
நாடோடி வாழ்க்கையிலிருந்து மாற்றங்கண்டு ஒரு நிலத்தில் நிலையாகத் தங்கி வாழும் காலத்தை மனித நாகரீக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனித வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் பின்னர் நகர உருவாக்கங்களுக்கு வழிகோலின. உலகின் முதல் நகர உருவாக்கம் பொ. ஆ. மு 4500 காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம் என அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. சுமேரியா, சிந்து சமவெளி நாகரீகம், சீன மஞ்சள் ஆறு நாகரீகம் எனப் பல பழங்கால நாகரீக தடயங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ஆனால், மனித நாகரீக வளர்ச்சி என்பது அறிவியலும் ஆட்சிமுறையிலும் கண்ட மாற்றங்களை மட்டும் தாங்கி நிற்பதல்ல. அது மனித வாழ்க்கை குறித்தும் உயிர் தத்துவம் குறித்தும் நிகழ்ந்த பல்வேறு சிந்தனைகளின் திரட்டியையும் கொண்டுள்ளது.
பழங்கால இலக்கியங்களில் ஆட்சிமுறை, சட்ட ஒழுங்கு, வழிபாடுகள் பற்றிய விரிவான சித்தரிப்புகளைக் காண முடிவது போலவே மனிதனின் உடலுக்கும் அதை இயக்குவதாக நம்பப்படும் உயிருக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிய தேடல்களும் காணப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கையின் நிலையாமை குறித்த பல்வேறு கேள்விகளும் அதன் விடையாக முன்வைக்கப்பட்ட பல்வேறு புராண கதைகளும் ஆதிகாலம் தொட்டு மனிதனின் அறிவுத் தேடலில் முக்கிய இடம் வகிக்கின்றது.
மனித வாழ்க்கையின் நிலையாமை பற்றியும் அதை அமரத்துவம் வாய்ந்ததாக மாற்றும் தேடல் பற்றியும் பேசும் பழமையான இலக்கியங்களில் முதன்மையானது ‘கில்கமேஷ்’ (Gilgamesh) என்னும் சுமேரிய காப்பியமாகும். இக்காப்பியம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாகச் சுமேரியா எனும் பழமை வாய்ந்த நகர நாகரீகம் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.
சுமேரியா
சுமேரிய நாகரீகம் பொ.ஆ மு 4500 அல்லது இன்றிலிருந்து 6500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த முதல் நகர் நாகரீக வாழ்க்கையைக் காட்டும் தளமாகும். ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் பழங்கால நாகரீக தடயங்களில் முதன்மையானது சுமேரிய நாகரீகமாகும். சிந்து வெளி நாகரீகம், எஜிப்திய நாகரீகம், சீன மஞ்சள் ஆறு நாகரீகம் எனப் பல தொல் நாகரீக வளர்ச்சிகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் சுமேரிய நாகரீகம் காலத்தால் மூத்தது என்பதோடு மனித இனப் பண்பாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காறியுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தென் மெசாபோத்தாமியவில் (இன்றைய தென் ஈராக்) திக்கிரிஸ் நதியும் (Tigris river) இயுப்ரதெஸ் நதியும் (Euphrates river) சென்று கலக்கும் பெர்சியன் வளைகுடாவை ஒட்டிய கறையோர நகர்களே சுமேரிய நாகரீகத்தின் முதல் தலங்களாகும். வளமான பிறை (The fertile crescent) என்று குறிப்பிடப்படும் இவ்விரண்டு ஆறுகளுக்கும் இடைப்பட்ட செழிப்பான நிலப்பகுதி பின்னர் பல புரதான நகரங்களை உள்ளடக்கிய சுமேரியாவாக வளர்ந்தது. ஊர், ஊருக், கிஷ், சிப்பார், எனப் பன்னிரெண்டு கோட்டை நகர்களைக் கொண்ட தேசமாகச் சுமேரியா இருந்துள்ளது. திட்டமிட்ட நீர்பாசனம், விவசாயம், கட்டிடங்கள், கோட்டை கொத்தலங்கள், கோயில்கள், பெரும் மதில்கள் என அந்த நகர்கள் இருந்ததன் எச்சங்களை இன்றைய அகழ்வாராய்சிகள் மெய்பிக்கின்றன. இம்மக்கள் அனுநாக்கி (anunnaki) என்ற இறை நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அனு என்பது விண்ணையும் நாக்கி என்பது மண்ணையும் குறிக்கும் சொற்களாகும். விண்ணுக்கும் மண்ணுக்கும் பிறந்த பல தெய்வங்கள் உலகை ஆழ்வதாக அவர்கள் நம்பினர். படைப்புத் தெய்வம், இறப்புக் தெய்வம், ஐம்பூதங்களுக்கான கடவுளர்கள் எனப் பல தெய்வங்களை அவர்கள் வழிபட்டனர்.
ஒவ்வொரு நகரமும் தனி ராஜியமாகவும் தனி தெய்வத்தை மையமாகக் கொண்டதாகவும் நகரைச் சுற்றிய மதில்களும் வளைந்த பெரும் தோரண வாசல்களும் கொண்டதாக இருந்துள்ளன. அந்த நாகரீகமே பின்னர் வடக்கிலிருந்த அக்காரியர்களின் வசம் சென்று பின்னர் மெசாப்போத்தாமியாவாக வளர்ந்தது. மெசாபொத்தாமியாவின் உடைவில் தோன்றிய அரசே பாபிலோனிய (பொ.ஆ. மு 1900) பேரரசு.
சுமேரிய நாகரீகம் அறிவியல் வளர்ச்சியிலும் கட்டுமான கலை, கணிதம், வானவியல், இசை போன்ற கலைகளோடு மொழி இலக்கியத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டிருந்தது. சுமேரியாவில் பயன்படுத்தப்பட்ட அறுபான்மானம் (sexagesimal- base 60) கணித முறையே இன்று நாம் பயன்படுத்தும் அறுபது வினாடிகள், அறுபது நிமிடங்கள் போன்ற கால அளவுகளின் மூலம் என ஆய்வுகள் கூறுகின்றன. சுமேரியர்கள் தங்களுக்கான தனித்த மொழியைக் கொண்டிருந்தனர். அதற்கான வரி வடிவத்தையும் கொண்டிருந்தனர். அவர்கள் களிமண் தட்டைகளில் கோரைப்புல் முனையை எழுதுகோளாக கொண்டு கீரல் எழுத்தில் எழுதிய முறையை ஆப்பெழுத்து (Cuneiform) என ஆய்வாளர்கள் வகை படுத்துகின்றனர். அதே எழுத்து முறையை பின்னர் அக்காடியர்களும் தங்கள் ஆக்காடிய மொழியை எழுத பயன்படுத்தினர். மெசபோத்தாமியாவின் பொதுவான எழுத்து முறையாக ஆப்பெழுத்து முறையே இருந்தது.
சுமேரிய மொழி அக்காடியர்களின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மெல்ல மறையத் தொடங்கியது. அக்காடிய முதல் அரசன் சர்கோன்( பொ.ஆ.மு 2400) ஆட்சியின் போது சுமேரிய மொழி தன் மதிப்பை இழந்தது. பல்வேறு அரசு அலுவல்களிலும் வழிபாடுகளிலும் சுமேரிய மொழிக்கு மாற்றாக அக்காடிய மொழி மெல்ல பயன்படுத்தப்பட்டது. முதலாம் நூற்றாண்டு வரையிலும் சுமேரிய மொழி பயன்பாட்டில் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அதன் பின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் உலகப்பார்வையில் மறைந்து போன சுமேரிய மொழி 19ஆம் நூற்றாண்டில் மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டது.
1625ஆம் ஆண்டு இத்தாலிய செல்வந்தர் பொயெத்ரோ தெலா வாலே (Pietro Della Valle) தனது ஈராக்கிய சுற்றுப்பயணத்தின் போது எதிர்ப்பாராமல் பாதுகாப்புக்கு ஒரு சிதைந்த பண்டைய கட்டுமானத்தில் ஒதுங்கினார். அதன் அடியில் கண்டெடுத்த களிமண் தட்டைகளில் காணப்பட்ட குறியீடுகளால் அவர் கவரப்பட்டார். அவர் அந்தத் தட்டைகளைத் தன் நாட்டிற்குக் கொண்டு சென்று மேலும் ஆய்வுகள் செய்ய தொடங்கிய பின்னர் பண்டைய சுமேரிய மொழி பற்றிய ஆய்வுகள் விரிவடைந்தன. பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் Assyriology என்ற துறையின் கீழ் சுமேரிய நாகரீகம் குறித்தும் அதன் மொழி குறித்தும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமேரிய மொழியைப் பயிற்றுவிக்கும் பணிகளும் நடக்கின்றன. சுமேரிய இலக்கிய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சுமேரிய ஆங்கில அகராதி, 2006ஆம் ஆண்டு பென்சில்வெனியா பல்கலையால் வெளியிடப்பட்டது.
சுமேரியா மிகப்பெரிய மனித பண்பாட்டு வளர்ச்சியின் தடயத்தை விட்டுச் சென்றிருந்தாலும், இம்மண்ணில் வாழ்ந்த மக்கள் ஆய்வுலகில் பல குழப்பங்களையும் புதிர்களையும் உருவாக்கியுள்ளனர். ஆய்வாளர்கள் அதை ‘சுமேரிய சிக்கல்’ (Sumerian problem) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்தச் சிக்கலின் முதன்மை காரணி, சுமேரியர்களின் தோற்றுவாய் பற்றிய தேடலில் தொடங்கியது.
அந்தப் பெரும் நிலத்தில் சுமேரியர்கள் புலங்கிய மொழி கலப்புகள் அற்ற தனித்த மொழியாக இருப்பது ஆய்வாளர்களுக்குப் பெரும் வியப்பைத் தருகின்றது. வடக்கில் செல்வாக்குப் பெற்று வளர்ந்த அக்காட் போன்ற பிற மொழிகளோடு அம்மொழி பொருந்தாமல் முற்றிலும் வேறுபட்டிருப்பது மிகப்பெரிய புதிராகவுள்ளது. அதேபோல் சுமேரியர்களுக்கு முன்பே அப்பிரதேசத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் உபைடினியர்களின் தொடர்புகளையும் சுமேரியர்களிடம் காண முடியவில்லை.
சுமேரிய மொழி என்பதும் சுமேரிய மக்கள் என்பதும் வடக்கில் வாழ்ந்த அக்காடியர்கள் பின்னர் தெற்கில் வாழ்ந்த மக்களையும் மொழியையும் குறிப்பிட பயன்படுத்திய சொற்களாகும். தொல் சுமேரியர்கள் தங்களைக் ‘கருந்தலையர்கள்’ (saĝ-gíg) என்றே களிமண் தட்டைகளில் பதிவு செய்துள்ளனர். அம்மக்களின் தலை முடி சுற்றுப்பகுதியில் இருந்த மக்களைப் போன்று செம்பட்டை நிறமாக இல்லாமல் கருப்பு நிறத்தில் இருந்ததால் அவ்வாறு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. ஆயினும் saĝ-gíg என்ற சொல்லின் சரியான பொருளை ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை. அதேப் போல தாங்கள் பேசிய மொழியை ‘நாட்டுபுற பேச்சு’ (eme-gir) என்ற பொருளிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முரணை அடிப்படையாகக் கொண்டு சுமேரியர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் மூலத்தை ஆராய பலர் முயன்றுள்ளனர். அவர்கள் அந்நிலத்தின் பூர்வீக குடிகள் அல்ல என்பது அதில் ஒரு பிரபலமான ஊகம். பெர்சியன் வளைகுடா வழியாகத் தூரதேசம் ஒன்றிலிருந்து அவர்கள் குடிபெயர்ந்து வந்திருக்கலாம் என்ற ஊகத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைகின்றனர். அல்லது வடக்கு மலைகளில் இருந்து குடிபெயர்ந்திருக்கலாம் என்ற ஊகமும் உள்ளது. மாறாக அவர்கள் உபைடிகளின் வழித்தோன்றல்களே என்ற கருத்தும் உள்ளது. உலகின் பல்வேறு இன மக்களோடும் மொழிகளோடும் சுமேரியர்களைத் தொடர்பு படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
சுமேரிய இலக்கியத்தில் சொல்லப்படும் பெரு வெள்ள நிகழ்வு, ‘அப்கல்’(Abgal -seven sages) அல்லது ஏழு ரிஷிகள் போன்ற குறிப்புகளின் வழி அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடும் என்ற ஊகமும் விவாதிக்கப்படுகின்றது. சிந்து வெளி நாகரீக நகரமான ஹராப்பாவுக்கும் சுமேரியாவுக்கும் தொல்பொருள் ஆய்வில் சில ஒற்றுமைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்விரு இடங்களுக்கும் வணிக தொடர்புகள் இருந்த அடையாளங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாகச் சுமேரிய நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களும் யானை தந்தங்களும் ஹராபாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை எனக் கூறப்படுகின்றது. ஹராப்பா மக்கள் திராவிட மொழிக்குடும்பத்தின் தொல் மொழி ஒன்றை பேசியதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகச் சுமேரிய மக்கள் பேசிய மொழி தமிழின் தொல்வடிவமாக இருக்கலாம் என்கிற கருதுகோளையும் அல்லது சமஸ்கிருதத்தின் மூத்த வடிவமாக இருக்கலாம் என்ற கருத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைத்து வேர்ச்சொல்லாராய்ச்சியின் வழி அதை உறுதிபடுத்த முயன்று கொண்டுள்ளனர்.
ஆனால் சப்த ரிசிகள் அல்லது ஏழு முனிவர்கள் என்பதும் பெருவெள்ளத்தின் போது படகில் மனிதர்களும் விலங்குகளும் உயிர் தப்பிய குறிப்புகளும் உலகின் பல மொழிகளிலும் இதிகாச கதைகளிலும் உள்ள பண்டைய குறிப்புகள் என்பதால் ஆய்வாளர்கள் எல்லா முன்முடிவுகளையும் தவிர்க்கின்றனர். சிந்து வெளி நாகரீக தளத்தில் பயன்படுத்திய மொழியின் மூலத்தை உறுதி செய்ய முடியாத நிலையில் சுமேரிய மொழியின் மூலத்தைப் பற்றிய முன்முடிவுகளை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.
பண்பாட்டு வளமும் உலகின் நாகரீக தொட்டில் என்ற சிறப்பும் கொண்ட ஒரு வரலாற்று அடையாளத்தோடு தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்வதில் இருக்கும் அரசியலை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். வரலாற்று உண்மைகளை நோக்கிய தேடல் என்பதை விட, உலகின் மூத்த குடி என்ற கோப்பையைத் தட்டிச் செல்ல எடுக்கப்படும் முயற்சிகளாகவே அவை அமைகின்றன.
காப்பியம்
கில்கமேஷ் காப்பியம் பொ. ஆ. மு 2500 முதல் பொ. ஆ. மு 1500 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அக்காப்பியம் அதன் நாயகனான கில்கமேஷ் எனும் உருக் நகர அரசனின் பெயரைச் சார்ந்து அமையப்பெற்றது. சுமேரிய மொழியிலும் அக்காடிய மொழியிலும் ஆப்பெழுத்து முறையில், களிமண் தட்டைகளில் அக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
கில்கமேஷ் காப்பியத்தின் மூலம் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட முதல் ஐந்து (Templet I – Templet V) களிமண் தட்டைகளில் அடங்கியுள்ளது. அப்போது அதன் பெயர் பில்கமேஷ் (Bilgamesh) என்றே சுமேரிய மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காப்பியத்தைப் பின்னர் அக்காடியர்கள் தங்கள் மொழியில் மேலும் பல நூற்றாண்டுகளாக விரித்து எழுதியுள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அக்காடியர்கள் சுமேரியாவை ஆட்கொண்டு சுமேரிய மொழி பண்பாட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திய போது சுமேரிய மொழிக்கு மாற்றாக ஆக்காடிய மொழி பயன்பாட்டுக்கு வந்தது. வழிபாடு, கல்வி, அரசவைப் போன்றவற்றில் அக்காடிய மொழி இடம்பெற்றது. அக்காலக்கட்டத்தில் சுமேரிய இலக்கியங்களை அக்காடியர்கள் மேலும் விரிவாகத் தங்கள் மொழியில் எழுதினர். அதன் விளைவாக கில்கமேஷ் காப்பியம் பனிரெண்டு தட்டைகளாக விரிவடைந்தது. அதிலும் சில பகுதிகள் கிடைக்காமலும் சில பகுதிகளுக்குச் சரியான பொருள் தெரியாமலும் உள்ளன. மாற்றமான பிரதிகளும் உள்ளன. அசீரிய கடைசி அரசனின் பெயரால் அமைக்கப்பெற்ற ‘அசுர்பாணிப்பால் (Ashurbanipal) நூலகத்தின்’ இடிபாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற பல்லாயிரம் களிமண் தட்டைகளிலிருந்து ஆய்வாளர்கள் இக்காப்பியத்தின் முக்கால் பகுதி வடிவத்தை மீட்டெடுத்து மறுநிர்மாணிப்பு செய்து வாசிக்க முயன்றனர்.
அசுர்பாணிப்பால் நூலகத்தின் இடிபாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற பிரதியே சீரான பிரதி ( standerd version) என ஆய்வுலகில் ஏற்கப்பட்டுள்ளது. 12000 சொற்களில் (சித்திர எழுத்துகள்) அமைந்த அந்தக் கவிதைகள் பனிரெண்டு களிமண் தட்டைகளில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வாளர்கள் Templet I – Templet XII என முறைபடுத்தி அடையாளபடுத்தியுள்ளனர். Sîn-lēqi-unninni எனும் அசர குருவே, பொ.ஆ. மு 1200-ல் இக்காப்பியத்தை முழுமை படுத்தியவர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் இந்நூலுக்கு ‘உள்ளார்ந்த தேடல் செய்பவன்’(Sha naqba īmuru) அக்காடிய மொழியில் துணை தலைப்பிட்டுள்ளார்.
கலை நயமும் தத்துவார்த்த தேடலும் மிக்க இக்காப்பியத்தின் கதை இன்றும் வாசிக்கவும் விவாதிக்கவும் ஏற்றதாக இருப்பது அதன் சிறப்பாகும். கில்கமேஷ் காப்பியத்தை ஆங்கிலத்தில் சிலர் மொழிபெயர்திருந்தாலும் Nancy Katharine Sandars மொழிபெயர்பில் 1960 ஆண்டு வெளிவந்த Epic of Gilgames என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. கில்கமேஷ் காப்பியம் பற்றிய பரவலான வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இந்நூல் வழியமைத்தது. என்ரூ ஜோர்ஜ் 1990-ஆண்டு வெளியிட்ட மொழிபெயர்ப்பு மிகக் கடுமையான ஆய்வுகளுக்குப் பின் நேர்த்தியான தகவல்களைக் கொண்டுள்ளது. இந்நூல் களிமண் தட்டை சிதைவுகளில் உள்ள கவிதை வரிகளை அதன் எண் வரிசைப்படி அடுக்கி துள்ளியமாக ஆக்கம் செய்துள்ளது.
கில்கமேஷ்
இக்காப்பியத்தின் நாயகன் கில்கமேஷ் எனும் ஊருக் நகர அரசனாவான். மிகுந்த வலிமையோடும் அழகோடும் ஷமாஸ் எனும் சூரியக் கடவுளால் படைக்கப்பட்ட அவன் முக்கால் பங்கு தேவனாகவும் கால் பங்கு மனிதனாகவும் பிறப்பெடுத்தவன். ஆகவே அதீத ஆணவம் கொண்டு ஆட்சி புரிந்து வருகின்றான். அந்த நகரில் அவனை வெல்ல யாரும் இல்லாத நிலையில் அவ்வூர் பெண்களைத் தன் காமத்திற்கு விருப்பம் போல பயன்படுத்துகின்றான். இளைஞர்களை இழுத்துச் சென்று தன் அடிமையாக்கிக் கொள்கின்றான். இதனால் அவ்வூர் மக்கள் அரசன் கில்கமேஷ் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரூரு எனும் படைப்புத் தெய்வத்திடம் முறையிட்டனர். அரூரு கில்காமேஷை அடக்க அவனுக்கு இணையான இன்னொருவனைக் களிமண்ணில் இருந்து படைத்து வனத்துக்கு அனுப்பியது. அவன் பெயர் என்கீடு(Enkidu). மிகுந்த பலம் பொருந்தியவனாகவும் உடல் முழுதும் அடர்ந்த உரோமம் உள்ளவனாகவும் படைக்கப்பட்ட அவன், வனத்தில் விலங்குகளின் காவலனாக வளர்ந்தான்.. இலை தழைகளையும் மிருகங்களின் பாலையும் குடித்து வளரும் என்கீடு காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கின்றான். வேட்டைக்காரர்கள் வைக்கும் கன்னிகளை உடைக்கிறான். வலையில் சிக்கும் பிராணிகளைக் காப்பாற்றுகின்றான்.
இதனால், வேட்டைக்காரர்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே ஒரு மூத்த வேட்டைக்காரனின் ஆலோசனைப் படி நகரிலிருந்து ஷம்ஹட் எனும் தாசிப் பெண்ணைக் கொண்டு வந்து என்கீடுவை மயக்க முயல்கின்றனர். மிருகங்களுடன் நீர் தடாகத்துக்கு நீர் அறுந்த வரும் என்கீடு ஷம்ஹடை பார்கின்றான். அவள் தன் திறந்த மேனியழகைக் காட்டி அவனை வசப்பட வைக்கின்றாள். பெண் உடலை கண்டிலாத என்கீடு, ஷம்ஹட்டின் அழகில் மயங்கி அவளோடு காமம் தூய்கின்றான். ஏழு பகல் ஆறு இரவுகள் அவன் அவளோடு இன்பம் காண்கிறான்.

பின்னர் அவன் மீண்டும் வனத்தின் மையத்துக்குச் சென்ற போது, அவன் இது நாள்வரை பழகிய விலங்குகள் அவனை அன்னியமாகப் பார்க்கின்றன. அவனை ‘ஒரு மனிதனைக்’ கண்ட அச்சத்தில் அங்கிருந்து ஓடுகின்றன. முன்பு விலங்குகளின் வேகத்தோடு ஈடு கொடுத்து ஓடக்கூடிய என்கீடு இப்போது தன்னைப் பலவீனமாக உணர்கின்றான். தனக்குள் ஏதோ மாற்றம் வந்து விட்டதாக உணர்ந்த என்கீடு மீண்டும் ஷம்ஹாட்டைத் தேடிவருகின்றான்.
இம்முறை ஷம்ஹாட் அவனைத் தன்னோடு வைத்துக் கொண்டு அவனுக்கு நகர மக்கள் வாழும் நாகரீக முறையைக் கற்பிக்கிறாள். உடை அணியவும் உணவுகளைச் சமைத்து உண்ணவும் கற்றுத்தருகிறாள். பின்னர் அவனிடம் ஊரூக் நகரத்தில் அரசன் கில்காமிஷின் அட்டூழியங்களைச் சொல்லி அவனுடன் போர் செய்ய அழைத்துச் செல்கிறாள்.
நகரில், கில்காமிஷ் திருமணமாகவிருக்கும் புதுப்பெண்ணின் படுக்கையறையில் நுழைந்து அவளை அடைய முயல்வதை என்கீடு தடுக்கின்றான். அதனால் அவர்களுக்குள் கடும் மல்யுத்தம் நடக்கின்றது. பல நாட்கள் நடந்த மல்யுத்தப் போரில் கில்காமீஷ் வெல்கின்றான். ஆனால் அவன் என்கீடுவின் ஆற்றலை வியந்து அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கின்றான்.
என்கீடுவை, கில்கமேஷ் நண்பனாக ஏற்க சில தினங்களுக்கு முன் அவன் கண்ட இரண்டு கனவுகள் காரணமாகின்றன. முதல் கனவில் ஒரு எரிகல் வந்து விழுவது போன்றும் அந்தக் கல்லை தான் தன் மகனிடம் கொடுப்பது போன்றும் தோன்றுகின்றது. இரண்டாவது கனவில் சாலையில் ஒரு அழகிய கோடரியைக் கண்டு அதை தன் இடுப்பில் வைத்துக் கொள்வது போல தோன்றுகின்றது. இவ்விரு கனவுகளுக்கும் கில்காமேஷின் தெய்வ நிலை எய்திய தாய், நின்சுன், விளக்கம் சொல்கிறாள். அவை அவனுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் கொண்ட பேராற்றல் பெற்ற ஒருவன் நண்பனாகக் கிடைக்கப் போகிறான் என்பதற்கான முன் அறிவிப்புகள் எனக் கூறுகின்றாள். அதன் படியே அவன் என்கீடுவை நண்பனாக ஏற்கிறான்.
என்கீடுவை நண்பனாகப் பெற்ற பின்னர் கில்காமீஷின் வாழ்க்கை நோக்கம் மாறுகின்றது. தன் பலத்தையும் ஆற்றலையும் பெரும் சாதனைகள் செய்து உலகில் நிலையான பெயர் பெற வேண்டும் என்று நினைக்கின்றான். முதல் சவாலாக வடக்கேயிருக்கும், தேவதாரு மரங்கள் அடர்ந்த வனத்துக்குள் (Cedar Forest) நுழைய திட்டமிடுகின்றான். அது மனிதர்கள் நுழைவதற்குத் தெய்வங்களால் தடை செய்யப்பட்ட வனமாகும். அங்கு வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களை ஹம்பாபா என்ற பூதம் காவல் காக்கின்றது. கில்கமேஷ் ஹம்பாபாவையும் வென்று அங்குள்ள தேவதாரு மரங்களை வெட்ட நினைக்கிறான். ஆகவே தன்னுடன் என்கீடுவையும் அழைத்துச் செல்கின்றான். அவர்கள் சாதாரண மனிதர்கள் முப்பது நாளில் அடையும் பயண தூரத்தை மூன்றே நாளில் அடைகின்றனர். தேவதாரு மரங்களை வெட்டி சாய்தபடி வனத்தை ஊடுறுவுகின்றனர். ஒவ்வொரு இரவும் கில்கமேஷ் பல விநோத கனவுகளைக் காண்கிறான். அவற்றுக்கு என்கீடு பொருள் சொல்கின்றான். இறுதியில் அவர்கள் ஹம்பாபாவுடன் போரிட்டு அதை வீழ்த்துகின்றனர். தெய்வங்களால் மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்ட வனத்தில் புகுந்து தன்னையும் கொன்ற கில்காமேஷையும் என்கீடுவையும் ஹம்பாபா சபிக்கின்றது.
ஊருக் நகருக்குத் திரும்பிய இருவரும் நகரில் பெரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். தேவதாரு வனத்தில் இருந்து கொண்டுவந்த மரங்களால் கில்கமேஷ் தன் கோட்டையைப் புதுப்பித்துக் கொள்கிறான். அப்போது, இஷ்தார் (Istar) எனும் காதல் தெய்வம் கில்காமேஷின் மேல் மோகம் கொள்கிறாள். ஆனால் கில்கமேஷ் ‘உன் நிலையில்லா குணம் எனக்குத் தெரியும், உன் கணவனையும் நீ பாதாலலோகச் சிறையில் அடைத்தவள், உன்னால் உந்தப்பட்ட பலர் படும் துன்பங்களை நான் அறிவேன். ஆகவே உன் வேண்டுகோள்களை நான் கேட்க முடியாது’ என மறுத்து விடுகின்றான்.
இதனால் கோபம் கொண்ட இஷ்தார் சொர்கம் சென்று தன் தந்தையிடம் முறையிடுகின்றாள். தேவலோகத்தில் கட்டப்பட்டுக் கிடக்கும் சொர்க்கத்தின் காளையை ஊருக் நகரில் ஏவி அந்நகரை அழிக்க வேண்டும் என்கிறாள். மறுத்தால், பாதாலபூமியில் அடைப்பட்டுக் கிடக்கும் பிசாசுகளை நகரில் தான் ஏவிவிடப்போவதாக மிரட்டுகிறாள். இறுதியில் சொர்க்கத்தின் காளை ஊருக் நகரில் குதித்துத் தெருக்களைத் துவம்சம் செய்து கொண்டு ஓடுகின்றது. கில்காமேஷும், என்கீடுவும் காளையோடு போரிடுகின்றனர். முன்னும் பின்னுமாகக் காளையை வளைத்துப் பிடித்து அதன் தலையைத் துண்டிக்கின்றனர். இதனால் இஷ்தார் கடும் கோபம் கொண்டு தெய்வ குற்றம் புரிந்த இருவரில் ஒருவன் இறக்க வேண்டும் என்ற தண்டனையைச் சாபமாக இடுகின்றாள். அன்றே என்கீடு கடும் நோயில் விழுகின்றான். முப்பது நாட்கள் அவன் உயிருக்குப் போராடிக் கொண்டு கிடக்கின்றான். அவன் நோயில் விழுந்த செய்தி கேட்டு வனத்திலிருந்து அவனை மீட்ட நகர மனிதனாக மாற்றி தாசிப் பெண் ஷம்ஹாட் அவனைப் பார்க்க வருகிறாள். என்கீடு முதலில் அவளைக் கடுமையாக ஏசுகின்றான். வனத்தில் விலங்குகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த தன்னை அவள் மாற்றியதால் தனக்கு மிக விரைவாக மரணம் வந்து விட்டது எனச் சொல்கின்றான். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள், அவள் அவனுக்கு உணவும் உடையும் தந்து அன்னை போல காத்தவள் என்பதால் அவளை அவன் நன்றியோடு நினைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். என்கீடுவும் தன் மரணத்தின் முன்பாகத் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கேட்கிறான்.
என்கீடுவின் மரணம் கில்காமேஷை அதிகம் துன்புறுத்துகிறது. தன் நண்பனை இழந்த காரணம் தெரியாமல் வாடுகின்றான். வாழ்வின் நிலையாமை அவனை அதிகம் சிந்திக்க வைக்கிறது. தனக்கும் தன் நண்பனைப் போல ஒரு நாள் மரணம் நிகழும் என்ற உண்மை அவனை அச்சம் கொள்ள வைக்கிறது. தன் நண்பனுக்கு நகரில் பெரிய சிலை வைக்க ஏற்பாடு செய்கிறான். தன் செல்வத்தை மக்களுக்குத் தானமாகக் கொடுக்கின்றான். பின்னர் தன் ஆடம்பர உடைகளையும் பகட்டான வாழ்வையும் துறந்து தோலாடை உடுத்தி தேசாந்திரியாக வாழ்வின் பொருள் தேடிச் செல்கின்றான். மரணத்தை வென்று அமரத்துவ வாழ்வு வாழ்வது எப்படி என்ற தேடலில் மூழ்கி, அதற்கான விடையை உத்னாபிஸ்திமிடம் (Utnapishtim) பெற முடியும் என நம்பி அவரைத் தேடிச் செல்கின்றான்.
உத்னாபிஸ்திம் அல்லது ஷியுசுத்ரா என சுமேரியத்தில் குறிப்பிடப்படும் மனிதர் ஒரு காலத்தில் உலகைப் பெரு வெள்ளம் தாக்கிய போது என்கி என்ற தெய்வத்தின் அறிவுரையை ஏற்று ஏழு அடுக்கு பிரமாண்ட கப்பல் செய்து அதில் பல உயிர்களைக் காப்பாற்றிய உன்னத மனிதராவார். உலக உயிர்களை அழிக்க இஸ்தார் என்ற தெய்வம் மற்ற தெய்வங்களின் கருத்தைக் கேட்காமல் தானே பெரும் புயலையும் வெள்ளத்தையும் அனுப்பியது. இதனால், என்கி எனும் தெய்வம் உத்னாபிஸ்திமிடம் நிகழவிருக்கும் பெரும் அழிவிலிருந்து உயிர்களைக் காப்பதற்கான மார்க்கமாகக் கப்பல் செய்யும்படி அறிவுறுத்தியது. அந்தக் கப்பலின் அளவு வடிவம் போன்றவற்றையும் அந்தத் தெய்வமே சொன்னது. ஆறு நாள் தாக்கிய பெரும் புயலிலும் வெள்ளத்திலும் உலக உயிர்கள் அழிந்தன. மனிதர்கள் களிமண் கட்டிகளாக மாறினார்கள். ஆனால், உத்னாபிஸ்திம் அமைத்த கப்பலில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஏறிக் கொண்டனர். மேலும் என்கி சொல்லியபடி பூமியில் வாழும் எல்லா உயிர்களிலும் ஒரு இணையை அவர் கப்பலில் ஏற்றி புயலிலிருந்து காப்பாற்றினார். அவரின் அந்தத் துணிகரச் செயலுக்குப் பரிசாகப் புயலுக்குப் பின்னர் எல்கி என்ற தெய்வம் அவருக்கும் அவரின் மனைவிக்கும் மரணமில்லா நித்திய வாழ்வை வரமாகத் தந்தது. வடக்கில் தனித்தீவில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். உலகில் அவ்வாறான வரம் பெற்ற ஒரே மனிதன் அவர்தான்.
ஆகவெ கில்கமேஷ் நீண்ட பயணம் செய்து அவரைச் சந்திக்கிறான். காரிருள் குகைக்குள் பல மணி நேரங்கள் நடந்து மலையின் அடுத்த பகுதியை அடைகின்றான். அங்கே ‘மரண ஆறு’ என்னும் ஒரு தடையைத் தன் சாமர்த்தியத்தால் கடக்கின்றான். இறுதியில் அவன் உத்னாபிஸ்திமைச் சந்திக்கின்றான். அவர் அவன் வருகையை வியந்தாலும் மரணமில்லா வாழ்வை அவ்வளவு எளிதில் பெற முடியாது என்கின்றார்.
“நீ தேடும் வாழ்க்கையை நீ ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், தெய்வங்கள் மனிதனைப் படைத்தபோது, மரணத்தை அவனுடைய பங்காக வைத்து, வாழ்க்கையைத் தங்கள் கைகளிலேயே நிறுத்திக் கொண்டார்கள். மனிதனின் மரணம் என்பது உறுதியானது. அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது“ என்று கூறுகின்றார். ஆனாலும் கில்கமேஷ் அவரிடம் மரணமில்லா வாழ்வைப் பற்றி தொடர்ந்து பேசவும் அவர் அவனுக்கு ஒரு சோதனை வைக்கின்றார். ஏழு நாட்கள் அவன் உறங்காமல் இருந்தால் மரணமில்லா வாழ்க்கையை அவனுக்குப் பரிசாக தான் வழங்குவதாகக் கூறுகின்றார்.
பல நாட்கள் ஊண் உறக்கமின்றி பயணம் செய்து வந்த தனக்கு ஏழு நாட்கள் தூங்காமல் இருப்பது மிகச் சுலபமானது என அந்தச் சவாலைக் கில்கமேஷ் ஏற்றுக் கொள்கின்றான். ஆனால் அவன் அப்படிச் சொல்லிய உடனே உறக்கம் அவனைத் தழுவிக் கொள்கின்றது. உத்னாபிஸ்திம் தன் மனைவியிடம் கில்கமேஷுக்கு உணவு தயாரிக்கச் சொல்கின்றார். அவர் சுட்ட ரொட்டியைக் கூட உண்ணாமல் அவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு ஏழு நாட்கள் செல்கின்றன. கில்கமேஷ் உண்ணாத ஏழு ரொட்டிகளையும் உத்னாபிஸ்திம் நாள் குறித்து வைத்து அவன் விழித்ததும் காட்டுகிறார். தான் ஏழு நாள் உறக்கத்திலிருந்ததை அவன் அறிந்து கொள்கிறான். கில்கமேஷ் தன் தோல்வியை ஒப்புக் கொள்கின்றான்.
ஆனாலும் மிகுந்த மனச்சோர்வுடன் அங்கிருந்து புறப்படுகின்றான். அப்போது உத்னாபிஸ்திமின் மனைவி, நீண்ட தூரம் பயணம் செய்து அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் கில்காமேஷுக்கு பரிசு கொடுக்காமல் அனுப்பலாகாது எனக் கூறுகிறாள். அவன் தன் ஊருக்கு வெறுங்கையுடன் செல்வது அழகல்ல என அவள் கூறுகின்றாள். ஆகவே உத்னாபிஸ்திம் அங்கு ஓடும் ஆற்றுக்குள் வளர்ந்திருக்கும், மனிதர்களின் இளமையை மீட்டுக் கொடுக்கும் அரிய தாவரம் ஒன்றைப் பற்றிக் கூறி அதை, உன்னுடன் எடுத்துச் செல் என்கிறார். கில்கமேஷ் உடனே ஆற்றில் குதித்து அந்த முட்கள் நிறைந்த செடியைப் பறித்துத் தன் மடியில் கட்டிக் கொள்கிறான். ஊருக்குத் திரும்பியதும் இதை மக்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பின்னர் தான் உண்ணலாம் என முடிவு செய்கின்றான். ஆனால் பயணத்தின் மூன்றாவது நாளில் அவன் ஒரு அழகிய குளத்தைக் காண்கின்றான். அதன் அழகில் மயங்கி உடனே அதில் குளிக்க நினைத்துத் தன் ஆடைகளைக் கழற்றி குளக்கரையில் வைக்கிறான். அந்த ஆடைகளுடன் அவன் ஆற்றில் பறித்த இளமையை மீட்கும் தாவரமும் இருக்கின்றது. அந்தச் செடியின் வாசனையால் ஈர்க்கப்பட்ட நாகம் ஒன்று அங்கே வந்து அச்செடியைத் தின்று உடனே தன் இளமைப் பெற்று அங்கிருந்து செல்கின்றது. இக்காட்சியைக் குளத்தில் நின்ற படி பார்க்கும் கிழ்கா(க)மேஷ் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றான். தன் அலட்சியத்தால் இரண்டு வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக நினைக்கின்றான். இறுதியில் அவன் வெறுங்கையுடன் தன் ஊருக் நகருக்குத் திரும்புகின்றான். ஆனால் அமரத்துவ வாழ்வு என்பது தன் வாழ்நாளில் ஒருவன் செய்யும் அறச்செயல்களின் வழி விளைவது என்னும் உண்மையை உணர்ந்து மக்களுக்குச் சேவைகள் செய்யும் சிறந்த அரசனாக வாழ்கின்றான்.
பனிரெண்டாவது தட்டை
பதினோரு களிமண் தட்டைகளில் மேற்கண்ட கதைக்கான கவிதை வரிகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பனிரெண்டாவது தட்டையில் எழுதப்பட்டவை மேற்கண்ட கதையோடு தொடர்பற்று சற்றே வேறுபட்டிருப்பதால் அதை ஆய்வாளர்கள் இக்காப்பியக் கதையோடு இணைக்காமல் தனித்த இணைப்பாக வைத்துள்ளனர். கில்கமேஷின் பாதாள உலகவாழ்க்கை’ எனப்படும் அப்பகுதி சுமேரியர்கள் ஆதியில் எழுதிய பில்காமேஷ் கதைப்பகுதியின் சிதரளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கில்கமேஷ் காப்பியம் பலவகையிலும் முதிர்ச்சியான இலக்கியப்படைப்பாக அமைந்துள்ளது. நட்பின் மாண்பு, மனிதனின் வாழ்வியல் நோக்கங்கள் அடைய வேண்டிய சாதனைகள், நிலையாமை, மனித வாழ்வின் பயன் என விழுமியங்களைப் பேசுவதோடு, மனித நாகரீக தோற்றம் பற்றிய உரையாடலையும் முன்வைக்கின்றது. கில்கமேஷ் காப்பியம் எழுதப்பட்டுக் குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அது மனித வாழ்வின் என்றும் உள்ள சிக்கல்களைப் பேசியிருப்பதே அதன் சிறப்பாகும்.
மேற்கோள்
மிக அருமை. கில்காமேஷ் காப்பியத்தை மிக எளிமையாக விளக்கியமை அழகு. கட்டுரையில் சுமேரிய மொழி பற்றி மிகப் பெரிய ஆய்வை செய்த Dr. Loganathan அவர்களை ஒரு வரி குறிப்பிட்டு இருக்கலாம்.
அருமை.. இவை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூற்றை ஒட்டியே உள்ளது..
ஆரம்ப சுமேரியர் தமிழ் பேசினர் தமிழில் எழுதினர் என்ற கருத்தை எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.. கீறி, தட்டு, நூலகம் கிறுக்கின, புரட்டு, இடிகனம் போன்ற வார்த்தைகளை முதலில் கண்டு பின் தொடரலாம்..
அடுத்த கட்டுரை எதிர்பார்க்கலாம்…
எனது உடான்ஸ் பாடல் கில்கமேஷ் பாதாள லோகம் சென்றதின் முதல் பத்து வரிகள் பீட்டர் பிரிங்கள்ஸ் பாடுவதுடன் ஒப்பிடபட்டது
காணவும்..
https://docs.google.com/document/d/1V_HV2c8HCv2-SOMQ5I_0Nso_vI-DmDw7BbDI9jB11C8/edit?usp=drivesdk