கே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை

imagesமலேசிய இலக்கியத்தில் கே.பாலமுருகனின் நுழைவு பலவகையிலும் முக்கியமானது. நகர நெருக்கடிகளிலும் புறநகரத் தனிமையிலும் அடையாளம் தொலைத்த விளிம்புநிலை மனிதர்கள் அதிகமும் நடமாடியது இரண்டாயிரத்துக்குப் பின் எழுதப்பட்ட பாலமுருகனின் சிறுகதைகளில்தான். இளம் படைப்பாளியாக எழுதத் தொடங்கியபோதே உலகத் தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் தன் புனைவுகளை எடுத்துச்செல்ல தனக்கான வலைத்தளத்தைத் தொடங்கிய (2008) முன்னோடிகளில் ஒருவர். அதுபோல, தீவிர இலக்கியத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்ட தொடக்க காலத்திலேயே சிற்றிதழ் முயற்சி, இலக்கியச் சந்திப்புகள் என துடிப்புடன் செயல்பட்டவர். படைப்பிலக்கியக்கியம் ரீதியாகவும் சினிமா குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் என உற்சாகமாக இயங்கி வருபவர். ஏறக்குறைய பதின்மூன்று நூல்களை (புனைவுகள் – அ-புனைவுகள்) இதுவரை எழுதியுள்ளார். உண்மையில் எழுத வந்த சில வருடங்களிலேயே கே.பாலமுருகன் மலேசியாவைத் தாண்டியும் அடையாளம் காணப்பட்ட எழுத்தாளராகத் திகழ்ந்தார். தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது அதன் காரணிகளில் ஒன்று.

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்

navin‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ அவ்வாறு போட்டி ஒன்றில் முதல் பரிசு வென்ற நாவல். 2007இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டியில் வென்று 2009இல் நூலுருவாக்கம் பெற்றது. 2012இல் அந்நாவல் குறித்து விரிவான கட்டுரை ஒன்று எழுதினேன். இன்றுவரையும் அந்நாவல் குறித்து எழுதப்பட்ட விரிவான கட்டுரை அது ஒன்று மட்டுமே. அதில் ‘வடிவ ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும்  நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் மலேசியாவில் புதிய முயற்சி. மலேசிய நாவல்களின் புதிய பரிணாமத்திற்கு பாலமுருகன் ஒரு தொடக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். எட்டு வருடங்களில் பல்வேறு இலக்கிய வாசிப்புப் பயிற்சிக்குப் பின்பு இந்நாவலை மறுவாசிப்பு செய்தபோதும் இந்த அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு குடும்பம் கடன் தொல்லையால் சிதறிப்போவதும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களும் அக்குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் அந்தரங்கமான குரல்களும் நாவலை வடிவமைத்துள்ளது.

சீதாம்பரம் – சாரதா எனும் தம்பதி. அவர்களுக்கு அஞ்சலி, கணேசன், செல்வம், தமிழ்வாணன் என்ற நான்கு குழந்தைகள். கதை முழுக்க இவர்களைச் சுற்றிதான் நகர்கிறது. மந்தம் சூழ்ந்து வரண்டுபோயுள்ள இவர்களின் நிகழ்காலமும் உணர்ச்சிகள் மிகுந்த கனவுகளால் ஆன கடந்த காலமும் மூங்கில் கூடையைப் போல நாலாபுறமும் பின்னிப்பின்னி முடைந்து புனையப்பட்டுள்ளது நாவல்.

கடன் கொடுத்தவர்களின் நச்சரிப்பாலும் மிரட்டலாலும் பயந்து, சீதாம்பரம் தன் இளைய மகன் செல்வத்தை நண்பன் வீட்டில் தங்க வைத்து, ஊரை விட்டே ஓடிவிட முடிவெடுக்கிறார். அவருக்கு செல்வம் கடைசியாக அழுதது நீங்காத ஓலமாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. இரவில் மூடிக்கிடக்கும் ஒரு நாசி லெமாக் கடையின் நீள் நாற்காலியில் படுத்தபடி தனது இறந்தகாலங்களை யோசிக்கிறார்.

மூடிக்கிடக்கும் அறை இருளில், அச்சத்தில் தனித்திருக்கும் அவர் மனைவி சாரதாவின் சிந்தனையும் இறந்த காலங்களை அசை போடுகிறது. அதில் அகன்ற கண், பெரிய தலை என குறையுடன் பிறந்த மகன் தமிழ்வாணனின் நினைவுகள் மோதுகின்றன. அவனை வளர்க்க இயலாமல் சிரமத்தில் கோலாலம்பூரில் வசிக்கும் ஒருவரிடம் கொடுத்ததும்; அதனால் ஏற்பட்ட தோட்டத்து வசைகளும் அப்போதும் காதுக்குள் கேட்கின்றன.

மகள் அஞ்சலியும் திருமணமாகி ஈப்போவின் நகர வாழ்வோடு இணங்க முடியாமல் தனது இறந்த காலத்தில் மூழ்குகிறாள். தனது சின்ன வயது தோட்டத்து வாழ்விலிருந்து தொடங்கும் அவள் எண்ணங்கள் திருமணத்தால் இப்போது இருளடைந்து விட்டதை எண்ணி அழுகிறாள்.  வாழ்க்கை மௌனமாகிவிட, செய்ய ஒன்றும் இல்லாத அவள் நாள்தோறும் துணிகளைக் கலைத்து கலைத்து மடிக்கிறாள்.

கடன்வாங்கியுள்ள அப்பாவின் கையாலாகாததனத்தால், தனது வாழ்வை தானே நண்பர்களுடன் தீர்மானிக்க பட்டர்வோர்த்திற்கு ஓடிப்போய்விடும் கணேசனால் இன்னொரு கோணத்திலிருந்து நாவல் நகர்கிறது.

இவ்வாறு நான்கு நபர்களின் நினைவிலிருந்தும் நிஜத்திலிருந்து உருப்பெறும் நாவல் அவரவர் நியாயங்களைப் பேசுகிறது. நால்வரும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாக முரண்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் இணைந்து வாழ வேண்டியுள்ளது. மகளின் திருமணத்துக்காக பெற்ற கடனை சீதாம்பரம் உள்ளூர நியாயப்படுத்துகிறார். வறுமையில் வளர்க்க இயலாத ஊனமுற்ற குழந்தையை அடுத்தவருக்கு தத்துக் கொடுத்ததை சாரதாவும் ஏற்றுக்கொண்டே வாழ்கிறாள். இங்கிருந்தால் இனி முன்னேற்றம் இல்லை என முடிவெடுத்த கணேசன் வீட்டைவிட்டு ஓடுவதை நியாயப்படுத்துகிறான். எதற்குமே அசையாத, சத்தமற்ற அந்த வீட்டிலிருந்து மீள, கணவனைவிட்டு விட்டு தன்னைக் காதலிக்கும் இளைஞனை நம்பி கோலாலம்பூருக்கு பேருந்து ஏறும் அஞ்சலியும் தனக்கான நியாயங்களை வைத்துள்ளாள். இதில் எல்லோரும் வருத்தம் கொண்டிருப்பதாக பாவனை செய்துகொண்டிருந்தாலும், துரத்தும் வாழ்வை எதிர்கொள்ளவும்  சலனமற்றிருப்பதையும் பழகிக்கொள்ளவே முயல்கிறார்கள்.

ஒவ்வொருவரின் சிந்தனையிலும் மீண்டும் மீண்டும் தோட்டமும், தோட்டத்திலிருந்து மாற்றலாகிய கம்பமும் வெவ்வேறு கோணங்களிலிருந்து காட்சிப்படுத்தப்படுகின்றன. தோட்டத்தில் மாடு இறந்துவிட்டால் சாங்கியம் செய்வது, பாட்டிகளில் நம்பிக்கையில் வாழும் பேய்கள், நாவலின் பிற்பகுதியில் வலுவாக உருவாகும் கதாபாத்திரத்திரம் குறித்த துல்லியமான குறியீடுகள், கம்பத்தில் இருக்கும் சிறிய தொழிற்சாலைகள் குறித்த விவரிப்புகள், ஈசல்களை விரட்டவும் தேரைகளை அடிக்காமல் இருக்கவும் எளிய மனிதர்கள் கொண்டுள்ள பழக்கங்கள் என தோட்டமும் கம்பமுமாக பாலமுருகன் காட்டும் நிலமும் வாழ்க்கையும் சுவாரசியமானது.

நாவல் முழுவதும் அச்சத்தை படரவிட்டுள்ளார் பாலமுருகன். அத்தனை கதாபாத்திரங்களும் திக்கற்ற இருளுக்குள் தட்டுத்தடுமாறி நடக்கிறார்கள். அவர்களின் இறந்தகால நினைவுகளிலும் மேலும் மேலும் இருள் அப்பி கிடக்கிறது. உள்ளும் புறமும் இருள் நிறைந்த மனிதர்களிடம் இருந்து பயங்களே பொங்கி எழுகின்றன. அவை ஆழ்மன பயங்கள். அந்தப் பயங்களை பாலமுருகன் மிக நுண்மையான படிமங்களாகச் சித்தரித்துள்ளார். உண்மையில் பாலமுருகன் அச்சத்தை கலையாக்கும் நுட்பம் தெரிந்தவர் என்றே இந்நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது. அதை ஒரு கண்ணிபோல பயன்படுத்துகிறார். ‘ரோலர் கோஸ்டர்’ விளையாடப் பயந்த முகத்துடன் வரிசையில் நிற்பதுபோல அவர் உருவாக்கும் அச்சத்தை வாசகனாக விரும்பியே அணுகுகிறோம்.

நாசி லெமாக் கடையில் படுத்துள்ள சீதாம்பரத்தால் தூங்க முடியாதபடி துரத்தும் காட்சிகளும், சாரதாவின் ஆழ்மனதில் உருவாகும் பயங்கரமான கனவுகளும், பிரமையில் யாரோ தலையில் ஓங்கி உதைக்க, ரப்பர் மரங்களுக்கிடையில் பறப்பதாக பதரும் கணேசனும் ஒவ்வொரு பகுதியிலும் அச்சத்தை நிரப்பிவிட்டுச் செல்கிறார்கள். கடன்பட்டவர்களின் மனநிலையையும் பாதுகாப்பின்மையையும் பாலமுருகன் ஏற்படுத்தும் கனவுகளால் உணரமுடிகின்றது. குற்ற உணர்வுகளை ஏந்தியிருக்கும் மனம் சதா ஏதோ ஒரு கற்பனை வடிவத்துடன் போராட வேண்டியுள்ளது. வாழ்க்கை அவரை விடுவதாயில்லை. எல்லா மீறல்களை செய்தபின்பும் காலம் கருணையற்ற அனுபவங்களைக் கொடுத்த பின்பும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு மனம் விலகி நின்ற பின்பும் அவர்கள் வாழவே துடிக்கிறார்கள். உயிரின் ஆதி இச்சை அது. என்ன செய்தாவது நிலைக்கத் துடிக்கிறது.

‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ மலேசிய நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முயற்சி.   உள்ளடக்கமும் அதற்குத் தோதான வடிவமும் ஒன்றோடொன்று முறுக்கி, பொருந்தி இணையான வீச்சுடன்  உருவாகியுள்ளது. நாவலில் பாலமுருகன் கையாண்டுள்ள மொழி, வசனத்திலும் விவரிப்பிலும் உயிர்க்கிறது. கெடா மாநிலத்தில் மட்டுமே பயன்படுத்தும் வட்டாரச் சொற்களை நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதுவரை மலேசிய புனைவுகளில் காட்டப்படாத வாழ்க்கை முறை நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனக் கம்பத்தில் வீட்டில் இருந்தபடியே கையுறை தயாரிக்கும் சாரதா, மெக்னம், டோட்டோ முடிவு எண்களைச் சுமந்தபடி சீன உணவகங்களில் வலம் வரும் சீதாம்பரம், சீனக்கம்பங்களில் தவிர்க்க முடியாத ‘டத்தோ சாமி’ குறித்த சித்திரம் என அதிகம் கவனம் கொள்ளப்படாத சீனக் கம்பங்களின் புதிய நிலத்தையும் மனிதர்களையும் இந்நாவலில் அறிமுகப்படுத்தியுள்ளார். மலேசியாவில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன் போன்றவர்களால் சில சிறுகதைகளில் காட்டப்பட்டிருந்தாலும் பாலமுருகன் தன் புனைவுகளின் வழி அதன் பரப்பை விசாலமாக்கியவர் என்பதற்கு இந்நாவல் சான்று.

கதாபாத்திரங்கள் பேசி முடித்தபின் மீண்டும் தன் வரிகளால் ஆசிரியர் அதை விளக்க முயல்வது, கதாபாத்திரம் தன் தன்மையை மீறிப் பேசுவது, மலாய் வசனங்களை மீண்டும் தமிழில் விளக்கமாக்கிச் சொல்லிச்செல்வது, உடல்குறையுடன் பிறந்த தமிழ்வாணன் குறித்த மனதில் பதியாத சித்திரம், வரலாற்றுப் பின்னணியில் உள்ள பலவீனங்கள் என சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை மீறி இந்நாவலை முக்கியமானதாக மாற்றுவது நாவல் எனும் கலை வடிவத்திற்கே உரிய விரிவான வாழ்க்கை விசாரணையும் அதன் வழி ஆசிரியர் அடையும் துர்நிகழ்வுகளின் இரக்கமற்ற நிதர்சனங்களும்தான்.

ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

இந்நாவலுக்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து (2015) அவர் எழுதிய ‘ஆப்பே download-2கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ குறுநாவலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்வதுதான்.

தோட்டத்துண்டாடலுக்குப்பின் சிறு நகரங்களை நோக்கி இடம்பெயரும் இந்தியர்களிடம் உருவான குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பேசும் குறுநாவல் இது. பெடோங் என்ற புறநகர் பகுதியிலிருந்தும் பிற தோட்டங்களில் இருந்தும் ஒரு மலிவு அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘அடைக்கப்படும்’ தமிழர்கள் மத்தியில் உருவாகும் பகையும் வன்முறையும் அதுசார்ந்த குண்டர் குழுக்களின் நடவடிக்கைகளுமே நாவலின் சாரம். வலுவான கதைப் பின்னணியைக் கொண்ட நாவல் இது. துண்டாடலுக்குப் பிறகு தோட்டத்தைவிட்டு இருண்ட திசைகளில் தமிழர்கள் புகுந்து நுழைந்த புறநகரங்களின் முடுக்குகளில் உருவான புதிய வாழ்க்கையைப் பேச முயல்வது. பெரும் நிலபரப்பில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை சின்னஞ்சிறிய மலிவு அடுக்குமாடிகளில் குடியமர்த்தத் தொடங்கவும் தன்னியல்பாக உருவாகும் இருள் வாழ்வை நெருங்கிச் சென்று பார்க்கும் முயற்சி இந்நாவல். ஒரு வகையில் மலேசியத் தமிழ் நாவல்களில் அடுக்குமாடி வாழ்வை முதன்முறையாகப் பேச முயலும் முயற்சி என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு நாவலாக தன் முக்கியத்துவத்தை நிலைநிறுத்த ‘பேசப்படும்’ கரு மட்டும் காரணியாக இருப்பதில்லை.

இந்நாவலை வாசித்து முடித்தபோது எட்டு ஆண்டுகளுக்குப் பின் புனைவுக்கான அத்தனை கலை நுட்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாலமுருகன் இதனை எழுதியுள்ளாரோ என்றே தோன்றியது. அதற்கு முதல் காரணம் நாவல் எடுத்துக்கொண்டு விரிந்த வாழ்வுக்கான களம் சில பக்கங்களிலேயே வன்முறை கலாச்சாரத்தைக் கையில் எடுத்து சுருங்கி விடுகிறது. இறுக்கிப்பிடித்து கசகசப்பாகிவிட்ட வாழ்வினுள் நுழையும் வன்முறைக்கான மனநிலை, உளவியல் நெருக்கடி, பொருளியல் தேவை, மைய நீரோட்டத்தின் அரசியல் துரத்தியடிப்பு என எது குறித்தும் கேள்வியோ, தொடர்போ இல்லாமல் ஜனரஞ்சக புனைவுக்கே உரிய பாணியில் வாழ்வை மடக்கி வைத்து, சுவாரசியத்துக்காக தனக்கு அறிமுகமே இல்லாத குண்டர் கும்பலின் உக்கிரமான களத்தை கையில் எடுக்கிறார் பாலமுருகன். அதற்கு குறைந்தபட்ச கற்பனையுடன் நம்பகமான தரவுகளும் பொருந்திப்போவது அவசியம். அதுவே ஒரு புனைவை வாசகனுக்கு நெருக்கமாக்குகிறது. பாலமுருகனின் இப்புனைவு குண்டர் கும்பலிடமிருந்து முற்றிலும் மனம் விலகியுள்ள ஒருவன், வீட்டில் இருந்தபடி அவ்வப்போது கேட்டு அறிந்துகொண்ட எளிய கதைகளின் தொகுப்பாகவே மிஞ்சுகிறது.

கே. பாலமுருகனின் இப்படைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதற்கு அதன் வடிவ அபோதமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்படைப்பை அவர் குறுநாவல் என்றே வகைப்படுத்தியிருக்கின்றார். ஆகவே குறுநாவல் என்பதன் வடிவத்தை பக்க அளவில் முடிவு செய்யும் பிழையான மனப்பான்மையோடு அவர் இதை எழுதியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் இப்புனைவில் விவரணைகளையும் காட்சிகளையும் பக்க விரிவாக்கத்துக்கு அஞ்சி சுருக்கிக்கொள்ளும் போக்கே மிகுந்துள்ளது. ஆயினும் குறுநாவல் என்பது பக்க அளவோடு தொடர்புடையது அல்ல என்ற கருத்து தமிழ் இலக்கிய உலகில் இந்நாவல் எழுதப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நிலைகொண்டுவிட்டது. ஆகவே தான் எழுதுவது குறுநாவல் என்ற முடிவோடு எழுதும் யாரும் இன்று பக்க அளவை முன்வைத்துத் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளுவதாகக் கூறும் காரணம் ஏற்புடையது அல்ல. அது அவர்களின் இலக்கியப் புரிதல் குறித்த பிழையும் போதாமையும் மட்டுமே. அவ்வகையாக எழுத்துக்குத் தடை போட்டுக்கொள்வது, தங்கள் படைப்புக்குத் தாங்களே செய்துகொள்ளும் துரோகமாகவே முடியும்.

நாவல் / குறுநாவலின் நோக்கம் எளிய வாழ்க்கைச் சித்தரிப்பைச் சொல்வதல்ல. ஏற்கனவே பிரபலமாகச் சொல்லப்பட்ட பத்திரிகைச் செய்திகளை அல்லது சமூக அக்கறை கொண்ட மேடைப்பேச்சுகளை வசனங்களாக ஒப்புவிக்கும் பிரதிநிதி கதாபாத்திரங்களை உருவாக்குவதல்ல. ஒரு சூழல் உருவாக்கிக் கொடுக்கும் கருத்தை சம்பவங்களாக வடிப்பதல்ல. அடிப்படையில் விவாத அம்சம் இருந்தால் மட்டுமே நாவல் / குறுநாவல் வடிவத்தை ஓர் எழுத்தாளன் தேர்ந்தெடுப்பதில் நியாயம் உண்டாகிறது. அந்த மனநிலையே அப்புனைவின் செல்திசையைத் தீர்மானிக்கிறது. கே.பாலமுருகனின் இந்தக் குறுநாவல் எளிய வாழ்க்கைச் சித்தரிப்பும் நெடுங்காலமாக மலேசியத் தமிழர்களின் இன்றைய இக்கட்டான நிலை குறித்து சொல்லப்பட்ட பிரபல மேடைப்பேச்சுகளையும் ஒத்தது. அது குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லாதது. அதிலிருந்து இன்னும் ஒரு படி கீழ் இறங்கி ஜனரஞ்சகப்படுத்துவது.

குண்டர் கும்பலில் இணையும் மனிதர்கள் தனியாக ஒரு தீவில் வாழுகின்ற ஜீவராசிகள் அல்ல. அவர்கள் சமூகத்தினுள் புழங்கி அங்கிருந்து உருக்கொள்ளும் மனிதர்கள். சமூகத்தின் அத்தனை மாற்றங்களும் நெருக்கடிகளும் அவர்களையும் பாதிக்கிறது. குடும்பங்களில், வேலையிடங்களில், அரசியல் கட்சிகளில் அவர்களின் முகங்கள் மாறி மாறி உருக்கொள்கின்றன. அந்த வாழ்வுக்குள் ஒரு வன்முறையும் போதையும் குற்றங்களும் உபரிகளாக வந்துபோபவை. அவ்வகையில் இந்நாவலில் விரிவாகக் காட்டப்பட்டிருக்க வேண்டிய அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையும் புறநகர் பகுதியின் அவலங்களும் நீர்த்துப்போய் ஆப்பே கடையில் மையம் கொள்கிறது. ஆப்பே கடை எனப்படும் ஆ பேங் கடையில் தேநீர், காப்பியுடன் சாராயமும் பீரும் கிடைக்கின்றன. எனவே அது சாமானியர்களுக்கு கதை பேசும் இடமாகவும் குண்டர்களுக்கு தங்கள் இருள் வாழ்வின் ரகசியம் பேசும் தளமாகவும் உள்ளது. 236 டேபிள் டாக்ஸ் (மேசை உரையாடல்கள்) நடந்து முடிந்திருந்த ஆப்பே கடையில் சண்டையும் சாவும் சகஜமாகிறது. இப்படி வன்முறை சார்ந்த பின்னணியில் நுழையும் இக்குறுநாவல் அக்களத்திற்கான தீவிரத்தையும் கொண்டிருக்கவில்லை.

எண்பது பக்கம் கொண்ட இந்தக் குறுநாவலில் வாசகர்களுக்குத் துணைத் தகவல்களாக முதல் பக்கத்திலேயே ‘பெடோங் வரலாற்றுச் சுருக்கம்’ என பாலமுருகன் நாவலின் சுருக்கத்தை அட்டவணையிட்டு ஆண்டுவாரியாகத் தொகுத்தளிக்கிறார். அடுத்ததாக நாவலுக்குள் யார் யார், எந்தெந்த குண்டர் குழுக்களில் உள்ளனர் எனப் தனிப் பெயர்ப்பட்டியல் அமைத்துக்கொடுத்துள்ளார். நாவலின் மையமாக வரும் ஆப்பே கடையில் வரைபடத்தைப் போட்டு எங்கே வட்ட மேசைகள் இருக்கும், எங்கே காப்பி கடை இருக்கும் என விளக்கியுள்ளார். பின்னர் பெடோங் அடுக்குமாடிப் பகுதிக்குத் தனியாக ஒரு வரைபடமும் இணைத்துள்ளார். வாசகனின் கூடுதல் புரிதலுக்கு அவர் அதை அவர் செய்திருக்கக்கூடும். ஆனால் இந்த வரைபடங்கள் செய்யும் அதே பணியைத்தான் பாலமுருகனின் புனைவு மொழியும் செய்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களும் நதியோரக் கம்பமும் பென்சில் கோட்டு ஓவிய விவரணைகளாக உள்ளன. அவை மனித நடமாட்டங்களால் உயிர் பெறவில்லை. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், சீனர்கள், வியாபாரிகள், திருடர்கள், நாய்கள், எருமைகள் என உயிர்களின் ஓசைகளாலும் அசைவுகளாலும் எங்குமே புனைவின் உயிரோட்ட சாத்தியத்தை எட்டவே இல்லை. அதேபோல நாவல் அடிநாதமாகப் பேச விளையும் குண்டர் கும்பல் குறித்தும் மேம்போக்கான விவரிப்புகளே உள்ளன. அதற்கு முதன்மையாக காரணம் பாலமுருகனுக்கு குண்டர் கும்பல் குறித்து போதுமான புரிதல் இல்லை என்பதே. அதோடு தனக்கு அறிமுகம் இல்லாத ஒன்றை முழுத்தீவிரத்தோடு கற்பனையால் சென்று தொடும் முனைப்பும் அவரிடம் இல்லை.

தாய்லாந்திலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து வியாபாரம் செய்வது, ஆளைக் குறிவைத்து திருவிழாவில் கொலை செய்வது, துப்பாக்கி கடத்துவது, தாய்லாந்திலிருந்து பெண்களைக் கொண்டு வந்து விபச்சாரம் செய்வது என பாலமுருகன் சொல்லும் தகவல்கள் எல்லாம் தகவல்களாகவே நின்று விடுகின்றன. இலக்கிய வாசிப்பு அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்தத் தகவல்கள் விதந்தோத போதுமானவை. அதற்கு காரணம் கதை என்பது ஒன்றை ‘தெரிவிப்பது’ மட்டுமே என அவர்கள் நம்புகிறார்கள். காலகாலமாக செவிவழியாக பிறர் சொல்லும் அனுபவங்களை எவ்வாறு கேட்டுத் தெரிந்துகொள்கிறார்களோ அப்படியே எழுத்தும் இருந்தால் திருப்தி அடைகிறார்கள். இலக்கிய வாசகன் மட்டுமே சித்தரிப்புகளால் நுண்தகவல்களால் நாவலில் ஓர் அனுபவம் நிகழ வேண்டும் என விரும்புகிறான். அவ்வாறு இல்லாத ஒன்றை புறக்கணிக்கிறான். பாலமுருகனின் இந்த நாவல் அடிப்படையான இலக்கியத் தகுதியை இழக்கவும் இந்தத் ‘தெரிவிக்கும்’ தன்மையே காரணமாக உள்ளது.

1970-ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை பெடோங் பகுதியில் நடந்த சம்பவங்களைச் சொல்லும் இந்நாவல் கலை ரீதியாக மட்டுமில்லாது உள்ளடக்கம் சார்ந்தும் பலவீனமாக இருப்பதுதான் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ’29 ஜூன் 1993, கிள்ளான் சாலையில் இருந்து கொண்டு நாட்டுக்கே அச்சுறுத்தலாக இருந்த பெந்தோங் காளி’ என நாவல்  தொடங்குகிறது. பெந்தோங் காளி தனது 04 குண்டர் கும்பலை அமைத்தது பழைய கிள்ளான் சாலையில் (Old Klang Road). கிள்ளான் சாலையும் பழைய கிள்ளான் சாலையும் இருக்கும் மாவட்டங்களும் அதன் தன்மைகளும் முற்றிலும் வேறு என்பதை சிலாங்கூர் வாசிகள் அறிவர். இந்நாவல் பெந்தோங் காளியைப் பற்றியது அல்ல என்றாலும் மலேசிய குண்டர் கும்பல் வரலாற்றில் பெயர் பதித்த ஒருவரிடமிருந்து தொடங்கும் பிழையான தகவலுடன்தான் நாவலுக்குள் நுழைய முடிகிறது. நாவல் முழுவதும் இதுபோன்ற குறைகளுடன்தான் தொடர்கிறது. தகவல் பிழைகளை மையப்படுத்தி ஒரு புனைவை புறக்கணிப்பது சரியில்லைதான். ஒரு புனைவு அதன் கற்பனாவாதத்திலும் கலைச்செழுமையிலும் உச்சமாக விளங்கும்போது இத்தகைய தகவல் பிழைகள் பொருட்படுத்தத்தக்கதாக இருப்பதில்லை. ஆனால், சம்பவங்களையும் தகவல்களையும் சொல்வதற்காக எழுதப்படும் ஒரு படைப்பில், அப்பட்டமாக அறியப்பட்ட தகவல்களே தவறாக இருப்பது, வாசிப்புக்கு தடையாக உள்ளது. அதுவும் இந்த நாவலில் மையமாக விளங்கும் குண்டர் கும்பல் தொடர்பான அவரது கற்பனையான முடிவுகளும் மேம்போக்கான ஆய்வுகளும் போலியான புனைவையே உருவாக்கியுள்ளது.

பலவீனமான இலக்கியத்திற்கும் (poor literature) போலி இலக்கியத்திற்குமான (fake literature) அடிப்படை வேறுபாடே எழுத்தாளனின் நோக்கம்தான். அகத்தினுள் முழுமையடையாமல் புற இலக்குகளைக் குறி வைத்து வடிவமைக்கப்படும் எந்தக் கலையுமே போலியானதுதான். எழுத்தாளனுக்கு வாழ்க்கையைப் பற்றி எழுந்த உண்மையான அக்கறை அல்லது கேள்வியிலிருந்து புனைவு உருவாகும்போது அதில் கலைக் குறைபாடு இருந்தாலும் அவர் நோக்கத்தில் உள்ள உண்மை அதன் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படும். (எ.கா: நினைவுச்சின்னம், லட்சியப்பயணம்) ஆனால், எழுத்தாளனுக்குள் உருக்கொள்ளாத ஒன்று அவனிடம் ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்திறனால் (craft) பாவனையாகக் கோர்த்து வாசகன் முன் வைக்கப்படுகையில் அது போலி இலக்கியம் ஆகிறது. இலக்கிய வாசகன் இந்தத் தொழில்நுட்பத் திறனிலெல்லாம் மயங்குவதில்லை. எவ்வளவு வண்ணங்களை அள்ளி அள்ளித் தூவிச் சிதற விட்டாலும் தேர்ந்த ஓவிய ரசிகன் நவீன ஓவியத்தின் ஆன்மாவை அடையாளம் காண்பதுபோல எத்தனை சொற்களை வைத்து சாகசம் செய்தாலும் இலக்கிய வாசகன் போலி இலக்கியங்களை எளிதாக அடையாளம் கண்டுவிடுவான்.

இந்த விமர்சனம் படைப்பாளியை நோக்கியது அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எழுத்தாளனின் ஆளுமையைக் கீழிறக்குவது என் நோக்கமல்ல. தேர்ந்த படைப்பாளியிடமிருந்தும் போலியான இலக்கியங்கள் வரலாம். தன்னை ஈர்த்த ஒரு கருவை, உத்தியை ஓர் எழுத்தாளன் செய்துபார்க்க விரும்பலாம். ஆனால் அப்படைப்புக்குத் தன்னை எவ்வளவு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதும் அப்படைப்புக்கு எவ்வளவு உண்மையாக இருந்துள்ளார் என்பதும் முக்கியமானது. பாலமுருகன் பல நேர்காணல்களில் நாவலுக்காக கள ஆய்வுகள் செய்ததாகவும் பிற ஆய்வுகளை வாசித்ததாகவும் கூறியுள்ளார். அவை நாவலில் எங்கே என்பதுதான் கேள்வி. படைப்புக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்பதே விமர்சனம். தான் தினமும் பத்து கிலோ மீட்டர் ஓடுவதாகத் தொப்பையுடன் ஒருவன் வந்து சொன்னால் எப்படி பொருட்படுத்த முடிவதில்லையோ அப்படிதான் இதுபோன்ற வாக்குமூலங்கள் ஆகிவிடுகின்றன.

இந்நாவலின் ஆசிரியர் உண்மையில் அநாதைகளாக விடப்பட்ட மக்களின் கதையைச் சொல்ல வருகிறார். அது உருக்கொள்ளாமல் போகவே அங்கிருந்து சுவாரசியமான ஒரு பகுதியை நீட்டிச்செல்கிறார். அதில் உள்ள தனது பலவீனத்தை வரிசையற்ற முன் பின் கதை கூறல் மூலம் சமன் செய்ய முயல்கிறார். எதையும் விரிவாக்க முடியாமல் குறுநாவல் எனச் சுருக்கி முடிக்கிறார். கலை ரீதியாகவும் உள்ளடக்கம் ரீதியாகவும் எவ்விதத்திலும் முழுமையடையாத அதனுள் உள்ள அடிப்படையான தமிழர்களின் சோகக் கதைக்காக இது மலேசிய மக்களின் இருண்ட வாழ்வை சொல்லும் நாவலாகி விடுகிறது.

இதே வரலாற்றை விரிவாகச் சொன்ன ஆய்வுகளும் கட்டுரைகளும் ஏராளமாகவே நம்மிடம் இருக்கும்போது நாவலின் தேவை இதை இன்னொரு வகையில் கதையாகச் சொல்வது மட்டும்தானா? புனைவின் தேவை ஒன்றை இன்னொரு வடிவத்தில் சொல்வதில் இல்லை. அதைக் கேள்விகளுடன் ஆராய்ந்து செல்வதுதான் எழுத்தாளனின் முன் உள்ள சவால். நாவலில் அப்படி எந்தக் கேள்வியும் இல்லை. தோட்டத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள் அனைவருமே குண்டர் கும்பல்களில் சேர்வதில்லை. எனில், சேரக் காரணமாக இருப்பது எது? கம்பத்தில் வசித்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் அடுக்குமாடி வீடுகளுக்குச் சென்றார்கள் என நாவலில் வருகிறது. என்றால், அவர்கள் வளர்த்த விலங்குகள் என்ன ஆயின? செடிகளும் மரங்களும் என்ன ஆயின? ஒரு நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டவர்களுக்கு அதை விட்டு அடுக்குமாடிக்கு வரும்போது எந்தவித எதிர்ப்பும் இல்லையா? அடுக்குமாடி வீட்டில் நிலைத்தபின் அங்கே வாழ்கின்ற பெண்களுக்கிடையில் சம்பாஷனைகளே இல்லையா? அவர்களுடனான உரசல்களும் விரிசல்களும் இல்லையா? சொல்லியழ புலம்பல்கள் இல்லையா?

ஆசிரியருக்கு இதற்கான விளக்கம் இருக்கலாம். அவரது நோக்கம் புறக்கணிக்கப்பட்டவர்களின் வன்முறை வாழ்வைச் சொல்வதாக இருக்கலாம். அதில் சிக்கல் இல்லை. குறுநாவல் வடிவம் சிறுகதையின் ஒருமைத் தன்மையைக் கொண்டதுதான். ஆனால் குண்டர் கும்பல் குறித்து நாவலை நகர்த்திய போதாவது சில அடிப்படைத் தகவல்களைத் தேடியிருக்கலாம்.

நாவலில் சில இடங்களில் ‘குண்டர் கும்பலில் சேர்ந்து பயிற்சி பெற்றவன்’ எனும் வரிகள் வருகின்றன. குண்டர் கும்பல் என்பது விடுதலைப் போராட்டக்குழுவல்ல. அங்குப் பயிற்சிகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொன்னூறுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் உள்ள வாழைத்தோப்புகளில் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சிகள் நடந்ததுண்டு. மலேசியாவில் அப்படி எதுவும் நடந்ததற்கான தகவல்களோ தரவுகளோ இல்லை. ஆனால் புனைவு எழுத்தாளனுக்கு அப்படிக் கற்பனையாக உருவாக்கும் சுதந்திரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்  நாவலில் என்னவிதமான பயிற்சி என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதைவிட முக்கியமாக 236 (table talk) மேசை உரையாடல்கள் நடந்து முடிந்தது எனச் சொல்லப்பட்டாலும் அதன் காட்சியமைவும் விவரிப்பும் நாவலில் எங்குமே இடம்பெறவில்லை.

குண்டர் கும்பல்களில் இந்த ‘table talk’ என்பது முக்கியமான அம்சம். அவ்வார்த்தையை நாவல் முழுவதும் அநாசயமாகப் பயன்படுத்திச் செல்கிறார் ஆசிரியர். Table talkஇன் போது முக்கியமான குறியீடாக இடம்பெறுவது மதுக்குவளை. உரையாடல் சமாதானத்தில் முடிந்தால் அதுவரை அனைவரும் பருகிய மதுவுக்கு சமாதானம் பேச வந்தவர் பணம் செலுத்த வேண்டும். சமாதானப் பேச்சுக்கு இடமில்லை என்றால் மதுக் குவளை தலைகீழாக மேசையில் ‘டப்’ என கவிழ்க்கப்படும். அது இனி சமாதானப் பேச்சுக்கு இடம் இல்லை என்பதாகப் பொருள். அப்படிக் கவிழ்க்கப்படும் அந்த நிமிடத்துக்காகக் கடைக்குள் இரு கும்பல்களும் காத்திருக்கும். குவளை கவிழ்க்கப்படும் சத்தம் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது அங்கு மறைக்கப்பட்ட ஆயுதத்துடன் காத்திருப்பவர் மட்டுமே அறியக்கூடியது. நாவலின் முகப்பிலேயே ‘All about table talk’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேசை உரையாடல் என பக்கத்துக்குப் பக்கம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காட்சியோ உரையாடல்களோ மருந்துக்கும் இல்லாமல் குறைந்தபட்ச மதுக்கடை உரையாடல்கள் கூட இடம்பெறாமல் நாவல் நகர்கிறது. ஒரு திட்டத்தை அமுல்படுத்தும் முன் அமர்ந்து பேசி முடிவெடுப்பதை பாலமுருகன் table talk என வர்ணிக்கிறார். அவர்கள் அப்படித்தான் அழைத்துக்கொள்வார்கள் என்றும் பக்கம் 27இல் சொல்கிறார்.  அந்த ஊரில் அப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள் எனக் காரணம் கூறப்படலாம். அது எங்கள் ஊரில் பூப்பந்து மட்டையில்தான் காற்பந்து விளையாடுவோம் என்பதைப் போன்றது. அப்படியும் இரு குண்டர் குழுக்களுக்கு மத்தியில் நடக்கும் 105ஆவது table talkஉம் இதே பலவீனத்தோடுதான் எழுதப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கிச் சூடெல்லாம் வேறு நடக்கிறது. ஒரு கணக்குக்கு 235ஆவது மேசை உரையாடல் 1987இல் நடக்கிறதென்றால் 105ஆவது உரையாடல் எழுபதுகளில் நடந்திருக்கலாம். எழுபதுகளில் தமிழர் குண்டர் கும்பலில் துப்பாக்கி இருந்ததென்பது முற்றிலும் நம்பகமற்றது.

குண்டர் கும்பலின் சுவாரசியமே ஆயுதங்கள்தான். தமிழர்களின் குண்டர் கும்பலில் துப்பாக்கி புகுந்தது மிகப் பிற்காலத்தில்தான். நாவல் கெடா மாநிலத்தில் நடப்பதால் இன்னும் துல்லியமாக அதன் பரிணாமத்தை என்னால் நினைவுகூர முடியும். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கத்திகள்தான் குண்டர் கும்பலின் அடையாளம். யாரிடம் என்ன வகையான கத்தி உள்ளது, அதன் நீளம் என்ன, வடிவம் என்ன, எங்கே அது மறைத்து வைக்கப்படுள்ளது என்பதே குண்டர் கும்பல் மத்தியில் முக்கிய பேச்சாக இருக்கும். எல்லாக் கத்திகளும் ஒரே அம்சம் பொருந்தியவை அல்ல. வெட்டும் கத்தியும் குத்தும் கத்தியும் வெவ்வேறு. அறுக்கும் கத்தியும் கீறும் கத்தியும் வெவ்வேறு. அவற்றைப் பிடிக்கவும் தனி உத்திகள் உள்ளன. கத்தியில் இருந்து துப்பாக்கிக்குள் செல்லும் பரிணாமம் மிக முக்கியமானது. இவை எதுவும் குண்டர் கும்பல் வாழ்வை சொல்வதாகக் குறிப்பிடும் இந்த நாவலில் இல்லை. நாவலில் எண்பதுகளில் எல்லாம் துப்பாக்கி புழக்கம் தொடங்கிவிடுகிறது. துப்பாக்கி என்றால் அது என்ன ரகத்தைச் சேர்ந்தது என்றும் போதை மருந்து என்றால் அது என்ன வகை என்றும் எந்தக் குறிப்பும் இல்லை. எல்லாமே பொதுப் பெயர்கள். எல்லாமே செய்திகள்.

அதுபோல, நாவலில் தாய்லாந்தில் இருந்து எளிதாகத் துப்பாக்கி, பெண்கள், போதைப்பொருள்களை மலேசியாவுக்குக் கொண்டு வருகின்றனர். இடையில் இருக்கின்ற காவல்துறை, சுங்கத்துறை எல்லாம் என்ன செய்கின்றன எப்படி ஏமாற்றப்படுகின்றன என்ற விபரமும் இல்லை. லாரி சக்கரங்களிலும் அதன் அடியில் உள்ள பெட்டிகளிலும் கடத்தி வருவதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதுபோல நாடு விட்டு நாடு கடத்தல் நடக்கிறது. அது மட்டுமல்ல 236 முறை நடந்த மேசை உரையாடல்களில் சில கொலைகள் நடந்தும் ஆப்பே கடையை நடத்திக்கொண்டே இருக்கிறார். போலிஸிடமிருந்து அவருக்கான நெருக்குதல்கள் என எதுவும் இல்லை. கொலை நடந்த மறுநாள் ரத்தத்தைக் கழுவி விட்டு கடையைத் திறந்துவிடுகிறார் ஆப்பே. ஆப்பே கதாபாத்திரமும் குழப்பமான வார்ப்புதான். நிகழ்காலத்தில் (1993) அவரது வயது அறுபது எனச்சொல்லப்படுகிறது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் ஜப்பான் வீரர்கள் அவரது முதல் மனைவியைக் கடத்திவிடுகின்றனர். அப்படியானால் ஆப்பே முதல் திருமணம் செய்துக்கொண்டது எட்டு வயதில் என நாமாக ஊகிக்க சங்கடமாக உள்ளது.

ஒரு புனைவில் வாசகன் விரும்புகின்ற அனைத்தும் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், ஒரு நாவலின் மையக்கருவை ஒட்டி எவ்வித தேடலும் இல்லாமல் எழுதுவது இலக்கியச் சூழலில் விமர்சிக்கப்படக்கூடியதே. ஒரு தைப்பூசக்காட்சியில் ஒளி பாய்ச்சும் விளக்குகளையோ, விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைகளையோ தின்பண்டங்களையோ கூடக் காட்டாமல் இருக்கலாம். தேரையும் காவடிகளையும் காட்டாமல் எப்படி இருப்பது? தொன்னூறுகளில் இருந்த குண்டர் கும்பல் உறுப்பினர்களின் தோற்றம் என்ன? அவர்கள் பச்சை குத்துவதின் தன்மை என்ன? எந்த எண்ணுக்கு உரியவர்கள் என்பதற்கான சங்கேத குறியீடுகள் என்ன? கைகுலுக்குவதன் வழியே தங்கள் குழுவினரை அடையாளம் காணும் நுட்பம் என்ன? படபடப்பான விவாதங்களில் மாறுபட்ட விரலின் உள்ளங்கை சுரண்டல் குறியீடுகள் என்ன? போன்ற நுண்தகவல்கள் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக குண்டர் கும்பல் கலாச்சாரத்தை சொல்லும் முதல் நாவலென ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ சொல்லப்பட்டுக்கொண்டே இருப்பதுதான் ஆச்சரியம்.

இப்படி தகவல்களாலும் புனைவுத்தியாலும் ஆழமற்ற காட்சிகளாலும் இந்த நாவல் எவ்வித இலக்கியத் தகுதியுமற்ற நூலாகவே மிஞ்சுகிறது. குறைந்தபட்சம் சமூகம் சார்ந்த விவரிப்பில்கூட பாலமுருகன் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் ஏமாற்றம் தருவது. குண்டர் கும்பல் சண்டையால் பெடோங்கில் உள்ள பல வீடுகளில் ஆண்கள் இல்லாமல்போக அடுக்குமாடி வீட்டிலிருந்து பெண்கள் செம்பனைக் காட்டுக்கு வேலைக்குப் போனதாகவும் அதிலும் சரசு மட்டைகளை அள்ளும் வேலை செய்ததாகவும் எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து செம்பனை மட்டை அள்ளும் வேலை என ஒரு பிரிவு செம்பனைத் தோட்டத்தில் இருந்ததில்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை செம்பனை மட்டைகளை கழித்தெடுக்கும் முறையும் குலை வெட்டும் முன் வசதிக்காக ஒரு சில மட்டைகளை வெட்டிப்போடுவதும் உண்டு. பொதுவாகச் செம்பனைக் குலையிலிருந்து உதிரும் பழங்களைப் பொறுக்கும் வேலையைப் பெண்கள் செய்வர்.

கே.பாலமுருகனின் சிறுகதைகள் குறித்து விமர்சனம் எழுதிய ஶ்ரீதர் ரங்கராஜ் பின்வருமாறு சொல்கிறார். ‘பாலமுருகனின் இத்தொகுப்பிலுள்ள மற்ற சிறுகதைகளும் நல்ல சிறுகதைகளாக மாறியிருக்கும், அவர் அதற்கான காலத்தை எடுத்துக்கொண்டு அவற்றைச் செதுக்கியிருந்தால். பாலமுருகனின் எழுத்துகளில் எனக்குத் தெரிவது ஒருவித அவசரமே. சொல்லி முடித்தால் போதும் என்பதுபோன்ற ஒரு அவசரம்.’ ஶ்ரீதர் சொல்வது உண்மைதான். இந்த குறுநாவலை வாசித்தபோதும் பாலமுருகனிடம் இருக்கும் இந்த அவசரமே புனைவுக்கான மலர்ச்சி நிகழ்வதற்குள் அறுவடை செய்து புசிக்கக் கொடுப்பதுபோல முகம் சுளிக்க வைக்கிறது.

மலை உச்சியில் உரைகிற மௌனங்கள்

இதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘மலை உச்சியில் உரைகிற மௌனங்கள்’ குறுநாவல் குறித்து பேச ஒன்றும் இல்லை. அது ‘நம் நாடு’ எனும் நாளிதழில் தொடராக வந்தது. நாளிதழ் வாசகர்களின் தேவையைப் பொறுத்து எழுதப்பட்ட மர்மத்தொடர். மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் ஒரு தம்பதி சந்திக்கும் அமானுஷ்ய அனுபவம்தான் கதை. பத்து வருடமாக யாரும் தங்காத அந்த இடத்தில் அவர்கள் தங்குகின்றனர். அங்கு காணும் ஒரு சில மனிதர்கள் மர்மமாக இருக்கின்றனர். வேறொரு காலத்தில் நுழைந்து வேறு மனிதர்களைப் பார்த்து மீள்கின்றனர். இடையூடாக ஜெராய் மலையும் அதனுடன் சம்பந்தப்பட்ட சோழர்கள் அரசும் என படைப்பை சுவாரசியமாக்க சில தகவல்கள் வந்துபோகின்றன.

ஜனரஞ்சகப் படைப்பு எழுதப்படக்கூடாது எனும் தரப்பில் நான் நிற்பதில்லை. அது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் இலக்கிய விமர்சனத்தில் அதற்கான முக்கியத்துவம் வழங்கும் தேவை உருவாவதில்லை. ஜனரஞ்சகப் படைப்பின் தேவை வாசகனை நோக்கிக் செல்வது. அவனை ஈர்க்க அத்தனை சுவைகூட்டியையும் கலப்பது. முடிந்தால் வரலாற்றில் இருந்தும் அறிவியலில் இருந்தும் தகவல்களை நுழைத்து அதன் கனத்தைக் கூட்டுவது. அதன் மூலம் அப்படைப்பின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முயல்வது. வைகை அணை கட்டப்பட்டபோது காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாகக் கொண்டு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ எழுதப்பட்டது. தமிழில் அந்த வரலாற்றை புனைவினுள் பதிவு செய்த முதல் நாவல் அது. அதில் சொல்லப்பட்ட தகவல் பொருட்டே அதற்கு ஏராளமான விருதுகளும் கிடைக்கலாம். ஆனால் இலக்கிய விமர்சகர்கள் மத்தியில் அந்நாவலுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. காரணம் இலக்கியம் சொல்லப்படும் தகவலில் மட்டும் இல்லை; சொல்லும் விதமும் சேர்ந்ததுதான்.

அவ்வகையில் இது ஒரு ஜனரஞ்சக குறுநாவல் மட்டுமே என்றாலும் கே.பாலமுருகனின் படைப்பு மனம் சூம்பிச்செல்லும் விதத்தை இங்கிருந்தே கணிக்க முடிகிறது. வாசிப்பவரை அச்சம் கொள்ள வைப்பதை பாலமுருகன் ஒரு விளையாட்டாகச் செய்து பார்க்கத் தொடங்கும் இடம் இது. படைப்பிலக்கியச் சாவலை ஏற்காமல் பயம்காட்டும் விளையாட்டை நிகழ்த்திப் பார்க்க அவருக்கு சிறுவர் நாவல்கள் பேருதவியாக இருந்தன. ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’, ‘மோகினி மலை ரகசியமும் பாழடைந்த மாளிகையும்’, ‘பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்’ என அவர் எழுதிய சிறுவர் நாவல்களில் மறுபடி மறுபடி இரகசியமும் மர்மமும் இருளும் பிரவேசிக்கின்றன. சிறுவர்களுக்கு அது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் ஒரு வாசகனை அவ்வாறு அச்சம் கொள்ள வைப்பதை இலக்கியத் தகுதியாக எண்ணிக்கொண்டு அவர் எழுதியுள்ள கடைசி நாவல்தான் ‘நீலநிறக் கண்கள்’.

நீலநிறக் கண்கள்

20200831_230254மலேசிய இலக்கியத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டிய ஒரு சமகாலப் படைப்பாளியிடமிருந்து ‘நீலநிறக் கண்கள்’ போன்ற போலி இலக்கியப் பிரதியைப் பார்ப்பது துரதிஷ்டமானது. இந்நாவலின் கதையை மூன்று நான்கு வரிகளில் கூறிவிடலாம். துரைசாமி மாமா காணாமல் போய்விடுகிறார். அவர் கடுவன் எனும் காட்டு நாயை கொஞ்ச காலம் வளர்த்தவர். காட்டை அறிந்தவர். அவரைத் தேடிச்செல்லும் கதைசொல்லி கடுவன் நாய்போலவே மாறிவிட்ட ஒரு மனிதரைக் காட்டில் பார்க்கிறான். நாவலின் இறுதிப் பாகம் காட்டுக்குள் வினோதமான நீலக் கண் மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனும் மூன்று வாக்கியத் தகவலோடு (உண்மையில் மூன்றே வாக்கியம்தான்) முடிகிறது.

‘நீலநிறக் கண்கள்’ நாவலையும் போலி இலக்கியம் எனச் சொல்ல மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது இதில் கதையென எதுவும் இல்லை. பாலமுருகன் தன்னால் காடு குறித்தும் அதன் பிரம்மாண்டம் குறித்தும்  எழுத முடியும் என நிரூபிக்க எடுத்துக்கொண்ட முயற்சி இது. காட்டுக்குள் துரைசாமி மாமாவைத் தேடிப்போகும் அனுபவத்தின் வழியும் துரைசாமி மாமா கடுவன் நாயைத் தேடுவதன் வழியும் அதை செய்து பார்க்கிறார்.

இரண்டாவது, காடு குறித்து அவர் எதையும் அறிந்து வைத்திருக்காமல் அது குறித்து எழுத முயன்று அபத்தமான காட்சிகளாக உருவாக்கியுள்ளார்.

எ.கா:

 1. மரத்திலிருந்து சாம்பல் நிற மரகதப் புறாக்கள் சட்டெனப் பறந்தன. – மரகதப் புறாக்களுக்கு பச்சைப் புறாக்கள் எனப் பெயர் உண்டு. மரகதம் என்பதே பச்சை நிறமானதுதான்.
 2. ஓராங் ஊத்தான் எங்களைப் பார்த்துவிட்டு இறங்கி எங்கோ ஓடியது. – விலங்குக் காட்சியகத்தில் அவ்வாறு நடக்கும். ஆனால் அடர்காட்டில் ஓராங் ஊத்தான்கள் மர உச்சியில் வாழக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் மரத்தில் இருந்து இறங்காமல் இருக்க இலைகளைக் கொண்டு குடை தயாரிக்கும் தொழில்திறனை அறிந்த விலங்கு அது. மனிதர்களைக் கண்டால் வேறு கிளை பிடித்து தாவுமே தவிர தரையில் இறங்கி ஓடாது.
 3. காண்டாமிருக வண்டுகள் காதுகளுக்குள் புகுந்தால் என்ன ஆகும் என்று யோசித்ததுண்டு. – காண்டாமிருக வண்டுகள் (rhinoceros beetles) குறைந்தது இரு சென்டி மீட்டர் நீளமாவது இருக்கும். அது காதுத் துவாரத்தில் நுழைய எந்த வாய்ப்பும் இல்லை.
 4. நீர்வீழ்ச்சி அத்தனை கோபத்துடன் பாறைகளை மோதி உடைத்து காட்டாற்றைப்போல எங்களைக் கடந்து கொண்டிருந்தது…… வண்டுகளின் சத்தம் நாலா பக்கமும் பெருகி வந்தது. – அருவி இரைச்சலில் அருகில் உள்ள பிற எந்த ஒலியும் கேட்காது. அதிலும் பூச்சிகளின் சத்தம் கேட்க வாய்ப்பில்லை.
 5. பாதத்தில் ஏறிய கள்ளி முள்ளை எடுக்க அங்கேயே உட்கார்ந்து விட்டேன். – அருவி கொட்டும் பசுமையான நிலத்தில் கள்ளி முளைக்காது. அது பாலைச் செடி.

இவை நாவலில் ஆங்காங்கு எடுத்துச் சுட்டியுள்ள தவறுகள் மட்டுமே. இன்னும் இதுபோன்று  ஏராளமான பிழைகள் உள்ளன. ‘நீலநிறக் கண்கள்’ நாவலை அறிவியல் கருவுருப்புனைவு என அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார் பாலமுருகன். ஆனால் அறிவியல் நாவலில் இருக்க வேண்டிய அடிப்படையான நம்பகம் (logic) இல்லாமலும் கருவுருப்புனைவு (Fantasy) நாவலில் இருக்கக்கூடிய மிகை கற்பனையும் இல்லாமல் குழந்தைகளைத் தூங்க வைக்க இரவு நேரத்தில் சொல்ல முயன்ற கதை ஒன்று. கதை சொல்லியின் தூக்கத்தினால் பாதியில் முடிந்ததுபோல உள்ளது.

மூன்றாவது, புனைவிலக்கியம் என்பது ஒன்றைச் சொல்வதல்ல; காட்சிப்படுத்துவது. இந்த அடிப்படை தெரிந்த ஒருவரால் மட்டுமே புனைவுக்குள் அனுபவங்களை நிகழ வைக்க முடிகின்றது. ‘நீலநிறக் கண்கள்’ அவசரத்தில் தொடங்கி அவசரமாக முடிகிறது. எண்பத்து நான்கு பக்க நாவல் எனச்சொன்னாலும் அதனுள் முன்னுரை, நன்றி, பக்கத்துக்குப் பக்கம் உள்ள படங்கள் என இருபத்தோரு பக்கங்களைக் கழித்து, வழக்கமான எழுத்துருவை விடப் பெரிதாகவும் வழக்கமான நூலின் அளவைவிடச் சிறியதாகவும் தயாரான வடிவமைப்பை கணக்கில் கொண்டால் நூலின் பக்க எண்ணிக்கை நாற்பது இருக்கலாம். நாற்பது பக்கங்களில் பாலமுருகன் உருவாக்க நினைப்பது என்ன? காட்டுக்குள் காணாமல் போன மாமா மிருகமாகச் சுற்றுகிறார் என்ற பயத்தை மட்டும்தான். மனிதன் ஓநாயாக மாறுவதையெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே திரைப்படங்களில் பார்த்துவிட்ட நமக்கு இது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும் என அதன் ஆசிரியர் உணராமல் இருந்திருக்க மாட்டார். அறிவியல் கருவுருப்புனைவு போன்ற இணைப்புகளும் அச்சத்தை ஊட்டக்கூடிய சொல்லாடல்களும் அவர் நாவலை காப்பாற்றும் என நம்பியிருக்கலாம். எந்த அடைமொழியின் கீழ் வந்தாலும் இலக்கிய வாசகன் ஒரு புனைவில் தேடுவது கலையின் ஆழத்தை மட்டும்தான்.

மலேசியாவில் சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிடச் சொன்னால் அதில் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை நிச்சயமாக இணைப்பேன். அத்தனை முக்கியமான பங்களிப்பை கே.பாலமுருகன் வழங்கியுள்ளார். அவரது ‘பேபி குட்டி’ சிறுகதை தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பதெல்லாம் குறிப்பிடத்தக்க கௌரவம். அது அவருக்கு மட்டும் அல்லாது மலேசிய இலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடியது. ‘தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்’, ‘எச்சில் குவளை’ போன்ற சிறுகதைகள் மலேசிய சிறுகதை இலக்கியத்தில் என்றும் நிலைக்கும் தகுதி கொண்டவை. பாலமுருகனிடம் இயல்பாகவே இருக்கும் இந்தப் படைப்பு மனம் அவரது அவசரங்களால் சிதைந்து வருவது வருத்தத்துக்குரியது.

ஒருவர் தன் ஆளுமையைத் தானே கட்டமைக்க முயல்வது கட்சி அரசியலில் வேண்டுமானால் எடுபடலாம். கலையில் அது சாத்தியமில்லை. படைப்பாளி தனது படைப்பின் வழியாக மட்டுமே உருவாகிறான். இலக்கியம் மொழியால் இயங்கும் கலை. இலக்கியம் அல்லாத பிற எவற்றில் படைப்பாளி மொழி சார்ந்து உழன்றாலும் அது இன்றைய சமூக ஊடகத்தின் சலசலப்புக்கு மட்டுமே எடுபடும். வரலாற்றில் தரமான புனைவுக்கு மட்டுமே இடம். கே.பாலமுருகன் வரலாற்றில் நிலைக்கும் படைப்புகளை வழங்கக்கூடியவர்தான். அதைச் செய்வார் என நம்புவோம்.

9 comments for “கே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை

 1. Partasarati
  September 1, 2020 at 11:21 am

  வணக்கம். உங்கள் கட்டுரை எனக்கு பாலமுருகனின் நாவல் குறித்து அறிந்ததைவிட நாவல் எவ்வாறு அமைகிறது என அறிய உதவியது. மிக்க நன்றி. பாலமுருகன் அவர்கள் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதாக அண்மையில் ஒரு யூடியூப்பில் கூறினார்கள். அதை மட்டும் திருத்திக்கொள்க.

 2. ம.நவீன்
  September 1, 2020 at 7:13 pm

  தங்கள் கருத்துக்கு நன்றி. என் ஆய்வின் அடிப்படையில் அவர் மாணவர் நாவல்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 13தான். நீங்கள் சொல்லும் எண்ணிக்கை மாணவர்களுக்காக அவர் பதிப்பித்த/ எழுதிய பயிற்சி நூல்களாக இருக்கலாம். இலக்கியச் சூழலில் அவற்றை இணைப்பதில் நியாயமில்லை.

 3. vimalraj
  September 2, 2020 at 9:16 pm

  Mika siranta kaddurai. K.Balamurugan sirukataikalai vaasitullen. Inta vimarsaam avarathu ‘Nagarnthu kondirukkum vaasalkal’ Novalai vaasikka tuundukirathu. avar tan avasaratai viddu nalla punaivu koduppaaraaga.

 4. திருச்சி வினோத்
  September 2, 2020 at 10:38 pm

  ஒரு பேஷன் உண்டு. தன் பலவீனத்தை மறைக்க அதற்காக இவ்வளவு உழைத்தேன் என பீலா விடுவது. தமிழகத்தில் பட இயக்குனர்களிடம் அதைப் பார்க்கலாம். மொக்கை படத்துக்கு படம் எடுக்க அங்கு போனோம் எங்கு சென்றோம் என்பார்கள். படத்தில் அப்படி ஒன்றும் இருக்காது. ஆனால் இப்படி இன்டர்வியூ கொடுக்கக் காரணம் பலவீனத்தை மறைக்கதான். தன் படைப்பை பற்றி அதன் தயாரிப்பு பற்றி பேசுபவர்களை அப்படிதான் சேர்க்க முடிகிறது.

 5. Shanthi
  September 3, 2020 at 9:01 am

  Meendum meendum inta kaddurayai vaasikkiren. Yeen.

  1. குறுநாவல் என்பது பக்க அளவோடு தொடர்புடையது அல்ல என்ற கருத்து தமிழ் இலக்கிய உலகில் இந்நாவல் எழுதப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நிலைகொண்டுவிட்டது. ஆகவே தான் எழுதுவது குறுநாவல் என்ற முடிவோடு எழுதும் யாரும் இன்று பக்க அளவை முன்வைத்துத் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளுவதாகக் கூறும் காரணம் ஏற்புடையது அல்ல.

  2. நாவல் / குறுநாவலின் நோக்கம் எளிய வாழ்க்கைச் சித்தரிப்பைச் சொல்வதல்ல. ஏற்கனவே பிரபலமாகச் சொல்லப்பட்ட பத்திரிகைச் செய்திகளை அல்லது சமூக அக்கறை கொண்ட மேடைப்பேச்சுகளை வசனங்களாக ஒப்புவிக்கும் பிரதிநிதி கதாபாத்திரங்களை உருவாக்குவதல்ல. ஒரு சூழல் உருவாக்கிக் கொடுக்கும் கருத்தை சம்பவங்களாக வடிப்பதல்ல. அடிப்படையில் விவாத அம்சம் இருந்தால் மட்டுமே நாவல் / குறுநாவல் வடிவத்தை ஓர் எழுத்தாளன் தேர்ந்தெடுப்பதில் நியாயம் உண்டாகிறது.

  3. குண்டர் கும்பலில் இணையும் மனிதர்கள் தனியாக ஒரு தீவில் வாழுகின்ற ஜீவராசிகள் அல்ல. அவர்கள் சமூகத்தினுள் புழங்கி அங்கிருந்து உருக்கொள்ளும் மனிதர்கள். சமூகத்தின் அத்தனை மாற்றங்களும் நெருக்கடிகளும் அவர்களையும் பாதிக்கிறது. குடும்பங்களில், வேலையிடங்களில், அரசியல் கட்சிகளில் அவர்களின் முகங்கள் மாறி மாறி உருக்கொள்கின்றன.

  4. அதற்கு முதன்மையாக காரணம் பாலமுருகனுக்கு குண்டர் கும்பல் குறித்து போதுமான புரிதல் இல்லை என்பதே. அதோடு தனக்கு அறிமுகம் இல்லாத ஒன்றை முழுத்தீவிரத்தோடு கற்பனையால் சென்று தொடும் முனைப்பும் அவரிடம் இல்லை.

  5. இலக்கிய வாசகன் மட்டுமே சித்தரிப்புகளால் நுண்தகவல்களால் நாவலில் ஓர் அனுபவம் நிகழ வேண்டும் என விரும்புகிறான். அவ்வாறு இல்லாத ஒன்றை புறக்கணிக்கிறான். பாலமுருகனின் இந்த நாவல் அடிப்படையான இலக்கியத் தகுதியை இழக்கவும் இந்தத் ‘தெரிவிக்கும்’ தன்மையே காரணமாக உள்ளது.

  6. பலவீனமான இலக்கியத்திற்கும் (poor literature) போலி இலக்கியத்திற்குமான (fake literature) அடிப்படை வேறுபாடே எழுத்தாளனின் நோக்கம்தான். அகத்தினுள் முழுமையடையாமல் புற இலக்குகளைக் குறி வைத்து வடிவமைக்கப்படும் எந்தக் கலையுமே போலியானதுதான். எழுத்தாளனுக்கு வாழ்க்கையைப் பற்றி எழுந்த உண்மையான அக்கறை அல்லது கேள்வியிலிருந்து புனைவு உருவாகும்போது அதில் கலைக் குறைபாடு இருந்தாலும் அவர் நோக்கத்தில் உள்ள உண்மை அதன் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படும்.

  7. இதே வரலாற்றை விரிவாகச் சொன்ன ஆய்வுகளும் கட்டுரைகளும் ஏராளமாகவே நம்மிடம் இருக்கும்போது நாவலின் தேவை இதை இன்னொரு வகையில் கதையாகச் சொல்வது மட்டும்தானா? புனைவின் தேவை ஒன்றை இன்னொரு வடிவத்தில் சொல்வதில் இல்லை. அதைக் கேள்விகளுடன் ஆராய்ந்து செல்வதுதான் எழுத்தாளனின் முன் உள்ள சவால்.

  8. ஒரு புனைவில் வாசகன் விரும்புகின்ற அனைத்தும் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், ஒரு நாவலின் மையக்கருவை ஒட்டி எவ்வித தேடலும் இல்லாமல் எழுதுவது இலக்கியச் சூழலில் விமர்சிக்கப்படக்கூடியதே. ஒரு தைப்பூசக்காட்சியில் ஒளி பாய்ச்சும் விளக்குகளையோ, விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைகளையோ தின்பண்டங்களையோ கூடக் காட்டாமல் இருக்கலாம். தேரையும் காவடிகளையும் காட்டாமல் எப்படி இருப்பது?

  9. பாலமுருகன் பல நேர்காணல்களில் நாவலுக்காக கள ஆய்வுகள் செய்ததாகவும் பிற ஆய்வுகளை வாசித்ததாகவும் கூறியுள்ளார். அவை நாவலில் எங்கே என்பதுதான் கேள்வி. படைப்புக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்பதே விமர்சனம். தான் தினமும் பத்து கிலோ மீட்டர் ஓடுவதாகத் தொப்பையுடன் ஒருவன் வந்து சொன்னால் எப்படி பொருட்படுத்த முடிவதில்லையோ அப்படிதான் இதுபோன்ற வாக்குமூலங்கள் ஆகிவிடுகின்றன.

  10.ஒருவர் தன் ஆளுமையைத் தானே கட்டமைக்க முயல்வது கட்சி அரசியலில் வேண்டுமானால் எடுபடலாம். கலையில் அது சாத்தியமில்லை. படைப்பாளி தனது படைப்பின் வழியாக மட்டுமே உருவாகிறான்.

 6. துளசிதேவி
  September 3, 2020 at 11:22 pm

  பாலமுருகன் மலேசியாவில் முக்கியமான படைப்பாளி. அடுத்த தலைமுறைக்கும் இலக்கியத்தில் ஆர்வத்தை உருவாக்குகிறார். அவர் படைப்புகளைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள் ஐயா. வாழ்த்துகள்

 7. ஆ.கணேசன்
  September 4, 2020 at 12:53 pm

  நவின் அவர்களுக்கு, நான் கணேசன் ஆறுமுகம். உங்கள் சிறுகதை எனக்கு விருப்பமானதில்லை. ஆனால் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட நாவலில் ஒன்று தலைநகரில் செம்பருத்தி ஆதரவில் நடந்தது. அப்போதே இதையெல்லாம் படித்து பார்த்துதான் வெளியீடு செய்கிறார்களா என நொந்துகொண்டேன். உங்களை அங்கு சந்தித்தேனா நினைவில்லை. நீங்கள் சொன்ன குறைகளை அப்போதே நானும் சொன்னேன். சொதப்பலான நாவல். இப்போதாவது உண்மையை உரத்து சொல்லியுள்ளீர்கள்.

 8. குணாளன்
  September 6, 2020 at 1:39 pm

  பாலமுருகன் போன்ற எழுத்தாளர்கள் வல்லினம் குழுவில் இடம்பெற்றால்தான் மேலும் தீவிரமாக எழுத முடியும் என்பது அடியேனின் கருத்து. பாலமுருகன் ஐயாவிற்கும் நவீன் ஐயாவிற்கும் வாழ்த்துகள்.

 9. Sriviji
  September 7, 2020 at 5:02 pm

  பாலமுருகனின் சிறுகதைகளைப் படித்து வியந்ததுண்டு. பத்திரிகைகளில் அவரின் சிறுகதைகள் இடம்பெற்றபோது, ஆகா எழுத்து வேற லெவல் என்று மனதாரப் பாராட்டியுள்ளேன். நம் நாட்டின் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் இடம் பெற விருக்கும் நல்ல துடிப்புமிக்க இளம் எழுத்தாளர். இங்கு நவீன் பாராட்டியும் அதேவேளையில் குறைகளைச் சுட்டிக்காட்டியும் இருப்பது மனத்திற்குத் தெம்பாகவே உள்ளது. குறைகள் இருப்பினும் நிறைகளை நீங்கள் அதிகமாகச் சுட்டிக்காட்டிய விதம் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *