சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. அது பொதுபுத்தி சமூகப் பார்வையில் எவ்வளவு மோசமான தோற்றம் கொண்டிருந்தாலும் அதுவும் ஒரு வாழ்க்கைதான். பொதுசமூகம் அந்த மனிதர்களுக்கு இடம் கொடுக்க மறுத்தாலும், உணர்வுகளும் அகச்சிக்கல்களும் நிறைந்த அந்த வாழ்கைக்கு இலக்கியத்தில் எப்போதும் இடம் இருக்கிறது. அப்படியான ஒரு வாழ்க்கையை எழுத்தாளர் இமையம் தனது ‘ஆறுமுகம்’ நாவலில் காட்டியிருக்கிறார். மிகவும் செறிவான கதையாடலின் வழி சொல்லப்படும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைதான் ‘ஆறுமுகம்’.
ஆறுமுகம் நாவல் இரண்டு பகுதிகளாக தன் கதைப்பின்னலைக் கொண்டிருக்கிறது. இருவேறு தளங்களில் நிகழும் சமூகவாழ்க்கையையும் வெவ்வேறு அரசியலையும் ஆறுமுகம் என்ற மனிதனின் நீண்ட வாழ்க்கை அனுபவங்கள் இணைக்கின்றன.
முதல் பகுதி, பூத்துறை, கிருஷ்ணாபுரம் என்னும் சிறுகிராமங்களில் நிகழ்பவை. பூத்துறையில் வாழும் முத்துக் கிழவன் நொச்சி குச்சிகளில் கூடை முடைந்து சந்தையில் விற்பவன். அவனது மகள் தனபாக்கியம். தனபாக்கியத்துக்கு பக்கத்து ஊரான கிருஷ்ணாபுரத்து ராமனை திருமணம் செய்து கொடுத்து அங்கே அனுப்புகிறான். அவர்களின் மகன் ஆறுமுகம். ராமன், கிராம அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் நாயுடு குடும்பங்களில் கூலி வேலை செய்பவன். அவனைப் போன்றே பரம்பரையாக நாயுடுகளின் வீடுகளில் கூலிவேலையாட்களாக பல பறையர் சாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 70ஆம் ஆண்டுகளில் கிராம கட்டமைப்புகள் மெல்ல மாற்றம் காண்கின்றன.
பாண்டிச்சேரியின் கிழக்கில், விழுப்புறம் மாவட்டத்தில் ஶ்ரீ அரவிந்தர் ஆசிரம அமைப்பினர் ஆரோவில்(Auroville) ஆன்மீக நகரதிட்டத்தைக் கொண்டுவருகின்றனர். சுற்றுபுறத்தில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சமதர்ம ஆன்மீக நகரை உருவாக்கும் பணிகள் தொடங்குகின்றன. ஆரோவில்லில் பல அமெரிக்க ஐரோப்பிய மக்கள் குடியேறுகின்றனர். ஆரோவில் ஒரு நிறுவனமாக செயல்பட்டு பல உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது. எட்டுமணி நேர வேலை, விடுமுறை, மரணசகாய நிதி போன்ற சலுகைகள் மக்களைக் கவர்கிறது. ராமனைப் போன்றே பலரும் நாயுடு வீடுகளுக்கு வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டு ஆரோவில்லுக்கும் அதை சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் வேலைக்குச் செல்கின்றனர். அரோவில் கிராம வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் முற்றாக மாற்றுகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் அசாதாரண மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒழுக்கம் சார்ந்த பிறழ்வுகள் இயல்பாகின்றன.
திடீரென்று ராமன் வேலையிடத்தில் நடந்த விபத்தில் இறந்துபோகிறான். தனபாக்கியம் சிலகாலம் தன் தந்தையின் ஊரிலும் பின்னர் கணவனின் வீட்டிலும் தனிமையில் வாழ்கிறாள். ஆறுமுகம் பள்ளி செல்ல துவங்குகிறான். படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். அவனுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே தனபாக்கியத்தின் கனவாக மாறுகிறது. ராமனின் இறப்புக்கு நிதியுதவியும் தனபாக்கியத்துக்கு வேலையும் ஆரோவில்லில் கிடைக்கிறது. ஆறுமுகத்துக்கு தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு மகனோடு கிருஷ்ணாபுரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு குடிபெயர்கிறாள். அவளுடைய குடிபெயர்வில் சந்தேகம் கொண்ட முத்துக்கிழவன் கடைசிவரை அவளுடன் வராமல் பூத்துறையில் தனிமையில் வாழ்ந்து இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்.
ஆரோவில் எனும் நவீன வாழ்க்கை தனபாக்கியத்தின் பட்டிக்காட்டு வாழ்க்கையை மெல்ல மாற்றுகிறது. கூடுதலாக, ஆரோவில்லில் கட்டிடக்கலைஞனாக இருக்கும் உயர் அதிகாரி, ஜெரி ஆல்பெட்டின் அறிமுகம் ஏற்படுகிறது. ஜெரி ஆல்பெட் தனபாக்கியத்துக்கு உதவிகள் செய்பவனாகவும் ஆறுமுகத்தை உடன் வைத்துக் கொண்டு மெல்ல வேலை கற்றுத் தருபவனாகவும் இருக்கிறான். ஆனால், ஆறுமுகத்திற்கு ஜெரி ஆல்பெட்டின் தோற்றம் வெறுப்பானதாகவே இருக்கிறது. அதே நேரம் தனபாக்கியத்துடனான அவனது நெருக்கம் அதிகரிக்கிறது. தனபாக்கியம் ஆழ்ந்த குற்ற உணர்வோடும் அதேநேரம் தவிர்க்க முடியாத உடல் உணர்வுகளின் அலைக்களிப்போடும் ஜெரி ஆல்பெட்டுடன் பழகுகிறாள். ஒருநாள் தனபாக்கியம் ஜெரி ஆல்பெட்டுடன் தனிமையில் நெருங்கி இருக்கும் காட்சியை ஆறுமுகம் கண்டுவிட ஆறுமுகத்தின் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. தான் கண்ட காட்சி அவனுக்குப் பேரதிர்ச்சியாகவும் தன் தாயைப்பற்றிய நம்பிக்கையைக் குலைப்பதாகவும் இருக்கிறது. ஒரு சிறுவனாக அவனுக்கு வாழ்க்கை மீதிருந்த எல்லா நம்பிக்கைகளும் சிதைந்து போகிறது.
ஆறுமுகம் தன் தாயுடன் ஏற்பட்ட மனசிக்கலால் அவளை சந்திக்க விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிவந்து சேரும் செக்குமேடும் அதை சுற்றிய மற்ற இடங்களும் நாவலின் இரண்டாம் தளத்தை அமைக்கின்றன. செக்குமேட்டில் அவன் சந்திக்கும் மனிதர்கள் கிராம வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர். தனது தாய் பிற ஆணுடன் உறவு கொண்டுள்ள உண்மையை ஏற்கமுடியாமல் வீட்டைவிட்டு ஓடிவரும் ஆறுமுகம், சைகில் ரிக்ஷா ஓட்டும் தருமமூர்த்தியால், பாலியல் தொழிலாளியான சின்னப்பொண்ணுவின் பராமரிப்பிலும் அன்பிலும் வாழும் சூழல் இயல்பாக அமைகின்றது. பாலியல் தொழிலாளிகள் வாழும் செக்குமேட்டிலும் பின்னர் மேட்டுப்பாளையதொழிற்பேட்டையில் வசந்தாவுடன் குழந்தை தொழிலாளியாக சில காலமும், சமையல்காரர் குப்புசாமியின் உதவியாளனாக சில காலமும், இறுதியில் பாக்கியத்தின் கறிகடையிலும் வேலை செய்யும் ஆறுமுகம் அபிதா என்கிற பாலியல் தொழிலாளியின் மீது அன்பு கொள்கிறான். ஆனால் எதிர்பாராவிதமாக அவன் தன் தாயை ஒரு விபச்சார குடிசையில் கண்டு மீட்டெடுத்தாலும் அவள் பித்துபிடித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டு ஆறுமுகத்தை நிரந்தர குற்ற உணர்ச்சியில் தள்ளிவிடுகிறாள்.
தன் தாயின் ஒழுக்கம் சார்ந்த குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் அவளை விட்டு ஓடிவரும் ஆறுமுகம் தனது ஓய்வற்ற அலைச்சலில், பாலியல் ஒழுக்கவிதிகளின் முரண்களை பல மனிதர்கள் வாயிலாக உணர்ந்துகொள்கிறான். அவன் சந்திக்கும் பலரும் ஏதோ ஓர் காரணத்தால் வீட்டில் இருந்து ஓடி வந்தவர்கள். தருமமூர்த்தி தன் மனைவி பள்ளி ஆசிரியருடன் சென்றுவிட்ட அவமானம் தாங்காமல் பாண்டிச்சேரிக்கு ஓடிவருகிறான். பாக்கியம் தன் மாமியார் கொடுமை தாங்காமல் ஓடிவந்தவள். வசந்தா தன் குடும்பத்தினரின் வன்கொடுமை தாங்காமல் வெளியேறியவள். தருமமூர்த்தியின் முன்னாள் மனைவி, தருமமூர்த்தியின் சமகால வாழ்க்கை, சின்னப்பொண்ணு, குப்புசாமி, அவன் மனைவி, வசந்தா, அபிதா, அவளின் தாய், புஷ்பா மேரியின் வாழ்க்கை தோல்வி, என்று அவன் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் பாலியல் ஏற்படுத்தும் தாக்கங்களும் அதை அவர்கள் எதிர்கொள்ளுதலும் ஆறுமுகத்திற்கு புதிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
ஆறுமுகம் ஒரு புனைவு என்றாலும் அதன் கதையாடல் நிஜ வாழ்க்கைக்கு மிக பக்கத்தில் தன்னை இருத்திக் கொள்கிறது. நிஜத்தில் காணமுடியாத ஒன்றுகூட இக்கதையில் இல்லை. கிராம வாழ்க்கையில் தொடங்கி, கோரிமேடு, செக்குமேடு மேட்டுப்பாளையம் மக்களின் வாழ்க்கை வரை நமக்கு நேரடி விளக்கமாகவே கதை கூறப்படுகிறது. இந்நாவலின் மொழி அதன் கதாமாந்தர்களின் தன்மைகளை தெளிவாக வெளிக்காட்டக் கூடியதாக, பாவனைகளற்று இருக்கிறது. பாலியல் வசைகளும், சாடல்களும் எந்தத் தணிக்கையும் இன்றி நிரம்பிருக்கின்றன. அதேசமயம் கற்பனையின் எல்லைகளைப் புனைவுகளில் காண விரும்பும் வாசகனுக்கு இந்நாவல் அலுப்பு ஏற்படுத்தும் அளவுக்கு நின்று நிதானமாக காட்சி விவரணை செய்து கொண்டு செல்கிறது. குப்புசாமி, அபிதா, போன்ற சில கதாப்பாத்திரங்கள் திடீரென்று தோன்றி வளர்ந்து மறைந்துவிடுகின்றனர்,
ஆறுமுகம் நாவல் அதன் பெயரில் ஆண்பாலைக் கொண்டிருந்தாலும் இது முன்னிறுத்துவது பெண்களைப் பற்றிய கதையைத்தான். தனபாக்கியம், சின்னப்பொண்ணு, பாக்கியம், வசந்தா, அபிதா, புஷ்பா மேரி என பல பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை ஆறுமுகம் என்கிற மைய பாத்திரத்தின் வழி மிக நுணுக்கமாக பேசுகிறது இந்நாவல். தன் தாயைப் பிரிந்து ஒரு தூசுபோல பல இடங்களுக்குப் பறந்தும் விழுந்தும் ஜிவிக்கும் ஆறுமுகத்தின் வாயிலாக வாசகன் பொதுவெளியில் அறியப்படாத பல மனிதர்களை அறிந்து கொள்கிறான். முத்துக் கிழவர், ராமன், தருமமூர்த்தி, குப்புசாமி போன்ற ஆண் கதாப்பாத்திரங்களை விட வாசகனோடு அதிகம் பேசுபவர்கள் பெண் கதைமாந்தர்களே. ஆறுமுகம் தன் தாயிடம் குற்றமாக நினைத்து ஒதுங்கிய ஒன்று பரந்த மனித வாழ்க்கையில் அவனுக்கு உணர்த்தும் புரிதல்கள்தான் இந்நாவலின் சாரமாக அமைகின்றது.
பாக்கியம் ஒரு தாயாக இருந்து பலருக்கும் அடைக்கலம் கொடுக்கிறாள். பாலியல் தொழில் செய்யும் சின்னப்பொண்ணை தன் மகளாகவே பாக்கியம் பார்க்கிறாள். வசந்தாவுக்கும் ஆறுமுகத்துக்கும் பாக்கியம்தான் அடைக்கலம் கொடுத்து தற்காலிக வேலையும் கொடுக்கிறாள். ஆனால் அவள் அன்பை வெளிப்படுத்தும் அதே வேகத்தில் ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் கிராமதெய்வமாக இருக்கிறாள்.
வசந்தாவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய வீழ்ச்சி. அதிகார சாதியான நாயுடு வீட்டுப் பெண்ணான அவளின் வாழ்க்கை உடன்பிறப்புகளின் கவனிப்பின்மையால் தடுமாற்றம் அடைகின்றது. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் வேலை செய்யும் அவள் அங்கு பணிபுரியும் மேலதிகாரியால் பாலியல்தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறாள். ஆறுமுகம் குழந்தை தொழிலாளியாக அதே தொழிற்சாலையில் வேலை செய்கிறான். அவளைப் பற்றிய தகவல்களைக் கேள்விபட்ட அவளின் அண்ணன்களும் உறவுகளும் அவளை அவமானப்படுத்தி அடித்து துன்புறுத்துகின்றனர். வீட்டைவிட்டு வெளியேறும் அவள் பாக்கியத்தின் உதவியுடன் சிறிதுகாலம் வாழ்ந்து பின்னர் மேரியுடன் மருத்துவமனை தூய்மைபடுத்தும் வேலைக்குச் சென்றுவிடுகிறாள். ஆறுமுகத்துடன் அவள் காட்டும் நெருக்கம் இன்ன காரணம் என்று தெளிவுபடாமலே மறைந்துபோகின்றது.
நாவலின் முதல் வரி “நம்ப எங்கம்மா போகப் போறோம்? என்று ஆறுமுகம் அவன் தாய் தனபாக்கியத்திடம் கேட்கும் கேள்வியில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் அப்போது முத்துக் கிழவனுடன், கால்நடையாக கிருஷ்ணாபுரத்தில் இருந்து பூத்துறைக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஆறுமுகம் எட்டு வயது சிறுவனாக அந்த வயதிற்கேற்ற குறும்புத்தனங்களுடனும் குறுகுறுப்புகளுடனும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் மெல்ல அவனது குழந்தமை காணாமல் போய்விடுகிறது.
அவன் பாண்டிச்சேரியில் தன் தாயுடன் வாழ்ந்தபோதும் செக்குமேட்டுக்கு வந்த பிறகும் அவனின் செயல்பாடுகளிலும் சித்தரிப்புகளிலும் குழப்பங்கள் தென்படுகின்றன. கதை, ஆறுமுகம் என்கிற சிறுவனின் பார்வையில் இல்லை. அது முழுதும் கதைசொல்லியின் பார்வையில் இருக்கிறது. ஆகவே ஆறுமுகம் என்கிற சிறுவனின் அகம் முழுமையாக வெளிப்படாமலே இருக்கிறது. ஒரு சிறுவனைப்பற்றிய கதை என்பதை உணரமுடியாதபடி படைப்பாளியின் பார்வை கோணம் குறுக்கிடுகிறது. ஆறுமுகத்தால் குழந்தைக்குரிய பாங்குடனோ இளைஞனுக்குரிய தெளிவுடனோ செயல்பட முடியவில்லை. பல இடங்களில் அவன் செயலற்று பார்வையாளனாக இருக்கிறான். அவனது அதிகப்படியான எதிர்வினையாக அவ்விடத்தை விட்டு ஓடிவிடுகிறான். அல்லது வேகமாக நடந்து வெளியேறுகிறான். “ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் ஓடுற… இந்த ஓட்டம்தான் ஒன்னை இங்கு கொண்டுவந்து விட்டிருக்கு” என்று வசந்தா அவனிடம் ஓரிடத்தில் கூறுகிறாள். ஆனால் ஆறுமுகத்தின் மனஓட்டம் முழுமையாக சித்தரிக்கப்படாமலேயே கதை நகர்கிறது.
குப்புசாமி பாத்திரப்படைப்பு உதிரியானது. கதை போக்குக்கு தேவைப்படாமலே ஒதுங்கி நிற்கும் மனிதனாக குப்புசாமி இருக்கிறான். குப்புசாமியின் ஒருபால் ஈர்ப்பும், அவன் மனைவி தன் மைத்துனனோடு வைத்திருக்கும் கள்ள உறவும் கூட அதிக அழுத்தம் இல்லாமல் வாசகனுக்கு வெறுமனே அதிர்ச்சிதரும் நோக்கில் எழுதப்பட்ட சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. ஆறுமுகம் குப்புசாமியினால் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் கூட, முதிரா பருவத்தில் அவன் தன் தாயை ஜேரி ஆல்பெட்டுடன் பார்த்து வெறுத்த காட்சிகளை மேலும் வளர்க்கூடியதாகவே இருக்கின்றன. குப்புசாமியைப் புரிந்துகொள்ளும் எந்த சந்தர்பமும் ஆறுமுகத்துக்கு வாய்க்கவில்லை. அவன்மேல் கொண்ட அருவருப்பை மட்டும் அழிக்கமுடியாத மனதுடன் அங்கிருந்து விலகுகிறான்.
ஆறுமுகம், ஒரு இளைஞனாக, வாழ்க்கையின் சிடுக்குகளையும் போலியான ஒழுக்க விதிகளையும் புரிந்துகொண்ட பின்னர் வசந்தா காரணமின்றி பிரிகிறாள். அதேநேரம் அபிதா என்கிற பாலியல் தொழிலாளியின் மீது அவனுக்கு அன்பு தோன்றுகின்றது. ஆனால், எதிர்பார நிலையில் அவன் தாயுடனான சந்திப்பும் அவளின் மரணமும் அவனை மீண்டும் நிலைகுலையச் செய்கின்றன.
நாவலின் முன்பகுதியில் ஆரோவில் என்னும் ஆன்மீக நகர அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ராமன் அங்குதான் வேலை செய்கிறான். அங்கு வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில்தான் அவன் இறந்துபோகின்றான். பின்னர் தனபாக்கியமும் அங்குதான் வேலை செய்கிறாள். அவள் வாழ்க்கையின் மிகப்பெரிய மாறுதல் அங்கு வேலை செய்யும் போதுதான் ஏற்படுகிறது. ஆரோவில் சுற்றுபுற விவசாய மக்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாறுதல்களைச் உருவாக்குகிறது. ஆரோவில் என்பது, பாண்டிச்சேரிக்கு அருகில் தமிழ்நாட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஆரோவில், இந்திய சுதந்திர போராட்டவாதியும் ஆன்மீக ஞானியுமாகிய அரவிந்தரின் நேரடி மாணவி Mirra Alfassa உருவாக்கிய சமத்துவ ஆன்மீக நகரமாகும். Mirra Alfassa, அரவிதர் அமைப்பினரால் ஶ்ரீ அன்னை என்று குறிப்பிடப்படுகிறார். யுனேஸ்கோவின் பண உதவியுடன் பன்னாட்டு அரசுகள் உருவாக்கிய மதகட்டுப்பாடுகள் அற்ற ஆன்மீக பிரதேசமாக ஆரோவில் அமைந்துள்ளது. உலகின் பல நாட்டு மக்களும் அங்கு ஆன்மீக அனுபவம் பெற சென்றுவர அனுமதியும் சில கட்டுப்பாடுகளும் உண்டு. நாவலின் முன் பகுதியில் ஆரோவில் குறித்து ஆசிரியரின் சித்தரிப்புகள் அவ்வமைப்பு குறித்த கடும் விமர்சனங்களாகவே இருக்கின்றன. கிராம மக்களின் வாழ்க்கையில் அவ்வமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தை முதலாளிய உலகமயமாக்களின் சிக்கல்களுடன் பொருத்திப் பார்க்க முடியும். ஆயினும் ஆசிரியர் ஆரோவில் மீதான தனது விமர்சனத்தைக் கதையில் தொடராமல் வேறு களத்துக்கு நகர்ந்துவிடுகிறார். அதேசமயம் கிராம மக்களின் மரபான ஆண்டான் அடிமை வாழ்க்கையின் தீர்வாகவும் ஆரோவில்லை ஏற்க முடியாநிலை ஏற்படுகிறது. ஆயினும் மிகுந்த சிரத்தையுடன் கட்டமைக்கப்பட்ட ஆரோவில்லின் வாழ்க்கை, ஒழுக்கமீறல்களையே வாழ்க்கையாக கொண்ட செக்குமேட்டுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுவதன் வழி வாசகன் புதிய திறப்புகளைப் பெறுகின்றான்.
நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஆரோவில்லின் ஏற்பட்ட வாழ்க்கையின் பெருங்குழப்பம் ஒன்று, ஒழுக்கவிதிகளுக்கு எதிராக தன்னை அமைத்துக்கொண்ட செக்குமேட்டு நிலப்பரப்பில் தெளிவைக் கொடுப்பது வாழ்க்கையின் முரண்களில் ஒன்றாக அமைகின்றது. புதிர்களும் முரண்களும் நிறைந்த வாழ்க்கையின் உள்ளார்ந்த தெளிவும் ஞானமும், செயற்கையாக கட்டமைக்கப்பட ஒழுக்கவிதிகளுக்கு வெளியில் சென்றலையும் போதே வாய்க்கிறது. ஆறுமுகத்தின் ஓட்டத்தின் முடிவு அவ்வாறே அமைகின்றது.
இமையத்தின் நாவல்களில் மிக மோசமாகத் தோல்விவயடைந்த நாவல் ஆறுமுகம். நிகழ் வாழ்வின் இழிவு முழுவதும் குவிந்த செம்மா மேடு என்னும் பெருங்கதைக்களம் சினிமாத்தனமான திருப்பங்களால் சிதைவடைகிறது. அருமையான தொடக்கம் கொண்ட இந்த நாவலின் மையப் பாத்திரமான ஆறுமுகத்தின் உளவியல் குணச்சிதைவு நாடகத் தன்மை கொண்ட எழுத்தால் நாவலின் கலை ஒருமையைக் குலைக்கிறது.