‘பேய்ச்சி’க்குப்பின் நவீனின் இரண்டாவது நாவல் ‘சிகண்டி’. ‘பேய்ச்சி’ நாவல் தடை ஏற்படுத்திய இலக்கிய அதிர்வே ஓயாத நிலையில் நவீனின் இந்நாவல் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து வெளிவந்துள்ளது. ம. நவீனின் படைப்புகளைச் சார்ந்து எதிரும் புதிருமாக ஓர் இலக்கிய வட்டம் காத்திருக்கிறது என்றாலும் அப்புனைவை ஒட்டிய ஆக்ககரமான கட்டுரைகள், விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரமாவது ஆரோக்கியமான இலக்கியச் சூழலுக்குச் சான்று.
இதுவரையில் வெளிவந்த வாசகப் பார்வை யாவும் சிகண்டி நாவலின் பல்வேறு கூறுகளைத் மிகத் துல்லியமாக ஆராய்ந்தே எழுதப்பட்டுள்ளன. அக்கடிதங்களில் பெரும்பகுதி நாவலின் மையத்தை நுணுகியே எழுதப்பட்டிருக்கின்றன. மையதரிசனமும் மைய கதைப்பாத்திரமும் ஈர்ப்பு விசையாக அமைந்து பல்வேறு கோணங்களில் வாசகர்களின் பார்வையை விரித்துச் சென்றுள்ளதைக் காண முடிகிறது.
மலேசிய மண்ணில் நாவல் வரலாற்றில் இதுவரை யாரும் எழுதிடாத திருநங்கைகளின் வாழ்வியலை மையப் பொருளாகக் கொண்டு நாவல் படைக்கப்பட்டுள்ளது. ‘பேரன்னையைச் சரணடைதல்’, ‘பேரன்பின் உச்சம்’, என்ற இரு மைய தரிசனங்களை இந்நாவல் தன்னியல்பாகச் சென்று அடைந்துள்ளது.
‘சிகண்டி’ நாவலில் மூன்று கதைப்பாத்திரங்களின் அழிவுச் சித்திரம் கதையின் முதன்மை பேசு பொருளாகத் தோன்றி வாசகர்களை ஈர்த்துள்ளதைப் பல கட்டுரைகளின் வழி காண முடிகிறது. ‘தீபன்’ வாழ்க்கையின் போதாமைகளையும் புறக்கணிப்புகளையும் புரட்டுகின்ற எச்சமாகவும் சரா பேரன்பின் உருவமாகவும், ஈபு பேரன்னையின் வடிவமாகவும் வாசகர்களிடையே உணர்ச்சி மேலீட்டைத் தூண்டி விடுகிறது சிகண்டி. இவர்கள் வழியாக உருவாகும் கதைச் சுவையில் வாசகனை ஆழ்த்தி விடுகிறது.
வாசகனின் சுவை உணர்வைத் தட்டி எழுப்ப அடிப்படையாக இருந்தது இந்நாவலின் கலைத் தன்மை.படைப்புகளை வாசித்துக் கதைப் போக்கை மட்டும் சிலாகித்துக் கொள்ளுவதால் ஒரு புனைவு மேம்பட்டு விடுவதில்லை.அந்தப் படைப்பின் கலைத் தன்மை படைத்துக் கொடுக்கும் நிகர் வாழ்வனுபவத்தின் நீட்சியே ஒரு புனைவின் சிரஞ்சீவித்துவத்திற்கு அடிப்படையாகின்றது.
கலையின் அடிப்படை நோக்கம் புலனின்பம்.நுகர்வோன் புலனின்பம் அடைய கலையின் உள்ளடக்கமும் உருவமும் இணைந்தே முரண்பாடுகளின்றி இயங்க வேண்டும்.அப்போதுதான் கலை அதன் இலக்கை அடையும். இதில் ஒன்று மிகைப்பட்டு அல்லது குறைந்து போனாலும் கலை அதன் உச்சத்தை அடையாது.
நாவல் இலக்கியம் என்பது மொழியால் ஆன கலை.இதனுடைய பண்பும் செயல்பாடும் பிற கலைகளைக் காட்டிலும் மாறுபட்டது.காட்சி சுவையுணர்வோ அல்லது கேள்வி இன்பமோ அல்லாமல் வெறும் சொல்லடுக்குகளை வாசிப்பதன்வழி கலை படைக்கப்பட வேண்டும்; நுகரப்படவேண்டும்.
சிகண்டியின் கலைத் தன்மை ஒரு பார்வை.
- மையத் தரிசனம் தரும் முழுமை
திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டதே சிகண்டி. இந்நாவலின் மையத் தரிசனமாக வெளிப்படுவது அன்னையிடமிருந்து பேரன்னையைச் சரணடைதல் எனலாம். அடுத்ததாக, பேரன்பின் உச்சம் எடுக்கும் இரு வேறு வடிவங்களைச் சொல்லலாம். கதையின் தொடக்கத்தில் தன் அன்னையை விட்டு பிரிந்து சௌவாட் தெருக்களில் அலையும் தீபன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புகளும் போராட்டங்களும் மீண்டும் அவனைத் தன் அன்னையிடமே தஞ்சமடைய ஆற்றுப்படுத்துகிறது. ஆனால், அந்த எல்லையை மீறி தீபன் ஈபு எனும் பேரன்னையிடம் சிகண்டியாகத் தஞ்சமடையும் தருணமே இந்நாவலின் மைய தரிசனம் வெளிப்படும் இடம்.
அதுபோல, சரா தன்னை முழுப் பெண்ணாக மாற்றிக் கொள்ளும் போராட்டத்தின் இறுதியில் பேரன்பின் பேருருவமாக நிலை கொள்கிறாள். வன்மைக்கும் வக்கரத்திற்கும் அன்பையே ஈந்து சரா தன்னையே இழப்பது பேரன்பின் ஒரு பரிணாமம் என்றால் பிறரைக் காக்க கொலைகள் புரிவது ஈபுவின் இன்னொரு பரிணாமம். சுய அழிவும் அழிப்பும் அன்பெனும் ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்களாக நாவலில் எழுந்துள்ளது.
இவ்வாறு அன்பின் வெவ்வேறு வடிவங்களை விவாதப்பொருளாக்கி அதன் தர்க்க நியாயங்களுடன் வாசகனுக்கு முழுமை உணர்வை வழங்குகின்றது சிகண்டி. இதுவே மைய தரிசனம் கலைத்துவம் பெறும் நிலை.முரண்பட்ட பல்வேறு நிலைபாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அடையும் உச்சமான நிலை. ஒரு போராட்டத்தின், ஒரு வலியின், ஒரு வன்மத்தின், ஒரு ஆசையின், ஒரு அதிகாரத்தின் குரல்களெல்லாம் அந்த மைய தரிசனத்துள் ஒடுங்கும் நிலையில் இந்நாவலின் கதைப்போக்கு ஒரு நிறைவை எய்தி வாசகனுக்கு முழுமையுணர்வை வழங்குகிறது.
- வாழ்வனுபவம் எனும் கலைத் தன்மை
மையத் தரிசன வெளிப்பாட்டை நோக்கி கதை நகர்த்தப்படும்போது அதன் கலைத் தன்மை கலையாது இயங்கவேண்டும்.இதற்கு அடிப்படையானது மையத்தைக் கற்பனைவழி கதையாக்கும் கலை.கலை என்பது நம்மை கற்பனைவழியாக ஒரு வாழ்க்கையை வாழச் செய்வது.இதில் கலைத்துவமானது கதைக்குள் வாழச் செய்யும் அனுபவம். வெறுமனே சொல்லடுக்குகளையும் அழகியல் கூறுகளையும் திணித்துக் கதையைச் சொல்லிச் செல்வது வாழ்வனுபவத்தை ஏற்படுத்தாது.மாறாக, கதையில் இயங்கும் சொற்கள் காட்சிகளைக் காட்டிச் செல்ல வேண்டும்.இதுவே புனைவிலக்கியத்தில் மிக உச்சக் கலைத் தன்மை எனலாம்.
வாசகன் புனைவுகளின்வழி வாழ்பனுபவத்தைப் பெற இரண்டு சாத்தியங்கள் வேண்டும். முதலாவது, அவன் வாசிக்கும் படைப்பானது நம்பகத்தன்மை குறையாத வாழ்வனுபவத்தைத் தரவல்ல படைப்பாக அமைந்திருக்க வேண்டும். அது வாசகனை உணர்வெழுச்சியோடு படைப்பில் பயணிக்கவைக்கும். அடுத்தது, வாசகனின் பங்களிப்பு இன்றியமையாதது மேலோட்டமான வாசிப்பு நாவலின் கலைத் தன்மையை நுகர செய்யாது. சொற்களை வெறுமையாகக் கடந்து சென்று கதையின் போக்கினைத் தெரிந்து கொண்டு இறுதியில் இந்தநாவல் ‘திருநங்கைகளின் வாழ்க்கையைக் காட்டும் நாவல்’ என நிறுவிக் கொள்ளும்.
சிகண்டி நாவலை வாசிக்கும் பொழுது வாழ்வனுபவம் ஏற்படுகிறதா என்றால் கண்டிபாக ஏற்படுகிறது எனலாம். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தீபன், சரா, ஈபு பாத்திரங்கள் நாம் இதுவரை வாழாத வாழ்வனுபவத்தைப் பல உணர்வெழுச்சிகளின்வழி வாழச் செய்துள்ளது. மேல் அடுக்கில் நகரும் கதையோடு கதாப்பாத்திரங்களின் ஆழ்மன கொந்தளிப்புகளையும் சிடுக்குகளையும் தீபனின் பார்வையில் இருந்து வாசகன் புரிந்து கொள்ளமுடிகின்றது. நம்பகத்தன்மை மிக்க சித்தரிப்புகளின் வழி நிகர் வாழ்க்கை அனுபவம் சாத்தியப்படுகின்றது.
2.1 புற வாழ்வனுபவம்
தீபனின்வழி சௌவாட் நிலப்பகுதியின் புற வாழ்வனுபவத்தை 500 பக்கங்களில் நம்மோடு பயணிக்கச் செய்துள்ளது சிகண்டி. கண்களுக்குப் புலப்படாத சௌவாட்டின் இருள் பகுதிகளையும் அதில் உலவும் மனிதர்களின் இயல்புகளையும் மிகத் துல்லியமாக நமக்குக் காட்டப்படுகின்றது.
சிறு வயதில் சைக்கிள் கிடைக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி, சௌவாட் சாலையில் அலைந்து திரிந்து, காராட் பசாரில் வேலைக்குச் சேர்ந்த வாழ்வனுபவம் தொடங்கி காராட் பசாரில் கூவி கூவி பொருள் விற்ற வேளையில் சராவின் அழகில் மயங்கி பின் அவள் திருநங்கை என்று தெரிந்ததும் ஒவ்வாமைக்குள்ளாகி பின்பு ஈபுவின் கைக்கூலியாகியது வரையில் தீபனின் வாழ்வனுபவம் நாவலில் மிக உயிர்ப்புடன் காட்டப்பட்டுள்ளது.
சௌவாட்டைத் தீபனோடு கடந்து செல்லும்போது நம்மீது மலவாடை வீசுவதைத் தவிர்க்க இயலவில்லை. தீபன் பிலிபைன்ஸ் விலைமகளோடு வெறிகொண்டு புணர்ந்த தருணம் தொடங்கி நாவல் நெடுகிலும் நம்மீதும் மலவாடை வீசத் தொடங்குகிறது.
ஆண்மை குறைபாட்டை மீட்டெடுக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த தீபனின் செயல்பாடுகள் வாசகனை வன்மத்திற்குள்ளும் தள்ளிவிடுகிறது. பூஸ்ஸை கொள்வதிலும் சராவைக் கொல்லச் செய்த வன்மங்கள் அனைத்தையும் வாசகன் கடக்க முடியாமல் கடந்து போகின்றான்.
இறுதியில், ஈபுவிடம் மாட்டிக் கொண்ட தீபன் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்த செயல் வாசகனின் அந்தரங்கத்தையும் கூசச் செய்துள்ளது.
2.2 அகவாழ்வனுபவம்
சிகண்டி நாவல் ஏற்படுத்திய அக வாழ்வனுபவத் தாக்கமும் வாசகனை வியப்புக்குள்ளாக்கிறது; அதிர வைக்கிறது. சிகண்டி நாவல் கதைப்பாத்திரங்கள் மனத்துள் நிகழும் மிக நுணுக்கமான உணர்ச்சிகளும் புதிரான விடயங்களும் எந்த எல்லையையும் கடந்து பாயும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. சரா அப்சராவாக மாறி தன்னை மறந்து ஆடிய தருணத்தில் அவள் மனத்துள் ஒன்றிவிட்ட பெண்மை உணர்வை நமக்குள்ளும் கடத்துகிறார் எழுத்தாளர். பெண் உணர்வுக்கும் ஆண் உடலுக்கும் முரண்பட்டுப் பெண்ணாக வாழத் துடிக்கும் சராவின் நிலையில்லா உணர்வலைகள் வாசகனைக் கட்டிப் போடுகிறது. தன்னைப் பெண்ணாக நிறுவிக் கொள்ள தீபனைக் கருவியாக்கத் துடிக்கும் சராவின் தவிப்பை வாசகன் உணராமலில்லை. இறுதியில் தான் தீபனிடம் ஏமாறுகிறோம் என்று தெரிந்தே தன்னை இழக்கும் தருணம், உணர்வுகளின் எந்த எல்லை என்பதை வாசகன் முடிவு செய்யத் தடுமாறுகிறான்.
- உணர்வெழுச்சி எனும் கலை
இவ்வாறு வாழ்வனுபவத்தை மட்டும் வழங்கிவிட்டால் ஒரு படைப்பு கலைப் படைப்பாகி விடுமா?வாகசனை அதிர வைக்கும் மிகை உணர்ச்சிகளின் கோர்வைக்கூட வாழ்வனுபவத்தை வழங்கும்.சிகண்டி நாவலில் பல இடங்கள் வாசகனின் மெல்லுணர்ச்சியைத் தூண்டக் கூடிய தருணங்கள் இருக்கின்றன.அவையாவும் வாகசன் விரும்பும் ஓர் அம்சத்தை மட்டும் மிகையாக்கிக் கொண்டிருக்கும்.
அப்படியென்றால் எந்த உணர்ச்சி ஒரு படைப்பைக் கலைத்துவமாக்குகிறது?நுண்வாசிப்புத் திறம் கொண்ட வாசகன் அடையும் உணர்வெழுச்சியே ஒரு படைப்பைக் கலைப் படைப்பாக்குகிறது. உணர்வெழுச்சி வாழ்வின் ஆதாரமான கேள்விகளைக் கொண்டு புதிய மதிப்பீடுகளை உருவாக்குவதன் வழி வாசகனுக்கு ஏற்படுத்துவதாக இருக்கும்.
சிகண்டி வாசகனை ஒரு மையப் புள்ளியில் சமரசம் செய்து கொள்ள வைக்கவில்லை.மாறாக, தொடர் மதிப்பீடுகளை உருவாக்கிச் செயல்பட வைக்கின்றது. கதையின் இறுதியில் தீபன் பேரன்னையைச் சரணடையும் தருணத்தில் ஏற்படும் உணர்வெழுச்சி வாசகனின் ஆண் பெண் உயிரியல் மதிப்பீடுகளை உடைத்தெரிந்து நீள்கிறது. தீபன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் சரா தன்னை இழக்க முடிவு செய்த தருணம் ஏற்படும் உணர்வெழுச்சி அன்பின் போலி முகங்களை உடைத்தெரிந்து பேரன்பின் தரிசனத்தை வாசகனுக்கு உணர்த்துகிறது.
- சமூகத்தின் முன்முடிச்சுகளை அவிழ்க்கும் கலை
ஒரு சமூகம் தன்னை நிறுவிக் கொள்வதற்கு வாழ்க்கையில் ஒழுக்கம், தத்துவம், நெறி எனப் பல்வேறு முடிச்சுகளை இட்டுக் கொண்டு பயணிக்கிறது. இம்முடிச்சுகளின் பின்னணியில் இருக்கின்ற அறமற்ற தன்மைகள், அரசியல், மனிதநேய சூறையாடல், போலிமைகள் போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் தன்மை கொண்டதாக இலக்கிய படைப்புகள் இருக்க வேண்டும். அவ்வகையில் சிகண்டி நாவல் திருநங்கைகளின் அகப் புற வெளிப்பாடு, பாலியல் பகுப்பு, உளவியல் போன்ற சமூக மதிப்பீடுகளை மீள் விசாரணை செய்கிறது.ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் ஊடாடும் உணர்வெழுச்சியின் விடையில்லா நீட்சியை இந்நாவல் முன்வைக்கிறது. உயிரியல் அடைப்படையில் ஆண், பெண் என்று வகுக்கப்பட்ட உடல் வரையறைகளைத் தாண்டி ஆண்மை மற்றும் பெண்மையின் உணர்வெழுச்சிகளை அசைத்துப் பார்த்து மீள்மதிப்பீடு செய்கிறது சிகண்டி.
ஆண்மையை வன்மத்தால் நிறுவ முயலும் தீபன் இறுதியில் அதிலிருந்து விடுபடுவதும் ஆண்மையை விலக்கி பெண்மையின் உரு கொள்ள முனையும் சரா அது கைக்கூடாமாலே அன்பு கொண்ட பெண்மையின் பேருருவாக மரணித்தலும் ஆண் பெண் சார்ந்த மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த இரு தருணங்கள் உண்டாக்கும் கேள்விகள் நாவலின் மையப் புள்ளியாய் அமைந்து வாசகனை விசாரணைக்குள்ளாக்குகிறது; வாகசனின் பழகிவிட்ட சமூகத்தின் மதிப்பீடுகளை நழுவச் செய்கிறது. அவனுக்குள் ஆண்-பெண் என்ற பாலின வேறுபாடுகளைப் பற்றிய புதியதொரு தேடலை உருவாக்கி விடுகிறது;
- நுண்சித்தரிப்புகள்
பெரிய நாவல்களைச் சாத்தியமாக்குவதில் மொழிநடைக்குப் பெரும்பங்கு உண்டு.பெரும்பாலான நாவல் பேரிலக்கியங்கள் எல்லாவிதமான அலைகளையும் கொந்தளிப்புகளையும் தன்னுள் நிகழ்த்தக்கூடிய வலுவான தனித்துவ நடையால் ஆக்கப்பட்டுள்ளன.இந்நடையின் ஓட்டம் நாவலில் `தரை மட்டத்தில்’ உள்ள பகுதிகளை உச்சங்களுடன் பிணைத்து ஒரு முழுமையையும் சமநிலையையும் உருவாக்குகிறது (ஜெயமோகன் 2009). சிகண்டி நாவல் ஜெயமோகன் மேற்கூறிய மொழித்தன்மைகளைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.இந்த நாவலில் மிளிரும் நுண் சித்தரிப்புகள் தனித்துவமான உணர்வுநிலையை நாவல் முழுக்கப் பரவி நிற்கச் செய்துள்ளது.திருநங்கைகளின் வாழ்வியலை நாவலாக ஆக்கக்கூடிய பொதுவான தனிநடை ஒன்று இந்நாவல் முழுவதும் விரவி இருக்கின்றது.
நாவலின் நுகர்ச்சியை வளமாக்குகின்றது கலை நுண்சித்தரிப்புகள். நாவலின் களம், கதைப்பாத்திரத்தின் தோற்றம், உணர்ச்சி வெளிப்பாடு, காட்சி அமைப்பு போன்றவைகளே ஒரு கதையை நம்முள் கடந்து செல்ல வைக்கின்றது.சொற்களின்வழி கதையைக் காட்சியாக்கி வாசகனை அதனுள் பயணிக்கச் செய்ய வைக்கும் வேலையை நுண்சித்தரிப்புகள் செய்கின்றன.சான்றாக, கதையில் இயங்கும் ஒரு களத்தின் மிகத் துல்லியமான தகவல்கள் வாசிப்பின்வழி காட்சிப்படுத்தப்படுறது.இவ்வகை நுண்சித்தரிப்புகள் கதையில் வரும் களத்தையோ அல்லது சம்பவத்தயோ வெறும் செய்திகளாக அறிவிக்காமல் காட்சிகளாக உயிர்ப்புடன் நுகர உதவுகின்றன.அதோடு மட்டுமல்லாமல், கதையை வளமாக்கவும் துணை புரிகின்றன.
சிகண்டி நாவலில் முதன்மைக் கதைக் களமாக அமைந்த சௌவாட் சாலையின் காட்சி மிகத் துல்லியமாக அமைந்து அச்சாலையின் பல்வேறு நிலைகளை நம் கண்முன் காட்டிச் செல்கிறது.சௌவாட் சாலையின் மையத்தை மட்டும் சொல்லிச் செல்லாமல் அதன் அருகில் இயங்குகின்ற அத்தனை செயல்பாடுகளையும் காட்டுகின்றது நாவல்.அந்தக் காட்சிகள் ஒரு வாசகனின் பார்வையை விரிவாக்குகிறது; சிந்தனை அகலச் செய்கிறது.
கெலிலிங் நுழைவாயிலில் இரும்பு மேம்பாலத்தின்வழி சௌவாட் சாலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் தீபன் இரு மருங்கிலும் வீடற்றவர்கள் படுத்துக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தவாறு கடந்து செல்கிறான். அவர்களின் அவலமும் அச்சமூட்டும் நிலையும் தீபனின் விழி வழி வாசகனுக்குக் கடத்தப்படுகிறது.இதன்வழி வாசகன் சௌவாட் சாலையைச் சார்ந்த வெளிப்பகுதியின் நிலையும் கண்டடைகின்றான்.அங்கு வாழும் மனிதர்களின் நிலை வாசகனுக்கு உணர்த்தப்படுகிறது.சௌவாட் சாலையின் இருள் பகுதிகளையும் வன்மத்தின் உச்சத்தையும் அடைவதற்கு முன்பே இரும்பு மேம்பாலத்தின் காட்சி முன்னோட்டமாக அமைகிறது.கதையோடு பொருந்தி கொண்டு பல விரிவுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மரபார்ந்த நெடுங்கதைகளில் இதுபோன்ற நுண்சித்தரிப்புகளைக் காண்பது அரிது.அவை வெறும் செய்திகளாக மட்டும் கதைப் போக்கினை விளக்கிச் செல்லும்.நவீன நாவல்களின் முக்கிய கலை அமைப்பே நுண்சித்தரிப்புகளின்வழி வாழ்வனுபவத்தை உருவாக்குவதுதான்.அதேவேளை, கதை அமைப்பின்ஆழத்தையும் அகலத்தையும் தேவையான அளவுக்கு மிக விரிவாகக் கொடுத்து வாசகனைக் காட்சியின்வழி வியப்பூட்டுவதுதான் நுண்சித்தரிப்புகள்.
நவீனின் சிகண்டி சமகாலத்தில் எழுதப்பட்ட, அதிக கவனிக்கப்படும் பெரும்நாவல்களில் ஒன்று.பல அடுக்குகளில் அதன் கதையாடல் விரிந்து கிடக்கின்றது. நாகப் பித்தை தேடிச்செல்லும் தீபனின் அலைச்சல் குறுகிய காலப்பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் காமிராவின் சிறு துளையின் வழி அகண்ட வெளியைக் காட்சிப்படுத்துவது போல தீபனின் ஓயாத மனக்கொந்தளிப்புகளின்வழி மிக நீண்ட இறந்த கால கதையை வாசகனுக்குக் கலைநயத்தோடு உணர்த்திவிடுகின்றது. சிகண்டி வாசகனுக்கு விரித்துக் காட்டும் உலகமும் எழுப்பும் தார்மீகக் கேள்விகளும் மிக முக்கியமானவை. வாசகன் அறிந்திறாத என்பதை விட அறிய அக்கறை செலுத்தாத உலகத்தையும் மக்களையும் அப்பட்டமாக கண்முன் காட்டுவதன் வழி சமூகம் நம்மீது ஏற்றிவைத்துள்ள விழுமியங்களை விசாரணைக்குட்படுத்துகின்றது. சுவாரஸ்யமான கதையாடல் வழி வாசகனைக் கட்டிவைக்கவும் அதே நேரம் முழுவீச்சில் உள் இறங்கி நம் ஆழ்மனதை அசைக்கிறது. வாசகனோடு அந்தரங்க உரையாடல் நிகழ்த்துவதன் வழி சிகண்டி ஒரு கலைப்படைப்பாக நிலைகொண்டுவிடுகின்றது.
சிகண்டியின் விரிவான விளக்கம்
நுட்பமான தரிசங்கள் வாசகர்களின் அனுபவம் அனைத்தும் யாரும் கூறாத ஒரு விமர்சனம் . ஒரு குட்டி சிகண்டி பிரதி கச்சிதமாக கைப்பையில் வைத்துக்கொள்ளலாம்.மறுபடியும் படிக்கத்தூண்டுகிறது
விரிக்க விரிக்க விரியும் கம்பளம் சிகண்டி.