ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்

524198_109750595836596_1955691389_nசிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் அவர்களின் ‘ஓந்தி’ சிறுகதைத் தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தாரால்  2019ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் விரிவான முன்னுரையைக் கொண்டிருக்கிற இத்தொகுப்பு ‘சிங்கப்பூர் இலக்கிய  விருது 2020’ தகுதிச் சுற்றில் தேர்வாகி உள்ளது.

2017ஆம் ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்கள் தேசிய நூலக வாரியத்தின் ‘லீ கோங் சியான்’ ஆய்வாளராக சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டபோது தனது ஆய்வின் அடிப்படையில் மூன்று உரைகளை வழங்கினார். ‘புதுக்குரல்கள் – புத்தாயிரத்திற்குப் பின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் கண்ட மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் அவர் வழங்கிய மூன்றாவது உரையில் “என்னை நீங்கள் புறக்கணிக்கவே முடியாதென தனது இருப்பை Assert செய்கிற வகையில் படைப்புகளை முன்வைப்பவர் எம்.கே.குமார்” என்று குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மை என்பதை தனது மூன்றாவது தொகுப்பின் வழியாக குமார் நிரூபித்துள்ளார்.

‘மருதம்’ என்ற அவரது முதல் தொகுப்பில் இடம்பெற்றிருந்த சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பிற்காக சிங்கைக்குக் குடிபெயர்ந்த ஒருவரது ஊர் பற்றிய ஏக்க நினைவுகளைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த ‘5:12 P.M.’ என்ற இரண்டாவது தொகுப்பில் குமார் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருந்தார். தன்னைக் கவ்விக்கொண்டிருந்த ஊரின் நினைவுகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு குடியேறிய தேசத்தையும் அதன் மனிதர்களையும் தனது மொழியால் கவ்விக்கொண்டதால் அத்தொகுப்பிற்கு ‘சிங்கப்பூர் இலக்கிய விருது 2018’ சிறப்பு தகுதி வென்றார்.

‘5:12 P.M.’ தொகுப்பை வாசித்தபோது குமாரின் புனைவுலகம் பாலியல் விழைவும் வாழ்வின் மீதான தத்துவ விசாரணையும் மாறி, மாறி ஊடாடும் ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன். ‘ஓந்தி’ தொகுப்பிலும் எட்டு கதைகளில் நான்கு பாலியல் விழைவைப் பேசக்கூடியவையாக இருக்கின்றன. 2050ஆம் ஆண்டில் சிங்கையில் அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் முப்பத்தி மூன்று சதவீதமாக இருக்ககூடுமென ஓர் ஆய்வு முன்னுரைக்கிறது. முதியோர்களுக்கான பராமரிப்பு, மருத்துவமென புறத்தேவைகளைப் பற்றி அரசு கவலைப்படுகையில் குமார் போன்ற ஒரு படைப்பாளியால் மட்டுமே அவர்களது அகத்தேவைகளையும் வெளியில் சொல்ல இயலாத ஆழ்மன ஆசைகளையும் உணரமுடிகிறது. எப்போதெல்லாம் பூக்க வேண்டுமோ அப்போதெல்லாம் தனது பிரியமறிந்து பூக்காத பூவாக இருக்கும் மனைவியை எண்ணி உள்ளுக்குள்ளேயே குமையும் மோகன்தாஸ், பேருந்தில் முன்னால் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் மீது ஓந்தியை எடுத்துக்காட்டிக்கொண்டு நிற்கும் முதியவர், காட்டுக்குள் சென்று மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டு தன் ஓந்தியை எடுக்கும் அச்சாங் ஆகியோரின் வழி சிங்கை இலக்கியச் சூழலில் அதிகம் கவனிக்கப்படாத ஆனால் முக்கியமான பேசுபொருளான முதியவர்களின் தனிமையையும் பாலியல் விழைவையும் குமார் பேசுகிறார்.

ஒரு புலனக்குழு உரையாடலில் கவிஞர் சாம்ராஜ் அவர்கள் “சமவெளியாய் இருக்கும் நிலப்பரப்பைவிட காடு, மலைகளுடன் கூடிய நிலப்பரப்பு மாயத்தன்மையையும் ரகசியத்தன்மையையும் உருவாக்குகிறது. இந்த மாயமும் ரகசியமும் புனைவு எழுதும் ஒரு படைப்பாளிக்கு அவசியமாகிறது,” என்று குறிப்பிட்டார். குமார் அப்படியான ஒரு நிலப்பரப்பைச் சிங்கைக்குள் தேடிக் கண்டடைந்து அதில் தனது புனைவைக் கட்டி எழுப்புகிறார். புக்கிட் திமா மலைக்காடு, கிராஞ்சி சிறுகாடு, குகையோடு கூடிய உயிர்க்காடு போன்ற பகுதிகள் அக்கதைகளின் மீதான மாயத்தன்மையைக் கூட்டி வாசகரை வசீகரிக்கின்றன.

குமார் ஒரு கவிஞராகவும் இருப்பதால் குறைவான சொற்களைக் கொண்டு காட்சிப்படுத்தும் கலை அவருக்கு அனாயாசமாக கைகூடுகிறது. ‘தீக்குள் இருவர் ஆடும் அந்நடனம் பறையொலியின் சிடுக்குகளில் எவ்வி எவ்வி இணைந்தன. காற்றாட, கனியாட, இலையாட, கொடியாட, வேராட, விழுதாட பறையின் அனலில் காடே அதிர்ந்து இணைந்து இயங்கி பறந்து புழுதியடங்கியது’, ‘பெருமழையின் துளித்துளியாய் பெருங்கடலின் தனித்தீவாய் காட்டாற்றின் ஒழுகுநீராய் என்னை உணரவில்லையா? நிச்சலன ஆறாய் நீராவிக் கொப்பளிப்பாய் ஆற்றலுக்குள் ஆற்றலாய் அமைதிக்கு அமைதியாய் எனக்குள்ளே இயங்குவதை அறிந்ததில்லையா?’ இப்படி குமார் எழுதுகையில் கவித்துவமிக்க அவரது மொழியின் வழியாக கதாபாத்திரத்தின் உணர்வுகள் தீவிரம் குறையாமல் வாசகருக்குக் கடத்தப்படுகின்றன.

சாங்கி நேவித்தளத்திற்கு வராமல் திரும்பாத அமெரிக்கக் கப்பற்படைக் கப்பல்கள், கடலுக்குள் மண்ணைப் பீய்ச்சுவதால் கடல் பெற்று தரும் நிலங்கள், காட்டிலிருந்து பிறந்த வீடுகள், ‘தாய்ச்சி’ மெது நடனம் ஆடும் சீனப்பாட்டிகள், மூத்தோர்களுக்கான வீவக குடியிருப்பின் ஒற்றையறை வீடு, அண்டை வீட்டு வாசலின் முள்செடி குறித்து நகரமன்றத்தில் செய்யப்படும் புகார், சிங்கப்பூரருக்கு என்று ஏதும் தள்ளுபடி உண்டா என்ற கேள்வி, ஒர்க் பெர்மிட் இல்லாமல் ஸ்பெஷல் பாஸில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வைத்தல், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் எல்லாவற்றையும் ஏதாவதொரு வழியில் இந்த சிஸ்டம் பிடுங்கிக் கொண்டல்லவா இருக்கிறது என்ற புலம்பல், ‘கிளிங்’ என அழைக்கும் மலேசியாக்காரி, பெரும்பான்மையான கோப்பித்தியம்களில் கழிவறைக்கு அருகில் இருக்கும் இந்திய முஸ்லிம் சாப்பாட்டு கடைகள் போன்ற செய்திகளை குமார் ஒற்றை வரிகளில் கதைகளில் சொல்லிச் செல்கையில் அவற்றை வாசிக்கும் நாம் ஒற்றை வரிதானே என்று எளிதாக கடந்துவிட்டோமேயானால் இழப்பு நமக்குத்தான். ஏனென்றால் அந்த ஒற்றை வரியின் பின்னால்தான் சிங்கப்பூர் என்ற தேசத்தின் வரலாறு, அரசியல், சமூக, பொருளாதார நிலைகளும் சிக்கல்களும் பதிவாகி இருக்கின்றன.

தனது புனைவுலகம் வழக்கத்திலிருந்து மேலதிகமான வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு அளிக்க வேண்டுமென்ற முனைப்பில் குமார் ஓர் உத்தியைக் கையிலெடுக்கிறார். தலைப்பு மற்றும் கதைமாந்தர்களின் பெயர்கள் வழியாக அப்படைப்பை அடுத்த கட்ட வாசிப்புக்கு எடுத்துச் செல்லும் உத்திதான் அது. ‘தொல்குடி’ சிறுகதையில் கதையின் தலைப்பான ‘தொல்குடி’ ஒருவிதமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறதென்றால் கதாபாத்திரங்களுக்குத் தரப்பட்டுள்ள வரலாற்று மாந்தர்களின் பெயர்கள் (மோகன்தாஸ், கஸ்தூரி) வேறொரு அனுபவத்தை அளிக்கின்றன. டாக்ஸி டிரைவர்கள், விதி மீறல்களுக்காக அவர்களுக்குப் போடப்படும் ஃபைன்கள் என விரியும் சிறுகதை ‘ருசி’ என்ற தலைப்பின் வழியாக நெருப்பிலிட்ட மாமிசத்தின் சுவையைக் கண்டுகொண்டது  போல மனிதனுக்கு விதியை மீறுவதிலும் ருசி இருக்கிறது என்ற மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. ‘விஷம்’ என்ற கதை அதன் தலைப்பால் நவீன வாழ்க்கை ‘அனைவரையும் சந்தேகி’ என்ற நஞ்சை நமக்குள் விதைத்திருப்பதைக் காட்டுகிறது.

குமாரின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஒரு குற்றத்தைச் செய்யசெப்டம்பர் 02 விழைபவர்களாகவோ அல்லது குற்றத்தைச் செய்தவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களைத் தர்க்கபூர்வமாக அணுகி புரிந்துகொள்வது சிரமம். ஏனென்றால் இவர்கள் தங்களது நனவிலி மனதில் புதையுண்டு கிடக்கும் இச்சைகளை, ரகசிய ஆசைகளைச் செயல்படுத்த முனைகிறார்கள். அவர்களது செயல்பாடுகளுக்கு இருளும் கனவும் முக்கியமாகின்றன. அவர்களுக்கு மிருகங்கள் தேவையாயிருக்கின்றன. சிங்கப்பூரின் ஒற்றைக்கண்ணன் (சிசிடிவி) அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறான். புலியாய் மாறி தனது மன்மதனைக் (மாதன்) கொல்பவளான கிளியில் வலம் வர வேண்டிய ரதி (ராத்தி), தன் ஓந்தி கடித்து தானே சிறைக்குப் போகும் குற்றத்தைச் செய்ய தயாராகும் அச்சாங், கனவின் வழி தனது கஸ்தூரியுடன் முயங்கும் மோகன்தாஸ், மற்றொரு ஆடவனுடன் இருக்கும் ஆந்திராக்காரனின் மனைவி, பேபியின் பின்னால் பாம்பை ஏந்திக்கொண்டு ஓடும் ஸமா, நானாவின் மார்பகத்தைத் தடவிவிட்டுச் செல்லும் சூசன், மெலிசாவின் வாய்க்குள் செந்நாயின் வாலைத் திணிக்கும் ட்ரூமேன் ஆகியோரது செயல்கள் சமூகத்திற்கு எப்போதும் புதிராக விளங்கும் நனவிலியின் வெளிப்பாடுகளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? குமார் தனது ‘சூரியன் ஒளிந்தணையும் பெண்’ கவிதைத் தொகுப்பில் ‘வரையா மரபு’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருப்பார்.

‘அட, சும்மா விடுங்களேன்!

எல்லா மழைத்துளியும் மண்ணுக்கா வருகின்றன?

சாக்கடையில் கலந்தும் பாறையில் விழுவதாயும்

இருக்கட்டுமே

எனது!’

இந்த கவிதை சுட்டுவது போல அவரது கதைமாந்தர்களையும் நாம் ‘வரையா மரபின் மாரி’ என்ற புரிதலோடுதான் அணுகவேண்டும்.

ஒருவருக்குப் பரிசு கொடுக்கையில் பெட்டிக்குள் பெட்டியாய் வைத்துக் கட்டி கொடுப்பது போல குமாரும் பல பெட்டிகளை ஒன்றுக்குள் ஒன்றாய் அடுக்கி தனது புனைவை நமக்கு வாசிக்க அளிக்கிறார். பெரிய வெளி பெட்டியாய் சிங்கை என்ற தேசமிருக்க, அடுத்த உள்பெட்டியாய் அவரது புனைவிற்குத் தோதான மாயத்தன்மை மிக்க குறிஞ்சி, முல்லை போன்ற நிலப்பரப்புகளிருக்க, அடுத்த பெட்டியாய் புதிரான நனவிலியை வெளிப்படுத்தும் கதைமாந்தர்களும் அவர்களுக்குத் துணையான விலங்குகளுமிருக்க, அதற்குள் உள்பெட்டியாய் கவித்துவமிக்க மொழியிருக்க இறுதியில் நமக்குப் பேருவகை தரும் பரிசாக ஓர் அற்புதமான வாசிப்பனுபவம் கிடைக்கிறது.

ஜப்பானிய நாவலாசிரியர் ஹாருகி முரகாமியின் நேர்காணல் ஒன்றை ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் படித்தேன். அதில் முரகாமி “எழுத்தாளன் ஒரு கதையை உருவாக்கும்போது, அவன் தனக்குள்ளிருக்கும் விஷத்தை நேருக்கு நேராக எதிர்கொள்கிறான். அந்த விஷம் இல்லாவிட்டால் அவன் உருவாக்கும் கதை மொண்ணையாக, நீர்த்துப்போனதாக இருக்கும். இது ஃபூகுவைப்போல. பஃப்பர் மீனின் சதைப்பகுதி மிகமிகச் சுவையானது. ஆனால் அந்த மீனின் முட்டையும், ஈரலும், இதயமும் உயிர் கொல்லும் நச்சுத்தன்மை கொண்டவை. என் கதைகள் என் பிரக்ஞையின் இருண்ட, அபாயகரமான பகுதியில் பொதிந்திருக்கின்றன” எனக் குறிப்பிடுகிறார்.

குமாரும் தனக்குள்ளிருக்கும் விஷத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு தனது சிறுகதைகளை உருவாக்குகிறார். அவரது பிரக்ஞையின் இருண்ட பகுதியிலிருந்து வெளிப்படும் கதைமாந்தர்கள் தங்களது பிரக்ஞையின் அபாயகரமான பகுதிகளை வெளிப்படுத்துகிறார்கள். இத்தனை நஞ்சுகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் ‘ஓந்தி’ தொகுப்பு ஃபூகு என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் பஃப்பர் மீனின் சதைப்பகுதி போல வாசிப்பிற்குச் சுவை கூட்டுகிறது.

1 comment for “ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்

  1. Mohankumar
    September 1, 2020 at 10:33 am

    புதுக்கோட்டை கண்டெடுத்த புதுமை எழுத்தாளர் திரு .எம் கே குமார் .

    குமரிக்கண்டம் கண்ட என்றும் இளமை குமரன் திரு. எம் கே குமார்.

    சிங்கையிலும் சீறும் சிங்கமாக அவர் பனி தொடந்து சிறகடிக்கும் பறவைபோல.

    வாசாகர் வட்டத்தை ஈர்த்து வளைத்துப்போடும் காந்தக் கதாசிரியர் திரு.எம் கே குமார் .

    கதையும் கவியும் அவரின் விரல்பிடித்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளைகளைப் போல.

    உங்களின் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன். நன்றி…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...