வருகை

கொல்லைக்கதவின் நாதாங்கி கொக்கியை எடுத்து ஆணியில் தொங்கவிடும்போது விசாலாட்சியின் கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தன. முகம் கைகால்களை கழுவிக்கொண்டு போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கதவை இழுத்து மூடும்போது இதென்ன இப்படிப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் கொடுத்தது. களவைக்காணும் ஆர்வம் பின்னின்று தள்ளுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தானும் ஒரு கள்ளத்தனத்தில் இறங்குவதுபோல தோன்ற செண்பகச் செடிபக்கம் சிட்டுகள் பறப்பதைப் பார்த்தபடி நின்றாள். ச்செய் நானும் அசிங்கம்பிடித்தவள்தானா? இந்த உள்ளத்திற்கும் ஏன் இப்படி கேடுகெட்டத்தனம் புகுந்தது என்று நொந்துகொண்டாள்.

நேற்று இந்நேரம்கூட இல்லை. லேசாக அந்திமயங்கத் தொடங்கும் நேரம். அதற்குள் கொல்லைக்கதவைத் திறந்து வந்து தேட வைக்கிறதே இந்த மனம் என்பது அற்பத்தனமாகவும் இருந்தது. தன் கன்னத்தில் தானே அடித்துக் கொள்ளலாம்போல் தோன்றியது.

மாம்பிஞ்சுகளைப் பார்த்ததும் ஒன்றைப் பறித்துத் தின்னலாம் என்று துவைகல் பக்கம் போனபோதுதான் அந்த காட்சியைக் காணும்படி நேர்ந்தது. “ஸ்ஆ” ரகசிய முணுமுணுப்பு பங்கஜம் மாமி வீட்டுக்கொல்லைப் பின்புறத்தில் இருந்து வந்தது. துவைகல்லில் ஏறி சுற்றுச் சுவரைத் தொட்டு மெல்ல நிமிர்ந்தபோது லஷ்மி காமத்தைப் பொங்க வைப்பதில் தீவிரம் கொண்டிருந்தாள்.   முட்டிக்கு மேல் பாதி துடைகள் தெரிந்தன. வாழைக்கொல்லை மறைவாக இருக்கும் என்று இந்தப் பக்கம் வந்திருக்கிறாள். அது இந்த கொல்லைக்கு மறைப்பற்றுப்போனது.  கண்கள் கிரங்க அதனுள் ஆழ்ந்து கொண்டிருந்தாள். கொஞ்சம் இருட்டியிருந்தால் கள்ளனோ, கள்ளத்தனமோ என்றுதான் தோன்றியிருக்கும். ஒரு கூப்பாடு போட்டுப் பார்க்கலாமா? தன் பார்வையின் முன் அசிங்கப்பட்டு ஓடுவதைப் பார்க்கலாமா என்று ஒரு கணம் தோன்றியது. சத்தம் போடாமல் இறங்கியவள் மறுபடி மெல்ல கல்லில் ஏறி தலையை நீட்டிப் பார்த்தாள்.

லஷ்மி விசாலாட்சியைவிட மூன்று வயது இளையவள். அவளுக்கு பதினேழு வயதுதான். பதிமூன்று வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் விதவையாகத் திரும்பி வந்தவள். குறை பிரசவத்தில் பெற்ற ஆண்குழந்தைகூட தங்காது போய்விட்டது.

பட்டீஸ்வரரை சேவிக்க அம்மா அழைத்தபோது நீ போய்வா அம்மா என்று இருந்துகொண்டாள். வாசலுக்கு வந்தபோது அக்ரஹார கம்பங்களில் ராந்தலை ஏற்றி வைத்திருந்தார்கள். சந்நிதான விளக்குக் கம்பத்தில் பெரிய சுடர் அசையத் தொடங்கியது. விசாலாட்சியோடு படித்த சரஸ்வதி இரண்டாவது பெண்குழந்தையை இடுப்பில் வைத்தபடி அம்மா வீட்டிற்குப் போய்விட்டு வந்தாள்.  அவள் கையைப் பிடித்து  “இங்க வா” என்று ரேழியில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த தாத்தாவிற்கு கேட்காத வண்ணம் வலது பக்கம் இழுத்து வந்தாள். லஷ்மி பற்றி இப்படி இப்படி என்று விசாலாட்சி ரகசியக்குரலில் தொட்டும் தொடாமல் சொல்ல “பெரிய துஷ்டக்கழுதையா இருக்காளே, அம்மாடீ. மூஞ்சியப்பாத்த பாவம்போல இருக்காளே. அதுவா இப்படி?” ஆச்சரியப்பட்டுப் பேசினாள். யாரிடமாவது இதைச் சொல்லவேண்டும் என்று இருந்த ஆர்வம் கொஞ்சம் நிறைவேறியது.   ” அவாளுக்கு ரெண்டுவேளை சாதம் போடக்கூடாது.  ஒரு வேளை போட்டேள்ன்னா தினவு ஒடுங்கும். பகவான் மேல பயம் இருக்கிறவா இதெல்லாம் செய்யமாட்டா,” என்றாள்.

தான்கூட இனிமேல் ஒரு வேலை சாப்பிடுவது நல்லது என்று தோன்றியது. பசிதாங்க முடியுமா என்று தெரியவில்லை. விதவையான நாளிலிருந்து அம்மா பருப்புபோட்டு நெய்யூற்றியதில்லை. இரவில் பால் தந்ததில்லை. அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் மன்னிக்கும், மன்னி குழந்தைகளுக்கும், தம்பிக்கும் தன் பங்கை பிரித்து ஊற்றுவதுபோல இருக்கும். நெய்பிசைந்து சாப்பிட ஆசை எழும்பி வரும். அதன் மனமே தனி. சொல்லாமல் ஆசையை விழுங்கி விழுங்கி வருவதே வழக்கமாய்விட்டது.

மெல்ல நடந்து பின்கட்டை ஒட்டிப்போகும் கால்வாயையும் அகன்ற சாலையையும் எட்டிப் பார்த்தாள். இந்தப் பக்கமாகத்தான் வைரவன் போவான். வீட்டுக்கு வந்தான் என்றால் விறகைப் பிளந்து போடுவதிலிருந்து எல்லா வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டுச் செல்வான். தேக்கு மரத்தை இழைத்து வைத்தது போன்ற தேகம். சதை உடம்பில் கின்னென்று இருக்கும். அப்படியே உடம்பு மினுமினுவென மாநிறத்தில் மின்னும். கண்ணில் எப்போதும் ஒரு துடிதுடிப்பு. முறுக்கேறிய தொடைகள், கட்கட்டென்ற நடை. அவன் உடம்பைப் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். கட்டிப்பிடித்துச் சாய்க்கத் தோன்றும். இந்த எண்ணம் வரும்போது கன்னத்தில் அறைந்தோ, கிள்ளியோ வைத்ததுகூட உண்டு. என்றாலும் அவன் தன்னைத் தூக்கிக் கொண்டாடமாட்டானா என்றிருக்கும். எட்ட நின்றே போய்விடும் அம்சம். தோட்டக் கணக்கில் அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ஓராண்டுக்கு மேலாக ஆத்துக்கு வருவதில்லை.

தலையைத் தடவினாள். முள்ளுமுள்ளாக தடுக்குவது மாறி மெல்லிசாகிக் கொண்டிருந்தது முடியின் நுனி. கனகராஜுக்கு வைரவன் போல உடல்கட்டு இல்லை என்றாலும் அவன் தலையை முண்டனம் செய்யும்போது கூசும். தலையில் ஜலத்தை அள்ளி வைத்துத் தடவும்போது மெல்ல உஷ்ணம் கிளம்பும். பிடறியில் அவன் விரல்படும்போது சுகத்தை நாடி மனம் எங்கோ செல்லும். நான் அடக்கினாலும் தான் அடங்காது தலையெடுத்தாடும் இந்தக் காமத்தழலை எதுவும் செய்ய முடிந்ததில்லை.

சிட்டுக்கள் செம்பருத்தியிலும் கொடிக்கம்பிகளிலும் மாறிமாறி பறந்தமர்ந்து கத்தத் தொடங்கின. அந்தப்பக்கம் போகாமல் மாமரத்தின் பக்கம் வந்து துவைகல்லில் அமர்ந்தாள்.  சுவரைத் தொட்டு எக்கி பங்கஜம் மாமி கொல்லைப்பக்கம் பார்த்தாள். வாழை மரங்களின் இலைகள் மட்டும் தெரிந்தன. கல்லில் ஏறி மாம்பிஞ்சை பறிப்பதுபோல அந்தப்பக்கம்  பார்த்தாள். கொல்லை வாழைமரக்கூட்டத்தில் யாரும் இல்லை,  லஷ்மி எங்காவது பதுங்கி உட்கார்ந்திருக்கிறாளா என்று தலையைச் சாய்த்துப் பார்த்தாள். ஒருவரும் இல்லை. இரண்டு பெரிய பிஞ்சுகளைப் பறித்துக்கொண்டு இறங்கினாள் விசாலாட்சி. மாமரத்தின் கிழக்கு கிளை பங்கஜம் மாமியின் கொல்லைப்பக்கமும் நீண்டிருக்கிறது. கனிகிற காலத்தில் மாமி வீட்டுக்கும் பழங்கள் போகும்.

காம்புகளில் அந்த வெண்ணிற பால்குமிழை, நீண்டிருக்கும் சிறு வாழைக்கன்றின் இலையில் தேய்த்துத் துடைத்துவிட்டு கல்லில் அமர்ந்தாள். காம்புப் பகுதியைக் கடித்துத் துப்பிவிட்டு ஒரு பக்க அதரத்தின் ஓரத்தில் கடித்தாள்.   துவர்ப்பும் லேசான புளிப்பும் கலந்து இருந்தது. இப்படி எட்டிப்பார்ப்பது என்னவோபோல் இருந்தது. இதயத்தில் மாலை கொக்கிபோட்டு இழுத்து வருகிறது. பிடித்து நசுக்க முடியாத மோகவிலங்கொன்று முலைக்குள்ளும் அடிவயிற்றிலும் புருபுருவென ஊர்ந்து ஊர்ந்து தன் உடலையே துடிக்க வைக்கிறது. தெய்வக்கரம் ஒன்று வாய்த்து பட்டென அதன் வாலைப்பிடித்து உடம்பிலிலிருந்து சரட்டென இழுத்து உருவி எடுத்து திகுதிகுவென எரியும் நெருப்பில் இட்டு அது துடிப்பதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றும். “உன் வெறுப்புக்கெல்லாம் நான் சிக்கமாட்டேன்” என்பதுபோல திரும்பத்திரும்ப உடம்பிற்குள் கிளரி கிளரி உணர்ச்சியை உருக்கி உருக்கி தன் வெற்றியையே நிலைநாட்டும், பட்டீஸ்வரரிடம் நாதுடிக்க “என்னை இந்த அவஸ்தையிலிலிருந்து உருவி எடுத்துவிடு பகவானே”    என்று  ஒரு சமயம் மன்றாடியதுண்டு அவர் செவிசாய்ப்பதே இல்லை. வேருக்கு நீர் கிடைத்த செடிபோல துளி இடமில்லாமல் உடலெங்கும் மீண்டும் பரவிவிடுகிறது காமம். நான் சாகாமல் தான் சாகாது. லஷ்மியை எப்படி கேவலமாகப் பார்க்கத் தோன்றியது! ஓடிப்போய்க் கேவலப்படுத்த முடிந்தது. இப்போதுகூட எதை நாடி எதைப் பார்க்க உந்தித் தள்ளியது மனது? இது ஒரு விநோத மோகமோ? பிறரைப் பார்த்து தன்னுள் கிளரும் உணர்வின் துடிப்பைத் தடவி சுகம் களையத்தானே! விசாலாட்சிக்குத் தன்மேலே வெறுப்பு உண்டானது.

தான் மறைந்து பதுங்கி செய்யாததையா லஷ்மி செய்துவிட்டாள். யோக்கிய பாசாங்கை ஏன் அந்த நேரம் சரஸ்வதியிடம் மெனக்கெட்டுச் சொல்லத்தோன்றியது. அடுத்தவர்களிடமே குற்றம் காணும் இந்தப் புற்றின் வேரை யாரேனும் அசைத்து எடுத்தவர் உண்டா? எந்தத் தெய்வம் அதை வழங்கும்? சின்னச் சுடர் அசைந்து அழைத்தால் எவ்வளவு பெரிய பாக்கியம். புண்ணியமும்கூட. தன்னை யாரேனும் அப்படிப் பார்த்ததைப் பார்த்து சொல்லியிருந்தால் மனம் என்னென்ன பாடுபட்டிருக்கும். அடுத்தவரைக் கேவலப்படுத்தும் புத்தி இனிமேல் அண்டாது இருக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்குப் பின் விதவையான பரணி மாமி, கல்யாணம் நெருங்கிவரும் நாளில் விதவையான ராதா. ஏழு வயதில் விதவையாகி அறுபத்தேழு வயதைத் தொடும் குஞ்சம்மாள், இந்த அக்ரஹாரத்தில் எத்தனை விதவைகள். அலைபாய வைக்கும் இச்சையை இல்லாதுபோலக் காட்டிக்கொண்டது உண்மையாக எப்படி இருந்திருக்க முடியும். பிறப்பின் அம்சமாகப் பார்க்கும் மனது உண்டா? எனக்கே இல்லையே. பின் யாருக்கு வரும்.

ஒன்பது வயதில் திருமணம். புக்ககம் போனபோது 14 வயது. சாந்தி முகூர்த்தம் என்றார்கள். அந்த நாள் அப்படியொன்றும் இன்பப் பெருக்கெடுத்து பாயவில்லை உணர்ச்சி. வலியை உடலுக்குள் தோண்டிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. வேதனை வேதனை வேதனை. “விட்டிடுங்கோண்ணா. ஆத்துக்குப் போயிடுறேன்” கையெடுத்துக் கெஞ்சியதை பின்பொருநாள் அவன் சொல்லிக் கேலி செய்தபோது வெட்கமாக இருந்தது.

பழகப்பழக அந்த வலி காணாமல் போய் அதிலே சுக உணர்ச்சி சுரந்தது. ஆனந்தமாக இருந்தது. அப்படியொரு சுகத்தைத் தரும் கணவன் உடலைவிட்டு கணப்பொழுது பிரியாமல் தழுவியபடியே கிடக்க வேண்டும் என்ற ஒரே ஆசை உடம்பு முழுக்க ஆக்கிரமித்திருந்தது. அவன் மீது பேரன்பு பெருகியது. இறைவனுக்கு மகிழ்ந்து மகிழ்ந்து நன்றி சொன்னாள்.

அந்த வலியோடு பிறந்தகத்திற்கு ஓடி வந்திருந்தால் ஜென்மாந்திர ஜென்மத்திற்கு இந்த அவஸ்தையின் சுடர்கள் தன்னுள் எரியாமலே தீய்ந்து போயிருக்கும். பயத்தில் இதுதான் மோகமோ என்று அடங்கியிருக்கும். மோகம் கணவனுக்கானது. வேதனை மனைவிக்கானது என்ற நினைப்பிலேயே ஆறுதல் தேடியிருக்கும். ஒரே ஒரு குழந்தையைத் தந்து போயிருந்தால் இந்த மோகத்தின் துன்ப அலை தன்னுள் புரளாமல் இருந்திருக்குமோ என்ற நினைப்பும் சில சமயம் ஓடும். பிளேக் நோய் தன்னையும் அவனோடு சேர்ந்து கொண்டு போயிருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும். சங்கரன் ஒல்லி இல்லை.  பூசினாற்போல உடம்பு.  நல்ல நிறம்.  கன்னத்தில்  அவனது  இளமை கொஞ்சும். அவனது கன்னக்குழியைப் பார்த்தால் கடிக்கத் தோன்றும். காலேஜ் படிக்கப் போகிறேன் என்றபோது அவனை எப்படிப் பிரிந்திருக்க முடியும் என்ற கவலை குமுறிக் குமுறி வந்தது. அந்தத் துக்கம் வந்ததும் அவனோடு கூடவே தோன்றியது. சங்கரனை நினைத்தாலே அவன் தன்னை உடலால் கொண்டாடிய தினங்களாகவே எழும்பி வரும். வானத்தைப் பார்த்து “சங்கரா”   என்று மெல்ல முணுமுணுத்தாள்.  இமைகளில் மினுமினு நீர் சுரந்தது.

சாலையில் இருங்கு சோள நாத்துக் கட்டைச் சுமந்துகொண்டு பெரியவர் போகிறார். அக்ரஹாரத்துப் பெண்கள் மாலை வேலையில் வாய்க்கால் கதவைத் திறந்து நின்றால் தோட்டக் காட்டிலிருந்து கொண்டு வரும் காய்கறிகளைச் சகாயமான விலைக்குக் கொடுத்து விட்டுப் போவார்கள். துவைக்கவோ, தீட்டுத்துணி எடுக்கவோ, பாத்திரம் தேய்க்கவோ, பெரியவர்களுக்கு நாவிதம் செய்யவோ, வாய்க்காலைத் தாண்டித்தான் பின் கட்டுக்குள் நுழைவார்கள். கனகராஜ் மனைவி மாசாணி மாலை வேலையில் பழைய சோறு கேட்டு வரும்போது விசாலாட்சி கொண்டுவந்து போடுவாள். நல்ல நாளில் வரச்சொல்லிக்கூட சூடான சாதத்தையோ, பதார்த்தங்களையோ தருவாள். விசாலாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் “இந்த மகராசியை இப்படி ஆக்குன கடவுளுக்குக் கண் இல்லை” என்று சபிப்பாள். “அம்மாகூட என்னையும் தம்பியையும் சித்தப்பா இழுத்து வர்றப்ப எனக்கு வயசு ஆறு. அதுக்கப்பறம் அம்மாவுக்கு அஞ்சு குழந்தைங்க பிறந்திச்சு. அப்பா எறந்ததெல்லாம் எனக்குச் சரியா நெனவில இல்ல. இது பெரிய கதம்மா” என்று சொல்லத் தொடங்குவாள். சட்டை போடாத இரு சிறுவர்கள் சோளத் தட்டையில் காங்கிரஸ் கொடியைக் கட்டி “மகாத்மா காந்திக்கு ஜே” சொல்லிக் கொண்டு ஓடுகிறார்கள்.

காந்தியடிகள் வருவது உறுதியாகிவிட்டதை அப்பா சென்ற வாரமே சொல்லியிருந்தார். மகாத்மா வரும் நாளில் கெட்ட எண்ணங்கள் இப்படி மனதில் புரண்டு வருவது சங்கடமாக இருந்தது. “தீய எண்ணங்கள் எழாமல் பட்டீஸ்வரரே என்னைக் காப்பாற்று” மனதில் வேண்டிக்கொண்டாள். இறைவனிடம் ஆசீர்வாதம் பெற்று புது மனுஷியாகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. காந்தியாரை மட்டுமல்ல இந்தச் சந்தர்ப்பத்தில ஊர் உலகத்தை, தோட்டந் துறவுகளை, ரயிலை, தான் படித்த பள்ளியில் நிற்கும் பெரிய வேப்பமரத்தை, நொய்யலை,   அதன்  இருபுறம் அடர்ந்து போகும் நாணலை, பனைமரக் கூட்டத்தை, நொங்கு இறக்குவோரை, ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்களை, மாலை வேலையில் அவசர அவசரமாக பால்குடி கன்றுகளைக் காண வரும் பசுக்களை, கன்றுகள் மடியைமுட்டி நுரைபொங்க பால்குடிப்பதை, மொட்டாக, அரும்பாக, மலராக, மலர்ந்து கொண்டிருக்கும் அலராக மணம் வீசி ஜொலிக்கும் நந்தவனத்தை, வானில் வட்டமிடும் பருந்தை, அபூர்வமாக கீகீ என்று கத்தி “கர்ர்வ்” என வானிலே தன் காதலியை அழைக்கும் குரலை, எங்கிருந்தோ வந்து காதலன் கால் விரல்களைப் பற்றித் தலைகீழாக சுழன்றாடும் அந்தர நாட்டியத்தைப் பார்க்க வாய்க்குமே.

ஜனக்கூட்டத்தை, அவர்கள் குதூகலமாக இடித்துக்கொண்டோ கைகோர்த்துக் கொண்டோ செல்லும் கொண்டாட்டத்தை, தேசமே வணங்கும் காந்தியாரிடம் இருக்கும் வசீகரத்தை, ஸ்ரீமான் பெரியவர்கள் எல்லாம் அவரிடம் எப்படி பக்தியோடு பேசுகிறார்கள். அடிகளார் எப்படி பதில் சொல்கிறார் என்பதை எல்லாம் காண ஒரு அழகான சந்தர்ப்பம். வாய்ப்பு. ஒருமுறை புக்ககத்திலிருந்து பிறந்தகம் போனபோது உக்கடம் பெரிய குளத்தில் பதினைந்திற்கும் மேலான நீர்க்காகங்கள் சர்சர்ரென நீருக்குள் பாய்ந்து ஒரு சில கணம் மறைந்து பின் தலைகளை நீட்டி மேலே வந்ததைத் திரும்பப் பார்க்க வாய்ப்பாக அமையும் என்ற நினைவும் வந்தது. கம்பிகள் இல்லாது இறுக்கும் வீட்டிலிருந்து ஒருநாள் வெளியே கைவீசி நடந்து மகிழ்வை அள்ளிவர நல்ல சந்தர்ப்பம் என்பதை நினைத்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

செண்பகச்செடி பக்கம் நெருங்க நெருங்க ஆண்சிட்டுக்குருவி தென்னைமரக்கிளையில் போய் அமர்ந்து வால்துடிக்கக் கத்தியது. செண்பகச்செடியின் கிளையை லேசாக விலக்கி ஒதுக்கினாள். ஆண் குருவி விருட்டென்று கருவேப்பிலை மரத்தில் அமர்ந்து கத்தியது. இளம்பச்சை நிறம்கொண்ட நீளநீளமான இலைகள். மேல் பக்கம் இரண்டு இலைகளைக் கூம்பாகக் கொண்டு அற்புதமாக தைத்திருக்கிறது. அடியில் ஒரே நீண்ட இலையை இடதுபக்க இலையுடன் தைத்து அதிலே பஞ்சும், தென்னை நார்களும், நீண்ட அருகம்புல்லும் கொண்டு கிண்ணம்போல மூன்றே இலைகளில் கூட்டைக் கட்டியிருக்கிறது. பத்துநாட்களுக்கு முன் பார்த்தபோது முட்டைகள் இருந்தன. சத்தமில்லாமல் பெண்குருவி தலைக்குமேல் வட்டமிட்டு மருதாணி செடியில் அமர்ந்தது. அதன் அலகில் சிறிய பச்சைநிற புழு ஒன்று நெளிந்து கொண்டிருக்கிறது. குனிந்து மேல் இலையை ஒதுக்கி பஞ்சுக் கூண்டினை விலக்கிப் பார்த்தாள். சின்ன அசைவுதான். சட்டென நான்கு குஞ்சுகள் கழுத்தை நீட்டி வாய்களைத் திறந்தன. அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. இரை கொண்டு வந்திருக்கும் தாயல்ல நான் என்பதை குஞ்சுகளிடம் எப்படிச் சொல்வது? இறகு முளைக்காத இறக்கைகளை அடித்து சிவந்த வாய்கள் அவளது கை விரல்களை நோக்கி நீட்டின. ச்செ என்ன நம்பிக்கை. பருந்து வந்திருந்தால்கூட இரையொன்றுதான் முதலில் குதித்திருக்கும். குஞ்சுகள் பிறந்து நான்கைந்து நாட்கள் ஆகும்போல. சின்ன அசைவை தன் தாயின் வருகை என்று நினைத்து போட்டி போட்டுக்கொண்டு மேல்நோக்கி வாயைத் திறக்கின்றன. இன்னும் இறகு வளராத பனங்கருப்பு இறக்கைகளை அசைக்கின்றன. ஐயோ பசிக்குதோ. என்ன துள்ளல். என்ன நம்பிக்கை. “நான் உன் அம்மா இல்லை” அவற்றின் படபடப்பை ஏமாற்றக்கூடாது என்று கையை மெல்ல எடுத்தாள்.

தன் கையின் வாசத்தை அல்லது சூட்டைத் தாயென்று துதித்திருக்குமோ, மழை விழுந்தால் கூம்பிலிருந்து கூண்டிற்குள் இறங்காமல் வழிந்து போகும்படி எப்படி அறிவாகப் பின்னியிருக்கிறது. அடியிலையை ஆதாரமாக்கி குஞ்சுகள் நோகாமல் இருக்க பஞ்சு வைத்து கூண்டை பின்னியிருக்கிறதே! விரல்கள் இல்லாமல் தன் அலகாலே பின்னிப் பின்னி போயிருக்கிறது. துளி நீர் விழுந்தால் கூட வெளியே உருண்டோடிவிடும். அதுவும் மேல்கிளையில் பின்னாமல் நடுக்கிளையின் மறைவிற்குள் தன் வீட்டை கட்டியிருக்கிறது. காகங்களின் கண்களுக்கோ கரிச்சான்களின் கண்களுக்கோ தெரியாமல் மறைத்து பொத்தி வைத்திருக்கிறது சிட்டு. காதலித்தன. கலவி செய்தன. காற்றில் பறந்தன. கருவுற்றன. தலைகளைக் கோதிவிட்டன. கூடுகட்டின. முத்தமிட்டன. விரும்பித் தேர்ந்தன. யாரைக் கண்டும் பயப்படாமல் காதல் காதல் என்று பறைசாற்றின. முட்டையிட்டது. அடைகாத்தது. இதோ அரவணைக்க மாறி மாறி தத்துகின்றன. இந்தச் சிட்டில் ஒன்றாகப் பிறந்திருந்தால் அவஸ்தை இருந்திருக்காது. விளக்கிவிட முடியாத ஆனந்தம் கூட்டின்மேல் பறந்தபடி இருக்கிறது.

துவைகல்லில் திரும்ப வந்து அமர்ந்தாள். தாய்க்குருவி விருட்டென செண்பகச் செடியின் கிளையில் போய் அமர்ந்தது. பின் தத்திக் குதித்து உள்ளே இறங்கி மறைந்தது. நீலவானம் கடலின் நிறம் கொண்டு அசையாமல் விரிந்திருக்கிறது. வலப்பக்கம் மெல்லிய மேகம் அலையாக விரிந்து பரவியிருக்கிறது. இடப்பக்கம் பிரமாண்டமான தவளையின் வாய் பிளந்திருப்பதுபோல அசையாமல் மேகம் நிற்கிறது. இடையே நீல வானம். அதில் சிறு வெண்பறவையொன்று தலைகீழாக வருவதுபோல அப்படியே நிற்கிறது. வெண்மையான மேகங்களின் விளிம்போரங்களில் மெல்ல சிவப்பு நிறம் கனலத் தொடங்குகிறது. சூரியன் மலைகளுக்குள் நன்றாகவே இறங்கி மறைந்துவிட்டான். வெண்மேக விளிம்பு இளஞ்சிவப்பாக மாறி பந்தல் போட்டது. நிமிஷத்திற்கு நிமிஷம் நிறம் மாறி வந்த சல்லாத்துணிமேகம் மங்கி கருக்கத் தொடங்கியது. இந்த நேரம்தானே என்று பங்கஜம் மாமி கொல்லைப்பக்கம் பார்த்தாள். லஷ்மி அந்த பக்கம் இன்று தட்டுப்படவே இல்லை. மீண்டும் சிட்டுக்கள் பக்கம் பார்த்தாள். குருவிகள் கணங்கணங்கென கொஞ்சுவது சன்னமாகக் கேட்டது.

பாட்டி வேம்பின் அடியில் வைத்திருந்த அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வணங்கினாள். கொல்லைக்குப் பின் வாய்க்கால் பள்ளத்திற்கு அப்பால் தடத்தின் மீது மாட்டுவண்டி ஒன்று கடக்புடக்கென போகிறது. தோட்டங்களில்வேலை செய்து கொண்டிருந்தவர்கள் போய்விட்டார்கள். அக்ரஹாரத்தின் வீட்டுக் கொல்லைகளின் பின் ஓடும் வாய்க்காலில் குளித்து இறகு சிலிர்த்துக்கொண்டிருந்த காகங்கள் பறந்துபோய்விட்டன. “அங்கென்னடி விசாலா தெக்கே பாத்திண்டிருக்கே. இருட்டிண்டு வருதில்லோ. ஆத்துக்குள்ள வரத்தோன்றதில்லையோ, வாடியம்மா” அழைத்தாள். மனம் தம்பட்டுப் போயிருந்தது.

கொல்லைக்கு விளக்கேற்ற வந்த மேலண்டைவீட்டு கௌரிபாட்டி அந்தப் பக்கத்து துவைகல்லில் ஏறி நின்று சுவரில் கைவைத்து “ஏண்டி பாக்யம் சுந்தரம் வந்திட்டானில்லையோ, தேசபயணமா வந்திருக்கிற காந்தி மகான அழைச்சிண்டு வரப்போயிருக்ன்னு ஊரே பேச்சு. சுந்தரத்தைக் காக்காப் பிடிச்சுண்டு மகாத்மா காந்தியாரை பாக்கணுமன்னு எங்க ஆத்திலே நேத்திருந்து ஒரே கும்மாளம். சுந்தரம் உங்கள அழைச்சிண்டு போறெச்சே எங்களையும் சேத்துண்டு போகச் சொல்லன்னு ரெக்கமண்டேசன் கேளுண்ணு பிள்ளைகள் ஒரே அடம்” என்றாள்.

பாட்டி பெருமிதமாக “விடிகாலை நாலுமணிக்குப் போனவன் இன்னும் வரலை. நாளை மதியத்துக்கு மேலே போத்தனூர் ஜங்சனில வந்திறங்கிறார்ன்னு சொல்லிண்டிருந்தான். ஏற்பாட்டில முன்னால நிக்கிறது யாருன்னு தெரியுமோயில்லையோ ஸ்ரீமான் அவினாசிலிங்கம் செட்டியாராக்கும். அவாளுக்கு வலதுகரம் சுந்தரமன்னு கோயமுத்தூர் ஜில்லாவே சொல்றச்ச பிசகில்லாம செஞ்சு கொடுத்திண்டு வரணுமில்லையோ”  என்றாள் பாக்கியம் பாட்டி.  சந்தியாக்கால பூஜை மணி கோயிலில் ஒலிப்பது கேட்டது. பாட்டி வடக்குப் பக்கம் பார்த்துக் கையெடுத்து சேவுச்சுண்டாள். விசாலாட்சியும் கும்பிட்டாள்.

நடைசாற்றும் சமயத்தில் கோயிலைவிட்டு வெளிவரும்போது சட்டைப் போடாமல் செருப்பணியாத திடும்காரன் வயிற்றில் கட்டிய துடும்பில் திடுதிடுமென தொன்னந்தட்டியால் தட்டி. “ஸ்ரீமான்களே,  மகாஜனங்களே,   இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நம்ம கோயமுத்தூர் மாநகருக்கு உட்பட்ட போத்தனூரிலே இன்னும் மூணு நாளிலே நம்ம ஸ்ரீமான் மகாத்மா காந்தியார் வரப்போகிறார். ஹரிஜன சேவா சங்க நிதிக்கு ரூபாயாகவோ, பொன் களஞ்சியமாகவோ, கையாண்ட பொருளாகவோ தர்ற ஸ்ரீமான் தேசாபிமானிகள் காங்கிரஸ் கமிட்டியாரிடம் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், சாமியோ! திடும்! திடும்! திடும்” நின்று குரல் உயர்த்திச் சொல்லிவிட்டு திடுதிடுமென துடும்பு அதிர அடுத்த முக்கில் நின்று அறிவிக்க ஒலித்துக் கொண்டு போனான். இந்தச் செய்தியைக் கேட்கும்போதெலலாம் அப்பாவின் ஒருவார கால ஓட்டமும் பரபரப்பும் முன்பில்லாதது தோன்றும்.   “அம்மா நானும் வர்றேன்மா” என்று திரும்பவும் நினைவூட்டினாள் விசாலாட்சி. “அப்பாகிட்ட கேக்கிறேன்” என்றாள் அம்மா.

சேவிக்க வந்த பக்தர்களை வெளியேற்றிவிட்டு நடையைச் சாத்திக் கொண்டிருந்தனர் புரோகிதர்கள். சந்நிதானத்திற்கு நேர் முன்னால் ஐம்பது வயது நிரம்பிய இஸ்லாமியர் இக்பால் தீவட்டியில் விறகு சிராய்களை அடுக்கி தீ வளர்த்துக் கொண்டிருந்தார். தீ நன்றாக எரிய விறகில் எண்ணெய் ஊற்றினார். முறுக்கி  விடப்பட்ட அவரது மீசையும் திடகாத்திரமான உடம்பும், தலைப்பாகையும் பார்க்க கம்பீரமாக இருந்தது. இரும்பு பிரிமனைக்கு மேல் வேப்பந்தழையை கைக்கு ஏந்தலாக வைத்திருந்தார். இக்பால் நடையை நோக்கி மண்டியிட்டு வணங்கி எழுந்து தீவட்டி தீபத்தை ஏந்தினார். கோபுரத்திற்கு தீவட்டி தீபாராதனை காட்டினார். “கொங்கு தேசத்தை ஆண்டு அருள்பாலிக்கிற, வானம் அமுதமாய் மும்மாரி பொழிகிற, தேவர்கள் வணங்கும் காஞ்சி நதியாம் நொய்யலையே தன் அருளாக வாரி வழங்குகிற, எட்டுத்திக்கும் தன் எல்லைக்குள் நோய் நொடி அண்டாது ஜனங்களை சுபிட்சமாய் வாழவைக்கிற இம் மண்ணில் பிறந்த ஜீவராசிகளெல்லாம் நலமுடனே விளங்கிட, நெல் பொழிந்து, தினை செழித்து, நீர் உயர்ந்து இருளர்கள், மலசர்கள், வந்தவர்கள், தங்கியவர்கள், உழுதவர்கள், விதைத்தவர்கள், காடு காத்தவர்கள், உன்னை அண்டிய சகலவிதமானவர்களும் நோய் நொடி வராமல் காத்து நிறைமணி தந்து பேரொளியாய் விளங்கும் தேவாதிதேவன் ஸ்ரீமான் மகா பட்டீஸ்வரர் தாழ்வணங்கி உலகப்பேரரசன் ஸ்ரீமான் திப்பு மகாராஜாவின் பேராலே சலாம் சலாம் சலாம். மனிதரிலே பிரிவில்லை சலாம் சலாம் சலாம். அன்பே மதமென்றார் சலாம் சலாம் சலாம்” நான்கு திக்கும் தீவட்டி ஆராதனை காட்டி வணங்கினார் இக்பால்.

இறுதியாக புரோகிதர் சந்நிதான வாசல்முன் அகல் விளக்கை ஏற்றிவிட்டு தேங்காயை எடுத்துத் சிதறடித்தார். தீவட்டி இக்பாலிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லத் தொடங்கினார்கள்.

***

ஜட்காவண்டி வாசலில் வந்து நிற்கும்போது அக்ரஹார முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து நின்றிருந்தார்கள். மணி எட்டுக்குமேல் ஆகியிருந்த ரேழியில் தாத்தாவுடன் அமர்ந்திருந்த எஸ்.கே.சாமிநாதய்யர் ரொம்ப உற்சாகமாக குழந்தைபோல எழுந்து ஓடிவந்தார். முன்பு வார்தா ஆசிரமம் போய் காந்திஜியைப் பார்த்து வந்ததை இங்கு வரும்போதெல்லாம் பிரசிங்கிப்பார்.

கூடமே நிறைந்திருந்தது. பக்கத்தாத்து குழந்தைகள் தூக்கம் தழுவ தழுவ அம்மாக்களின் மடிகளில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்திருந்தார்கள். ஆகாரம் முடிந்து வந்து தரையில் அமர்ந்து நடுத்தூணில் முதுகை சாய்த்தார் சுந்தரம். பங்கஜம் மாமிக்குப் பின்னால் லஷ்மி சங்கோஜத்துடன் ஒட்டிக்கொண்டு வந்து இரண்டாம் கட்டுக்குச் செல்லும் பகுதியில் அமர்ந்தாள். கௌரிபாட்டியின் மருமகள், பேரன்கள் எல்லாம் அவசரமாக வந்து அமர்ந்தார்கள். கோயில் குருக்களின் மருமான் அமர்ந்திருந்தார். தாத்தா ஊஞ்சல் பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். சுந்தரத்திற்குத் தெரிந்தவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அக்ரகாரத்தின் முக்கியபுள்ளி என்பதற்கு மேல் கூடுதல் அந்தஸ்தும் வந்துவிட்டது. லஷ்மி லேசாக முதுகு வளைய மாமியின்பின் அமர்ந்து சுந்தரம் ஐயரை பாந்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அவள் முகத்தில் துளி கல்மிஷம் இல்லாது இருந்தது.  அவளைப் பார்க்க சங்கடமாகவும் இருந்தது.  சரஸ்வதியிடம் இவளைப் பற்றி சொல்லியிருக்க வேண்டாமென்றிருந்தது. மன்னியின் குழந்தை பாலாமணி விசாலாட்சியின் மடியில் வந்து அமர்ந்தது. ஸ்ரீமான் சி.கே.சுப்ரமணிய முதலியார் நடையைத் தாண்டி வருவதைக் கண்டதும் சுந்தரம் எழுந்து வேகமாகச் சென்று அவரது கையைப்பற்றி தோப்பனாரின் பக்கம் ஒரு நாற்காலியைப்போட்டு அமர வைத்தார்.

விசாலாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது. சி.கே.சுப்ரிமணிய முதலியார் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களின் அணுக்க நண்பர். திலகரை குருவாகக் கொண்டவர். முதலியார்வாளின் உதவியால்தான் சிதம்பரம் பிள்ளையவர்கள் பேரூர் வந்தார். அப்போது விசாலாட்சிக்கு ஆறு வயது. கணபதி ஐயர் வீட்டின் இடது பக்கம் ரேழியை சற்றே முன் நீட்டி ஒரு கடைபோல பலகையால் பிள்ளைவாளுக்கு மறைத்துக் கொடுத்திருந்தார். சிறிய தேங்காய்க்கடை. அப்பா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்குதான் மெனக்கெட்டு வந்து தேங்காய் வாங்குவார். அப்பாவோடு இங்கு வந்தால் நீண்டநேரம் இழுத்தடிப்பார். சில சமயம் சி.கே.சுப்ரமணிய முதலியார் முன்னமே வந்து பலகை ஓரம் அமர்ந்து பிள்ளையிடம் பேசிக்கொண்டிருப்பார். அவரைப் பற்றி அப்பா அப்போதே சொல்லியிருக்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி பரப்பரப்பாகப் பேசியதெல்லாம் உண்டு. பழகிய பின் “விசாலா நேரே சிதம்பரம்பிள்ளை மாமா கடையில் தேங்காயை வாங்கிண்டு ஓடிவா நாங்க இங்க சந்நிதிக்கி முன்னே நின்னிண்டிருக்கோம்” என்று அனுப்புவார். “குழந்தை நல்லா படிக்கணும்” என்று ஒவ்வொருமுறையும் வாழ்த்தி அனுப்புவார். அது சின்னஞ்சிறிய கடை. கடையின் ஓரமாக ஒடுங்கி அமர்ந்து திருக்குறளைப் படித்துக்கொண்டும் ஏதேனும் எழுதிக்கொண்டும் இருப்பார். தேங்காய்க்கடையை அரிசிக்கடையாகவும் மாற்றிய சமயத்தில் மாமாவுக்கு பேங்கில் வேலை கிடைத்த சந்தோசத்தைச் சொன்னார். அந்தச் சந்தோசம் மாமாவுக்கு வெகுநாள் நீடிக்கவில்லை.

சிதம்பரம் மாமா தங்கியிருந்தது பரமேஸ்வர முதலியார் வீடு. ஸ்ரீமான் சி.கே.சுப்ரமணிய முதலியாரால் ஏற்படுத்தித் தந்த பெரியவீடு. அந்த வீட்டின் சிறிய பகுதியை ஒதுக்கித் தந்திருந்தனர். பெரிய கூடத்தின் சிறு பகுதியை மூங்கில் தட்டியால் மறைத்து தடுத்துத் தங்கியிருந்தார்கள். சிதம்பரம் மாமா வீடு  சின்னஞ்சிறு கூடாரத்தோடு இருந்தது. மரத்தூண்களில் எல்லாம் விதவிதமான சிற்பங்கள் இருக்கும். அப்பாவுடன் நான்கைந்து முறை அவாத்துக்கு போயிருந்தாலும் அம்மா, பாட்டியுடன் சென்ற நாள் மறக்க முடியாது.  மீனாட்சி மாமிக்கு பிறந்த பெண் குழந்தையைப் பார்க்க அம்மா பாட்டியுடன் அவாத்திற்கு சென்ற நாளில்தான் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. பாட்டி “எங்கள் கொங்கு தேசம் ஆளும் பச்சை நாயகியே” என்று கொஞ்சினாள். நான் விரும்பிக் கேட்க என் மடியில் வைத்தார்கள். பேருர் பச்சை நாயகியின் பெயரால் “மரகதவல்லி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். தீட்டுக் கழித்த பதினேளாவது நாள், அவள் என்னைப் பார்த்து எச்சிலில் குட்டிக் குட்டியான முட்டைகளை விட்டு ஆச்சரியமான  சிரிப்பு மங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். சொல்ல முடியாத அபூர்வமான சிரிப்பு. அப்படியே குடிகொண்டு இருந்தது. நான் கண் பக்கம் விரலைக் காட்டிய போதும் கண்ரெப்பைகள் கூசி மூடாமலே அழியாத மகிழ்வின் சாயலிலேயே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பின் அம்மா தூக்கியதும் அம்மாவையே பார்த்தாள்.  எல்லாம் பேசியபடி கோயிலுக்குச் சென்றோம். பட்டீஸ்வரரை வணங்கிவிட்டு தெற்கு நோக்கி நடனமாடும் நடராஜப் பெருமாளின் கனகசபையின் வழியில் வந்தோம். ஆலங்காட்டுக் காளி, அரோகபத்திரம் சிற்பங்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. சிங்கத்தின் மீதமர்ந்து செல்லும் குமரகுருபரர் சிலையருகில் அமர்ந்தோம். மண்டபத்தின் கல்சுவர் ஓரம் கனமான விட்டத்தைத் தாங்கும் இரண்டு பெரிய மரத்தூண்கள்.   அதன் வடக்கு மூலையில் குடைகள் மடக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் அடிவயிற்று வெண்பஞ்சு வண்ணத்திலும் மேற்புறம் கருப்பு வண்ணத்திலும் பெரிய பூனை ஒன்று ஓசைப்படாமல் நடந்து சென்றது. தூக்கிய வாலை அப்படியே நீட்டி தனித்து முன் கால்களை நீட்டி பதுங்கி அமர்ந்தது. அந்தப் பருத்த தூணின் அடியில் மயில் கழுத்து நீட்டிப் பார்ப்பதுபோல செதுக்கப்பட்டிருந்தது. அதற்குமேல் பெண் முகத்தில் படமெடுத்த பாம்பும் ஆண் முகத்தில் உடலை வளைத்து தாக்கும் கீரியும் வடிக்கப்பட்டிருந்தது.  அதற்கும் கீழ் ஒரு புறா மற்றொரு புறாவின் தலையைக் கோதுவதற்கு ஏற்றதாகக் குனிந்து நிற்பது செதுக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் மாமா இரண்டு முருக்குகளைக் கொண்டு வந்து தந்தார். வந்த பின் அம்மாவிடம் கேட்டேன் கீரிக்கும் பாம்புக்கும் ஆகாது என்றுதான் சொன்னாள். சமீபத்தில் ஒருநாள் இப்படித் தோன்றியது புரிந்துகொள்ளாத பகைமையின் தீரா மோதல்; பிறவி அம்சம் என்று.

கிழக்கோடி ராதா மாமி நேராக வந்து விசாலாட்சியை அணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார். “கடவுள் அனுகிரகத்தில் ஷேமமா இருக்கணும்” உச்சந்தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார். திருமூர்த்தி ஐயர் ஆத்து மாசிலாமணியை உடன் அழைத்து வந்திருந்தாள் ராதா மாமி. பூஜை அறைக்குச் செல்லும் வழியில் இருந்த சிறிய இடத்தில் அமர்ந்தனர்.

அப்பா நன்றாகத் தூணில் சாய்ந்திருந்தார். அப்பா அவினாசிலிங்கம் செட்டியாரின் ராமகிருஷ்ணாமிஷின் வித்தியாலய காரியாலயத்தில் வேலையில் இருக்கிறார். எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள்.

“மகாத்மா வர்றது ஊரறிஞ்சு போச்சு. அவர் அவர் மாட்டுவண்டிகளைக் கட்டிண்டு போத்தனூர் ஸ்டேசனுக்கு வந்துண்டே இருக்கா. கோயம்புத்தூர்ல சைக்கிள் வச்சுண்டிருக்கிற அத்தனைபேரும் ஸ்டேசனபாத்து பெல்லடிச்சுண்டே வர்றா. ஜட்கா வண்டியெல்லாம் ஸ்டேசனுக்கும் டவுனுக்கும் சும்மா பறக்குறது. பொம்மனாட்டிக இடுப்பில பிள்ளைகள வச்சுண்டு ஓட்டமும் நடையுமா வர்ரா. என்ன பண்றதனு தெரியல. பெரிய தள்ளுமுள்ளு ஆயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு அவிநாசிலிங்கம் செட்டியாருக்கு பதட்டம். சி.சுப்ரமணியம் ஒரு யோசனை சொன்னார். போத்தனூர் ஸ்டேசனுக்கு ஒரு மைல் தள்ளி ரயிலை நிறுத்தி காந்தியார காரில ஏத்திண்டு நேரா குன்னூருக்கு விட்டிடலாமென்னு சொன்னார். குன்னூருக்கு போக வேண்டிய கார்கள் முன்னமே ஸ்டேசன்ல வந்து காத்திண்டிருந்ததாலே ஸ்டேசனிலேயே நிப்பாட்டும்படியாக ஆயிடுச்சு. ரெயின்ல வர்ரச்சயே இந்த லஜ்ஜையன்னா, கப்பி ரோட்டு வழியா கார்ல வந்தா எத்தன எடத்தில நின்னு நின்னு வரணும் பாத்தேளா?

“ஒவ்வொரு ஊருலிருந்தும் காங்கிரஸ் கமிட்டி சார்பா ஹரிஜன சேவா சங்க நிதிய வசூல் பண்ணுன ஆட்களெல்லாம் வந்து எங்க ஊருக்கு காந்திமகான் வரணும். நாங்க அழைச்சிண்டு போறோமனு கேட்க ஆரம்பிச்சிட்டா. சமாளிக்கிறது பெரும்பாடாயிருச்சு.”

“ஸ்ரீமான் இராஜகோபாலச்சாரியார் வரலையாச” என்று எஸ்.கே.சாமிநாதய்யர் கேட்டார். “இல்லை. அவர் அநேகமா விடுதலையாறதுக்கு இன்னும் மூணுநாள் இருக்கன்னார் செட்டியார். குன்னூரிலிருந்து திருப்பூர் கூட்டத்துக்கு வர்றச்செ விடுதலையாகி ஆச்சாரியார் ஜெயிலிலிருந்து நேரா அங்க வந்தாலும் வருவார். சொக்கம்பாளையம் காங்கிரஸ் ஊழியரான பேட்டையன், கூகனூர் கே.கே.சுப்பண்ண கவுண்டர் ரெண்டுபேரும் சி.சுப்ரமணியத்திடம் காந்தி அடிகளார் பேரில ஹரிஜன சேவா நிதிக்குன்னு வசூல் செஞ்சு கொடுத்திருக்கோம். எங்களூர்ப் பக்கம் வர்லையன்னா எங்கள நாளைக்கி ஜனங்கள் என்ன நினைப்பாங்க. எப்படி நாளைக்கு நாங்க சேவை செய்றது எங்கள ஜனங்க நாளைக்கு நம்பு வாங்களான்னு விடாப்பிடியா பேசிட்டிருந்தார்.

“அது யாரு சுப்பண்ண கவுண்டர்? என்று கேட்டார் சி.கே.சுப்ரமணிய முதலியார். கூகலூர்காரர். அவாளை கவுண்டர் சாதியார் ஜாதி பிரதிஷ்டை செஞ்சிட்டாங்க. அவரோட சொந்தக் கிணத்தில ஹரிஜன்ஸ் ஜலம் எடுத்துக்கலாமுன்னு விட்டதால ஜாதியாருக்குக் கோபம். அவரு தனியாளா நிக்கிறாரு. காந்தியார் இப்பிடி ஹரிஜன் ஹரிஜன்னு சொல்லி கிராமத்தில அனாசாரத்த கொண்டு வந்திட்டாருன்னு அவங்க தாயாதிகளுக்கே கோபம்.”

“காந்தியார் சுதந்திரம் வாங்கித் தர்றதில கவனம் செலுத்திண்டிருந்தா போறாதா. பள்ளு பறை எல்லாம் ஒன்னுண்டு பேசி வர்றது சாதி தர்மத்தையே கொலைக்கிறதா ஆகாதா. அவினாசிலிங்க செட்டியார், சுப்பிரமணிகவுண்டர் இவாளெல்லாம் காந்தியார் பக்கத்திலேதானே இருக்காங்க.  அவா எல்லாம் பக்குவமா சொல்லப்படாதா”  என்றார்  மணி குருக்கள்.

“ஸ்ரீமான் அவினாசிலிங்க செட்டியார்வாள் தானே நாலஞ்சு ஹரிஜன பிள்ளைகள இழுத்துண்டு வந்து ராமகிருஷ்ணா வித்தியாலயத்துல வச்சு வகுப்பு நடத்துறார்” என்றார் சுந்தரம். காந்தியடிகளின் சில செயல்பாடுகள் இவர்களுக்கு வருத்தத்தையும் கொடுத்தது. “

“சரி, காந்தியாரைப் பற்றி சொல்லுங்கோ” என்றார் சி.கே.சுப்ரமணிய முதலியார்.

“வெள்ளை வேட்டியை முட்டிக்குமேலே தார்ப்பாய்ச்சி கட்டீண்டிருந்தார். அவாளை பாக்கரச்ச உழவுக் காட்டில இருந்து வர்ற அசல் விவசாயி மாதிரிதான் இருந்தார். மேலாக்க வேட்டிய நல்லா போத்திண்டிருந்தார். அவா தலைய மொட்டையடுச்சு முடிவளந்தா எப்படி இருக்குமோ அப்பிடி நரைமுடி நீண்டிண்டிருக்கு. கை நரம்பு எல்லாம் நன்னா தெரியறது. வட்டக் கண்ணாடி. நன்னா சேஷ் பண்ணி வெள்ளை மீசைய ட்ரிம் பண்ணி இருந்தார். உடம்பில சதையே இல்ல. மொட்டிண்டு வர்றாப்பில ஒரு தோற்றம். பேசறச்ச வாய்ப் பக்கமெல்லாம் பெரிய கோடு விழறது. கீழ் பல்வரிசையில ஒரு பல் இல்லாதது தனியா தெரியறது. காந்தியார் போற வழியில காரமடை, மேட்டுப்பாளையத்தில எல்லாம் கனஜோரா வரவேற்பிற்கு ஏற்பாடாயி இருக்கு. ஐந்தாறு கார் குன்னூர் போகுது. நாகேஸ்வரராவ் மாளிகையில் ரெண்டு நாள் தங்கறார். ஆனா மௌனவிரதம். அப்புறம் அங்கிருந்து திருப்பூர் வர்றார். அப்படி வர்றச்சே சொக்கம்பாளையம், கூகலு ஜனங்களைப் பார்க்கலாம். அப்புறம் திருப்பூர். திருப்பூரில இருந்து ஞான ராஜாராம் பாகவதர் போடுற நாடகத்த கொஞ்ச நேரம் பாக்கிறார். முதல்ல காந்தியார் தொழில்முறையா நடத்திண்டுவர்ற நாடகத்துக்குப் போறதில்லன்னு மறுத்திட்டார். பாகவதர் காந்தி சரித்திரத்தை ஹரிகதை ரூபமா நடத்திண்டு வர்றவா தேசபக்தர்ன்னு எடுத்துச் சொன்ன பின்னு எவ்வாறு நிதி தருவீர்ன்னு கேட்டார். ரெண்டாயிரம் வரை என்றார் ராஜாராம் பாகவதர். அன்றைய தினம் நடக்கிற நாடக வருமானத்தில ஒரு பைசாகூட செலவுக்கு எடுக்கக்கூடாது. ஆயிரத்து ஐநூறு ரூபாய் ரொக்கமா நாடகம் நடத்துறதுக்கு முன்னமே தம்மிடம் கட்டிவிட வேண்டும்.   அதற்குமேல் வரும் பணத்தை பீகார் நிதிக்குத் தருவதாக இருந்தால் வருகிறேன்னு கறாரா சொல்லிட்டார்.

“பண விசயத்தில காந்திஜி பெரிய கறார் பேர்வழியான்னோ இருக்கார்..” என்று சொல்லிச் சிரித்தாள் பாட்டி. செட்டியார் தமிழ்நாட்டிலேயே எந்த ஊர்லயும் தராத நிதிய திரட்டித் தரணுமன்னு ஓடிண்டிருக்கார். நாடகம் பாத்தபின் ஜி.டி. நாயுடு பங்களா ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத்தில தங்குறார். மறுநாள் காலையில போத்தனூரில் அவினாசிலிங்கச் செட்டியார் கொண்டு வர்ற ராமகிருஷ்ணா வித்யாலயா கட்டிட அடிக்கல் நாட்டுகிறார். இப்போதான் எனக்குத் தலைவலி. இரவுச் சாப்பாடு காலைச் சாப்பாடு ரெண்டுவேலை சமையலுக்கு பத்ம ஐயரைப் போய்ப் பார்த்தேன். அவர் ஹரிஜன் பையன்கள் இருக்கிறதால சமையலுக்கு வரமுடியாதன்னுட்டார். அதுக்கு வேற ஒரு ஐயர்வாளைப் பார்க்கணும்.”

கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நாடகம் பார்க்க காந்தியடிகள் வரும் சமயத்திலோ மறுநாள் காலையிலோ தரிசித்துவிட்டு வரலாம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். மெல்லக் கூட்டம் கலையத்தொடங்கியது.

இருள்பிரியும் முன்னமே அப்பா நொய்யல் ஆற்றுக்கு ஸ்நானம் செய்யப்போய்விட்டார். விசாலாட்சி பின்கட்டின் வாய்க்கால் வாசலைத் திறந்தாள். மயிலம்பாட்டி பால் உருளி பாத்திரத்தைக் கழுவிக்கொண்டிருந்தாள். தாங்கி நிற்க அதன் நான்கு குமிழ்கள் சிறுத்த சின்ன தூண் கால்போல இருந்தன. பக்கவாட்டில் கழுவி வைக்கப்பட்ட தட்டு, ஐங்கார் சொம்பு, பளபளவென்று இருந்தது. குளத்திலிருந்து ஜலம் ததும்பி மறுகால் வழியாக எல்லா அக்ரஹார வீடுகளின் பின்கட்டுகளையும் தொட்டுக்கொண்டு ஓடுகிறது. ஜலத்தில் கால் வைத்து வேலை செய்ய மூன்று மூன்று படிகளை வைத்திருக்கிறார்கள்.

மாசி பாதிவரை ஜலம் தெளிந்து ஓடும். கிழவிகள் உதயத்திற்கு முன்பாக எழுந்து வாய்க்கால் நீரில் மூழ்கி குளித்து மடியை கடைபிடிப்பதும் தொடர்கிறது. தை மாதம் முடிய இன்னும் மூன்று நான்கு நாட்கள் இருந்தன. பனி இன்னும் குறையவில்லை. அருகம்புல்லிலிருந்து ஆவி மெல்ல மேலேறிச் செல்கிறது.

உளுந்து விதைப்பதற்காக வண்டிப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். சில குமரிகள் இடித்துக்கொண்டும் நடுவயதுப் பெண்கள் குளிருக்கு முந்தானையைத் தோளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டும் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இரண்டு மாட்டுவண்டிகள் தலை சலங்கை குலுங்க பெருவெட்டான நடையில் செல்கின்றன. சாலையின் தெற்குப் பக்கம் தெரியும் செங்காடுகளில் துவரைகள் அறுவடை பருவத்தில் இலைகளை உதிர்த்துகொண்டிருக்கின்றன. மிதி உளுந்து விதைத்து நெல் அறுவடை செய்யும் பருவம் இது.

“என்னடி விசாலா இந்த விடிகாலை நேரத்தில குடியானவங்கள வேடிக்கைப் பாத்திண்டிருக்கச”

“வேலைக்குப் போறதுகூட எவ்வளவு சந்தோஷமா இருக்குப் பாட்டி,”

சில பொம்மனாட்டிக கள் சாப்பிடுவாங்க. கேள்விப்பட்டிருக்கியோ?”

“ஆமா பாட்டி”

 பாட்டி கழுவிய பொருள்களை எடுத்துக்கொண்டு சென்றாள்.

அம்மா பின்கட்டு கதவில் நின்று “அடியே விசாலம் அங்கன என்ன வேடிக்கை. ஆத்துல வேற வேலையில்லையா. காலங்காத்தால அங்க நின்னு வேடிக்கைப் பாக்குறத நிப்பாட்டுன்னு எத்தனைவாட்டி சொல்றது. தம்பி காலேஜுக்கு கிளம்பிட்டான். இட்லி தட்ட எடுத்துப்போடு,” அழைத்தாள்.

வாய்க்கால் வாசல் கதவைச் சாத்திவிட்டு பின்கட்டில் நடந்து கூடத்திற்கு வந்தாள். தம்பி சைக்கிளில் காலேஜ் போகிறான். மன்னி அண்ணனுக்கு சுராகியில் வெண்ணீரை ஊற்றி மூடினாள்.   அண்ணி திருச்சி போயிருந்தபோது இந்தப் பாத்திரத்தை வாங்கி வந்தாள். சில சமயம் மன்னிக்கும் அண்ணனுக்கும் சண்டை வந்தால் தீரவே தீராது. மன்னி வசதியான குடும்பத்தில் பிறந்தவள்.  சண்டை எல்லை மீறி போய் அண்ணா கை நீட்டினால் அவ்வளவுதான். பாத்திரங்களை தூக்கிப்போடுவதில் கோவம் தெறிக்கும். பின் ஓயாத முணுமுணுப்பு அடங்கவே அடங்காது. முணுமுணுப்பிற்கு பதில் அவள் அண்ணனை பலம்கொண்டு தாக்கி தனித்துக்கொண்டால்கூட சரியென்று தோன்றும். அவள் அப்படிச் செய்யமாட்டாள்.  அர்த்தராத்திரிவரை இருவரும் பாசையாலே தாக்கிக்கொள்வார்கள்.

“என் மகன் நிலையப் பாருடி உன்ன மாதிரியா வாயடிக்கிறான்!” என்று அம்மா ஒருநாள் சொன்னதற்கு, “வாங்குற சம்பளம் உனக்கன்னா நான் யாருச” என்று பத்ரிகாளியாட்டம் ஆடிவிட்டாள்.

“நான் உங்ககிட்ட கையேந்திண்டே இருக்கணுமா ?”என்று கேட்ட அம்மா பின் அவர்கள் விசயத்தில் தலையிடுவதை விட்டுவிட்டாள்.

ஆனால் காலையில் மன்னியும் அரிபரியில் இருப்பாள்.  இவர்களை அவரவர் கச்சேரிக்கு அனுப்பி வைப்பதில் அம்மாவிற்கு ஒரே ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். தாத்தா கோயிலுக்குப் போய்விட்டு வந்தார் என்றால் காலை போஜனத்தை முடித்துவிட்டு மெல்ல சீட்டுக் கச்சேரிக்குப் போவார். திரும்பி வந்து மதியம் ஒரு குட்டித்தூக்கம் போடுவார்.  கடைக்கோடி கோபாலய்யர் வந்துவிட்டால் ரேழியில் அமர்ந்து வரப்போகும் நாடகம் பற்றி பேச்சு ஆரம்பித்து எங்கெங்கோ போகும். இந்த ஐந்தாறு நாட்களாக லட்சுமி நாராயணன் ஐயர் விவகாரம்தான் ரேழியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆயக்கட்டு செல்லையா கூடத்தில் புகுந்து லட்சுமிநாராயணன் தங்கை பரணியோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததாக பேச்சு பரவி பிரச்சனையாகிவிட்டது. கூடம் வரை வர அவனுக்கு தைரியம் யார் கொடுத்தது என்பதுதான் கேள்வி. பரணி கைம்பெண். இரண்டு குழந்தைகளை அண்ணனின் மரப்பில் வளர்த்து வருகிறாள். ஈரப் பேனாக்கி, பேன பெருமாளாக்கி அக்ரஹாரத்து மனிதர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்கள். அவன் மன்றாடியும் நம்பவில்லை. நேற்றிருந்து வீடே பூட்டிக்கிடக்கிறது என்கிறார்கள்.

***

வெயில் ஏறிக்கொண்டிருந்தது. யாரோ வாய்க்கால் பின்கட்டு வாசலில் அழைப்பது கேட்டது. பாட்டி பின்கட்டைத் திறந்து யார் என்று எட்டிப்பார்த்தாள். நாவிதன் கனகராஜ் நின்றிருந்தான். அவனுடைய அப்பாவும் சிலமுறை வருவார். “விசாலம் முண்டனம் செஞ்சுக்கிறதுதானே?” என்றாள் பாட்டி. விசாலாட்சி தலையை மட்டும் ஆமாம் என்று அசைத்தாள். இவன் வரும் நாளில் மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைபாயும்.

இந்தப் பயன்பாட்டிற்காக சுருட்டி வைத்திருந்த கோரைப்பாயை எடுத்து வந்து எலுமிச்சை மரத்திற்கு தள்ளி வெளிச்சமான இடத்தில் மடித்து போட்டாள். நேர் எதிராக அமர்ந்து கிண்ணத்தில் ஜலத்தைத் தொட்டு உச்சந்தலையில் தடவினான். கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தாள். ஒடுங்கிய கன்னங்கள், கோரைமுடி, சன்னமான விரல்கள், நெஞ்சில் படர்ந்து மெல்லிதாக கீழிறங்கும் மயிர் ஒழுங்கு, குந்தியிருக்கும் அவனுடைய வேட்டியைப் பார்த்தாள்.

விரலில் நீரைத்தொட்டுத் தொட்டு வைக்க காதுவழியாக நீர் இறங்கி கழுத்து வழி ஓடியது. இவனுக்கு முப்பது வயது இருக்கலாம்.  குடும்பஸ்தன்.  கழுத்தைச் சுற்றி சிறிய துண்டு கிடக்கிறது. நெஞ்சு எலும்புகள் லேசாகத் தெரிந்தாலும் உடம்பு உருக்குப்போல இருக்கிறது.

நீரை அள்ளிக் காது பக்கம் தடவ உடம்பு அப்படியே சிலிர்த்துவிட்டது. அவனது கைவிரல்களில் தலையை சாய்த்து உரசினாள். தன்னைமீறி தலையை சாய்த்துவிட்டதாகத் தோன்றியது. உச்சந்தலையில் வலித்த மயிர் கத்தியில் திரண்டு வந்தது. சில மயிர்கள் அவளது தோள்பட்டைகளில் உதிர்ந்து படிந்தன. பிடறிப்பக்கம் வலித்து எடுக்கும்போது பின் முதுகில் விழுந்த மயிர்க்கற்றைகளைத் தடவி தள்ளிவிட்டான். அப்படியே தன் உடம்பு முழுக்க இவன் தடவக்கூடாதா என்றிருந்தது. காதில் ஒட்டியிருந்த உதிரி மயிர்களைத் ஜலத்தில் தொட்டு தடவி எடுத்துவிட்டான். உடல் அனலாகக் கொதிக்கத் தொடங்கியது. தோளிலும் கழுத்திலும் ஒட்டியிருந்த மயிர்கள் புருபுருத்தன. இடது கையை மடக்கி விரல்களை நீட்டி இடத்தோளில் சுரண்டினாள். அவன் அந்த இடத்தில் விரலால் தடவித் தடவி எடுத்தான். வலதுபக்க தோள்பட்டையில் சுட்டு விரலை வைத்துத் தடவினாள். அந்த இடத்திலும் விரலால் தடவிவிட்டான் அப்படியே பின் முதுகு முழுக்க அவன் தடவி எடுப்பதற்கு ஏதுவாக முதுகை வளைத்துக் கொடுத்தாள். அவனது விரல்கள் முதுகின் பக்கவாட்டில் இறங்கித் தொட வேண்டும் என்ற தகிப்பு உண்டானது. அவன் தலையையும் நெற்றியையும் தடவிவிட்டபடி ஊதினான். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவன் கத்தியை மரப்பெட்டியில் வைத்துவிட்டு எழுந்து துண்டை எடுத்து தன் கைகளைத் தட்டினான். உடலெங்கும் புதுவிதமான சூடு பரவி ஆவி எழுந்து பறந்தது. விசாலாட்சி சட்டென எழுந்து அவனை இறுகக் கட்டி அணைத்தாள். தாங்க முடியாத கொதிப்பு அவளை நிலைகுலைய வைத்தது. அவன் கழுத்தில் முத்தமிட்டான். “எங்கையாவது அழைச்சிண்டு போயிடு. தினம் தினம் வெந்து சாகிறேன்.” தழுவியபடி முத்தங்கள் வைத்தாள்.

“சாமி, பாட்டி, அம்மா வரப்போறங்க!”

“முண்டனம் செய்ற எடத்துக்கெல்லாம் இப்பொ வரமாட்டாங்க. போதும் இந்த அவஸ்தை. என்னக்கி வருவே? நாளைக்கி? நாளான்னைக்கி?”

“ஐயோ பெரிய பிரச்சனையாயிடும் சாமி!”

“இந்த உடம்பு பெரிய பிரச்சனையா இருக்கே. தீயில வெந்தாதான் தீரும். உனக்காக காத்திண்டிருப்பேன்.”

“வேணாம் சாமி!”

“இங்க இருந்தாதானே.”

அவள் சட்டென விலகி வந்துவிட்டாள்.

***

கரவைக்காரரின் சத்தமும் கன்றின் சத்தமும் மூர்த்தி ஐயர் வீட்டிலிருந்து கேட்டது. சூரியன் மேற்கால் சாய்ந்து வெயிலை இரைக்கிறான். புதுவிதமான படபடப்பும் கொதிப்பும் குளியலோடு காலையில் அடங்கிப்போனது. இனி கெட்ட எண்ணத்திற்கு மனதைச் செலுத்தக்கூடாது என்று பட்டீசுவரரை வேண்டித் திடப்படுத்திக்கொண்டாள். பாட்டியுடன் சுண்டைக்காய்களைப் பிளந்து உப்பில் தொளித்து வற்றல் செய்வதில் மூழ்கினாள்.

மாடியில் போட்ட சுண்டைக்காய்கள் நீர்வற்றி சுருளத் தொடங்கியிருந்தன. உள்ளங்கையை உச்சந்தலையை நெற்றிப்பக்கம் நகர்த்த வழுவழுவென வந்தது. நெற்றியிலிருந்து உச்சியை நோக்கி நகர்த்தும்போது மெல்லிதாக ரோமக்கண்கள் உரசின. செல்வலட்சுமி மாமி வீட்டின் பின் கொல்லை தென்னைமரம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. யாரும் ஏறி காய்களைப் பறிக்க முடியாத உயரத்தில் நிற்கிறது.  மிகப் பழைய மரம். விழுந்து உதிர்ந்தால்தான் ஆச்சு. அக்ரஹாரத்திலேயே தனித்து தெரியும் மரம் அது. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். வயல்களை தோட்டங்களை குத்தகைக்கும் வாரத்திற்கும் விட்டுவிட்டு காரியாலயங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

“எல்லா அக்ரஹார வீட்டிலும் எல்லா வயதிலும் முண்டனம் செய்துகொள்கிற விதவைகள் இருக்கிறார்கள். சுந்தரம் ஐயர் மகள் இப்படி என்று தெரியவந்தால் ஆத்தில நிம்மதி போய்விடும். அப்பாவிற்கு இருக்கிற மரியாதை போய்விடும். தலைநிமிர்ந்து நடக்கமுடியாது. என் துன்பம் என்னோடு சாம்பலாகட்டும். துஷ்டபுத்தி எழாதபடி நல்லெண்ணத்தில் தீபத்தை ஏற்றிவிடு சுவாமி” பட்டீசுவரரை நோக்கி வணங்கிக் கொண்டாள். குளத்தின் மேல் மூன்று கொக்குகள் பறந்து போவது தெரிந்தது.

***

தெருவே திருவிழாக்கோலம் பூண்டதுபோல இருக்கிறது. சந்நிதி தெருவழியாகவும் பின்கட்டு சாலை வழியாகவும் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களும் சிறியவர்களும் ஆர்வத்தோடு போத்தனூர் போய்க்கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்த கவுண்டர்கள் குதிரை வண்டிகளிலும் மாட்டுவண்டிகளிலும் குடும்பம் குடும்பமாக காந்திமகானைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மூன்றாம் ஜாமத்திலிருந்தே ஜனங்கள் கிளம்பிப்போவதாகச் சொல்லிக்கொண்டார்கள்.

நேற்று இரவு “நானும் உங்களோடு வருகிறேன்”  என்றதற்கு  அப்பா மறுத்துவிட்டார். அம்மா கேட்டும், விதவைகள் நல்ல காரியத்தில் முகம் காட்டக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

சி.கே.சுப்ரமணிய முதலியார் கொண்டு வந்திருந்த காரை தாத்தா பார்த்தார். சுந்தரம் தார்ப்பாய்ச்சி கட்டிய வேட்டியை சரி செய்தபடி, “முதலியார், நேத்து இரவு காந்திமகான் என்ன பண்ணினார் தெரியுமா வாளிய தலைக்குப்புற கவிழ்த்துப்போட்டு அதுக்குமேல அரிக்கேன் விளக்க ஏத்தி வச்சு,  ஸ்ரீமான் அவினாசிலிங்கம் செட்டியார் வசூலித்து கொடுத்த ஹரிஜன சேவா நிதியை ரெண்டு தரம் எண்ணிப் பார்த்து மூணு ரூவா கணக்குக் குறையுதேன்னு சொன்னார். அப்படியே செட்டியார் ஆடிப்போய்விட்டார். செட்டியார் பின்ன காந்திஜிகிட்ட உக்காந்து மறுபடி எண்ணி சில்லறைகாசிலிருந்து நேர் செய்தார்.” காரில் ஏறும்போது பெரியசாமி தூரன் முன் நிற்பதைச் சொன்னார்.

***

வீடே வெறிச்சோடி இருந்தது. விசாலாட்சி நார்மடியும் விபூதிப்பட்டையும் துலங்க ஆசாரத்தோடு பூசை அறையின் முன் வணங்கினாள். “காந்திமகான் எப்படி இருப்பார், எப்படிப் பேசுவார்?” பார்க்கவும் பேசவும் ஆசை எழவே செய்தது. வீட்டிற்கு காவலிருக்கச் சொல்லிவிட்டாள் அம்மா.  அவர்கள் காந்தியடிகளைப் பற்றி கொண்டு வரும் செய்திகளை கேட்க ஆவலாக இருந்தாள்.

உச்சி மதியம் கொய்ங்ங்கென ரீங்காரமிட்டபடி பெரிய கருவண்டு விட்டத்து மூங்கில்கழியில் மோதி மோதி எழுந்தது. துவாரம் போடப் பார்க்கிறதா? அடைக்கலம் தேடுகிறதா என்று பார்த்தாள். ஆயிரம் இறகுகள் கக்கத்துப் பக்கம் பறந்ததே விசிறி பறக்க அது வேறொரு மூங்கில் பக்கம் நகர்ந்தது. முத்தமிடுவதுபோல மூங்கிலைத் தொட்டுத்தொட்டு எழுந்த வண்டு டுர்ர் டுர்ர் என தன் கொடுக்கால் அரைக்க பொடியாக உதிர்ந்தது. என்ன நம்பிக்கை!  திரும்பத் திரும்ப மோதிக் குடைந்தது. மூங்கிலின் இறுக்கத்தை பொடியாக்குவதை ஆச்சரியமாகப் பார்த்தாள். ரீங்காரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். லேசாக கண் அசந்தது. கொஞ்சம் கண்ணை மூடினாள்.

பின்கட்டில் கதவு தட்டும் ஓசை கேட்டது. எழுந்து போய் திறந்தாள். நாவிதன் கனகராஜ் நின்றிருந்தான். அவளுக்குத் திக்கென பயம் கவ்வியது. பேசாமல் வெறித்தபடி நின்றிருந்தாள். அவனுக்குத் திருமணமாகி இரண்டு சிறுபிள்ளைகள் உண்டு என்பதெல்லாம் விசாலாட்சிக்கு நினைவுக்கு வரவில்லை.

***

இந்த நேரத்திற்கு மேல் அடிகளாரைப் பார்த்துவிட முடியும் என்று சுண்டக்காமுத்தூர் குளக்கரைச் சாலையில் “மகாத்மா காந்திக்கு ஜே” போட்டுக் கொண்டு போகிறார்கள். கரையின் ஓரங்களில் பனைமரங்கள் அடர்த்தியோடு நிற்கின்றன. இடையிடையே பெரிய புளியமரங்கள். அதனடியில் நொங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெயிலுக்கு முந்தானையை தலைக்குப் போட்டுக்கொண்டு போவதுபோல போனாள். நான்கைந்து பேருக்கு முன் செல்லும் கனகராஜ் கவனித்தபடி சேற்றே பின்தள்ளி போய்க்கொண்டிருந்தான். குளமெங்கும் கருவேல மரங்கள் நீரில் நிற்கின்றன. வெண் கொக்குகள் மரங்களின் மேல் அமர்ந்திருக்கின்றன. மூன்று நாரைகள் மரத்திலிருந்து பறந்து நீரைத்தொட இறங்கின. குளத்தின் மேற்குப்பக்கம் நீர்வற்றிக் கொண்டு இறங்குகிறது. கனகராஜ் சட்டென குளத்தின் மேற்குகரை சரிவில் இறங்கி நடந்தான். ஆடுகளின் குளம்படிகளும் புழுக்கைகளும் தெரிந்தன. ஈரம் காய்ந்த பகுதியில் விழுந்திருக்கும் ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள்.

முக்கால் குளம் நிரம்பியிருப்பது கருவேல மரங்களின் ஊடே தெரிந்தது. இந்தப் பக்கம் எல்லாம் வந்ததில்லை. இப்படி இவனை நம்பி பின்தொடர்ந்திருக்க வேண்டாம் என்ற அல்லாட்டம் தோன்றவும் “திரும்பிப் போயிடலாம்” என்றாள். அவன் நடந்தபடியே கையை மட்டும் “விரைவாக வா” என்பதுபோல காட்டி நடந்துகொண்டே இருந்தான். அடர்ந்த மரங்களும் தனிமையான பாதையும் நடுக்கத்தை ஏற்படுத்தியது. புதிய சிறிய கிளைகளில் காக்கா பொன்முள் விரல் நீளத்தில் வெண்மையாக நீட்டிக்கொண்டிருந்தன. பருத்த கிளைகளில் முள் சிறுத்து புதைந்து கொண்டிருந்தன. யாரேனும் மறித்தால் என்ன செய்வது என்ற பதட்டம் ஆட்டியது. இப்படிக் கிறுக்குத்தனமாக கிளம்பிப்போவது சரியில்லையோ என்ற குழப்பத்தோடு பயந்தபடி நடந்தாள்.

ஈரம் வற்றிய மேற்புரத்தில் அருகம்புல்லும் கோரையும் தளிர்த்திருக்கின்றன. சற்று தள்ளி இருபது முப்பது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. நாய்க்குந்தலாக அமர்ந்திருந்தவன் தடியோடு எழுந்து ஒரு மாதிரியாகப் பார்த்தான். முக்காடை இன்னும் முகம் தெரியாவண்ணம் இழுத்துப் போர்த்தியபடி வேகமாக நடந்தாள்.

தெற்குக் கரை மரங்களின் இடையே தெரிந்தது. வெட்டுக் கிடங்கிலிருந்து இரண்டு குழந்தையோடு தலைநீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென எழுந்து பாதையை நோக்கி வந்தாள். எதையோ நிரப்பிய சாக்குப்பை அவளது கையில் இருந்தது. நெருங்கியபோது கனகராஜின் மனைவி மாசாணி குழந்தைகளோடு நின்றிருப்பதைப் பார்க்க திகைத்து நின்றாள். அவள் வாயில் வரப்போகும் வசைகளைக் கேட்கப் பயந்து கூனிக்குறுகினாள்.  அவளைப் பார்க்கவே முடியாது தரையைப் பார்த்தாள். வசமாக மாட்டிக் கேவலப்படப்போவது திகிலை உண்டாக்கியது.

“வா சாமி. என்னென்னாலும் நான் பாத்துக்கிர்றேன் வெரசா நடந்தாங்க” என்றாள். சாக்குப்பையோடு பெரியவனை கனகராஜ் தூக்கியபடியும் சின்னவனை மாசாணி தூக்கிக் கொண்டும் நடந்தார்கள். மாசாணியின் நடையில் என்னவென்று சொல்லமுடியாத துணிச்சல் வெளிப்பட்டது. பாதையில் கிடந்த முல்லை எடுத்துப்போட்டு நடந்தாள். மாசாணி முன்னமே வந்து பதுங்கியிருந்தது விளங்க முடியாத ஒன்றாக இருந்தது. அவள் என்ன நினைத்தாள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தாள். சொல்லமுடியாத தவிப்பை மிக வெகுசிலர் பரிவோடு தெரிந்துதான் இருக்கிறார்கள். கருவேல மரங்களுக்கு அப்பால் மேடேறும் வரை நன்றாகத் தெரிந்தது.

***

நன்றி: மணல் வீடு

4 comments for “வருகை

  1. Kaliyaperumal Veerasamy
    January 4, 2022 at 7:28 am

    பெண்களுக்கான தவிப்பை அவர்களின் தேவைகளை உடல் உபாதைகளை இச் சமூகம் பல காலமாக மூடி வைத்தும் கண்டுகொள்ளமல் இருந்த சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதாக புனையப்பட்டிருப்பது நலம். காந்தி , வ உசி போன்றவர்கள் வாழ்ந்த காலகட்டத்தையும் மக்களின் வாழும் முறையும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, எப்போதுமே எளியவர்களாலும் கடைநிலையில் உள்ளவர்களால் மட்டுமே மனித மனங்களையும் உடல் சார்ந்த பிரச்சனைகளையும்எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதை மறுபடியும் பதிவு செய்துள்ளர் நன்றி

  2. S.Durairaj
    January 5, 2022 at 12:26 am

    ஜெயகாந்தனின் துணிச்சல் சு. வேணுகோபாலுக்கு

  3. January 9, 2022 at 11:07 pm

    சு. வேணுகோபாலின் கதைகள் பெரும்பாலும் சமூகக் கட்டமைப்பில் ஊறிப்போன பண்பாட்டு மரபை மீறுவதாகவே படைக்கப்பட்டிருக்கும். இக்கதை அவ்வகையானது. கலாச்சாரக் காவலர்களுக்கு கதை வாசிக்கக்கிடைத்தால் உரத்த குரல் எழுப்பி சண்டைக்கு நிற்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. நல்ல வேளையாக அவர்களுக்கு நவீனக் கதைகள் மீதான பார்வை இல்லாமல் போனதோ என்ற சந்தேகம் உள்ளது. முதல் வாசிப்பில், மாசாணம் காந்தியின் வருகையால்தான் மனம் மாறினால் என்று புரிந்துகொண்டேன். ஆனால் அநத மாற்றம் அவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடும் ஒன்றல்ல ஏனெனில் மாசாணி சமூகத்தின் கீழ்த்தட்டைச் சேர்ந்தவள். எனவே இந்தப் புரட்சியை அவள் காந்திய புரட்சி அடிப்படையில் நிகழ்த்தியிருக்க முடியாது. அவள் ஒரு கைப்பெண்ணின் உடற்தேவைத் தொல்லையைக் கணவன் மூலம் தெரிந்துகொள்கிறாள் ஒரு சக பெண்ணாக அந்த இளம் விதவையின் உடற்தேவையைப் புரிந்துகொண்டு தன் கணவனோடு இணைத்துவைப்பதாகக் கதை முடிகிறது. காந்தி கொள்கைக்கு ஈடான ஒரு புரட்சியை சாதாரணப் பெண்ணாக இருந்து நிகழ்த்திகாட்டுவதைத்தான் கதை முன்வைக்கிறது. நூற்றில் ஒரு பெண் இப்படி விட்டுக்கொடுப்பவர்களாக இருப்பாரகள் என எண்ணும்போது கதை நவீனச் சிந்தனைக்கு உட்பட்டதாக அமைந்துவிடுகிறது .

  4. R.JEYABAL
    February 25, 2022 at 1:02 am

    மிக நுணுக்கமாக அக்கால அக்ரகார பெண்களின் வாழ்வை எழுதி இருக்கிறார். சு. வேணுகோபாலின் கதைகள் மனிதர்களின் மேற்பூச்சுகளை சுரண்டி எடுப்பதாக உள்ளது

Leave a Reply to கோ.புண்ணியவான் Cancel reply