“படைப்பாற்றலின் முதிர்ச்சி ஒரே நாளில் வந்துவிடாது”

‘S.E.A Write Award’ எனும் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது 1979-ஆம் ஆண்டுத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இது தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் (ASEAN) கூட்டமைப்பை உள்ளடக்கிய எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் இலக்கிய விருதாகும். தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இவ்விருது தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதோடு, சமகால இலக்கியம் குறித்த பரந்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதையும், பல்வேறு தேசங்களைச் சார்ந்த எழுத்தாளர்களை ஒன்றிணைப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, ஒவ்வொரு நாட்டிலும் ஓர் எழுத்தாளரின் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், நாட்டுப்புறவியல் மற்றும் மதம் சார்ந்த படைப்புகளில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு படைப்புக்காகவோ, அவ்வெழுத்தாளரின் வாழ்நாள் சாதனைக்காகவோ வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருது நோபல் பரிசு போல பல நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் மிகச்சிறந்த ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கப்படும் விருது அல்ல. மாறாக ஆசியான் நாடுகளில் இருந்து ஒவ்வொரு நாட்டின் சிறந்த படைப்பாளிக்கும் விருது வழங்கப்படுகின்றது. அந்தந்த நாட்டு அரசாங்கம் தேர்வு செய்து முன்மொழியும் ஓர் எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. மேலும் மலாய் மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் மட்டுமே மலேசிய சார்பாக இவ்விருதுக்கு பரிசீலிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், இவ்விருது நிறுவப்பட்ட ஆண்டிலிருந்தே தவறாது ஒவ்வொரு ஆண்டும் மலேசியப் படைப்பாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. கடந்த 2020 வரை 42 மலேசிய மலாய் எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர். அவ்வகையில் 2021க்கான விருது கவிஞர் முகமட் ரோஸ்லி நிக் மாட் (Mohd Rosli Nik Mat) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ROSLI K. MATARI என்று மலாய் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுகிறார்.

எழுத்தாளர் முகமட் ரோஸ்லி நிக் மாட், 80-களில் தன்னுடைய இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். ரோஸ்லி கே.மாதாரி எனும் பெயரில் மலாய் இலக்கிய உலகில் அறியப்படும் இவர் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள குபாங் கெரியானைச் சேர்ந்தவர். ஏப்ரல் 5-ஆம் திகதி, 1961-இல் பிறந்த இவ்வெழுத்தாளர், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கலையியலில் பட்டப்படிப்பையும், பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் மொழியில் பட்டயமும் முடித்தார். அதனைத் தொடர்ந்து, பெர்டானா கல்வியியல் கல்லூரியில் அடிப்படைக் கற்பித்தலிலும் பட்டயத்தை முடித்துள்ளார். 61 வயது நிரம்பிய இவர், தொடக்கக்காலத்தில் அகாடமி கெனாலி’ எனும் தனியார் பள்ளியில் 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், 1989-இல், கிளந்தானில் உள்ள ‘மஹாத் அமீர் இந்திரா பெட்ரா’ எனும் இஸ்லாமிய அறக்கட்டளையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு மலாய் மொழி, இலக்கியம் மற்றும் பொது ஆய்வு பாடங்களை  32 ஆண்டுகளாகக் கற்பித்த ரோஸ்லி கே.மாதாரி, 2021ல் கட்டாய ஓய்வு பெற்றார். 39 ஆண்டுக் கால ஆசிரிய அனுபவமுடைய இவர், அதற்கீடாக எழுத்துத் துறையில் அதிக அனுபவமும் ஆற்றலும் மிக்கவராக மலாய் இலக்கியவாதிகளின் மத்தியில் கருதப்படுகிறார். வல்லினம் இணையத் தளத்துக்காக இவரை நேர்காணல் செய்தேன்.

ஜெ. கௌசல்யா

கேள்வி : எழுத்துத் துறையில் தங்களுக்கு எப்பொழுதிலிருந்து  எப்படி ஆர்வம் எழுந்தது?

பதில் : ஆரம்பப் பள்ளி முதலே பல்வேறு இதழ்கள் மற்றும் புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. புத்தகங்களில் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை விரும்பி வாசிப்பேன். அதைத்தொடர்ந்து, இசையமைக்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்பட்டது. ​​நான் படிவம் நான்கு படிக்கையிலே கிளந்தான் எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினரானேன். ஆனால், எனக்கு  இன்னும் 18 வயது ஆகாததால் சிறப்பு உறுப்பினராக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டேன். 1978-இல், நான் படிவம் ஐந்தில் இருந்தபோது, கிளந்தான் எழுத்தாளர்கள் சங்கம் நிகழ்த்திய​​ கவிதை எழுதும் போட்டியில் கலந்துகொண்டேன். எனது கவிதை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்கவிதை உண்மையில் நான் 15 வயதில் எழுதியது, அதாவது நான் படிவம் மூன்று படிக்கும்போது. அந்தக் கவிதை ‘டேவான் சாஸ்திரா’ இதழில் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றிலிருந்து, கவிதைத்துறையில் எனது ஆர்வத்தை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.

கேள்வி : இதுவரையில் நீங்கள் எத்தனை புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்கள்? அப்புத்தகங்களின் பெயர்கள் என்ன?

பதில் : இன்றுவரை நான் எட்டு கவிதைத் தொகுப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். அவை, ‘நுன் புலான்’ (2011), ‘திடாக்கா கித்தா பெராடா டி சானா?’ (2014), ‘கும்புலான் புய்சி ரெமாஜா: அனாக் டுசுன்’ (2014), ‘ஹான்யா லாங்கிட் மெராதாப்’ (2015), ‘மத்தாஹாரி இத்து ஜாவோ’ (2016), ‘அக்கு ஹாருஸ் பெர்கி’ (2018), ‘ஹுஜுங் டான் செலெபாஸ் இத்து லாகி’ (2020) மற்றும் ‘அபாட் க்ரோனிக்’ (2021) போன்றவையாகும்.

கேள்வி : நீங்கள் தற்போது ஏதேனும் கவிதை புத்தகங்கள் அல்லது வேறு ஏதும் புனைவுகளை எழுதி வருகிறீர்களா?

பதில் : எனது சமீபத்திய கவிதைகளைத் ஒரு தொகுப்பாக்க பல கவிதைகளை மதிப்பாய்வு செய்து வருகிறேன். இந்தத் தொகுப்பிற்கு ஒருவேளை ‘டெங்கார்லா குடென்டாங்கான் பாடாமு’ என்று தலைப்பிடுவேன். இத்தொகுப்பில் மொத்தம் 60 கவிதைகள் இருக்கும். நான் எப்போதும் ஒரு கவிதையின் பிரதியை மிக நீண்ட காலத்திற்கு வைத்திருப்பேன். இந்த பிரதிகளில் பெரும்பாலானவை எந்த ஊடகத்திலும் வெளியிடப்பட்டதில்லை. நான் வைத்திருக்கும் பல பிரதிகள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பதானவை.

நானே திருப்தியடையாத படைப்புகளை வாசகர்களுக்கு வழங்க விரும்பவில்லை. அதனால்தான் நான் உருவாக்கிய படைப்பைத் தொடர்ந்து செம்மைப்படுத்த நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறேன். கவிதை என்பது எளிதான கலைப் படைப்பு அல்லவே. எனக்கு இப்போது 61 வயதாகிறது. ஏற்கனவே மூத்த குடிமகன். இருப்பினும், என் ஆயுள் நீண்டது என்று நம்புகிறேன். என் வயது நீண்டதாக இருந்தால், இன்னமும் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடுவேன்.

கேள்வி : உங்கள் படைப்புகள் பொதுவாக எதனைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும்?

பதில் : மற்ற எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களைப் போலவே நானும் பல்வேறு கருப்பொருள்களுடன் எழுதுகிறேன். உதாரணமாகச் சுயம், வாழ்க்கையின் போராட்டம், சமூகம், இயற்கை, அன்பு, பாசம், தெய்வீகம், வெளிநாட்டுப் பயணம், தத்துவம், கலாச்சாரம் மற்றும் உலகளாவிய மனிதகுலம் தொடர்பான கருப்பொருள்களென எல்லாக் கருப்பொருள்களிலும் கவிதையினைப் படைத்துள்ளேன். ஆயினும், நான் அதிகமாக ஆர்வம் காட்டுவது மதம், தெய்வீகம் மற்றும் இஸ்லாம் ஆகிய கருப்பொருள்களிளாகும்.

கேள்வி : நீங்கள் கவிதை, கட்டுரைகள், இலக்கிய விமர்சனம், சிறுகதைகள், வானொலி நாடக வசனங்கள், நாடகம் மற்றும் குழந்தை இலக்கியம் போன்ற பல்வேறு வகையிலான இலக்கியங்களை எழுதியுள்ளீர்கள். அவற்றில் எந்த இலக்கியத்தை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்?

பதில் : ஆம், நான் அந்த வகைகளில் எல்லாம் எழுதுகிறேன். நான் இதுவரை எழுதாதது நாவல் வகை மட்டுமே. எனக்கு நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. ஆனால், நாவல் என்பது காலத்தின் தேவைகளை மையமாகக் கொண்ட ஒரு பெரும்படைப்பு. ஆசிரியராகப் பணியாற்றிய 39 வருடங்களில் அதற்கான நேரம் எனக்குக் கிட்டவில்லை. காலையில், நான் கற்பிக்கிறேன். மாலையில், எப்போதும் கூடுதல் வகுப்புகள் மற்றும் இணை பாடத்திட்டங்கள் உள்ளன. இரவில், மாணவர்களின் பயிற்சிகளை நான் சரிபார்க்க வேண்டும். மேலும், தேர்வு தாட்களைத் தயாரிப்பது, சரிபார்ப்பது போன்ற வேலைகளும் இருந்தன.

பலரின் எண்ணம் என்னவெனில், ஓர் ஆசிரியரின் வேலை மிக எளிமையானது என்றும், நிறைய ஓய்வு நேரம் கிட்டும் என்றும், நீண்ட விடுமுறைகள் இருக்கும் என்பதேயாகும். உண்மையில் அப்படியல்ல. விடுமுறை நாட்களிலும், ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகள் வைத்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். சில நேரங்களில், ‘பள்ளி விடுமுறை’ என்று அழைப்பதன் பயன் என்னவென்று நான் நினைத்துள்ளேன். ஆசிரியர்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்து, தாமதமாகத் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். ஆனால், இப்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். ஒரு நாள், நானும் ஒரு நாவல் எழுத முடியும் என்று நம்புகிறேன். நான் எழுதும் அனைத்து வகைகளையும் இரசிக்கிறேன். இருப்பினும், ஒரே ஒரு வகையை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகக் கவிதையைத் தேர்வு செய்கிறேன்.

கேள்வி : ஓர் எழுத்தாளராக உங்கள் தினசரி வழக்கத்தை விவரிக்க முடியுமா?

பதில் : நான் காலையில் கற்பிக்கப் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதேனும் இலக்கியத்தை வாசிப்பேன். மாலையில், சுமார் 5 மணி முதல் 6.30 வரையிலும் வாசிக்கும் பழக்குமுண்டு. பின்னர், எனது பிள்ளைகளின் பள்ளிப் பயிற்சிகளுக்கு உதவி புரிய நேரத்தை ஒதுக்குவேன். அதே வேளையில், எனது கற்பித்தல் பணிக்கான பொருட்களையும் தயார் செய்வேன். இரவு 11 முதல், 12.30 மணி வரையிலும் நான் ஓய்வெடுக்க வீட்டிற்கு அருகிலுள்ள உணவகத்திற்குச் செல்வேன். ஆனால், வழக்கமாக நான் உணவகத்திலும் காப்பி அருந்திக்கொண்டே வாசிப்பேன். வீட்டில் அதிகாலை 2 மணி முதல், 4 மணி வரையிலும் ஏதேனும் புத்தகத்தை வாசிப்பேன் அல்லது எழுதுவேன். ஒரு நாளைக்குச் சுமார் 2 மணிநேரம் மட்டுமே நான் உறங்குவேன்.

கேள்வி : மலேசியாவில் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருதுக்கான தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிவிக்க இயலுமா?

பதில் : தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் இலக்கியச் சிறப்பை அங்கீகரித்துக் கௌரவிப்பதற்காக  நிறுவிய தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருதானது, சில அளவுகோல்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டவர்களை மதிப்பிட்ட பிறகே வெற்றியாளருக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, ஓர் எழுத்தாளரின் வாழ்நாள் சாதனைகள் மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில்  தேர்ந்தெடுப்பது. மற்றொன்று அவ்வாண்டுக்கான சிறந்த படைப்பினை வெளியிட்ட எழுத்தாளர் எனும் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றது.  மலேசியாவில் இவ்விருதுக்குப் பல எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மலேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் சங்கங்கள், அமைப்புகள் நிறுவனங்கள் போன்ற அதிகாரம்பெற்ற அமைப்புகள் மூலமாகவே இவ்விருதிற்கான விண்ணப்பதாரர்கள் முன்மொழியப்படுகின்றனர். இவ்வாறாகப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனைவரும், மலேசிய தென்கிழைக்காசிய எழுத்தாளர்கள் விருதின் செயலவைக் குழுவினர்களால் தேர்வுப் பட்டியலில் இணைக்கப்படுவர். பின்னர், செயலவைக் குழுவினர்  பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளர்களையும் மதிப்பீடு செய்து, விவாதித்த பிறகே அவ்வாண்டிற்கான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பர். அதனைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர் குறித்து மலேசிய செயலவைக் குழுவினர் ஓர் அறிக்கையைத் தயாரித்து,  தாய்லாந்தில் உள்ள தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருதின் முதன்மை செயலகத்திற்குச் சமர்ப்பிப்பர். தாய்லாந்தின் செயலக உறுப்பினர்களின் மதிப்பீடு மற்றும் ஒப்புதலுக்குப் பிறகே அவ்வாண்டிற்கான வெற்றியாளரின் பெயரை மலேசிய அரசு ‘டேவான் பாஹாசா’ மூலம் அறிவிக்கும்.

கேள்வி : மலேசியாவில் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருதானது தேசிய மொழியில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறதா? அல்லது தேசிய மொழியில் இலக்கியங்களைப் படைக்க வல்ல இதர இன எழுத்தாளர்களுக்கும் இவ்விருது கிட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில் : அப்படியல்ல. மலேசியா ஒரு நல்ல, நியாயமான நாடு. தேசிய மொழியில் இலக்கியங்களைப் படைக்கும் எல்லா இன எழுத்தாளர்களுக்கும் இவ்விருது கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2000-ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்ற ‘லிம் ஸ்வீ டின்’-னை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அவரைப் போலவே, 2006-ஆம் ஆண்டில் இவ்விருதினைத் தட்டிச் சென்ற ‘ஜோங் சியான் லாய்’-யையும் சான்றாகக் கருதலாம்.

கேள்வி : நீங்கள் 2021க்கான தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருதை வெல்வீர்கள் என எதிர்பார்த்தீர்களா?

பதில் : கண்டிப்பாக இல்லை. இவ்விருதினை வெல்வதற்கான தேடலை நான் ஒருபோதும் மேற்கொண்டதுமில்லை ; எதிர்பார்க்கவுமில்லை. ஒருமுறை இவ்விருதிற்காக என்னைப் பரிந்துரைக்கப்போவதாக ஒருவர் என்னிடம் கூறினார். ஆனால், அப்போது நான் அதை கண்ணியமான முறையில் நிராகரித்துவிட்டேன். இம்முறை இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவரே என்னை இவ்விருதிற்காகப் பரிந்துரைத்துள்ளார். டேவான் பாஹாசாவில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்தபோதுதான், நான் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டறிந்தேன்.

கேள்வி : நீங்கள் இதுவரையில் வேறு ஏதாவது பரிசுகள் அல்லது விருதை வென்றுள்ளீர்களா?

பதில் : ஆம், 1989-ஆம் ஆண்டு மலேசிய இலக்கியப் பரிசை வென்றுள்ளேன். உதுசான் மெலாயு-வின் பொது வங்கி இலக்கியப் பரிசை 1990, 1991, 1992, 1993, 1995இல் வென்றுள்ளேன். அதோடு, உத்துசான் குழு இலக்கியப் பரிசை 2011 மற்றும் 2012இல் வென்றுள்ளேன்.  மலேசியன் பிரீமியர் இலக்கியப் பரிசை 2010இல் வென்றேன். கிளந்தான் மாநில கலாச்சாரக் கவுன்சிலால் வழங்கப்பட்ட Kelantan Employee Prize- ஐ 2012 மற்றும் 2014இல் பெற்றேன்.  மலேசியன் பிரீமியர் இலக்கியப் பரிசுகளைத் தொடர்ந்து 2014, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஐந்து வருடங்களிலும் பெற்றேன். நான் வெளியிட்ட ‘Matahari Itu Jauh’ கவிதை நூல், 2014-ஆம் ஆண்டில் ITBM-PENA-BH போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றது. இதற்கிடையில், ‘Tidakkah Kita Berada Di Sana?’ புத்தகம் 2013/2014-க்கான கிளந்தான் மாநில இலக்கிய விருதில் சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2015-இல், நான் கிளந்தான் மாநிலத்தின் ‘சிறந்த கலை கலாச்சார முன்னோடி’ எனும் விருதைப் பெற்றேன். மேலும், 2020-இல், கிளந்தான் மாநில இலக்கிய விருதான ‘சாஸ்டெரவான் நெகிரி கிளந்தான்’ விருதும் எனக்குக் கிட்டியது.

கேள்வி : தொடர்ந்து எழுதுகிறீர்கள். இலக்கியத்தின் மூலம் நீங்கள் வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பதில் : இலக்கியம் என்பது அறிவார்ந்த செயல்பாடு. எனவே, இலக்கியப் படைப்புகளைப் படிக்கும் ஆர்வமுள்ள வாசகர்களை நான் மதிக்கிறேன். இலக்கியப் புத்தகங்களைப் படிப்பவர்களும் அறிவார்ந்த கூட்டமே. இலக்கியத்தைப் பாராட்டவும், ரசிக்கவும்  அவர்களுக்குத் தெரியும்.

இலக்கியம் எனக்கு நிறையப் பயனுள்ள விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. அவை, உணர்திறன், மனிதநேயம், சமூகத்தின் மீதான் அக்கறை, உன்னதமான ஆன்மா, தார்மீக விழுமியங்களின் நுட்பம், மொழித் திறன், சிந்தனை மற்றும் படைப்பாற்றலில் மேம்பாடு, ஆகிய இன்னமும் பல விஷயங்களை நான் இலக்கியம் மூலம் கற்றறிந்தேன்.

கேள்வி : தங்களின் கருத்துப்படி, மலேசியாவில் ஓர் எழுத்தாளர் தனது சித்தாந்தத்தின் அடிப்படையில் முழு சுதந்திரத்துடன் தனது படைப்பை எழுத முடியுமா? மலேசியாவில் படைப்புகள் மீதான தடை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : அனைத்து நாட்டு எழுத்தாளர்களைப் போலவே, இந்நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு வாழ்க்கை, சிந்தனை மற்றும் கருத்தியல் சுதந்திரம் உள்ளது. இருப்பினும், இந்தச் சுதந்திரத்திற்கு அதற்கான விதிகள் மற்றும் வரம்புகள் உள்ளன.

மனிதாபிமானம், சட்டம், மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை யாரும் மீற முடியாது. எனவே, நம் நாட்டில் சுதந்திரம் இல்லை என்று யாராவது கருதினால் அது தவறு. இதற்கிடையில், மத மற்றும் இனவாத உணர்வுகளைத் தொடும் விஷயங்களை மீறக்கூடாது, ஏனெனில், இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அனைத்து இலக்கியங்களும் இதுபோலப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவனவாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். சமூகம், இனம், தேசம், மதம், நாடு ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இலக்கியப் படைப்புகள் படைக்கப்படாமல் இருத்தலே சிறப்பு.

கேள்வி : மலேசிய தமிழ் இலக்கியப் போக்கைப் பற்றிய தகவல்களை நீங்கள் அறிந்துவைத்துள்ளீர்களா?

பதில் : இதற்காக நான் மிகவும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்விக்கு என்னால் சரியாகவும் துல்லியமாகவும் பதிலளிக்க முடியாது. இருப்பினும், நம் நாட்டில் சில இந்திய எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளைப் படைத்து வருவதைப் பார்க்கமுடிகிறது. அதோடு, தொடர்ந்து தமிழில் இளம் எழுத்தாளர்களின் எழுச்சி இருந்துக்கொண்டே இருப்பதை நிச்சயமாகப் பாரட்ட வேண்டும். உதாரணமாக, ராஜ ராஜேஸ்வரி, சீதா ராமன் மற்றும் உதயசங்கர் போன்றவர்களைக் கூறலாம்.

இந்திய, சீன, சயாம் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தேசிய மொழியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்ற முன்வர வேண்டும். உதாரணமாக, ஒரு தமிழாசிரியர் நம் நாட்டின் தேவைகள் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழில் மட்டும் எழுதினால் பெரிய பலன் இல்லை. இதனால், தமிழ் மொழி இலக்கியப் படைப்புகளை எமது நாட்டில் உள்ள ஏனைய இனத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியாது.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய, சீன மற்றும் சயாம் எழுத்தாளர்களும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் அதாவது தேசிய மொழி மற்றும் அவர்களின் தாய்மொழியில் பணியாற்ற வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

தேசிய மொழியில் பணியாற்றுவது உண்மையில் நல்லது, பொருத்தமானது, பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு, தேசிய மொழி ஆட்சி மொழியாகவும், அனைத்து இனங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் தொடர்பு மொழியாகவும், ஒற்றுமையின் மொழியாகவும் இருப்பதால், படைப்பைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும், பாராட்டவும் முடியும். இருப்பினும், படைப்புகள் அந்தந்த தாய்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் தாய்மொழியின் அடையாளம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் படைப்பும் ஒரு பங்கை வகிக்க முடியும்.

கேள்வி : சமகால மலாய் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் : சமகால மலாய் இலக்கியங்கள் நல்ல முறையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு தசாப்தத்திலும், எழுத்தாளர்களின் படைப்புகளின் தரத்தின் அடிப்படையில் நம் நாட்டில் இலக்கியம் வளர்ந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, 30கள், 40கள் மற்றும் 50களில் இலக்கியத்தை ஒப்பிடும்போது, ​​60களில் இலக்கியம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதேபோல, 60களுடன் ஒப்பிடும்போது 70களின் இலக்கியம் மிகவும் மேம்பட்டது. இப்போதெல்லாம், முதிர்ச்சியடைந்த, தரமான படைப்பை உருவாக்கக்கூடிய இளம் எழுத்தாளர்களை நாம் காணலாம், மேலும் சிலர் ரசிக்கக்கூடிய எழுத்து நுட்பங்களைச் செயலாக்குகின்றனர்.

உதாரணமாக, நல்ல இளம் மலாய் எழுத்தாளர்களில் ரோஸ்லான் ஜோமல், ஜைனல் ரஷித் அஹ்மத், மாவார் சாஃபி போன்ற பலரைக் காண்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.

கேள்வி : எழுத்துத் துறையில் அதீத அனுபவமுள்ளவர் எனும் முறையில், இலக்கிய உலகிற்குப் புதிதாக வரும் புதிய எழுத்தாளர்களுக்கு ஏதாவது அறிவுரை கூற இயலுமா?

பதில் : நான் மூன்று முக்கியமான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். முதலாவது, படைப்பாற்றலின் முதிர்ச்சி ஒரே நாளில் வந்துவிடாத காரணத்தால் விடாமுயற்சி முகவும் முக்கியமாகும். இரண்டாவது, பல்வேறு வகையான வாசிப்புப் படிவங்களைத் தொடர்ந்து வாசிப்பதில் உறுதியோடு இருக்க வேண்டும். ஒரு நல்ல இலக்கியம் உருவாக்குவதற்கு, முதலில் எழுத்தாளருக்குப் பரந்த முன்னறிவு தேவை. மூன்றாவது, மற்ற ஆசிரியர்களின் படைப்புகளைத் திருட வேண்டாம், ஏனெனில் இது சுய அழிவை ஏற்படுத்தும். ஒவ்வொரு எழுத்தாளரும் மற்றவர்களின் படைப்பின் மீது சவாரி செய்யாமல் அல்லது நம்பியிருக்காமல் சுயகாலில் நிற்க வேண்டும். சில சமயங்களில் சில இளம் எழுத்தாளர்கள் மத்தியில் இப்படி நடப்பதால், இந்தச் செய்தியைத் தர விரும்புகிறேன். காலப்போக்கில், நீங்கள் செய்யும் அறிவுத்திருட்டு இறுதியில் வாசகர்களுக்கும் தெரிய வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...