மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.

சிங்கப்பூர் எழுத்தாளர்களில் லதா இன்றைக்கு முக்கியமான எழுத்தாளராக தன் எழுத்தாற்றலால் எழுந்து வந்திருக்கிறார். சிங்கப்பூர் வாழ்வை உள்ளும் புறமுமாக நின்று எழுதுகிற பார்வை அவருக்கு வாய்த்திருக்கிறது. லதா இலங்கையில் பிறந்திருந்தாலும் மிகச் சிறுவயதிலேயே சிங்கப்பூருக்கு வந்தவர். அதே சமயம் அவரது உறவுகள் தமிழ்நாட்டிலும் வேரோடி இருக்கின்றன. உறவுகள் என்றாலே கசப்பும் இனிமையும் கலந்தவைதான். இந்த அனுபவங்கள் அசட்டுத்தனமான எழுத்தைத் தவிர்க்கிறது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் 1997, 98 வாக்கில் எழுதப்பட்டவை. 25, 26 வயதிலேயே ஒருவித தெளிந்த அனுபவத்தோடு வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு வாய்த்த பட்டறிவு துணை நின்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

மலேசிய, சிங்கப்பூருக்கு 150 ஆண்டுகளுக்கு முன், கூலி நிமித்தமாக கப்பலேறிச் சென்றவர்கள், அங்கே புதிய வாழ்க்கையை எதிர்கொண்டு சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களாக நிலைபெற்றனர் என்பது அறிந்த வரலாறு. இன்று நல்ல பணி நிமித்தமாக தமிழர்கள் செல்வதும் அங்கேயே வேர் பிடித்துக் கொள்வதும் தொடர்கிறது. ஆங்கிலேய, சீன, மலாய மக்களின் வாழ்க்கை முறை தமிழர்களை பாதிக்கிறது. நகரமயம் புதிய வாழ்க்கை முறைகளை உருவாக்கியிருக்கிறது. தமிழர்கள் தனித்துவத்தோடும் அதே சமயம் பன்மைச் சமூகத்தின் சூழலையும் ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர். இந்தப் பின்புலம் அவரது கதைகளில் மறைவாய் நின்று நடைமுறைச் சிக்கல்களைக் கூர்மையுடன் பார்க்க வைத்திருக்கிறது.

முதல் தொகுப்பில் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, ‘படுகளம்’, கதைகள் தவிர மற்ற எல்லா கதைகளும் நடைமுறை எதார்த்தங்களின் கடுமையானப் பக்கங்களைக் காட்டுகிறன. சிங்கப்பூரில் தமிழ்ப் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதை மாந்தர்களின் மனம் ஒன்றி அறியத்தருகிறார். கதைகளைப் படிக்கும்போது லதா விசயத்தை, சூழலைத் தன் அனுபவமாக்கி மாற்றிவிடுதாலேயே நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. கவனிக்கவேண்டிய விசயம் முதலில் வாசகனுக்கு நம்பகமான உலகத்தை உண்டாக்கியபடிதான் அதனுள் பிரச்சனைகளைப் பாடுகளைப் பொதிந்து வைக்கிறார். அவரது கதைகள் உடனடி ஈர்ப்பை இதனாலே ஏற்படுத்துகின்றன.

எங்குமே குரல் உயர்த்தாமல் அதே சமயம் பெண்களின் பல்வேறு பாடுகளை உறவுச்சிக்கல்களை நுட்பமான தொனியில் விவரிக்கிறார். குடும்பத்தில், வேலை செய்யும் இடங்களில், தனிமை கொண்ட சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் கசப்பை அப்படியே படைப்பிற்குள் கொண்டு வந்து வாசகனுக்கும் அவ்வுணர்வைக் கடத்துகிறார். லதா வைப்பது நம் வாழ்க்கை பற்றிய விமர்சனம். அதை நேரடி விமர்சனமாக வைக்காமல் வாழ்வின் கதியில் முன்வைக்கிறார். சொல்லப்பட்டிருப்பது, சொல்லப்படாத பல விசயங்களைப் பேசவைக்கின்றன. இதை ஒரு கலைப்பணியாகவே கையாள்கிறார். மற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படும் முக்கியமான இடம் ச்ம் இது. இரண்டாவது அக்கதைகளில் கூடிவரும் செறிவான பின்னல்கள் கூடுதலான பலத்தைக் கொண்டிருக்கின்றன. ‘அடையாளம்’, ‘நாளை விடுதலை’, ‘அறை’, ‘மழை-அப்பா’, ‘படுகளம்’ கதைகளை இவ்வகையில் சொல்லலாம்.

‘நான் கொலை செய்யும் பெண்கள்’ என்று தலைப்பு வைத்ததில் கூட பொறுப்பை வேண்டுமென்றே தன் மீது போட்டுக் கொள்கிறார். ஓர் ஆண் எழுத்தாளர் வைத்திருக்க வேண்டிய தலைப்பு. பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்கள்தான். குடும்பத்திலும் பணிச்சூழலிலும் மனரீதியாக, உடல்ரீதியாக அவர்கள் படும் வதைகளில் அதிகமான காரணத்திற்குரியவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள். ‘படுகளம்’ கதைக்குள் அபிமன்யூ தொன்மக்கதை சொல்லப்படுகிறது. அபிமன்யூ பத்ம வியூகத்திற்குள் இறங்கி வெளிவரமுடியாமல் மரணமடைய வைக்கும் சதி வேலைகள் போலத்தான் ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையும் என்பது பல கதைகளுக்குப் பொருந்திப் போகிறது. லதா பெண்கள் உலகை மட்டும் பேசவில்லை. ஆண்களின் பிரச்சனைகள் அங்கங்கே பேசப்படுகின்றன.

சீன கார் ஓட்டியின் வாயிலாக சொல்லப்படும் கதை ‘பயணம்’. பண வசதி இல்லாதவர்களை சீன இளம்பெண்கள் நிராகரித்து விடுகிறதும், தனித்தொதுங்கி வாழ நேர்கிறதுமான நிலையைச் சொல்கிறது. காதல் மதக்கலப்பைத் தேர்கிறது. மதக்கலவரங்கள், குண்டுவெடிப்பு கலாச்சார சமூகத் தாக்கங்கள் அவர்களுக்குள்ளே திரும்ப சந்தேகங்களையும் பிளவையும் ஏற்படுத்துகிறது. சொந்த மதத்தைவிட்டு வந்தது தவறோ என்ற தத்தளிப்பை உருவாக்குகிறது. இணைந்திருந்து கொண்டாடியவர்கள் அடுத்தவர் மீதான உள்நோக்கங்களை ஆராய்வதில் போய் முடிகிறதைச் சொல்கிறது. ‘முகாந்திரம்’ கதை.

‘தமிழுக்கு அமுதென்று பேர்’ கதை 2200-ல் தமிழ் கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை வரலாம் என்கிறது. ஆங்கிலமயமாக்கத்தின் முன் எல்லா மொழிக்கும் அந்த நிலைதான் என்றாலும் அப்போதும் விடாமல் ஜப்பான்காரன் நவீன முறையில் ஜப்பானிய மொழியை மீட்டெடுப்பான். தமிழைக்கூட அவனது தொழில்நுட்பத்தின் வழியில்தான் மீட்டெடுக்க வேண்டி வரும் என்பதை எதிர்காலம் ஒன்றில் நின்று சொல்கிறது. ‘இதுவரை’ பெண் விமான ஓட்டியின் காதல் தோல்வியைச் சொல்கிறது. இத்தொகுப்பில் பலகீனமான கதை இதுவே. இக்கதையின் முடிவுசார்ந்து அந்த பலகீனம் தூக்கலாகிப்போனது. பெண்களின் பாடுகளை எழுதிய கதைகள் வலுவாக இருக்கின்றன. பிற தளங்களில் நின்று எழுதும்போது கதைகள் நெருக்கம் கொள்வதில்லை. பேசுபொருள் சார்ந்த தேர்வு புதுசானதுதான். பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

லதா சற்றே இடைவெளிக்குப் பின் எழுதியிருக்கும் சிறுகதைகள் இன்னும் தொகுத்து நூலாக்கப்படவில்லை. உதிரியாகக் கிடைத்த அவரின் ஒன்பது கதைகளை  வாசித்தபோது முன்சொன்ன பலகீனங்கள் இல்லை. முதல் தொகுப்பிலிருந்து நிகழ்ந்திருக்கும் பெரிய தாவல் இது. அதிக கதைகளை எழுதியிருக்கவில்லை என்றாலும் இத்தொகுப்பிற்காக கடந்த இரண்டு மூன்றாண்டுகளுக்குள் எழுதியிருக்கும் இக்கதைகளில் கலைப்பெறுமானம் இன்னும் கூடிவந்திருக்கிறது.

படைப்பு மொழியிலும் கதைத் தேர்விலும் புனைவின் சாத்தியங்களை லதா கையாண்டவிதத்தில் இந்தத் தாவல் நிகழ்ந்திருக்கிறது. அறிந்திராத பிரதேசங்களைப் புனைவில் அவர் அறிந்து வெளிப்படுத்தும் திறம் மிகச் சிறப்பாகக் கூடிவந்துள்ளது. முன் தொகுப்பு அனுபவச்சாரம் உண்டாக்கிய படைப்புலகம் என்றால் இத்தொகுப்பை புனைவுகள் தரும் அனுபவங்களின் பிரதேசம் எனலாம். அதை நிலத்தில் வலுவாக காலூன்ற வைத்து புனைவை விரித்திருக்கும் விதம்தான் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கதைகளில் தகவலோடு கூடி வந்திருக்கும் அனுபவச் செழுமைகள், விவரணைகள், புனைவை நிஜமாக்குகின்றன. அப்புனைவின் வழி இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் பரிசீலனை செய்திருக்கிறார். சவாலை ஏற்க வைத்து முன்நிறுத்தவும் செய்திருக்கிறார். செயற்கைத் தன்மை மேவாமல் கதைகளை இயல்பாக்கிய விதத்தில்தான் இக்கதைகள் கலைத்தன்மை பெறுகின்றன. உதாரணமாக, பெண்கள் மீன்பிடிப்பதை ஓர் அனுபவமாகவும் புதிய கண்டடைதலாகவும் புனைவிலே மாற்றியிருக்கும் கலை சாகசத்தைச் சொல்லியாக வேண்டும்.

‘அலிசா’வை முதல் கதையாகவும், ‘வலி’யை இரண்டாவது கதையாகவும் வைத்தால் ஒன்றின் அனுபவத் தொடர்ச்சி இன்னொன்றில் நிலை கொண்டிருப்பதை உணரலாம்.

எழுபதுகளின் இறுதியில் உபின் தீவில் நடப்பது போன்ற கதை ‘அலிசா’. 9,10 வயது நிரம்பிய அலிசா, தாத்தா பாட்டி வாழும் அத்தீவிற்கு பள்ளி விடுமுறையில் வருகிறாள். பின்பு அங்கேயே தங்கிப் படிக்கிறாள். பெரும்பாறைகளை உடைத்து அனுப்பும் கல்குவாரியில் தாத்தாவிற்கும் மற்றவர்களுக்கும் வேலை. ஓய்வு நேரங்களில் மீன்பிடிப்பது வழக்கம். அங்கு வந்த அலிசா சுதந்திர உணர்வின் வடிவாக தன்னைத் தேர்ந்து கொள்கிறாள். தீவின் காட்டிற்குள் சுற்றுவது, நீர்நிலைகளில் மீன்பிடிப்பது, பல இனத்து மாணவர்களுடன் விளையாடுவது என, அவளை அக்காட்டு வாழ்க்கைக்கே விடுகிற தாத்தா பாட்டி பூப்படைந்த சமயத்தில் மெலிதான அறிவுரையை பாட்டி கூறுகிறாள். அலிசாவின் தேர்வில் தாத்தா முற்று முலுதாக அறிவுரை ஏதும் கூறாமல் விலகி நிற்கிறார். அவர் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாதவராக இருக்கிறார். என்றாலும் பேத்தி அவருடனே சுற்றுகிறாள். ஒருநாள் இரவு தாத்தாவுடன் மீன்பிடிக்கவும் உடன் செல்கிறாள். நடுக்கடலில் மீன்பிடிப்பதில் ஈடுபடுகின்றனர். படகசையில் அவள் நழுவி கடலில் விழுந்து தத்தளித்து சாவின் வாசலை நெருங்கும்போது பேத்தியைப் பற்றி இழுத்து காப்பாற்றுகிறார். அவள் பிழைத்து கண் திறந்தபோது முதன்முதல் தாத்தா புன்னகை செய்கிறார்.

வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதைவிட ஒவ்வொரு கணமும் சுயம்புவாக கற்றுக்கொள்வதில்தான் பல திறப்புகள் சித்திக்கின்றன என்பதை தாத்தாவின் விட்டேந்தியான நடத்தையில் இருந்து அவள் கண்டடைகிறாள். அம்மா அப்பாவின் குணங்களிலிருந்து நேர் எதிராக கண்ணோட்டம் கொண்ட தாத்தா பாட்டியின் வளர்ப்பு அவளைத் தீரமிக்கவளாக ஆக்குகிறது. இந்த வெளி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. முக்கியமாக பால்பேதம் என்ற சுவரை உடைக்கும்போதுதான் பெண்ணின் முழு ஆற்றலும் வெளிப்பட வாய்ப்பாக அமையும். தாத்தா பாட்டி போன்ற ஒரு விரிந்த இதயத்தாலே அது நிகழும் என்பதாகக் கூட கதையை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்த விளக்கங்களை வாசகமனம்தான் சொல்லிப் பார்க்கிறது. கதை பல்வேறு அர்த்தப் பரிமாணங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது. துணிச்சல் என்கிறோமே அது இயல்பான தன்னுணர்வாக பெண்களிடம் தோன்றும்போது பேதங்கள் அற்றுப்போகும் என்பதாகக்கூட இக்கதை எனக்குச் சொல்கிறது. ஒரு கோட்பாடு கொண்டுவராத சாத்தியத்தை அலிசா என்ற சிறுகதை சாத்தியமாக்குகிறது.

‘அலிசா’வின் மறுதலையான கதை ‘வலி’. மீன்பிடிப்பதிலும், அந்த மீன்களோடு விளையாடுவதிலும் அனுபவம் பெற்றவளாக வளர்ந்தவள் இக்கதையில் வரும் பெண். மீன்கடை வைக்கிறாள். வகைவகையான மீன்கறி சமைப்பதிலும் தனித்த சுவைகளை உண்டாக்கி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்துவதிலும் செல்வாக்குப் பெறுகிறாள். பொருளாதார ரீதியில் மெல்ல முன்னேறுகிறாள். ஒருவனைத் திருமணம் செய்கிறாள். குழந்தை பெறுகிறாள். கார் விபத்தில் வலது கையை இழக்க வீட்டில் முடங்குகிறாள். கணவனின் ஆதிக்கம் தலை தூக்குகிறது. குடி கூத்தில் இருக்கிறான். காமத்திற்கு ஒரு காதலியையும் சேர்த்துக் கொள்கிறான். அடிக்கடி குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபடுகிறான். ஒருநாள் தாக்குதலில் அவள் விழுந்து ரத்தக் காயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். காவலர் வந்து பிடித்தும் செல்கிறார்கள். கதை இப்படி ஆரம்பமாகிறது. கண்ணாடித் தொட்டியில் இன்னும் புதுவகையான இரு தங்க மீன்களை வாங்கி வளர்க்க ஆசைப்படுவதிலிருந்து தொடங்குகிறது. வேறு வேலைக்குச் செல்லமுடியாத முடமான பெண்ணிக் ஆசையைத் தொட்டு விரிகிறது. பெருங்கடலில் மீனாக இருந்த பெண் ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் ஒடுங்கி வாழும் காட்சி மீனாக சுருங்கி வாழவேண்டியதாகிறது. விபத்து நேர்ந்து, வல்லமைப் பெற்ற பெண் முடமாகிறபோது, கீழ்மையின் அத்தனை வக்கிரங்களோடு தாக்கும் கணவனை எதிர்கொண்டு வாழ வேண்டியவளாகிறாள். காலம் ஏற்படுத்திய இழப்பைவிட இது வேதனையானது. குடிகாரக் கணவனால் எதையும் தேர முடிகிறது. இவளது ஆளுமை அவனால் சிதைக்கப்படுகிறது.

லதா பெண்களின் அக உணர்வுகளுக்கு பெரும் வீச்சை அளித்து குடும்ப வாழ்வில் நொறுக்குண்டு போகும் அவலத்தைக் காட்டுகிறார். கனவும் நிஜமும் மோதிக்கொள்கிறபோது உண்மை அனலாக வீசித் தாக்குகிறது.

‘நிர்வாணம்’ என்றொரு கதை. காதல் கனவில் இருக்கிற மகள், புற்றுநோய்த் தாக்குதலில் இருக்கும் அம்மாவை வெறுக்கிறாள். இவள் ஒரு பக்கம் கல்யாணக் கனவிலும் இன்னொரு பக்கம் மகளாகவும் அல்லாடுகிறாள். காதலின் இனிமை அம்மாவின் தேவையை வெறுப்பிற்குள்ளாக்குகிறது. வீடு, மரத்துவமனை என்று அம்மாவை அழைத்துச் செல்லும் சூழலில் அம்மா மீது மெல்ல பரிவு தோன்றுகிறது. திருமணத்திற்கான ஏற்பாட்டில் ‘கோட்’ வாங்க, காதலனின் நண்பனுடன் கடைக்குச் செல்வதிலிருந்து காதலனுக்கும் இவளுக்கும் முரண் தோன்றுகிறது. அது சந்தேகப் பிராணியாக வளர்கிறது. அவன் அவனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே வெளிப்படுத்துகிறான். தாயோடு அவள் போராடிக் கொண்டிருப்பதில் அவனுக்கு அக்கறை இல்லை. நோயுடன் போரிட்டு தேறுவதும் சரிவதுமாக இருக்கும் தாய்க்கு மெல்ல பேரன்பை வழங்குகிறாள். குழந்தையாக இருந்தபோது தாய் நிர்வாணத்தோடு அவளையும் நீராட்டியது நினைவிற்கு வருகிறது. ஜவுளிக்கடையில் தாயின் கூச்சத்தையும் பிடிவாதத்தையும் விலக்கி அம்மாவை குழந்தையாக்கி ஆடை மாற்ற முனைகிறாள். மகள் தாயாகவும் தாய் குழந்தையாகவும் மாறும் ஒரு எழுச்சிமிக்க தருணம் நேர்கிறது. காதலன் இந்தக் கனிவை எந்த சந்தர்ப்பத்திலும் காட்டாது இருப்பது கதைக்கு வெளியே நமக்குத் தெளியவருகிறது. ஆணை அவள் புரிந்து கொள்கிறாள். அவனது அலைபேசியை நிராகரிக்கிறாள். ஏதோ ஒரு தருணத்தில் பெண்களுக்குள் மனசு கனிந்துவிடுகிறது. ஆண்களிடம் அது புதராகவே மண்டிக்கிடக்கிறது. ஆண்களால் புரிந்து கொள்ளப்படாத பக்கத்தை – அல்லது ஆர்வம் காட்டாத குணத்தை இக்கதை இவ்விதம் திறந்து வைக்கிறது.

லதாவின் கதைகள் மௌனங்களால் நிரம்பி இருக்கின்றன. அந்த மௌனங்கள் உக்கிரமானவை. வெளிப்படையாகப் பேசுவதைவிட மௌனங்கள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள், விமர்சனங்கள் அதிக வீச்சுடையதாக இருக்கின்றன. நியாயங்கள் மீது மெய்யாக அக்கறை கொள்ள வைக்கின்றன. வாசகர்களை – முக்கியமாக ஆண் வாசகர்களை விலக்கி ஒதுக்காமல் தீவிரமாக நுழைந்து பார்க்க அழைக்கின்றன. ஆண்களை வார்த்தைகளால் வசைபாடாமலும், குறைகளை அடுக்காமலும் அதே சமயம் இந்த நிகழ்வைப் பாருங்கள் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று புனைவிற்குள் இறக்கிப் பேசவிடுகின்றன.

‘தேக்காவில் ஒரு பாலம் இருந்தது’ கதையில், நேதாஜி ஒருங்கிணைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த இரு இளம் தமிழ்ச் சகோதரிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறது. பெரும் வீரார்ந்த கனவும், துடிதுடிப்பும், புத்திக் கூர்மையும், கலையாற்றலும் பெற்ற அக்காவிற்கு நேர்ந்ததை, தங்கை சொல்வதாக இருக்கிறது. தந்தை, கணவனின் எதிர்ப்புகளை மீறித்தான் முகாமிற்கு வருகிறாள். தந்தை, விலகி இருந்து இந்திய வெற்றிக்காக குரல் கொடுக்கிறார். உள்ளிருந்து போராட முடியாது என்பதை அறிந்த தந்தையாக இருக்கிறார். போராட்டத்துக்கு குரல் மட்டுமே கொடுத்து பொருளைக் கொடுப்பதை விரும்பாதவராகவும் இருக்கிறார். வீட்டின் எதிர்ப்புகளை மௌனத்தால் எதிர்கொண்டு சுயமான முடிவோடு இராணுவ முகாமிற்குச் சென்ற அக்காவிற்கும் தனக்கும் சமையல் வேலை தான் ஒதுக்கப்படுகிறது. மற்ற ஆண்களுக்குப் பரிமாற வந்தால் கூடாது என ஒதுக்குகின்றனர் வட இந்தியர்கள். ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. பயிற்சி நாளில் தன் நடிப்பால், இசையால் பிரமாதப்படுத்துகிறாள். மறுநாள் மேடை ஏறும்போது அந்த வாய்ப்பு ராதா பாயால் தடுக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தை வட இந்தியர்கள் வெறுப்பதை நிராகரிப்பதை அக்காள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்கிறாள். இந்த நிராகரிப்புகளின் காயங்களோடு இராணுவத்தை விட்டு வெளியேறுகிறாள். ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் அவமானங்களுக்கு நிகராக இருக்கின்றன அக்காவிற்கு நேரும் அவமதிப்புகள். இராணுவ முகாமிற்குள்ளும் பெண் என்னவாக இருக்கிறாள். அவளது கனவு எப்படி சிதறடிக்கப்படுகிறது என்பதை நிகழ்வுகளின் வழி தொட்டுக் காட்டுகிறார். மிக முக்கியமான கதை. போர்க்கால பின்னணியை நேர்த்தியாக புனைவாக்கியிருக்கிறார்.

‘இளம் வெய்யில்’ என்றொரு கதை. வீடு, பள்ளி என்ற இரண்டு தளங்களில் மெய்யான அக்கறையோடும் குழந்தை மீதான பேரன்போடும் இயங்குகிறாள் நீலமலர். குழந்தையைக் காரணம் காட்டி பதவியை நாசூக்காகப் பள்ளியில் பறிக்கிற சூழலிலும்; 3, 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்தவள் மிகவும் விரும்பி முதல் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வீட்டில் தன்னைப்போல மாமியார், மாமனார், கணவர் முழுமையாகப் பொறுப்பேற்காமல் சுமையைத் தன் மேலேயே விட்டு ஒதுங்குகின்ற சூழலிலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். குழந்தையைப் பெற்றெடுத்திருக்கக் கூடாதோ என்ற நினைப்பும் தோன்றுகிறது. இது இனிமையைவிட துன்பத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது. இந்த யோசனைகளின் அழுத்தம் மறதியை அவ்வப்போது கொண்டு வருகிறது. அது அவளை அவதிப்பட வைக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை நன்றாகவே எழுதியிருக்கிறார். இவ்விதமான நெருக்கடிகள் மீது கலைப்பூர்வமான விமர்சனத்தை வைக்கின்றன இவரது கதைகள். இழைக்கப்பட்ட இருண்ட துரோகங்கள் மீது ஒளியைப் பாய்ச்சி வெளிச்சப்படுத்துவதைத் தார்மீகமாகக் கொண்டிருக்கின்றன.

‘சிலந்தி’, ‘சீனலட்சுமி’, ‘அலிசா’, ‘காவடி’ நான்கு கதைகளிலும் பாத்திரவார்ப்பை வெகுநேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். வெண்கலப்பானையை சுண்டிச் சுண்டி ஓசையில் அதன் தரத்தை மனதில் கொண்டு வருவதைப்போல வடித்திருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் சிலந்தி சண்டையில் தோற்றுப்போன நண்பனின் உள்ளத்தில் ஒளிந்திருந்த வன்மத்தைச் சொல்லும் கதை சிலந்தி. குடத்து நீரில் விழுந்த ஒரு துளி விசம் போல அற்பகாரியம் நெஞ்சில் படர்ந்து விடுகிறது. வளர்ந்து வாலிபர்களாகி இராணுவத்தில் பணியாற்றும்போது அந்த வஞ்சம் தன் குரூரத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழ்ச் சமூகத்திற்குள் வந்த சீன குழந்தை தமிழ்ச் சூழலில் வளர்ந்து தமிழச்சியாக நின்று உறவு பந்தங்களோடு அவள் கொள்ளும் ஓயாத அன்பை, உரையாடலை, நினைவு கூறலை வாக்களிக்கும் வரிசையில் நிறுத்தி வைத்து சொல்கிறது ‘சீனலட்சுமி’ கதை.

லதாவின் கதைகளில் பெரியாரின் தாக்கம் குறித்து அங்கங்கே ஓரிருவரிகளில் வந்து, காலப்போக்கில் சடங்கு பண்பாட்டிற்குள் மறைந்துபோவதை அவதானப்படுத்துகிறார். சாவின் சந்நிதியில் தன் கணவனைப் போல பேரும் புகழுமாக ஒருமுறையேனும் காவடி எடுத்து ஆடவேண்டும் என்ற நினைவுகளால் ததும்பும் பாட்டி பற்றிய கதை ‘காவடி’. அது நிறைவேறப் போவதில்லை என்றாலும் காவடி தழும்புகள் அவளது உள்ளத்திலும் படிகிறது. புறத்தில் வேறுவிதமாகப் படிகிறது. ஒவ்வொரு தனித்துவம் மிக்க பாத்திரங்களின் அடியில் மனம் சார்ந்த அவர்களின் ஜன்னல்களை இக்கதைகளில் திறந்து வைக்கிறார்.

லதாவிடம் பிரசுரம் சார்ந்த மயக்கங்கள் இல்லை. ஓரளவு கலையின் முழுமையை எட்டிவிடத் துடிக்கும் மனம் அவரது. அந்த நோக்கில் விளைந்தவை இந்தக் கதைகள். அதற்காக மனம் ஒன்றிச் செயல்படும் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் புதிய கதைகள் லதாவிற்கு ஒரு  அடையாளத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல, சிறந்த கதைகள் இவை. வாசக மனதிற்கு பெரிய இடம் அளிக்கும் கலாப்பூர்வமான கதைகள். லதா இனி மிகச்சிறந்த கதைகளை எழுத வேண்டும். ஒவ்வொரு Masterரும் (மாஸ்டர்) மூன்று நான்கு மகத்தான கதைகளைத் தந்திருக்கின்றனர். இந்த சவாலை ஏற்று முன்நகர வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...