‘பெத்தவன்’ நெடுங்கதை வெறும் நாற்பது பக்கங்கள் மட்டுமே. அந்த நாற்பது பக்கங்களை வாசித்து முடித்தபோது சில மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறிப் போயிருந்தேன். மனித குலத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தையும் அதன் குரூரங்களையும் கதை முழுக்க நிரம்பியிருக்க அதை வாசிக்கும் வாசகன் நிச்சயம் பதைபதைப்புக்கு உள்ளாவான்.
எழுத்தாளர் இமையம் அவர்களை வல்லினம் மூலமாக அறிந்துகொண்டேன். 2015 ஆண்டில் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவில் சந்தித்தேன். அந்நேரம் அவருடைய நெடுங்கதையான பெத்தவன் குறித்து மிக முக்கியமாக பேசப்பட்டது. அச்சமயம் உடனடியாக வாசிக்க ‘பெத்தவன்’ நூல் கிடைக்கவில்லை. மாறாக, அவர் கையில் கொடுத்துவிட்டு சென்ற ‘எங் கதெ’ நாவல் மட்டுமே இருந்தது. அதனை வாசித்தப் பிறகு உயிர்மையில் வெளிவந்த அவரது சிறுகதைகளை வாசித்திருந்தேன்.
கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருது’ எழுத்தாளர் இமையத்திற்கு அறிவித்ததையடுத்து வல்லினத்தின் மார்ச் மாத சிறப்பு இதழுக்காக அவரது படைப்பு ஒன்றை வாசித்து கட்டுரை எழுத எத்தணித்தபோது மீண்டும் என் சேகரிப்பில் இருந்த நூல்களை அலசியதில் ‘பெத்தவன்’ கிடைத்தது. இவ்வாண்டு சென்னையில் நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் ‘பெத்தவன்’ அதிகம் விற்கப்பட்ட பத்து நூல்களில் ஒன்று. பெத்தவன் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதை. ஆனாலும் நீளமான கதை. அக்கதை மட்டும் தனி நூலாக 2013 ஆம் ஆண்டில் பாரதி புத்தகாலயம் வெளியீடாக வந்தது. ஆறு ஆண்டுகள் கடந்தும் நல்ல விற்பனையில் இருப்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை தந்தது.
‘பெத்தவன்’ எளிமையான கதை. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் நேரடி கதை. இக்கதை நிகழும் நிலப்பரப்பு கடலூர் மாவட்ட கிராமம். பாக்கியம் எனும் பெண்ணும் பெரியசாமி எனும் இளைஞனும் காதலிக்கிறார்கள். அவர்களுடைய சாதிய பின்புலம் எங்குமே சொல்லப்படவில்லை. கதை முழுக்க சாதிப் பெருமை பேசப்படுகிறது. ஓரிடத்தில் மட்டும் காலனிக்கும் குடித்தெருவுக்கும் பகை எனக் காட்டப்படுகிறது. அதிலிருந்து பாக்கியம் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவள் என்பதும் பெரியசாமி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதும் புலனாகிறது. திருமணம் செய்துகொள்வதற்காக நான்கு முறை ஊரைவிட்டு ஓட முற்படும்போது பிடிபட்டு பல குரூரங்கள் அவர்கள் மீது அவிழ்த்துவிடப்படுகின்றது. தன் நிலையிலிருந்து பின்வாங்காத பாக்கியத்தை கொல்ல வேண்டும் என ஊரே துடிக்கின்றது. அவளைக் கொல்லச்சொல்லி பெண்ணின் தந்தையான பழனிக்கு அவரது சமூகம் நெருக்குதல் கொடுக்கின்றது. ஊருக்கு முன்னிலையில் தன் மகளை தானே கொல்வதாக வேட்டியைத் தாண்டி சத்தியம் செய்யும் தந்தை காதலித்தவனோடு சேர்ந்து வாழ வேண்டி யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கதை முடிகிறது.
இக்கதையின் மையம் சாதியால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்கள் வாழ்வை தாங்களே முடிவெடுக்க முடியாத அடிமைகளாக இருப்பதும் சாதி எனும் சக்தி இந்த அடக்குமுறையைக் குறிப்பிட்ட ஒரு நபரின் மூலம் அல்லாமல் தன்னை சமூகத்தில் ஓர் பண்பாடாக மாறி எவ்வாறு இயக்குகிறது என்பதையும் காட்டுகிறது. அவ்வாறு அது சமூகத்தை வழிநடத்தும் சக்தியாக மாறும்போது தனிமனிதனின் தன்மானம், அறிவு, சிந்தனை, சுதந்திரம், உணர்வுகள் என அனைத்தும் எவ்வாறு கொன்றொழிக்கப்படுகின்றன எனச் சொல்லும் ஆவணமே ‘பெத்தவன்’ குறுநாவலின் மையம். அதன் நீட்சியாக நடந்தேறும் ஆணவக்கொலையே இந்நாவலின் ஜீவன். இக்கதையை வாசித்துமுடித்த பிறகு இரண்டு விடயங்கள் குறித்து யோசிக்க வைத்தது. ஒன்று, சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சாதியவெறியும் அது சக மனிதனின் மீது செலுத்தும் வன்முறையும். மற்றொன்று பெண்களின் சுதந்திரமும் அவர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறையும்.
இக்கதையில் முழுக்க வன்முறைகள் நிறைந்துள்ளன. பாக்கியம் மீது குடும்பத்தார் காட்டும் வன்முறைகள், பாக்கியம் மீது அவள் சார்ந்த சாதிய சமூகம் காட்டும் வன்முறைகள், பழனி மீது அவன் சாதிய சமூகம் காட்டும் வன்முறைகள், தன் சாதியப் பெண்ணைக் காதலித்த பெரியசாமி மீது காட்டும் வன்முறைகள் எனப் பலவழிகளில் சாதிப்பிடிப்பு வன்முறையின் வழி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
பாக்கியம் காதலிப்பது தெரிந்ததும் அவளது தந்தை அவளுக்காக உடனடியாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்வதும் அதன் விளைவாக அவள் விஷமருந்தி உயிருக்குப் போராடி பிழைக்கிறாள். மீண்டும் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கும்போது தூக்கில் தொங்குகிறாள். பெரியசாமியுடன் ஊரைவிட்டு சென்னைக்கு ஓட முயற்சித்தபோது அவளது தாயால் கடுமையாக தாக்கப்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறாள். ஒவ்வொரு முறையும் சாதிப் பஞ்சாய்த்து கூடும்போது கூட்டத்தில் அவளது தாயால் தாக்கப்படுகிறாள். பாக்கியம் ஊரைவிட்டு ஓட முயற்சித்தபோது பழனியின் சாதிய சமூகம் அவளையும் பெரியசாமியும் அவனது குடும்பத்தையும் அடித்து புரட்டி எடுக்கிறது. பெரியசாமியின் வீட்டை எரிக்கிறது. அவன் குடும்பத்து கால்நடைகளை இரவோடு இரவாக அவிழ்த்து ஓடவிடுகின்றது. பாக்கியம் மீண்டும் ஊரைவிட்டு ஓட முயற்சித்தபோது அவளை அடித்து உதைத்து வாயில் சாணி கரைத்து ஊற்றப்படுகிறது. அவளுடைய தலைமுடி அறுக்கப்படுகிறது. “இதற்குதானே அலையுற” என்று முப்பது பையன்கள் அவளிடம் வேட்டியை அவிழ்த்துக்காட்டி அவளை மானபங்கம் செய்கின்றனர்.
உடலால் பாக்கியம் அனுபவிக்கும் வன்முறைகளைக் காட்டிலும் பாக்கியத்தை அவளது தந்தை பழனியே கொல்ல வேண்டும் என சமூகம் கொடுக்கும் நெருக்குதல்தான் வன்முறையின் உச்சம்.
காதல் என்பது பாக்கியத்தின் உரிமை. அது அவளது விருப்பம் சார்ந்ததும் கூட. ஆனால் அக்காதல் பழனி குடும்பத்திற்கு பிரச்சனையாக மாறுகிறது. சாதியம் தலையீடு வரும்போது சமூகமே அதனை பூதாகர பிரச்சனையாக மாற்றுகிறது. இரண்டு ஊருக்குள்ளும் கலவரம் வெடிக்கின்றது. காதலுக்காக சாதியத்தை மீறும்போது சாதிய சமூகம் அதனை ஏற்க மறுக்கிறது. தன் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருத்தி வேற்று சமூகத்தை சார்ந்த ஒருவனை காதலிப்பது அச்சமூகத்திற்கு பெரும் அவமானமாக இருக்கின்றது. சாதிவெறி பிடித்த சமூகம் தன் சாதிய பெருமையைப் பேசுகின்றது. தன் சாதியே உயர்ந்த சாதியாக எண்ணுகிறது. அதில் கலப்பு ஏற்பட்டால் தன் சமூகம் சோரம் போய்விட்டதாக எண்ணி துடிக்கிறது. சாதிய வன்மம் உள்ளுக்குள் அதிகரிக்க அதிகரிக்க அது கொலைக்கு தூண்டுகிறது. அந்த கொலையைப் பிள்ளையைப் பெத்தவனே செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றது. சாதிய சமூகத்தில் அவன் தொடர்ந்து ஓர் அங்கமாக இருப்பதற்கு அக்கொலையைச் செய்தாக வேண்டும். இல்லாதபோது அவனுக்கு நேரப்போகும் அவலங்களை சொல்லியும், அவமானப்படுத்தியும் ஓர் ஒடுக்கப்பட்ட நிலைக்கு சாதிய சமூகம் அவனை தள்ளும். இதுநாள் வரை தான் பெற்றடுத்த பிள்ளையிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் வேரறுக்கப்படும் தருணத்தில் தன் பிள்ளையே தன் சாதியத்திற்கு எதிரியாகவும் இழுக்காகவும் தெரியும். அடுத்த கணம் அதுவே ‘பெத்தவனைக்’ கொலை செய்ய தூண்டும்.
பெத்தவன் கதையில் வரும் பழனிக்கும் அவன் குடும்பத்திற்கும் கொலைக்கான நெருக்குதல் அளிக்கப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாத பழனிக்கு இருபது ஆண்டுகள் தவமிருந்து கிடைத்தவள் பாக்கியம். தன் மகளை எப்படியாவது தன் வழிக்கு கொண்டுவர நினைக்கும் பழனியின் முயற்சிகள் கைகூடாத நிலையில், மகளை தன் சாதிய சமூகத்திடமிருந்து காப்பாற்ற அவன் உள்ளூர போராடும் நிலை இக்கதையில் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. தன் சாதிய சமூகம் என்னென்ன மாதிரியான வன்முறைகளை நிகழ்த்தும் என இதற்கு முன்பு நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறான். அச்சம்பவங்கள் யாவும் இக்கதையில் இணைக்கப்பட்டுள்ள உண்மை சம்பவங்கள். காதலுக்காக சாதியத்தை எதிர்த்த ஜோடிகள் காதில் விஷம் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது, தங்கள் சாதிய பையனை விரும்பிய தலித் பெண்ணை இருபது பேர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்தது, பெண்ணை தனியாக வீட்டிற்குள் தள்ளி நெருப்பு வைத்து எரித்தது, பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி வீட்டிற்குள் வைத்து பூட்டியது என ஒவ்வொரு சம்பவங்களாக கதையில் வாக்குமூலங்களாக வருகின்றன.
பெத்தவனையே அவன் மகளின் உயிரை எடுக்கச் சொல்லும் வன்மமும், சாதியின் பெயரில் சக மனிதன் மீது செலுத்தப்படும் வன்முறைக்கான அதிகாரமும் எங்கிருந்தது வந்தது என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் சமூகம், இனம், மதம் எல்லாமும் இப்படியான ஓரு கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டவைதான். ஒவ்வொரு அடுக்குகளிலும் அது தன் பெயரை மாற்றிக் கொள்கிறது. ஆயினும் எல்லா அடுக்குகளிலும் தங்களுக்கான வன்முறைகளையும் அவை பதுக்கி வைத்துள்ளன.
சாதிவெறியர்கள் சாதி எதிர்ப்பு திருமணத்தை எதிர்ப்பதற்கு சொல்லக்கூடிய காரணம் மிகவும் வேடிக்கையானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண்கள் தங்கள் சமூகப் பெண்களை ஏமாற்றி காதலித்து, பிறகு திருமணம் புரிந்து அவர்களை சித்ரவதை செய்து பெற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறார்களாம். அதை தடுக்கவே சாதிவெறியர்கள் கலப்பு திருமணத்தை எதிர்க்கிறார்களாம். இது நம்பகமானதாகவும் ஏற்புடையதாகவும் இல்லை. இதன் பின்னணியில் இருக்கும் அரசியலானது, சமூக அமைப்பில் பெண் திருமணத்திற்குப் பிறகு முழுமையாக கணவனின் வழியை ஏற்று பின்பற்றுகிறாள். ஆக, கலப்பு திருமணத்தால் ஆதிக்க சாதியினர் தங்கள் வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். இது சாதிவெறியர்ளுக்கு அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கின்றது. இதன் விளைவானது அவர்கள் தங்கள் சாதியின் இருப்பையும் பெருமையும் தற்காக்க கொலைக்கும் தயங்குவதில்லை. கொடூரமான ஆணவக்கொலைகள் ஒவ்வொன்றும் தங்கள் சமூகப் பெண்களுக்கான எச்சரிக்கையாக மாறுகிறது. அது அவர்களை காதல், திருமணம் என எல்லாவற்றிலுமிருந்து ஒடுக்குகின்றது. இது ஒருவகையான அநீதியும் கூட.
தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக்கொலைகள் அவ்வளவாக வெளிச்சத்திற்கு வராத காலக்கட்டத்தில் எழுத்தாளர் இமையம் அதனை புனைவிலக்கியமாக ‘பெத்தவன்’ படைத்திருந்தார். சில ஆண்டுகள் கழித்து தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடந்தேறிய சம்பவங்கள் யாவும் பெத்தவன் கதையைப் போலவே ஒத்திருந்தது. இளவரசன் திவ்யாவின் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த சமயம் ‘பெத்தவன்’ கதை பரவலாக பகிரப்பட்டது.
2016-இல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த உடுமலை சங்கர் என்பவரை சட்டமுறைப்படி திருமணம் செய்துகொண்டார் கௌசல்யா. கௌசல்யாவின் குடும்பமே அவர்களை ஆள் வைத்து உடுமலை பேருந்து நிலையத்தில் நடத்திய அரிவாள் தாக்குதலில் சங்கர் கொலை செய்யப்பட்டார். கௌசல்யா கடுமையான வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி பின்னர் உயிர்பிழைத்தார். கௌசல்யாவின் குடும்பம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கில் ஆறு பேருக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டது. ஆணவக்கொலைக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் தண்டனையாக இது கருதப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் சாதியத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட ஓசூரை சேர்ந்த நிந்திஷ்- சுவாதி காவேரி ஆற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் என 5 பேர் சேர்ந்து அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் வீசியுள்ளனர். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தியது. சாதியத்திற்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. ஆனாலும் அதிர்ச்சியும் கோபமும் தனியும் முன்னமே மற்றொரு சம்பவம் அதையடுத்து மற்றொரு சம்பவம் என சாதிய வெறியில் ஆணவக்கொலைகள் இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இம்மாதிரியான குரூரங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் போதெல்லாம் ‘பெத்தவன்’ இயல்பாகவே பகிரப்படுகிறது. அதற்கான காரணமாக அமைவது சாதியத்தின் குரூரத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் பதிவு செய்த ‘பெத்தவன்’ ஒவ்வொரு நிகழ்கால சம்பவங்களோடு தன் கதையை நிகழ்த்திக்காட்டி ஓர் ஆவணமாக மாறியிருக்கிறது.
மிக நிறைவு
பெத்தவனை ஆவணமாக வகைப்படுத்த முடியாது. அது ஒரு அற்புதமான, முழுமையான கலைப்படைப்பு.