தீக்கொன்றை

படுக்கைவிளிம்பில் இருந்து அக்காவின் கை நடுக்கத்தோடு விலகி கீழே தொங்கியதில் ரப்பர்விஷால் குழாயில் மருந்து தடைப்பட்டு இரத்தம் மேலேறியது. சுற்றுக்கு வந்த மருத்துவர் அதை சரி செய்து “அவள் உன்னை காப்பாற்றியதாக எண்ணி தேற்றிக் கொள்,” என்று ஆறுதல் கூறிச் சென்றார்.

அதுவரை விட்டுவிட்டுத் தோன்றிக் கொண்டிருந்த அபாயகரமான மூச்சுத் திணறலின், உருவெளி மயக்கங்களின் பிடி அகன்று ஆச்சர்யமூட்டும்படியான திடத்தன்மையுடன் “நான் ஒருதடவை வந்து பார்த்திடுறேன்” என்று சொல்லி படுக்கையை விட்டு எழ முயற்சித்தாள் அக்கா.  நோயில் வெளிரி கோதுமை நிறத்துக்கு மாறியிருந்த அவள் பாதங்களில் முதல் தடவையாக இரத்தம் பாயும் நிறமாற்றத்தை பார்த்தேன். “முதல்ல நீ ரெஸ்ட் எடு”. நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை போன்ற ஒன்று தொற்றி ஏறிய குரலில் அம்மாவும் அப்பாவும் அக்காவிடம் கூறினார்கள். “இல்ல. நான் ஒரு தடவை மட்டும் வந்து பார்த்திடுறேன். அப்புறம் கொண்டு போயிடுவாங்கள்ல?”. அக்கா மீண்டும் அதையே சொன்னாள். ஆனால் இரண்டு கிலோவுக்கும் குறைவான எடையுள்ள அந்த எலும்பும் சதையும் ஏற்கனவே மின்சாரச் சூட்டில் சாம்பலாகியிருந்தன. அப்பாவும் அம்மாவும் மென்மையாக எடுத்து சொல்ல முயன்றபோதும் அச்செய்தியை அக்காவுக்குள் புகுத்த முடியவில்லை. அவர்களுடைய சொற்கள் அரூபமான சுவரில் மோதி திரும்பி வந்தன. அக்காவிடம் காரணமற்று அடம்பிடிக்கும் சிறுமியின் முரட்டுத்தனம் கூடியது. எல்லோரும் கலங்கும்படி “நான் ஒருதடவை மட்டும் வந்து பார்த்திடுறேன்னு தான சொல்றேன்” என்று இறைஞ்சி தேம்பினாள். மீண்டும் மருந்து குழாயில் ரத்தம் ஏறக்கூடும் என அஞ்சி மாமா உடனே செவிலியைப் போய் அழைத்து வந்தார்.

“சொல்ப முந்தே ஓகி” என்று என்னை விலக்கிவிட்டு செவிலி நெருங்கி வந்து ஊசி குத்துகையில் கழுத்தெலும்பின் பிளவு வெளிப்படும்படி கேவலில் திமிறிய அக்கா மெல்ல உறக்கத்திற்குள் சரிந்து விழவும் அறையைவிட்டு வெளியேறி வராந்தாவிற்கு வந்தேன். பச்சை நிற முகமூடி அணிந்து மருத்துவர்கள் குழுவாக எங்கேயோ செல்ல செவிலிகள் மருந்து தட்டுகளோடும் மாத்திரைச் சீட்டுகளோடும் நடைபாதையில் உலவிக் கொண்டிருந்தார்கள். ஓரத்தில் கிடந்த ஆளற்ற சக்கர நாற்காலியிலும் தள்ளு படுக்கையிலும் மருத்துவமனைகளுக்கே உரிய வினோதமான அமைதி தீண்டப்படாமல் படிந்திருந்தது. குழந்தை புகைப்படங்கள் ஒட்டிய மருத்துவமனையின் ரோஸ் நிறச் சுவர்களையே சிறிது நேரம் அர்த்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். உயரமில்லாத கூரை, சுரங்கப் பாதை என வெளிச்சத்தை குறைத்துக் காட்ட சுவர்களின் ரோஸ் நிறத்தில் நிழலின் கருமை படிந்து அது மெல்ல ரத்தச் சிகப்பாக உருமாறத் துவங்கியது. கை வைத்து தொட்டால், ரத்த பிசுபிசுப்பு ஒட்ட கல்சுவர்கள் தசைத் துடிப்போடு அசையக் கூடும் என பிரம்மை எழுந்தது. அதிர்ந்து திரும்பினேன். அப்போது திவ்யாவிடமிருந்து செல்பேசிக்கு அழைப்பு வர அதை எடுக்காமல் துண்டித்தேன்.

வராந்தாவின் முக்கு நாற்காலியில் மாமா சாய்ந்து அமர்ந்திருந்தார்.  எவரும் பதில் சொல்லிவிடமுடியாத கேள்விகளோடு தனித்தமரவும், மதியப்பொழுது ஜன்னல் வழியே தான் மட்டும் பார்க்கக்கூடிய உருவங்களை வடிக்கும் பஞ்சு பொதி மேகங்களையும் சமயங்களில் ஒன்றுமற்ற கண்ணாடி வானத்தையும் யோசனை நழுவ வெறிக்கவும், அந்தியிலும் பின்னிரவிலும் மருத்துவமனைகளில் கூடும் மௌனத்துக்கு அஞ்சி முழங்கால்களில் முகத்தைப் பொதித்து குறுகவும் அவர் கண்டுபிடித்திருந்த இடம் அது. மதியமோ இரவோ அவரை தொட்டுக் கேட்டால் அவர் கிலேசத்துடன் சொல்லக்கூடும். “இதற்கெல்லாம் யாரையுமே காரணம் சொல்ல முடியாது” அல்லது “ஒருவேளை எல்லாவற்றுக்கும் நான் தான் காரணமோ?”. அவரை பார்த்து உடனே தலை திருப்பிவிட்டு அறைக்குள் சென்றேன். அக்கா இன்னமும் மயக்கம் தெளியாது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தாள். நெருங்கிச் செல்லாமல் அறை முகப்பில் நின்றே மெத்தை கட்டிலை நோக்கினேன். அயர்ந்திருந்த அந்த உடலில் அக்காவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. கன்னச் சதை வற்றி உடல் இளைத்திருந்தாள். தலைமுடி காய்ந்து பிசிறாகி நெற்றியில் கலைந்து பரவியிருந்தது. முன்மதியம் முதலாகவே அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர் சொல்லியிருந்தபோதும் மீண்டும் திரும்பிவிடும் என நான் நம்பியிருந்த -இப்போதும் மூச்சடக்கி நம்புகிற-  ஏதோவொன்று  அக்காவிடம் இன்னமும் திரும்பியிருக்கவில்லை.  அரை நினைவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னால் – மருத்துவமனையின் உப்பிய கவுனுக்கு மாறுவதற்கு முன்னால் – கை நரம்பில் ஊசி குத்திய சிவப்புத் தடங்கள் தோன்றுவதற்கு முன்னால் – இரத்தத்தில் ஊடுருவியிருந்த நுண்கிருமிகள் அவள் கண்களிலும் மூச்சிலும் துயர்க் கசிவை ஏற்படுத்துவதற்கு முன்னால் – அவசர பிரசவத்தில் வெட்டி எடுக்கப்பட்ட, அந்த சிறிய உயிர் விடியற்காலை யாரும் பார்ப்பதற்கு முன் தன் சுவாசத்தை நிறுத்தியதற்கெல்லாம் முன்னால் – அக்காவிடமிருந்த ஏதோவொன்று இப்போது மறைந்துவிட்டிருந்தது. அல்லது அச்சமூட்டும் வேறொன்றாக மாறிவிட்டிருந்தது.

நினைவு திரும்பியதும் அக்கா எதையோ கவனத்தில் திரட்டிக் கொள்ள வலியோடு போராடி பின் திகிலடித்து எழுந்து பயத்தோடு பார்வையால் அலைய, அம்மா அவள் தலையை வருடிக் கொடுத்து அமைதிப்படுத்தினார். பின் அவளுக்காக கிண்ணத்தில் உணவிட்டு பிசைந்தார். ஒரே சமயத்தில் அக்காவைக் கண்களில் எதிர்கொள்ளவும், முகம் பாராது வேறுபுறம் திரும்பவும் என்னில் உந்துதல் எழ சத்தம் எழுப்பாது அறையை விட்டு வெளியே வந்தேன். வாசலில் மாமாவும் அப்பாவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். “நான் சொன்னது மட்டும் மாறாம பார்த்துக்குங்க”. மாமா எதையோ அழுத்தி சொல்லிக் கொண்டிருந்தார். நான் பக்கத்தில் போனேன்.

“சரி மாப்ள.” ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டிருந்த அப்பா என் பக்கம் திரும்பி “அப்ப நீ பைக் எடுத்திட்டு பஸ் ஸ்டான்ட்ல போய் வெயிட் பண்ணு. நான் அக்கா வீட்டுக்கு போயிட்டு அங்க வந்திடுறேன்” என்றார்.

புறப்படும் முன்பாக அக்காவைப் பார்க்க அறைக்குச் சென்றேன். தாடையில் எச்சில் ஒட்டி வழிய, வாயிலிட்ட உணவை மென்று உட்கொள்ளத் துணியாமல் “நான் தான் அவளக் கொண்ணுட்டேன்” என்று விக்கிக் கொண்டிருந்தாள் அவள். உள்ளே போக தைரியம் வரவில்லை. படியிறங்கி கீழே வந்தப் பிறகு பைக்கை எடுப்பதற்கு முன்பாக மருத்துவமனை கட்டிடத்தை ஒருமுறை பார்த்தேன். இங்கிருந்து பார்க்க ரத்தம், மருந்துவாடை, கண்ணீர், இழப்பு ஆகியவற்றின் ஒரு தடயமுமின்றி எந்த அழுகுரலும் வெளியே கேட்காது மின்விளக்குகளின் பிரகாசத்தில் நோய்மையின் சாயலே அற்றிருந்தது மருத்துவமனை. சடுதியில் ஓர் ஆம்புலன்ஸ் அலறலோடு வளாகத்திற்குள் விரைந்து நுழையவும் அங்கு உண்டான பரபரப்பில் துணுக்குற்று அதிர்ந்தேன். ஸ்டாண்ட் தட்டி பைக்கை ஆன் செய்தபோது திவ்யாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வர அதை மறுத்து அலைபேசியை அமைதியில் வைத்தேன். சில நொடிகளில் மூன்றாவது தடவையாக வெறும் கேள்விக்குறிகளாக ஒரு குறுஞ்செய்தி கைப்பேசி பெட்டியில் வந்து காத்துக் கிடந்தது.  என்ன கேட்பது என அவளுக்கே தெரியாமல் இருக்க வேண்டும்.

பாதையோரத்து பூமரங்களின் எல்லா வண்ணங்களையும் இரவு போர்த்தி மறைத்திருந்தது. இருட்டில் அலையும் ரகசிய கண்கள் போல் ஆப்பிரிக்க டியூலிப்கள் மட்டும் மங்கலாக ஒளிர, சாலைகளில் ஓடும் நூறு ஜோடி முகவிளக்குகளில் நகரம் துரிதமாக அசைந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதற்குள் சுழல்வட்டமாக வளைந்து மேலேறிய பயணிகள் நடைமேடையில் ஏறி அப்பாவுக்காகக் காத்து நின்றேன். பேருந்துகள் கொம்பொலிகளோடு வெட்டி திரும்பியும் வெடுக்கிட்டு முன்னேறியும் டீசல் கலந்த காற்றின் நொதித்த வாடையில் உறுமலோடு அணைந்து நின்றபடியுமிருந்தன. உயரத்தில் நின்று காணும்போது சக்கரங்களை வழிநடத்தி விசில்கள் இரைந்த அச்சூழலே மிருகங்கள் மாட்டிக் கொண்டு உழலும் குழிப் போலிருந்தது. எனினும் எல்லா வண்டிகளும் ஒருவழியாக தப்பித்து வெளியேறியவாறும் இருந்தன. நடைமேடையின் இடதுபுற சரிவு முனையில் சின்ன இடைவெளிகளோடு மூன்று பெண்கள் புதிரான சமிக்ஞைகளோடு நின்றிருந்தனர். ஆண்கள் குறுகுறுப்போடும், கண்கள் இடுங்கிய அழுத்தத்தோடும் அவர்களிடம் சென்று பேசுவதும் விலகுவதுமாக இருந்தார்கள். அந்த மூவரில் ஒரு பெண் உடுத்தியிருந்த சிவப்பு சுடிதார் இருளில் மலரிதழ் போல் நெளிவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுடிதாரின் கீழ்பகுதி காற்றில் ஆடியபோது அது உருமாறி ஊதி பெருகும் தணலாக தெரிந்தது. கங்குத் துண்டமென எரிந்து ஒளிர்ந்தது. திடீரென்று அந்தப் பெண் அங்கிருந்து என்னை தேடி எதிரே வருவதாக ஒரு கற்பனை தோன்ற நான் பதறி அகன்றேன். அப்பா மறுமுனையில் படியேறி வந்துக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிச் சென்று பக்கத்தில் இருந்த பேக்கரிக்கு அழைத்துச் சென்றேன்.

“எஸ்டூ?”

“இப்பத்து”. தேநீருக்கு பணம் கொடுத்துவிட்டு இருவரும் பேருந்தில் ஏறினோம்.

watercolor-art-of-my-hospital-bed-nr-13-1990.jpg!Largeபேருந்து புறப்பட்டு இரவுக்குள் நுழைந்து சீராகச் செல்லவும் அதன் லயத்தில் எல்லாமே கட்டுப்பாட்டில் இருப்பதான சமாதானம் உண்டானது. ஆனால் கண்களை மூடிய உடனேயே குழப்பமும் பதற்றமும் மிக்க பழைய யோசனைகளும் காட்சிகளும் மனதில் அங்கங்கு திறந்து கலவையாக பரவ ஆரம்பித்தன. ஒரு மாதமாக  அப்பா, அம்மா, மாமா என வீட்டில்  எல்லோருடைய பேச்சிலும் சொற்கள் குறைந்து கொண்டே வருவதும் எல்லோருடைய முகமும் துயரத்தில் ஒரே மாதிரி உலர்ந்து வெடிப்புற்றதாய் மாறுவதும் ஞாபகத்தில் ஓடியது. அம்மா அழாத நாளென்று ஒன்று இருக்கவில்லை. வெள்ளை தாடியில் அப்பாவின் வயதை நான் தினமும் மனதில் கணக்கிட்டு கொள்ள வேண்டியிருந்தது. மாமாவையோ கணிக்கவே முடியவில்லை. கன்னங்கள் ஒடுங்கியதால் கண்கள் சற்று பிதுங்கிய அக்காவின் முகம் மட்டும் தனியே வெட்டி மறைய வலிந்து மனவோட்டங்களை நிறுத்தினேன். தொடர்ந்து  தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே என் சுயநினைவு இளகி பிரிந்தது. தொலைவில் நிலைத்திருந்த முழு நிலவைக் கனவா யதார்த்தமா என்று அறிய முடியாத காட்சி வெளியில் கண்டேன். பேருந்து ஓசையும் ஜன்னலில் எதிர்பட்டு பாயும் மற்ற வாகனங்களின் சத்தமும் அடங்கி மறைந்தபோது சூழல் குழம்பிய ஒரு திடுக்கிடல்.

நான் திரும்ப மருத்துவமனையின் ரோஸ் சுவர்கள் நடுவே இருப்பதை அறிந்தேன். தாய்க் கொடியறுத்து இரத்தம் கழுவி துடைத்த சிசுவை துணியில் பொதித்து இன்க்யூபேட்டருக்குள் கிடத்தியிருக்கிறார்கள். கண்ணாடி தடுப்புக்கு மறுபுறம் இருந்து பார்க்கிறேன். வெளிச்சம் படாத அதன் மென்சிவப்பு நிறமும் இன்னும் முழுக்க உதிராத மிருதுவான உடல் ரோமமும் தோல் சுருங்கிய விரல்களும் தத்தளிப்பை ஏற்படுத்துகின்றன. மார்புச் சூட்டுக்குள் அடங்கிவிடக்கூடிய இச்சிறு உடலை நான் முன்னமே அறிவேனா? அப்போது சிசுவின் வயிறு உயர்ந்து அடங்க சிலிர்ப்பில் நடுக்கம் எழுந்து சட்டென நான் எவ்வுடலில் இருக்கிறேன் என்பதே குழப்பமாகிறது. என் மூக்கிலும் வாயிலும் மருந்து குழாய்கள். துடிதுடிப்பில் சிகிச்சை பிரிவை விட்டு அகலும்போது அருகில் மாமா நின்றிருப்பது தெரிகிறது. மாடிவழி ஆளரவமின்றி நீண்டுக் கிடக்க பிரசவப் பகுதியின் அறைகள்தோறும் பசியாலான குழந்தைகளின் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மொக்கு இதழ்களுக்குள் அள்ளி அள்ளி புகட்டப்படுகிறது பால்.  குட்டி குட்டியான மனித மூளைகள் “உண்!உண்!” என அலறுகின்றன. குழந்தைகளின் வயிற்றில்  அந்த அழியா நெருப்பு திறக்கிறது. என் காதுகளில் ஒரு அந்நியக் குரலின் உச்சாடனம். “இந்த  இருபத்தைந்து வருடங்களில் எத்தனை லட்சம் உணவுக் கவளங்கள் உனக்குள் சென்று நெருப்புக்கு அவியாகி கையிடை கருப்பை உடலை இதுவரை வளர்த்து வந்திருக்கின்றன? பழுக்காத கனிகள், இனிப்பு பண்டங்கள், இருள்நிற சாக்லேட்டுகள், ரகசியங்கள், ஆசைகள், குற்றங்கள் என எவற்றையெல்லாம் அவசர அவசரமாக நீ உண்டு வளர்ந்தாய்?”. திகட்டி கொப்பளிக்கிறது உள்ளே என்னவோ. போதும் போதும்; இல்லை கடைசியாக இன்னும் ஒரேயொரு கடி என்று கேட்கிறது உள்ளே எரியும் நெருப்பு. அவ்வளவையும் இன்க்யூபேட்டரில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையும் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு பிடியாய் உண்ண வேண்டும் என விருப்பம் பெருக மீண்டும் சிகிச்சை பிரிவு நோக்கி ஓடுகிறேன்.

வேகத்தடையொன்றில் பேருந்து இடித்து துள்ளியதில் முகம் ஜன்னல் கம்பியில் மோத, வானம் பிரம்மாண்டமான கருப்பு உருவமாக உருண்டு வந்து பிரக்ஞையில் அறைந்தது. தலையைத் தடவி நிதானித்தேன். வான் எல்லையில் நிலவைச் சுற்றி நெருப்பு முனைகள் அசைந்து கொண்டிருந்தன. குளிர்ந்த வெள்ளை பரப்புக்குள் எங்கோ எரிந்து கொண்டிருந்த நெருப்பு மேற்தோலை பிளந்து வெளிவந்தது போல், நிலவை செம்மஞ்சள் திரை மூடியிருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்து செல்பேசியை எடுத்து பார்த்தேன். திவ்யாவிடமிருந்து நான்கு அழைப்புகளும் ஆறு குறுஞ்செய்திகளும் வந்திருந்தன. பதில் அனுப்பும் எண்ணம் வரவில்லை. எல்லா நிகழ்வுகளுமே அபத்த முரண்களாக தோன்ற ஆரம்பித்தன. பேருந்து ஜன்னலில் மின்கம்பங்கள் வேகமாக பின்னால் ஓட, குளிரில் கனத்த வாடைக் காற்றில் அலைவுற்ற மனம் கையறு நிலைப் பூண்டு கால இட ஞாபகம் இழந்து இன்க்யூபேட்டரோடும் தகன அறையோடும் மருத்துமனை வராந்தாவோடும், கூடவே மிகப் பெரிய ஒன்றுமற்றத்தோடும் போராடலானது. சரித்து புரட்டியது ஆற்றாமை. பக்கத்தில் உறங்கும் அப்பாவைப் பார்த்தேன். அவர் முகம் அமைதியின்மையில் சோந்திருந்தபோதும் அதன் அணுக்கம் சற்று பாதுகாப்பு அளித்தது. இன்றிரவு தொலைந்துவிட மாட்டேன் என்பதுப் போல்.

கடைசி ஞாபகம் கவனத்தில் பதியும் முன்பே தூக்கம் தலையைச் சுற்றி அழுத்தியதில் காலை ஊரில் இறங்கியபோது ஏற்கனவே பொழுது விடிந்து வெயில் ஏறிக்கொண்டிருந்தது. எங்கள் சொந்த ஊரிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனையில் ஒரு வாய்ப்பு இருப்பதாக அப்பா சொல்லியிருந்தார். வீட்டுக்குச் சென்று குளித்து தயாராகி புறப்பட்டோம். நண்பனிடம் பைக் வாங்கி அப்பாவைப் பின்னால் ஏற்றிக் கொண்டேன். புழுதியடிக்கும் மதிய வெயிலின் கூசும் மஞ்சளன்றி எங்கும் வேறெந்த நிறத்தையும் பிரித்தறிய முடிவில்லை. தார்ச் சாலைகளில் கானலாடியது. இரு புறங்களிலும் அவ்வப்போது தோன்றும் குப்பைமேடுகளையும் பால்செடிகள் மண்டிய வெட்டவெளிகளையும் ஊடுருவியபடி பைக்கை ஓட்டிச் சென்றேன். காற்று வெம்மை முகத்தைத் தீண்டும்தோறும் கன்னம் பொத்து பொத்து எரிய, மூடப்பட்டிருந்த ஒரு பெட்ரோல் நிலையத்தின் பக்கத்தில் இருந்த அரசு மருத்துவமனையைத் தூசியப்பிய உடலோடு நாங்கள் சென்றடைந்தோம். கழிவு நீர் தேக்கத்தை ஒட்டி வேப்பம்பூக்கள் சிதறிக்கிடந்த பாதையில் மண்ணோடு செருப்புகளை தரைத்தபடி வேகமாக நடந்தார் அப்பா. வியர்வை பெருகிய முகத்தை கைக்குட்டையில் துடைத்தவாறு அப்பாவைத் தொடர்ந்து தடுப்பூசி விழிப்புணர்வு சுவரொட்டிகள் மிகுந்த கட்டிடத்தை நோக்கி நானும் நடந்தேன்.

நாங்கள் தேடி வந்த நபர் சுத்தமான வெள்ளை சட்டையும் அழுக்கு படிந்த வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தார். “இங்க இப்ப எதுவும் இல்ல சார். ஆனா பிரைவேட் ஆஸ்பிடல் கேஸ் ஒன்னு வேற இடத்துல இருக்கு”. அவர் வழி காட்டி துணை வரவும் அங்கிருந்து ஏழு கிலோமீட்டர்கள் பயணித்து கருப்பு நாய் காவலிட்ட தெருவை நாங்கள் அடைந்தோம். “நீங்க அவங்ககிட்ட அமௌண்ட் பத்திலாம் எதுவும் பேசாதீங்க. அதுலாம் டாக்டர் பார்த்துப்பார். மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்ல. காலேஜுக்கு படிக்கப் போன பொண்ணு இந்த மாதிரி ஆகிடுச்சு. இங்கதான் தனியா வீடெடுத்து அவங்க அப்பா அம்மா பார்த்துக்கிட்டாங்க” குரல் தாழ்ந்தது. “பையன் ஊரவிட்டே ஓடிட்டான். பொண்ண இவங்க நல்லா சாத்தி எடுத்திட்டாங்க.”. பாலிதீன் பைகள் கொட்டிக் கிடந்த குறுகலான சந்தின் முடிவில் இருந்தது அந்த வீடு. பெண்ணுடைய தந்தை எங்களை கூடத்தில் அமர வைத்து பேசினார். நாற்காலிகள் அன்றி வேறு பொருட்களே இல்லாமல் அலமாரியில் ஓடும் அணிலோடும் சுவர் இடுக்கில் புற்றுக்கட்டிய எறும்புகளோடும் இருந்த அவ்வீடு ஒவ்வொரு சொல்லையும் தன் மூலைகளில் எதிரொலித்தது. அக்காவின் நோய் குறித்தும்  இறந்த குழந்தை குறித்தும் மிகுந்த அக்கறையோடு அவர் விசாரிக்கலானார். அவரும் அவர் மனைவியும் தங்களை பற்றிய பேச்சு எழாமல் இருக்கவே தொடர்ந்து கேள்விகளாக கேட்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது கஷ்டமாக இல்லை.

தலைக்கு மேல் உராய்ந்து சுற்றிய மின்விசிறி எதையோ விடாப்பிடியாக மறுத்துக் கொண்டிருப்பதை கவனித்தவாறு, வெக்கை காற்றின் தணல் கொட்டி அவியும் உடலோடு வியர்வை ஈரத்தில் ஒட்டிய சட்டையின் கசகசப்பில் நெளிந்து கொண்டிருந்தேன். பெண்ணின் அம்மா பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து அளித்தார். சட்டையில் சிந்திய நீரின் குளிர்ச்சியில் சின்னதாக ஆசுவாசம் அடைந்தபோதுதான், சிறுகால்கள் தொங்கிய உள்ளறையின் தூலி எதேச்சையாக கண்களில் விழுந்தது. வெளியே கேட்காத இசையின் மெல்லிய லயம் என முன்பின் சென்றுக்கொண்டிருந்த கால்களைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தூலியை ஆட்டிக்கொண்டிருந்த கைகள் திடுமென செயலற்று நின்று குழந்தையை அள்ளி உள்ளறைக்குள்ளேயே எங்கோ தூர கொண்டுச் சென்றன. அல்லது பறித்து மறைந்தன.

அந்த அசைவு என்னை நரம்பில் சுண்டியது. மற்றவர்கள் குழப்பமாக பார்ப்பதை கவனித்ததும்தான் தன்னுணர்வில்லாமலேயே எழுந்து நின்றிருப்பது உணர்ச்சியில் புலப்பட்டது. “போன் வருது” என்று சமாளிப்பாக சொல்லி செல்பேசியை மறைத்து பிடித்தபடி அங்கிருந்து அகன்றேன். ஆனால் வெளியே வந்ததும் உண்மையிலேயே மாமாவிடமிருந்து அழைப்பு வந்தது. வியர்வையில் முங்கிய கைக்குட்டையால் உடலைத் துடைக்கவே அசூயை எழ, ஈர உப்பு படிந்த காதில் அசௌகரியத்தோடு செல்பேசியை வைத்து பேசினேன். இன்று மாலை அக்கா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதாக கூறிய மாமா பட்டென எச்சரிக்கும் தொனியில் பேசினார். “ஏற்கனவே சொன்னதுதான். ரெண்டு விஷயம் முக்கியம். ஒன்னு, காசு கொடுத்து வாங்கிட்டு வரக்கூடாது. இரண்டாவது, குழந்தையோட அம்மாவுக்கு அதுல முழு உடன்பாடு இருக்கனும். புரியுதா?”. மாமாவின் குரல் அச்சுறுத்த, கூடவே சமீபமாக அவரையே வெவ்வேறு மனிதராக கண்டுபிடித்துக் கொண்டிருப்பதும் நினைவில் தட்டியது. அவர் கேட்டுக் கொண்டதில் ஒரு நிபந்தனைக்கு மட்டும் நிச்சயமான பொய்யை சிரமத்தோடு மாட்டிக்கொள்ளாதவாறு கூறி அழைப்பிலிருந்து விடுபட்டேன்.

எதிரே மஞ்சள் பொழிந்து நிறைந்திருந்தது. வெயிலின் நெருப்பு ஜூவாலையில்an-abstract-watercolor-painting-in-blue-red-and-yellow-In-the-Loop-story-NN-version-of-the-original-1024x576 கட்டிடங்களும் செல்பேசி கோபுரமும் மின்சார கம்பிகளும் காய்ந்து முறுகிக் கொண்டிருந்தன.  துளி நீர் பட்டால்கூட எங்கும் பொசுங்கும் சப்தத்தை கேட்கலாம் என்று பட்டது. என்னுடலே ஒரு பெரிய சூட்டுக்கோல் என அனலில் கனல்வதாக உணர்ந்தேன். இப்போது என்னை தொட்டு இழுத்தே  யாரையும் தழும்பு நிலைக்க காயப்படுத்திவிட முடியும் என்று தோன்றியபோது திவ்யாவின் வலதுகை மணிக்கட்டில் உள்ள மங்கிய தையல் தடம் மனதில் பரவியது. அனிச்சையாக அலைபேசியை எடுத்து திவ்யாவுக்கு அந்த முதல் குறுஞ்செய்தியை அனுப்பினேன். யாரோ புலப்படாத ஒருவரை பழி வாங்கும் வேகம் என்னை யோசிக்கவிடாமல் உந்த அதே வேகத்தில் அடுத்த குறுஞ்செய்தியையும் அனுப்பினேன். அவளை குழப்பக்கூடிய சொற்கள் அவை. அவளுக்கு எதுவும் புரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால் நிச்சயம் வலி மட்டும் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். எனினும் எனக்கும் வேறு வழி தோன்றவில்லை. பாதுகாப்பான ஒன்றை கைவிடவோ அல்லது மூர்க்கத்துடன் உடைக்கவோ வேண்டும் எனும் நிர்பந்தம் என்னை இறுக்கி அழுத்திக் கொண்டிருந்தது.

வெயில் இன்னும் அதிகமாகி தார்ச்சாலை கருமையில் மின்ன, நான் வெளிச் சுவரின் மெலிந்த நிழலில் ஒண்டினேன். ஆயிரம் துளைகளிட்டு வெப்பம் தலைக்குள் இறங்க முருங்கை மரத்தின் டயர் ஊஞ்சலில் காகம் தனித்து அமர்ந்திருக்கும் இந்த நிலமே வானை நோக்கி பிளந்து கிடக்கும் ஆறாத தீக்கொப்பளம் என்றும் இங்கிருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்றும் மனம் உறுத்த ஆரம்பித்தது. திவ்யா என் செய்திக்கு மறுமொழி அனுப்பியிருந்தாள். “நீ சோர்வில் குழம்பியிருக்கிறாய். உன்னை கடைசியாக ஒரு இனிய கனவு எழுப்பி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன”. நான் மீண்டும் வீட்டுக்குள் போனபோது அப்பா அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். “எங்க மாப்ள தங்கமானவரு. சம்பந்திங்ககிட்ட பொண்னோட நோய் பத்தியோ குழந்தை தவறுனது பத்தியோ இதுவரைக்கு சொல்லல…” சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு எச்சில் விழுங்கி இளகிய குரலில் கேட்டார். “குழந்தை ஆணா பொண்ணா”

அப்பா, அலைபேசியில்  தன்  தங்கையை கூப்பிட்டு வரவழைக்க அன்று மாலையே ஒரு வாடகை கார் பிடித்து மூவருமாக குழந்தையோடு ஊரைவிட்டு கிளம்பினோம். முதல் கதிர் எழுந்து பனி ஈரம் கலைகையில் நாங்கள் மாநிலத்துக்குள் நுழைந்துவிட்டிருந்தோம். முன்மதியத்தில் வண்டி நகரத்தை எட்டியது. அக்காவின் வீட்டுக்கு செல்லாமல் நான் மட்டும் பேருந்து நிலையத்திலேயே இறங்கிக் கொண்டேன். எனக்கு முன்னால் கார் தெருமுனையில் ஒடிந்து விலகியபோதுதான் பசியும் அச்சமுமான வீறிடலாகவும் பால் வாசமாகவும் அல்லாமல் குழந்தையை உடலாக பார்க்கவே இல்லை என்பது உரைத்தது.

“வாட்டர் பாக்கெட் ஒந்து கொடி”. டீக் கடையில் ஒரு தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தை கழுவ, குளிரில் கண்ணெரிச்சல் முதலில் கூடுதலாகி பின் தணிந்தது. வாகன நிறுத்துமிடத்துக்குச் சென்று பைக்கை எடுத்து வந்தேன். பாதை அறிந்து பைக் தன்னியல்பில் போகவும் நெஞ்சிலிருந்து ஒவ்வொரு எடைக்கல்லாக இறங்கி உடல் லேசானது. வெயிலுக்கடியிலும் சதா இமையசைக்கும் குளிரும் அதன் மென்துயருமாக நகரம் என்னை தன்னுள் இழுத்துச் சென்றது. சாலையோரத்து மரங்களில் தங்க ஆரங்களாக மஞ்சள் பூக்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஜக்கரந்தாக்களில் சாதுவான  மலர்ச்சி. சற்றை பொழுதில் சீதோஷ்ணம் மாறி வெயில் தடமின்றி மறைந்தது. நீலம் அழிந்த வானம் வெள்ளி மினுங்கலுடன் சாம்பல் பூசிய குளிர்ச்சியில் தாழ்ந்து பரவுவதை கவனித்தேன். அக்கா வீட்டுத் தெருவில் வரிசையாக தீக்கொன்றைகள் பூத்து நின்றிருந்தன. நீண்டச் சாலையின் இருமருங்கிலும் இலைகள் மேல் விரிந்த சிகப்புத் தோகைகள். கண்ணெல்லாம் செம்மை படிய நிழல்களில்கூட சிகப்பு சாயம் வழிவதை பார்த்து அதிர்ந்தபடி வண்டி ஓட்டினேன். மர உச்சிகளில் மலர்க் கொத்துக்கள் தளும்ப மனிதத் தடமற்றிருந்த அச்சாலையே வேறு காலத்தில் அல்லது வேறு யதார்த்தத்தில் இருப்பதுப் போல் ஒரு விசித்திர எண்ணம் உருவானது. வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி இருக்கையைவிட்டு இறங்காமல் தலையை மட்டும் திருப்பி நோக்கியபோது கொன்றை மரங்களின் சிகப்பு கூந்தல் வான் முகட்டில் தழலாக எழுந்து பரவுவதை கண்டு திடுக்கிட்டேன். நகரின் சில்லிடும் கரங்களுக்கு நடுவே தீ என அம்மலர்கள் துடித்தன. வெளியே அவ்வளவு சிகப்பு மூள உள்ளே எவ்வளவு எரிந்துகொண்டிருக்க வேண்டும்? பைக்கை ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். கூடத்தில் யாரும் இல்லை. படுக்கையறையில் இருந்துமட்டும் வேறுபடுத்த முடியாத சன்னமான குரல்கள் ஒன்று கலந்து வர அத்திசையில் நடந்தேன். நான் நெருங்கவும் என்னை கவனித்து அம்மா படுவிரைவாக கதவை மூடி அறைந்தார். கதவு இடைவெளியில் துண்டுக் காட்சியாக முலை முட்டும் குழந்தையைக் கண்டு நான் திரும்பி பார்க்காமல் வாசலுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் எண்ணங்கள் அடங்கிய அமைதி காற்றுக் குமிழ் என கால்களில் வளர்ந்து அணைத்து மூடியது. அப்போது சாலை இறக்கங்களில் பட்டுப் போல் மலர் இதழ்கள் உதிர்ந்து கிடப்பதை கண்டேன். பூக்குவியல்களோடு குளிர்ந்து நின்றிருந்த தீக்கொன்றைகளை தலையை உயர்த்தி பார்த்தபோது இம்முறை தோன்றியது – இவை முக்கிய சாட்சியங்கள் என்று. இவை எக்கணமும் பேச ஆரம்பிக்கலாம் என்று.

முன்னால் நடந்து தரையில் கிடக்கும் மலரிதழ்களை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே திவ்யாவிடமிருந்து மறுபடியும் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
*

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...