யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம். அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).
பேச்சியம்மன் கதைகளும் அவ்வாறு மாறுபடுகின்றன. ஆனால் அவை எத்தனை பரிணாமம் எடுத்தாலும் குழந்தையோடும் தாய்மையோடும் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. 1960களில் கி.ராஜநாரயணன் எழுதிய ‘பேதை’ சிறுகதையில் வரும் பெண்ணின் பெயரும் பேச்சிதான். பித்துப்பிடித்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் கதை. நோயினால் இறந்த குழந்தையின் நிலை அறியாது பாலுட்டி திரியும் தாயின் கதை அது. இப்படி தொன்மக் கதைகள் தொடங்கி நவீன சிறுகதைகள் வரை பேச்சி என்றாலே அங்கு தாய்மையும் வந்து நிற்கிறது. அந்தத் தாய்மைக்குத் தடை நேரும்போது அவள் எடுக்கும் அவதாரமே பேய்ச்சியாகிறது. பைத்தியக்காரியாக, பேயன்னையாக, பேரன்பின் பொருட்டு பேரழிவைச் செய்பவளாக அவளே ஆகிறாள்.
ம.நவீனுடைய பேய்ச்சி நாவலும் அவ்வாறான ஒரு பேயன்னையின் கதைதான். தமிழ்ச் சமூகத்தின் மானுடவியல் கூறுகளை அறிய துணை நிற்கும் ஒரு ஆவணமுமாக இந்நாவல் உள்ளது.
பேய்ச்சியில் தாய்வழிச் சமுக்கமும் தந்தையுடைமை சமூகமும்.
குடும்பத்தின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி 1961இலிருந்து, பாஹோஃபென் எழுதிய ‘தாய் உரிமை’ என்ற நூல் வெளிவந்ததிலிருந்துதான் தொடங்குவதாக எங்கெல்ஸ் (குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம்) குறிப்பிடுகிறார்.
அந்த நூலின் சாரத்தின் அடிப்படையில் ஆரம்பகால மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் இருந்தது என்றும் இதன் காரணமாக குழந்தைகளுக்கு யார் தந்தை என்று நிச்சயிக்க முடியாததால் தாய் வழி உரிமையில் அனைத்தும் கணக்கிடப்பட்டன என்றும் சொல்கிறார். எனவே தாய்மார்கள் என்ற முறையில் அவர்களுக்கு மிகுந்த உயர் சலுகைகள் வழங்கப்பட்டது. பாஹோஃபென் கருத்துப்படி பெண்களின் பரிபூரண ஆட்சி (gynaeccracy) ஏற்படுகின்ற அளவுக்கு அந்த மரியாதை உயந்தது.
அவ்வகையில் மனித இன வளர்ச்சியின் காரணிகளாகவும் அவற்றின் தேவைகளின் உற்பத்தியாளர்களாகவும் பெண்கள் விளங்கி முதற்கட்ட சமூக உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்திருக்கின்றனர். அதேபோல பக்தவத்சல பாரதியின் தமிழகப் பழங்குடிகள் நூலிலும் தமிழ்ச் சமூகத்தின் முதல் விவசாயி பெண்தான் என்றும் இந்தப் பெண் பயன்படுத்திய ‘தோண்டுக்கழி’ எனும் முதல் விவசாயக் கருவி தினைப்புனக் காவல் ஆயுதமாகி பின்னர் சூலாயுதமாக பரிணாமம் எடுத்துள்ளதைக் குறிப்பிடுகிறார். ஆதிகால மனித இனத்தின் செயல்பாடுகளில் பசிக்கும்போது உணவு தேடி உண்ணுதலும் உடலின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்தலுமே முதன்மையானது. இவ்விரண்டுக்குமே பெண் சமுகமே அடிப்படையாக அமைந்து முதற்கட்ட சமூக அமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளனர் என்பதையே மானுடவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆண் துணையின்றி வாழ்க்கையின் அசாதாரணப் போராட்டங்களைக் கடந்துதான் பெண்கள் சமூக உருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளனர். தன் சந்ததியைப் பாதுகாக்கும் பொருட்டும் உணவு உற்பத்திகளில் ஈடுபடும்போதும் பெண்கள் பல்வகை சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சமாளித்துத்தான் வாழ்க்கையை நிறுவியுள்ளனர். இந்தச் சவால்கள் என்பது இன்றைய பெண் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் போன்றதல்ல. உடல் வலிமையையும் மனத் திண்மையையும் ஆழம் பார்த்த சவால்கள். இன்று வழங்கப்பெறும் பெண்மையின் இலக்கணங்களை வைத்து அன்றைய பெண்கள் சந்தித்த சவால்களை எடைப்போட்டுவிட முடியாது. மிக வன்மைகொண்ட ஆற்றல் மிக்கவர்களாகவே அன்றைய பெண்கள் வாழ்ந்துள்ளனர். கொடிய வனவிலங்குகளின் தாக்குதல்களை எதிர்ப்பது, இயற்கை சீற்றத்தைக் சமாளிப்பது, ஆணினத்தின் வக்கிரத்தை ஒடுக்கி தன் சந்ததியைப் பாதுகாப்பது போன்ற சவால்களைக் கடந்த பேராற்றல் மிக்க பெண்ணினமாகத் வாழ்ந்துள்ளனர்.
திருமணத்தின்வழியே தனியுடைமை தோன்றியது எனலாம். தாய்வழிச் சமூக மரபில் திருமணம் ஆனதும் ஆண் பெண்ணின் குடியிற்சென்று வாழும் வழக்கமே இருந்தது. கால ஓட்டத்தில் தனக்கும் மனைவியின் உறவுகளுக்குமிடையே ஏற்பட்ட பூசல்களைத் தவிர்க்கும்முகமாகத் தனிக் குடும்பமாக ஆண்வழியில் வாழத்தொடங்கினர்.
இதன்வழியே தந்தையுடைமைச் சமூக வளர்ச்சி தொடங்கியது. பண்டைய பண்டமாற்று முறைகள் வாணிபமாக வளர்ச்சியடைய பெரிய அளவில் பொருளுற்பத்தியும் அதன் விற்பனையும் தொடங்கியது. ஆண்களும் பெண்களும் இலாபத்திற்காக உழைக்க ஆரம்பித்தனர். பெருஞ்செல்லவமும் வளங்களும் தனி மனிதர்களின் சொத்துகளாயின. இதன்வழி பொருள்முதல்வாத புதிய பொருளாதார அமைப்பு உருவெடுத்தபோதுதான் சமூகத்தில் பெண்களின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு ஆண்மைய போக்கு வேரூன்றியது.
பேய்ச்சி நாவலில் காட்டப்படும் பெண் சமூகமும் அதன் செயல்பாடுகளும் தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்த பெண்ணிடம் மறைந்து கிடக்கும் வீரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. இந்த நாவலில் வரும் பெண்கள் ஆண்மைய சமூகத்தின் ஆதிக்கச் சுவர்களை உடைத்து வலிமைபெற்ற பெண்களாக இருக்கின்றனர். காத்தாயி, ஓலம்மா, முனியம்மா, சின்னி மற்றும் மாலதி என எல்லாப் பெண்களுமே தாய்வழிச் சமூகத்தின் பிரதிநிதிகளாகவே விளங்குகின்றனர். மேற்கூறிய பெண் பாத்திரங்கள் அனைத்தும் வெவ்வேறு தலைமுறையைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் அனைவரும் தங்கள் குடும்பத்தை அல்லது சந்ததியைப் பாதுகாக்கின்ற முக்கிய பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். என்னதான் இவர்கள் ஓர் ஆணின் கட்டுக்குள் இயங்குவதுபோல் தோன்றினாலும் அந்த ஆண்களைவிட வலிமையும் ஆதிக்கப் போக்கும் கொண்டவர்களாக வலம் வருகின்றனர்.
கதையின் முதன்மைப் பாத்திரம் ஓலம்மா. கிராணி, மேனஜர், தண்டல், மணியம், மணியத்தின் சீடர்கள் என ஆணாதிக்கச் சமூகச் சூழலில் அறமற்ற செயல்களுக்கு எதிராக எதிர்க்குரலை உயர்த்திப் பிடிக்கிறாள். உடலாலும் உள்ளத்தாலும் அசாத்திய வலிமையுடைய பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள் ஓலம்மா. ஒருமுறை மனப்பிறழ்வு கொண்ட மகன் குமரனை மணியம் அடித்தபோது அவர் கழுத்தில் கைவைத்து எச்சரிக்கிறாள் ஓலம்மா. அது ஒரு கூடலின் போது நிகழ்கிறது. சட்டென உடல் தளர்விலிருந்து விடுபட்டு தன் மகனைக் காக்கும் ஆதி உணர்வுக்குச் செல்கிறாள். உடல் வலிமையும் உள்ளத் துணிச்சலும் மிக்க மணியம் அவளின் அத்தகையச் செயலைக் கண்டு அதிர்ந்து போகிறான். மனப்பிறழ்வு கொண்ட மகனை கவனமாக வளர்ப்பதோடு குடும்பப் பொறுப்புகளையும் நிறைவாகச் செய்கிறாள். அதோடு தோட்டத்தில் சாராயப் பிரச்சனையைக் கண்டும் வெகுண்டு எழுகிறாள். அதன் உச்சமாக மணியத்திற்கும் சின்னிக்கும் ஏற்பட்ட உறவை அறிந்து பேய்ச்சி உருக்கொண்டு அவர்கள் இருவரையும் கொல்கிறாள். சபல புத்திகொண்ட ஆணினத்தின் அதிகாரப்போக்கினை அடியோடு சாய்க்கிறாள் பேய்ச்சி. தன் உணர்வோடு கலந்திட்ட ஊர் மக்களுக்கு சின்னியால் நேர்ந்துவிட்ட கதியை எண்ணி குலங்காக்கும் தெய்வ உருவெடுத்து அவளையும் கொடூரமாகக் கொல்கிறாள்; பேய்ச்சியாக நிலை கொள்கிறாள்.
அதன்பின் கம்பத்து வாழ்க்கையிலும் ஓலம்மாவும் ஆண் துணையின்றி வாழும் ஆக்கச் சக்தியாக மிளிர்கிறாள். சீனரின் நிலத்தில் வீட்டை வாங்கி அங்கு தனகேற்றார்போல வாழும் சூழலை வடிவமைக்கிறார். கோழி, ஆங்சா வளர்ப்பு, பழமரங்கள், காய்கறி பயிரிடுதல் என தன்னைச் சுற்றி ஒரு குட்டி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக்கொள்கிறாள். அதில் தன்னிறைவு அடைகிறாள். ஒரு பேரழிவின் நினைவிலிருந்து தன்னைத்தானே மீட்க முயல்கிறாள். அவள் உருவாக்கும் வளமான நிலம் தான் காப்பாற்ற முடியாமல் அழியவிட்ட தோட்டத்தின் படிமம்தான். சக தோட்டத்து மனிதர்களிடம் அன்புகாட்டிய அவள்தான் தான் வளர்க்கும் விலங்குகளிடமும் அக்கறைகாட்டுகிறாள். ஆனால் அவள் கண்ட அந்த அழிவு மீண்டும் அவள் காலடிக்கு ஊர்ந்து வருகிறது. கம்பத்தில் தான் வாழும் வீட்டிற்கு ஆபத்து நேர்ந்தபோது செயலற்று நிற்கிறாள். அத்தருணம் மீண்டுமொருமுறை பேய்ச்சியாகிறாள். இம்முறை பேரன்பின் மிகுதியால் தான் வளர்த்த அனைத்தையும் கருணைவதம் செய்கிறாள். இறுதியில் தன்னையும் அழித்துக்கொள்கிறாள்.
பெண் என்பவள் மென்மையானவள், வலிமையற்றவர்கள், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பண்புகளுக்குரியவர்கள் எனப் பண்பாட்டுத் தளத்தில் வரையறுக்கப்பட்டவையெல்லாம் போலிப் பூச்சுகள் என்பதை வெளிக்காட்டி உள்ளது பேய்ச்சி. மானுடவியல் ஆய்வுகள் காட்டும் ஆதி காலப் பெண்கள் மேற்கூறிய பெண்களின் இலக்கண வரையறைக்குள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவை ஆண் சமூகம் தன்னாதிக்கத்தைப் பெருக்கிக்கொள்ள பெண்களுக்கிட்ட விலங்குகள். பெண்கள் ஆண்களைக் காட்டிலும் மிக உயர்ந்த உடல்பலமும் மன வலிமையும் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதையே பேய்ச்சியாக மறுபதிவு செய்கிறார் நாவலாசிரியர் நவீன்.
இக்கதையில் வரும் மணியம், தந்தையுடைமை சமூகத்தின் பிரதிநிதி. வெட்டியான் அடையாளத்தைத் துறக்க எண்ணி வீட்டைவிட்டு ஓடுகிறான். காட்டுக்குள் சிலம்பம் கற்றுக் கொள்கிறான். பின் பொருளாசையில் மாணிக்கம் பிள்ளையிடம் அடியாளாகச் சேருகிறான். அங்கும் தன் சபல புத்தியினால் மாணிக்கம் பிள்ளையின் ஆசை நாயகியோடு உறவில் இருப்பது அறிந்து அடித்துத் துறத்தப்பட்டு தோட்டத்திற்கு வந்து சேருகிறான். நிலையில்லாமல் அலைந்து திரிந்தவனுக்கு தோட்டத்தில் ஓலம்மாவின் வழி நிரந்தர வாழ்க்கை அமைகிறது. சில சங்கடங்கள் எழுந்தாலும் அங்கேயே தன் வாழ்க்கை நிலைநிறுத்திக்கொள்கிறான். தன்னுடைய சாதி அடையாளத்தில் இருந்து விடுபடவும் அதிகாரபலம் உடைய ஆணாகத் தன்னை நிறுவிக்கொள்வதற்கும் முற்போக்கு இயக்கத்தைக் கருவியாக்கிச் செயல்படுகிறான். அதுவும் அவனுக்குப் போதவில்லை. கூடுதல் பணம் தேவை. அதற்கு பினாங்கில் பாலம் கட்டும் தொழிலுக்குச் செல்ல தயாராக இருக்கிறான். ஓலம்மாவை அந்த நிலத்தில் இருந்து பிரித்து எடுத்துச்செல்வது அவன் உள் நோக்கம். ஒரு நிலத்தில் ஊன்றிக்கிடப்பது ஓலம்மாவின் பலமாக இருக்கும்போது அதை பலவீனப்படுத்த புதிய நிலத்துக்குச் செல்வதும் அங்கு பொருள் ரீதியாக தன்னை பலமாக மாற்றுவதுமே ஆண் மையச் சிந்தனையின் தொடக்கம். மணியம் அதை விரும்புகிறான்.
தோட்டத்தில் சண்டியராகவும் பெரியார் வழியில் செல்பவராகவும் சமூக மதிப்பை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்த மணியம் ஆதிக்கப்போக்குக் கொண்ட ஓலம்மாவின் முன் மிகச் சாதாரணமானவனாகத் தோற்றுப் போகிறான். எந்த ஆணும் தான் உள்ளூர உணரும் பெண்ணின் உக்கிரமான பகுதியை மணியம் ஓலம்மாவிடம் கண்டுள்ளதால் அவளிடம் விலகியே நிற்கிறான். அவளிடம் அதிகாரம் செலுத்தும் எல்லை அவனுக்குத் தெரிகிறது. பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கின்ற வக்கிரபுத்தி கொண்ட ஆண் சமுகத்தின் பிரதிநிதி மணியம். தன்னிடம் இருக்கின்ற அதிகாரபலத்தையும் உடல் வலிமையையும் கொண்டு தன்னால் இயன்றதை முறையற்றுச் சாதித்துக் கொள்கிறான்.
தாய்வழிச் சமூக அமைப்பே மனித இனத்தின் தொல் அமைப்பென்று பல மானுடவியல் ஆய்வுகளின் கலை வடிவம்தான் பேய்ச்சி. தாய்வழிச் சமூக கட்டமைப்பும் அதன் தன்மையும் காலகாலமாக பல்வேறு கட்டுப்பாடுகள் போட்டு மூடப்பட்டாலும் எவ்வாறு தன்னை உக்கிரமாக வெளிக்காட்டுகிறது என்பதைக் கதைப்போக்கில் சொல்லி செல்கிறது பேய்ச்சி.
பேய்ச்சியில் தெய்வ உலகமும் அதன் ஆக்கமும்
‘சமயம்’ என்பதைப் பண்பாடு என்னும் முழுமையின் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். இதை இரு வகையான கண்ணோட்டத்தில் அணுகலாம். முதலாவது பண்பாடு என்பது ஓர் இனமானது தான் வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் தகவமைப்பு முறை. அடுத்தது வாழ்வதற்கான அறிவுமுறையின் வெளிப்பாடு. இந்த இருவேறுபட்ட அணுகுமுறைகளால் சமயம் பற்றிய கருத்துகளையும், அனுபவங்களையும் அறிவதில் வேறுபாடுகள் எழுகின்றன. சான்றாக, தெய்வங்களின் பண்புகளை வகைப்படுத்திக் காண்பது என்பது ( மூலதெய்வம்/ காவல்தெய்வம், சைவ தெய்வம், அசைவ தெய்வம்) சமூகத்தின் பண்புகளைக் பிரக்ஞையாக்கி (சமூக மனம்) அதன் அடிப்படையில் சமயத்தின் பண்புகளை விளக்குதல் நிகழ்கிறது.
தமிழர்களின் வாழ்க்கையில் பெண்கள் தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள். இவ்வழக்குத் தமிழரிடத்து ஆழமாக வேரூன்றியதற்கு தாய்வழிச் சமூக அமைப்பும் பெண்களின் தாய்மை நிலையும் காரணங்காளாகின்றன. இவ்விரண்டு கூறுகளும் பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பை வழங்கி அவர்களை உயர்த்துகின்றன. இவையே நம் மரபில் பெண் தெய்வங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாகின்றன. நாட்டார் வழக்கு சமயப் போற்றலில் பெண் தெய்வங்களே மிகுதியாக உள்ளன என்ற பால் அடிப்படையிலான பொது மதிப்பீடு வெகுவாக வேரூன்றி உள்ளது.
பெண் தெய்வங்களை முதன்மையாககொண்ட தமிழ்த் தெய்வங்களின் ஒட்டுமொத்தச் சடங்குகளின் அமைப்பியல் நோக்கில் மீட்டுருவாக்க முயன்றால் பெண் தெய்வங்கள் எல்லாமே ஏதாவதொரு மூர்க்க நிலையில் தெய்வமாக்கப்பட்டமை வெளிப்படும். பெண்கள் கற்பின் சோதனைக்கு ஆட்பட்டு ஆண்களின் கோடூர வக்கிரத்தால் தெய்வமாக்கப்பட்ட நிகழ்வுகள்தான் பல நாட்டார் தெய்வங்களின் வரலாறு ஆகும். ஒரு பெண் அகால மரணத்தின் மூலம் தெய்வமாக்கப்படும்போது அவளின் ஆற்றலை உணரும் அவளுடைய பிறந்த வீட்டுக் கால்வழியினர் அவளைத் தெய்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
காளி, பேச்சி, இசக்கி, காட்டேரி போன்ற துடியான பெண் தெய்வங்கள் மிக மூர்க்க நிலையில் கட்டுக்கடங்காத ஆவேசத்தையும் கோபத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மூர்க்கநிலை கொண்ட தெய்வங்களை வணங்காமல் ஊதாசீனப்படுத்தி புறக்கணித்தால் இத்தெய்வங்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகிக் கடுமையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். மாறாகப் பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செய்து, படையலிட்டால் கோபம் தணிந்து சாந்தமான நிலைக்கு மாறும். இதனால் கடவுளின் கருணை கட்டுக்கடங்காமல் பெருகி வழிபடுவோரின் சிக்கல்கள் எல்லாம் தீரும்; நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் இத்தெய்வங்களுக்கு இரத்தப்பலியிட்டு, பிற சடங்குப் படையல்கள் படைத்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும் வழிபடுகின்றனர்.
பேய்ச்சி நாவலில் கொப்பேரன், இராமசாமி ஆகியோர் வழி காட்டப்படும் தெய்வ உலகம் தமிழர்களின் நாட்டார்வழி சமய அலசலாகவே இருக்கின்றது. பெண் தெய்வங்களை அடிப்படையாக வைத்து கதாசிரியர் ஒட்டுமொத்த கதையையும் நகர்த்திச் சென்றதன் அடிப்படையைச் சற்று ஆராய்ந்தோமானால், தாய்வழிச் சமூகத்தில் உருவான தெய்வ உலகத்தினைப் பற்றிய உரையாடல்தான் மையப்புள்ளியாக இருப்பதை அறிய முடிகின்றது.
பேய்ச்சி நாவலில் இடம்பெற்ற காளி, பேச்சி போன்ற தெய்வங்கள் அந்தச் சமூகத்தின் சமயத் தொன்மங்கள். அந்தத் தொன்மைத்தை அடியொற்றியே கொப்பேரன், இராமசாமி, ஓலம்மா, காத்தாயி, மாலதியின் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவர்கள் யாவரும் பேச்சி என்ற தெய்வத்தின் தொன்மம் வழங்குகின்ற சிந்தனைகளையே தங்களின் வாழ்க்கையில் சடங்காகவும் செயலாகவும் பின்பற்றுகின்றனர்.
அடுத்தடுத்து நிகழும் பிறந்த குழந்தையின் மரணங்களுக்கு காரணம்தேடி அலையும் கொப்பேரனுக்கு, கழுகு மலையில் சந்திக்கும் ஒரு கிழவனின் வழி பேச்சியே காத்தாயி வடிவில் வந்து முற்பிறப்பில் ஒரு பெண்ணுக்குச் செய்த பாவத்தினால் பலி வாங்கி இருக்கக்கூடும் என்பதை அனுமானமாக அறிகிறான். ஓர் ஆண் தன் வக்கிரபுத்தினால் செய்த பிழை பேச்சியை நிலைகொள்ள வைத்துள்ளது. காத்தாயி உருவில் இருக்கும் பேச்சி எனும் பெண்மைக்குப் பயந்து விலகச்செல்ல முடிவுசெய்த கொப்பேரன் ஊரை விட்டே ஓடுகிறான்.
பேச்சி மற்றும் காளியின் தொன்மங்கள்வழி நடைபெறுகின்ற சடங்குகளைப் பார்த்து, கேட்டு, அதில் ஈடுபட்டும் வளர்ந்த ஓலம்மா தன்னை ஆற்றல்மிக்க பெண்ணாகவே இருத்திக்கொள்கிறாள். தன்னைச் சுற்றி நடக்கின்ற அனைத்து அறமற்ற செயல்களையும் கண்டு வெகுண்டெழுந்து செயல்படுகிறாள். பெண்மையின் பேய்த்தன்மை கொண்டு தனக்குத் துரோகம் இழைத்ததோடு நச்சு சாராயம் விற்ற சின்னியைக் காப்பாற்ற நினைத்த கணவன் மணியத்தைக் கொல்கிறாள். மேலும் நச்சு சாராயம் விற்று ஊரையே கொன்ற சின்னியையும் கொடூரமாகக் கொள்கிறாள். சராசரி பெண்ணின் ஆற்றலைமீறி அசாத்திய வலிமை கொண்டு சின்னியைக் கொலை செய்கிறாள்.
இது கதைச் சுவைக்கான மிகைப்புனைவு அல்ல என்பதை வாசகர்கள் அறிதல் வேண்டும். அறமற்ற செயல்களின் கொடூர விளைவால் குலதெய்வங்களாக மாறிய பல பெண்களைப் பற்றிய தொன்மங்கள் இதைத் தெளிவுபடுத்தும். இது தமிழ் பெண்களின் ஆற்றல் வலியது என்பதை உணர்த்துகிறது. இவ்வாற்றல் தமிழ்ப் பெண்களுக்கான மூலப்படிவ ஆற்றலான ‘அணங்கு’ ஆற்றலோடு குறிக்கப்படுகின்றது. இவ்வாற்றல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது; இயற்கைக்கு மீறியது. இதனைக் கைக்கொண்டவள் ஆக்கும், அழிக்கும் ஆற்றல் படைத்தவளாகத் தமிழ் மண்ணில் படிமலர்ச்சி பெற்றாள்.
தமிழர் நாட்டார் வழக்கில் வழிபடுகின்ற பெண் தெய்வங்கள் இரட்டைநிலையைச் (ambivalent) சார்ந்தவை. இவர்கள் அதிமூர்க்க நிலையிலும் இருப்பர், அன்பான நிலையிலும் இருப்பர். இங்கு ஓலம்மாவும் அந்தத் தொன்மத்தின் வெளிப்பாடாகவே இந்நாவலில் காட்டப்பட்டுள்ளாள். அதிமூர்க்கத்தனம் கொண்டு அனைத்தையும் வதம் செய்த ஓலம்மா கம்பத்து வாழ்க்கையில் அன்பின் உருவாக வாழ்கிறாள். தன் பேரன் அப்போயின்மேல் அளவிலா அன்பு காட்டுவதோடு கோழி, ஆங்சா, நாய். மரம், செடிகொடிகள் மீதும் பற்று வைத்துப் பாதுகாக்கிறாள். அந்தப் பேரன்பினாலே தான் வளர்த்த பிற உயிர்களுக்கு இன்னல் சூழப் போவதை அறிந்து கருணைக் கொலையும் செய்கிறாள்; தன்னையும் மாய்த்துக் கொள்கிறாள்.
நாவலின் கடைசி அத்தியாத்தில் வரும் மாலதியின் பாத்திரத்தின் வழி பேச்சி என்ற பெண் தெய்வத்தின் தொன்மச் சிந்தனைகளும் சடங்குகளும் இன்றைய சமகால பெண்களுக்குள்ளும் பொதிந்து இருப்பதைக் காணமுடிகிறது. நவீன பெண்ணாக படைக்கப்பட்ட மாலதி தனக்குப் பிள்ளைப்பேறு வேண்டி நவீன மருந்து மாத்திரைகளையும் தாண்டி பேச்சியிடம் தஞ்சம் புகுகிறாள். முதலில் வேண்டா வெறுப்பாகவும் பயத்துடனும் சேவலைப் பலிகொடுக்கத் தயங்கியவள், பூசாரியின் அவநம்பிக்கை பேச்சைக் கேட்டதும், உக்கிரமாக மாறி சேவலை அறுத்துவிடுகிறாள். மீண்டும் பேய்ச்சி நிலைபெறுகிறாள். மாலதியின் அச்செயலில் அதிர்ந்துபோன குமரன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுகிறான்.
சமூக ஒடுக்குதலில் ஆவேச நிலையில் தெய்வமடைந்த பெண்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட ஆழ்மன வெளிப்பாடாக ஆண் குறியீடுகளையே உயிர்ப்பலிகளாகப் பெற்றனர் என்பது தாய்வழிச் சமூக மரபில் உருவான தெய்வ உலகத்தின் செயல்பாடு. ஆண்மகன் பலி, ஆண் எருமை, ஆண் ஆடு, சேவல் என்ற வரிசையில் ஆண்கள் குறியீடாய்ப் பலிகொள்ளப்பட்டனர்.
மானுடவியல் எனும் அறிவுத்துறை மனித இனம், அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்பு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை கணக்கிலெடுத்து ஒரு நிலம் சார்ந்த முழு மனிதனை அடையாளம் காண முயல்கிறது. பேய்ச்சி நாவலில் இந்த முயற்சி கலை வடிவமாக நவீனுக்கு வசப்பட்டுள்ளது.