வெண்நாகம்

“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல”

அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார். தொண்டைக் குழியில் மடக் மடக் என அவன் குடிக்கும் அசைவைப் பார்த்தார். எப்போதும் அவனைப் பார்ப்பதுதான். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மெதுவோட்டம் ஓடும் குடியிருப்புத் திடலில் அவனும் மெதுவாக நடந்துகொண்டிருப்பான். சிறிய புன்னகைக்குப் பின்னர் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருந்தது.

“இப்ப அது இங்க இருக்கா மிஸ்டர் அகில்?”

“ஹூ..ஹ்ம்ம்ம்ம்….. இங்க இல்ல டாக்டர்…”

“ஏன்?”

“நீங்க இருக்கீங்களே…”

“நான் இருந்தா என்ன?”

“அது என்னைத் தவிர வேற யாரு கூட இருந்தாலும் வராது டாக்டர். தனியா இருக்கும்போதுதான் வரும்.”

“திடீர்னு யாராச்சும் வந்துட்டாங்கன்னா?”

“அடுத்த செகென்டே  ஒளிஞ்சிக்கும் டாக்டர்”

அவன் சொல்வதை ஒரு தாளில் குறித்துக் கொண்டே கேட்டார். பேனாவின் மை, தாளில் எழுத்தாய் மாறும் கணப் பொழுதில் அவர் மனம் அகிலின் விழிகளை ஆழ்ந்து பார்த்தது. அவை எதையோ தேடுகின்றன. அவனது விழிப்படலத்தில் அமைதி இல்லை. நெற்றிச்சுருக்கங்கள் அவனை மூப்பாய்க் காட்டின. மெல்லிய இளஞ்சிவப்பைப் பூசியிருக்கும் அவன் தோல் இப்போது வெளுத்துப்போய்ப் பொலிவிழந்திருந்தது.

முப்பத்திரண்டு வயதையெட்டிய அகில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராய்ப் பணியாற்றி வருகிறான். சின்னதாய் சளி என்றாலும் மருத்துவர் குணாவையே அணுகுவான். திடகாத்திரமான அவன், தன்னைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவன். முடியை வழித்துச் சீவி, நெற்றித் திருநீரிட்டு அதி திவ்யமாய் வேலைக்குச் செல்வான். வேலை முடிந்ததும் வீடு.  இதைத்தவிர அவனுக்காக அவன் நேரமொதுக்கியதே இல்லை.

அகில், கடந்த வாரம்தான் இந்தச் சிக்கலைச் சொல்ல வந்திருந்தான். அப்போது அவன் தொடர்ந்து இரண்டு நாளாய் தூக்கமில்லாமல் ஆளே பித்துப் பிடித்தார்ப்போல் பரிதாப நிலையிலிருந்தான். உடல் மெலிந்திருந்தது. தாடியும், களைந்த கேசமும் அவனை வேறாகக் காட்டின. தன் வயதை ஒத்தவனின் நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார் மருத்துவர் குணா. அவனது கவனத்தைச் சோதிக்கும் வண்ணம் மிகச் சாதாரணமாய்த் தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார். ஆனால், அவனிடமிருந்து அப்பேச்சுக்களிலெல்லாம் இயைந்துகொண்டிருப்பதாய் எந்தவோர் அறிகுறியும் இல்லை. அவனையே அறியாமல் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. கண்கள் இருளடைந்து கிடந்தன. பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமாகவும், தூக்கமின்மையால் விழைந்த புறத் தளர்ச்சியாகவும் இருக்கலாம் என்று தூக்கத்திற்கு மருந்து கொடுத்து அனுப்பினார் குணா.

“மிஸ்டர் அகில்! இந்த ஒரு வாரமா நல்லா தூங்குனீங்களா?”

“……..”

பதிலேதும் வராததால் தாளிலிருந்த கண்ணை அவன்பக்கம் திருப்பினார். அவனது கண்கள் பனித்திருந்தன. வெண்மையான வெறுஞ்சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல அவனது கைவிரல்களின் மீது தன் உள்ளங்கையை வைத்தார் குணா. அவன் சட்டெனச் சிந்தை சிலிர்த்து எதார்த்தம் திரும்பினான். பார்வை மருத்துவரின் பக்கம் திரும்பியது.

“மிஸ்டர் அகில்! என்ன செய்யுது?…”

“இல்ல டாக்டர். அந்தப் பாம்புதான்….”

சொல்ல எத்தனிப்பதை அவனால் முழுதாய்ச் சொல்லிட முடியவில்லை. மூச்சு வாங்கியது.

“கடசியா எங்க பாத்தீங்க? நீங்க அப்ப என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?”

“இன்னிக்குக் காலைல குளிக்கும்போது டாக்டர். பூத்தன்னி பைப்ல சுத்தியிருந்துச்சு”

“ஏதாச்சொம் சீண்டுச்சா?”

“இல்லை டாக்டர்”

“குளிக்க முயற்சி செஞ்சீங்களா?”

“இல்லை டாக்டர்…. ரொம்ப பயமா இருந்தது… துண்டு கூட கட்டல டாக்டர்… ஒடனே அங்கேர்ந்து வெளியாயிட்டேன். நல்ல வேளை அம்மா வீட்ல இல்லை…”

“ஹ்ம்ம்ம்ம்… ஒகே மிஸ்டர் அகில்! இந்த ஒரு வாரமா நல்லா தூங்க முடிஞ்சதா?

“………”

அகில், தான் அணிந்திருந்த முகக்கவரியைக் கழற்றினான். இதழ் மடல் காய்ந்து கிடந்தது. கன்னக்குழிகள் ஒட்டிப் போயிருந்தன. கண்கள் உள் ஓடி ஒளிந்து கிடந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாய்ப் பழக்கப்பட்ட அகிலை இந்நிலையில் பார்ப்பதற்கு  குணாவிற்கே என்னவோ போலிருந்தது. பெருமூச்சு விட்டார்.

“தூக்கமே வர மாட்டுது டாக்டர். எப்படியெல்லாமோ பொரண்டு படுத்துப் பாத்தேன். போர்வையால என் மொத்த ஒடம்பையும் சுத்திகிட்டுப் படுக்க முயற்சி செஞ்சேன். ஆனாலும், அந்தப் பாம்பு என்னை வெறிச்சுப் பாத்துகிட்டே இருக்கு. உங்கள வந்து பாத்துட்டுப் போனதுலேர்ந்து ராத்திரியில தூங்கப் போன கொஞ்ச நேரத்துலயே அது எங்கிருந்தோ வந்திடுது”

“வந்து என்னா செய்யும்?”

“ஒன்னும் செய்யாது டாக்டர். ரொம்ப கிட்ட நெருங்கி என்னையே பாக்கும். எனக்கும் அதுக்கும் சில சென்டி மீட்டர்தான் இடைவெளி இருக்கும். ஆனாலும், அது என்னைக் கொத்தப் போதுங்குறதுக்கான அறிகுறி இதுவரை தெரிஞ்சதில்லை. சாந்தமா பாக்கும். ஆனாலும். அதோட கண்ணு ரொம்ப ஷார்ப்பு டாக்டர். அது சும்மா பாக்குலன்னு மட்டும் தெரியுது”

“ஹ்ம்ம்ம்ம்….. நீங்க தனியாதான் தூங்குறீங்களா?”

“இப்ப தனியா தூங்குறேன் டாக்டர்”

“இப்பன்னா? அப்ப இவ்ளோ நாளா?”

“தம்பியும் நானும் ஒரே ரூம்ல தூங்குனோம். தம்பிக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசமாவுது. தனியா போயிட்டான்”

“இவ்ளோ நாளா உங்க தம்பி இருந்தப்போ இந்தத் தொல்லை இருந்திருக்கா?

“இல்லை டாக்டர்…”

“மொத மொத அந்தப் பாம்பை நீங்க எங்க பாத்தீங்க மிஸ்டர் அகில்?”

“ஆஃபிஸ்ல டாக்டர். அப்பதான் ஃபைனேன்ஸ் மேனேஜர் மிஸ்டர் மூர்த்திகிட்ட ஃபோன்ல பேசிட்டு என் ஆஃப்பிஸ்லேர்ந்து வெளிய வந்தேன். நான் கதவைத் திறக்குற அந்த நேரம் பார்த்து என் பி.எ பிரேமா உள்ள நுழைஞ்சாங்க. நான், பசியாரப் போறேன்னு சொல்லிட்டுப் படிகட்டுல இறங்குனேன். அப்பதான் டாக்டர்… அந்த நேரம்தான் …. அங்கதான் பார்த்தேன்…. படிகட்டோட மூலையில் பார்த்தேன்.

“வேற யாராவது அங்க இருந்தாங்களா?”

“இல்லை டாக்டர். நான் மட்டும்தான் இருந்தேன்”

“அந்த சமயத்துல உங்களுக்கு எப்படி இருந்துச்சு?”

குணா தன் இருக்கையைவிட்டு மேஜையை நோக்கிச் சாய்ந்தவாக்கில் ஆர்வமாகக் கேட்டார். அவருக்குள் இது என்னவாக இருக்குமென்ற தெளிவு ஓடையில் தெரியும் உருவமாய் வந்துபோனது.

“எனக்குப் படபடனு வந்திருச்சு டாக்டர். மூச்சு வாங்குனுச்சு… எப்படித் தப்பிக்குறதுனு தெரில. நெஞ்சு வேற வேகமா துடிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒடனே நாலு அஞ்சு படிகட்டு பின்னாடி போனேன். கால் கொஞ்சம் தடுமாறுனதால, நிதானமாயிட்டு அது இருந்த எடத்தைப் பார்த்தேன். அத காணல டாக்டர். சரியா அந்த நேரம் பார்த்து, புரோடக்‌ஷன்ல வேலை செய்ற ஒருத்தன் படியேறி வந்தான். நான் ஒடனே, என் பதற்றத்தை வெளிய காட்டிக்காம, ஒடம்ப மிடுக்குனு வெச்சிகிட்டேன். ‘குட் மார்னிங் பாஸ்’ -னு சொல்லிட்டு அவன் மேல ஏறிட்டான்.

“அவன் போனதுக்கப்புறம் அதப் பாத்தீங்களா?”

“இல்லை டாக்டர். நான் தேடுனேன்… ஆனாலும், அதக் காணோம். நானும் ரொம்ப நேரம் அங்க நிக்காம, சீக்கிரமாவே கீழ எறங்கிட்டேன்.

மருத்துவர் குணா தன்னிரு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்தவாக்கில் கண்களை மூடி, சுழல்நாற்காலியில் சாய்ந்தார். நாற்காலி சில முறை உந்தியது. அகில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பட்டெனக் கண்களைத் திறந்தவர், தன் குறிப்பேட்டில் specific phobia / schizoaffective disorder என்று எழுதிக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட விடயத்தின் மீதுள்ள ஒவ்வாமையால் ஏற்படும் அழற்சியும், அதிலும் அது நிஜமா மாயையா என்ற மயக்கத்தைத் தரும் நிலைப்பாட்டையும் வைத்துக்  குணாவின் முதற்கட்ட அனுமானமாய் இவ்விரண்டு நோய்களும் எண்ணத்துள் தோன்றின. அதனை உறுதி படுத்திக்கொள்ள சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்தன.

“அந்தப் பாம்பைப் பத்திச் சொல்லுங்க…. என்ன வகை பாம்பு? எவ்ளோ நீட்டு? சீருனுச்சா?”

“அது எந்த வகைனு தெரில டாக்டர். வெள்ளையா இருக்கும். சுத்தி சுத்தி இருக்கும். அதனால, அது எவ்ளோ நீட்டுனு தெரில டாக்டர்”

“எப்பயாச்சும் உங்களை நோக்கி வேகமா வந்திருக்கா?”

“இல்லை டாக்டர். தலைய மட்டும் தூக்கி தூக்கி எறக்கும் டாக்டர். நாக்கை வெளிய நீட்டி நீட்டி பயமுறுத்தும். ஆனால், இருக்குற எடத்தை விட்டு நவுறாது. திடீர்னு கண்ணுல படும், மறையுற வரைக்கும் அங்கேதான் இருக்கும்.”

“இதே பாம்பையோ அல்லது இது மாதிரி உள்ள பாம்பையோ ஏற்கனவே எங்கியாவது பாத்திருக்கீங்களா?”

“……………………”

அகில் மௌனமாய் இருந்தான். அதுவரை குணாவையே பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டெனத் தலையைக் கவிழ்த்துக்கொண்டு விம்ம ஆரம்பித்தான். குணாவைப் புதிர் ஆட்கொண்டது. கண்ணீரை அழுத்தித் துடைத்தவாறு அகில் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றான். பல முறை பெயர் சொல்லி அழைத்தும் அவன் திரும்பவே இல்லை.

குணா பெரிதும் குழம்பினார். பண்டுவமனையின் காத்திருப்புப் பகுதியில் அதிகமான நோயாளிகள் இருப்பதை உணர்ந்தவர், மாலையில் அகிலைத் தனியாய்ச் சந்தித்துப் பேச வேண்டும் என்று முடிவாய் இருந்தார்.

***

“அல்லாஹ்…. உவக்பரல்லா… உவக்பரல்லா…. உவக்பர்… லா இலே ஹ இல் அல்லாஹ்……..” – வீட்டின்முன் திடலில் உள்ள பள்ளிவாசலின் மாலை தொழுகைக்கான பாங்கு, ஒலிபெருக்கியின் வழியே ஒலித்தது. ஒரு மணி நேரம் கூட உருப்படியாய்த் தூங்கியிருக்க மாட்டான். மணி மாலை ஆறாக இருக்க வேண்டும். மிக நிதானமாகவே அகில் கண் விழித்தான். விசிறியின் கிரீச் ஒலியைத் தவிர வேறெந்தச் சத்தமும் அவ்வறையுள் இல்லை. சுற்றியெங்கும் தேடினான். குப்புறப்படுத்தபடியே கட்டில் விளிம்பிலிருந்து தலையைக் கீழ் நோக்கிச் செலுத்தி கட்டிலுக்குக் கீழும் பார்த்தான். அதைக் காணவில்லை. அப்படியே கட்டிலில் கிடந்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். போர்வைக்குள் ஏதோவொன்று ஊர்வதாய்ப் பட்டது. என்னவென்று சுதாரிப்பதற்குள், அழைப்பேசி அலறியது. மருத்துவர் குணாதான் அழைக்கிறார். தயக்கத்தோடே அழைப்பை எடுத்தான்.

“டாக்டர்…..”

“மிஸ்டர் அகில்… எங்க இருக்கீங்க?”

“வீட்ல இருக்கேன் டாக்டர்….”

“மொத ஏன் எதுவும் சொல்லாம கெளம்பிட்டீங்க?”

“…………….”

“சரி. வீடு எந்த லோரோங்? நானே வரேன்.”

“டாக்டர்! எதுக்கு உங்களுக்கு சிரமம்”

“கம் ஓன் அகில்… நாம இந்த ஜெனரேஷன். ஒரு ஃபிரண்டா பார்க்கலாமே…”

“இல்லை டாக்டர். வீட்ல அம்மா இருக்காங்க.”

“இருந்தா என்ன மிஸ்டர் அகில்?”

“இல்லை டாக்டர்… அவுங்களுக்கெதுவும் தெரிய வேணாம்… இப்பவே என் கல்யாண பேச்சு அது இது-னு ஆயிரம் குழப்பம் வீட்ல… அதனால, நீங்க இங்க வர வேண்டாம் டாக்டர்… நானே வரேன்.”

“ஹ்ம்ம்ம்…. சரி. எப்போதும் பாக்குற தெடலுக்கு வந்திருங்க?”

“வந்தர்றேன்”

அறையை விட்டு வெளியேறிய அகில் குளிப்பதற்காய் வீட்டின் பின்புறம் சென்றான். பட்டணத்திற்குக் கொஞ்சம் வெளியே சொந்த நிலத்தில் கட்டப்பட்ட வீடு. சமையலறையின் பின்பக்க கொள்ளையில் அம்மா வளர்க்கும் கோழிகளும் சேவல்களும் மிகச் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருந்தன. சுற்றுச் சுவர்  என்னதான் உயரமாய் இருந்தாலும், அவற்றிற்கு அச்சிறு வெளியே பாழ்வெளியாய்ப் படர்ந்திருந்து. வாழைமரங்கள், இரண்டு தென்னைமரங்கள், கீரை வகைகள் என அவ்விடமே அந்தி மயங்கும் மஞ்சள் நிறத்தில் கண்கவர் எழிலைத் தாங்கியிருந்தது. பற்களைத் துலக்கிக் கொண்டே கதவோரம் நின்று எட்டிப் பார்த்தான் அகில். கொடியில் துணிகள் காய்ந்துகொண்டிருந்தன. வாயுள் குவிந்துள்ள கோழையைக் காரிக் கால்வாயுள் துப்பினான். கால்களுக்கு இடையே ஏதோவொன்று இடர்பட்டது. அதுதான்.  தலையைத் தூக்கிப் பார்த்தபடியே நாக்கை வெளிநீட்டியது. கால்வாயுள் துப்பியக் கோழை வாயுள்ளேயே இருப்பதாய் ஓர் உணர்வு அகிலை வருத்தெடுத்தது. இந்நேரம் பார்த்து அம்மாவும் வீட்டின் முன் வேலையாய் இருந்தாள்.

பயம் அவனைத் தொற்றிக் கொண்டது. காலையில் கண்டதுபோலக் குளியறைக்குள் அது வந்துவிட்டால் எனப் பதறினான். அதிகம் யோசிக்காமல், வீட்டினுள் நுழைந்து ஈரத்துணியால் உடலைத் துடைத்துக் கொண்டு கிளம்பினான். அது பின்தொடர்வதாய் ஒரு மாயை. கால்களில் அவ்வப்போது ஏதோ உரசியது. மருத்துவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஒருபுறம். வேறு அறிமுகமில்லாத மருத்துவரை அணுகி அவரிடம் பேசலாமா என்ற எண்ணம் வந்தபோது பெரும் சோர்வு ஏற்பட்டு அங்கேயே எங்காவது அமர்ந்துவிட நினைத்தான். உள்ளதைச் சொன்னால் அவர் தன்னை என்னவாக எண்ணுவார்? நெரிசலான அடுக்குமாடி கட்டடங்களுக்கு இடையில் நுழைந்து சென்றபோது அவை இணைந்து அவனை அமுக்குவதாய் உணர்ந்தான். 

பூங்காவில் அவ்வளவாய் ஆள்கள் இல்லை. மிதமானத் தூரல் போட்டிருந்தது. குணா அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார். அகில் பூங்காவினுள் சென்றான். சில மீட்டர்களில் அவன் மருத்துவரை அடைந்துவிடுவான். ஆனாலும், அவனது மூளைக்குள் ஆயிரம் பொறிகள் அங்குமிங்குமாய்த் தெரித்தன. அவர் கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும், தானாக எதையும் பேசிவிடக்கூடாது என நடந்தான். கால்களில் உரசல் குறைந்திருந்தது.

“இப்படி உக்காருங்க அகில்”

அவன் குணாவிற்கு எதிரே இருந்த சிமெண்டு இருக்கையில் அமர்ந்தான். எதைச் சொல்வது, எதை விடுவதென்ற முன் தயாரிப்பெதையும் அவன் செய்திருக்கவில்லை. அந்த அமைதியான பூங்காவினுள் ஓர் ஆழிப்பேரலை மிக நிதானமாய் அமர்ந்திருப்பதை அந்த இயற்கை அறிந்திருக்க வேண்டும். வானத்தில் சட்டென மின்னல் வெட்டிச் சமாதானமானது.  அகக்கொந்தளிப்பில் இருந்த அகில் அந்தப் புறக்கொந்தளிப்பில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தான். அவன் கைகளைப் பிசைவதைக் கொஞ்சம் குறைத்தான்.

“சொல்லுங்க அகில்! ‘ஐ கென் சென்ஸ் தட் சம்திங் இஸ் போதரிங் யூ’… அது என்ன?”

“அது வந்து…. டாக்டர்….”

“இதப் பாருங்க அகில். நீங்க ஒரு நல்ல உத்யோகத்துல இருக்கீங்க. இப்படியான குழப்பத்தால நீங்களும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க, உங்க வேலையும் பாதிப்பாகுது… ஏன், உங்க குடும்பமும் பாதிப்பாகும். அதனால, ரொம்ப எல்லாம் யோசிக்காம… என்னனு விஷயத்தைச் சொல்லுங்க. நானும், உங்கச் சிக்கலைக் கிளினிக்ல வெச்சிப் பேச முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டுதான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன். சோ, டோன்ட் வர்ரி… என்னவானாலும் நாம அதைச் சரி செய்யலாம்”

“சரி செய்ய முடியாது டாக்டர்…. சரி செய்ற விஷயத்தை நான் பன்னல….”

அகில் குணாவையே வினோதமாய்ப் பார்த்தான். அந்தக் கண்கள் தன்னைப் பார்ப்பதுபோல் தெரிந்தாலும், அவை கடந்த கால நினைவலைகளைத் தன் எண்ணக்கரையில் மறுபடியும் மோத விட்டிருப்பது புரிந்தது. அந்த அவதானிப்பு அவன் தொடர்ந்து பேசுவதற்குத் தடையாகாது என்று பட்டதால், குணா ஏதும் இடைமறிக்கவில்லை.

“அப்ப எனக்குப் பதினாறு வயசு இருக்கும் டாக்டர்… ஆண்டிறுதி விடுமுறை ஸ்டார்ட் ஆச்சு. எப்படியோ கெஞ்சி கூத்தாடி எங்கம்மாகிட்ட அனுமதி வாங்கிட்டுக் குவாந்தான் மாமா வீட்டுக்குப் போயிட்டேன். அங்க என் மாமா வீடு ஒரு மலாய்க்காரன் கம்பத்துக்குள்ள இருக்கும். மாமா ‘ஏர் ஃபோர்ஸ்ல’ வேலை பாத்தாரு. அவனுங்க அதையொட்டியுள்ள கம்பத்துலே வீடு கொடுத்துட்டானுங்க.”

“சரி. மேல சொல்லுங்க”

“அங்கதான் டாக்டர்… அந்தக் கம்பத்துக்குப் பின்னாடி ஒரு ஒத்தையடி பாதை போகும். வெளியிருந்து பாக்கும்போது எனுமோ செடி கொடிக்கு நடுவுல பாதை போதுன்னுதான் தெரியும். ஆனா, கொஞ்ச தூரம் போனாதான் டாக்டர் காடே ஸ்டார்ட் ஆகும்”

“காடா?”

“ஆமாம் டாக்டர். சும்மா எல்லாராலையும் போயிட முடியாத காடு. நேரம் சரியில்லைனா பாதைய மாத்தி விட்டுடுமாம்”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஏற்கனவே பத்து வயசுல அங்க போயிருக்கேன் டாக்டர்.”

“அந்தக் காட்டுக்கா?”

“இல்லை டாக்டர். மாமா வீட்டுக்கு. அப்பதான் அங்குள்ள பசங்களோட விளையாடும்போது ஒரு மலாய்காரன் சொன்னான்.

“என்னானு?”

“அந்தக் கம்பத்துக்குப் பின்னாடியுள்ள காட்டில, ஒரு பாழடைஞ்ச கோயில் இருக்கு டாக்டர். யாரும் இப்ப பராமரிக்கல. ஒரு முறை, மரம் வெட்டப் போனவங்க தற்செயலா அந்தக் கோயிலக் கண்டு பிடிச்சதாவும், அந்தச் சமயத்துல ஒரு வெள்ளைப் பாம்பு குறுக்கால போனுச்சுன்னும், அதப் பாத்தவங்களுக்கு அடுத்த ரெண்டு நாள்ள நம்பர் போட்டுச்சுன்னும் சொன்னான்”

“அவனுக்கு எப்படித் தெரிஞ்சதாம்?”

“அவுங்க அப்பா மாந்திரீக வேலை கொஞ்சம் செய்வாறு டாக்டர். அது சம்பந்தமா, அவரும் அந்தக் காட்டுக்குள்ள பல வருஷமா போய்ட்டு வந்துட்டு இருக்காரு. அப்படி ஒரு தடவை அவருமே அந்தப் பாம்பைக் கோயிலாண்ட பாத்திருக்காரு. அந்தச் சமயத்துலேர்ந்து அவருக்கு ரொம்ப நாளா இருந்த இடுப்பு வலி சுத்தமா இல்லாம போச்சாம்.

“சரி. இப்ப அதுக்கும்  இப்ப இருக்குற உங்களுடைய சிக்கலுக்கும் என்னா சம்பந்தம் அகில்?”

“இருக்கு டாக்டர். பதினாறு வயசுல நான் அங்கப் போனதே அதுக்காகத்தான்”

“ஹான்!… எதுக்காக?”

“அந்தப் பாம்புக்காக…”

“மிஸ்டர் அகில்… ஆர் யூ சீரியஸ்?”

“ஆமா டாக்டர். போன தடவையே எப்படியாவது அந்தக் காட்டுக்குள்ள போகணும்னு பல முயற்சி செஞ்சேன். என்னைக் கூட்டிட்டுப் போக அந்தக் கம்பத்துல யாரும் ஒத்துழைக்கல. அதான், இந்த முறை எப்படியாச்சும் அந்த வெள்ளைப் பாம்பு கோயிலுக்குப் போகணும், அந்தப் பாம்பைப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா போனேன் டாக்டர்”

“யாராச்சும் கூட்டிட்டுப் போனாங்களா?”

“அங்கதான் டாக்டர் சிக்கலே. என்னமோ தெரில, யாரும் உடன் வர மாட்டுறாங்க”

“ஹ்ம்ம்ம்…. பின்ன என்னதான் செஞ்சீங்க?”

“அந்தக் கம்பத்துல எல்லோருக்கும் பெரும்பாலும் அந்த காட்டைப் பற்றிய அறிவும். அதைவிட அதிகமா அந்தக் கோயிலுக்குப் போறதுக்கான வழியும் தெரிஞ்சிருந்தது. அதை நான் எனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டேன் டாக்டர். அங்கதான் எல்லாம் தப்பா போனது.

அகில் சற்றே நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான். அந்தத் திடீர் ஆசுவாசப்படல் அவனது ஆன்மாவின் தேவைக்காய் என்று மருத்துவரும் நன்கு அறிந்திருந்தார். தூரல் விட்டுவிட்டதால், அந்தப் பூங்கா முழுவதும் சிறுவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சறுக்கியும், குதித்தும், ஓடிப் பிடித்தும் அந்தப் பிஞ்சு மனங்கள் மழலையைக் கக்கிக் கொண்டிருந்தன.

“அந்தக் கம்பத்துத் தலைவரு வீட்ல ஷீலா-ன்னு ஒரு அஸ்லி காரப் பொண்ணு வேலை செஞ்சிட்டிருந்துச்சு டாக்டர். சின்ன வயசுதான். அப்ப இருந்தா ஒரு பதிமூனு வயசு இருக்கும் அவளுக்கு. ஆனா, ஆள் என்னமோ வர்ணிக்க முடியாத அழகு டாக்டர். மொத தடவை பாத்தப்ப எனக்கு என்னவோ போல இருந்தது. அவகிட்டதான் என் காரியத்த சாதிச்சிக்கிட்டேன்”

“எப்படி?”

“எங்கத்தையோட லிப்ஸ்டிக்கை கொண்டு போய் ஆசை காட்டினேன். பூக்கள்ள இருந்து எடுக்குற வண்ணத்த தேச்சிப் பழகியவளுக்கு, லிப்ஸ்டிக் மோகம் பட்டுனு ஒட்டிக்கிச்சு. அடுத்தடுத்த நாள் வேறு  வேறு பொருள்.  அப்படியே அவகிட்ட கொஞ்ச கொஞ்சமா ஆச காட்டி என்னை அங்கக் கூட்டிட்டுப் போகச் சொன்னேன்.

“கூட்டிட்டுப் போனாங்களா?”

“ஆமாம் டாக்டர்”

“எப்ப?”

“அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை டாக்டர். சாயுங்காலும் 4 மணிக்குப் போனோம். அப்பதான் யாரும் கவனிக்க மாட்டாங்கன்னு சொன்னா. நான், விளையாடப்போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு வந்திருந்தேன். என்னதான் உள்ளூர கொஞ்சம் பயம் இருந்தாலும், ஆர்வம் ரொம்பவே அதிகமா இருந்துச்சு. பயணம் ரொம்ப தூரமெல்லாம் இல்லை டாக்டர். ஒரு அரைமணி நேரம்தான் காட்டுக்குள்ள நடந்திருப்போம். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஷீலா கையை நீட்டிக் காட்டுனா. எனக்குப் பக்குனு இருந்துச்சு டாக்டர்”

“ஏன் மிஸ்டர் அகில்?”

“அந்தக் கோயில் நான் கற்பனை செஞ்சி வச்சிருந்த மாதிரி இல்லை டாக்டர். பாதாளத்துல ஒரு குகை மாதிரி இருந்தது. படி வழியா கீழ எறங்கிப் போனோம். சட்டுனு ஒரு வினோதப் பறவை படபடனு ரெக்கைய விரிச்சுகிட்டுப் பறந்துச்சு. கோயிலுக்குள்ள போனோம். மூலஸ்தானம்னு ஏதும் குறிப்பிட்டு இல்லை டாக்டர். ஆனாலும், அங்கங்க சிலை மாதிரி சில கல்லுங்க இருந்துச்சு. எனக்கு எது எதுன்னே தெரில. ஷீலா என்கிட்ட சாமி கும்பிடலாம்னு கூப்டா. எனக்குத் திக்குனு இருந்தது. நீ இந்த சாமிய கும்பிடுவியானு கேட்டேன். என்னதான் அவ ஒன்னும் சொல்லாம இருந்தாலும்  ரொம்ப பக்தியா கும்பிட்டது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ரெண்டுபேரும் சாமி கும்பிட்டுட்டுக் கோயிலுக்கு முன் வந்தோம். நான் கண்ணுல வெளக்கெண்ணைய ஊத்துனாப்போல அந்த வெள்ளைப் பாம்பைத் தேடுனேன் டாக்டர். கண்ணுலே அம்படல. மனசு ரொம்ப பாரமானது. சரி இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாம்னு கிளம்பினோம். அந்த நேரம் பார்த்துச் சன்னதிக்குப் பின் ஏதோ உருளுற சத்தம் கேட்டு அவ போய்ப் பார்த்தா. அப்பதான்….”

“அது இருந்ததா?”

“ரெண்டு…. ரெண்டு வெள்ளைப் பாம்பு பின்னிக்கிட்டு இருந்தது டாக்டர். அதைப் பார்த்ததும்… ஐயோ!…”

அகில், தன்னிரு கைகளையும் தலையின் பக்கவாட்டில் அழுந்திப் பிடித்த வாக்கில், அப்படியே கீழே அமர்ந்தான். அவனது கண்கள் இறுகி மூடியிருந்தன. அவனது ஒட்டுமொத்த முகமுமே மூக்கின் மேல்தசையின் குவியலில் அடங்கினார்ப்போல் இருந்தது. குணா அவனருகில் சென்று முதுகைத் தொட்டுத் தூக்கப் போனார். அவன் சட்டென உடம்பைச் சிலுப்பினான். கண்களைத் திறந்து குணாவைப் பார்த்துக் கைகளைப் பிசைய ஆரம்பித்தான்.

“அதைப்பற்றி நெனக்கவே முடில டாக்டர். நான் மொதல்ல ஏதோ மிருகத்தோட குடலுன்னு நெனச்சேன். கிட்ட போனதும்தான் ரெண்டு வெள்ளை பாம்புனு தெரிஞ்சது. அந்த நிமிஷம் என் வயிறு ஒரு பெரட்டு பெரட்டிடுச்சு.. என் வாழ்க்கையில அப்படியான அருவருப்ப  நான் அனுபவிச்சதே இல்ல டாக்டர். இனியும் அனுபவிக்க வாய்ப்பில்லை. எனக்கு என் உடம்பெல்லாம் ஒரே பிசுபிசுப்பா, தலையெல்லாம் புழுவாட்டம், அந்த நிமுசமே மலக்குளிக்குள்ள விழுந்ததுபோல உமட்டுச்சி. தப்பிக்கவும் முடியல. கால்கள் ரெண்டும் இறுகுனாப்புல கிடந்துச்சு. என்னால அத பாக்க முடியாம சொவரோட ஒட்டி இருந்த ஒரு பெரிய கருங்கல்ல தூக்கி பட்டுனு அந்தப் பாம்புங்க மேல போட்டுட்டேன் டாக்டர். இரத்தம் பீச்சிகிட்டுத் தெரிச்சது. அதுக்கு மேல என்னால அங்க நிக்க முடியல. திரும்பி பார்க்காம. பட்டுனு அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமா ஓடி வீட்டுக்கு வந்துட்டேன்.

“ஷீலா?”

அவன் அழுதான். அந்த அழுகையை மருத்துவர் அனுமதித்தார்.

“அவள மறுநாள் காட்டுக்குள்லேர்ந்து பிணமா வெளியெடுத்தாங்க டாக்டர். நான் பாவி. அவள காப்பாத்தியிருக்கணும். அவளையும் கூட்டி வந்திருக்கணும். நான் செஞ்ச தப்புக்கு அவ பலியாயிட்டா.” அவன் தொடர்ந்து அழுதான்.

“நான், அன்னிக்கு ராத்திரியே அங்கிருந்து கிளம்பி ஈப்போக்கு வந்துட்டேன்.” – அழுகை தேம்பலாகியிருந்தது.

கருமேகம் கிழக்கை கவ்வத் தொடங்கியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இந்தப் பூங்காவை மனிதர்கள் கைவிட்டுவிடுவர். குணா அகிலையே திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குள் என்னென்னவோ கேள்விகள் எழுந்தன. எப்படிக் கேட்பதென்றே தெரியவில்லை. அகில் அவரையே ஒரு மாதிரியாய் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையை குணா, தன் ஒவ்வொரு கேள்விகளுக்குமான தனித்தனிப்  பதிலாகத் தன் போக்கில் மொழிபெயர்த்துக் கொண்டார். ஷீலாவைப் பற்றி கேட்க மனம் அஞ்சியது.

“ரெண்டுமே செத்துடுச்சா?”

“தெரில டாக்டர். ஆனா, ஜாதகம் பார்த்த எடத்துல என்னைப் பழிவாங்க ஒன்னு துடியா துடிச்சுகிட்டு இருக்குனு சொன்னாங்க… அப்படின்னா ஒன்னுதானே செத்திருக்கணும் டாக்டர்?”

“பழிவாங்குதா? இதையெல்லாம் நம்புறீங்களா?”

“நம்பித்தானே ஆகணும் டாக்டர். இவ்ளோ நாள் என் கல்யாண பேச்சை எங்கம்மா எடுக்கல. இப்பதான் மூனு வாரமா பேசுராங்க. அதே நேரத்துல இந்தப் பாம்பும் தொடர்ந்து தொல்லை கொடுக்குது. அப்படின்னா இது பழிவாங்கல் தானே டாக்டர்? வேண்டாத சாமியில்லை டாக்டர். ஒருமுறை ஒரு சாமியார்கிட்ட போய் செய்வினை ஏதும் இருக்கானு கேட்டுப் போனேன். அவருதான் சொன்னாரு, செய்வினை இல்லை ஊழ்வினைனு.

“அவ்ளோதான் சொன்னாரா? வழக்கமா இதை நாகதோஷனு சொல்லுவாங்களே…. அப்படி ஏதாவது? பரிகாரம்?

“அப்படின்னு அவரு சொல்லல டாக்டர். அப்படியாக ஏதாவது செஞ்சீங்களானு கேட்டாரு. எனக்குள்ள மட்டும் வெச்சிருந்த விஷயத்தை மொத மொறையா இன்னொருத்தருகிட்ட சொன்னேன். அவரும், விஷயத்தைக் கேட்டதுக்கப்புறம், என் கட்டம் பாம்பைப் போல ரொம்ப சிக்கிக் கெடக்கு. ஜாக்கிரதையா இருனு சொல்லிட்டுக் கையில இந்தக் கயிறையும் கட்டிவிட்டாரு.”

“அப்புறம் என்ன? அதான் அவரு பாதுகாப்புக்கு இந்தக் கயிறைக் கொடுத்திருக்காரே!”

“இந்தக் கயிற நான் போட்டு மூனு மாசமாவது டாக்டர். இவ்ளோ நாளா ஒன்னுமில்லை. ஆனா, இப்ப இந்த மூனு வாரமா இந்தக் கயிறுக்கும் சக்தி போச்சு போல டாக்டர்.”

“………………..”

“நாளுக்கு நாள் அது தர்ற வலி தாங்க முடில டாக்டர். ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியல. நான் தனியா இருந்தாலே உடனே வந்திடுது. ராத்திரி தூங்கும்போது என் போர்வைக்குள்ள ஊறுது….. என்னால எதுவும் செய்ய முடில டாக்டர்”

கரு மேகம் முழுதாய்ச் சூழ்ந்துவிட்டிருந்தது. மருத்துவர் குணாவிற்குள் ஏதோவொன்று நமச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அன்று காலையில் குணாவைத் தன் பண்டுவமனையில் சந்தித்தபோது, குறிப்பினை எழுதிய தாளை வெளியெடுத்தார். தான் எழுதிய நோயின் பெயரைப் பார்த்தவர், ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறே, அதனைப் பேனாவால் வெட்டினார்.

“அகில்!”

“சொல்லுங்க டாக்டர்..”

 “நாளைக்குக் கிளினிக் வாங்க… கொஞ்சம் பேசலாம்”

 “என்ன டாக்டர்? எதுக்கு?”

 அப்படி ஒரு கோயில் உண்மையில் இருந்ததா எனக் கேட்க நினைத்து ” ஒன்னும் இல்லை அகில்… சும்மா ஒரு தடவை உங்க உடம்பையும் செக் பன்னிக்கலாம்…”

“இப்ப என்னா அவசியம் டாக்டர்?”

“பன்னிகிட்டா நல்லதுதானே . உடம்புல ஏதாவதுனா கண்டுபிடிச்சிடலாமில்லையா…”

“ஏதாவதுன்னா?”

அகிலுக்குள் பீதி படர்ந்தது. குணா அவன் தோலைத் தட்டிக் கொடுத்து விட்டுத் தன் வாகனம் நோக்கி நடந்தார்.  அகிலும் அவர் பின்னே மெளனமாக நடந்தான். இருவருமே வாகனத்தை நெருங்கும் வரையில் தரையைப் பார்த்தவாறே நடந்தனர்.

“நாளைக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு டாக்டர் குணா காரில் ஏறி அமர்ந்தார். ஆனால் அகில் வரமாட்டான் என மனம் அழுத்தமாகச் சொன்னது. இனி எப்போதும் வரமாட்டான். இன்று இரவு அந்த வெள்ளை நாகம் தன்னைத் தீண்டி விட்டதாக அவன் தகவல் அனுப்பக்கூடும் என்ற எண்ணம் தன்னிச்சையாகத் தோன்றியபோது காரின் குளிர் சாதனத்தைக் கூட்டினார்.


ஹரிராஸ்குமார் இறுதியாண்டு மருத்துவ மாணவன். இலக்கியத்தில் கடந்த ஈராண்டுகளாய் இயங்கி வருகிறார். சிறுகதை, மரபுக்கவிதை, வானொலி நாடகம், பாடலாசிரியர், விமர்சனக் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் ஆர்வமாக இயங்கி வருகிறார்.

முகநூல்: https://www.facebook.com/hariraaskumar.hari

10 comments for “வெண்நாகம்

  1. கோவிந்தசாமி குழந்தை
    September 1, 2021 at 11:12 am

    அருமையான படைப்பு. வாழ்க, வளர்க, வெல்க!

  2. VIJAYALETCHIMI A/P RAMALINGAM
    September 1, 2021 at 12:49 pm

    மிக அருமையான சிறுகதை ஹரிஸ். ஒரே மூச்சில் படிக்கத்தூண்டியது உங்கள் எழுத்து. திகில், மர்மம் கலந்து துப்பறியும் பாணியில் இருந்தது. எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. இதே போல் இன்னும் பல சிறுகதைகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள் ஹரிஸ்.

  3. ஹரிணி
    September 1, 2021 at 2:14 pm

    மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்?

    • kaliyaperumal
      September 11, 2021 at 10:18 am

      அருமையான நடை நாகத்தை பற்றிய பின்புலம் பழைய கதைகளை நினைவூட்டியது ஆனாலும் ஒரு சுவரஸ்யம் இருக்கத்தான் செய்தது நல்லது நன்றி

  4. September 1, 2021 at 3:29 pm

    கதையில் கொஞ்சம் அமானுடத் தன்மை வெளிப்படுகிறது. அது எல்லை மீறிவிடவில்லை என்பதே திருப்தி. அதுவே கதையை சுவாரஸ்யமாக்குகிறது. வாழ்த்துகள்.

  5. M. Ambikapathy
    September 1, 2021 at 3:38 pm

    சிறுகதை அமைவு சரியான சொற்பதங்களால் மிளிர்கிறது. கதையோட்டம் வழக்கமான விறுவிறுப்பு கூட்டும் சிறுவர் விரும்பிக் கேட்கத்தூண்டும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் கொண்டுள்ளது. முடிவு வாசகருடையது. வாழ்த்துகள்.

    • சி.மா.நாகேந்திரன்
      September 2, 2021 at 1:41 am

      அருமை.முடிவு.. கேள்வியாக நிற்கிறது..பழிவாங்கும் நாகத்தின் கதைகளைத் திரைப்படங்களில் கண்டிருந்தாலும் இந்தக் கதையினைத் தொடர்ந்து படிக்கத் தூண்டியது படைப்பாளனின் வெற்றி..வாழ்த்துகள்.. வாழ்க..வளர்க

      • September 11, 2021 at 10:04 am

        நல்ல முயற்சி பாம்பை பற்றிய பின்புலம் பழைய கதைகளை நினைவூட்டியது ஆனாலும் சுவரஸ்யமான சிறுகதை

  6. கவிதரன்
    September 6, 2021 at 11:21 am

    அன்பான நவீன். வெளிவரும் ஏராளமான சிறுகதைகள் தேர்ந்தெடுத்து வாசிக்க இப்படி சில பரிந்துரைகள் தேவையாக உள்ளன. (முகநூலில் பார்த்து இக்கதையை வாசித்தேன்)

    கதையின் சிறு பொறியாக சொல்லப்பட்டுள்ளது அகிலின் திருமண செய்தி. அதற்குப்பிறகே அவன் கண்களுக்கு நாகம் புலப்படுகிறது. எனவே அது காமத்தின் அடையாளம். ஆனால் அது ஏன் வெள்ளை நாகம்?

    அதன் பிறகு அவன் அச்சத்திற்கான காரணம் தேடிச்செல்லும் போதுதான் பூர்வ குடி பெண் தெரிகிறாள். மருத்துவர் சந்தேகம் நமக்கும் எழுகிறது. அப்படி ஒரு கோயில் இருந்தது.

    இது ஒரு கற்பழிப்பு கொலையின் குற்ற உணர்ச்சி. அது திருமண செய்தியின் போது மீள்கிறது என புரிந்துகொண்டேன். ஆனால் வெள்ளை நாகம் என்பது எப்படி பொருந்துகிறது என புரிந்துகொள்ள முடியவில்லை.

  7. விஜி
    September 7, 2021 at 8:56 am

    முதலில் தம்பி ஹரிராஸ்குமார் அவர்களை நான் பாராட்டுகிறேன்.

    மருத்துவ மாணவனிடம் இலக்கிய ஆர்வம் இப்போதே துவங்கியிருப்பது போற்றுதலுக்குரிய ஒன்று. மருத்துவக்கல்வி என்பது அவ்வளவு எளிதாகக் கடந்து விடக் கூடிய கல்வியல்ல. தொடர்ந்து கல்வி சம்பந்தப் பட்ட பெரிய பெரிய நூல்கள் வாசித்து குறிப்புகள் எழுதுவது, விடாமல் துரத்தும் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டே இருப்பது, ஆழுமை மருத்துவக்குழுவின் முன் பயின்றதை ஒப்புவிக்கின்ற பயிற்சி, Practical என, இப்படி ஓயாமல் போராட்டம் பதற்றம் நிறைந்த மருத்துவப் படிப்பினை தொடர்ந்துகொண்டு இலக்கியத்தின் பால் ஆர்வமாக செயல்படுவது பெரிய விஷயமாகவே பார்க்கிறேன்.

    இந்தக் காலகட்டத்தின் போது மாணவமணிகள் உண்பதற்குக் கூட மறந்துபோகிற நிலை வரும். தலைவலி உடல்வலி மனச்சோர்வு, உறக்கமின்மை, மன அழுத்தம், நீண்டநேரம் கணினி மற்றும் புத்தகத்தையே வாசித்துக்கொண்டிருப்பதால் கண்களில் உருத்தல் அயர்ச்சி என பல சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு அவர் கையில் எடுத்திருக்கின்ற இந்த இலக்கியக் கலையானது நிச்சயம் அவரை பாதுகாக்கும். வாசிப்பும் எழுத்தும் எப்போதும் ஆசுவாசப்படுத்தும். கலை மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கி இயக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதை ஹரி விஷயத்தில் காண்கிறேன்.

    சிறுகதையினை மிக அழகாக வடிவமைத்துள்ளார். சிறுகதை வாசிக்க சுவாரஸ்யமாகவும் சூழல் குறித்த வர்ணனைகள் மிக அழகாகவும் கைகூடி வந்திருப்பது ஹரியும் இலக்கியத்தில் இளம் எழுத்தாளர்களின் மத்தியில் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

    இருப்பினும் கதை வாசிப்பு அனுபவத்தில் `லாஜிக்; கொஞ்சம் இடிக்கிறது. அதாவது 32 வயதே ஆனா டாக்டர், தனியார் கிளிக்கில் கைராசிக்கார டாக்டர் என்று பெயர் எடுப்பது போல் சொல்லப்பட்டிருப்பது எனது புரிதலா, அல்லது அப்படித்தான் சொல்லியிருக்கின்றாரா என்பதில் எனக்குக் குழப்பம்.! மேலும் பயத்தில் மனநலம் பாதிக்கப் பட்டிருக்கின்ற நண்பர் தொடர்ந்து ஐந்து வருடமாக அவரிடம் மருந்து மாத்திரைகள் எடுத்துவருகிறார் என்பதிலும் எனக்குக் கொஞ்சம் குழப்பம் வருகிறது. டாக்டரின் வயதை 50க்கு மேல் காட்டியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காரணம் அனுபவசாலி மருத்துவர்கள் மட்டுமே கைராசிக்காரர்களாகப் பார்க்கப்படுவர்.

    தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த சண்முகசிவா நீங்கள். வாழ்த்துகள் தம்பி.

Leave a Reply to kaliyaperumalveerasamy Cancel reply