“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living Room’, 2014ல் வெளிவந்தது. லதாவின் கவிதைகளும் சிறுகதைகளும் சிங்கப்பூரின் பன்மொழித்தொகுப்புகளிலும் மற்றும் இந்தியா, மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற நாடுகளின் முக்கிய இலக்கிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், சீனம், மலாய், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கை நீர்க்கொழும்பைப் பிறப்பிடமாகக்கொண்ட லதா சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சிங்கப்பூர் இலக்கியம் குறித்த தனித்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ள அவரிடம் வல்லினம் சிங்கப்பூர் சிறப்பிதழுக்காக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. சிங்கப்பூர் இலக்கியம் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் லதா சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த தனித்த கருத்துகளைக் கொண்டுள்ளவர். அவரிடம், அவரது படைப்பிலக்கியத்தைத் தவிர்த்து, சிங்கப்பூர் இலக்கியம் குறித்த நேர்காணல் ஒன்றை வல்லினம் சிங்கப்பூர் சிறப்பிதழுக்காக மேற்கொண்டது.  

கேள்வி: சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியச் சூழலில் விமர்சன மரபு என ஒன்று வலுவாக உருவாகவில்லை என்பது என் எண்ணம். ஆனால் முற்றிலும் இல்லை என்றும் சொல்ல முடியாது. உங்கள் பார்வையில் சிங்கப்பூரில் இலக்கிய விமர்சனப்போக்கு குறித்து கூறுங்கள்.

லதா: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடலை ஒரு விமர்சனத்தோடு தொடங்குகிறீர்கள். இதற்கு ஒரு விமர்சனத்தை முதலில் வைக்கிறேன். 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியச் சூழல் குறித்து பலரும் கொண்டுள்ள ஒரு பொதுப் பார்வை இது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் மரபும் பயணமும் அறியப்படாமலும் தொடர்ச்சியான உரையாடலுக்கு உட்படுத்தப்படாமலும் இருப்பதும் இத்தகைய பார்வை ஏற்படுவதற்கு ஒரு காரணம். மற்றது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கப்பூருக்கு வரும் புதிய படைப்பாளிகளால் இலக்கிய முன்னெடுப்புகள் இருக்கின்றன. இவ்வாறு புதிது புதிதாக குடியேறிகள் சிங்கப்பூர் இலக்கியத்தில் பங்குபெறத் தொடங்கும்போது ஒரு புதிய தொடக்கம் ஏற்படுகிறது. புதிய தொடக்கங்கள் உற்சாகமானவைதான். ஆனால் விடுபடல்களைத்தான் இணைக்க முடிவதில்லை. 

மற்றொரு முக்கிய காரணம், ஏறக்குறைய கடந்த ஒரு முப்பது ஆண்டுகளாக விமர்சனம் குறித்த சர்ச்சைகள் பரவலாகப் பேசப்பட்ட அளவுக்கு, விமர்சனங்கள் ஆக்ககரமான முறையில் விவாதத்துக்கு உள்ளாகாமல் போனது.

சிங்கப்பூரின் விமர்சனப் போக்கைப் பற்றி பேசுவதற்கு முன், ஒரு புரிதலுக்காக சிங்கப்பூரின் விமர்சன மரபு குறித்து வரலாற்று ரீதியாக சிலவற்றைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். 

சிங்கப்பூரில் தமிழ்ப் படைப்பிலக்கியத்தை வளர்க்க 1950களில் விமர்சன முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. தமிழ் முரசில் ‘எழுத்தாளர் பேரவை’ என்ற பகுதி விமர்சனத்தைத் தீவிரமாக முன்னெடுத்தது. மாதம்தோறும் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு, கதைகள் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பலரும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பி.கிருஷ்ணன், சே.வெ.சண்முகம், தா.மா.சி.பாக்கியச்சிற்பியன், மா.செகதீசன், ரா.நாகையன் உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்கள் பலர் அப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ரசனை வகுப்பு, புதுமைப்பித்தனின் விபரீத ஆசை குறித்து ஒன்பது மாதங்கள் தமிழ் முரசில் நீடித்த விவாதம் போன்றவையெல்லாம் விவாத விமர்சன சிந்தனையைத் தூண்டி வளர்த்தன.  

தமிழ் முரசுடன் சிங்கப்பூரில் வெளிவந்த தமிழ் மலர், மலாயா நண்பன் பத்திரிகைகளும் அவ்வப்போது வெளிவந்த பருவ சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகள் குறித்த வாசகர்களின் கருத்து விமர்சனங்களை பலகாலத்துக்கு தொடர்ந்து பிரசுரித்துள்ளன. மனோகரன், கலைமகள், திரையொளி, இந்தியன் மூவி நியூஸ் போன்ற சினிமா இதழ்களும் இப்பங்கை ஆற்றியுள்ளன. 

அதன் பின்னர், 1976ல் நா.கோவிந்தசாமி தலைமையில் அன்றைய முன்னணி எழுத்தாளர்கள் 10 பேர் இணைந்து உருவாக்கிய சிங்கப்பூர் இலக்கியக் களம் விமர்சன சிந்தனையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. இவ்வமைப்பு வெளியிட்ட ‘சிங்கப்பூர் இலக்கியக் களம் -1977 சிங்கப்பூர் – மலேசியச் சிறுகதைகள்’ நூல் இன்றுவரையில் சிங்கப்பூரின் சிறுகதை விமர்சன சிந்தனைக்கு சான்றாகவும் சிங்கப்பூர் சிறுகதைகளின் நல்லதொரு தொகுப்பாகவும் உள்ளது.

சுதந்திர சிங்கப்பூரில் படைப்பிலக்கிய விமர்சனத்துக்குக் களம் ஏற்படுத்திய ஒரு  முக்கிய நிகழ்வாக முனைவர் அ.வீரமணியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஆய்வரங்க மாநாடுகளைச் சொல்லலாம். 1977 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற தமிழும் தமிழிலக்கியமும் என்ற தலைப்பிலான ஒன்பது தொடர் ஆய்வரங்குகளில் படைப்பிலக்கிய விமர்சனக்கூறுகள் முக்கிய இடம்பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக, 1981ல் இளங்கோவன் படைத்த ‘சிங்கப்பூர் தமிழ்ப் படைப்புகளின் போக்கு’ என்ற விமர்சனக் கட்டுரை இன்று வரையிலும் சிங்கப்பூர் தமிழ் விமர்சனத்துறையில் ஒரு மைல்கல்லாக உள்ளது.

சிங்கப்பூர் எழுத்துகளைத் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கி வரும் ஆய்வாளர் திரு பாலபாஸ்கரன் எழுத்தாளர் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவு மாநாட்டில் படைத்த சிங்கப்பூர் சிறுகதை குறித்த விமர்சனக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. ‘சிங்கப்பூர்-மலேசியா தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம்’ என்ற தமது நூலில், இந்நாட்டு இலக்கியத்தையும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் விமர்சனப் பார்வையுடன் இவர் அணுகியுள்ளார்.

டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்’ என்ற விமர்சன நூலையும் பல்வேறு விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் மாதந்தோறும் நடைபெறும் தமிழ் அமைப்புகளின் இலக்கியக் கூட்டங்கள், நிகழ்வுகளுடன் தேசிய எழுத்தாளர் விழா, மாநாடுகள் போன்ற ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை முன்வைக்கின்றனர். சிங்கப்பூர் தமிழ்ப் படைப்பிலக்கியம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. சுந்தர ராமசாமியில் தொடங்கி, மலேசிய எழுத்தாளர் ம.நவீன், தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் முதலியோர் சிங்கப்பூர் கதைகளை கூர்மையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ரசனை அடிப்படையிலும், விவாத அடிப்படையிலும் சமூக, வரலாற்று ஆய்வு அடிப்படையிலும் பகுப்பாய்வு அடிப்படையிலும் பாராட்டு அடிப்படையிலும் சிங்கப்பூரின் விமர்சனப் போக்கு இருக்கிறது எனக் கூறலாம். 

கேள்வி: தாங்கள் கூறும் விமர்சன அல்லது திறனாய்வுப் பணிகள் எங்கும் உள்ளவைதான். அவை மலேசியாவிலும் நிகழ்ந்துள்ளன. தமிழகம் மற்றும் இலங்கையிலும் என்றும் உள்ளவை. ஆனால் தமிழின் தரமான படைப்புகளை அறிய அமைப்புகள், இயக்கங்கள், கல்விக்கூடங்கள் வழி முன்னெடுக்கப்படும் திறனாய்வு முறைகள் உதவுவதில்லை என்பதே நாம் காணும் வரலாற்றுச்சான்று அல்லவா? மலேசியாவிலும் வல்லினம்  முன்னெடுத்த விமர்சன போக்கினால் ஓரளவு தரமான படைப்புகளை முன்னெடுக்க முடிந்தது.  புதுமைப்பித்தன் தொடங்கி ஜோ டி குரூஸ் வரை முக்கியமான படைப்பாளிகளை அந்தந்த காலத்தில் வாழும் விமர்சகர்களே அடையாளம் காட்டுகின்றனர். அப்படி தமிழகத்தில் கா.ந.சு, சு.ரா, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் என்ற ஒரு வரிசை உண்டு. சிங்கப்பூரில் அப்படியான விமர்சன மரபு உருவாக்கும் முயற்சி குறித்து கேட்கிறேன்.

லதா: ஒரு மொழியின் இலக்கிய உயர்வை மட்டுமே நோக்கமாகக்கொண்ட, அறிவாற்றலும் அக்கறையுமிக்க இலக்கிய ஆளுமைகளே விருப்பு வெறுப்பில்லாது, தகுதியானவற்றுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குவர். ஒட்டுமொத்தமாகவே இத்தகையவர்கள் மிகச் சிலர்தான் இருப்பார்கள். இதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். 

முதலாவது, தமிழ்நாட்டில் ஆழமான பார்வையும் இலக்கியத்தையே முதல்நோக்காகவும் கொண்ட தீவிர எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். எனினும், அங்கு தொடர்ச்சியான வாசிப்பும் எழுத்துப் பழக்கமும் விவாத அனுபவமும் மிக்க நவீன இலக்கிய விமர்சகர்களை பத்து விரல்களுக்குள் எண்ணிவிடலாம். 

முதலில் இங்கே பட்டியல் போடுவதற்கு அத்தகைய எண்ணிக்கையில் எழுத்தாளர்களோ, படைப்புகளோ இல்லை. ந.பழநிவேலு, சிங்கை முகிலன், பி.கிருஷ்ணன், மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி என்று நீளும் எல்லாரும் அறிந்த, ஏற்றுக்கொள்ளும் ஒரு பட்டியல் இங்கே உள்ளது. 

மற்றது, இந்நாட்டு படைப்பிலக்கியம் குறித்த கூர்மையான விமர்சனத்தை முன்வைக்க வெளிநாட்டு, உள்நாட்டு விமர்சகர்கள் ஒரு சிலரைத் தவிர, பலருக்கும் தயக்கம். ஏனென்றால், இந்நாட்டில் இன்னமும் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையேயான வேறுபாடு உணரப்படவோ, உணர்த்தப்படவோ இல்லை. அதனால் எதிர்மறையான விமர்சனங்களை தனிப்பட்ட நிந்தனையாகவே பார்க்கிறார்கள். அதனால் மனவருத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அது பகைமையாகிறது அல்லது போலிஸ், சட்டம் என்பது வரை நிலைமை போய்விடுகிறது. இப்போக்குக்கு ஆதரவுக்குரலே இங்கே அதிகம் உள்ளது. 1991இல் சுந்தர ராமசாமி சிங்கப்பூர் சிறுகதைகள் மீது வைத்த எதிர்மறையான அபிப்பிராயத்துக்குப் பின்னர் அவர் இங்கு அழைக்கப்படவே இல்லை. ஜெயமோகன் இந்நாட்டு கதைகள் குறித்து தீவிரமாக விமர்சனம் செய்தபோது போலிசில் புகார் செய்தார்கள். மலேசியாவிலிருந்து ம.நவீன் எழுதியபோது அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினார்கள். அதன்பிறகு, ஏன் வம்பு என்று இவர்களை இங்கே அழைப்பதற்கே யோசிக்கிறார்கள். தெரியாத, புரியாத ஒன்றைக் குறித்த பயம், கோபமாகவும் வெறுப்பாகவும் காழ்ப்பாகவும் வெளிப்படுவது இயல்பு என்பது மனோதத்துவியலாளர்கள் கூறுவது.

இங்கே இருப்பது ஒரு சிறிய இலக்கிய வட்டம். ஒரு நூறு பேரே மீண்டும் மீண்டும் நூல் வெளியீடுகளுக்குச் செல்பவர்களாக உள்ளனர். அதிலும் சிலரே வாசகர்களாக உள்ளனர். இருப்பது கொஞ்சப் பேர், இதில்  மனவருத்தங்களையும் மனக்கசப்புகளையும் வளர்ப்பானேன் என்பது பெரும்பாலானோரின் எண்ணம். பயங்களைக் களைந்து, இலக்கியம் வளர கூர்மையான விமர்சனத்தின் தேவையை உணர்த்த வேண்டிய கடமை தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு உள்ளது.

கோட்பாட்டு ரீதியிலும், சமூகவியல் ரீதியிலும், படைப்புகளின் சமகால நிகழ்வுகள் – அரசியல், இலக்கியம், சமூகம் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் சார்ந்தும் அப்படைப்பு அணுகப்பட வேண்டும். அப்போது, படைப்பாளர்களாலும் வாசகர்களாலும் ஏற்கக்கூடிய ஒரு பட்டியல் உருவாகும். அது விவாதத்துக்கும் உள்ளாகும். இந்தத் தாக்கத்தை உணர்ந்து வளரும் அடுத்த தலைமுறை, தன்னை மேலும் மேம்படுத்திக்கொண்டு புதிய இலக்கியம் படைக்கும். அந்தப் பட்டியலில் இடம்பெறத் துடிக்கும். முன்னைய விமர்சனங்களை மறுஆய்வு செய்யும். படைப்பும் விமர்சனமும் ஒன்றையொன்று சார்ந்தும் எதிர்த்தும் வளரும். சிங்கப்பூரில் பொதுவாக இத்தகைய நிலைமை இன்னும் ஏற்படவில்லை. 

கேள்வி : ஏன் இல்லை?

லதா: சிங்கப்பூர் சுதந்திர நாடான காலத்திலிருந்து ஒரு 25 ஆண்டு காலத்துக்கு, கிட்டத்தட்ட 1990கள் வரையில் அத்தகைய சூழல்  உருவாகும் சாத்தியமிருந்தது. முதல் தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளையும் சமகாலத்தில் வெளிவந்த மற்ற நாடுகளின் தமிழ்ப் படைப்புகளையும் உள்ளூரில் மற்ற மொழிகளில் வெளிவந்த படைப்புகளையும் படித்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினரான இளங்கோவன் கூர்மையான விமர்சனத்தை முன்வைத்தார். மூத்த தலைமுறையினரின் பாணியிலிருந்து மாறுபட்டு புதுக்கவிதையும், பரீட்சார்த்தமான கதைகளும் எழுதத் தொடங்கினார். தொடர்ந்து உதுமான் கனி, ரெ.பாண்டியன் உள்ளிட்ட பலரும் எழுத வந்தனர். ஆனால், இந்த முயற்சிகள் வேரூன்றி வளர்வதற்கான சூழல் இந்நாட்டில் இருக்கவில்லை. இளங்கோவனின் விமர்சனம், விவாதத்துக்கு உள்ளாக்கப்படாமல் முழுமையாக மறுதலிக்கப்பட்டது. அவரும் பிறகு ஆங்கிலத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் சிலரின் இலக்கிய ஈடுபாடு மெல்ல மெல்லக் குறைந்து மறைந்துவிட்டது. தமிழ் இலக்கியத்துறையில் வாசிப்பும், உரையாடல்களும் மீண்டும் இடம்பெறத்தொடங்கியது கடந்த 20-25 ஆண்டுகளில் எனலாம். 

கேள்வி : புறச்சூழலில் நடந்த எத்தகைய மாற்றங்கள் நீங்கள் கூறிய இந்த 20 – 25 ஆண்டு காலகட்டத்தில் உரையாடல்களைத் தோற்றுவித்தன?

லதா: இதற்கு ஒரு முக்கிய காரணம் இந்நாட்டின் விரைந்த, அபரிமித பொருளியல் வளர்ச்சி. அதனால், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் குடியேறிகளும் ஊழியர்களும் இந்த நாட்டுக்குப் பொருள்தேடி வந்தனர். இவர்கள் தமிழ் மொழி, இலக்கியத்தில் காட்டும் ஆர்வமானது, இந்த நாட்டின் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும் இங்குள்ளவர்களின் இலக்கிய ஆர்வம், ஈடுபாட்டுக்கும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, இங்கு குடியேறியவர்களால் தொடங்கப்பட்டு செயல்படும் கவிமாலை, தங்கமீன் அமைப்புகளைச் சொல்லலாம்.  தொடர்ச்சியான கவிதைப் போட்டி, உரைகள், பயிலரங்குகளை நடத்திவரும் கவிமாலை தற்போது கல்யாண்ஜி, சமயவேல், மகுடேசுவரன், பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களுடன் இணைய உரையாடல்களை நிகழ்த்துகிறது.  தங்கமீன் பதிப்பகம், அதன் இணைய இதழ், வாசகர் அமைப்பு ஆகியவை இங்குள்ளவர்களையும் புதிதாகக் குடியேறியவர்களையும் எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபடுத்தி வருகிறது. அதேபோல் வாசகர் வட்டம் அமைப்பும் இலக்கிய வாசிப்பு மற்றும் உரையாடல்களின் தொடர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் முதல் இங்குள்ள முக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளை குடியேறிய மக்கள் ஆர்வத்துடன் முன்னெடுத்து வருகின்றனர். 

சில காலம் வெளிவந்த ‘நாம்’ இதழ் முதல், சிராங்கூன் டைம்ஸ், தமிழில் தரமான அறிவியல் புனைவு வளர்க்கும் இதழ்களில் ஒன்றாக உலக அரங்கில் தடம் பதித்து வரும் ‘அரூ’ வரை பல இதழியல் முயற்சிகளையும் குறிப்பிடலாம். 

தமிழ் மொழி, இலக்கியச் செயல்பாடுகள் மூலம் புதிதாகக் குடியேறியவர்கள் ஏற்படுத்தும் சமூக ஒன்றுணர்வு, உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பெறும் அங்கீகாரங்கள், முக்கியமாக, இதன் வழி அவர்கள் உருவாக்கும் தனித்த அடையாளம் போன்றவை இந்நாட்டு இந்திய சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லலாம்.

கேள்வி : சிங்கப்பூரில் அண்மையில் குடியேறிவர்களின் இலக்கியங்கள் குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்பு பரவியிருந்தன. குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள் மத்தியில் அது குறித்த ஒவ்வாமை இருந்தது. இன்று நிலை மாறியுள்ளதா? அவர்களது இலக்கிய முன்னெடுப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?  

லதா: காலம்தோறும் புதிய குடியேறிகளுக்கு களமும் வாய்ப்பும் கொடுத்து அவர்களை வளர்க்கும் மூத்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். எடுத்துக்காட்டாக இராம.கண்ணபிரானைச் சொல்லலாம். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் செயல்படுவது புதிய குடியேறிகளால்தான். 

கடந்த 1990களில் இருந்து இங்கே குடியேறி வருபவர்களில் சிங்கப்பூர் கதைகளும் கவிதைகளும் உயிரோட்டமாக இருக்க தொடர்ந்து ஒரு சாரார் பங்காற்றி வருகின்றனர். இந்திரஜித், ஜெயந்தி சங்கர், நெப்போலியன், பிச்சினிக்காடு இளங்கோ, ஷாநவாஸ், எம்.கே.குமார், மாதங்கி, சித்ரா ரமேஷ், நீதிப் பாண்டி, அழகுநிலா,  சிவானந்தம் நீலகண்டன், சுபா செந்தில்குமார் என அவர்களில் ஒரு பிரிவினர் இந்நாட்டினராக தங்களைத் தகவமைத்துக்கொண்டுள்ளனர். சுப்ரமணியம் ரமேஷ், போப்பு, உமா கதிர் போன்ற சிலர் இங்கிருந்த காலத்தில் இந்நாட்டு இலக்கியத்திற்கு பங்களித்துள்ளனர்.

சிங்கப்பூர் எப்போதும் குடியேறிகளின் நாடாகவே இருந்து வருகிறது. இங்கே இலக்கியம் வளர்ப்பதில், ஆங்கிலம், சீனம், தமிழ் என மூன்று மொழிகளிலுமே இலக்கியப் பங்களிப்பில் குடியேறிகளின் பங்கு முக்கியமானது. இந்த மூன்று மொழிகளிலும் புதிய சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றுகின்றனர். 

கேள்வி : எனவே ஒவ்வாமை இருந்ததில்லை எனச் சொல்ல வருகிறீர்களா? சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களின் ஆவணப்படங்களில் அந்த ஒவ்வாமையின் குரலைக் காண முடிகிறதே.

லதா: இதை இரு பக்கமும் பார்க்க வேண்டும். இந்த வேற்றுமையை வருபவர்களும் பார்ப்பார்கள். புதிய குடியேறிகளுக்கு உள்ளூர் படைப்புகளில் ஒவ்வாமை இருக்கும்.

உலகமயமாக்கல் தொடங்கிய காலத்திலிருந்து இந்த ஒவ்வாமை இன்னும் அதிகமாகிக்கொண்டுதான் வருகிறது. இடமும் வளமும் சுருங்கச் சுருங்க புதிதாக ஓர் எறும்பு வந்தாலும் யானைக்கூட்டத்துக்கும் பதற்றமாகத்தான் இருக்கிறது. வேறு நாடு, வேறு மதம், வேறு இனம், வேறு மொழி, வேறு நிறம், வேறு ஊர், வேறு சமூகம், வேறு அந்தஸ்து, வேறு வயது என்று ஒரு சின்ன வேறுபாடும் மிரள வைக்கிறது. இது பொதுவான ஒவ்வாமை. இந்தப் பொது மனம் சிலவேளைகளில் இலக்கியம் சார்ந்தும் வெளிப்படலாம். இரு தரப்பினருக்கும் ஒன்றுவதில் ஏற்படும் தயக்கமும் சிக்கலும் இயல்பானதுதான். அது அப்போதிருந்தது இப்போதில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போதும் இருக்கும். 

இன்று சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அத்தனை தமிழ் இலக்கிய அமைப்புகளையும் சமூக அமைப்புகளையும் புதிய குடியேறிகளே செயல்படுத்துகின்றனர். அதை உள்ளூர் இந்திய சமூகமும் அரசாங்கமும் ஏற்று, பயன்பெறத்தானே செய்கின்றன. இந்த யதார்த்தத்தை மூத்த எழுத்தாளர்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் – வல்லினம் இணைந்து தயாரித்த மூத்த எழுத்தாளர்களின் ஆவணப்படங்களில், தேக்கா, புக்கிட் தீமா, ஜூரோங் என்று இடப்பெயர்களைக் கொண்டிருந்தால் மட்டும் சிங்கப்பூர் இலக்கியம் ஆகிவிடாது என்ற அடிப்படையில் பேசினார்கள். சிங்கப்பூர் இலக்கியம் எனும்போது அதில் இந்நாட்டு வாழ்வும் உணர்வும் இருக்க வேண்டும் என்பதே அவர்களது கருத்து. எவரும் எழுதலாம். ஆனால், அதில் எது இந்நாட்டை – இங்குள்ள வாழ்வை- மக்களைப் பிரதிபலிக்கிறது, எதை சிங்கப்பூர் இலக்கியமாகக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலான உரையாடலை, அவர்கள் படைப்புகள் மீதான ஒவ்வாமையாகக் கொள்ளமுடியாது. 

அதோடு, இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பெரிய அளவில் எழுதாததால், இந்நாட்டு வாழ்வின் சரியான பதிவு இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதாகவே நான் பார்க்கிறேன். 

கேள்வி: மலேசிய இலக்கியச் சூழலோடு ஒப்பிடும்போது சிங்கப்பூர் இலக்கியத்தில் இயங்குபவர்கள் பெரும்பாலும் குடியேறிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் பழையவர், புதியவர் என்ற வேறுபாடு மட்டுமே உள்ளது. இன்று மலேசியாவில் எழுதுபவர்கள் எல்லாருமே மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். மலாய் மொழி தேர்ச்சி உள்ளவர்கள். ஆனாலும் இன்றும்  ஆழமான மலேசிய பன்முகத்தன்மையும் தனித்துவமும் உள்ள படைப்புகள் மலேசியாவில் எழுதப்படாமலே இருக்கின்றன. ஆகவே சிங்கையில் குடியேறிய சில ஆண்டுகளிலேயே யாரும் ‘சிங்கப்பூர் படைப்புகள்’ என்ற தன்மையுள்ள படைப்புகளை எழுதுவது சாத்தியமானதுதானா? 

லதா:  எது சிங்கப்பூர் இலக்கியம் என்பதில் இங்குள்ள தேர்ந்த இலக்கியவாதிகளும் அறிஞர்களும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். இது வரையறுக்க முடியாததாக உள்ளது. சிங்கப்பூர் இலக்கியம். யாரால், எவ்வாறு எழுதப்படும், எது சிங்கப்பூர் இலக்கியம் என்ற கேள்வி தொடர்கிறது.

சிங்கப்பூர் காட்சிகளும் வாழ்வும் இடம்பெற்றிருப்பதால் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியையும் கடலுக்கு அப்பாலையும் சிங்கப்பூர் படைப்பு என்று சொல்லலாம், இதில் இடம்பெற்றுள்ள செட்டியார்களின் வாழ்க்கை, பல இன ஊடாட்டங்கள் எல்லாம் சிங்கப்பூர்த் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்று விவாதிக்கலாம். அதேபோல் இங்கு வந்துபோன, சில காலம் தங்கிப்போன பல எழுத்தாளர்கள், கு.அழகிரிசாமியில் தொடங்கி, இரா.முருகன், சுஜாதா, மாலன், போப்பு, ஜீவகுமாரன், கனிமொழி, சுப்ரமணியம் ரமேஷ், எம்.ஜி.சுரேஷ் என்று அறியப்பட்ட படைப்பாளர்கள் முதல் அறியப்படாத இன்னும் பலரும் ‘சிங்கப்பூர் படைப்புகளை’ எழுதியுள்ளார்கள். இவற்றில் இந்நாடு குறித்தும் இங்குள்ள வாழ்வு குறித்தும் குறிப்பிடத்தக்க பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சிறந்த படைப்புகள் என்று எடுத்துச்சொல்லக் கூடியவையும் உண்டு. நீண்ட நேர விமானப் பயணத்தின் இடையே சில மணிநேரங்கள் தங்கிப் போகிறவரும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைக் களமாகக்கொண்ட கவிதை, கதை, ஏன் பெருங்காப்பியமேகூட எழுதலாம். கதையின் களம் பெயர் பதிலீடுகளாகவும்; அதன் வாழ்வியல் பயணியின் பார்வையிலும் உள்ள படைப்புகள் இவை. இங்கே வாழ்பவர்களும் பெரும்பாலும் இத்தகைய படைப்புகளையே எழுதுகின்றனர்.

புதிய குடியேறி ஒருவரின் படைப்பில் சிங்கப்பூர்த் தன்மை உள்ளதா, அவற்றை எழுதுவது சாத்தியமா என்பதை இன்னும் ஒரு நூற்றாண்டுக்குக்கூட நாம் விவாதிக்கலாம். முதலில் சிங்கப்பூர்த் தன்மை உள்ள படைப்புகள் எழுதப்படும் நோக்கத்தை நாம் ஆராய வேண்டும். இந்த வாழ்வும் வெளியும் நமக்கும் சொந்தம். நாமும் இதற்கு இனி சொந்தமானவர்கள் என்பதை வெளிப்படுத்த புதிய குடியேறிகளில் கணிசமானவர்கள் மீண்டும் மீண்டும் இங்குள்ள புலத்தைப் பற்றி எழுதுகின்றனர். சிங்கப்பூர்த் தன்மையை சிங்கப்பூரர்களாலேயே வெளிக்கொணர முடியுமா என்பதும் கேள்விக்குறி. புது குடியேறிகள் அதனை சாத்தியப்படுத்துவார்களா என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள், இருக்க வேண்டும்.   

கேள்வி: பொதுவாக புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் கலை இலக்கிய அமைப்புகளை உருவாக்குவதும் அதன் வழி கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதையும் ஒரு பண்பாட்டு செயல்பாடாக புரிந்து கொண்டுள்ளனர்.  அவர்களுக்கு உண்மையில் கலை இலக்கியம் தொடர்பான ஆழமான அறிவோ ஈடுபாடோ இல்லாவிட்டாலும் ஒரு ‘மோஸ்தராக’ கலை இலக்கியத்தைப் பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்க முடிகின்றது. சிங்கப்பூரில் அதிகமான இலக்கியவாதிகள் குடியேறியவர்கள் என்ற நிலையில் அவர்களின் இலக்கியச் செயல்பாடுகளை மேற்கண்ட புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடலாம் அல்லவா?   

லதா:  புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லும்போது நீங்கள் இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இங்கு இலக்கியம் ஒரு ஃபேஷனாக பயன்படுத்தப்படுவதாக நான் நினைக்கவில்லை. கலை, இலக்கிய ஈடுபாடு என்பது அந்தந்தச் சமூகங்களின் தனித்தன்மையான, தனிப்பட்ட முயற்சிகள், அக்கறை, கவனம், இலக்குகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

கேள்வி : ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் அரசு தமிழ் இலக்கியம் வளர பெரும் பங்கை ஆற்றி வருகிறது. அப்படியான நேரடி அரசு அங்கீகாரங்கள் மலேசியாவில் இல்லை. ஆனால் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் ஏன் உலகத் தமிழ் வாசகர்களிடம் பரவலாகச் சேரவில்லை.

லதா: பி.கிருஷ்ணன், மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, முதலிய மூத்த எழுத்தாளர்கள் தமிழகத்தில் ஓரளவு அறிமுகமானவர்கள். தற்போது சித்துராஜ் பொன்ராஜின் எழுத்துகள் குறிப்பிட்ட வாசகர் பரப்பை எட்டியுள்ளன. ஆனாலும் பெருமளவில் பேசப்படாததற்கான காரணங்களில் முதலாவது, தரமான படைப்புகள் அதிகம் இல்லாதது; இரண்டாவது, தரமான படைப்புகள் உருவாவதற்கு போதிய தீவிர, ஆழமான முயற்சிகள் எடுக்கப்படாதது; மூன்றாவது, இங்கே எழுதப்படும் படைப்புகள் பரந்த அளவில் வாசிக்கப்படாததும் அமைப்புகளால் முறையாக உலக அரங்கில் முன்வைக்கப்படாததும். குழு மனப்பான்மையையும் – இலக்கிய அரசியல்களையும் இதற்கு ஒரு காரணமாகச் சுட்டலாம். 

இதை நிவர்த்தி செய்ய வேண்டிய அமைப்புகளைப் பொறுத்தவரையில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, விழாக்கள் கொண்டாடுவது, பேச்சாளர்களை அழைத்துப் பேச வைப்பது, போட்டிகள் நடத்துவது, பரிசுகளும் விருதுகளும் கொடுப்பது என்பதிலேயே நாட்டம் காட்டுகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.

புதிதாக இலக்கியத்துக்கு வருபவர்கள் – புதிய குடியேறிகளும் சரி இங்குள்ளவர்களும் சரி பலரும் இங்கே ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பதோ, அதுகுறித்து விவாதிப்பதோ இல்லை. தங்களிடமிருந்தே புதிதாகத் தொடங்குகிறார்கள். அதனால் அவர்கள் கண்களுக்கு இங்கு எதுவுமே இல்லாததுபோல் தோன்றுகிறது. இப்படி உள்ளூரிலேயே சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அறிமுகம் இல்லாதபோது, உலகளவில் எப்படி அறிமுகமாகும்? இதை, சிங்கப்பூர் அரசு தமிழ் இலக்கியம் வளர பெரும்பங்கு ஆற்றுவதாக புளகாங்கிதம் அடைவோரும் இலக்கியம் படைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

கேள்வி : அரசாங்க உதவிகளைக்கொண்டு இயக்கங்கள்தானே செயல்படுகின்றன. அப்படி இருக்க அந்தப் பொறுப்பைத் தனி மனிதர்கள் தலையில் கட்டுவது எப்படி நியாயமாகும்?

லதா: தனி மனிதரில் இருந்துதான் எல்லாமே தொடங்குகிறது. உதாரணமாக நா.கோவிந்தசாமி இருந்தார். அவருக்கு சிங்கப்பூரில் நல்ல இலக்கியம் வளர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் காலத்தில் இவ்வளவு அரசாங்க ஆதரவு இருக்கவில்லை. தன்னுடைய நேரத்தில், பணத்தில் செயலாற்றினார். தமிழ் நாட்டிலிருந்து இலக்கிய சிறுபத்திரிகைகளையும் நூல்களையும் வரவழைத்து இளைஞர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் வாசிக்கக்கொடுத்தார். வாசிப்பிலும் எழுத்திலும் துளி ஆர்வம் உள்ள எவராவது அவர் பார்வையில் பட்டால் அவர்களை நாடிச் சென்று ஊக்கப்படுத்தினார். அவர்கள் எழுதுவதை வாசித்து, விவாதிப்பார். தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் கல்விக் கழக ஆசிரியராக, பயிற்சி ஆசிரியர்களிடம் தீவிர இலக்கிய சிந்தனையை வளர்க்க உழைத்தார். இதனால் அவருக்கு விருதுகளோ, பொன்னாடைகளோ, பரிசுகளோ கிடைக்கவில்லை. அவர் தமது தொழிலில் உயர்வதற்கு இதையெல்லாம் தமது பங்களிப்புகளாகப் பட்டியலிட்டாலும் பயன் இருந்திருக்காது. அவர் தன் மனத்தின் ஊக்கத்தினால் செயல்பட்டார். அதனால்தான் இன்றைக்கும் பலரும் அவரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றனர்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை அன்றைய மணிக்கொடி இயக்கமாகட்டும், வானம்பாடியாகட்டும் சுந்தரராமசாமியின் காலச்சுவடாகட்டும், இன்றைய விஷ்ணுபுர வட்டம், மலேசியாவின் வல்லினமாகட்டும் எல்லாமே இப்படி ஒருவரிடமிருந்து தொடங்கி விரிந்து வளர்ந்தவைதான். 

கேள்வி: நீங்கள் சொல்வது சரிதான். நவீன தமிழ் இலக்கியம் ஆக்ககரமாகத் தெரியும் சூழல்களை ஆராய்ந்தால் அதற்கு பின்புலத்தில் இலக்கிய ஆளுமைகள் இருக்கிறார்களேயன்றி அரசு இருப்பதில்லை. உதாரணமாகத் தமிழகத்தில் ஜெயமோகனை மையமாகக்கொண்ட விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் மூலம் ஏராளமான இளம் படைப்பாளிகள் உருவாகிறார்கள். அதுபோல கோணங்கி நடத்தும் கல்குதிரை வழியும் புதிய எழுத்தாளர்கள் வரவு நிகழ்கிறது. இதை மலேசியாவில் வல்லினத்துடனும் பொருத்திப்பார்க்கலாம். ஆனால் சிங்கப்பூரில் தொடங்கப்படும் இலக்கிய முயற்சிகள் அரசை சார்ந்தே இருப்பதால் புகார் கடிதங்களுக்கும் நிதி கோரல்களுக்கும் மடங்கி தங்கள் இலக்கியத்தை படைக்க வேண்டியதாய் உள்ளதா?

லதா:  அரசாங்க ஆதரவைச் சார்ந்தே எல்லா முயற்சிகளும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, அமைப்புகளின் மாதாந்திர நிகழ்ச்சிகள், சிராங்கூன் டைம்ஸ் இதழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இதில், அரசாங்க ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இங்குள்ள மனப்போக்கு அப்படித்தான் இருக்கிறது. 

எல்லாத் தகுதியும் இருந்தும் ஏன் நீங்கள் உங்களது உண்மையான விமர்சனத்தை முன்வைப்பதில்லை என்று இந்நாட்டின் மதிக்கப்படும் தமிழறிஞர் ஒருவரைக் கேட்டபோது அவர் “ஒரு மேடையில் ஒரு நூல் குறித்து சாதாரணமாக கருத்துரைத்தேன். நான் கோயிலுக்குப் போனபோது கோயில் வாசலில் வைத்து அந்த நூலாசிரியர் என்னை அடிப்பதுபோல் சண்டைக்கு வந்துவிட்டார்,” என்று வருத்தப்பட்டார். அவர் தகுதிக்கும் இந்நாட்டில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்துக்கும் அவர் எதற்கும் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. என்ன செய்வது, இங்குள்ள நிலைமை இது. மேலும், “எல்லாரையும் அரவணைத்துப் போக வேண்டும், எல்லாரது கருத்தையும் கேட்க வேண்டும்” என்று தலைமைத்துவத்தில் உள்ள பலரும் நினைப்பதையும் குறை சொல்வதற்கில்லை.

இன்னொன்று, ஏறக்குறைய 30 ஆண்டுகளாகத்தான் அரசாங்கம் தனது ஆதரவுக் கரங்களை அகல விரித்துள்ளது. அதற்கு முன்னர் மகதூம் சாயுபு, கோ.சாரங்கபாணி, ஐ.உலகநாதன், நா.கோவிந்தசாமி உள்ளிட்ட ஆளுமைகள் இந்நாட்டில் இலக்கிய வளர்ச்சியின் பின்புலமாக இருந்துள்ளனர். அவர்கள் தனிமனிதர்களாக தங்கள் நோக்கத்தைச் செயல்படுத்தினர்.

அரசாங்கத்திடம் நிதி பெறும்போது அதற்கென சில விதிமுறைகள் இருக்கும். நிகழ்ச்சியினால் ஏற்பட்ட பயனைச் சொல்ல வேண்டும். இதில், எல்லா மக்களுக்குமான ஜனரஞ்சக ரசனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

கனவும் இலக்கும் கொண்ட விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த, ஓர் ஆளுமையால்தான் நல்ல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்க முடியும், வளர்த்தெடுக்க முடியும். இது ஒரு வேள்வி. இதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு தேவை.

நவீன சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிய முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூ எந்தக் கட்டடத்திற்கும் அமைப்புக்கும் தன் பெயரை வைக்கக்கூடாது, தனக்கு சிலை வைக்கக்கூடாது என்று உத்தரவுபோட்டவர். தான் வாழ்ந்த வீட்டையே இடித்துவிட வேண்டும் என்று உயில் எழுதியவர். தலைவர் வழிபாடுகூடாது என்பதை செயலால் உணர்த்திச் சென்றவர். இப்படி நான் சொல்வதுகூட அவர் மறுத்த தலைவர் வழிபாடு என்று சிலரால் கருதப்படக்கூடும். ஆனால், ஒன்று நிச்சயம். அவரைப் போற்றிப் புகழும் இந்நாட்டு இலக்கியவாதிகள், அவர் வழியில் செயல்படுவது பற்றி யோசித்தால் நல்லது. 

கேள்வி: இந்தக் கேள்வி எழக்காரணம் சிறு தரப்பாக இருந்தாலும் மலேசியாவில் எல்லா காலத்திலும் அதிகாரத்துக்கு அல்லது பொதுப்புத்திக்கு எதிரான இலக்கியங்கள் உருவாகின்றன. சிங்கப்பூரில் அரசு சார்பு எழுத்துகள் அல்லது மீடியகர் இலக்கியங்கள் மட்டுமே உருவாவதாக ஒரு தோற்றம் உண்டு. அது உண்மையா?

லதா: அரசு சார்பு எழுத்துகள் என்பதைவிட, மிகையுணர்ச்சிக் கற்பனைப் படைப்புகள் அதிகம் என்று சொல்லலாம். கவிதைகள் நாட்டின் சிறப்பையும் நேர்த்தியையும் இங்கு காணப்படும் இன, மத, மொழி ஒற்றுமையையும் வியக்கும். கதை நாயகர்கள் நற்பண்பும் இனநல்லிணக்கினமும் கருணையும் மிக்கவர்களாக அல்லது இரக்கத்துக்கு உரியவர்களாக இருப்பார்கள். 

விதிவிலக்குகளும் உண்டு. ந.பழநிவேலுவின் ஆரம்ப காலக் கவிதைகளும் படைப்புகளும் போற்றிப் பாடுபவை அல்ல. பரணன், சிங்கை முகிலன், மெ.இளமாறன், நா.கோவிந்தசாமி முதலிய மூத்த தலைமுறைப் படைப்பாளிகளின் சமூக, அதிகார எதிர்ப்புக்குரல் பலமானது. பி.கிருஷ்ணனின் இத்தகைய கதைகள் பருவ இதழ்களோடு மறைந்துவிட்டன.  இளங்கோவனின் ஊடாடி, தலாக் உட்பட எல்லா நாடகங்களும் படைப்புகளும் அதிகாரத்துக்கு எதிரானவை. ரெ.பாண்டியன் சில கவிதைகளை எழுதியுள்ளார். உதுமான் கனியின் சிறுகதைகூட உண்டு. கண்ணபிரானின் பீடம் குறுநாவல் படைப்புச் சுதந்திரத்திற்கும் அதிகார அடக்குமுறைக்குமான போராட்டம் பற்றிப் பேசுவது. 

போற்றிப்பாடும் படைப்புகள் எல்லாக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் எழுதப்பட்டே வருகின்றன. எழுதப்படவே செய்யும். அவை ஒரு சடங்குபோல நடந்துகொண்டே இருக்கும். சடங்குகளெல்லாம் இலக்கியக் கணக்கில் வாரா.

கேள்வி : நீங்கள் குறிப்பிடும் பட்டியலில் முரண் இருப்பதாக கருதுகிறேன். பலர் அதில் மூத்த படைப்பாளிகள். நீங்கள் சொன்ன படைப்புகள் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. ஆனால் நான் பார்க்கும்போது சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர்களிடமிருந்து அங்குள்ள தமிழர்களின் சிக்கல் பேசப்பட்டுள்ளதா? 

லதா: எல்லாக் காலத்திலும் என்று கேட்டீர்கள். நான் எல்லாக் காலத்திலும் எழுதப்பட்டிருப்பதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். பட்டியலில் இருப்பவர்கள் பிரபல படைப்பாளிகள்தான். ஆரம்ப காலங்களிலிருந்த சிக்கல்களை இவர்களும், மா.இளங்கண்ணன், பி.கிருஷ்ணன் முதலிய மேலும் பல படைப்பாளர்களும் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் வெளிவந்த சித்துராஜின் ‘மாறிலிகள்’ சிறுகதைத் தொகுப்பு இத்தகையதொரு நல்ல படைப்பு. 

பரபரப்பான, போட்டித்தன்மை மிகுந்த புறவாழ்க்கையின் சிக்கல்களையே தற்போது பெரும்பாலான படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். வெளிநாட்டு ஊழியர்களின் அல்லாடல்கள், பணிப்பெண் பிரச்சனை, முதியவரின் தனிமை, பிள்ளைகளின் கல்விச்சுமை, பதின்மவயதினரிடம் காணப்படும் மனஉளைச்சல் என்று புறக்கண் அறிபவற்றைப் படைப்பாக்குகிறார்கள். அவ்வப்போது அரிதாக அகத்திலிருந்து ஆழமான பார்வைகள் வெளிப்படுவதுண்டு.

கேள்வி: 1970களில் எழுத வந்த எழுத்தாளர்களோடு தொடர்பில் உள்ளவர் நீங்கள். குறிப்பாக மலேசியா – சிங்கப்பூர் மலாயாவாக இருந்தபோதிருந்தே உருவான எழுத்தாளர்கள் முதல் இன்றைக்கு தமிழ் முரசுவில் முதல் படைப்பை அனுப்பும் இளம் படைப்பாளிகள் வரை உங்களுக்கு நேரடி தொடர்பு உண்டு. ஒரு மூன்று நான்கு தலைமுறை எழுத்தாளர்களிடம் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

லதா: நான் அறிந்த முதல் தலைமுறை எழுத்தாளர்களான ந.பழநிவேலு, பி.கிருஷ்ணன், மா.இளங்கண்ணன், சே.வெ.சண்முகம், இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, பொன்.சுந்தரராசு, பரணன், மெ.இளமாறன் முருகடியான், க.து.மு.இக்பால் முதலியோர் இலக்கியத்தை உயிராகப் போற்றுபவர்கள். அதிலும் நா.கோவிந்தசாமியும் இராம கண்ணபிரானும் சிங்கப்பூர் இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். இந்தத் தலைமுறையினருக்கு இலக்கியமே வாழ்வாகவும் பொழுதுபோக்காகவும் எல்லாமாகவும் இருந்தது, இருக்கிறது. இவர்களின் வாழ்க்கைக் காலகட்டம் அத்தகையது. பல இன சமுதாயத்தில் தமிழர்களின் பண்புநெறிகளையும் பாரம்பரியத்தையும் முக்கியமாக மொழியையும் இலக்கியம் மூலம் தக்கவைப்பதே இவர்களது இலக்கு. இந்நாட்டில் நெல்லிக்காய் மூட்டையாக இருந்த வெவ்வேறு சமூகங்கள் ஒன்றுபட்டு ஒரு நாடாக உருவாகி வரும் காலத்தில், சிறுபான்மைச் சமூகம் தனது தனித்தன்மையையும் சிறப்புகளையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவலையும் பொறுப்பும் கொண்டிருந்த இந்த மூத்த தலைமுறையினரின் எழுத்தின் வழி தமிழ் அடையாளத்தைப் பேணத்துடிக்கும் சமூக அரண்களாகவே பார்க்கிறேன்.  மூத்த தலைமுறையினரது படைப்புகளில், கலைச் சிறப்புகளில் குறை இருந்தாலும் அவர்கள் எழுத்தை ஒரு தவமாகக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறையினரிடம் இலக்கியத்தைத் தவமாகக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா எனத் தெரியவில்லை. காலம்தான் அதை சொல்லும்.

கேள்வி: நீங்கள் தொடர்ந்து இராம.கண்ணபிரான் குறித்து குறிப்பிடுவதால் கேட்கிறேன். அவர் பொதுவாக சிங்கப்பூர் இலக்கியங்களை அரவணைத்துச் செல்பவர். சிங்கப்பூரில் எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கொடுப்பவர். இதன் உளவியல் தேவை ஒருபுறம் இருக்க, விமர்சனமற்ற இந்த அரவணைக்கும் போக்கு சிங்கப்பூர் இலக்கியத்தை வளர்க்க ஏதேனும் உதவும் எனக் கருதுகிறீர்களா?

லதா: சிங்கப்பூரில் பல நூல்கள் வெளிவருவதற்கும், இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் பலர் நூல் வெளியிடுவதற்கும் ஊக்கசக்தியாக இருந்து வருபவர் இராம. கண்ணபிரான். நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவளிப்பது, நூலைப் படித்து பாராட்டுவது என்று தனிப்பட்ட அக்கறையுடன் செயல்படுபவர். ஒரு தொடக்கத்துக்கு இது உதவும். ஆனால் தொடர்ந்து வளர அவரைப் போன்றவர்களின் பேனா (அவர் பேனா பிடித்து எழுதுபவர்) மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும்.

கேள்வி: தமிழகத்துக்கும் மலேசியா – சிங்கப்பூருக்கும் இலக்கிய முன்னெடுப்பில் உள்ள அடிப்படையான வேற்றுமை அங்கு சிற்றிதழ்களே இலக்கியத்தை வளர்த்தன. அல்லது சிற்றிதழ் வழி உருவான எழுத்துகளையே இலக்கியமாக ஏற்றார்கள். இங்கு முழுக்க முழுக்க நாளிதழ்களை நம்பியே எழுத்தாளர்கள் இயங்கினர். ஒரு நாளிதழில் பணியாற்றுபவராக உண்மையில் இலக்கிய வளர்ச்சியில் நாளிதழின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என கூற முடியுமா?

லதா:  பல இன சமூகத்தினர் வாழும் சிங்கப்பூர், மலேசியாவில் நாளிதழ்களின் பங்கானது தமிழ் நாட்டிலிருந்து வேறுபட்டது. செய்தி அறிவித்தல், மகிழ்வித்தலுக்கு அப்பால், வேறு இலக்குகளும் நோக்கங்களும் உண்டு. 

தமிழ் முரசின் ஆரம்ப கால இதழ்களைப் புரட்டினால், முதல் பக்கத்தில் மலாயாவில் தமிழர் பற்றிய கட்டுரைத் தொடர் இடம்பெற்றிருக்கும். மலாயா இந்தியன் காங்கிரஸ் குறித்த காரசாரமான தலையங்கங்கள் இருக்கும். முதல் பக்கத்தில் கவிதை கூட வந்துள்ளது. சிங்கப்பூரில் வாசிக்கக் கிடைக்கும் ஆகப் பழைய பத்திரிகையான 1887 முதல் 1890 வரை வெளிவந்த சிங்கை நேசனும் இத்தகைய சமூக இலக்கையே கொண்டிருக்கும். 

இந்த நாட்டுத் தமிழ் மக்களின் சீர்திருத்தம், முன்னேற்றம், அவர்கள் வாழ்வை இந்த நாட்டில் உறுதிப்படுத்துவது, வரலாற்றைப் பதிவது செய்வது, உரிமைகளைப் பெறுவது, பிரச்சனைகளைப் பேசுவது, பெருமைகளைக் கொண்டாடுவது என ஒரு பெரும் சமூகக் கடமையும் பொறுப்பும்  ஊடகங்களுக்கு இருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே மக்களின் இலக்கிய வாசிப்பையும் உணர்வையும் ஆற்றலையும் வளர்க்க முரசும் நேசனும் போட்டிபோட்டு செயல்பட்டன.

இதில், தொடக்ககாலத்தில் இலக்கியம் வளர்த்த, தமிழ் நாட்டின் சுதேச மித்திரன், தினமணி, இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், ஈழநாடு உள்ளிட்ட நாளேடுகளைப் பின்பற்றி சிங்கப்பூர், மலேசிய தமிழ் நாளிதழ்கள் செயல்பட்டன. அவற்றின் வார இறுதி அனுபந்தங்களிலும், சிறப்பிதழ்களிலும் ஆண்டு சிறப்பு மலர்களிலும் வாசகர்களை ஈர்க்கவும் உள்ளூரில் இலக்கியம் வளர்க்கவும் இலக்கியத்தை வெளியிடத் தொடங்கின.

மலேசியா, சிங்கப்பூரில், வீரசேனனின் பாட்டாளி முரசு, எம்.கே பக்ருத்தீன் சாஹிப் நடத்திய மாத ஏடான பேனா முனை, ஐ.உலகநாதனின் மாதவி இலக்கிய இதழ், ரெ.கார்த்திகேசுவின் முகம், சங்கமணி முருகு சுப்ரமணியத்தின் புதிய சமுதாயம், மா.இராமையாவின் இலக்கிய குரிசில், ஆரம்பகால வானம்பாடி என்று பல சிற்றிதழ்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. ஆனால், இத்தகைய இதழ்களின் ஆயுட்காலமும் வாசகர் பரப்பும் குறுகியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் பொருளாதார வசதியும் வாசகர் எண்ணிக்கையும் அதிகமுள்ள நாளிதழ்களை படைப்பாளர்கள் நாட வேண்டியிருந்தது. 

சிங்கப்பூரில் மாணவர்கள் எழுதிப் பழக தளம் அமைத்துத்தரும் அச்சு ஊடகமாக இருக்கிறது மாணவர் முரசு. மலேசிய, சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் பலர் இந்த மாணவர் முரசின் அன்றைய வடிவமான மாணவர் மணிமன்றத்தில் எழுதி வளர்ந்தவர்கள். மலேசிய, சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சியில் தமிழ் முரசு மிக  முக்கியமான பங்கை ஆற்றியுள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். 

வல்லினம் உள்ளிட்ட தீவிர இலக்கியம் வளர்க்கும் இணைய இலக்கிய இதழ்கள் செயல்படும் இன்றைய சூழலிலும், இந்நாட்டில் புதியவர்களுக்கும் ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும் நாளிதழ்கள்தான் களம் தருகின்றன. இன்று சிங்கப்பூரில் எல்லாத் தரப்பு தமிழ் மக்களையும் எட்டும் அச்சு ஊடகமாக இருப்பது தமிழ் முரசுதான். அந்தவகையில், உள்ளூரின் தனித்துவமான இலக்கியத்தை வளர்ப்பதில் செய்திதாள்கள் அவற்றின் இணைய வெளியீட்டு வசதியோடு, முக்கியமான ஒரு பங்கை ஆற்ற முடியும் என நான் நம்புகிறேன். இங்கு தமிழ் நாளிதழ்கள் எல்லாவிதமான செய்திகளாலும் தமிழ்ச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்கின்றன. இந்த வகையில் செய்தித்தாளில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

கேள்வி : எழுத்தாளர் ஜெயமோகனின் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் சிங்கப்பூரில் இருந்த மூன்று மாதங்களில் சிங்கை இலக்கிய சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

லதா: நீங்கள் ஜெயமோகனைக் குறிப்பிட்டுக் கேட்பதற்கான காரணம், இந்நாட்டில் முதல்முறையாக, அரசாங்க அழைப்பில், இங்கே தங்கி இருந்து பணியாற்றிய (residence writer) தமிழ் எழுத்தாளர் அவர் என்பதால்தான் என நினைக்கிறேன்.

எழுத்தாளர் அகிலன் வருகை, புறவயமான மாற்றங்களை சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்தியது என்றால், ஜெயமோகனின் வருகை அகவயமான மாற்றங்களை உண்டாக்கியது என்று சொல்லலாம். அகிலனின் வருகை சிங்கப்பூர் இலக்கியம் என்ற சிந்தனையையும் அதன் தேவை குறித்த கட்டாயத்தையும் ஏற்படுத்தியது.  வாசிப்பு பற்றிய எண்ணத்தையும் சிறந்ததொரு படைப்பைப் படைக்கும் சவாலையும் ஜெயமோகன் தந்துள்ளார். 

சிங்கப்பூரில் எழுதப்பட்ட கதைகளைப் படித்து, அவற்றை சமகாலப் படைப்புகள், சிந்தனையுடன் ஒப்பிட்டு அவற்றின் தேவை, நோக்கம், குறைநிறைகளைக் குறிப்பிட்டு அவர் செய்த விமர்சனம் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு அவர் அளித்துள்ள ஒரு கொடை. அவர் எழுதியதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், விடுபடல்கள் இருக்கலாம், படைப்பாளர் ஏற்றுக்கொள்ளலாம், மறுக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழ் இலக்கிய உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமையான ஜெயமோகன் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து பேசியதால், இந்நாட்டு இலக்கியம் குறித்த அக்கறை உலக வாசகர்களிடம் ஏற்பட்டுள்ளது. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர் இலக்கியமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியத்தில் மாற்றம் என்பது உடனடியாக நிகழ்வதில்லை. ஆல விதை மரமாக வளர பல ஆண்டுகள் ஆகலாம். 

ஜெயமோகனிடம் இலக்கியம் கேட்ட மாணவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒன்று. இந்நாட்டில் அறிமுக எழுத்தாளர்கள் – மாணவ எழுத்தாளர்கள்கூட உலக வாசிப்பை ஈர்க்கக்கூடிய நல்ல படைப்பைத் தரமுடியும் என்பதையும் சிங்கப்பூரில் ஆழமான படைப்புகள் எழுதுவதற்கான சூழலும் மனநிலையும் உள்ளன என்பதையும் இந்நூல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேள்வி : அது அவர் அழைத்துவரப்பட்ட  பணி சார்ந்தது. உலக இலக்கியத்தின் சமகாலத்தில் வாழும் மிகப் பெரும் ஆளுமையை அங்குள்ள அமைப்புகளும் எழுத்தாளர்களும் எப்படிப் பயன்படுத்திக்கொண்டனர்? தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல; பிற மொழி அமைப்புகளையும் சேர்த்தே கேட்கிறேன்.

லதாஅவரது முதன்மைப் பணி வகுப்புகளை நடத்துவதும் ஏற்பாடு செய்யப்பட்ட சில கூட்டங்களில் பேசுவதும்தான். மாணவர் தொகுப்பு அவர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டது. விமர்சனம் அவர் பணிக்கும் அப்பாற்பட்டது. 

பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பல தரப்பினரும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். ஆங்கில உரையும் கலந்துரையாடலும் நிகழ்த்தியுள்ளார். அவர் பயிற்றுவித்த தேசிய கல்விக் கழகத்தில் சீன, மலாய் மொழி படைப்பாளர்களுடனும் மாணவர்கள், ஆசிரியர்களுடனும் உரையாடல்களை நடத்தியுள்ளார்.  ஆங்கில நாளிதழில் அவரது பேட்டியும் வெளிவந்தது. அவர் இங்கிருந்த  காலகட்டத்தில் பெரும்பாலான நேரங்களை அவர் பல்கலைக்கழகத்தில் செலவிட வேண்டிய கடப்பாடு இருந்தது. மாலையிலும் அவருக்கு ஓய்வு கிடைத்த  நாட்களிலும் அவரது எழுத்துப் பணியும் நண்பர்கள் சந்திப்பும் இருந்தன. வாசகர்கள், எழுத்தாளர்களுடன் குழுவாகவும் தனிப்பட்ட முறையிலும் இங்கிருந்த காலம் முழுவதும் ஜெயமோகனுடன் பல சந்திப்புகள் நடத்தியுள்ளார்.  

இந்த நாட்டில் 45 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்தான் எழுத்தாளர் ஜெயமோகனை சிங்கப்பூருக்கு முதன்முதலில் அழைத்துப் பேச வைத்தது. அதற்குப் பின்னர் அந்த அமைப்பு அவரைப் பயன்படுத்திக்கொள்ளாதது பற்றி யோசிக்க வேண்டும். 

இந்நாட்டில் பிறந்து அல்லது வளர்ந்து எழுதத் தொடங்கியவர்கள் ஜெயமோகனை இலக்கிய குருவாக இன்னும் கொள்ளவில்லை.

மு.வ, அகிலன், நா.பார்த்தசாரதி போல, ஒரு காலத்தில்  இங்குள்ள சில எழுத்தாளர்களுக்கும் தமிழாசிரியர்கள் உள்ளிட்ட வாசகர்களுக்கும் ஜெயகாந்தன் இலக்கிய குருவாக இருந்தார். அவரை வாசித்துக் கொண்டாடினார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அவரது படைப்புகளை மாணவர்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ அறிமுகப்படுத்தமாட்டர்கள். அது போகட்டும். ஒருமுறை தமிழ் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானபோது, அவரது சிங்கப்பூர் வருகை ரத்தானது. அரசாங்கத்தால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி அது. அப்போது அவரைக் கொண்டாடியவர்களோ அல்லது இலக்கிய தலைமைத்துவத்தில் இருப்பவர்களோ எவருமே குரல் கொடுக்கவில்லை. அவரை ஒரு தமிழ் துரோகி போன்றே சித்தரித்தார்கள். ஆனால், அவர் ஒருபோதும் தமிழ் துரோகியாக இருந்ததில்லை. இந்தியா- ரஷ்யா இடையேயான நட்புறவுச் சங்கம் போல, தமிழ் நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இலக்கிய நட்புறவுச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்றே எப்போதும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். இங்கு வந்தபோதும் அவர் இக்கருத்தை முன்வைத்தார். இத்தனைக்கும், அவர், மிரட்சியை ஏற்படுத்தக்கூடிய தீவிர எழுத்தாளராக இருந்தபோதிலும் இங்குள்ள எந்தப் படைப்பையும் விமர்சித்தது இல்லை. நிகழ்ச்சி மேடையில் உள்ளூர் கவிஞர் ஒருவருடன் வாதத்தில் ஈடுபட்டாலும், கீழே இறங்கியதும் அக்கவிஞரின் தோளில் கைபோட்டு நடந்தவர். மனிதர்களை மதித்து அன்போடு பழகியவர்.

மேலும், இங்குள்ள எல்லா தமிழ் அமைப்புகளுடனும் பிற மொழி அமைப்புகளுடனும் செயலாற்ற வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ்ப் படைப்பாளர்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டுமில்லையா.

கேள்வி: மாலன் போன்றவர்களின் வருகையும் அவர்கள் சிங்கப்பூர் இலக்கியத்தைப் பாராட்டுவதாகச் செய்யும் சமாதான இலக்கிய மதிப்பீடுகளும் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு நன்மை பயக்குமென நினைக்கிறீர்களா?

லதா: திரு மாலன் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் இலக்கியத்துக்கும் தேவையானதொரு அறிமுகத்தை தமிழகத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படுத்தித் தருபவர். சிங்கப்பூருக்கு வந்துசென்ற பல எழுத்தாளர்களில், சிங்கப்பூரின் தமிழ் இலக்கியம் குறித்த ஓர் ஆக்ககரமான உரையாடலை தமிழகத்தில் தொடங்கியவர் திரு மாலன்.  

அவர், சிங்கப்பூர் நூலகத்தில் ஆய்வாளராக (reseacher) ஆய்வுக்கட்டுரை எழுதியபோது, மூத்த எழுத்தாளர்களின் எழுத்தை பொது அரங்கில் வைத்து மீள்பார்வை செய்தார். சிங்கப்பூர்  படைப்புகள் குறித்து தமிழகம், அண்ணா நூலகத்தில் ஒரு பேருரை ஆற்றியிருப்பதுடன், சிங்கப்பூரின் சமூக அரசியல் குறித்தும், இலக்கியம் குறித்தும் நீண்ட தொடரை தமிழக இதழ்களில் எழுதியுள்ளார். இவையெல்லாம் இந்நாட்டு இலக்கியத்துக்கு தமிழ் உலகில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தவை. 

ஆனால், மிகத் தரமான எழுத்துகளுடன் சுமாரான எழுத்துகளையும் ஒன்றாக அவர் வைக்கும்போது, சுமாராக எழுதுபவர்கள் தங்கள் எழுத்துகள் தரமானது என எண்ணிக்கொள்கிறார்கள். அப்போது அவர்களது வளர்ச்சி தடைப்படுகிறது. பிறகு அவர்கள் கவனிக்கப்படாமல், காணாமல் போய்விடுவார்கள்.

கேள்வி : மீண்டும் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் உள்ளது என மாலன் போன்றவர்களால் அறிமுகம் செய்யப்படுவது மட்டும் ஓர் இலக்கியச் சூழலில் ஆக்ககரமான முன்னெடுப்பு எனக் கருதுகிறீர்களா? 

லதா: அறிமுகம் செய்வது முதல் கட்டம். அடுத்த அடியை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும். புகழ்ச்சியும் பாராட்டும் உடனடி மகிழ்ச்சியைத் தரும், வசதியாக இருக்கும். அதுவே பொதுவான விருப்பமாகவும் இருக்கிறது.  

கேள்வி : தமிழ் சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்று. எனவே தமிழ் இலக்கியங்கள் பிற இன மக்களைச் சேர எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன? தமிழ் மக்களுக்கென உள்ள பிரத்தியேகமான சிக்கல்களை இலக்கியம் வழி பிற இனத்தவர்கள் அறிந்துள்ளார்களா?

லதா: சிங்கப்பூர் தனிநாடான 1965க்குப் பின்னர் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் ஆங்கில மொழி இலக்கியங்களுக்கிடையே அறிமுகத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தலையாயது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலைமன்றம் வெளியிட்ட சிங்கா இதழ். பல ஆண்டுகள் வெளிவந்த இந்தக் காலாண்டிதழ் நான்கு மொழி இலக்கியங்களையும் மொழிபெயர்ப்போடு சிங்கப்பூரர்களிடம் எடுத்துச் சென்றது. 1980களின் தொடக்கத்தில் வெளிவந்த ஆசியான் கவிதை, சிறுகதை, நாடகத் தொகுப்புகள் தமிழ்ப் படைப்புகளை ஆசியான் வட்டார நாடுகளுக்கும் கொண்டு சென்றன. இதுபோல் பல தொகுப்பு நூல்கள் இந்நாட்டு தமிழ்ப் படைப்புகளை பிற மொழி சமூகங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூர் தேசிய நூலகம் பல ஆண்டுகளாக வாசிப்பு விழா மூலம் ஆண்டுதோறும் உள்ளூரின் நான்கு மொழிப் படைப்புகளையும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகிறது. 

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, தேசிய கவிதை விழா முதலிய நிகழ்வுகள் பல மொழி வாசிப்புகள், உரையாடல்கள், கருத்தரங்க நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துகளை மற்ற இனத்தவரிடம் கொண்டு செல்கின்றன.

அரசாங்க ஆதரவினால் இலக்கிய மொழி பெயர்ப்பும் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரத்தியேகமான சில அம்சத்தையாவது இந்தப் படைப்புகள் மற்ற சமூகத்தினருக்கு நிச்சயம் அறிமுகப்படுத்தியிருக்கும்.

கேள்வி: ஆனால் அப்படி அறிமுகமானதன் விளைபயன் என ஏதேனும் உண்டா?

லதா: விளைக்கும் அளவுக்குத்தான் பயன் இருக்கும். பெருமளவிலான வாசிப்பும் அதுகுறித்த விவாதங்களும் ஏற்பட கல்விப் புலத்திலும் கலை, இலக்கியத் தளத்திலும் அதிகளவிலான ஊடாட்டங்கள் இடம்பெறவேண்டும். இந்த இடத்திலும் இருவழிப் போக்கைப் பற்றிதான் சொல்ல வேண்டும். 

இந்த நாட்டில் தரம் எப்படியிருந்தாலும் நான்கு மொழி இலக்கியத்துக்கும் மரியாதையும் விருதுகளும் பரிசுகளும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து, தமிழ் மொழி எழுத்தாளர்கள் தேசிய விருதுகளையும் பரிசுகளையும் பெறுவதற்கு முக்கியமானவராக இருந்தவர் பேராசிரியர் எட்வின் தம்பு. பேராசிரியர் தம்பு உள்ளிட்ட இந்நாட்டின் மதிப்புமிகு மூத்த படைப்பாளர்கள் டாக்டர் கோ போ செங், லீ ஷு பெங், டாக்டர் கெத்தெரின் லிம், கோ பாவ் கூன், கவிஞர் சுராத்மான் முதல், தற்காலத்தில் சிறந்து விளங்கும் மற்றமொழிப் படைப்பாளர்களின் எழுத்துகளை நாம் எவ்வளவுதூரம் அறிந்துள்ளோம், அந்த எழுத்துகளை நாம் எவ்வளவு தூரம் கவனம்படுத்துகிறோம், எந்த அளவுக்கு அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்துகிறோம்  என்பதெல்லாம்  தமிழ் எழுத்துகள் பற்றிய அறிமுகம் மற்ற மொழி சமூகங்களில் ஏற்படுத்த அவசியமாகின்றன. நாம் எவ்வளவு தூரத்துக்கு ஓர் உரையாடலை எடுத்துச் செல்கிறோமோ அந்தளவுக்கு நாமும் கவனிக்கப்படுவோம்.

பிற இனத்தவர் நம்மைப் போற்றுவது இருக்கட்டும். நம்மை நாமே போற்றிக்கொண்டாடும் நிலையில் இருக்கிறோமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். 

சிங்கப்பூர், வெள்ளிவிழா கொண்டாடி, அதன் அடுத்த சுற்றைத் தொடங்கியபோது நான்கு மொழி கலை, இலக்கியத்தில் முதலிடத் தொடங்கியது. ஆங்கிலத்தில் இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு கைமேல் பலன் கொடுக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. சன்னி லியோ, அல்பியான் சாட், அல்வின் பாங், அமெண்டா லீ கோ, பாலி கோர், சாலிம் டியோ, ஜெரமி தியாங் முதலியோர் உலகளவில் கவனம் பெற்றுள்ளனர்.

தமிழுக்கும் ஏறக்குறைய இந்த முப்பது ஆண்டுகளில் தேசிய அளவிலும் சமூக அளவிலும் ஏராளமான இலக்கிய விழாக்கள், நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், போட்டிகள், மாணவர்கள் பயிற்சித் திட்டங்கள், நூல் வெளியீடுகள் என அரசாங்கம் பெரும் பணத்தைச் செலவுசெய்துள்ளது. அமைப்புகளும் தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கிட்டத்தட்ட இந்த 20 ஆண்டு காலத்தில் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழ் புனைவு எழுத்தாளரோ, கவிஞரோ, கட்டுரையாளரோ புதிதாக வரவில்லை. இதற்கு எதைக் காரணம் சொல்வது – ஆங்கில வழிச் சிந்தனை மேலோங்கியுள்ள வாழ்க்கை முறையையா, பொருள் தேடியே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய இந்நாட்டின் கட்டாயத்தையா, பரிசுகளையும் மானியங்களையும் அள்ளி வழங்கும் அரசாங்கத்தையா, புதிதாகத் தொடங்கும்போதே மேடையேற்றிக் கொண்டாடும் நமது சமூகத்தையா?

கேள்வி: அப்படியானால் பரிசுகள், விருதுகள் தேவையில்லை என்கிறீர்களா?

லதா: பரிசுகளும் விருதுகளும் படைப்பாளர்களுக்கு ஊக்கம் தருகின்றன என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. அதுவும் வளரும் எழுத்தாளர்களுக்கு ஊட்டமாக இவை இருக்கின்றன. மேலும், படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் தேசிய அளவிலும் உலக அளவிலும் பரவலான அறிமுகத்தைத் தரவும் பிரபலமாக்கவும் இவை நிச்சயம் உதவுகின்றன. விருது பெற்ற படைப்பு என்ற அடையாளம் ஒரு படைப்பை எடுத்துப் படிக்கத் தூண்டும். குறைந்தபட்சம் பெயரையாவது மனதில் பதிய வைக்கும். ஆனால், இவைதான் எழுத்துக்கும் எழுத்தாளருக்கும் உண்மையான அங்கீகாரமா என்றால் இல்லை என்பேன். பரிசுகளும் விருதுகளும் ஒரு சிறு நடுவர் குழுவால் தீர்மானிக்கப்படுபவை. ஆனால், அதிகளவிலான வாசகர்களை எட்டுவதும், பலரால் கொண்டாடப்படுவதும், சிறந்த விமர்சகரின் பாராட்டைப் பெறுவதுமே ஒரு படைப்பின் வெற்றியாக இருக்கும். படைப்பின் ஆயுளையும் சிறப்பையும் இதுவே முடிவு செய்யும்.

கேள்வி: சிங்கப்பூர் அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இலக்கியத்துக்கும் போதுமான அங்கீகாரங்களையும் சன்மானங்களையும் வழங்கி ஊக்குவிக்கிறது என்பது உங்கள் விளக்கங்களில் தெளிவாகின்றது. அப்படி இருந்தும் சிங்கையில் இதுவரை குறிப்பிடத்தக்க நாவல் ஒன்றுகூட எழுதப்படாமல் இருப்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

லதா: ‘பசி’ இல்லை என்பது என் பார்வை. ஏதாவதோர் இடம், பரிசு, அங்கீகாரம், ஒரு மேடை எப்படியோ கிடைத்து விடுகிறது. பெரிய போட்டி எல்லாம் இல்லை. இதுபோதும் என்று அடங்கிவிடாமல் மேலும் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ள காட்டை விழுங்கக்கூடிய தீராப் பசி வேண்டும். தேடல் வேண்டும். ஆத்மாவுக்குள் நுழைந்து உய்விக்கும் கலை, இலக்கியத்தின் உன்னதத்திற்குச் செல்ல உள்ளிருந்து உழற்றும் பசி வேண்டும். இலக்கியம் இருப்பை வலிமையாகப் பதிவு செய்யும் குரல். அது ஒரு போராட்டக் குரலும்கூட.  குரலை மறந்துள்ள ஒரு சமூகம் உன்னதமான படைப்பைத் தரும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?


கேள்வி: சிங்கப்பூரில் எழுத்தாளர்களை விடவும் இலக்கியக் குழு, இலக்கிய அமைப்புகள் அதிகம் உள்ளதாக பொதுக் கருத்து உண்டு. இதை எப்படிப் பார்க்கிறீர்கள். சமகாலத்தில் இயங்கும் இந்த அமைப்புகளால் சிங்கை இலக்கியச் சூழலுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா?

லதாஎங்கிருந்து நீங்கள் இந்தத் தரவுகளைப் பெறுகிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இத்தனை குழுக்களும் அமைப்புகளும் இருப்பதால்தான் இந்நாட்டில் ஒரு மாத காலம் தமிழ் மொழி விழா கொண்டாடுகிறோம். ஆண்டுக்காண்டு நிகழ்ச்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்கிறோம்.

ஒரே இயல்பினர், நோக்கத்தினர் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவது இயற்கையானது. தன்னியல்பாக இல்லாமல், சேர்க்கப்பட்டு செயல்படுவதோ அல்லது தலைவர், செயலாளர் என்று அமைப்பு ரீதியாகச் செயல்படுவதோ பொதுக் காரியங்கள், சமூக முயற்சிகளுக்கு வேண்டுமானால் பொருந்தி வரலாம். இலக்கியம் வளர்க்க ஏதுவானதல்ல என்பது எனது கருத்து.

இலக்கிய மனம் என்பது குழப்பங்களும் முரண்களும் நிறைந்தது. பைத்தியக்காரத்தனத்துக்கும் அறிவாற்றலுக்கும் நடுவே ஒரு மெல்லிய நூலில் செயல்படுவது. இந்த மனம்  தனித்தநிலையில்தான் பொங்கிப் பிரவகிக்கும். எழுத்தில் தீவிரமும் ஆர்வமும் கொண்ட ஒரு சிலர் தன்னியல்பில் ஒன்றுகூடி விவாதிக்கலாம். ஏசியும் புகழ்ந்தும் சண்டையிட்டும் ஒருவரை ஒருவரை வளர்க்கலாம். இதைத்தான் பெரும்பாலான தீவிர இலக்கியக் குழுக்களில் காண்கிறோம். அதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ணங்களும் போக்குகளும் கொண்டவர்களாக இருப்பர். தனித்தன்மைகளே அங்கே உருவாகி வளரும்.

கேள்வி: சிங்கப்பூர் இலக்கியத்தின் தனித்தன்மையாக நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்?

லதா: திணைகளைக் கடந்த தமிழ்ப் படைப்பிலக்கிய உருவாக்கத்தின் முன்னோடி சிங்கப்பூர் என்பது எனது கருத்து. முழுக்க முழுக்க நகர்மயப்படுத்த இடத்திற்கு சிங்கப்பூர் வந்துவிட்டது. இதுவரை சொல்லப்படாத திணை இது. திணையற்ற திணை. மலேசிய, சிங்கப்பூர் இலக்கியங்கள் இரட்டைப் பிள்ளைகள்போல வளர்ந்தவை என்றாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். இதுகுறித்து விரிவான கட்டுரையை ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்’ (sojourners To Settlers) என்ற இந்திய மரபுடைமை நிலையத்தின் தொகுப்பு நூலில் எழுதியுள்ளேன்.

மாறிக்கொண்டே இருக்கும் இந்த நகரத்தில் ஒரு அடுக்குமாடி வீட்டோடு கூட மக்களால் ஒன்றிணைய முடியவில்லை. இப்படி மண் ஒட்டாத வாழ்க்கையில், மொழி ஊடாக ஒரு பிணைப்பையும் இணக்கத்தையும் உருவாக்கி, ஒரு தனியான பண்பாட்டை ஒரு சமூகம் எப்படிக் கட்டமைத்து வருகிறது என்பதை சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் சொல்கிறது.

கேள்வி: சிங்கப்பூரில் சிறுபான்மை தமிழர்கள் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே வாழ்கின்றனர் என்று சொல்ல முடியும்.  அடிப்படை சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை என்று சொல்லலாம். இந்தச் சூழலில் சிங்கையின் இளம் எழுத்தாளர்களின் எழுத்து எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

லதா: சிங்கப்பூரில் தற்போது இனம், இனவாதம் குறித்த சர்ச்சைகள் அதிக கவனம் பெற்று வருகின்றன. மனதளவில் புரையோடியிருக்கும் இனவாதத்தை கோவிட் சூழல் வெளிப்படுத்துகிறது. இனவாத அனுபவம் குறித்து தமிழர்களும் பதிவிடுகின்றனர். அதை எதிர்கொள்வது, களைவது, குறித்து பேசுகின்றனர். இந்த உரையாடலில் தமிழர்கள் தீவிரமாகவும் ஆக்ககரமாகவும் பங்களித்தால் அதன் நீட்சியாக சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கை பற்றி புதிய வெளிச்சங்களைத் தரும் சிறந்த படைப்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளது. 

நேர்காணல்: .நவீன், .பாண்டியன்

6 comments for ““விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

  1. பொன் சுந்தரராசு
    July 1, 2021 at 10:40 pm

    மிக நீண்ட ஆனால், தேவையான நேர்காணல். லதா குறிப்பிடும் ‘பசி’ ஒரு காலத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்தது. அது தமிழ்ப் புழக்கம் தமிழர்களிடையே மிகுந்திருந்த காலம். தமிழ் உணர்வு தமிழர்களைப் பிணைத்திருந்த காலம்.
    தமிழ் மட்டுமே படித்திருந்த – பலர் குறிப்பிடும் ‘பாமரத் தமிழர்கள்’ தமிழுணர்ச்சியால் உந்தப்பட்டு எழுதிய காலம்.
    இப்போது சிங்கப்பூர்ச் சூழல் வேறுபட்டது. உயர்கல்வி பெற்று பொருளீட்டுவதில் முனைப்பு காட்டும் தமிழர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் நாட்டமில்லாமல் போனதில் வியப்பில்லைதான்.
    தமிழ்மொழி மதிக்கத் தக்க இடத்திலிருந்து சரித்து கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்!

    • Thumbi Chandriah Murali
      July 2, 2021 at 9:56 am

      எனக்கு தெரிந்தவரை புதிய எழுத்தாளர்களுக்கு இங்கு வரவேற்பும் ஊக்கமும் போதவில்லை. ஞாயிறு தமிழ் முரசு இன்னும் நான்கு பக்கங்களை கூட்டி நிறைய கவிதை கதைகள் அச்சிடலாம். நன்றி

      • August 4, 2021 at 9:31 am

        Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork! Thanks to Latha & Naveen! Pandian !God is with u all!

  2. S Samikannu
    July 2, 2021 at 2:08 pm

    இன்றைய சூழலில் அவசியமான நேர்காணல். குமாரி லதா அவர்கள் பல நல்ல கருத்துகளை வெளிப்படையாக்க் கூறியுள்ளார். பாராட்டுகள். சிந்திக்கப் பார்க்கத் தக்கவை. தற்போது சிங்கப்பூரில் தற்போது தமிழ்ச் சூழல் பெரிதும் மாறியுள்ளது. புதியவர்களை எழுத்துத் துறைக்கு ஈர்ப்பது எவ்வாறு?

    • Danapal Kumar
      July 6, 2021 at 10:07 pm

      விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” என்னும் கருத்து இலக்கியத்திற்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கும் பொருத்தமான கருத்தாகவே பார்க்கிறேன். வெளிச்சத்தை நோக்கிய பயணமாகவே இரண்டும் இருப்பதால் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது. முன்பிருந்ததைவிட இப்போது வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். முறையான அணுகுமுறையும் வழிகாட்டுதல்களும் அவசியம். உள்ளூரின் மண் மணம் வீசும் இலக்கியம் மலர இந்த மண்ணின் மணம் அறிய வேண்டும்! தெளிந்த நீரோடை போன்று தெளிவான நேர்க்காணல். சிறப்பு.

  3. July 6, 2021 at 8:43 pm

    சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை உணர முடிகிறது. இன்றைக்கு இலக்கிய சூழலில் தேவைப்படுகிற இலக்கியத்தின் மீதான ஆத்மார்த்தமான ‘பசி’ மற்றும் ‘தேடல்’ குறித்தும், இன்னும் பயணப்பட வேண்டிய தொலைவு குறித்தும் யோசிக்க வைக்கும் நல்ல கட்டுரை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...