் புரிந்துகொள்ள, என்னோடு வாழும் மனிதர்களை, சமூகத்தைப் புரிந்துகொள்ள முயல்வது, நான் வாழ்கிற இடத்தை, காலத்தை, சமூகத்தை பதிவு செய்ய முயல்வது.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனின் வார்த்தையைப் போல, பரணரின் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ என்ற வார்த்தையை போல, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ என்ற திருக்குறள் எப்படி தமிழ்நாட்டில் அச்சடிக்கப்படுகிற எல்லா திருமணப் பத்திரிக்கைகளிலும் இடம் பெறுகிறதோ, அதுபோன்ற ஒரு வாக்கியத்தை, ‘கன்னியர் தம் கடைக்கண் காட்டிவிட்டால் காளையருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்ற பாரதிதாசனின் ஒரு வரியைப்போல, ஔவையாரின், ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற வரியைப்போல ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்ற பாரதியின் வரியைப்போல, தமிழ்ச் சமூகமே பயன்படுத்துகிற ஒரு சொல்லை, ஒரே ஒரு வாக்கியத்தை கண்டுப்பிடிப்பதற்காக மட்டுமே எழுதுகிறேன். அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும். இன்றுவரை கிடைக்கவில்லை.
உங்களுடைய சாந்தா, துபாய்க்காரன் பொண்டாட்டி, ஈசனருள் போன்ற சிறுகதைகளிலும், செல்லாத பணம், எங் கதெ போன்ற நாவல்களிலும் காதலுக்கு எதிரான மனநிலை வெளிப்படுதாக உணர்கிறேன். நீங்கள் காதலுக்கு எதிரியா?
இமையம்: காதலியுடன் நெருக்கமாக இருந்ததை பதிவு செய்து முகநூலில் வெளியிடுகிற, வெளியிடப் போவதாக மிரட்டுகிற, காதலியின் முகத்தில் ஆசிட் வீசுகிற, காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணையே தீ வைத்து கொளுத்துகிற, குழந்தையைக் கொன்றுவிட்டு வா, அப்போதுதான் சேர்த்துக்கொள்வேன் என்று சொல்கிற, காதலன் சொன்னான் என்பதற்காக குழந்தையைக் கொல்கிற, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்துகொன்றுவிட்டு காதலுனுடன் ஓடிப்போகிற, காதலனுக்காகக் கிணற்றில் குழந்தையைத் தானே தள்ளிவிட்டு கொல்கிற, காதலியுடன் வந்து வீட்டிலிருந்த மனைவியைக் கூட்டாக சேர்ந்துக்கொண்டு அடிக்கிற, குறுஞ்செய்தி அனுப்பி செத்துவிடுவேன் என்று மிரட்டுகிற, பல ஆண்டுகளாக காதலித்து, திருமணமான ஒன்றிரண்டு மாதங்களிலேயே காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் விவாக ரத்து கேட்டு நின்றுகொண்டிருக்கிறவர்கள் எல்லாம், காதலிகளும், காதலர்களுமா என்ற கேள்வியை என்னுடைய சிறுகதைகளும், நாவல்களும் எழுப்புகின்றன. காதல் என்பது கொடுப்பதா? பெறுவதா? மனித உடல் என்பது வேர்க்கக் கூடியது; வேர்த்ததும் நாறக் கூடியது. சிறுநீறும் மலமும் நிறைந்தது. காதல் – காதலாக இருந்தால் அது ஆற்றல். அவ்வாறு இல்லையெனில் அது பெரும் நெருப்புக்குழி.
உங்களை ஆணாதிக்கவாதி என்று சொல்ல கேட்டிருக்கிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய எழுத்துக்களில் அதற்கான கூறுகள் எதுவும் இல்லையே?
இமையம்: நான் ஆணாதிக்கவாதிதான். நீங்களும் ஆணாதிக்கவாதிதான். தமிழ்நாட்டில், இந்தியாவில் வாழ்கிற ஒவ்வொரு ஆணுமே ஆணாதிக்கவாதிதான் என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். கேரளாவில் – ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சென்றால் புனிதம், மரபு கெட்டுவிடும் என்று 2018ல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஓர் உலக அதிசயம். என்னுடைய மனைவியை, சகோதரியை, தாயை, மகளை அனுமதிக்காத கோவிலுக்குள் நானும் செல்ல மாட்டேன் என்று அறிவித்த ஒரு ஆண் தமிழ்நாட்டில், இந்தியாவில் உண்டா? இப்போது தெரிகிறதா உங்களுடைய சமூகம் ஆணாதிக்க சமூகம் என்பது. இதில் வினோதம் என்னவென்றால் ஆண்களோடு சேர்ந்துக்கொண்டு பெண்களும் ஆணாதிக்கம் மேலும் பலம்பெரும் வகையில் போராடுவது. என்னை அனுமதிக்காத கோவிலுக்கு செல்ல கூடாது என்று தன்னுடைய கணவனை தடுத்த, சகோதரனை தடுத்த, தந்தையை தடுத்த, மகனை தடுத்த ஒரு பெண் என்று தமிழ்நாட்டில், இந்தியாவில் காட்ட முடியுமா?
கவனம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கவனம் பெறவில்லை என்று நீங்கள் சொல்லும் உங்களுடைய நாவல் எது?
இமையம்: செடல். சமூகத்தில் நிறுவப்பட்டிருந்த உண்மைக்கு, கதைக்கு, எதிர்க்குரலை எழுப்பிய, புதிய உண்மையை, புதிய கதையை முன்வைத்த நாவல். தெருக்கூத்து கலை, வடிவம், அழகியல், நடனம், அடவு முறைகள் குறித்து முழுமையாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட நாவல். நடனக்காரர்களுக்கு அது ஒரு பாடப்புத்தகம். சிறந்த பயிற்சி கையேடு. குரலிசை, நாட்டிய சாஸ்திரம் என்ற பெயரில் இசைத்துறையோடு, நாட்டியத் துறையோடு தொடர்புடைய ஒரு பிராமணர் எழுதியிருந்தால், அது உன்னத இலக்கியமாக; உலகக் காவியமாக பேசப்பட்டிருக்கும். இப்போது இல்லையென்றால் என்ன பிறகு பேசுவார்கள். இருண்ட வீடு என்றைக்கும் இருண்ட வீடாக இருப்பதில்லைதானே!
எழுத்துமுறை மாறிவிட்டது, வாசிப்பு முறையும் மாறிவிட்டது. தொழில்நுட்பமும் மாறிவிட்டது என்ற நிலையில் எழுத்துக்கான அவசியம் இன்னும் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
இமையம்: நிச்சயமாக. தமிழக, இந்திய சூழலில் யார் எதை சாப்பிட வேண்டும், யார் எந்தப் பாதையில் நடக்க வேண்டும், யார் எந்தக் கிணற்றில் தண்ணீர் எடுக்க வேண்டும், யார் எந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும், யார் எந்த இடத்தில் வாழ வேண்டும், யாருடைய உடல் எந்த இடத்தில் புதைக்கப்பட வேண்டும், யார் யாரை காதலிக்க வேண்டும், யார் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம், சாதாரண மனித உரிமைகளைக்கூட மதங்களும், அதனுடைய நிறுவனங்களும் தீர்மானிக்கின்றன. அதோடு மறைமுகமாக மட்டுமல்ல, அரசே மேற்குறிப்பிட்ட விஷயங்களில் நேரிடையாக நிர்ப்பந்திக்கிற போது எழுத்தாளன்தான் அதிகம் பேசவும், எழுதவும் வேண்டியிருக்கிறது. இது காலத்தின் நிர்ப்பந்தம். காலத்தின் குரலை எழுதுவதுதான் இலக்கியம். அதனால் இலக்கியம் எழுதப்பட்டே ஆகவேண்டும். மொழி என்று ஒன்று இருக்கும்வரை இலக்கியம் இருக்கும். இலக்கியம் என்று ஒன்று இருக்கும்வரை மொழியும் இருக்கும்.
2010க்குப் பிறகு எழுதப்பட்ட நூல்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றியும் உங்களுடைய அபிப்ராயம் என்ன?
இமையம்: ஒரு சிலரைத்தான் எழுத்தாளர்கள் என்று சொல்ல முடியும். ஒரு சில நூல்களைத்தான் படைப்புகள் என்று சொல்ல முடியும். பெரும்பாலனவர்களை எழுதுவதற்கான பயிற்சி எடுப்பவர்கள் என்றும், பெரும்பாலான படைப்புகளைப் பயிற்சிக்காக எழுதப்பட்ட நூல்கள் என்றும்தான் சொல்ல முடியும். குட்டையில் மீன் பிடிப்பவர்கள் வேறு. படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடிப்பவர்கள் வேறு. யாரை செம்படவர் என்று சொல்வோம்?
இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி உண்டா?
இமையம்: எதுவும் எனக்குத் தெரியாது என்பதை நம்புங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்பதை ஒருபோதும் நம்பாதீர்கள். நாம் இறந்து விடுவோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். குறைந்தப்பட்சம் தேங்கி நிற்கும் நீரில் உருவாகி மறையும் அலைகளையாவது பாருங்கள். என்னைத்தவிர மற்றவர்கள் எல்லாம் எனக்கு ஆசிரியர்கள் என்று நம்புங்கள். காற்றுள்ள பந்துதான் உருண்டோடும். மேலே எழும்பும்.
அடுத்ததாக என்ன எழுத திட்டமிட்டுள்ளீர்கள்?
இமையம்: மேகம் திரள வேண்டும். குளிர்ந்த காற்று வீச வேண்டும். அப்போதுதானே மழை பெய்யும். முதலில் மேகம் திரளட்டும். குளிர்ந்த காற்று வீசட்டும். மழை பெய்கிறதா, இல்லையா என்று பிறகு பார்க்கலாம். நாளைக்கு நான் உயிரோடு இருக்க வேண்டும். இந்த உலகமும் இருக்க வேண்டும். அடுத்த உரையாடலுகான சூழல் அப்போதுதான் அமையும். நம்புவோம்.
நேர்காணல்: ம.நவீன்
Mika siranta neermayana patilkal. arputamana kelvikal. sila samayam patilkal tattuvam poola iruntana. aiya imayam avarkalukku vanakkangal
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவேறு கழுதைகள் படித்தவுடன் புத்தகத்தைத்தான் கீழே வைக்க முடிந்த்தது.ஆரோக்கியம் இன்னும் மனத்தை விட்டு இறங்கவில்லை.
,******
செட்டி பாத்த உடம்பை இனிமே யாருக்கும் படயல் போட மாட்டேங்கற வரியை அவ்வளவு சுலபமாக கடந்து போய்விட முடியாது.
நவீன் அவர்களுக்கு நன்றி.