அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

38041840_1955709477805394_534682948285235200_o‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ‘Beyond Words 2015’ போட்டியில் “கொண்டாம்மா கெண்டாமா” நூல் பரிசு பெற்றது. சமூகத்தில் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கும் முனைப்போடு கடந்த எட்டு ஆண்டுகளாக தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார். தமிழகத்திலிருந்து சிங்கைக்குக் குடியேறி நிரந்தரவாசியாக இருக்கும் எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுகதைத் தொகுதியான ‘சங் கன்ச்சில்’  அழகுநிலாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

பிறப்பிலிருந்து தொடங்கும் பண்பாட்டுப் பின்னணியிலிருந்து விலகி புதிய நிலத்தில் அந்நியப் பண்பாட்டுப் பின்புலத்தில் வாழ நேர்கின்றபோது ஏற்படுகிற அகச்சிக்கல்கள், புலம்பெயர்ந்த நிலத்தில் அடிமட்டத் தொழில் புரியும் தொழிலாளர்களின் சிக்கல்கள், சிங்கப்பூரில் நிலவும் பண்பாட்டு மதிப்பீட்டு அதிர்ச்சிகள், பதின்ம வயதினரின் உலகம் ஆகியவற்றையே இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகளின் கருக்களாக அமைந்திருக்கின்றன. அழகுநிலா உருவாக்க விரும்பும் சிங்கப்பூரை அதன் பண்பாடு, புறச் சித்திரிப்பு, மரபு, பண்பாட்டு முரண்கள், மனித மனங்களில் உள்ளுறைந்திருக்கும் காமம், வன்முறை சார்ந்த பார்வை, ஆகியவற்றிலிருந்து உருவாக்கிக்கொள்ள முடிகிறது.

அழகுநிலாவின் கதைகளின் களம் என்பது சிங்கப்பூரை ஒட்டியே அமைந்துள்ளது. கதையை வாசகன் தன் வாசிப்பின் வழி மனத்திரையில் ஓட்டிப் பார்க்க நிலச்சூழல் விவரிப்பு மிக முக்கியமானது. சிங்கப்பூர் போன்ற பெருநகர நாடுகள் மிகவும் பரபரப்பான சூழலில் இயங்குபவை என்பது பொதுவான சித்திரமாக அனைவரின் மத்தியிலும் இருக்கிறது. அந்த அன்றாடப் பரபரப்பில் கவனிக்க மறந்த சிலவற்றை அல்லது நுண்மையான பகுதிகளை கதைக் கருக்களாகத் தெரிவு செய்திருப்பது இக்கதைத் தொகுப்பிலுள்ள கதைகளின் பலம்.

‘கீலா’ எனும் கதையில் 1940களிலும் 1950களிலும் கிராமங்கள், பன்றிப் பண்ணைகள், ரப்பர் மரத்தோட்டங்கள் என இருந்த சிங்கப்பூரின் சித்திரத்தை அளிக்கிறார். ‘அக்ரோன்’ எனும் கதையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விடுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். புறச்சுழல் விவரணைகள் மட்டுமின்றி சிங்கப்பூரின் பொது விதிகள் சிலவற்றையும் கதைகளில் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விதிகள், வீடுகளின் அமைப்பு, பள்ளிச் சூழல், பல்லினச் சமூகச்சூழல், அங்காடிக்கடைகள் குறித்த மேலதிக தகவல்கள் சிறுகதைகளில் காணக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களின் வாயிலாகச் சிங்கப்பூரைப் பற்றிய ஒட்டுமொத்தச் ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இருப்பினும், சிங்கப்பூரின் நில, சமூகச்சூழலுடன் பெரிதும் ஒத்துப்போகும் மலேசியா போன்ற நாட்டிலிருந்து பார்க்கின்றபோது இன்னும் சில நுட்பமான புறச்சூழல் விவரிப்பின் வாயிலாகக் கதையினை மேம்படுத்தியிருக்கலாம் என எண்ணமுடிகிறது. குறிப்பாக, விடுதலைக்கு முன்பான சிங்கப்பூரின் சூழலை இன்னும் நுட்பமாகவே விரிவுபடுத்தியிருக்கலாம்.

பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல மொழிகள் பேசுவோர் இருக்கின்ற நாடுகளில் அன்றாடப் பேச்சு வழக்கில் நிகழ்கின்ற மொழிக் கலப்பு என்பது இயல்பானதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு அவ்வியல்பு அந்நியத்தன்மையும் விசித்திரத்தன்மையையும் அளிக்கிறது. அழகுநிலாவின் கதைகளில் பயன்படுத்தப்படும் பிறமொழிக்கலப்புகள் சிங்கப்பூர், மலேசியா சமூகச்சூழலை நன்கு அறியாதவர்களுக்கு ஒருவித அந்நியத்தன்மையை ஏற்படுத்தலாம். இந்தக் கதைகள் சிங்கப்பூரில் நிகழ்வதைச் சுட்டும் விதமாகக் கதை முழுதும் பல இடங்களில் பிறமொழிச் சொற்கள் (மலாய், சீனம்) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்களின் உரையாடலாக அமைபவற்றுள் மிக இயல்பாகப் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக மலாய் சொற்கள் கலந்திருப்பதாக அமைந்திருக்கிறது. ‘வெள்ளெலிகள்’ சிறுகதையில் வரும் வீட்டு உரிமையாளர் கோகிலாவும் ‘சங் கன்ச்சில்’ கதையில் வரும் தந்தை வழி பாட்டியும் தங்கள் உரையாடலில் மலாய் சொற்களை மிக இயல்பாகப் பயன்படுத்துவதாக வருகிறது. தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் புலம்பெயர்ந்தோரின் மூன்றாவது நான்காவது தலைமுறை மக்களின் பேச்சுமொழியில் மலாய், சீனம் போன்ற மொழிகளின் கலப்பு மிக வெளிப்படையாக இருக்கிறது. பைத்தியம் எனும் பொருள்படும் ‘கீலா’ எனும் தலைப்பில் அமைந்த சிறுகதையில் அச்சொல் மிகச் சரியாகவே பயன்பட்டிருக்கிறது. அல்சைமர் எனும் மறதிநோயால் அனைத்தையும் மறந்து போகின்ற ஒருவருக்கு வாழ்நாளெல்லாம் உயிரை உலுக்குகின்ற அளவு பின் தொடர்ந்து வரும் சொல்லாக ‘கீலா’ எனும் மலாய்ச் சொல் அமைந்திருக்கிறது. ஆனால், இம்மாதிரியான அயல்மொழி சொற்கள் சற்று மிகையாகப் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அல்லது பொருத்தப்பாடு அற்ற இடங்களும் கதைகளில் இருக்கின்றன. ‘சங் கன்ச்சில்’ கதையில் வரும் தந்தை வழி பாட்டியின் உரையாடலில் இருக்கும் அளவுக்கதிகமான மலாய் சொற்கள் கதையின் போக்கோடு ஒட்ட இயலாதவையாக, திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன.  இந்த வட்டாரத்தில் வளர்ந்த வாசகர்களுக்கு இக்கதையின் மொழி ஒருவித அந்நியத் தன்மையையே ஏற்படுத்தி, கதையிலிருந்து விரட்டி விடும்.

அழகுநிலா கதைகளின்  முக்கிய பலமாகச் சிறார்கள், பதின்ம வயதினரின் உலகைக் கதைகளில் அமைக்க முனைந்தமையைக் குறிப்பிடலாம். ‘விலக்கு’ எனும் சிறுகதையில் பெற்றோர்கள் பெண்பிள்ளைகளின் பருவமடைதலை செயற்கையாக நீட்டித்து அவர்களைப் பால்யத்தில் அடைத்து வைக்க முயலும் விபரீதத்தைக் கதையாக்கியுள்ளார். சிறுவயதிலே பூப்பெய்துதலைல் பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாகப் பார்க்கும் மனநிலையைக் குறிப்பிடுகிறார். இன்னொரு தளத்தில், அவ்வாறு இளவயதில் பூப்பெய்துதல் இயல்பானதாகக் கருதப்படும் சமூகச்சூழலில் பருவமடையாத பெண் பிள்ளை இயல்புக்கு மாறானவளாக கிண்டலுக்கு உள்ளாகிறாள். பூப்பெய்துதல் எனும் இயற்கையான உடலியல் வளர்ச்சி பெண்களுக்கான தடையாக பார்க்கப்படுவது நவீன சமூகத்தில் மேலோங்கியுள்ள முற்போக்குக் குரல்களுக்கு உள்ளே கெட்டித்துப் போயிருக்கும் பிற்போக்குவாதத்தைச் சரியாக அடையாளம் காட்டுகிறது.

‘முள்முடி’ எனும் கதை, பதின்ம வயது இளைஞர்கள் வைத்திருக்கும் முடியலங்காரத்தை மையாமாகக்கொண்டது. மூத்தவர்கள் அவ்வகை சிகையலங்காரத்தின் வழி அந்த இளைஞர்களை மதிப்பிடுகின்றனர்.

இவ்விரு கதைகளும் மரபார்ந்த மனமும் நவீன வாழ்வும் ஏற்படுத்தும் முரணை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் எனும் பொதுத்தன்மையில் ஒத்துபோகின்றன. நவீனமும் பண்பாட்டுக் கலப்புகளும் மிகுந்த சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவற்றை உள்வாங்குவதில் மரபான மூத்த தலைமுறையினரிடம் ஏற்படும் மனத்தடையின் வெளிப்பாடாகவே இக்கதைகளின் நிகழும் விரைவான பருவமடைதல், முடி அலங்காரம் போன்ற சிக்கல்களைக் காணமுடிகிறது. நான்காம் தலைமுறையினரான இளையோர்களும் பதின்ம வயதினரும் பண்பாட்டுக் கலப்பினை மிக எளிதாக உள்வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு மரபு என்பது பெற்றோர்களின் பழக்கவழக்கங்களாகவே தொனிக்கின்றன. விலக்கு கதையில் சீன இளைஞனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஏற்படுகிற காதல் என இளையோர்கள் அதனைத் தாண்டுவதில் மேலதிகமான சிக்கல்களை எதிர்கொள்வதில்லை.

நூலின் தலைப்புக்குரிய கதையான ‘சங் கன்ச்சில்’ எனும் கதையும் இருவேறு தலைமுறையினரின் இடையே இருக்கும் பண்பாட்டு முரணாகவே இருக்கிறது. ஒழுக்கத்தைப் பேணுவது என்பது தந்திரம் நிறைந்தது என நம்பும் லட்சுமிக்கும் அதனை இயல்பாக எடுத்துக்கொள்ள இயலும் குணமுடைய பேரன் சிவாவுக்குமான முரணாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம். இக்கதையில் மலாய் இலக்கியங்களில் தந்திரமான விலங்கு எனச் சொல்லப்படும் சங் கன்சில் எனப்படும் சருகு மானும் இந்திய மரபில் வரும் நாகத்தின் மீது ஆடும் கண்ணனும் என இரு வேறு முரணான உருவகங்கள் நிலைகொள்கின்றன. ஆனால், அவை வெறும் ஒற்றை வரி விவரிப்புகளாகவே நிலைகொள்கின்றன. மலாய் நாட்டார் கதைகளில் வரும் சருகுமான் அல்லது சங் கன்ச்சில் என்பது தந்திரமும் மதிநுட்பமும் நிறைந்த விலங்காகச் சித்திரிக்கப்படுகிறது. அந்த உருவகத்தையே தன் இளவயதில் பாலியல் தொல்லைகளைத் தாண்டி வருவதற்குப் பயன்படுத்தியதாக லட்சுமி கூறுகிறாள். மற்றொரு புறத்தில் சிவா நெளிந்தாடும் நாகத்தின் மீது கண்ணன் ஆடும் காளிங்க நர்த்தனத்தைப் பார்க்கிறான். இளவயதில் ஏற்படுகிற உளக்கொந்தளிப்பை இயல்பாகக் கடக்க முடிந்த மரபுப் பயிற்சி அளிக்கப்பட்டவனாக சிவா விளங்குகிறான். இருவேறு பண்பாட்டுப் பின்புலம் அல்லது மரபு ஆகியவற்றின் எதிரீடாகவே இக்கதையை உள்வாங்க இயல்கிறது.

அவ்வாறான மரபுகளையும் பண்பாடுகளையும் நிலைநிறுத்துவதற்கான நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் வெறும் சடங்குகளாக எஞ்சுவதன் அபத்தத்தையும் ‘பொங்கல்’ சிறுகதையில் காண முடிகிறது. ‘பொங்கல்’ கதையில் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறி, திருமணம் புரிந்துகொண்ட ஒருவர் அங்கு நடக்கும் தமிழ் மன்றத்தின் பொங்கல் நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்த விவசாயியான பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்தப் பொங்கல் நிகழ்ச்சியில்  சில அபத்தமான நிகழ்வுகள் நடக்கின்றன. பொங்கல் விழாவுக்கு மரபார்ந்து  வழங்கப்பட்டுவரும் பொருள் இழந்து வெறும் சடங்காக மாறி நிற்பதைப் பகடியாகச் சொல்ல முனைந்திருக்கிறார். ஆனால், சமூக அவலத்தைப் பார்த்துக் கொந்தளித்த மனநிலையிலே அக்கதை அமைந்திருக்கிறது. கதைகளில் இருக்கும் கொந்தளிப்பு, வாசகனுக்குக் கடத்தப்படவில்லை. இந்தக் கதையை வாசித்து அடையவேண்டிய சமூகத்தின் மீதான சீற்றத்துக்கான காரணங்களையும் எழுத்தாளர் தெளிவாகவே கதையில் குறிப்பிடுகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் அமர்ந்திருக்கும் விவசாயி, அபத்தமான நிகழ்வுகள் என வரிசையாகச் சொல்லிச் செல்கிறார். மொழி சார்ந்தும் உழவுத் தொழில் சார்ந்தும் தொடர்புப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சி வெறும் ஆடம்பர சடங்காகத் திரிந்திருக்கிறதென்பதைக் கதையில் வரும் உரையாடல்களிலும் சித்திரிப்புகளிலும் எழுத்தாளரே வெளிப்படுத்துகிறார். இந்த அபத்ததை சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியினை விவரிப்பதன் வாயிலாகவே சொல்லியிருந்தால் எழுத்தாளர் வெளிப்படுத்த முனைந்த ஆற்றாமை உணர்வு வாசகரைச் சென்றடைந்திருக்கும்.

அழகுநிலாவின் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படிமங்கள் மனித மனத்தின் நுண்மையான உணர்வுகளைக் கற்பனையால் விரியச் செய்யும் தன்மையால் ஆனவையாக இருக்கின்றன. பல ஒலிகள் ஒன்றிணைந்து எழும் கலைவொலிகள் வெண்ணிற இரைச்சல் எனப்படுகிறது. அவ்வாறு வெவ்வேறான கலவை உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மனத்தில் ஏற்படுத்தும் மாறுபாட்டை வெண்ணிற இரைச்சல் சிறுகதையில் காண முடிகிறது. ‘வெண்ணிற இரைச்சல்’, மகாபாரத இதிகாசத்தை அடிப்படையாகக்கொண்ட கதை.  குருசேத்ர போர் முடிந்த பின்னர் திரெளபதி கொள்ளும் குற்றவுணர்ச்சியையும் வெறுமையுணர்வையும் கதைக் கருவாக கொண்டுள்ளது. குருசேத்ரப் போரில் கெளரவர்கள் கொல்லப்படுவதோடு உபபாண்டவர்களான பாண்டவர்களின் மைந்தர்களும் கொல்லப்படுகின்றனர். அந்தப் பெரும் போர் நிகழ்வதற்கான காரணமாகத் தான் இருந்ததை எண்ணி திரெளபதி குற்றவுணர்வு அடைகிறாள். வெண்ணிற இரைச்சல் எனும் படிமத்தின் வாயிலாகவே இக்கதையின் புதிய திறப்பு கிடைக்கிறது. அந்தப் படிமம் நீங்கலாக கதையின் உச்சம் எனக் கொள்ளத்தக்க இடம் இல்லை என்பது குறைபாடாக இருந்தது.

வண்ணமயமான சிங்கப்பூரின் நகரச் சூழலில் திளைத்திருப்பவர்களுக்கு இடையில்சங் அவ்வழகை முற்றிலும் ரசிக்க இயலாமல் காணும் வண்ணமெல்லாம் கருமையாகத் தெரிவோரின் கதையாக ‘அக்ரோன்’  அமைந்திருக்கிறது. ‘அக்ரோன்’ கதையானது சிங்கப்பூரில் உயரமான கட்டிடங்களில் சாயம் பூசும் ஆபத்து நிறைந்த பணியைச் செய்யும் தமிழ்நாட்டு இளைஞனொவனின் அனுபவமாக அமைந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் பணியின்போது பதினாறாவது மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்து இறந்துபோன தன் நண்பனைப் பற்றிய எண்ணப்பதிவுகளையும் உளநிலையையும் சித்திரிக்கும் வகையில் கதை அமைந்திருக்கிறது. தன் நண்பனின் இறப்பின்போது வேலையின் மீதான பயமும் வெறுப்பும் திரள்கிறது. ஆனால், குடும்பச் சூழலினால் வேலையைவிட முடியாமல் இருக்கிறான். ஒருநாள் வேலையில் அவன் எதிர்கொள்ளும் பதைபதைப்புகளும், வெறுமையுணர்வும் சேர்ந்தே கதை அமைந்திருக்கிறது. கதையின் இறுதியில் பல வண்ணச்சாயங்கள் சேர்ந்து கருமையாகத் தெரியும் படிமம் கதை வெளிப்படுத்த நினைக்கும் தொழிலாளர்களின் துயரை வாசகனுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

`அக்ரோன்’ கதையில் வெளிப்படும் நிலைகொள்ளாமைக்கு நேர் எதிரான கதையாக ‘வெள்ளெலிகள்’ கதை இருக்கிறது. இக்கதை புதிய நிலத்துச் சூழலில் ஒன்றித்துத் தங்கள் அடிப்படை உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் இருப்போரைப் பற்றிப் பேசுகிறது. தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் பணிபுரியும் இளைஞனொருவரின் மனைவியின் மகப்பேறு இன்மை கதையாக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் தன் கணவரின் அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரியான அருண் வீட்டில் வாடகைக்குக் குடியேறுகின்றனர் மாலதியும் மணிமாறனும். அந்த வீட்டு உரிமையாளரின் மகனான ஆகாஷ் ‘ஹேம்ஸ்டர்’ எனப்படும் வெள்ளெலிகளை வளர்க்கிறான். கதை முழுதும் குழந்தையின்மையால் மாலதி உணரும் கவலை, தனிமை இவையாவும் சொல்லப்படுகின்றன. வெள்ளெலிகள் போடும் குட்டிகளை ஆசையுடன் மாலதியிடம் காட்டி விற்றுக்கொண்டிருக்கிறான் ஆகாஷ். அதுவே மாலதியுள் மெல்ல வெறுப்பாகத் திரண்டு ஆண் எலியைக் கொன்றுவிட்டுச் செல்ல வைக்கிறது. அந்தத் தருணத்தைத் தன் கணவர் மீதான வெறுப்பினை வெளிப்படுத்தியதாகவும் பார்க்க இயலும். எலிகள் குட்டிகளால் நிறைந்திருப்பதை மாலதி வெறித்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது அதனை உறுதி செய்வதாக இருக்கிறது. வெளிநாட்டில் பொருள் ஈட்டும்போது பின்னுக்குத் தள்ளப்படுகின்ற பாலியல் தேவை ஏற்படுத்தும் உளக்கொந்தளிப்பின் சான்றாகவே மாலதியின் செயல் அமைந்திருக்கிறது.

அழகுநிலாவின் கதைகள் சரளமும் இயல்பான மொழிநடையும் கொண்ட இயல்புவாத எழுத்துகளாக அமைந்திருந்தன. அந்த எளிமையே முதல் வாசிப்பில் மிகச் சாதாரணக் கதைகளாக மாயம் காட்டிச் சென்றன. வாசகன் தன் கற்பனைத்திறனால் விரித்துக்கொண்டாலொழிய இயல்புவாதக் கதைகளின் நுட்பத்தைக் கண்டடைய முடியாது. கதைகளை மீள்வாசிப்பு செய்கின்றபோது கதைகளில் வெளிப்படும் நுட்பமான கலைத் தருணங்களைக் கண்டடைய முடிந்தது.

கீலா எனும் கதையில் ‘அல்சைமர்’ நோயினால் இறந்துபோன தன் அம்மா உதிர்த்த கடைசி சொல்லான ‘கீலா’ எனும் சொல்லை சந்தியா தன் மனத்துள் ஒட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பைத்தியம் எனும் பொருள்படும் மலாய் சொல்லான ‘கீலா’ என்பதற்கான பொருளை அவளின் நாட்குறிப்பில் கண்டடைகிறாள். அம்மா என்றே அறியப்படுகின்ற அவளது தாயார் இளவயதில் மனநல மருத்துவமனை உதவியாளரான தம் தாயுடன் வசித்து வருகிறாள். இவளது குடும்பத்தில் லீ மிங் எனும் சீனப் பெண்ணும் அடைக்கலமாகிறாள். சீனக் குடும்பம் ஒன்றில் வேலைக்காரியாக நடத்தப்படும் லீ மிங் மனநலம் குன்றியவளாக நடித்து அங்கிருந்து தப்பி வருகிறாள். தான் காதலிக்கும் லிம் கோ எனும் இளைஞனுடன் லீ மிங் காதல் கொண்டிருப்பதை அறிகிறாள். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை லிம் கோவின் தாயாருக்குத் தெரியப்படுத்துகிறாள். அவளது தாயார் லீ மிங்கைக் கடுமையாக அடிக்கிறார். அந்த அதிர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்பு மனநலம் குன்றியவளாக லீ மிங்கை முத்திரை குத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரு பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவள் (கீலா) எனச் சொல்வதற்குத் தான் காரணமாக அமைந்துவிட்டதை எண்ணி வாழ்நாளெல்லாம் துயர் உற்றிருக்கிறால் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன் தாயின் நாட்குறிப்பைக் கொண்டு மனநல மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கிருக்கும் படமொன்றில் கூடைக்குள் ஒளிந்திருக்கும் சீன மூதாட்டிதான் லீ மிங் என்பதைச் சந்தியா அறிகிறாள்.

லீ மிங்க்கு ஏற்படுத்திய பாதிப்பை மறக்கும் பொருட்டே அல்சைமரால் பாதிப்புறுகிறாள் சந்தியாவின் அம்மா என எண்ண முடியும். அப்படி அனைத்தும் நினைவிலிருந்து உதறி போன பின்பும் குற்றவுணர்ச்சியின் எச்சமாக ‘கீலா’ எனும் சொல் எஞ்சியிருக்கிறது. மனநல மருத்துவமனையில் கூடைக்குள் ஒளிந்திருந்தவளான லீ மிங்குக்குத்தான் சந்தியாவின் பாட்டி தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். சந்தியாவின் அம்மாவால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவளாக ஆக்கப்படுகின்ற லீ மிங் பல்லாண்டுகள் கழித்து மீண்டும் கூடைக்குள் ஒளிந்திருக்கும் சித்திரமும் சேர்ந்து வாசிப்பில் மறதியும் மரணமும் சேர்ந்த போதும் குற்றவுணர்வு தொடர்கிறது என்ற உணர்வை அடையச் செய்கிறது. அந்தக் குற்றவுணர்வு வரலாற்றின் சான்றாவணங்களான படங்கள், நாட்குறிப்பின் வாயிலாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடத்தப்படுகிறது. இக்கதையுடன் ‘அக்ரோன்’ கதையும் மையப் பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்தி வாசகனுக்கு அவர்களின்பால் பரிவுணர்ச்சியை  ஏற்படுத்துகின்றது. ‘அக்ரோன்’ கதையின் இறுதியிலும் காண்கின்ற வண்ணங்களில் எல்லாமே கருமையே நிலைகொள்கிறது எனும் படிமமும் அந்தப் பரிவுணர்ச்சியையே சித்தரிக்கிறது. ஆயினும் அந்தத் தருணத்தை மேலெடுத்துச் செல்லாமல் முடிந்து விடுவதாக இருந்தது.

இந்தச் சிறுகதைத் தொகுதி ஒட்டுமொத்தப் பார்வையில் தெரிவு செய்த கதைக்கருவிலும் பேசுதளங்களிலும் சிறப்பானதாக இருந்தது.
ஆனால், அவை செய்திகளாக மட்டுமே இடம்பெற்றிருப்பதும், உள் மன அனுபவமாக பரிணாமப்படாததும் அவை நல்ல கதைகளாவதற்குத் தடையாக உள்ளன. கதைகள் வெளிப்புறப் பார்வையாக, கதை மாந்தர்களின் வாயிலாகப் பேசப் படவேண்டிய விஷயங்கள் ஆசிரியரின் பதிவுகளாக இருப்பதால் வாசகருக்கு ஆழமான  அனுபவத்தை தர முடியாமல் போகிறது. உதாரணமாக, அக்ரோன் கதையில் சிங்கப்பூர் போன்ற நவநாகரிக தொழிலாளியின் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை இன்னும் ஆழமாகச் சென்று விவரித்திருந்தால், கதை வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அதேபோல், கீலாவில் அம்மாவின் மனச்சிக்கல் அவரது செயல்கள் மூலமாகவும் உரையாடல் மூலமாகவும் பதிவாகியிருந்தால் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டிருக்கும். சங் கன்சில் கதை  இதில் மிகக் குழப்பான ஒரு கதை. இதில் கதையின் கரு என்ன என்பதில் ஆசியருக்கே மிகுந்த குழப்பம் உள்ளது. மகனின் பதின்ம வயதுப் பருவம் பெற்றோருக்கு ஏற்படுத்தும் பதற்றமா? பேரனுக்கும் பாட்டிக்கும் இடையிலான தலைமுறைச் சிக்கலா? கணவன் குடும்பத்துக்கும் மனைவியின் குடும்பத்துக்கும் இடையிலான பண்பாட்டு இடைவெளியா?

தொடக்க கால புலம்பெயர் தமிழிலக்கியத்தில் மையப் பேசு பொருளாக அமைந்திருந்த அடையாளச் சிக்கல்கள் போன்றவற்றிலிருந்து தாவி புதிய கதைக்கருக்களை அடையாளம் கண்டிருக்கிற ‘சங் கன்ச்சில்’ சிறுகதைத் தொகுப்பு அழகுநிலாவின் இலக்கிய பரிணாமத்தில் முக்கியமானது. சிங்கப்பூர், மலேசியா சார்ந்த இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகவும் அவர் புனைவுகள் உருவாக வேண்டும் என்பது வாசகனாக என் எதிர்ப்பார்ப்பு.

1 comment for “அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

  1. புனிதாவதி
    September 1, 2020 at 12:52 am

    அழகு நீலா அவர்களின் எழுத்துலகத்தை விமர்சித்த அரவின் அவர்களுக்கு நன்றி அக்ரோன் கதை கரு சிறப்பாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *