இயல்புவாதப் படைப்புகளைச் சுருக்கமாகக் கடவுள்கள் இல்லாத படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். கதைகளில் அற்புதத் தன்மையையும் யதார்த்தம் கடந்த தன்மையையும் கழித்துவிட்டு எழுதப்படும் கதைகளை இயல்பு மற்றும் யதார்த்தவாதப் படைப்புகளாக அடையாளப்படுத்தலாம். செடல் அப்படியானதொரு இயல்புவாதப்படைப்பு. ஆனால் செடல் இப்படித் தொடங்குவது ஒரு நகைமுரண்.
‘சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ’
சரியாகச் சொல்வதானால் இந்த நாவல் முழுக்கவே கடவுள் ஒரு முக்கிய பாத்திரமாக அவரது இருப்பைப் போலவே ஓர் அருவமான நிலையில் இருந்தபடி காட்சியளிக்கிறார். அவரை மையமெனக் கொண்டு புனையப்பட்ட ஒரு சமூகத்தின் ஒழுங்கமைவுக்காகப் பலி கொடுக்கப்படும் ஒரு பெண்ணைக் கடவுள் நாவல் முழுக்கவே பின்தொடர்கிறார். செடல் என்று பெயர் கொண்ட அந்தப் பெண்ணும் அவர் தன்னுடன் எப்போதும் இருப்பதாகவே நம்புகிறாள். ஏன் அவள் கடவுளை நம்ப வேண்டும்? ஏனெனில் மிகச்சிறு வயதிலேயே கடவுளுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு விடுகிறாள். கடவுள் மனித உடல்களுடன் உறவு வைத்துக் கொள்வது இல்லை என்பதால் கடவுளுக்கு மணமுடித்து வைக்கப்பட்ட இந்தக் கன்னிப் பெண் காலம் முழுக்க தான் கண்களால் காணாத கடவுளை எண்ணி தன் வாழ்வை ஆற்றிக் கடக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறது.
ஒரு பொதுப்பார்வைக்கு செடலுக்கு நடப்பது பெரும் அநீதி என்ற மனச்சித்திரத்தை நாம் அடைவோம். இயல்பான வாழ்க்கைக்கு எதிரானதாக அமைகிறவற்றை நாம் அநீதி என்று வகுத்துக் கொள்கிறோம். ஆனால் இயல்பான வாழ்க்கை என்ற ஒழுங்கினை நாம் கற்பனை செய்வதற்கு நாம் மாபெரும் அறம் என்றோ அல்லது மாபெரும் அநீதி என்றோ கற்பனை செய்கிறவைதான் கரை அமைக்கின்றன. செடல் பிறந்த சமூகமும் அவள் வாழும் காலமும் எதை நீதி என எண்ணுகிறதோ அந்தக் காலத்தைக் கடந்து வந்துவிட்டப் பிறகு நமக்கு அது அநீதியெனப்படுகிறது. இன்றைய சமூகக்கரைகள் நாளை வரவிருப்பவர்களுக்கு அநீதியெனத் தோன்றலாம். ஆகவே செடல் பொட்டுக்கட்டி விடப்பட்டது குறித்து விமர்சிக்கவோ பெருந்துயர்களால் நிறைந்த அவள் வாழ்க்கைக்கு சமூகமே காரணம் என்று தீர்ப்பெழுதுவதற்கோ இன்றிலிருந்து அவ்வாழ்க்கையைப் பார்க்கும் நமக்கு எந்த உரிமையும் இல்லை. மாறாக செடல் அடையும் துயருக்கான வெற்றிக்கான புகழுக்கான வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கலாம். இக்கட்டுரை செய்யவிருப்பது அதையே.
செடலுடைய வாழ்க்கையை அவள் வாழும் காலத்தில் (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்) பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் இருந்து எது வேறுபடுத்துகிறது? செடலுடைய வாழ்க்கை ஏன் சொல்லப்பட வேண்டும்? என்ற கேள்விகளில் இருந்து இந்த நாவலை வாசிக்கத் தொடங்கலாம். முதல் விஷயம் செடல் ஒரு பறையர் ஜாதிப் பெண். பறையர்களுக்குள்ளாகவே தாழ்வாக எண்ணப்படும் கூத்தாடும் சமூகத்தைச் சேர்ந்தவள். (பறையர்களில் பூசாரிகளுக்கும் அய்யர் என்ற பின்னொட்டு இருப்பது இந்த நாவல் வழியாகவே அறிந்து கொண்டேன்). அச்சமூகப் பெண்களே செல்லியம்மன் என்ற செடலின் கிராமத்துக்கும் சுற்று வட்டார கிராமங்களுக்குமான கன்னி தெய்வத்துக்குப் பொட்டுக்கட்டிவிடப்பட வேண்டும். ஆனால் அப்பெண்தான் அவள் ஊரிலும் பிற ஊர்களிலும் தங்களை உயர் சாதிகளாக பாவிக்கும் வெள்ளாளர், கவுண்டர் போன்ற ஜாதிகளுக்கும் சேர்த்து ‘சாமிப்பெண்’. பொட்டுக்கட்டியே விடப்பட்டாலும் செல்லியம்மன் ஆலயத்துக்குள் நுழைய செடலுக்கோ ராமலிங்க அய்யருக்கோ உரிமையில்லை. செடலின் குடும்பம் நிலமற்றது மற்றும் கூலித்தொழில் செய்து பிழைப்பது என்பதால் தங்கள் அதிகாரத்தின் வழியே உயர்பாவனை கொண்ட ஜாதியினர் செடலின் தந்தையை அவள் வீட்டில் ஒரு பெண் பிள்ளைக்கு பொட்டுக்கட்டிவிட வற்புறுத்துகின்றனர். அரைமனதுடன் செடலின் குடும்பம் சம்மதிக்கிறது. அறியாச் சிறுமியான செடல் பொட்டுக்கட்டி விடப்படும் நிகழ்வும் அதன்பிறகான அவளது மனத்தவிப்பும் எட்டாவது பெண் குழந்தையாக அவள் பிறந்த குடும்பத்தின் சூழலின் ஊரின் வறுமையும் உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நாவலின் முக்கியமான சிக்கல் என்பது செடல் என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, தன்னை தான் அந்த குடும்பத்தின் உறுப்பினள் அல்ல என்பதை உணர்வதிலும் அந்த ஊரின் உறுப்பினள் என்று உணர்வதிலும் இருக்கிறது. முதலில் செடல் முரண்டு பிடிக்கிறாள். தன்னை குடும்ப உறுப்பினராகவே இருத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் வீட்டை நோக்கி ஓடுகிறாள். செடலுக்கு காவலென்றும் காப்பென்றும் ஒரு கிழவியை ஊர் நியமிக்கிறது. அவளும் கோவிலும் கோவிலை ஒட்டிய வீடுமே தன்னுடைய ‘புதுக் குடும்பம்’ என்பதை செடலால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வறுமையில் தாக்குப்பிடிக்க முடியாமல் செடலின் குடும்பம் செடல் இருந்த ஊரைவிட்டு இலங்கைக்குச் செல்கிறது. செடல் மெல்ல மெல்ல தான் யார் தன்னுடைய செயல்பாடுகள் என்ன என்று உணர்ந்து கொள்கிறாள். மற்றவர்களில் இருந்து தான் வேறுபட்டவள் என்பதும் மற்ற குழந்தைகளுடைய வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதும் செடலுக்கு புரியத் தொடங்குகிறது. அவளை வளர்க்கும் கிழவியுடனும் தன் புதுச்சூழலுடனும் செடல் ஒரு புரிந்துணர்வுக்கு வரத்தொடங்குகிறாள். எதிர்பாராத விதமாக கிழவி இறந்துவிட செடல் மீண்டும் தன்னையொரு புதுச்சூழலுக்குப் பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
செடலின் துயரங்களுக்கு அடிப்படையாக அமைவது இந்த அம்சமே. நம்முடைய மனமும் அதன் உணர்வுக் கட்டுமானமும் குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் கொடுக்கல் வாங்கலுக்கும் பழக்கப்படுத்தப்பட்டவை. நம்மை அறியாமலேயே நமக்குள் அந்த உணர்வுக் கட்டுமானம் உருக்கொள்ளத் தொடங்குகிறது. ஒரு குடும்ப உறுப்பினராக இருந்து மெல்ல மெல்ல சமூக உறுப்பினராக நாம் மாறுகிறோம். அப்படி மாறும்போது கூட ஒரு குடும்ப உறுப்பினராக நம்முடைய கால்கள் குடும்பங்களில் மேலும் அழுத்தமாக பதிகின்றன. குடும்பத்துக்கும் சமூகத்துமான ஒரு உணர்வுச்சமநிலையை நம்மால் பேண முடிகிறது. செடலுக்கு நிகழாமல் போவது இதுதான். அவளுக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லை. அவளை கட்டுப்படுத்தும் ஒழுக்க விதிகள் குடும்பம் என்ற அமைப்பு சார்ந்தது அல்ல. சமூகம் என்ற அமைப்பு சார்ந்தது. ஆகவே சமூகத்தின் எந்தக் கூறு உருக்குலைந்தாலும் அது செடலை உடனடியாக பாதிக்கிறது.
கிழவி இறந்த பிறகு செடல் மீண்டும் வெறுமையையும் தனிமையையும் உணரத் தொடங்குகிறாள். அச்சூழலில் இருந்து தப்பித்து மீண்டும் சமூகத்தின் அன்றாட வழக்கங்களுக்குள் தன்னை பொறுத்திக்கொள்ளும் போது செடலின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. அவளது மாதவிடாய் சுழற்சி பருவம் தொடங்குகிறது. இயல்பாக சிறுமியரின் மாதவிடாய் சுழற்சி பருவம் தொடங்குவது எல்லாச் சமூகங்களிலும் மிகப்பொறுப்புடனும் கவனத்துடனும் கையாளப்படும். ஆனால் செடல் ஒரு கொட்டும் மழைநாளில் தொடையில் குருதி கசிந்து வழிய ஒண்ட இடம்கேட்டு வீடுவீடாக ஓடுகிறாள். உடற்குருதி வெளியேறி ‘மாசுபட்டு’ நிற்கும் அவளை ஊர் மொத்தமாக கைவிடுகிறது. அவள் பொன்னன் என்ற கூத்தாடும் உறவினனுடன் கோபத்தில் ஊரை நீங்குகிறாள். அவளை அவள் சொந்தபந்தங்கள் தேடிக்கொண்டு நெடுங்குளத்துக்கு வரும்போது செடல் அவர்களிடம் வைக்கும் கோரிக்கை ஊர் வந்து தன்னை அழைக்க வேண்டும் என்பதே.
சமூகத்தின் நலனுக்காக ‘நேர்ந்து’ விடப்பட்ட செடல் போன்றவர்களின் உணர்வுச்சமநிலை குலைவது இவ்விடத்திலேயே. சாதாரணமாக ஆணவச் சீண்டல்களோ புண்படுத்தல்களோ புறக்கணிப்புகளோ உறவுகளுக்குள் நடைபெறக்கூடியதுதான். ஆனால் செடல் என்ற சிறுமி தனிமனிதர்களுடன் தன் உறவுநிலைகளை அமைத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு உறவென்பது ஊருடன் அதாவது சமூகத்துடன்தான். தன்னுடைய வாழ்க்கை பாதுகாப்பாகத் தொடரும் எனும்போதும் ஊர் தன்னை பார்த்துக் கொள்ளும் எனும்போதும் ஊருக்குத் திரும்பிச்செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளுக்குள் இருந்தும் அவளை ஊருக்குச் செல்ல விடாமல் தடுப்பது இந்த ‘ஆணவ மோதல்’தான். ஆனால் சமூகம் என்பது தனிமனிதர்களைப் பொருட்படுத்தாதது. செடல் ஒரு சமூகம் புனைந்து கொண்ட கட்டுமானத்தின் ஒரு அங்கம் என்கிறபோதும் கூட அவளுக்கென இசைய மறுக்கிறது. இந்த நாவலில் வெளிப்படும் மிகக்கூர்மையான சமூக விமர்சனம் இது. ஊர் வழக்கத்தை காப்பாற்ற ஊரே சேர்ந்து அவளது வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக வாக்களிக்கிறது. அது நடைபெறவில்லை. தனக்கும் ஊருக்குமான ஒப்பந்தம் மீறப்படுவது செடலையைப் புண்படுத்துகிறது. நம்பிக்கையின் பாற்பட்ட இந்த ஒப்பந்தத்தை இறுதிவரை காத்து நிற்கிறவளாக செடல் இருக்கிறாள். ஆனால் ஊரும் அவளது சாதியும் பிற நிலவுடைமைச்சாதிகளும் அந்த ஒப்பந்தத்தை மீறுகின்றன. அவளை அழைத்துச் செல்ல அவள் ஊரிலிருந்து யாரும் வரவில்லை. செடல் நாடகங்களிலும் கூத்துகளிலும் நடிக்கத் தொடங்குகிறாள். அவளது புகழ் பரவத் தொடங்குகிறது. புகழுடனும் அழகுடனும் வந்து சேரும் அத்தனை வன்மங்களையும் செடல் எதிர்கொள்கிறாள். இலங்கையில் அவள் குடும்பம் மொத்தமும் இறந்துவிட அவள் சகோதரி வனமயிலும் அவள் மகன் பரஞ்ஜோதியும் மட்டும் திரும்பி வருகின்றனர். தன் உடன்பிறந்த சகோதரியுடனும் ஊருக்குத் திரும்புவதில் செடலுக்கு எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஏனெனில் அவள் உள்ளுக்குள் விழைவதே ‘குடும்பம்’ என்ற மற்ற எல்லோரும் உறுப்பினராக இருக்கும் ஒரு அமைப்புக்குள் இருப்பதைத்தான். ஆனால் செடலுக்கு குடும்ப வாழ்வும் சாத்தியமாவதில்லை. சகோதரியும் சகோதரியின் மகனும் செடலை வெறுக்கின்றனர். மகனை விடுத்து வனமயில் காசநோயால் இறந்து போகிறாள். பரஞ்ஜோதியும் செடலை வெறுத்து கிறிஸ்துவத்தில் சேர்கிறான்.
கடுமையான வறுமை, சகோதரியின் ஏளனமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு என தன் முந்தைய வாழ்வை விட மோசமான ஒன்றாக இருந்தாலும் செடல் வனமயிலுடன் இருக்கவே விழைகிறாள். ஆனால் அது நடைபெறுவதில்லை. செடல் மீண்டும் ஊரில் ஒருத்தியாக மாறுகிறாள். இறுதியாக புகழ்பெற்ற கூத்துக் கலைஞராக வாழ்ந்த பாஞ்சாலியின் வாழ்வனுபவங்களைக் கேட்டு தன் வாழ்க்கைப் பாதையை செடல் தீர்மானித்துக் கொள்வதோடு நாவல் முடிகிறது.
கூத்தும் நாடகமும் மெல்ல செல்வாக்கிழந்து அவ்விடத்தை சினிமா வந்து பிடித்துக் கொள்வது, ஒடுக்கப்பட்டவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் பிடுங்கப்படுவது, ஒரு நாளும் நிம்மதியாக வாழ விடாத தீராத வறுமை என பல தளங்களை இந்த நாவல் தொட்டிருக்கிறது. எனினும் நாவலின் மையமாகத் திரள்வது செடலின் தவிப்புகளும் அல்லாட்டங்களுமே.
செடல் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறாள்.
‘எனக்கு யார்மேலயும் கோவமில்ல. ஒருவரயும் கொற சொல்லல. எல்லாமும் நான் முன்செம்மாந்தரத்துல செஞ்ச வென, பாவம். சல்லியன் சொன்னத கர்ணன் கேக்கல, அது அவனோட விதி. போர்க்களத்துல மாண்டுபோனான். பலி கொடுக்கிறப்பக் கூட அரவானுக்கு கன்னி கயிச்சித்தான் பலியிட்டாங்க. எனக்கு எதுவுமில்ல. மூக்குல வெளக்கமாத்து குச்சிகூட போட முடியாது. கம்மனாட்டி கயித்தாட்டம் கெடக்கு. புள்ளெ கொடுக்க ஆயிரம் பேர் வந்தாலும்,என்ன வச்சிப் படக்க ஒருத்தன் வருவானா?’
செடலை ‘பொதுவானவள்’ என ஆண்கள் சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். வீரமுத்து உடையார் செடலை பணத்தினால் அடைய நினைக்கிறான். ஆரான் நாடக்குழுவில் ஒருத்தி என்று அவளை சீண்ட முனைகிறான். பெண்ணை அடைய நினைக்கும் இந்த ஆண் வெறியைக் கட்டுக்குள் வைப்பது பெண்ணுக்கு சூட்டப்படும் புனித அடையாளங்களே. இன்னாரின் மகள்,இவன் மனைவி,இப்படிப்பட்ட பெண் என வெவ்வேறு வகையில் அந்த அடையாளங்களை நாம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்போம். சாதாரணமாக ஆண்களால் விழையப்படும் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் விதமாக கதைகள் உருவாகிப் பரவுவது நம் சூழலில் நாம் உணரக்கூடியதாகவே இருக்கும். இக்கதைகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது அவர்களது வாழ்நாள் பணிகளில் ஒன்றாகவே இருக்கும். குடும்பத்திற்கு அடங்கி அதிகம் வெளியே தலைகாட்டாத அப்படியே வெளியே வந்தாலும் சமூக சரிநிலைகளை ஏற்று நடிக்கும் பெண்கள் குறித்து இத்தகைய கதைகள் பரவுவது குறைவாக இருக்கும். சமூகத்துக்கு எதிர்நிலை எடுக்கும் பெண்ணை அதாவது ‘சராசரி’ என்ற நிலையைவிட்டு வெளியே செல்ல விரும்புகிறவளை இப்புனைவுகள் கொத்திப் பிடுங்க காத்திருக்கும்.
செடல் பொட்டுக்கட்டி விடப்பட்டதன் வழியாகவே சராசரிக்கு வெளியே சென்று விடுகிறாள். அவளது அழகும் திறனும் உடன் இணைய அவளது புகழ் பரவுகிறது. அவளை ஆண்கள் மீண்டும் மீண்டும் வேறொரு வகையான வாழ்க்கைக்குள் இழுக்க முயல்கின்றனர். அவள் பணிய மறுக்கிறாள். அவள் தன் மனம் கலங்கப்பட்டு விட்டதாக வீரமுத்து உடையார் என்பவன் முன் அழுதாலும் கூட இறுதிவரை அவள் பணிவதில்லை. ஆனால் எந்த சமசரங்களும் செய்துகொள்ளாத செடலுக்கான நியாயங்களை வழங்க வேண்டிய சமூகம் அவளை முற்றாக கைவிடுகிறது என்ற பரிதாபகரமான உண்மை நாவலை வாசித்து முடிக்கும் போது நம் முகத்தில் அறைகிறது.