அண்மைய காலமாக வல்லினம் மற்றும் இளம் எழுத்தாளர்கள் பலர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிவருவது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இதன் அடிப்படையில் அதன் தலைவர் பெ.ராஜேந்திரன் ‘நம்நாடு’ தினசரிக்கு உண்மைகளை மறைக்கும் வகையில் ஒரு நேர்காணல் வழங்கினார். அதற்கான எதிர்வினையாக வல்லினம் வழங்கிய மறுப்பு கட்டுரை.
இயக்குநர் சேரனும் ஒரு லட்சம் ரூபாயும்
(31.3.2012) வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நாவல் போட்டி பரிசளிப்பு விழாவிற்கு சேரனை அழைத்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ள சேரன் ஏற்பாட்டாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். (அப்போதுள்ள நாணய மதிப்பு படி 6000.00 ரிங்கிட்) இங்கு வந்து பார்த்த சேரன், மலேசியர்கள் தமிழை வாழ வைக்க போராடுகின்றனர் என அறிந்து பணம் வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏற்பாட்டாளர்கள் தர இருந்த 6000 ரிங்கிட்டை வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.’
இது தொடர்பாக வல்லினம் எழுப்பிய கேள்வி மிக அடிப்படையானது. ஒரு நிகழ்வைத் திறந்துவைக்க சங்கம் ஒரு நடிகருக்கு 6000 ரிங்கிட் வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? அந்தப் பணம் ஏன் நம் நாட்டு எழுத்தாளர்களுக்குப் பயன்படக்கூடாது? வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட பணம் யாருடையது? அது சங்கத்தின் பணம் என்கிற பட்சத்தில் அது மக்கள் பணமாகிவிடுகின்றது. எழுத்தாளர்களைக் காட்டி அரசிடமும் நன்கொடையாளர்களிடமும் பெறப்பட்ட பணம். அவ்வாறு இருக்க, அதை சங்கம் ஒரு நடிகருக்குத் தர என்ன உரிமை உண்டு என்பதுதான். ஆனால் இந்தக் கேள்விக்கு ராஜேந்திரன் தனது நேர்காணலில் பதில் சொல்லவில்லை என்பதே உண்மை. மிக லாவகமாக நழுவியுள்ளார். அதாவது கடந்த காலங்களில் தனியார் தொலைக்காட்சியின் அன்பளிப்புகள் குறித்து கூறி மழுப்புகிறார்.
ராஜேந்திரன் சொல்வதுபோல தனியார் தொலைக்காட்சி நிறுவனம்தான் அனைத்துக்கும் பொறுப்பு என்றால், ஒரு லட்சம் ரூபாய் தர முன்வந்ததும் அந்த நிறுவனம்தான் என ராஜேந்திரன் சொல்லவேண்டும் அல்லவா? ஆனால் அந்த நேர்காணலில் அவர் எவ்விடத்திலும் அவ்வாறு சொல்லவில்லை. எழுத்தாளர் சங்கம் பணம் தர முன்வரவில்லை என்றால் அத்தொகையைக் கொடுக்க முன் வந்தது தனியார் தொலைக்காட்சி நிறுவனமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுபோல ஒரு காட்சியை ஏற்படுத்த முயல்கிறார். அதை வெளிப்படையாகச் சொல்ல அவருக்கு என்ன தயக்கம்? அதே வேளையில் அவர் குறிப்பிடும் தனியார் தொலைக்காட்சி இப்பணத்தை வழங்க எவ்வித முடிவெடுக்காத பட்சத்தில் எழுத்தாளர் சங்கம் தனியார் தொலைக்காட்சி நற்பெயருக்கு கலங்கம் வரும் வகையில் பேட்டிக் கொடுத்திருப்பதையும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
தமிழக ஆதரவும் சாதனைகளும்
வல்லினம் தொடர்ச்சியாகக் கண்டித்து வரும் விடயங்களில் ஒன்று தமிழக ஆதரவை எதிர்ப்பார்த்தல். சங்கத்தின் தலைவர் மீண்டும் மீண்டும் அது குறித்து மட்டுமே பேச முனைகிறார். அடிப்படையில், 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடும் ஒரு எழுத்தாளர் சங்கம், ஒரு வெற்றி பெற்ற சினிமா முதலாளிக்கு விருது வழங்க தன் மேடையை பயன்படுத்திக் கொண்டதே மிகப்பெரிய அபத்தம்தான் என்பதை தலைவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை
பயிற்சி ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களும் பயிற்சி கொடுத்தோம், அவர்களை அங்கு அழைத்துச் சென்றோம் என்பதெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் பசித்தவர்களுக்கு ஏன் உணவிடவில்லை எனக்கேட்டால் நான் பிச்சைக்காரர்களுக்கு வருடம் தோறும் கெ.எப்.சி (KFC) கொடுப்பேன் என சொல்லும் கதைதான் இதெல்லாம்.
கல்வி நிறுவனங்கள் எளிதாக செய்யக்கூடிய வேலையை இவர் தான்தான் செய்ய முடியும் என்பது போல் பேசுவதாலெல்லாம் எங்கள் கேள்வி திசை மாறப்போவதில்லை. நாங்கள் எப்போதுமே முன்வைக்கும் அடிப்படையான கேள்வி இத்தனை ஆண்டுகால பயணத்தில் எத்தனை புதிய எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளீர்கள்? அந்தப்புதியப் படைப்பாளிகள் உருவாக்கிய பிரதிகள் எங்கே என்பதுதான்.
தமிழக அறிஞர்களை இங்கு அழைத்து வருவது குறித்து நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், வைரமுத்துவின் பாடல் தொகுப்புக்கு இங்கு நூல் வெளியீட்டு விழா நடத்துவது என்ன நியாயம் என மட்டுமே கேட்கிறோம். இதை ஒரு தனியார் நிறுவனம் செய்யும் போது அதில் நமக்குச் சிக்கல் இல்லை. ஆனால், அரசிடம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் நலனுக்காகப் பணம் பெற்ற சங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை மட்டுமே நாங்கள் கண்டிக்கிறோம். எனவே மிக விரைவில் தமிழ் நாட்டு கலைஞர்களுக்காக மலேசிய அரசிடம் மானியம் பெறும் சங்கத்தின் நடவடிக்கைகளை அரசின் பார்வைக்குக் கொண்டுச்செல்லவும் திட்டமிட்டுள்ளோம். இது நிகழ்ந்தபின் அரசு மானியங்கள் தடைப்பட்டால் அதற்கு வல்லினம் பொறுப்பேற்காது. எனவே சங்க செயற்குழு உறுப்பினர்கள் இந்தச் சிக்கலுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
நாங்கள் இங்கு வாதிடும் விடயம் எங்களுக்கானதல்ல. இந்நாட்டு மூத்த இலக்கியவாதிகளுக்கானது. அவர்களின் நூல்கள் இந்நாட்டில் எந்தச்சிக்கலும் இல்லாமல் வெளிவர வேண்டும். அதற்குரிய வெளியீடுகள் நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிமத்தொகை கிடைக்க வேண்டும். காலம் முழுதும் இந்நாட்டில் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைத்த சீனி நைனா, காரைக்கிழார், முரசு நெடுமாறன், அ. ரெங்கசாமி, சை.பீர்முகம்மது, சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான், கோ.முனியாண்டி, பொ.சந்தியாகு, முத்தம்மாள் பழனிசாமி, கா.பாக்கியம் உள்ளிட்ட படைப்பாளிகள் தங்கள் வாழும் காலத்தில் தங்கள் படைப்புகள் முழுவதும் நூலுருவாக்கம் பெற சங்கம் முயலவேண்டும். எழுத்தாளன் தன் முயற்சியால் மட்டுமே நூல் வெளியிட்ட காலமெல்லாம் போதும். படைப்பாளியின் வேலை படைப்பது மட்டுமாக இருக்க, படைப்பை மக்கள் மத்தியில் கொண்டுச்செல்லும் பொறுப்பை சங்கம் ஏற்றால் என்ன? வைரமுத்துவின் நூல்களை வாங்க பெரும் கூட்டத்தை திரட்ட முனைகிற சங்கம் ஏன் அதற்கான உழைப்பையும் பணத்தையும் நாட்டில் இருக்கின்ற மூத்தப் படைப்பாளிகளின் படைப்புகள் அச்சாக முனைப்புக் காட்டக்கூடாது என்பதுதான் கேள்வி.
இந்த இடத்தின் ஒரு விடயத்தை நினைவு கூறலாம். ஒரு முறை சை.பீர் முகம்மதுவுடன் எழுத்தாளர் சங்க தேர்தலில் நின்ற ராஜேந்திரன் தன் தேர்தல் பிரச்சாரமாக, தான் வென்றால் இனி நூல்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பப்படும் என பிரசாரம் செய்தார். அந்தக் காரணத்தால் அவர் தேர்தலில் வெல்லவும் செய்தார். வென்றப்பின்னர் அது சாதாரண அரசியல் வாக்குறுதியாக மாறியது. சொல்லப்பட்ட திட்டம் அமுலாக்கப்படவே இல்லை. இவ்வாறு ‘எதிர்க்காலத்தில்’ என சங்கத்தலைவர் முழங்குவதெல்லாம் சந்தேகத்துக்குறியது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகச் சினிமாவும் உலக ஆதரவும்
கடைசியாக ராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தை மலேசிய நடிகர் சங்கமாகவும் மாற்ற முயல்வதாகவே புரிகிறது. அதாவது அபிராமி ராமநாதன் எனும் பெரும் செல்வம் படைத்த தியேட்டர் உரிமையாளருக்கு எழுத்தாளர் சங்க பொன்விழா நிகழ்வில் சிவாஜி கணேசன் மன்றம் விருது கொடுத்ததால் மலேசியத் திரைப்படத்துறை வளர்ந்துவிடும் என்கிறார்.
நமது திரைப்பட உலகம் தமிழகத்தோடு முடிந்துவிட வேண்டுமா என்ன? இன்று மொழி கடந்து நாடு கடந்து ஈரான், ஜப்பான் மற்றும் லத்தீன் அமெரிக்க திரைப்படங்கள் உலகம் முழுக்க திரையிடப்பட்டு உலகளாவிய விருதுகளைப் பெறுகின்றன. இன்று மலேசிய திரைத்துறையில் இயங்கும் இளம் இயக்குனர்களின் கனவுகள் மிக உயர்ந்தவை. தமிழகத்தை அவர்கள் நோக்க வேண்டிய அவசியமே இல்லை. அதை அவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இலக்கியத்திலும் பிற கலை படைப்புகளிலும் நமது அடிமை புத்தி தமிழ்நாட்டை மட்டுமே அண்ணாந்து பார்த்தபடி உள்ளது. எப்போது நாம் அந்த அடைப்பிலிருந்து வெளிப்படுகிறோமோ அப்போதுதான் நமக்கான வானம் விரிந்துள்ளதை உணர்வோம். இதற்கு மிக அண்மைய உதாரணமாக இயக்குனர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படத்தை எடுத்து கொள்ளலாம். மலேசியா, பர்மா (மியன்மார்) மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், நோர்வே-யில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையீடு கண்டது. இவ்வருடம் நவம்பர் மாதம் வெளியீடு காணவுள்ள இப்படம், மலேசியாவை தவிர்த்து சிங்கப்பூர், பர்மா, ஸ்ரீ லங்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் திரையீடு காணவுள்ளது. ‘வெண்ணிற இரவுகள்’ படப்பிடிப்பின் போதே இயக்குனர் பிரகாஷ் பர்மிய திரைப்படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்று தற்போது அதனை இயக்கியும் முடித்துள்ளார்.
காலம் காலமாக தமிழகத்திற்கும் மலேசியா உட்பட ஏனைய தமிழர் வாழும் நாடுகளுக்கும் கலை, இலக்கியம் சார்ந்து ஒரு வழி (one way) உறவுதான் உள்ளது. அவர்கள் கொடுப்பவர்கள், நாம் ஏற்றுகொள்பவர்கள். மிக கசப்பான உண்மை இது. நம்மை வளர்த்து விட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை, அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. சினிமா என்பது முற்றிலும் வியாபாரம் சார்ந்தது. மிக மொண்ணையான தமிழ் படங்களை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்து மில்லியன் கணக்கில் அவர்கள் சம்பாதித்து கொண்டிருகின்றனர். நம்மை வளர்த்துவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தானே? மிக அடிப்படையான லாஜிக் இது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கண்துடைப்புகள் வேண்டுமானால் நடக்கலாம். உலக சினிமா போக்கோடு பெருமளவில் ஒத்து போகாத கமர்சியல் தன்மை கொண்ட தமிழக சினிமாவிடமிருந்து நாம் கற்பதற்கு ஒன்றும் இல்லை. மலேசியாவில் சமகாலத்தில் இயங்கி வரும் இளம் தலைமுறை இயக்குனர்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர்.
ஆனால், வெற்று கோஷங்களையும் ஆரவாரங்களையும் விரும்பும் மனங்கள் மட்டுமே தமிழகச் சினிமா மற்றும் மலிவான இலக்கியத்துடன் தங்களை இணைத்துக்கொள்ள முயல்கின்றன. நமது வாழ்வும் நமது அரசியல் சூழலில் மிக நுட்பமானது. நமது வாழ்வை படமாக்கவும் அதை திரையிடவும் தமிழகம் மட்டும்தான் இருக்கிறதா என்ன? அந்த அற்ப வாய்ப்புக்காக ராஜேந்திரன் எழுத்தாளர் சங்க மேடையில் ஒரு திரை அதிபரை கௌரவித்தார் எனக்கூறுவது வேடிக்கையானது.
கணக்குவழக்கு
இந்த நேர்காணலில் உள்ள அப்பட்டமான பொய்யே கணக்கு வழக்கு குறித்ததுதான். இறுதியாக நடந்த ஆண்டுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு மலரில் தமிழகச்சுற்றுலா குறித்த கணக்குகள் சேர்க்கப்படவில்லை என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டாக இருந்தது. எழுத்தாளர் சங்க பெயரில் தமிழகச் சுற்றுலாவை நடத்திவிட்டு அதன் கணக்குகளை ஆண்டுக்கூட்டத்தில் தெரிவிக்காமல் திருதிருவென விழித்ததையும் ராஜேந்திரன் நேர்மையோடு சொல்லியிருக்கலாம். எனவே எழுத்தாளர் சங்கத்தில் கணக்கு வழக்குகளில் நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்வதில் தவறு இருக்காது என நினைக்கிறோம்.
உரிமம்
ராஜேந்திரன் இது குறித்து பேசும் போது திரும்ப திரும்ப அன்பளிப்பு பணத்தையும் போட்டியில் வெற்றிபெற்ற தொகை குறித்துமே கூறுகிறார். ஒரு போட்டியில் வெற்றிபெறும் பணம் என்பது வேறு. அச்சாகும் நூலில் ஒரு படைப்புக்கு உரிமப்பணம் என்பது வேறு. உரிமப் பணம் ஒரு வேளை குறைவாகவே இருக்கலாம். சில பத்து ரிங்கிட் கூட இருக்கலாம். ஆனால் அது உரிமம். உரிமத்தைக் கேட்பது உரிமை. எழுத்தாளரிடம் அறிவிக்காமல் சிறுகதையை நூலாக்குவது நியாயமென்றால் அதை வழக்குமன்றத்துக்கு எடுத்துச்செல்வதும் நியாயமே. இன்று ஒரு பாடலை திருட்டுத்தனமாகப் பதிவு செய்து விற்பனை செய்தால் திருட்டு வி.சி.டி என கைது செய்யப்படுவது எவ்வளவு சரியோ இதுவும் அவ்வளவு சரியே. பதிப்புரிமை பட்டறை நடத்தியும் அதை நடத்தியவருக்கே இதெல்லாம் புரிவதில்லை என்பதுதான் வருத்தம். ஆக, இவர்கள் நடத்தும் பட்டறைகள் யாருக்குமே பயன்தரவில்லையோ என்ற சந்தேகம் மட்டுமே எழுகிறது.
படைப்பிலக்கியம்
‘ஒரு தாயோடும் ஒரு மகளோடும் அமர்ந்து வாசிக்க முடியாத படைப்புகளைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட முடியாது’ எனக்கூறியுள்ளார் தலைவர். யாரும் எதையும் கொண்டாட வேண்டியதில்லை. அதை வாசித்து விமர்சனப்பூர்வமாக அணுகினாலே போதும். படைப்பைக் கொண்டாடுவதெல்லாம் ஜனரஞ்சக மனப்பான்மை. அதை விமர்சனங்களின் மூலம் மேலும் மேலும் வாசிப்புக்குள்ளாகுவது மட்டுமே அறிவான செயல்பாடு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு இலக்கியப்பிரதியை நிர்ணயிக்கும் மனப்போக்கைக் கொண்டே ராஜேந்திரனின் இலக்கிய அறிவை அறிந்துகொள்ள முடியும். குடும்பத்தோடு அமர்ந்து குத்தாட்டம் பார்க்கும் சமூகச்சூழலை உருவாக்கி வைத்திருக்கு தமிழகச் சினிமா சூழலோடு இணைய விரும்பும் ராஜேந்திரனுக்கு இலக்கியம் மட்டும் புனிதமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக இலக்கியம் தெரிந்த யாருடனாவது விவாதித்துக்கொள்ளலாம் என்பதால் தொடர்ந்து பேச விரும்பவில்லை.
தமிழகப்பயணம்
அடுத்ததாக தமிழகத்துக்குச் சென்றவர்களில் 30 பேர் இலக்கியவாதிகள் என்றும் 10 பேர் வாசகர்கள் என்றும் கூறியுள்ளார். அதைதானே 2 ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எங்கள் வாயை அடைப்பது மிக எளிது. ‘இந்தா அந்தப் பட்டியல்’ என நீங்கள் சென்ற தமிழகப்பயணத்தில் கலந்துகொண்டவர்களின் பட்டியலை நீட்டிவிட்டால் நாங்களும் வாயடைத்து நிற்கப்போகிறோம். ஆனால், நீங்கள் இவ்வாறு பொத்தம் பொதுவாகச் சொல்கிறீர்களே தவிர பட்டியலை வெளியிடுவதில்லை. அதில் ஆர்வத்தின் பெயரில் கலந்துகொண்டவர்களில் எத்தனை பேர் நீங்கள் சொன்னது போல இலக்கியவாதியாக மாறினார்கள் என்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். இதில் வார்த்தைக்கு வார்த்தை ‘எனக்கிருக்கும் தொடர்பின் வழியாக’ எனக்கூறி உங்கள் சங்கத்தில் உள்ள மற்றவர்களுக்கு சங்கத்தின் வளர்ச்சியில் எந்த பங்களிப்பும் இல்லை என்பதுபோல காட்ட முயல்கிறீர்கள்.
உரையாடல்
எல்லாவற்றுக்கும் மேலாக ராஜேந்திரனிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். உங்கள் பேட்டியில் நீங்கள் எப்போதும் யாருடனும் உரையாடத் தயார் எனக்கூறியுள்ளீர்கள். ஆனால், உங்கள் நலவிரும்பி யாரோ எழுத்து ரீதியான உரையாடலுக்குக் கூட உங்களைத் தயார் இல்லாதவராக மாற்றிவிட்டார். வல்லினம் வெளியிடும் எழுத்தாளர் சங்கம் சார்ந்த எந்தக் கருத்தையும் வெளியிடக்கூடாது என அவர் எல்லா பத்திரிக்கைக்கும் அழைத்து கூச்சல் போட்டது பரவலாக அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. நீங்கள் பெரும் வீரர் என்றும் அடிக்கடி சொல்வது போல நீங்கள் ஆண்மை மிக்கவர் என்றும் நாங்கள் அறிவோம். ஆனால், சாதாரண எழுத்து உரையாடலுக்குக் கூட அஞ்சி, நடுங்கி எல்லா பத்திரிகையையும் குரல் முடக்க நினைக்கும் அந்தக் கோழையை நீங்கள்தான் அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும். நாங்கள் கூட அந்தக் கோழைக் கண்டு பரிதாபம் கொண்டே எங்கள் எதிர்வினையை ‘நம்நாடு ’ பத்திரிகையைத் தவிர வேறு பத்திரிகைக்கு அனுப்புவதை விட்டுவிட்டோம். தன் கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிராளியின் ஆயுதத்தை ஒளித்துவைக்கும் அந்தக் கோழைக்கு எங்கள் அனுதாபத்தைச் சொல்லிவிடுங்கள். எனவே உங்களிடம் எழுத்து ரீதியில் முதலில் உரையாட இருக்கும் தடையை அகற்ற முயலுங்கள் . பிறகு உங்களுக்கு எதெல்லாம் இருக்கிறது என அறிந்துகொள்ளலாம்.
எப்போதும் சொல்வதுபோல எங்கள் வாதம் ஒன்றுதான். இந்நாட்டின் எழுத்தாளர்களைக் காட்டி எழுத்தாளர் சங்கம் அரசிடமும் பிற அமைப்புகளிடமும் பெறப்படும் பணம் இந்நாட்டு எழுத்தாளர்களுக்குப் பயன்பட வேண்டும். இன்னமும் நாம் தமிழகத்தை அன்னாந்து பார்க்கத் தேவையில்லை. நாம் நமது இலக்கியத்தை மலாயில் மொழிப்பெயர்த்து நமது இன்றைய வாழ்வை பிற இனத்தின் பார்வைக்குக் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. நமது முயற்சிகள் ஆழமாக வேண்டும். உலகம் முழுக்க பரவி கிடக்கும் தமிழர்கள் கைக்கு நமது இலக்கியம் பரவ வேண்டும். தனிப்பட்ட நபர்கள் நன்மை அடைய சங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. சங்க பணத்தில் தமிழக நூல்களை வெளியீடு நடத்தி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உறவை வலுப்படுத்திக்கொண்டு தனிப்பட்ட வியாபார நோக்கத்தை அடைவது கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. மலேசிய எழுத்தாளர்கள் தமிழக அங்கீகாரம் மட்டுமே உலக அங்கீகாரம் எனும் மன நிலையிலிருந்து மாற வேண்டும். அது மட்டுமே வாசிப்பையும் இலக்கிய வீச்சையும் கூர்மையாக்கும்.
ராஜேந்திரன் சொன்னது போல, சங்கம் பயண நிறுவனமாகவும், நடிகர் சங்கமாகவும், பல்கலைக்கழகமாகவும் செயல்பட்டது போதும். இங்கு அதற்கு வேறு அமைப்புகள் உண்டு. முதலில் ஒழுங்காக எழுத்தாளர் சங்கமாக செயல்படக்கற்றுக்கொள்ளுங்கள்.
– வல்லினம் குழு
————————————————-
இது தொடர்பாக மலாய் மொழி இணைய இதழ்களில் வெளியான தகவல்கள் :
மலாய் மெய்ல் ஆன்லைன்: http://www.themalaymailonline.com/opinion/uthaya-sankar/article/wajah-baru-sastera-tamil
ஃபிரி மலேசியா: http://www.freemalaysiatoday.com/category/opinion/2013/09/16/penulis-tamil-juga-mangsa-royalti/
//‘ஒரு தாயோடும் ஒரு மகளோடும் அமர்ந்து வாசிக்க முடியாத படைப்புகளைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட முடியாது’ எனக்கூறியுள்ளார் தலைவர்.
குடும்பத்தோடு அமர்ந்து குத்தாட்டம் பார்க்கும் சமூகச்சூழலை உருவாக்கி வைத்திருக்கு தமிழகச் சினிமா சூழலோடு இணைய விரும்பும் ராஜேந்திரனுக்கு இலக்கியம் மட்டும் புனிதமாக இருக்க வேண்டும். // இதுதான் இன்னமும் புரியாத வினா.!!??
ஒரு எழுத்தை, இது புனிதத்தன்மை மிகுந்தது, இது புனிதத்தன்மை அற்றது என்று எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.? குத்தாட்டம் ஆடுகிற சினிமா பார்க்கின்ற போது, குலுங்குவதெல்லாம் அபாசம் அசிங்கம். சரி, ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எழுத்து என்பதில் ஆபாசம் என்பது எங்கே இருக்கின்றது என்பதை வாசிப்பவரின் மனநிலையல்லவா நிர்ணயக்கும். அதை எப்படி ஒருவரின் பார்வை முடிவு செய்யும்.? இலக்கிய வாசிப்பில் கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத அல்லது வாசிக்கத்தெரியாதவர்கள் சொல்லும் வெட்டி சாக்குபோக்குகள் இவை அனைத்தும்.
ஆங்கிலத்தில் மிகப்பழமையான நாவலான `பியானோ டீச்சர்’ உலகப் பிரசித்திப்பெற்ற நாவல். இன்னமும் வாசிப்போர்களை புதிய புதிய அனுபவத்திற்குக் கொண்டு செல்கிற அந்நாவலை, `தலைவர்’ அவர்கள் வாசிக்கநேர்ந்தால், ச்சீ, இது குடும்பத்தோடு வாசிக்க முடியாத நாவல் என்று வீசிவிடுவார் போலிருக்கே.! இலக்கிய உலகிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத துருப்பிடித்த சிந்தனைகளைப் பிடித்துக்கொண்டு, `இலக்கியம் பேசுகிறேன்’ என்று கூவித்திரிகிற இவர்களைப் போன்றவர்களால்தான், மலேசிய இலக்கியத்தின் மேல் பற்றில்லாமல் போகிறது.