இசக்கி

1

“சார் உங்களுக்காச்சும் காசு வெட்டி போடுறதுல எல்லாம் நம்பிக்க இருக்கா?” என்று என் எதிரில் விசாரணைக் கைதியாக அமர்ந்திருந்த மெல்லிய உடல் இளைஞன் கேட்டான். அவன் பேசும் போதே குரலில் பரிதவிப்பு தென்பட்டது. நான் ”உண்டு” எனச் சொல்ல வேண்டும் என்பது போல் அவன் கண்கள் காத்திருந்தன. நான் எஸ்.ஐ. ராஜரத்தினத்தை திரும்பிப் பார்த்தேன்.

அவர் என்னருகே வந்து, ”நாந்தான் சொன்னேன்ல சார் ஆளு பேசுறதெல்லாம் கோட்டி தனமாதான் இருக்கு. ஆனா வில்லங்கமான பார்ட்டியாக்கும். நாலு கொலை பன்னிருக்கான் ஒத்த சாட்சியும் இல்லாம.” என்றார்.

துப்புத்துலக்க விசாரிக்கும் போதுகூட போலீஸ் ஒருவனை குற்றவாளி கண்ணோடுதான் பார்க்கின்றனர். வக்கீல் பணி அதுவல்ல. போலீஸ் யோசித்த கோணத்தில் இருந்து நேர் எதிராக யோசிக்க வேண்டும். கைதிக்கு தன் மனதில் முதலில் நல்லிடம் தரவேண்டும். விசாரிக்கப்படுபவனாகவே மாறி அவன் சென்ற வழியில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் சரியான பாதை தெளிந்து வரும். என் இருபது வருட வக்கீல் தொழிலில் நான் கற்றுக் கொண்ட பாடம் இது. ஒரு வழக்கில் வெடித்த கண்ணிவெடி ஒன்று சிக்கினால், வெடிக்காமல் பல கண்ணிகள் புதைந்திருக்கும். புதைந்திருக்கும் ஒவ்வொன்றையும் தோண்டி எடுக்க வேண்டும். அதுவரை வழக்கை நீட்டிப்பதுதான் என் வழக்கம்.

‘சரவணன்’ எனப் பெயர் தாங்கிய முதல் அறிக்கை ரிப்போர்ட்டை என்னிடம் தந்தார் எஸ்.ஐ. ராஜரத்தினம். அதனை பிரித்துப் படித்தபோது, நாலுமே இயற்கை மரணமென தெளிவுபடுத்தியது. மேற்கொண்டு எல்லாம் கற்பனைக்கு இடமற்ற தட்டையான கதைகள். வழக்கமாக போலீஸ் எழுதும் பாணி.

சரவணன் பொய் சொல்கிறானா என அவனை கூர்ந்து பார்த்தேன். வேகமாக ஒழுகிச் செல்லும் ஆற்று நீரில் அசையாது அமர்ந்திருக்கும் கொக்கைப் போல் அவனிடம் சோர்வும் உறுதியும் ஒருங்கே தென்பட்டது.

“இதுக்கு மேல வேற எதுவும் சொன்னானா?” என எஸ்.ஐ.யிடம் கேட்டேன்.

“இல்ல சார். அதுக்கு மேல வாய தொறக்க மாட்டேங்கான். கல்லுளி மங்கனாட்டம் இருக்கான்.” என்றார்.

நாங்கள் அவனை விட்டு விலகி வந்ததும் ஸ்டேஷனின் சுவரோரத்தில் சாய்ந்து தரையில் அமர்வதை பார்த்தேன். வயது இருபத்தைந்துதான் கடந்திருக்கிறது. பாலகனின் கள்ளம் மாறா முகம். ”இவனைப் பாத்தா நாலு கொலைப்பண்ண மாதிரியா இருக்கு. அதுலயும் எல்லாரும் இவஞ் சித்தப்பா, பெரியப்பான்னு சொந்தக்காரங்க…” என்றேன் எஸ்.ஐ.யிடம்.

அவர் முகம் சுளித்தார். “நாளைக்கே ஆஜர் பண்ணி சார்ஜ் சீட் ஃபைல் பண்ணலாம் சார்” என்றார்.

அவர் இவ்வழக்கை முடிக்க விரும்புகிறார். அதற்கு பப்ளிக் பிராசிக்யூட்டராகிய நான் அத்தாச்சி வழங்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார். சரவணின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த வக்கீலை ஏற்கனவே பேசி சரி கட்டிவிட்டார். என் மனம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இவனது வழக்கு எதேச்சையாகவே என் கண்ணில் பட்டது. தொடர்ந்து ஒரே வீட்டில் நான்கு மரணம் நிகழ்ந்ததைப் பற்றி நாளிதழில் வந்தபோது தான் இந்த வழக்கு என் கவனத்திற்கு வந்தது. அன்று தந்தியின் முதல் பக்கத்தில் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியும், இந்த நான்கு தொடர் மரணங்களும் அக்கம்பக்கம் செய்தியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

போலீஸார் உடனே வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் இவன் சூனியம், காசு வெட்டு என ஏதேதோ உளறவும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினர்.

இவனை முதல்முறை கோர்ட்டில் சந்தித்தபோதே ஏதோ ஒன்று என்னை உறுத்தியது. பதினைந்து நாள் விசாரணை செய்ய ஜட்ஜ் சொன்னதும் எஸ்.ஐ. ராஜரத்தினத்திடம், “இவனத் தீர விசாரிச்சு இவனப் பத்தின மொத்த தகவலும் வாங்குங்க. எனக்கு இவன் பண்ணிருப்பான்னு தோணல. ஆள பாக்க பாவமா இருக்கான்” என்றேன். எஸ்.ஐ யும் அதையே நினைத்தார். ஆனால் இந்த மூன்று நாளாக இவனிடம் இருந்த நிலைத்த உறுதி அவரின் மனதை கலைத்தது. அது என்னையும் சீண்டியது.

எஸ்.ஐ.யிடம் ”சார், இவன் கொலை செஞ்சதுக்கு எந்த சாட்சியும் இல்ல. மொதல்ல அதுலாம் கொலையான்னே தெரியல. டெத் ரிப்போர்ட் படி எல்லாம் நேச்சுரலாதான் இருக்கு. இவனுக்கு எதிரா இருக்க ஒரே சிக்கல் ஏதேதோ இவன் ஒளறுறான்றது மட்டுந் தான். அத தவிர வேற எந்த துப்பும் கிடைக்கல இல்லையா?” என்றேன்.

எஸ்.ஐ. ஈனஸ்வரத்தில், “ஆமா சார்.” என்றார். பல முறை பேசியாகிய ஒன்று. நான் அதனை பேசி பேசி தெளிவு பெற முயன்றேன். ஆனால் பேச்சுகள் எல்லாம் ஒன்றாக குவிந்து ஓரிடத்தில் முட்டி நின்றன.

அவர் என்னருகே வந்து, “செந்தில் சார் இத முடிச்சிக்கலாம். சாட்சிய ரெடி பண்ணிறலாம். பத்திரிக்கை வாய அடக்க இவன் கெடச்சிருக்கான். இவனுக்கு இப்போ கேக்க நாதி இல்ல. இவன் வீட்டில உள்ள ஆம்பளைங்கலாம் செத்தாச்சு.” என்றார்.

ராஜரத்தினம் இந்த வழக்கை மற்றவர்கள்போல் ஒப்பேற்ற நினைக்கவில்லை. அவர் சிறிது விசாரணையும் செய்திருந்தார். இவர்கள் இப்போது இருக்கும் வீடு தெப்பக்குளத் தெருவின் மையத்தில் உள்ள கீழ தெருவில் அமைந்த மத்திய வீடு. ஏழு செண்ட், இரண்டு வீடு, ஒரு கடை என அமைந்த பெரிய நிலம். இவ்வீட்டின் பேரில் எதுவும் வில்லங்கம் இருக்குமா? என்ற கோணத்தில் நான் யோசித்த போது, அவர் எந்தவித சொத்து தகராறும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டினார். இறந்த நான்கு அண்ணன், தம்பிக்குள்ளும் தகராறு கூட இல்லை. விசாரித்ததில் வீட்டில் வேறு எந்த பிரச்சனை இருந்ததும் தெரியவில்லை.

“சார் ஒண்ணு இத மத்த எல்லாதையும் முடிச்ச மாரி நேச்சுரல் டெத்துன்னு முடிக்கணும். ஆனா, இப்போ நாலாவது இவங்க வீட்டுல செத்ததும் எல்லார் கவனமும் இந்த வீட்டு பக்கம் திரும்பிருச்சு. பத்திரிக்கை வேற இத நோண்டிட்டே இருக்காங்க. அவன் நேச்சுரலா சாவுறதுக்கு எந்த வித உடல் கொறையும் இல்லன்னு தெளிவா எழுதி வச்சிருக்காங்க. டெத் ரெக்கார்டுல ஒடம்புல ஏதோ ஷெஷம் பாஞ்சிருக்கலாம்னு சொல்லுது. இப்போ நமக்கு இருக்குற ஒரே வழி இவன ரிமாண்ட் ஆக்கணும். இவன் வேற நமக்கு சாதகமா ஏதேதோ ஒளறுறான். நமக்கு அது போதும்.” என்றார்.

“அதெல்லாம் செரிதான் சார், ஆனா எனக்கு இன்னும் போய் பாக்கலாம்ன்னு தோணுது. இதுல நாம தெளிய வேண்டிய மர்மம்ன்னு ஒண்ணு இருக்கு பாருங்க சார். அது தான் என்ன தடுக்குது. அவன் போக்குலயே பேசி ஏதாச்சும் சொல்லுறானான்னு பாப்போம்” என்றேன். எஸ்.ஐ மௌனமாக திரும்பி உள்ளே நடந்தார்.

2

”இப்படி காசு வெட்டுறதெல்லாம் எங்க தாத்தா சண்முகநாதப் பிள்ளைக்குதான் மொதல்ல நடந்துச்சு சார்” என்றான் சரவணன். அவன் சற்று முன்னேறிச் செல்கிறான். அவனை பேசவிட்டுக் காத்திருந்தேன். முதல் விசாரணையை கிடைத்தவன் சொல்வதில் இருந்து தொடங்குவதுதான் என் வழக்கம். அப்போது தான் முட்டி நிற்கும் வழக்கிற்கான பாதை கிடைக்கும்.

“எங்க தாத்தா அப்போ தூத்துக்குடி மெஜுரா கோட்ஸ்ல மில் கணக்குப் பிள்ளையா இருந்தாரு. ஆள் எப்பவுமே டிப்டாப்பாதான் இருப்பாரு. அந்த காலத்துலயே அயர்ன் பண்ணாத சட்ட போட மாட்டாரு. பாண்ட்தான் போடுவாரு. அவரு மில் சூப்பர்வைசர் ஆன காலத்துல அவருக்கு ஆச்சிய தவர வேற ஒண்ணு அங்க ஆபிஸ்லயே இருந்துச்சு. அவங்கதான் எங்க வீட்டுக்கு காசு வெட்டி போட்டது” என்றான்.

நான் எஸ்.ஐ. யைப் பார்த்தேன். அவர் சரவணன் சொல்லும் கட்டுக்கதையை நம்பாதது போல் முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்துக் கொண்டு பார்த்தார். நான் அவனை மீண்டும் சோதித்தேன். அவன் அதனை நம்பியே பேசிக் கொண்டிருந்தான். அவனை நான் முழுதாக நம்புவதுபோல் முகத்தை மாற்றிக் கொண்டேன்.

சரவணன் சொல்ல தொடங்கினான், ”எங்க பவானி ஆச்சி அவங்களப் பத்தி நெறையா சொல்லிருக்காங்க. அவங்க பேரு ரோஸ்லின். கிறிஸ்துவ பொண்ணு. அவங்க அப்பா அம்மா சின்ன வயசுலயே எறந்ததும் மதம் மாறிட்டாங்க. அதுனால இங்க தூத்துக்குடி மாதா கோவில்ல வளந்திருக்காங்க. கஷ்டப்பட்டுதான் படிச்சு இந்த வேலைக்கு வந்திருக்காங்க. வேலைக்கு சேரும்போது ஒரு பதினாறு, பதினேழு வயசுதான் இருக்கும். இந்த வேலைக்கு வந்ததும் அவங்களோட சுபாவமே மாறிருச்சி. அவங்கதான் தாத்தாவ வளைச்சி போட்டதா கேள்விப்பட்டேன். தாத்தாவுக்கு வயசு அப்பவே இருக்கும் நாப்பதுக்கு மேல. இவங்க சின்னப் பொண்ணு பேச்சுலயும், கவுன் போட்டு வந்த அழகையும் பாத்து தாத்தா மயங்கிட்டாரு.”

நான் அவனை இடைமறிப்பதுபோல் பேச நாவெடுத்தேன். அவன் என்னைத் தடுத்து, “இல்ல இத பின்னாடி எங்க தாத்தா சொல்லி நான் கேட்ருக்கேன். பல நாள் தாத்தா வந்து ஆச்சிகிட்ட அழுவாரு. ’தெரியாம பண்ணிட்டேன். தெரியாம பண்ணிட்டேன்னு. அவ தான் பேசி பேசி மயக்குனா. இனி அங்க போக மாட்டேன்னு சொல்லுவாரு’. அடுத்த நாளே அங்க அவங்க வீட்டுக்கு போயிருவாரு. தாத்தா அவங்கள மேலத்தெருவுல தனியா குச்சு வீடு கட்டி குடி வச்சிருந்தாரு. எங்க வீடு தெப்பக்குளத் தெரு தாண்டி கீழ தெரு. ஆச்சி ஒரு நாள் நடுராத்திரி நேரா மேலத்தெரு வீட்டுலயே போய் நின்னுட்டாங்க. ஊர் கூடிருச்சு. தாத்தா தலைய குனிஞ்சிட்டே வெளிய வந்தாரு. அதுக்கப்பறம் அங்க போறத அடியோட நெறுத்திட்டாரு. அவங்களும் வீட்ட காலி பண்ணிட்டு தென்காசி பக்கம் போனதா செய்தி” என்றான்.

“செரி லே” என எஸ்.ஐ. ஏதோ பேச ஆரம்பித்ததும் அவரை இடது கையால் செய்கைக் காட்டி நிறுத்தினேன். அவரை திரும்பிப் பார்த்தேன். அவர் மன்னிப்பு கேட்பது போல் தலையை குனிந்து கொண்டார்.

அவன் அருகில் இருந்த டம்ளரை எடுத்து தண்ணீர் குடித்தான். அதன் பின், “அவங்க எங்க போனாங்கன்னு எனக்கு ஒரப்பா தெரியல. ஆனா அவங்க போறப்ப முப்பந்தலம் போய் காசு வெட்டிப் போட்டிட்டுதான் போயிருக்காங்க. எங்க ஆச்சி சாவக் கெடக்கும்போது அத சொன்னாங்க. எனக்கு அப்ப அஞ்சு வயசு இருக்கும். எங்க ஆச்சி காலையில வாசக் கூட்டும் போது ரோட்டுல போய்கிட்டு இருந்த காள மாடு முட்டிருச்சு. ஒரு வாரம் படுக்கையில கெடந்தாங்க.

அவங்க படுக்கையில கெடக்கும்போது செலம்பிட்டே தான் இருந்தாங்க. அவங்க சொல்லுகது எல்லா காத்து மாதிரி திரிஞ்சி திரிஞ்சி மறைஞ்சது. எங்க வீட்டுல யார்க்கும் எதுவும் புரியல. அவங்க கண்ணுல பேயக் கண்ட பயம் இருக்கும். ஒரு நாள் எங்க வீட்டில எல்லாரும் திருசெந்தூருக்கு சப்பரம் பாக்க பெயிட்டாங்க. நான் ஒடம்பு செரியில்லாம வீட்டுல கெடந்தேன். அப்ப ராத்திரி. ஆச்சி எந்திச்சி எம் முன்னாடி வந்து நின்னாங்க. அவங்க கண்ணு குழி ரெண்டும் செவந்து போய் நின்னுச்சு. என்ன பாத்து அவங்க, ‘ஏல நம்ம வீட்டுல இருக்கது அவளோட தீட்டாக்கும். அவளாக்கும் நமக்கு காசு வெட்டிப் போட்டது. அவ நம்மள இனி நிம்மதியா வாழ விட மாட்டா. குச்சி வீட்டோட அவ பீடை போச்சுன்னு நினைச்சேன் ஆனா அவ நம்மள வாழ விட மாட்டா. அவளுக்கு நம்ம வீடு வேணும். அவ அனுபவிக்காத வாழ்க்கைய நம்மள வாழ விட மாட்டா. நம்ம குலத்த அடியோட அழிப்பேன்னு எங்கிட்ட தரையில அடிச்சி சபதம் செஞ்சிட்டுதான் அவ இந்த ஊர விட்டே போனா. ஜாக்கரதையா இருங்கல… அவ தீட்டாக்கும், அவ காசு வெட்டி போட்டதாக்கும் அத எடுக்கணும் இல்லென்னா அவ வாழ விடமாட்டா…’ அப்டிண்னு கத்திட்டேதான் தரையில உழுந்தாங்க. மிச்சமிருந்த உசுர சேத்துப்புடிச்சி பேசியிருக்காங்க.

“தாத்தா” என்றேன்.

“ஆச்சி சாகுறதுக்கு சரியா ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் தாத்தாவும் நெஞ்சப் புடிச்சிட்டு செத்தாரு” என்றவன் உடைந்துவிடுபவன் போல் மூச்சை இழுத்துவிட்டான்.

“ஆச்சி சொன்னத நான் வீட்டுல சொன்னப்போ அத யாரும் பெருசா எடுத்துக்கல. எனக்கு மொத கொஞ்சம் பயமாதான் இருந்துச்சி. பயம் கூடவே இருந்தா காலப் போக்குல பழகீரும். அப்பறம் அத பத்தியே நாம மறந்திருவோம். எனக்கும் அப்படி தான் ஆயிடுச்சி. செரியா அது நடந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்க வீட்டுல எல்லாருக்கும் பழைய பிரச்சனை ஞாபகம் வந்துச்சு.” என்றான்.

நானும் எஸ்.ஐ.யும் பார்த்துக் கொண்டோம். அவனிடம், “எப்போ?” எனக் கேட்டேன்.

“ரெண்டு வருஷம் முன்னாடி அப்பா நெஞ்ச புடிச்சிட்டு அப்படியே மல்லாந்தப்ப. ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போறதுக்குள்ள அவரு உசுரு போயிருச்சு. டாக்டர் கார்டியாக் அரெஸ்ட் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்ண்னு சொன்னாரு. எங்க தாத்தாவும் நடுராத்திரியில அப்படி தான் நெஞ்ச புடிச்சிட்டு செத்தாரு. அப்பா செத்ததும் வீட்டுல வளத்த மூணு கறவை பசுவும், கன்னுக் குட்டியும் ஒண்ணா செத்துப் போச்சு. அன்னைக்கி ராத்திரி ஆச்சி எனக்கு கனவுல மறுபடியும் வந்தாங்க. எல்லா சாவும் காசு வெட்டி போட்டதுனாலதான்னு சொன்னாங்க. அப்ப நா வீட்டுல சொன்னதும் தான் எல்லாரும் என்ன நம்ப ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு முறையும் பண்ணாத பரிகாரமில்ல ஆனா எதுவும் பலிக்கல. கேரளாவுல இருந்துல்லாம் மந்திரவாதிய கூட்டியாந்தாங்க ஆனா ஒண்ணும் நடக்கல. அப்பாக்கு அப்றம் ரெண்டு வருசத்துல சித்தப்பா ஒவ்வொருத்தரா செத்தாங்க. எல்லோரும் எங்க தாத்தா செத்த மாதிரியே தான் செத்தாங்க.” என்றான்.

நான் எஸ்.ஐ.யிடம், “அவனோட குடும்பத்துல இருக்குற மத்தவங்களலாம் விசாரிச்சீங்களா?” என்றேன்.

“ஆமா சார், அவங்களுக்கும் இதுல ஒண்ணும் தெரியல. இவன் அம்மா ஒரே அழுக, எங்க வீட்டு பிள்ளைய காப்பாத்துங்கனு. இவன் மட்டுந்தான் ஆம்பளன்னு இந்த வீட்டுல இருக்கான்னு. அவ அழுதே ஓடாட்டம் கரையுறா.” என்றார்.

நான் சரவணன் சொல்வதில் இருந்து யோசித்தேன். என்னால் இதனை இயற்கை மரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லோருடைய சாவில் இருக்கும் ஒரே வகையான பாணிக்குப் பின்னால் ஏதோ சொல்லப்படாத சூழ்ச்சி இருப்பதாக தோன்றியது.

எஸ்.ஐ என்னருகே வந்து, “இவன் ஏதோ உண்மைய மறைக்க இப்டி நாடகம் ஆடுறான் சார். இப்படிலாம் கேட்டா உண்ம வராது. இன்னைக்கி மட்டும் கொடுங்க இவன கேக்க வேண்டிய விதத்துல கேக்கேன். அப்ப கக்குவான் பாருங்க” என்றார்.

நான் இப்போதும் அவன் பொய் சொல்வதாக நம்பவில்லை. அவன் தாத்தாவின் மரணம்போல் எல்லாருடைய மரணமும் நிகழ்ந்ததைப் பார்த்துள்ளான். அவன் ஓவ்வொரு சாவிற்கும் பின்னால் ஏதோ காரணத்தால் ரோஸ்லின் செய்த சூன்யம் இருப்பதாக நம்புகிறான் அல்லது அவளை சார்ந்த யாரோ?

“சார், இந்த ரோஸ்லினுக்கு ஏன் இவங்க வீட்டு மேல கண் இருந்திருக்கக் கூடாது.” என எஸ்.ஐ.யிடம் கேட்டேன். அவர் மறுப்பதுபோல் தலையசைத்தார். அவருக்கு இந்த கேஸை முடிக்கும் தீவிரமும், பிடிவாதமும் இருந்தது.

இத்தகைய சூனியங்களுக்கு பின்னால் இருப்பது குரூரமான மனங்கள், குரூரங்களின் ஆழத்திற்குச் செல்லும் மனக்குகைகள். அவளைப் பற்றி சரவணன் சொன்ன சித்திரத்தில் இருந்து எனக்கு அவள் மேல் சந்தேகம் தொற்றியது. அதுவே என்னை ரோஸ்லினை விசாரிக்கத் தூண்டியது. இவன் சொல்லும் இந்த காசு வெட்டி சூனியம் செய்வதில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சொத்து விஷயத்தில் அவளுக்கும் இந்த வீட்டிற்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ என சந்தேகித்தேன். அவள் இப்போதிருக்கும் நிலையை அறிய விரும்பினேன்.

எஸ்.ஐ.யிடம், “சார், ரோஸ்லின் இப்ப எங்க இருக்கா, இருக்காளா இல்லையானு ஊர்ஜிதப் படுத்திரலாம். அதுக்கு அப்பறம் நீங்க சொன்ன வழிக்கு போலாம்” என்றேன்.

அவர் கறாரான குரலில், “செரி சார். அத விசாரிப்போம் ஆனா அவளப்பத்தி எந்த துப்பும் கெடைக்கலேன்னா நாம இத முடிக்கிறதுதான் உசிதம். நீங்க குறுக்க நிக்காதீங்க.” என்றார். நான் அவரை ஆமோதிப்பது போல் தலையசைத்தேன்.

3

எஸ்.ஐ.யும், நானும் ரோஸ்லினை பற்றிய தகவல் சேகரிப்பதில் இறங்கினோம்.  முதலில் நாங்கள் மாதா கோவிலில்தான் விசாரித்தோம். நாற்பது வருட பழைய ரெக்கார்ட்ஸை தேடி எடுத்தனர். அவர்கள் தேடி எடுத்ததில் அவள் மெஜுரா கோட்ஸில் வேலைக்கு சேர்ந்ததும் சர்ச்சை விட்டு விலகிவிட்டாள் என்பது தெரிந்தது.

அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டு சர்ச் விலக்கி வைத்துள்ளனர். அதனை அங்கிருந்த என் நண்பர் ஃபாதர் ஜேக்கப்தான் என்னிடம் சொன்னார். ஜேக்கப்பிற்கு அவருடைய வழக்கு ஒன்றில் நான் உதவி செய்திருந்தேன். அதன் அடிப்படையிலேயே விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு நீண்ட தயக்கத்திற்கு பின் என்னிடம் சொன்னார்.

அங்கிருந்து மேலத் தெருவில் உள்ள குச்சி வீட்டை சென்று பார்த்தோம். அதில் இப்போது வேறு யாரோ குடியிருந்தனர். குச்சு வீடு மாறி டைல்ஸ் போட்ட நவீன வீடாகியிருந்தது. ஆறு கைகள் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு பத்திரமாக தேடித் தேடி மூலத்தை அடைந்தோம். பத்திர ஆபிஸில் விசாரித்தோம். அப்போது இங்கே ப்ரோக்கராக இருந்த முருகேசன் மட்டுமே இப்போது உயிரோடு இருந்தார். அவரை சென்று பார்த்தோம். அவருக்கு முதலில் ஞாபகம் வரவில்லை ரோஸ்லின் பேரைச் சொன்னதும் நினைவு கூர்ந்தார்.

அவர், “ஆமா சார், ரோஸ்லின், அவ தான் சார் இவர அழிச்சது. நல்ல மனுஷன் சார். நல்ல வேலை, குடும்பத்தோட நல்லா வாழ்ந்திட்டு இருந்தாரு. அவ தான் சார் இவருக்கு காசு வெட்டி போட்டது” என்றார்.

எஸ்.ஐ. எரிச்சலுடன், “நீயும் சும்மா கதைய கெட்டாதயா” என்றார்.

“சார் கத இல்ல நெசந்தான். உங்களுக்கு வேணுன்னா இதுலல்லாம் நம்பிக்க இல்லாம இருக்கலாம் ஆனா பிள்ளை வேரோட சரிஞ்சதுல இருந்து என்னால இத நம்பாம இருக்க முடியல. அவரு யெறந்து இருபது வருஷம் இருக்கும். இன்னும் நா நெனைவு வச்சு சொல்லுறேன்னா பாருங்க. இப்பதான் இதெல்லாம் கொறஞ்சிருச்சி அன்னைக்கெல்லாம், காசு வெட்டிப் போட இங்க இருந்து யாருக்கும் தெரியாம முப்பந்தலம் கெளம்பி போவாங்க.” என்றார்.

“முப்பந்தலம் எதுக்கு?” நான் கேட்டேன்.

“முப்பந்தலம் யசக்கிக்கு தான் சார் பொம்பளைங்க காசு வெட்டி போடுவாங்க. அங்க நாமலாம் போய் பாக்க முடியாது சார். நானே கதையா தான் கேட்ருகேன். அது யசக்கிக்கும் பொம்பளைங்களுக்கும் உள்ள கணக்காக்கும். கோவிலுக்கு போய் காசு வெட்டி அதுல மூணு சொட்டு ரெத்தத்த போட்டிட்டு வந்தாங்கன்னா அவங்க நெனைச்சது ஒடனே நடக்கும். இந்த ரோஸ்லின் இங்க இருந்து கெளம்பி போகும் போது பிள்ளை வீட்டு மேல காசு வெட்டி போட்டிட்டுதான் போனான்னு பேச்சு.

அவ தான் இவர கைக்குள்ள போட்டு வச்சிருந்தா. அவ மேல அன்னைக்கி விழுந்த மோகம் இவருக்கு கடேசி வரத் தீரவே இல்ல. அதுனாலேயே அவரு அழிஞ்சாரு. நல்ல மனுசன், அவா இங்க இருந்து தென்காசில்ல உள்ள மேலகரத்துக்கு போன பின்னாடியும் இவரு மாசாமாசம் போய் பாத்திட்டுதான் வருவாரு. சிலப்பம் போய் காசும் கொடுக்குறது உண்டு. ஆனா அவ அங்க வசதியாதான் இருந்தா. அத அவரே எங்கிட்ட அழுதுட்டே சொல்லுவாரு. கடைசி வரைக்கும் அவ இவர விடலன்னு தான் சொல்லனும். இவர வசியம் பண்ணி வச்சிருந்தா” என்றார்.

அவர் சொன்ன துப்பு எங்களுக்கு உதவியது. மேலும் அவளது சின்ன வயது போட்டோ ஒன்றை ஜேக்கப் குரூப் போட்டோவில் இருந்து எடுத்து தந்திருந்தார். அவர் சொன்ன அடையாளத்தில் இருந்து, நான் தென்காசியில் உள்ள என் நண்பன் சுந்தரத்திடம் மேலகரத்திற்கு சென்று அவள் வீட்டை விசாரிக்கச் சொன்னேன். அவன் ஒரே வாரத்தில் விசாரித்து அட்ரெஸ் அனுப்பியிருந்தான்.

ரோஸ்லின் மேலகரத்தில் பண்ணையார் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாள். பிள்ளை இறந்ததும் மேலகரத்து பண்ணையாருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டிருந்தாள். அவள் பெயரை ’ராசாத்தி’ என மாற்றம் செய்துக் கொண்டாள். இப்போது பண்ணையாரும் உயிரோடு இல்லை.

நாங்கள் வீட்டிற்கு சென்றபோது மத்திய வயது பெண்மணி வந்து கதவைத் திறந்தாள். நான் கற்பனை செய்த உடல் பிதுங்கிய கன்னம் பெருத்த பெண்ணாக இல்லாமல் மத்திய வயதிலும் உடலில் அழகும், குழைவும் குலையாமல் இருந்தாள். கதவை திறந்தவள் என்ன என்பது போல் எங்கள் இருவரையும் கேள்வி கண்களால் பார்த்தாள்.

நான், “ரோஸ்லின்” என்றேன். அவள் முகம் சுருங்கியது. ஒருவரிடமிருந்து நிஜத்தை வரவைக்க எப்போதும் இந்த முதல் அடியை பிரயோகிப்பது என் வழக்கம். அவள் தலைகுனிந்தாள்.

“சண்முகநாதப் பிள்ளையப் பத்தி கொஞ்சம் உங்கட்ட பேசணும்” எஸ்.ஐ. சொன்னதும் அவள் முகம் மேலும் வாடியது. உள்ளே வரும்படி செய்கைக் காட்டினாள்.

எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்குச் சென்றாள். செல்லும் போது, “கீழ வேண்டாம் பசங்க வீட்டில எல்லாரும் இருக்காங்க… தெரிஞ்சா பெரச்சனையாயிரும்.” என்றாள்.

அங்கே சென்றதும் அவளே பேசத் தொடங்கினாள், “அவர நான் விட்டு வந்து இருவது வருஷத்துக்கு மேல ஆகுது. அவருக்கும் எனக்கும் எப்பவோ கணக்கு தீந்திருச்சு. நான் இங்க புது குடும்பத்தோட நிம்மதியா வாழ்க்கைய நடத்திட்டு இருக்கேன்.” என்றாள்.

ராஜரத்தினம் அவளிடம், “நீ காசு வெட்டி போட்டு தான் அவரு செத்தாருன்னும். அவரு சாவுல மர்மம் இருக்குறதா அவங்க வீட்டுல கம்பிளைன் கொடுத்திருக்காங்க.” என்றார்.

அவள் நாங்கள் அதனைச் சொல்வோம் என எதிர்பார்க்கவில்லை. அது அவளைப் பற்றி நாங்கள் முழுதும் விசாரித்து தான் வந்திருக்கிறோம் என புரிய வைத்தது.

அவள் முழுவதுமாக தளர்ந்தாள். “என்ன ஜீவிக்க விடுங்க நான் இப்போதான் வாழுறன். என்ன ஜீவிக்க விடுங்க. எனக்கும் அவங்க குடும்பத்துக்கும் சம்பந்தம் அத்துப் போய் பல வருஷம் ஆகுது. இன்னும் என்னை ஏன் அந்த குடும்பத்தோட இழுக்குறீங்க. என்ன வாழ விடுங்க” எனக் கதறினாள். அத்தனை கதறலிலும் அவள் சத்தம் மேலெழாமல் ஜாக்கிரதையாக ஒலித்தது. ஆனால் அழுகையில் போலித்தனம் இல்லை.

நான் அவளிடம், “இது முடிஞ்சு போன பழைய கேஸ். நாங்க உன்ன தொல்லை செய்ய வரல்ல. எங்களுக்கு ரெண்டு கேள்விக்குதான் பதில் தெரியணும். அதுக்கப்பறம் உன்ன தொல்ல செய்ய மாட்டோம்” என்றேன். அவள் கண்களில் நீர் கசிய, ”என்ன?” என வினவினாள்.

”ஒனக்கு சண்முகநாதப் பிள்ளை உயிரோட இருந்த காலத்துலயே இந்த பண்ணையார் கூட தொடர்பு இருந்துச்சில்ல?” என்றேன்.

அவள் அழுகையை விடுத்து மௌனமாகத் தலை குனிந்தாள்.

“நீ தூத்துக்குடி குச்சு வீட்ட விட்டு வந்தப்ப அவங்க குடும்பத்துக்கு முப்பந்தலத்துல காசு வெட்டி போட்டியா?” என்றேன்.

அவள் மறுப்பதுபோல் தலையசைத்தாள். எஸ்.ஐ அவளிடம், “உண்மைய சொன்னா தான் நாங்க திரும்ப வர மாட்டோம். உனக்கு அவரோட சொத்து மேல கண்ணு இருந்துச்சுல்லா?” எனக் கேட்டதும் ஒப்புக் கொண்டாள்.

“ஆமா நான் காசு வெட்டி போட்டது நெசந்தான். ஆனா பின்னாடி அவரே ஒண்ணுமில்லாம தளந்துட்டாரு. எனக்கு அதுக்கு மேல அவர்கிட்ட எந்த தேவையும் இல்ல. நான் இந்த வீட்டோட ஒண்டி வாழ ஆரம்பிச்சிட்டேன்.”

நாங்கள் அவள் மேலும் பேசும்படி அமைதியாய் இருந்ததும் தொடர்ந்தாள், “ நான் வெட்டிப்போட்ட காச நானே எடுத்துட்டேன். இது எல்லாமே கணக்குதான். என்ன இருந்தாலும் தெய்வதுக்கும் கணக்கு இருக்குல்ல. இல்லென்னா எத நெனைச்சு வெட்டுனேனோ அது என்ன திரும்பத் தாக்கும்னு பூசாரி சொல்லி தான் வெட்டுனாரு.” என்றாள்.

நான் “எப்போ?” எனக் கேட்டேன்.

அவள் சிறிது மௌனத்திற்கு பிறகு, “அந்த ஆள் இறந்த அடுத்த நாளே எடுத்துட்டேன்” என்றாள்.

நான் அவளிடம் பழைய கதையை தோண்டி எடுக்க விரும்பவில்லை. சண்முகநாதப் பிள்ளை இருபது வருடம் முன்னால் முடிந்து போன கணக்கு. மேலும் இப்போது அதனை நிரூபணமான குற்றமென கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. தற்போது அவளுக்கு பிள்ளையின் குடும்பத்துடன் ஏதும் பகை இருக்கிறதா எனப் பார்த்தேன். அவள் பொய் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சொல்லவேண்டியதில் சிலவற்றை மறைக்கிறாள் எனப்பட்டது. தற்போது நடந்த கொலைகளுக்கு அது எதுவும் உதவாதென்பதால் அங்கிருந்து கிளம்பினோம்.

4

தூத்துக்குடி திரும்பிய போது எனக்கு ரோஸ்லினை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. அவள் இந்த குடும்பத்தை விட்டு வெகுதூரம் விலகி சென்றிருந்தாள். அவள் ஆட வேறு களம் அமைந்திருந்தது. சண்முகநாதப் பிள்ளை உயிரோடு இருக்கும் வரையே அவளுக்கு இந்த களம் உவப்பாக இருந்திருக்கிறது. அவர் இறந்ததும் அவள் மொத்தமாக இங்கிருந்து விலகிவிட்டாள். இவ்வழக்கை சொத்து பிரச்சனை என்ற ஒரே கோணத்தில் யோசிக்கிறேனோ எனத் தோன்றியது. ரோஸ்லின் வந்து இதனை திசை திருப்பி விட்டாளோ? எனப்பட்டது.

சரவணனின் கடைசி சித்தப்பாவை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ரமேஷிடம் விசாரித்தேன்.

அவர், “அது அன்னெச்சுரல் டெத் தான். ஆனா நேச்சுரலா இருக்குறதுக்கும் வழி இருக்கு. ஏன்னா நான் போஸ்ட்மார்டம் செய்யும்போது அவரு உடம்புல எந்த வெஷமும் இருந்ததா எனக்கு தெரியல. இது ஒரு வகையான ரேர் கார்டியாக் அரெஸ்ட் தான்னு சொல்லத் தோணுது. ஆனா தீர்க்கமா முடிவுக்கு வர முடியல”. என்றார்.

ரமேஷ் அதே பதில்தான் மற்ற எல்லோரின் போஸ்ட்மார்டத்தையும் படித்துவிட்டும் சொன்னார். நான் ரமேஷிடம் சரவணன் சொன்னதை பற்றிச் சொன்னேன்.

“டாக்டர் இந்த காசு வெட்டி போடுறதெல்லாம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.” என்றேன். அவர் பதிலுக்கு புன்னகைத்தார்.

நான், “எனக்கும் இதுலலாம் பெருசா நம்பிக்க கெடையாது. ஆனா இதுக்கு பின்னாடி இருக்குற மைண்ட் இருக்கு பாருங்க அது என்ன தொந்தரவு பண்ணிட்டு இருக்கு. ரோஸ்லின அவ வீட்டுல போய் பாத்தப்ப எனக்கு அந்த டிஸ்டர்பன்ஸ் உணர முடிஞ்சிது.” என்றேன்.

அவர், “மெடிக்கல்ல சில ஊகங்கள தான் சொல்ல முடியும் அதுக்கு மேல சில நம்பிக்கைகள. அதை நீங்க சொல்ற மாரி கூட இண்டெர்ஃப்ரெட் பண்ணலாம்” என்றார்.

நான் இவ்வழக்கை மீண்டும் முதலில் இருந்து தொடங்க விரும்பினேன். நடந்த இறப்புகள் அனைத்தையும் வரிசைப்படுத்தினேன். முதலில் இறந்தது சரவணனின் தாத்தா. அதன் பின்னர் இப்போது அவன் அப்பா. தொடர்ந்து சரவணனின் இரண்டாவது சித்தப்பா. எல்லோருக்கும் சண்முகநாதப் பிள்ளை இறந்தது போலவே நெஞ்சு வலி.

என் வசதிக்காக சரவணனின் அப்பாவிடமிருந்து தொடங்கினேன். அவர் வீட்டோடு இருந்த மளிகைக் கடையை நடத்திக் கொண்டிருந்தார். அவர் தம்பி இ.பி யில் வேலை செய்தார். இரண்டாவது தம்பி சண்முகநாதப் பிள்ளை வேலை செய்த மில்லில். கடைசி தம்பி அண்ணனோடு கடையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சகோதரர்களுக்குள்ளும் இந்த சொந்து பிரச்சனையும் இல்லை. இவர்கள் குடும்பத்தைப் பற்றி யோசித்ததும் ரோஸ்லின் ஞாபகம் வந்தது.

எஸ்.ஐ.யிடம், “கீழத் தெரு போய்தான் பாத்திட்டு வருவோமே. சரவணனோட குடும்பத்த பத்தி நாம இன்னும் முழுசா விசாரிக்காம இருக்கோம்” என்றேன்.

முதலில், “சார், அவரோட குடும்பத்த பத்தி பத்து மட்டம் விசாரிச்சாச்சு அங்க போன்னா எல்லாரும் ஒரே போல ’ஓன்னு’ அழுவாங்க. அவங்களுக்கு அத விட்டா வேற எதுவும் தெரியாது. மிஞ்சு போன இவன் ஒளறுன அதே கதைய அவங்களும் ஒளறுவாங்க.” என்றார்.

நான், “செரி சும்மா வாங்க விசாரிக்கத்தானே” என்றேன். என் தொடர் வற்புறுத்தலுக்கு பின் சம்மதித்தார்.

நாங்கள் சென்றபோது சரவணனின் அம்மா செல்லமாள் தான் வந்து கதவை திறந்தாள். அவளது அழுது வீங்கிய கண்களில் மிச்சமிருந்த நீர் அவள் விடாமல் அழுது கொண்டிருக்கிறாள் எனக் காட்டியது. எஸ்.ஐ. சரவணின் அம்மா செல்லமாளிடம், “சார் ஒரு மட்டம் வீட்டுல விசாரிக்கணும்ன்னு சொன்னாரு அவரு தான் உங்க பையன காப்பாத்த இந்த கேஸ விசாரிச்சிட்டு இருக்குரு வக்கீல்” என்றார்.

அவள் கைகள் என்னை இறைஞ்சுவது போல் வணங்கின.

அவளை சமாதானம் செய்வதற்காக, “இதுலாம் நேச்சுரல் டெத் தான் மா எல்லாம் ஃபார்மால்டீஸ் தான். இன்னும் பத்து நாள்ல உங்க பையன விட்டுறுவாங்க” என்றேன். அவள் என்னை நோக்கி வணங்குவது போல் மீண்டும் கைகளை உயர்த்தினாள்.

“எனக்கு இருக்க ஒரே ஆதரவு அவன் மட்டும்தான் சார். அவனும் இல்லென்னா ஆம்பள தொண இல்லாத வீடாயிரும் இது.” என்றாள். நிராதரவாக இருக்கும் அவள் நிலைமை பாவமாக தான் இருந்தது.

நான் உடனே செல்லமாளின் கணவனை நோக்கி கேள்வியைத் திருப்பினேன், “உங்க கணவருக்கு எதுவும் நோய் இல்ல கெட்டபழக்கம் இருந்துச்சா மா?” என்றேன்.

“இல்ல சார் அவருக்கு குடிக்கிற பழக்கம்லா இல்ல. சொல்ல போனா அவருக்கு எந்த நோயுமே இல்ல. இந்த வீடு, வீடு விட்டா கடைன்னு தான் வாழ்ந்தாரு. வேற வெளியக் கூட போக மாட்டாரு.” என்றாள்.

பேசும் போதே அவள் கண்களில் அடங்கியிருந்த நீர் மடை திறந்து ஓடத் தொடங்கியது. அதற்கு மேல் அவர்கள் சொல்லப்போவதெல்லாம் எனக்கு தெரிந்த விஷயமாக தான் இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். அவள் எதுவும் பொய் சொல்கிறார்களா என்று சோதித்தேன்.

5

சரவணன் சொன்னதில் இருந்து ரோஸ்லின், செல்லம்மாள், முருகேசன் என எல்லோர் சொன்னதையும் தொகுத்தேன். வீட்டிற்கு சம்பந்தமுடைய எல்லோரையும் விசாரித்து முடித்திருந்தோம். யாரும் பொய் சொல்லவில்லை என்பது உறுதியாக தெரிந்தது. ஆனால் எல்லோரிடமும் சொல்லப்படாத ஓர் உண்மை மறைந்திருந்தது. இவை அனைத்தும் இயற்கையான மரணம் தானா? காசு வெட்டி போடும் கணக்கு தான் என்ன? எல்லாம் கைக்குள் சிக்காமல் குழப்பியது.

நான் மீண்டும் சென்று ப்ரோக்கர் முருகேசனை சந்தித்தேன்.

“சண்முகநாதப் பிள்ளை இறந்ததுக்கு அப்பறம் ரோஸ்லின் இந்த வீட்டு பக்கம் வந்து ஏதாவது சொத்து தகராறு பண்ணாளா?” எனக் கேட்டேன்.

“இல்ல சார் அவ அதுக்கு அப்பறம் இந்த பக்கம் வரல. இவங்களும் அவள மறந்துட்டாங்க. அவளுக்கு தேவை கொஞ்சம் காசா தான் இருந்துச்சி அத பிள்ளை வீட்ட வித்தப்பவே கொடுத்துட்டாரு.” என்றார். இதனை போன முறை என்னிடம் சொல்லாமல் விட்டிருந்தார்.

“எது நீங்க வித்து கொடுத்த குச்சு வீடா?” என்றேன்.

”ஆமா, அதுல வந்த காச அவகிட்ட கொடுக்கத்தான் கடைசியா போனாரு.” என்றார் முருகேசன்.

“எப்போ?” என்றேன்.

“அவரு சாவுறதுக்கு ரெண்டு நாளு முன்னாடி. அவரு ரெண்டு நாளு அங்கதான் இருந்தாருன்னு அவரோட சம்சாரம் அழுதது நெனவு இருக்கு சார்.” என்றார்.

நான், “அவரு இந்த கீழத் தெருவுல இருக்குற பெரிய வீட்ட எதுவும் விக்கப் பாத்தாரா?” எனக் கேட்டேன்.

“இல்ல சார் அப்படி எதுவும் எனக்குத் தெரிஞ்சு இல்ல. சொல்லப் போனா சண்முகநாதப் பிள்ளை வீட்ட விட்டுட்டு போனதுதான் இவங்க குடும்பத்துக்கு செஞ்ச ஒரே புண்ணியம். இல்லேன்னா மொத்த குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்திருக்கும். கடைசியிலே குடும்பம் ரொம்ப கஷ்டத்துக்கு போனப்ப தான் இந்த செவராம் பய வீட்ட விக்க என்கிட்ட வந்தான்.” என்றார்.

எனக்கு சிவராம் யாரென்று தெரியவில்லை. எப்.ஐ.ஆர் காப்பியைப் பார்த்தேன். சரவணனின் அப்பா. நான் இவர்கள் ஒன்றாக வீட்டை விற்பதைப் பற்றி யோசிக்காமல் விட்டிருந்தேன். சிக்காமல் இருந்த பொரி இப்போது கைக்கு எட்டியது.

“எப்போன்னு நெனவு இருக்கா?” எனக் கேட்டேன்.

“அது இருக்கும் சார் ரெண்டு வருஷம் மின்னாடின்னு நினைக்கிறேன், செரியா நெனவு மட்டுப்படல. அவங்க குடும்பத்துல மறுபடியும் ஏதோ பிரச்சனைன்னு சொன்னான். எங்கிட்ட தான் வந்து வீட்ட வித்து தர முடியுமான்னு கேட்டான். ஆனா அவங்க குடும்பத்துக்கே வீட்டு பேர்ல ராசி இல்லன்னு நினைக்கிறேன் அத கேட்டு ரெண்டு வாரம் பக்கம் தான் இருக்கும் அவன் எறந்துட்டான். செவராமோட பொண்டாட்டி தான் தலையால அடிச்சிக்கிட்டா. அன்னைக்கெல்லாம் அவ தெனமும் என் வீட்டு மின்னாடி வந்து நின்னு அழுவா. அவ புருசன்ட்ட இத விக்க வேணாம் நமக்கு இருக்கது இது ஒன்னு தான்னு கதறுவா. விக்க வேணாம்ன்னு விடாபுடியா நின்னா. எங்கிட்ட வந்து அழுது பொழம்புனா. இவன்தான் கேக்கல அவன் கெரகம் அதுக்குள்ள போய் சேந்துட்டான்.” என்றார்.

இத்தனை நாள் நான் இணையாமல் தேடிக் கொண்டிருந்தது இந்த கண்ணியை தான். எனக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்தது.

“அதுக்கப்பறம் அவர் தம்பி யாரும் வீட்ட விக்கலையா?” எனக் கேட்டேன்.

“இல்ல அதுக்கு போறவு அவங்க ஏங்கிட்ட வரல. ஏதோ அபசகுனமா நெனைச்சிட்டாங்கன்னு விட்டுடேன். நானும் அப்ப தொழில விட்டு வெலக ஆரம்பிச்சிட்டேன் அதுனால பெருசா கண்டுக்கல்ல. பிள்ளைக்கு அப்றம் இந்த செவராம் பயலுக்கு தான் பொம்பள வாசத்துல கிறுக்கு. அவன் தம்பிங்க அப்படியில்ல. வீட்ட கட்டி காப்பாத்த தெம்புள்ளவங்க தான். என்ன ஆச்சுன்னு தெரியல அவங்களும் போயிட்டாங்க. அவங்க குடும்ப மொத்ததையும் வெட்டி போட்ட காசு விடாம பிடிச்சுக்கிச்சு சார். பொண்ணுங்க வெட்டுற காசு சார் இந்த ஆம்பளைங்களால ஒன்னு செஞ்சிக்க முடியாது.” என்றார்.

அவர் கடைசியாக சொன்ன வரி என்னுள் பதைபதைப்பை ஏற்படுத்தியது. இப்போது தான் கேஸ் சரியான திசைக்கு திரும்பியிருந்தது.

நான் முருகேசனிடம் விடைபெற்று ஸ்டேஷன் சென்றேன். அங்கே எஸ்.ஐ. ராஜரத்தினம் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்.

நான், ”சார், இந்த சரவணன் பயல விட்டுருங்க. இந்த கேஸை நேச்சுரல் டெத்துன்னு க்ளோஸ் பண்ண பாருங்க. அவனுக்கு ஒண்ணும் தெரியாது. அல்லது நாம முடிக்கிற மாதிரி வேற வழியில முடிச்சிறலாம்.” என்றேன்.

அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் உள்ளே சென்று சரவணனைப் பார்த்தேன். செய்வதறியாது அமர்ந்திருந்த அவனிடம், ”நான் காசு வெட்டுறதெல்லாம் இப்ப நம்புறேன். உங்க வீட்டுல யாராச்சும் முப்பந்தலம் போறதுண்டா?” என்றேன்.

அவன் என்னிடம் திரும்பி, “எங்க அம்மா போவாங்க.” என்றான்.

எஸ்.ஐ. குழம்பியவராக முழித்தார்.

“நடந்த நாலும் கொலைதான் சார். கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சிட்டேன். கொலைகாரனையும் கண்டு பிடிச்சிட்டேன். ஆனா நம்மால நிருபிக்க முடியாது சார்” என்றேன்.

“ஏன் இவங்க அண்ணன் தம்பிக்குள்ள ஏதாச்சும் சொத்து தகராறா?”

“சார், இது நீங்க நினைக்கிற மாதிரி ஆம்பளைங்க போடுற சாதாரண கணக்கு இல்ல. ஆம்பளைங்களுக்கு அவ்ளோ சாமர்த்தியம் இல்ல. அவங்க சொத்துக்காக பண்ணிருந்தா கேஸான ரெண்டாவது நாளே யாருன்னு புடிச்சு உள்ளத் தூக்கிப் போட்ருக்கலாம்.”

“பின்ன?”

“இது காசு வெட்டுற கணக்கு சார். பொம்பளைங்க ஒலகத்து கணக்கு. முப்பந்தலம் இசக்கிய கூட்டு சேத்து இவங்க வைக்கிற கணக்கு. அந்த வெஷம் சண்முகநாத பிள்ளைக்கோ, சிவராமுக்கோ, மத்தவங்களுக்கோ தெரியாது. இங்க இருக்குற சரவணனுக்கு புரியாது. நாம இன்னும் எவ்வளவு தேடி போனாலும் இவங்க முப்பந்தலத்துல வெட்டுன காசு ஒண்ணொன்னையும் கண்டு பிடிக்க முடியாது.” என்றேன்.

“இத உங்கட்ட யார் சொன்னா?” எனக் கேட்டார் எஸ்.ஐ.

“செல்லம்மாளோட அழுது வடிஞ்ச கண்ணுக்குள்ள இருந்த இசக்கி சொன்னா.” என்றேன்.

***

2 comments for “இசக்கி

  1. May 2, 2022 at 9:15 pm

    இசக்கி கதை தொடக்கத்திலேயே ஒரு முடிச்சை போட்டுவிட்டு அதனை அவிழ்க்க முனைகிறது. அதனை அவிழ்க்கும் படிநிலைகள் தடங்கல் இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் கதை மள மளவென நகர்கிறது. கொலைக்கான காரணி இன்னார்தான் எனக் கடைசி புள்ளியில்தான் காட்டுகிறார். கதை தடம் மாறாமல் சென்று அந்தப் புள்ளியில் போய் முடிகிறது.ஜி எஸ் எஸ் வி நவீனின் கதை சொல்லல் முறை கூர்மையடைந்துகொண்டே இருக்கிறது.

  2. Kaliyaperumal Veerasamy
    July 7, 2022 at 10:59 am

    இசக்கி கதையோட்டம் அருமை , மொழிநடையும் நல்லோட்டம் ,
    சில கேள்விகள்
    1. பிள்ளையின் சாவு ஆச்சியினால் என்று கொள்ளலாமா.?

    2. சிவராமன் இறப்பு செல்லம்மாளினால் என்றால் மற்ற இருவரின் மரணத்திற்கு சரியான காரணம் சுட்ப்படவில்லை ஏன்.?

    தஞ்சைக்கு அருகே செங்கிப் பட்டிலிருந்து 10 கிலோ மீட்டரில் வீரகாளியம்மன் என்ற கோவில் உள்ளது அங்கும் இப்படி காசு வெட்டிப்போடும் வழக்கம் உண்டு அது பலிக்கும் என்பதும் பல நிகழ்ச்சிகளில் இருந்தும் உலவும் கதைகளில் இருந்தும் தெரிந்து கொண்டேன்

    நன்றி தம்பி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...