மெக்தலீன்

மெக்தலீன் சீடராகச் சேர்ந்த அன்றிலிருந்தே ஜானுக்கு அசூயையாக இருந்தது. நேரடியாகத் தன் குருவிடம் சொல்லவும் தயக்கம்தான். முன்பனிக்காலத்தின் ஓரு மாலை வேளையில் குளிர் கூடத் தொடங்கியிருந்தது. பருத்தியாலான வெள்ளை அங்கியின் மேல் இளநீல சால்வையைப் போர்த்தியவாறு தன் நீண்ட கூந்தல் முன் தரையில் படிந்திருக்க மெக்தலீன் யாழ் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்த அடர் பச்சை நிறக் கருவிழிகள் இமைகளால் மூடப்பட்டிருந்தது. இசை பிரபஞ்சத்தின் எந்த வெளியில் அவள் அந்த அதிர்வுகளைத் துழாவிக் கொண்டிருக்கிறாள் என்றே ஜான் வியந்திருந்தான். குரு கண்களைத் தாழ்த்தியவாறு தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேத்யூ ஏடுகளில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். லூக்கா கண்களை மூடி லயித்திருந்தான். தாமஸ் எப்போதும் போல அசிரத்தையாக உட்கார்ந்து கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். யூதாஸ் மிக அணுக்கமாகக் குருவின் அருகில் அமர்ந்து அவரையே உளம் பொங்க நோக்கிக் கொண்டிருந்தான். ஒவ்வொருவரும் வேறேதோ உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது. ஜான் இசையில் லயிக்க முடியாதபடி அலைக்கழிந்து கொண்டிருந்தான்.

“எழுபதுக்கும் மேற்பட்ட சீடர்கள் சேர்ந்துவிட்டார்கள். யாவரும் துடிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்கள் பன்னிருவரையே நம்பியிருக்கிறேன்” என்று குரு உரையாடல் நிகழ்வை ஆரம்பித்தார்.

“இருக்கிறோம் தந்தையே” என்றான் மேத்யூ.

“நன்று. ஒளியை மானுடத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். மானுடத்தின் மீது கொள்ளும் அதீத அன்பே இந்தப் பாதையில் உங்களுக்கு துணை நிற்க முடியும்” என்று குரு கூறினார்.

“அளவுகடந்த கருணை அதற்குத் தேவை. இல்லையா குருவே” என்று அருகிலிருந்த மெக்தலீன் கூறினாள். அவள் பேச்சே ஜானை எரிச்சல் படுத்தியது.

“அன்பு, கருணை இவற்றையெல்லாங் கொண்டுதான் நீங்கள் சொல்லும் ஒளியை எடுத்துச் செல்ல வேண்டுமா? என்பது எப்போதும் நான் சந்தேகிப்பது” என்று தாமஸ் இடைமறித்தான். “உச்..” என்று மேத்யூ அவனை நோக்கி முறைத்துக் கொண்டே, “மெக்தலீன் சொன்னது போலவே.. வெறும் அன்பு மட்டுமல்ல… மானுடத்தை நோக்கி உளம் பொங்கும் பெருங்கருணையால் மட்டுமே இந்தப் பயணம் சாத்தியமாகும்” என்று குருவை நோக்கி தீர்க்கமாகக் கூறினான். தாமஸ் நமட்டுச்சிரிப்புச் சிரித்துக் கொண்டே அமைதியானான்.

உரையாடல் முடிந்ததும் இரவுணவுக்காக அனைவரும் அமர்ந்திருந்தனர். மெக்தலீன் வேலையாட்களுடன் இணைந்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். சில சமயம் பந்தியில் தீர்ந்துவிடும் இரவுணவைப் பற்றிக்கூட மெக்தலீன் பொருட்படுத்தியதில்லை. அதிகாலை முதல் இரவு கவிழும் வரை அவள் ஏதாவதொரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பதை ஜான் எப்போதும் பிரமிப்பதுண்டு. ஆனாலும் அவளின் மீதான வெறுப்பிற்குக் காரணம் என்ன என்று தன்னையே வினவிக் கொண்டான். பதிமூன்று ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் உலாவுவதே அந்த அசூயைக்கு காரணம் என்பதையும் உள்ளூர அறிந்திருந்தான்.

’நல்ல குடும்பத்துப் பெண்கள் இப்படி ஆண்கள் மத்தியில் இயல்பாக இருப்பார்களா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தான். மறுகணமே அந்த எண்ணம் எத்தனை கீழ்மையானது என்று கடிந்தும் கொண்டான். தாமஸும், சீமோனும் கூட வெளிப்படையாக மெக்தலீனின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதை ஜான் கண்டிருக்கிறான். ஆனால் மெக்தலீனுக்கு இவை பற்றிய எந்தச் சிரத்தையும் இருந்ததாகத் தெரியவில்லை. பசி, பிணி, கள்ளம், காமம், உளநோய், குரோதம், இருள் என ஏழு சாத்தான்களால் கட்டுண்டிருந்தவளைப் பரத்தைமையிலிருந்து மீட்டு தன்னைப் பின்தொடரச் செய்த குருவைக் கண்டடைந்த பிறகு அவள் வேறொருத்தியாகவே மாறிக் கொண்டிருந்தாள். சில சமயம் அவள் பெண்ணென்றே தன்னை உணரவில்லை என்றுகூட ஜான் நினைப்பதுண்டு. எத்தனை சமாதானம் செய்து கொண்டாலும் ஜானால் இந்தச் சிந்தனையிலிருந்து விடுதலையாகிக் கொள்ள முடியவில்லை.

நினைவுகளிலிருந்து மீண்டு மேத்யூவைக் கண்களால் தேடினான். இரவுணவை முடித்துவிட்டு தனது ஓலைகளையும், எழுது பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மேத்யூவை நோக்கி ஜான் விரைந்தான்.

“மேத்யூ அண்ணா… சற்றுப் பேச வேண்டும். நேரம் இருக்குமா?”

“உனக்கில்லாத நேரமா ஜான்! சொல்.. நாளைய விவாதத்தை ஒட்டிய ஏதும் குறு விவாதமா?”

“இல்லை அண்ணா… மனம் குழப்பமடைந்திருக்கிறது. சற்றே தெளிவுப்படுத்திக் கொள்ள உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்.”

ஒரு கணம் தயங்கி நின்று ஜானின் கண்களை ஆழமாகச் சந்தித்தான். சற்றே தன்னிலை மீண்டு ”சரி வா” என்று சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூடத்திற்கு வெளியே நடந்தான். ”ம்.. என்ன! சொல்லு ஜான்..” என்று ஒரு மெல்லிய புன்னகையோடே அவன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டான். பனிக்காலத்தின் கூதல் அவர்களின் சால்வையை பறக்கச் செய்து கொண்டிருந்தது.

நடுங்கியவனாக ”மேத்யூ அண்ணா… இப்போது சொல்லப்போகும் விஷயத்திற்காக நீங்கள் என்னை வெறுக்கக் கூடாது” என்று தவறு செய்துவிட்ட குழந்தை ஒன்று சினுங்கும் முகபாவத்தோடு கேட்டான்.

“இல்லை. இல்லவே இல்லை. என் அன்பின் ஜானே… இங்கிருப்பவர்களில் நீ எனக்கு ஒரு குழந்தை போல. குருவிற்கு அணுக்கமான குழந்தையும் கூட.” என்று தன் கைகளால் ஜானின் தலையை வருடிவிட்டு அவனின் வலது கையை பிடித்துக் கொண்டு மீண்டும் “சொல்..” என்றான் மேத்யூ.

“மெக்தலீன்… அவள் இங்கு நம்முடன் இருப்பதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. அவள் குருவுடன் இத்தனை பிரியமாக இருப்பது எனக்கே அசூயையாக இருக்கிறது. இந்த எண்ணங்கள் என் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன மேத்யூ அண்ணா. சில சமயம் செயலற்றிருக்கச் செய்கின்றது” என பலத்த காற்றடித்து உதிர்கின்ற பழுத்த இலைகளைப் போல கொட்டி விட்டு தரை நோக்கிக் குனிந்தான். எப்படிச் சுரந்ததென்றே அறியாத கண்ணீர்த் துளிகள் அதில் சொட்டியது.

மேத்யூ அவனைப் பற்றியிருந்த வலது கையை எடுத்துவிட்டு நேருக்கு நேராக நின்று அவனை நோக்கி, “ஜான். என்னைப் பார்” என்றான். குளமாகியிருந்த ஜானின் கண்களை நோக்கியபோது மேத்யூ மெலிதாகப் புன்னகைத்தான்.

”உன் மனது கறைபடிந்திருக்கிறது ஜான்”

“கறையா”

“ஆம்! அலகையின் கறை”

ஜான் கண்களைப் பிழிந்து எஞ்சிய கண்ணீர்த் துளிகளை அகற்றிவிட்டுக் கூர்மையான பார்வையை மேத்யூவின் மீது செலுத்தினான். “இதை நீங்கள் அலகையின் சோதனையாக மட்டுமே கருதுகிறீர்களா அண்ணா?” என்று கேள்வி படிந்த முகப்பாவனையோடு கேட்டான்.

“ஆமாம்”

“இந்த அலகை பீடித்த தமையனுக்கு ஏதேனும் சொல்லக்கூடாதா? என் மனம் சஞ்சலமடைந்திருக்கிறது மேத்யூ அண்ணா” என்று கூறி மேத்யூவின் வலது கையைப் பற்றிக் கொண்டான்.

“ஜான்… விசனம் கொள்ள வேண்டாம். குருவைக் கண்டடையும் வரை எத்தனை சந்தேகம் வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டடைந்தபின் தலை கொடுக்க வேண்டுமல்லவா. அவர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்தானே. முதலில் நம்பிக்கை என்ற ஆயுதம் இல்லாமல் இந்த ஆன்மீகப் பணியில் நீ இணைந்திருப்பதே தவறு. நம்முடைய இந்த நூற்றாண்டு, மத அடிப்படைவாதிகளால் சீரழிந்து கொண்டிருக்கிறது. எளிய மக்கள் முடியரசின் ஆதிக்கத்தாலும், கொள்கையில்லா வெற்று அரசியலாலும் அகத்திலும் புறத்திலும் கறை படிந்திருக்கின்றனர். நாம் எதிர்க்க வேண்டிய களம் அதிகம். அதற்கு இடையூறாக இது போன்ற சிறு விஷயங்களில் மனதைச் செலுத்தினால் நம்முடைய ஆன்மீகப் பாதைக்கு அது தடையாக அமையும் என்பதை நீ அறியமாட்டாயா?”

ஜான் ஒட்டுமொத்த எடையையும் இழந்தவன் போல உடல் தளர்ந்து தலை கவிழ்ந்து மெளனித்திருந்தான்.

”யாவற்றையும் விடு. உன் அகப்பயணத்திற்கு இது மிகப்பெரிய தடை இல்லயா? முதலில் சரி செய்ய வேண்டியது உன் கறை படிந்த மனதைதான். இங்குள்ள பதின்மூன்று பேரும் பதின்மூன்று விதமான பின்புலத்தோடு வந்தவர்கள். ஒவ்வொருவரின் தேர்வுக்கான காரணமும் குரு மட்டுமே அறிவார். நீ அதை நம்ப வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இங்கிருந்து சென்றுவிடுவது நல்லது.” என்று வலுவாகக் கடிந்தபின் அவன் தலைகளில் கை வைத்து தடவிக் கொடுத்தான்.

“அன்பின் ஜான். என்ன இதெல்லாம். அதிகாலையில் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி செய்கிறாயல்லவா?”

“இல்லை அண்ணா. என்னால் மனதை ஒருமுகப்படுத்த இயலவில்லை” என்று மெல்லிய துக்கம் தோய்ந்த குரலில் ஜான் முனங்கினான்.

“குரு உன் மீதுதான் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார். உன்னை அவர் மிகவும் நம்பியிருக்கிறார். உன்னை என்பதைவிட உன் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பை.” நீண்ட மெளனத்திற்குப் பின் “அதிகாலை கெத்சமனித் தோட்டத்தில் உனக்காகக் காத்திருப்பேன். சிறு ஜெபம் செய்யலாம். எல்லாம் சரியாகிவிடும் ஜான். காலம் சிறந்த மருந்து.” என்று சொல்லிவிட்டு மேத்யூ நகர்ந்தார்.

”மேத்யூ எத்துனை தூயவன். எந்தக் கீழ்மையான எண்ணமும் ஒரு கணம்கூட தங்கவியலாமல் அருவியில் விழுந்தவற்றை அடித்துச் சென்று நகர்த்திவிடும் நீர் போல இடக்கை சுட்டு விரலால் இது மாதிரியான விடயங்களைப் புறந்தள்ளும் வரம் பெற்றிருக்கிறான்.” என்று ஜான் வியந்தவாறு நிசப்தமான வீதிகளில் நடந்து சென்றான்.

***

“மெக்தலீன் குடி நீரையும், ரொட்டித்துண்டுகளையும் எடுத்து வைத்துவிட்டாயல்லவா?” என்று மேத்யூ இறுதியாக சரிபார்ப்பதற்காகக் கேட்டான்.

“ஆமாம். மேத்யூ அண்ணா. எடுத்துவிட்டேன். இரவு முழுவதும் ஜெபம் செய்திருப்பார். ஒரு மணி நேர உறக்க இடைவேளையாவது வேண்டாமா” என்று கருணை தோய்ந்த குரலில் கேட்டாள்.

மெலிதாகச் சிரித்துக் கொண்டே “எதற்கும் விரிப்புகளை எடுத்து வைத்துள்ளேன். நாம் சென்ற பிறகு அவர் இன்னும் தூக்கமில்லாமல் ஆகிவிடுவார்” என்றான் மேத்யூ.

“அதென்னவோ உண்மை அண்ணா. அதுவும் தாமஸ் வந்துவிட்டால் ஆசிரியருக்கு உறக்கம் தேவையேயில்லை” என்று சிரித்தாள்.

”நேரம் இரண்டிருக்கும் இல்லயா?”

“இருக்கும் அண்ணா”

“இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். மக்கள் வருவதற்கு முன் நாம் சென்றாக வேண்டும்”

“சரி அண்ணா..” என்று அனைத்தையும் சரிபார்த்துவிட்டு குடிலைப் பூட்டிவிட்டு மேத்யூவுடன் நடக்க ஆரம்பித்தாள்.

”மற்ற சீடர்கள் எல்லாம் வந்துவிடுவார்கள்தானே” என்று கேட்டாள்.

“அவர்கள் அனைவரும் நேற்றே மலைக்குச் சென்று தனித்திருந்து ஜெபித்திருந்திருப்பார்கள் அல்லது உறங்கியிருப்பார்கள். ஜான் மட்டும் சீனாயின் அருகிலுள்ள கிராமத்தில் நோய் குணமாக்கும் ஜெபம் செய்யப் போயிருந்தான். அவனும் இப்போது வந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்றான் மேத்யூ.

“ம்…” நீண்ட இடைவேளைவிட்டு “ஜான் மிகவும் வருத்திக் கொள்கிறார் இல்லையா அண்ணா”

சிரித்துக் கொண்டே “ஏதாவது செய்து கொண்டே இல்லையானால் அவனை அலகை பீடித்துவிடுமென பயப்படுகிறான்” என்று கூறி உரக்கச் சிரித்தான். இரவுக்கே உரிய கூர் ஒலி அதை மேலும் உரக்கக் காட்டியது.

அவள் அதை மறுப்பவள் போல “அவர் அன்பின் ஜானல்லவா!” என்றாள்.

மெக்தலீனின் கனிந்த முகத்தைத் திரும்பிப் பார்த்து “உலகுக்கு ஒளியை ஏந்திச் செல்ல அவன் அன்பு இன்னும் கனிய வேண்டும் மெக்தலீன்… உன்னைப் போல” என்றான்.

“அப்படியென்றால்?” எனக் கேட்ட மெக்தலீன், பதில் ஒன்றும் வராததால் பேச்சை நிறுத்திக் கொண்டாள். ஆனால் அந்தச் சொல்லில் பசை ஏறி அவளை ஒட்டிக் கொண்டே வந்தது. பல நாட்களுக்குப் பிறகு தன்னை மூன்றாம் நபராக நின்று கவனிக்க முயன்று தோற்றாள். ‘கனிந்த அன்பு’ என அவள் வாய் உச்சரித்தபடியே இருந்தது.

அதன் பின் அந்தக் கருக்கிருட்டை அவர்கள் மெளனமாகவே கடந்தனர். இருவரும் மலையை அடைந்து அதன் சமவெளியை அடைவதற்குச் சற்று தொலைவிலேயே சிரிப்பொலிகள் கேட்க ஆரம்பித்தது.

“வந்துவிட்டார்கள்…” என்று மேத்யூ புன்னகைத்தபடி சொன்னான். மெக்தலீன் உளம் விரியப் புன்னகைத்தாள்.

அருகே அவர்கள் வரும்போது தாமஸ் அவர்களை நோக்கி கை நீட்டி குருவைப் பார்த்து “இதோ உங்கள் நல்லாயன் வருகிறான்” என்று கூற அனைவரும் உரக்கச் சிரித்தனர். குரு அடிப்பகுதி பருத்து அமைந்த ஆலிவ் மரத்தினடியில் இயற்கையாகவே அமைந்த பாறையில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி தோராயமான அரைவட்ட வடிவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்த பாறையில் பிற சீடர்கள் உட்கார்ந்திருந்தனர். மேத்யூ அருகமைந்ததும் குரு அவனை இறுக அணைத்து உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார். மெக்தலீன் அவர் கால் அருகே இடப்பக்கமாக அமர்ந்து கொண்டு தண்ணீரையும் ரொட்டியையும் பிரித்து வைத்தாள். குரு அவள் தலையைத் தடவியபின் நீரை அருந்தினார்.

வலப்பக்கமாக இருந்த ஜான் அசூயையானதை மேத்யூ கவனித்து அவனருகே வந்தான். அவனை இருகத்தழுவி அவன் கண்களைப் பார்த்து “எல்லாம் நலம் தானே?” என்று பிடியை எடுக்காமல் கேட்டான். கண்கள் கலங்கிய ஜான் ஏதும் சொல்லாமல் இருந்தான். “எல்லாம் கடந்துவிடும் ஜான்.” என்று கூறித் தலையைத் தடவினான்.

“உங்கள் கொஞ்சல்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம். குரு பிரசங்கத்தை ஆரம்பித்தாயிற்று..” என்று தாமஸின் குரல் ஒலிக்க, இருவரும் குரு அமர்ந்திருந்த பெரும்பாறையை ஒட்டி நேர் எதிரே அமைந்த சிறுபாறையின் மேல் அமர்ந்து கொண்டனர்.

ஜான் மயங்கிப் போய் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தான். சீடர்களை நோக்கி சொன்ன வரிகளில் அவனுள் ஆழமாக விழுந்தது “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க!” என்பது தான். “ஒளி.. ஒளி.. ஒளி..” என மனம் மீண்டொலித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய கண்கள் மெக்தலீனை அனிச்சையாக நோக்கின. எதிர்பாராத விதமாக அவளுடைய கண்களும் சந்தித்தன. அதிலிருந்து கருணை மாறாத புன்னகை ஒன்று அவனை நோக்கி வந்தது. வலிந்து அதைத் தடுத்துக் குருவின் கண்களை ஜான் தொட்டான். அது திரளான மக்களை வெறித்திருந்தது. எப்பொழுது நிகழ்ந்ததெனத் தெரியாத பெருந்திரள் குழுமியிருந்ததைக் கண்டு முதலில் ஜான் திகைத்தான். மூச்சொலிகளைத் தவிர பிற சப்தங்களல்லாத திரள் என்று நினைத்துக் கொண்டே மீண்டும் குருவின் கண்களைச் சென்று தொட்டான்.

இப்பொழுதெல்லாம் அவன் கண்களைக் குரு சந்திப்பதில்லை என்ற எண்ணம் அவனில் தொற்றிக் கொண்டது. இருள் சூழ்ந்து கொண்டது போன்ற பிரமை ஏற்பட்டது. கசடுகளை அப்புறப்படுத்தாமல் மீட்பில்லை என்று நினைத்தான். மாலை குருவிடம் அதைச் சொல்லிவிட வேண்டியது என்று முடிவெடுத்தான். அதற்கு முன்னர் இது மாதிரியான சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேட்கும் பேர்வழியான தாமஸிடம் சென்று அறிவுரை கேட்கலாம் என்றும் தோன்றியது.

***

கோடைகால மாலையது. உரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஜான் தாமஸைக் கண்டான்.

”தாமஸ் அண்ணா..”

“என்ன ஜான். மன்னிக்கவும். அன்பின் ஜான்” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவனருகில் வந்து கட்டிக் கொண்டான்.

“அண்ணா.. நான் குருவிடம் வெளிப்படையாகச் சில விஷயங்களை இன்று பேசிவிடலாமென்று இருக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் அறிவுரை கேட்கலாம் என்று தோன்றியது” என்று கறாரான முகப் பாவனையோடு அவனைப் பார்த்தான்.

“ம்… எதைப்பற்றி ஜான். ஆனால் ஒன்று இந்த ஒளி, அன்பு, கருணை இவை எது பற்றியும் இல்லைதானே” என்று கூறி சிரித்தான்.

“இல்லை அண்ணா! மெக்தலீன் பற்றி… குருவுடனான அவளின் அணுக்கம் தரும் அசூயை பற்றி…” என்றான்.

ஆச்சரியமடைந்தவனாய் “ம்… சந்தேகங்கள் வளர்வதைவிடவும் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்வதே அகத்திற்கு நல்லது ஜான். நம்பிக்கை என்ற ஒன்றில்லாமல் ஒரு அமைப்பில் தொடரவே இயலாது என்பது என் எண்ணம். ஒரு காலகட்டத்தின் அறிவியக்கம் சார்ந்தவர்கள் மிகச் சொற்பம் தான். அவர்களுக்குள் ஓர் பின்னப்பட்ட நம்பிக்கை மிகவும் அவசியம். இல்லையேல் எதற்காக ஒரு இயக்கமாகத் திரண்டோமென்ற சிந்தனையே அற்றுப் போகும். நான் அப்படியான எந்தச் சந்தேகங்களையும் மனதில் தேங்கவிடுவது கிடையாது. சில சமயம் பிறருடைய சந்தேகங்களையும் சேர்த்துக் குருவிடம் கேட்டு அவர் சொல்லும் தெளிவுரையால் என் அகத்தைக் கூர் தீட்டிக் கொள்வதுண்டு. உன் சந்தேகம் குருவினால் தெளிவுபடுத்தப்பட்டால் மட்டுமே அகலும்” என்று சொல்லிவிட்டு ஜானைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு நகர்ந்து போனான்.

தாமஸ் சில சமயம் உணர்ச்சியற்றவன் என்று கூட ஜானுக்குத் தோன்றும். எப்படி ஒருவனால் இத்தனை நுண்மைகளைக் கேட்ட பிறகும் அகத்தின் ஆழத்திற்குச் செல்லாமல், மெல்லுணர்வுகளுக்கு இடம் கொடாமல் இருக்க முடியும் என்று வியப்படைவான். ‘தாமஸ் செயலுக்கானாவன். செயல்! செயல்! என திகழ்ந்து கொண்டே இருப்பவன். அவன் அகம் யாரும் நுழைய முடியாதது. அவனும் அப்படி யார் அகத்திற்குள்ளும் நுழைய முற்படுவதில்லை. குருவின் அகத்தையும்கூட. ஆன்மீக அறிவியக்கத்தைப் பற்றிய செயலின் புரிதல் கொண்ட ஒரே மனிதன்’ என்று நினைத்துக் கொண்டான்.

குடிலை அடைந்ததும் எண்ணங்களையும் கேள்விகளையும் தொகுத்துக் கொண்டு கூடத்தின் முகப்பினுள்ளே ஜான் நுழையும்போது, மெக்தலீன் தன் நீண்ட கூந்தலின் முனையில் வாசனை திரவியத்தைத் தோய்த்து குருவின் கால்களில் தடவிக் கொண்டிருந்தாள். குருவின் அழைப்புக்காகக் கதவருகில் தான் முழுவதும் தெரியும்படி ஜான் காத்து நின்றான். மெக்தலீனின் சேவை முடிவில் அவள் குருவின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். அவளுடைய தலையைத் தடவி உச்சி முகர்ந்து அதில் முத்தமிட்டார் குரு. 

திரும்பிச் செல்கையில் கண்கள் பூத்து நிறைந்த மெக்தலீன் ஜானைப் பார்க்காமலேயே கடந்து சென்றாள். ஜானைக் கண்களால் அருகே வரும்படி குரு அழைத்தார். அழைத்த மறுகணம் ஆட்டுக்குட்டியைப் போல அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். அவனை முழுவதுமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு என்ன சொல் என்பது போல அவனின் முகத்தைப் பார்த்தார்.

“குருவே, மெக்தலீன்… ” என்று தயக்கமாக ஆரம்பித்த ஜான் முடிக்கும் முன் வலிந்து உதட்டோரமகச் சிறு அலட்சியமான புன்னகை செய்தார். அதைக் கண்டதும் நிறுத்திக் கொண்ட ஜானின் கண்களைப் பார்த்து,

“ஜான்… உன் மனதின் ஆழத்தை நான் அறியமாட்டேன் என்று நினைத்தாயா? அறிவு கொடுக்கும் தர்க்க புத்தியால் உன் மூளை நிறைந்திருக்கிறது. நீ என் முதன்மைச் சீடர்களில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வேன். ஆனால் மெக்தலீன் என் முன் நிற்பது அறிவினால் அல்ல. தர்க்கத்தால் அல்ல. தூய அன்பினால் மட்டுமே. அது எந்தத் தர்க்கத்தைவிடவும் அறிவைவிடவும் உயர்ந்தது. அது சிலருக்கு மட்டுமே வாய்க்கப் பெறுவது. ” என்றார். 

தன் அன்பைவிட இன்னொருவரின் அன்பு உயர்ந்தது என்று கேட்ட கணமே ஜான் உடைந்து அழுதான். குருவின் கால்களைப் பற்றிக் கண்ணீர் சொரிந்தான். குரு அவனை ஆறுதல் செய்யும் பொருட்டுத் தலையைத் தடவ வரும்போது வெடுக்கென எழுந்து விருவிருவென வெளியே சென்றான். 

குரு அப்போதும் மாறாப் புன்னகையோடு இருந்தார். ஜான் வெளியே சென்றதும் மேத்யூவும் தாமசும் ஒன்றாகச் சேர்ந்து அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர். தாமஸ் நுழையும்போதே “குருவே… நீங்கள் மெக்தலீனைத் திருமணம் செய்து கூடவே வைத்திருக்கிறீர்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் ஒரு ஆண் குழந்தையையும் இந்தக் குருகுலத்துக்கு வாரிசாக வைத்திருக்கிறீர்களாமே… ” என்று கூறி சத்தமாகச் சிரித்துக் கொண்டே வந்தான். 

“அடேய் சந்தேக தாமஸ் நான் ஒரு முக்கியமான கேள்வியோடு வந்திருக்கிறேன். ஓடிவிடு.. ” என்று மேத்யூ தாமஸைக் கடிந்து கொண்டான். 

“குருவே இந்தக் கேள்விகளையெல்லாம் ஊக்குவிக்க வேண்டாம். ஆன்மீகத்தில் ’ஒளி’ பற்றிய ஒரு கேள்வியோடு வந்திருக்கிறேன். அதை முதலில் பார்க்கலாம்.” என்றான் மேத்யூ.

“வா! மேத்யூ இன்று முழுவதுமாக உன் வருகையை எதிர்பார்த்திருந்தேன். வா! என் அருகே” என கைகளை விரித்துக் குரு அழைத்தார். 

“அடேய் மேத்யூ சந்தேகம் மக்களுக்கு மட்டுமில்லை. சீடர்களுக்கும் தான்” என்று அருகிலுள்ள மேஜையில் கைகளை ஊன்றி கீழே அமர்ந்து ஆயாசமாகக் கால் நீட்டி அமர்ந்து கொண்டான் தாமஸ். குரு கைகளை எட்டி தாமஸின் தலையில் தட்ட அதை அவன் மகிழ்வோடு வாங்கிக் கொண்டு புன்னகைத்தான். 

மேத்யூ தலையில் அடித்துக் கொண்டு குருவின் அருகிலுள்ள நாற்காலியில் அவரை நோக்கி உடலைச் செலுத்தி உட்கார்ந்தான். குரு அவனைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்து “ஒளி பற்றி என்ன சந்தேகம் மகனே கேள்” என்றார். 

தாமஸ் இடைமறித்து “குருவே அதற்கு முன் ஜான் இங்கிருந்து அழுது கொண்டே போனதற்கான காரணத்தைப் பற்றி நாம் பேசியே ஆக வேண்டும். பெண்கள் சீடராகத் தகுதி கொண்டவர்கள் தானா. பன்னிரெண்டு சீடர்களுக்கு மத்தியில் உலவும் இவளை ஊரில் மீண்டும் வேசி என்று சொன்னால் நீங்கள் தாங்கிக் கொள்ள முடியுமா? எங்கள் பெயருக்குக் களங்கம் வருவதை விடுங்கள் இந்த அறிவியக்கப் பணியில் உங்கள் பெயருக்குக் களங்கம் வந்தால் இதை நம்மால் நிம்மதியாகத் தொடர முடியுமா? இந்த நிதர்சனக் கேள்வியை எதிர்கொண்டு விட்டு ஒளியைப் பற்றி நீங்கள் பேசலாம்” என்று அடுத்தடுத்துப் பொறிந்து தள்ளிய கடுகுகளைப் போல பொறிந்து பேசி அமைந்தான்.

குரு மேத்யூவின் தோள்களிலிருந்து கைகளை விலக்கி அவன் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். மேத்யூ சங்கடமான புன்னகையோடு குருவை எதிர் கொண்டான். “மேத்யூ மகனே உனக்கு ஏதும் மெக்தலீன் அசூயையை அளிக்கிறாளா?”

“இல்லை குருவே. இல்லை” என்று படபடத்துப் பறக்கும் சிட்டைப் போல பதிலுரைத்தான்.

“உன் பதட்டமே ஆழ்மனதை எடுத்துரைக்கிறது என்பதை நீ அறிவாயா மேத்யூ. இவர்கள் கேட்கிறார்கள். நீ கேட்காமல் நம்பிக்கை என்ற பெயரால் அதை ஒத்திப் போடுகிறாய் இல்லையா?”

மேத்யூ மெளனித்திருந்தான்.

குரு தாமஸை நோக்கி “இனி மேக்தலீன் இழப்பதெற்கென்று ஏதும் இருக்கிறதென்று நினைக்கிறாயா தாமஸ்? அவள் உடலைக் கடந்தவள். அவள் உணர்வுகளில் நான் காண்பது தூய அன்பை மட்டுமே. அடிப்படைவாதிகளோ பெண்களைச் சாத்தான்களாகச் சித்தரிக்கிறார்கள். அதன் மீறலாக இங்கே மெக்தலீன் இருக்கிறாள். அதை நோக்கி எத்துனை பெரிய கல்லடிகள் வந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன். நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல முடியாது. உங்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நீங்கள் இங்கு என்னுடன் நிற்கலாம். இல்லையெனில் விலகிச் செல்லலாம்” என்று திடமாகவும் மிக அரிதாக வெளிப்படும் கோபமான குரலிலும் சொன்னார்.

அறை நிசப்தத்தில் மூழ்கியிருந்தது.

“தந்தையே! இரவுணவு ஒருக்கப்பட்டுவிட்டது. அனைவரும் வரலாம்” என்ற மெக்தலீனின் குரலில் சிறு நடுக்கம் இருந்தது தெளிவாக அறையில் எதிரொளித்தது.

மேத்யூ எழுந்து “இதோ வருகிறோம்…” என்று அவளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு எழுந்தான். அவள் முகம் மேலும் திடமடைந்திருந்ததைக் கண்டான். இனி ஒருபோதும் திரும்புதலில்லை என்பதைக் குறிப்பதான கணம் விரவியிருந்த தீர்க்கமான முகம் அது.

***

குரு இறந்து இரண்டு நாட்களாகிறது. மரணத்திற்கோ வலிக்கோ பயந்து இறுதி நொடியில் குருவைக் கைவிட்டு விட்டோமே என்ற குற்றவுணர்வில் கலிலேயா மலைப்பகுதிகளில் ஜான் பித்தாகி அலைந்து திரிந்தான். வறண்ட அந்தப் பகுதி அவனை மேலும் மேலும் துவளச் செய்தது. தாகமும் பசியுமின்றி உடல் சுருங்கி உளம் கலங்கி புலம்பிக் கொண்டே இருந்தான். 

“எங்கே மறைந்திருக்கிறாய் என் அன்பே!

என்னைக் கைவிட்டாயா

காலத்தை அணைத்துக் கொண்டு

எங்கே மறைந்திருக்கிறாய்? 

ஓ செம்மறியாடுகளே!

அவன் தோள்களை அணைத்துக் கொண்டவர்களே

ஓ மலைகளே! 

காலத்தின் சாட்சியாய் அவனைக் கண்டவர்களே

இனிமையானவன். மென்மையானவன்

ஒரு பொழுதும் யாருக்கும் தீங்கு நினையாதவன்.

மாயமான புன்னகைக்குச் சொந்தக்காரன்

அவனைக் கண்டதும் சிறகு பூண்டு இந்தப் பாவியிடம் வருவீர்களா?

வந்து அந்த நற்செய்தியை அறிவிப்பீர்களா?

கட்டியணைக்க வேண்டும் அவனை

ஒரே ஒரு முத்தம் அவன் கன்னத்தில் கொடுக்க வேண்டும்.”

புலம்பிக் கொண்டே, நடந்து கொண்டே “நான் பாவி ஆசானே. என்னுடையதல்ல உண்மையான அன்பு. எல்லையில்லா அன்பு என்னிடமில்லை என்பதைத் துன்பத்தில் உங்களைக் கைவிட்டபோதுதான் உணர்ந்தேன். என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் தந்தையே!.. கைவிட வேண்டாம். நான் பாவி!..”  அவன் நா குழன்றது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. மாலையின் மயக்கத்தில் அரை துயிலில் அங்கிருந்த பாறையின் மேல் மல்லாந்து படுத்தான். விழித்தபோது அவனை இருள் சூழ்ந்திருந்தது. கண்களை மெல்லத் திறந்தபோது ஒளி அவன் மேல் அழுத்தியது போன்ற உணர்வு கொண்டான். மெல்ல தன்னிலை உணர்ந்தபோது அவை இரவின் பாலையில் துலங்கி வரும் பிரகாசமான நட்சத்திரங்கள் எனக் கண்டான். மனம் வெறுமையாகியிருந்தது. நட்சத்திரங்கள் தெறித்துக் கிடந்த அந்த வானை உற்று நோக்கிக் கொண்டே இருந்தான். பெரு நட்சத்திரம் ஒன்று அவனை நோக்குவதுபோல பிரமை கொண்டான். சுற்றிலும் இருள் கவிந்து அந்த ஒன்றைத்தவிர வேறு ஏதுமில்லை என்ற உணர்வடைந்தான். அது அவனை நோக்கி விரைந்து வந்து கொண்டே இருந்தது. அவனும் அதை நோக்கி விரைந்து பயணித்துக் கொண்டே இருந்தான். கண்களில் நீர் சுரந்திருக்க மெதுவாக “மெக்தலீன்…” என்றான். தன்னிலை உணர்ந்து தான் சொல்லிய சொல் என்ன என்பவன் போல விசை கொண்டு எழுந்து அமர்ந்தான். அந்தச் சொல் அவன் சித்தத்தை எட்டியபோது திகைத்தான். ஒளி தன்னுள் ஊறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். அந்த ஒற்றைச் சொல்லால் இரவின் பாலை மொத்தத்தையும் நிறைத்தான்.

“மெக்தலீன்…” என்று உரக்கக் கத்தினான்.

“மெக்தலீன்… மெக்தலீன்…” என்று சொல்லிக் கொண்டே பாறையை ஓங்கி அறைந்தான். ”அன்பு… ஆம் ஒருபோதும் கைவிட்டுவிடாத அன்பு… எல்லையில்லாத அன்பு… தூய அன்பு… பிரேமை… பெண்மைக்கு மட்டுமே சாத்தியமான பிரேமை.” என பிதற்றினான். வான் நோக்கி கைகளை உயர்த்தி, “ஆம் தந்தையே. என்னைவிட உயர்ந்த அன்பு தான். துன்பத்திலும் உங்களைக் கைவிடாத உயர்ந்த அன்பு. இந்நேரம்கூட அவள் அந்தக் கல்லறையின் அருகில் தானே இருப்பாள். நானோ புழுவைப் போல பதுங்கிக் கொண்டேன். என்னைக் கைவிட்டு விடாதீர்கள் தந்தையே… அந்தப் பற்றற்றவளின் அன்பை அடையும் பாதையே இனி என் வாழ்நாளை உந்தித் தள்ளும் இலக்கு. என்றும் உங்கள் அன்பின் ஜானாக மட்டுமே இருக்க விழைகிறேன்… தந்தையே…” புலம்பிக் கொண்டே ஆற்றல் துவண்டு உறங்கிப் போனான்.

மூன்றாவது நாள் தொலைவில் மெக்தலீனும் மேத்யூவும் வருவதைக் கண்டதும் உடலில் எங்கிருந்து பிறப்பெடுத்து வந்தது எனத் தெரியாத கேவல் வந்து சேர்ந்தது அவனுக்கு. அந்தப் பாலை முழுவதும் அதிரும்படியான கேவல் அது. மெக்தலீனின் உருவம் சமீபத்தில் தென்பட்டதும் சிறு குழந்தையைப் போல் தவழ்ந்து தவழ்ந்து அவள் திசை நோக்கி நகர்ந்தான். மேற்கின் சூரியனை நோக்கிய திசையில் அவளை நோக்கி முழந்தாளிட்டுக் கைகளை உயர்த்தி,

“பிரேமையே! பிரேமையே!….  எத்தனை அதிகமாக நான் அன்பில் கரைந்தாலும் அதைவிட ஒரு மிடறு அதிகமாகவே அருந்தியிருப்பாயல்லவா!” என்று கூறி அவள் கால்களில் விழுந்தான்.

திடுக்கிட்டவளாய் அதே சமயம் அன்னையெனக் கனிந்து முழந்தாளிட்டு அவனை எழுப்பி அவன் கண்களைச் சந்தித்தாள். அவள் தன் உடல் சட்டென ஒளி கொள்வதை உணர்ந்தாள். தனக்கு அது புரிந்துவிட்டதாக அருகில் நின்ற மெத்யூவைப் பார்த்தாள். மேத்யூ மென்மையாகச் சிரித்தார். அதிர்ந்து கொண்டிருந்தவனை தன் மார்போடு அணைத்து மெல்லிய குரலில்,

“அன்பின் ஜான்… நீங்கள் ஒளியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் காலம் கனிந்துவிட்டது.” என்றாள். 

3 comments for “மெக்தலீன்

  1. Eswaran
    July 1, 2022 at 3:05 pm

    நீள் அமைதி அருமை

  2. Kaliyaperumal Veerasamy
    July 6, 2022 at 8:54 am

    குருவின் (ஜெ) செயல் புரிக தத்துவத்தின் இன்னொரு கிளையையும் சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி சரணாகதி அல்லது அதீத அன்பின் வெளிபாடு எப்பொழுதும் வெறுப்பின் வழியே நிகழ்வதே நல்லது சிறந்தது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...