ஹசான் வந்த சில வாரத்தில் “அடுத்த ஆளுக்குத் தயாராயிட்டா போலிருக்கு… இவன வச்சு இங்கயே ஐ.சி எடுக்கலாம்னு நெனக்குறா… இவுங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டோம்…’’ என ஜேக் இரண்டு மூன்று கடைக்காரப் பையன்களிடம் பேசத் தொடங்கியிருந்தார்.
“அது அவளோட ரெசெக்கி பாக்சிக்… அவளுக்குன்னு இருந்தா நிச்சயம் கெடக்கும். நமக்கு நம்மோட” என ஜேக்கின் அருகில் வியாபாரம் செய்த இளைஞன் சொன்னான்.
“நம்ப ரெசெக்கியத்தான் அவ தின்னுகிட்டு இருக்குறாளே” என ஜேக் ரோக்கியா காதுபடவே சொன்னார். ரோக்கியாவின் கண்கள் ஹசானைத் தேடின. அவன் இல்லாதது அவமானத்தைக் குறைத்தது.
இடக்கையில் பிடித்திருக்கும் மைக்கை நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு, இறுக்கமாக அணிந்திருந்த பாஜூ கூரோங்கின் வலப்பக்கப் பையிலிருந்து தைலத்தை வெளியெடுத்தாள். மைக்கை முழங்கைக்கும் நெஞ்சுக்குமாக அணைத்துக் கொண்டே மூடியைத் திறந்து வலக்கையால் மேற்சட்டைக்குள் பாட்டிலை உள்நுழைத்து, இடுப்பிலிருந்து தொண்டை வரையிலான பகுதிகளில் காற்று ஊர்வதைப் போல சற்றே சட்டை வளைந்து நெளிந்து மேலெழும்ப தைலத்தைத் தேய்த்து விட்டு மூக்குக்கும் கொஞ்சமாகத் தடவியப் பின்னர் புட்டியைப் பைக்குள்ளே போட்டுக் கொண்டாள்.
ஸமான் அவளை விட்டுச் சென்ற பிறகுதான் இந்தத் தைலப் பழக்கம் அவளுக்கு ஒட்டிக் கொண்டது. தைலத்தை அதே வரிசையில் உள்ள கடைகாரியிடம்தான் வாங்குவாள். அவள் குடும்பத்தில் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சில ரகசியமான செய்முறைகளைக் கொண்டு தைலத்தைத் தயாரித்து விற்கின்றாள் கடைக்காரி. அவளைத் தவிர வேறு யாரும் அந்தத் தைலத்தை விற்பதில்லை. செராய் புல்லையும் சீன வெற்றிலையும் இன்னும் சில பொருட்களையும் சேர்ந்து தயாரிக்கப்படுவதாகச் சொல்லியிருக்கின்றாள். கடும் எரிச்சல் கொடுக்கும் தைலம் அது. ஆனால், எரிச்சல் தீர்ந்த பிறகு சுகந்தமான நறுமணம் வீசும். அந்த மணம் அவளது இசையுடன் கலப்பதை அவள் பார்த்திருக்கிறாள். தைலம் ஸமானை மறக்க அவளுக்கு உதவுவதாக நினைத்துக்கொள்வாள். எரிச்சலுடன் கூடிய மணம் அவன் இல்லாமையைச் சமன் செய்தது.
ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒன்றென தைலத்தை வாங்குவாள் ரோக்கியா. ஹசான் வந்தபிறகு அது இரண்டு நாட்களுக்கொன்றென மாறிப்போனது. ஒரிரண்டு வாரங்களாக இரவு வேளை மட்டும் அட்டை விரிப்பில் ஹசான் படுத்துக் கொண்டிருந்தான். இரவு மணி 9.00க்குப் படுத்துக் காலையில் எழுந்து சென்றுவிடுவான்.
தைல நெடியால் தோல் மெல்ல எரியத் தொடங்கியவுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க, முகத்தில் எந்த விதமான பாவமும் காட்டாமல் குரல் மட்டும் மேல் கீழ் என அரூபமான படிகளில் ஏறி இறங்கத் தொடங்கியது. அதன் இறுதி கட்டத்தில் அவள் பாடிக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கரின் ‘அக்கு செகுந்தும் மாவார்’ பாடல் இன்னும் மெருகேறி இருந்தது. வழக்கமாக அந்த நேரம் அங்கே கடப்பவர் எவராயினும் ஒரு நிமிடம் நெக்குருகி போவார்கள். தைலத்தின் காரமான மணம் பாடலுடன் இசைந்து கொண்டிருந்த அந்தத் தருணத்துக்குப் பிறகுதான் அவளுக்கெதிரில் இருந்த கருப்பு நிற ஒலிபெருக்கியின் மேலிருந்த உண்டியலில் சில்லறைகள் விழத்தொடங்கின.
ரோக்கியா பற்களில் ஒட்டியிருக்கும் பாக்குத் துணுக்குகளை வழித்து வாயில் மென்று கீழே துப்பினாள். பசித்தது. கொஞ்சம் நீர் பருகிக் கொண்டாள். வெயிலின் காட்டம் இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்தப் பேருந்து வந்தவுடன், மறுபடியும் தைலத்தை எடுத்தாள்.
பிளந்து வைக்கப்பட்ட சிப்பிக்குள் நீர் பீறிடுவதைப் போல் வடிவமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுக்கருகில்தான் சந்தை கூடும். அவ்விடம் நகரத்துக்கு மையத்தில் இருந்தது. சந்தைக்குப் பின்புறம் நகரத்திடலும் அதைத் தாண்டிய பகுதியில் ஆகாய நீல நிறத்தில் செம்பு கோபுரம் அமைந்த பெரிய பள்ளிவாசலும் அமைந்திருந்தன. சந்தையிலிருந்து பார்த்தால் வானில் செம்பு கவிழ்த்து வைக்கப்பட்டதைப் போன்றிருக்கும். இரண்டு நீள் வரிசையில் பாய்களையும் ஆரஞ்சும் நீலமும் கலந்த தார்பாய்களையும் விரித்து வியாபாரம் நடக்கும். காலையில் எட்டு மணிக்குத் தொடங்கும் வியாபாரத்தில் ஆண்களுக்கான வீரிய மருந்துகள், தைலம், பழைய கடிகாரங்கள், ஜப மாலைகள், பூர்வக்குடி மக்கள் கொண்டு வரும் பெத்தாய், ஜெரிங் காய்கள், பெராங்கான் பழங்கள், கைவினைப்பொருட்கள் என அனைத்துமே இருக்கும். அந்த வரிசையின் முக்கால் பகுதியைக் கார் பூத் கடைகள் நிறைத்துக் கொண்டிருந்தன. நிறுத்திவைக்கப்பட்ட காரின் பின்பகுதியைத் திறந்து பொருட்களை அடுக்கி நிழலுக்கு மட்டும் சிறிய குடையுடன் அமர்ந்து கொண்டு வியாபாரம் நடக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தச் சந்தையில் ஏதாவது ஒரு பொருள் பிரதானமாக விற்கப்படும். முன்பு சீடிகளும் வீசிடிகளும் விற்கும் கடைகள் அதிகம் இருந்தன. அண்மைக்காலத்தில் மின் சிகரெட்களும் அவற்றுக்கான திரவக்குப்பிகளுமே அதிகளவில் விற்கப்படுகின்றன. விரலளவு மின் சிகரெட்களும் பட்டர் ஸ்காட்ச், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றிலான மணத்தைக் கொடுக்கும் அவற்றின் உள்ளீட்டுத் திரவக்குப்பிகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கடையிலும் மலாய் இளைஞர்கள் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் கயிற்றில் பதக்கம் போல மின் சிகரெட்டைப் பிணைத்துக் கொண்டு புகையை ஊதியவாறே முன்னதைப் பின்னாலும் வலப்பக்கத்திலிருப்பதை இடப்பக்கமாகவும் நகர்த்தி விற்றுக் கொண்டிருப்பார்கள். நடைபாதையை மறைக்கின்றார்கள் எனப் பல முறை நகராட்சி செயலாக்க அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அப்படியான நாளிலிருந்து அதிகம் போனால் ஒரு வாரத்துக்கு வியாபாரத்தை முடக்கி வைத்திருப்பார்கள். அதன் பிறகு, மறுபடியும் வியாபாரம் தொடங்கிவிடும்.
ஒவ்வொரு ஐந்து கடைகளுக்கும் ஒருவரென மாற்றுத்திரனாளிகள் சிலர் அமர்ந்து பாடலைப் பாடிக் கொண்டோ இறைத்துதிகளைச் சொல்லிக் கொண்டோ அமர்ந்திருப்பார்கள். ஒரு ஒலிபெருக்கியும் சிறிய கீ போர்ட்டும் சில இசைக்கருவிகளையும் அவர்கள் வைத்திருந்தனர். ரோக்கியா இடவரிசையின் இரண்டாம் இடத்திலே மடக்கு நாற்காலியில் அமர்ந்திருப்பாள். அதே வரிசையில் ஐந்து இடங்கள் தள்ளி அமர்ந்து பாடல் பாடும் ஜேக்குக்கும் அவளுக்கும் இரண்டு முறை வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது.
“மரியாதை குறைவா நடந்துக்காத… இது ஒன்னும் ஒன் நாடு இல்ல… ஹராம் ஜாடா… கொஞ்சமாச்சும் நாகரீகம் தெரியுமா… என் வீட்டுக்கு நீ வந்துருக்க அத மறந்துறாத” எனக் கத்தினார். மாலையில் ரோக்கியாவை ஏற்ற வரும் வாடகை வண்டி ஒட்டுநரிடம் சைகை காட்டுவதற்காக விசில் அடித்ததற்குத்தான் ஜேக் இரைந்து கொண்டிருந்தார். ஆனால், அவள் வந்த பிறகு அவரின் வருமானம் சரிபாதியாகக் குறைந்ததன் காரணமாகத்தான் அப்படிக் கத்தினார் என அவளுக்குத் தெரியும். கொஞ்சம் உடைந்துபோன மலாய் சொற்களில் ரோக்கியா “பாக்சிக், நான் ஒங்கள ஒன்னும் கூப்புடல… நம்ப பாடுற மாரிதானே இதுவும்… நீங்க பாடுற இங்கிலிசு பாட்டுக்கூட விசிலடிக்குற மாரித்தான் இருக்கு” எனச் சொல்லிவிட்டு வாடகை வண்டிக் கதவைப் படார் எனச் சாத்தினாள். ஜேக் பக்கத்திலமர்ந்திருந்த தைலக்கடை வியாபாரியிடம் இன்னும் கடுமையான வசை மொழியில் திட்டிக் கொண்டிருந்தார்.
அந்த வரிசையில் 15 வருடங்களாகக் கிட்டார் மீட்டி 70களின் புகழ் பெற்ற பீட்டல்ஸ் குழுவின் பாப்பிசைப் பாடல்களை ஜேக் பாடிவருகிறார். கறுப்புக் கண்ணாடி அணிந்து பழுப்பு நிறமேறிப் போயிருக்கும் நீண்ட முடியுடன் முக்காலி ஒன்றிலமர்ந்து பாடுவார். அவரின் பாடலைக் கேட்கின்றவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள். இளைஞர்கள் பலரும் கிட்டார் இசை மீட்டலை மட்டுமே நின்று ரசித்துக் கேட்பார்கள். ஒவ்வொரு பாடல் பாடுவதற்கு முன்னும் அந்தப் பாடலைப் பற்றி கொஞ்ச நேரம் விளக்கமளித்துவிட்டுத்தான் தொடங்குவார். ‘இப்ப எலெக்ட்ரோனிக் வாத்தியங்களின் இரைச்சல்தான் பாட்டு முழுக்க இருக்கு, மெதுவான தாளத்துடன் பாடுனா கேட்கமாட்டேங்குறாங்க’ எனப் பக்கத்திலிருக்கும் வியாபாரிகளிடம் புலம்புவார்.
பெருத்த உடலுடன் கையிலிருக்கும் தடியைக் கொண்டு சாலையைத் தடவி மெதுவாக நடந்து வருகின்றவரை கடைக்கார இளைஞர்கள் ஆங்கள் ஜேக் என்று அழைப்பார்கள். ரோக்கியாவின் உடலிலிருந்து எழும் மணத்தை ஜேக் நன்கு அறிந்து வைத்திருந்தார். அதன் நெடி வீசத் தொடங்கும் போதே உடலே ஒங்கரிப்பதைப் போல உணர்வார். ரோக்கியா வருவதற்கு முன்னால், இரவு ஏழு மணி வரையில் ஜேக் பாடுவார். சதுக்கத்தின் முன்னால் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வந்திறங்கத் தொடங்கும் போதெல்லாம் பாடலைப் பாடத் தொடங்கிவிடுவார். ரோக்கியாவின் வருகைக்குப் பின் ஐந்து மணிக்கெல்லாம் கிட்டாரைப் பெட்டியில் வைத்துக் கொண்டு முக்காலியை மடக்கித் தரையைத் தட்டிக் கொண்டே நடந்து சென்றுவிடுகிறார்.
காலையிலே ரோக்கியாவுடன் வந்து ஒலிவாங்கியைப் பொருத்தி உண்டியலை வைப்பது முதலாக மாலையில் அவளை அழைத்துச் செல்வது வரையில் கூடவே வந்து கொண்டிருந்த ஸமான் வராமல் போன மூன்று நாளில் ஜேக் அங்கிருந்த வியாபாரிகளிடம் ரோக்கியா குறித்துப் கிண்டலுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த மூன்று நாட்களுமே அடிக்கடி தைல மணம் அதிகமாக வீசுவதை உணர்ந்து அருகிலிருந்த கடைக்கார இளைஞர்களிடம் அதை உறுதிப்படுத்திக் கொண்டார். ஸமான் இருப்பதனால் ரோக்கியாவுக்குக் கிடைத்த உபசரணைகள் இல்லாமல் போனதில் அவருக்குச் சந்தோசம். அவள் தனிமையைப் பலிப்பதன் மூலம் தன் மகிழ்ச்சியைச் சில நாட்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
“நான்தான் அவன விட்டுட்டேன்… இதுல உங்களுக்கென்ன பாக்சிக்… நான் ஒங்ககிட்ட வந்து பணம் கேட்கலதானே… ஒங்க வேலய பாருங்க” என ரோக்கியா முகத்திலறைந்ததைப் போல சொல்லிவிட்டப்பின் ஜேக் அவள் குறித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இனி அவளால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது என்ற நிம்மதி இருந்தது.
மியான்மாரில் இருந்து அவளுடன் படகிலேறி வந்த 40 பேரில் லங்காவி கடற்கரையில் உயிருடன் கரையிறங்கியவர்கள் 28 பேர்தான். 2 மாதம் தடுப்பு முகாமில் இருந்த பின்னர் ஐ.நா அளிக்கும் அகதிகள் அட்டையுடன் குவாந்தான் நகருக்கு வந்துவிட்டாள். நகரைத் தாண்டி இருபது கிலோமீட்டர் தொலைவில் பெரிய ஆறு கடலுடன் சேரும் சேற்றுப்பகுதியை ஒட்டிப் பலகையிலான வீடுகளில் தங்கியிருந்தனர். அந்தப் புறம்போக்கு நிலத்தில் இருந்த வீடுகளுக்கு வாடகை செலுத்த வேண்டியிருந்தது. அருகிலேயே மலாய்க் கம்பங்கள் இருந்தன. அங்குத் தங்கியிருக்கும்போதுதான், கம்பத்தில் இருந்த மலாய் பெண்களிடம் மலாய் மொழியையும் பாடலையும் கற்றுக் கொண்டாள். அப்படியாகத்தான் பூப்போட்ட பாஜு கூரோங்கையும் தலை மூடும் தூடோங்கையும் அணிந்து கொண்டு நகரச்சதுக்கத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினாள். மற்ற தொழில்கள் செய்வதைவிட பாட்டுப் பாடுவது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சந்தைக்கு வருகின்ற பெண்களில் பலரும் அவள் பாடலை நின்று விரும்பி கேட்பார்கள். மழலையாக இருக்கும் அவளின் மலாய் உச்சரிப்பு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். மிஞ்சிப்போனால் 10 மலாய் பாடல்கள்தான் தெரியும். அதையே அவள் மிகுந்த பாவத்துடன் பாடிக் கொண்டிருந்தாள். தன் குரல் மற்றவர்களைக் கவர்வதில் அவளுக்கு உள்ளூர கர்வம் இருந்தது. அதோடு இப்படிப் பாடுவதில் எந்த முதலீடும் இல்லாமலே போதுமான வருமானம் வந்துவிடுவது அவளுக்கு நிறைவாக இருந்தது. ஒவ்வொரு நாளும் சந்தைக்கு அதே ஆட்களே வரக்கூடும் என்பதால் உண்டியலில் பணம் போடும் யாரிடமும் எந்தத் தொடர்பையும் அவள் உருவாக்கிக் கொள்வதில்லை. சதுக்கத்தில் வியாபாரம் நடக்காத நாட்களில், ரோக்கியாவுக்கும் வேலை இருக்காது.
ஸமான் நகரில் இருந்த செவன் இலெவனில் வேலை செய்து கொண்டிந்தான். ஈரச்சந்தைக்கு மேலிருந்த கடைவரிசை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தான். விடுமுறை நாளில் சதுக்கத்துக்குப் பொருட்களை வாங்க வந்தபோதுதான் ரோக்கியா அவனுக்கு அறிமுகமானாள். கன்னங்களில் சந்தன நிறத்தில் இருக்கும் தனாகா தூள் பூசி அவித்த கிழங்கைப் போல அழகாக இருந்தாள். அவளிடம் ‘”ஊரில் மனைவி இருக்கின்றாள், குழந்தையும் இருக்கிறது… ஆனால், இங்கேயே இருந்துவிடலாமென்று இருக்கிறேன்…” எனச் சொல்லிவிட்டுத்தான் திருமணம் புரிவதற்கு அனுமதி கேட்டான். ரோக்கியாவுக்கும் ஸமானைப் பிடித்திருந்தது. இரண்டு நாட்களிலே தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்துத் திருமணம் புரிந்தாள்.
மதிய நேரத்தில் பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைத்தான் வரும். அந்த நேரங்களில் ஜேக் பெரும்பாலும் கையிலிருக்கும் தடியைத் தட்டிக் கொண்டே எதிரிலிருக்கும் கடைகளுக்குச் சென்றமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுப்பார். ரோக்கியா பேருந்து வந்து நிற்கும் வரை மைக்கைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். பேருந்து வரும் சத்தம் கேட்டவுடன்தான் பாடலைப் பாடத் தொடங்குவாள். அப்படித்தான் தயாராகினாள்.
பேருந்திலிருந்து கூட்டம் இறங்கி ஒவ்வொரு கடையாக நகர்ந்து கொண்டிருந்தபோது பாடலைப் பாடத் தொடங்கினாள். பாடலினூடே தைலத்தை உடலில் தேய்த்துக் கொண்டே ஹசானை மிகச் சரியாகப் பார்த்துத் தரையை நோக்கிக் கொண்டாள். அவனிருந்த திசை நோக்கி தலை திரும்புவதைத் தவிர்க்க முடியாமல் ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மிக நேர்த்தியாக உடையணிந்து முடி மட்டும் தலையின் நான்கு புறமும் சிதறிவழியக்கிடந்தான். கையிலிருந்த ஆரஞ்சு நிறத் துணிப்பையை அட்டை விரிப்பில் வைத்து மேல் அமர்ந்தான்.
தைலத்தை மூக்குக்கு நேராக எடுத்து ஆழ நுகர்ந்துவிட்டுப் பைக்குள் போட்டாள்.
ரோக்கியவின் மகனுக்கு மூன்று வயதான போது ஸமான் வீட்டை விட்டுச் சென்றுவிட்டான். கொஞ்ச நாட்களாகப் பங்களாதேஷுக்குத் திரும்ப செல்ல வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளையும் உடனழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தான். “நீ போவதாக இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்… நான் உன்னுடன் வருவதாக இல்லை” என அவனிடமும் சொல்லியிருந்தாள். ஸமான் வீட்டை விட்டு வெளியேறியவுடன் குடியிருந்த கம்பத்து வீட்டிலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது. புதிய வீட்டைத் தேடிய இரண்டு நாட்களுமே நீரூற்றுக்கருகில்தான் அவளும் பிள்ளையும் படுத்து வந்தனர். அவளுடன் தடுப்பு முகாமிலிருந்தவர்களில் ஒருத்தியான ஜைனாப், தான் தங்கியிருந்த தரை வீட்டில் தங்க இடம் கொடுத்தாள். அந்த வீட்டில் அவளுடன் சேர்ந்து மூன்று குடும்பங்கள் தங்கியிருந்தனர். அதில் மூன்று ஆண்கள் காலையிலே மீன் பிடி துறைமுகத்திற்குச் செல்வார்கள். அங்குக் கீழே கொட்டிக் கிடக்கும் மீன்களைப் பொறுக்கி நுரைப்பப்பெட்டியில் போட்டுக் கொண்டு மிதிவண்டியில் வீடுவீடாகச் சென்று விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் யாருக்குமே மலாய் மொழியில் திருத்தமாகப் பேச முடியவில்லை. அந்த வீட்டிலிருந்த நான்கு குழந்தைகளில் இரண்டு ஆண் குழந்தைகள் முழுமையாகவே உடையணிந்து பார்க்க முடிந்ததில்லை. சட்டை இருந்தால் காற்சட்டை இருக்காது. காற்சட்டை இருந்தால் மேற்சட்டை இருக்காது. எந்நேரமும் வீட்டு முன்புறத்தில் இருந்த இரும்பு கதவுக்குட்பட்ட ஐந்தடியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். வெளியில் இருக்கும் கால்வாயுடன் இணையும் சிறிய கால்வாயில் அமர்ந்து மலம், சிறுநீர் கழித்துத் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதனால் ஏற்படும் வாடையைக் சகித்துக் கொள்ள முடியாமல் பக்கத்திலிருந்த சீனர்கள் பல முறை ஏசியிருக்கின்றனர். இந்த வீட்டில் அவளது குழந்தை வளர்வதை ரோக்கியா கொஞ்சம்கூட விரும்பவில்லை. ஆனால், அங்கிருக்கத் தொடங்கிய இரண்டு வாரத்தில் அதுவே பழகிப் போயிருந்தது. சந்தையிலிருந்து வீடு திரும்புகையில் மகன் சாலையில் நின்று கொண்டிருப்பது மட்டும் சற்று உறுத்தலாக இருந்தது.
ஸமான் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஊருக்குப் போன பின் அவன் ரோக்கியாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவள் புதிய வீட்டில் குடியேறி மூன்று மாதம் சென்ற பின்னர்தான் ஹசான் முதன் முதலாகச் சந்தையில் சுற்றிக் கொண்டிருந்தான். கடந்த மூன்று நாட்களாக அவனைக் காணாதது என்னவோ செய்தது.
ஹசான் வழக்கமாகப் பகலில் எங்காவது சுற்றிவிட்டு இரவில் அட்டை விரிப்பில் வந்து படுத்துக் கொள்வான். காலை 5.50 மணிக்குப் பள்ளிவாசலில் ஒலிக்கும் முதல் தொழுகைச் சத்தத்தில் விழித்தெழுந்து அட்டை விரிப்பில் அமர்ந்து ஒரு மணி நேரம் எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். அப்போதுதான் ரோக்கியாவும் வந்து சேர்வாள். இங்கு வந்த இரண்டு வாரத்தில் ஒரு முறை, அவன் ஒவ்வொரு கடையாகப் பொருட்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தபோதுதான் பாடலைக் கேட்டு நின்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பிடரியில் ஏதோ எறும்புகள் ஊர்வதைப் போல கூச்சமாக இருந்தது. ஓரக்கண்ணால் பார்த்தப்போது காற்றில் கைகளால் எதையோ வரைந்து கொண்டிருந்தான். அதன் பிறகு, ஜேக் அங்கிள் அமரும் இடத்தருகே சென்று பாடலைக் கேட்டான். இறைத்துதிகளைப் பாடிக் கொண்டிருந்த கால்கள் அகற்றப்பட்டிருந்த ஷம்சுல் அருகே நின்றும் பார்த்தான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் மாலையில் தன் இடத்திற்குச் சென்றமர்வதற்கு முன்னால் ஒவ்வொரு இடத்திலும் நின்று பாடலைக் கேட்டு நகர்வான். மற்றப்படியாக இருவருக்குள்ளும் எந்த விதமான பேச்சும் நிகழ்ந்தது இல்லை.
அவனைப் பற்றி நினைவில் இருக்கும்போதே அவன் கண் முன் தோன்றியது அவளுக்கு என்னென்னவோ செய்தது. தான் அவனை நினைத்ததை அவன் அறிந்திருப்பானா? இந்தத் தைலத்தின் மணம் அவனுக்கு அதை சென்று சேர்த்திருக்குமா என நினைத்தபடி கொஞ்சம் வெட்கம்கூட அடைந்தாள். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்துவிட்டு ஜேக் அமரும் இடத்துக்கு ஐந்து இடங்கள் தள்ளி அட்டைப் பெட்டிகளை விரித்துத் துணிப்பையுடன் ஹசான் அமர்ந்தான். அவனுடையத் துணிப்பையிலிருந்து மெல்லிழைத் தாள்கள் கொண்ட பைகளை வரிசையாக அடுக்கினான். ஒன்று எண்பது காசுகள் என அட்டைப் பெட்டியில் எழுதியமர்ந்தான். மீண்டும் ஒரு முறை ரோக்கியாவைப் பார்த்து வெற்றியின் குறியீடாக ஒரு சிரிப்பைச் சிந்தினான்.
கொஞ்ச நேரத்தில் பையிலிருந்து அழகிய சிறிய ஹர்மோனிக்காவை எடுத்து இசைத்தபடி எம்.நாசிரின் குரலில் வெளிவந்திருந்த மலாய் பாடல்களைப் பாடத் தொடங்கினான்.
ஒலிவாங்கியோ, ஒலிபெருக்கியோ இல்லாமல் முழுமையான ஒலித்திரட்சியுடன் அவனது தொண்டையிலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது குரல் எழுந்த சில நிமிடம் சந்தையில் அமைதி நிலவியது. அதற்கடுத்துக் கொஞ்ச நேரத்திலே ஜேக்கின் கித்தார் ஒலி கூடி எழுந்தது. நீண்ட நேர கித்தாரில் இசை மீட்டியப் பிறகு வழக்கமாகப் பாடும் ஆங்கிலப் பாடலைப் பாடினார். அதன் பின்பும் அவரின் கித்தார் இசை வெகு நேரம் நீண்டு கொண்டிருந்தது. அந்த ஒலியிலும் ஹசானின் குரல் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மதிய வெயில் உச்சமாக எழுந்த நேரத்தில் பேருந்தொன்றிலிருந்து ஆட்கள் இறங்கத் தொடங்கினர்.
ரோக்கியா நீண்ட நேரம் தரையைப் பார்த்துக்கொண்டிருந்து பின் தைலம் பூசாமலே பாடலைப் பாடத் தொடங்கினாள்.
நம் வாழ்க்கை மிக சிறிது. அதிலும் நாம் நாமாக முழுமையாக வெளிப்படும் தருணம் சிறிதிலும் சிறிது. அந்த நம்முள் நாம் கொண்ட முழுமையை எப்போதாவது பார்த்துவிடுகிறோம். அதுவே எந்த பாவனையும் இல்லாமல் நாம் வாழ்ந்த தருணங்கள். இங்கே ஜேக்கிற்கும், ரோக்கியாவிற்கும் அந்த தருணத்தையே ஹசான் தருகிறான். அவர்கள் அந்த வேற்று நிலத்தில் அத்தனை நாள் கொண்டிருந்த பாவனைகளைக் கலைத்து அவர்களாக வெளிப்படுகின்றனர். எல்லாம் ஒரு மெல்லிய சீண்டல் தான். அந்த சீண்டல் இங்கே இசையின் மூலம் நிகழ்ந்துவிடுகிறது. ஹசான் அவர்களுக்கு இரட்சகனாகிறான். நல்ல சிறுகிதை.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.