அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

கே. முகம்மது ரியாஸ்

2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.

ரியாஸ் எனக்கு ‘அத்தர்’ சிறுகதை மூலம் 2021இல் அறிமுகம். நேர்கோடற்ற தன்மையில் எழுதப்பட்ட அக்கதை அத்தர் செய்யும் பாரம்பரிய பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்து, பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய தொழிலில் ஈடுபட்டு நொடித்துப்போன ஓர் இளைஞனின் பார்வையில் சொல்லப்பட்டிருந்தது. முதல் வாசிப்பிலேயே அது நல்ல சிறுகதை எனத் தோன்றியது. அப்படி முதல் வாசிப்பில் தோன்றும் நெருக்கத்தைத் தர்க்கபூர்வமாக விவரிப்பது சிரமம். ஓர் இளம் கலைஞனின் கையில் உள்ள தூரிகையின் லாவகத்தையும் தீவிரத்தையும் ஒருங்கே ஓவியத்தில் காணும்போது வரக்கூடிய நம்பிக்கை எனலாம்.

சிங்கப்பூரில் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றுகிறார் ரியாஸ். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் அவரது சொந்த ஊர். தற்போது இரண்டு மகன்கள், மனைவியோடு சிங்கப்பூரில் வசிக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில்தான் இவரது முதல் சிறுகதை வெளிவந்தது.  ‘சீர்மை’ பதிப்பகம் மூலம் முதல் சிறுகதை தொகுதி 2022இல் வந்தபோது என்னால் ரியாஸின் புனைவுலகை இன்னும் நெருங்கிசெல்ல முடிந்தது.

***

‘அத்தர்’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தபோது ரியாஸ் புதிய தலைமுறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அதற்குச் சில காரணங்கள் இருந்தன. முதன்மையானது, அவர் முன்வைக்கும் வாழ்க்கை.

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. 1946லேயே ‘கடைச் சிப்பந்திகளின் கண்ணீர்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட எம். இப்ராஹிம், 1950களில் தீவிரமாக இயங்கிய மு. அப்துல் லத்தீப், 1970களில் தனித்துவமான கதைகள் எழுதிய மைதீ. சுல்தான், தொண்ணூறுகளில் மலேசியாவின் நவீன இலக்கிய வீச்சுக்கு வழிவகுத்த சை.பீர்முகம்மது என ஒருவாறாகத் தொகுத்துக்கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்களின் வாழ்க்கையும் அவர்களின் பிரத்தியேக மொழியும் பண்பாடும் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்படாதது ஏமாற்றம். வாசிக்கக் கிடைக்கும் படைப்புகளிலும் பொத்தாம்பொதுவான மலேசியத் தமிழரின் வாழ்வே பேசப்படுகின்றன. இந்திய முஸ்லிம்களின் பிரதான வணிக சந்தையாக விளங்கும் ‘மஸ்ஜித் இந்தியா’ போன்ற களங்கள், அவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள், மத நம்பிக்கைகள், தனித்துவமான உரையாடல் மொழிகள் நாவலாகவோ சிறுகதையாகவே ஏன் மலேசியாவில் உருவாகவில்லை என்ற கேள்வியும் ஏக்கமும்தான் ரியாஸ் சிறுகதைகளை வாசித்தபோது முதலில் தோன்றியது.

சிங்கப்பூருக்கு வந்து குடியேறிய சிறிது காலத்திலேயே, இவ்வட்டாரத்தில் இந்திய முஸ்லிம்கள் மேற்கொள்ளும் உணவகத் தொழில், நாணயப் பரிமாற்றுக் கடை, அத்தர் விற்பனை மையம், குருவிகள் எனப்படும் இடைத்தரகரை வைத்துச் செய்யப்படும் பொருள் பட்டுவாடா, மாந்திரீக உலகம், சூஃபிகளின் ஆன்மிக உலகம் என ரியாஸ் கையில் எடுக்கும் களங்கள் தமிழ்ச் சூழலில் புதியவை. அந்தக் களங்கள்தான் ரியாஸை தனித்துவமான எழுத்தாளராக அறிமுகம் செய்கின்றன.

ரியாஸின் சிறுகதைகளில் கவரும் மற்றுமொரு அம்சம் அவரது எழுத்து நடை. இயல்பாகத் தாவிச்செல்லும் காட்சிகள், கவித்துவமான தருணங்கள், காலத்தைச் சிதறவிடும் லாவகம், உவமைகளைப் பயன்படுத்துவதில் உள்ள நுட்பம் என ஒரு சிறுகதையை உயிர்ப்புடன் நகர்த்துகிறார். பெரும்பாலும் அவரது கதைகள் நேர்கோடற்றவை. கலைத்து அடுக்குவதில் கவனம் வைக்காதவை. ஆனாலும் சிக்கலில்லாதவை. அதற்குக் காரணம் ரியாஸிடம் ஒரு வாழ்வைச் சொல்லும் நோக்கு இருக்கிறதே தவிர வாசகனிடம் விளையாடிப் பார்க்கும் முனைப்பு இல்லை. இவ்வியல்புகள் வருங்காலத்தில் தமிழில் சிறந்த கதைகளை வழங்கக்கூடியவர் எனும் நம்பிக்கையை ரியாஸின் மேல் உருவாக்கியது.  

ஒன்பது சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பின் முதல் சிறுகதை ‘உம்மாவின் துப்பட்டி’.

இஸ்மாயில் சிங்கப்பூரின் டன்லப் வீதியில் நுழைந்து, அதன் பரபரப்பில் பெரிய பூ டிசைன் உள்ள துப்பட்டியைத் (தூடோங்) தேடி வாங்குவது அவன் அம்மாவுக்காகத்தான். அம்மாவிடம் அப்படி ஒரு துப்பட்டி ஏற்கெனவே உள்ளது. அது அவனது அப்பா மலேசியாவில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் வேலை செய்தபோது வாங்கி அனுப்பியது. பழுப்பு ஏறிய அந்தப் பழைய துப்பட்டியைச் சொட்டு நீலத்தால் புதுமை செய்து அம்மா அணிகிறாள். இனி அம்மா பழையதை அணியத் தேவை இருக்காது என்பது சிங்கப்பூர் உணவகத்தில் வேலை செய்யும் இஸ்மாயிலின் நம்பிக்கை. ஆனால் அம்மா அதை இன்னொரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டதை எண்ணி மனம் வெதும்புகிறான்.

தமிழ்க் குடும்பங்களில் அம்மா-மகன் உறவு என்பது மிகவும் நுட்பமானது. ஆணாதிக்கம் உள்ள குடும்ப அமைப்பில் பெரும்பாலும் அம்மாக்களுக்கு அப்பாவினால்தான் துன்பங்கள் நேர்ந்திருக்கும். அம்மாவின் கண்ணீருக்கு அப்பா காரணமாக இருப்பதைப் பார்த்தே மகன்கள் வளர்கிறார்கள். காலம் முழுவதும் தன் அப்பாவினால் நிந்திக்கப்படும் அம்மாவின் சோகமே மகனிடம் ஆழப் பதிகிறது. ஒருவகையில் அம்மாவை அந்தக் கொடுமையிலிருந்து மீட்கவே மகன்கள் தன்னை மிக வேகமாகப் பெரியவனாக்கிக்கொள்கிறார்கள். தன்னைப் அப்பாவுக்கு மாற்றாகக் குடும்பத்தில் நிறுவ முயலும் போதெல்லாம் அது முழுமையடையாமல் கண்ணுக்கு அகப்படாத ஒன்று அவர்களிடம் இடறிச்செல்கிறது. அந்த இடறலைத்தான் இக்கதையில் ரியாஸ் எழுத முயன்றுள்ளார்.

இஸ்மாயிலின் அப்பா, தன் அம்மாவை இளமைக் காலத்தில் கைவிட்டவர். மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று எவ்வித தகவலும் தராமல் குடும்பத்தைத் தவிக்கவிட்டவர். இஸ்மாயிலினால் உள்ளூர வெறுக்கப்படுபவர். ஆனால் அந்த அப்பா கொடுத்த துப்பட்டியில் உள்ள மங்கிய பூக்களில் வெளிப்படும் வாசத்தில்தான் அம்மாவின் இளமைக்கால நினைவுகள் எஞ்சி இருக்கின்றன. அந்தப் பூக்களைச் சுற்றி எப்போதாவது வரும் வண்ணத்துப் பூச்சிகள் அவளைப் பொறுத்தவரை கடல் கடந்த கணவன் அனுப்பியது. அப்பா வாங்கிக் கொடுத்த பெரிய மலர் டிசைன் உள்ள துப்பட்டியை வாங்கி அனுப்ப மெனக்கெடும் இஸ்மாயிலினால் அம்மா மட்டுமே அறிந்த அதன் அந்தரங்க வாசனையைத் தருவிக்க முடியவில்லை. இஸ்மாயிலுக்குத் திருமணம் ஆகும்வரை அது ஏன் என்று அவனுக்குப் புரியப்போவதும் இல்லை.

இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க சிறுகதை இது. உறவுகளில் உள்ள நுட்பமான தீற்றல்களை இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில் சொல்ல முயன்றுள்ளார் ரியாஸ். மகன்களை அப்பாவுக்கு மாற்றாகக் குடும்பத்தில் முன்னிறுத்த முயலும் அம்மாதான் அந்நகர்ச்சி முழுமையடையாமல் இருக்கவும் காரணமாக இருக்கிறாள். இந்தப் புரியாமையில் உள்ள மர்மத்தைக் கவித்துவமாக அணுகிப் பார்க்கிறார் ரியாஸ். அப்படி அணுகிப் பார்ப்பதின் இன்னொரு பரிணாமம்தான் ‘அலைகள்’ சிறுகதை.

இக்கதையில் சுனாமியால் கணவனை இழந்த நூருல் என்ற பெண்ணின் அலைக்கழிப்புடன் இளமையில் கணவனை இழந்த தன் தாயின் துயரத்தையும் இணைத்துப் பார்க்கிறான் கதைசொல்லி. அவன் சமூக நலக்குழுவில் பிணங்களைத் தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவன். எனவே சுனாமியால் ஒதுங்கிய பிணங்களை அடையாளம் காணும் வேலைகளில் ஈடுபட்டபோது நூருலைச் சந்திக்கிறான். அப்பாவின் பிணத்தை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு ஈமச்சடங்கு செய்ய காசில்லாத அம்மா, வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்ட காட்சியின் வலி, சுனாமியில் இறந்த பிணங்களில் தன் கணவன் இருக்கிறானா எனத் தேடியலையும் நூருல் மீதும் ஏற்றப்படுகிறது. அக்கணம் அவள் மீது காதல் ஏற்படுகிறது. குழந்தையுள்ள அவளைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். அது காதல்தானா என்ற கேள்வி அவனுக்குள் எழுகிறது.

உண்மையில் அவன் செலுத்த விரும்பும் அன்பு யாருக்குரியது எனும் கேள்வியை இக்கதை எழுப்புகிறது. பாலியத்தில் துக்கம் மிகுந்த அன்னையர்களைச் சந்தித்த மகன்கள் குற்ற உணர்ச்சியுடன் அலைபவர்கள். சக்தியற்ற வயதில், சாத்தியங்களற்ற சூழலில், முடங்கிக் கிடக்கும் அவர்கள் தங்களின் தாழ்வுணர்ச்சியில் இருந்து விடுபடத்தான் இத்தனை பிரயாசையோடு வஞ்சிக்கப்படும் பெண்கள் மீது அன்பு செலுத்துகிறார்களோ? உணர்ச்சிகள் மேலிட திருமணம் குறித்து ஓர் ஆண் எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால் உள்ளது அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மனமா எனச் சிந்திக்க வைக்கும் கதை இது.

ரியாஸ் சிறுகதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் யதார்த்தமானவர்கள்; வலுவானவர்கள். ‘அம்மாவின் துப்பட்டி’ கதையில் வரும் அம்மாவுக்குத் தன் மகன் இஸ்மாயில், சிங்கப்பூருக்குச் சமையல் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை. விமான நிலையத்தில் அவள் புலம்பும் காட்சி இச்சிறுகதையின் உயிர்ப்பான பகுதி. மகனும் கணவனைப் போல ஊர் திரும்பமாட்டான் என அஞ்சுகிறாள். ஆனால் கடைசிவரை தன் பேச்சைக் கேட்காமல் மகன் விமானம் ஏறும்போது விமானத்தில் பயணம் செய்யும் எல்லாருடைய பாதுகாப்புக்காகவும் அங்கேயே அமர்ந்து இறைவனைத் தொழுகிறாள். எத்தனை வயது ஆனாலும் தன் கையை விட்டு பிரியும் பிள்ளைக்கு எப்படிப் பாதுகாப்பு இல்லை என அன்னை கலங்குகிறாளோ அப்படியே  தாயைப் பிரியும் அத்தனைக் குழந்தைக்காகவும் கலங்குகிறாள்.

அக்காட்சியை ஓரிருமுறை கற்பனையில் நிகழ்த்திப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெண் ஒரு கணம் சுயநலமாகவும் மறுகணம் தாய்மை நிறைந்தவளாகவும் எப்படி வண்ணங்கள் மாறுகிறாள் எனச் சித்தரிக்கும் காட்சி அது. தனக்காக வாதாடும் அவள், அடுத்த கணம் இன்னொருவனின் நலனுக்காகவும் இரைஞ்சுகிறாள். தாய்மை ஒருவகையில் சுயநலத்தின் வேறு வடிவம்தான். ஆனால் இஸ்மாயிலின் அம்மா மகனிலிருந்து விரிந்து அவ்விமான நிலையத்தில் பேரன்னையாக உருவானதாகத் தோன்றியது. மனிதர்கள் அப்படி உன்னதமாகும் தருணங்கள் உண்டு. இந்தத் தருணங்கள் சிறுகதையில் நிகழ்ந்து மானுட உச்சங்களைத்  தொட்டுச் செல்லும்போதே அது மனதில் அகலாத புனைவாக நிலைக்கிறது. ரியாஸ் சிறுகதையில் இப்படிச் சில தருணங்கள் தொடர்ந்து வருகின்றன. ‘ஷாகிபா சௌண்ட் சர்வீஸ்’ கதையில் வரும் ஒரு காட்சி அத்தகைய ஒன்று.

இக்கதையில் வரும் ஷாகிபாவின் தந்தை அமீர். வசதியானவர். எனவே மகளுக்கு இலங்கையில் இருந்து வானொலி ஒன்றை வாங்கி வந்து பரிசளிக்கிறார். ஷாகிபாவுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் குரல்மீது ஈர்ப்பு. அந்தக் குரல் உள்ள ஒருவனையே கல்யாணம் செய்துகொள்ள எண்ணுகிறாள். இந்நிலையில்தான் அமீரின் தங்கையைத் திருமணம் செய்துகொண்டு இலங்கையிலும் ஒரு மனைவியை வைத்திருந்த விஷிபகாய் தமிழகம் வந்து சேர்கிறார். கூடவே ஆரிபு என்ற அவரது மகனும் வருகிறான். அவன் இளைஞன். கே.எஸ்.ராஜா ஆரிபு போலத்தான் இருப்பார் என ஷாகிபா நம்புகிறாள். ஆரிபு – ஷாகிபாவுக்கு இடையில் காதல் உருவாகி இடையில் இலங்கைப் போரின் அசாதாரண சூழலாலும் சமூக அந்தஸ்தாலும் இடையூறுகள் ஏற்பட்டுப் பிரிகின்றனர். ஆரிபு கடைசிவரை காதலி விரும்பிய கே.எஸ். ராஜாவின் குரலில் பேசிக்கொண்டிருக்கிறான். ஒருவகையில் இக்கதையைக் கற்பனாவாத அழகியல் [Romanticism] என வகைப்படுத்தலாம். ஆனால் இக்கதையில் உச்சமான காட்சியாக நான் கருதுவது வீட்டுக்குள் இரண்டாம் தாரத்தின் மகனான ஆரிபு நுழைந்தால் பிணம் விழும் எனக் கொதித்த விஷிபகாயின் மனைவி தன் அண்ணனிடம் வரன் பேசும் காட்சி. ஊரையே கூட்டி தனக்கு நடந்துள்ள அநீதிக்காகக் கணவனிடம் வாதாடும் ஒரு பெண் அவள். அவன் வீட்டில் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கொதித்தவள்; வீட்டுக்குள் சென்று பேசலாம் என கெஞ்சிய கணவனை அசட்டை செய்தவள்; தனக்குத் துரோகம் இழைத்தவனுக்கு எல்லா அவமதிப்புகளையும் தேடித்தரத் துணிந்தவள்; அவள்தான் இரண்டாம் தார மகனுக்காக அண்ணனிடம் இரைஞ்சுகிறாள். அண்ணனிடம் அவமதிப்பு அடையத் தயாராகிறாள். இன்னொருவள் பெற்ற பிள்ளைக்கு முழுமையான தாயாகிறாள்.

ரியாஸின் கதைகளில் மறுபடி மறுபடி பரிதவிப்பான அன்னையர்கள் எட்டிப் பார்க்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் அவர்களது கண்ணீர்த் துளிகள் கதையில் ஈரத்துடன் பிசுபிசுக்கவே செய்கிறது. முழுமையாக வாசித்தபோது ரியாஸின் புனைவுலகினுள் ஆதாரமாக இருப்பது கண்ணீர் நிறைந்த ஓர் அன்னையோ எனத் தோன்றியது. உதாரணமாக ‘செந்தாழை’ சிறுகதை. 

இக்கதையில் கதைசொல்லியின் அப்பா யானையை அடக்கும் மந்திரம் தெரிந்தவர். ஆனால் யானை மிதித்தே சாகிறார். அப்பாவின் மரணத்தைப் பார்த்த அம்மா அலறியடித்துக்கொண்டு கதைசொல்லியைத் தூக்கிக்கொண்டு ஓடியது அவனுக்கு இன்னமும் நினைவில் உள்ளது. பின்னாள்களில் யானைகளைக் கப்பல்களில் ஏற்றும் பணியைச் செய்யும் அவன் யானையின் குணங்களை அறிந்து வைத்துள்ளான். மிக முக்கியமாக அதன் புதிரான குணங்கள். பாகனையும் கொல்லும் யானையின் கட்டுப்படா காட்டுத்தன்மையை வியப்புடன் அறிகிறான். அதன் குணங்களை உள்வாங்கியவன் மெல்ல மெல்ல ஒரு யானையாக மாறுகிறான். சந்தர்ப்பம் நிகழும்போது தன்னை நம்பிய ஒருவனின் கொலைக்குக் காரணமாகி அவன் மனைவியின் அழுகையை மௌனமாகப் பார்க்கிறான். ஏன் அவன் அதைச் செய்கிறான்? நண்பனின் மனைவி பேரழகி. அவனிடம் உறவு கொள்ள ஆசைப்படுபவள். ஆனாலும் ஜப்பானியர்களால் அவன் கழுத்துத் துண்டாகக் கதைசொல்லி காரணமாக இருக்கிறான். தாயின் அழுகையை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தவன், அவளது துக்கமான தினங்களில் மேலும் சுமையாக மட்டுமே தோளில் ஏறி நின்றவன் இன்னும் பிற பெண்களின் கண்ணீரை ஆனந்தத்துடன் பார்க்கக் கூடியவனாகிறான்.

ரியாஸின் கதைகளில் சந்திக்கும் இதுபோன்ற தருணங்களே அவர் கதையின் பலம். மனிதர்களின் அசலான பிரதிபலிப்பை அவர் எழுதுவதன் மூலம் வாழ்வின் மிகச் சிக்கலான பகுதிகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார். உறவுகளில் உள்ள புதிரான பாதைகளில் புகுந்து செல்லும் வாசல்களைத் தயக்கத்துடன் திறந்து காட்டுகிறார்.

இத்தொகுப்பில் ‘சேஞ்ச் ஆலி’ மற்றும் ‘மென்பொருள்’ ஆகிய இரு சிறுகதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு முகங்களைக் காட்டுபவை. ‘சேஞ்ச் ஆலி’ பரபரப்பு மிகுந்த ராஃபிள்ஸ் பிளேஸ் எனும் பகுதியின் நாணய பரிமாற்று சந்தையையும் ‘மென்பொருள்’ ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் களமாகக் கொண்டவை. இவ்விரு தளங்களிலும் மையப் பாத்திரங்களாக வரும் அப்பாஸ், பாபு ஆகியோர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதில் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள் என்பதையும் இக்கதைகள் கையாண்டுள்ளன.

ரியாஸ் புனைவு வித்தை தெரிந்தவர் என்பதற்கு இக்கதைகள் இரண்டும் உதாரணம். இவ்விரு கதைகளின் பின்னல் பிரபலமானவை. வேறு சில கதைகளை நினைவூட்டுபவை. ஆனால் இவை தன்னளவில் நிறைவான வாசிப்பை வழங்க பாத்திர வார்ப்பில் இருக்கும் கவனமும் சிக்கலைத் தீவிரமாக வளர்த்துச் செல்லும் பாங்குமே காரணமாக உள்ளன.

வணிக சூழ்ச்சியில் அலட்டலில்லாமல் ஈடுபடும் ஒருவன், அதனாலேயே ஊரை விட்டு ஓடி வந்தவன், பெரும்பாலும் பிறர் நம்பிக்கையை இழந்தவனை வாழ்க்கை துரத்தி அடிக்கிறது. அவனை வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு எதிர்பதமாகத் தன்னை நிரூபிக்க நினைக்கும் ஒருவன், நற்பெயரைப் பெற பணிந்து செல்பவன், வேலையிடத்தில் முழுமையாக ஒப்புக்கொடுப்பவனையும் வாழ்க்கை விரட்டியடிக்கிறது. அவனும் வேலையை விட்டு நீங்குகிறான்.

வெவ்வேறு குணாதிசியங்கள், வாழ்க்கைப் பின்னணிகள், மனநிலைகள், சமூக அந்தஸ்துகள் உள்ள இருவர் சிங்கப்பூர் எனும் இரு வேறுபாடான நிலத்தில் சந்திக்கும் சிக்கல்களின் தீர்வுகளை இக்கதைகள் பேசவில்லை. மாறாக, சிக்கல்களில் அடையும் பரிணாமத்தைப் புனைந்து காட்டுகிறார் ரியாஸ்.

‘சேஞ்ச் ஆலி’ சிறுகதையில் நாணய பரிமாற்று கடையில் வேலையை இழக்கும் அப்பாஸ் அதுவரை தான் பெறாத நம்பிக்கையைத் தனது நேர்மையால் பெற்றவனாக தன் இல்லாமைக்குப் பிறகும் நினைவுகளில் நிலைக்கிறான். அவன் அதைத் திட்டமிடவில்லை. வணிகத்தில் மட்டுமே அவன் சூழ்ச்சிகள் இயங்குகிறதே தவிர தனி மனிதனிடம் இல்லை. இழப்புகள் குறித்தும் அவனுக்குக் கவலையில்லை. கடனைத் தீர்க்க ஊரை விட்டு சிங்கப்பூருக்கு ஓடி வந்தவனுக்கு வேறொரு இடம் பார்த்துச் செல்லவும் தடையில்லை. சிக்கல்கள் அவன் இயல்புத்தன்மையைக் குலைக்கவில்லை.

‘மென்பொருள்’ சிறுகதையில் சதா தனது மூத்த அதிகாரி லீ-யினால் பரிகாசம் செய்யப்படும் பாபு வேலையைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறான். இறுதியில் லீயிடம் தோற்று வேலை மாறிச் செல்கிறான். அவன் வேலைக்கு இணைவது லீ இணைய முயன்று தோற்ற ஒரு நிறுவனத்தில். ஆனாலும் தற்செயலாக லீயைச் சந்திக்கும்போது பாபுவிடம் நிமிர்வில்லை. தன் உடலைக் குறுக்கிக்கொள்கிறான். லீயிடம் இருந்து தன்னை மறைத்துக்கொள்ள முயல்கிறான். உண்மையில் பாபு தன்னை மறைத்துக்கொள்வது லீயிடம் இருந்தல்ல; தன்னிடமிருந்துதான். புதிய நிறுவனம் மிகப் பெரியது. பல நூறு லீ-க்கள் சஞ்சரிக்கும் இடம் அது. லீயிடம் பட்ட அவமானங்களைவிட பலநூறு அவமானங்களைத் தினம் தினம் எதிர்கொள்ள வேண்டும். வெற்றி சில சமயத்தில் குறுக்க வைக்கவும் செய்கிறது.

***

ஆரம்பகட்ட எழுத்தாளர்களின் புனைவுகளில் உள்ள அடிப்படையான சிக்கல்கள் சில ‘அத்தர்’ தொகுப்பில் இருந்தாலும் அவையெல்லாம் ரியாஸினால் கடந்துவரக்கூடியவையே என்பதற்கான சான்றுகளும் இந்தத் தொகுப்பில்தான் உள்ளன. தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த சிங்கை எழுத்தாளர்கள் பலரும் வலிந்து தங்கள் புனைவுகளில் சிங்கை அடையாளங்களைத் திணித்து ‘அது சிங்கப்பூர் படைப்பு’ எனக் காட்டும் தொற்று நோயிலிருந்து விடுபட்டால் அவர் கதைகள் இன்னும் இயல்பாக இருக்கும்.

என் வாசிப்பில் ‘அத்தர்’ தொகுப்பில் உள்ள பிரதானமான பலவீனம் என்று ஒன்றைத்தான் சொல்வேன். அது தத்துவத்தை முன்வைக்க சிறுகதை புனைதல்.

கதைக்கும் சிறுகதைக்குமான அடிப்படை வித்தியாசம் என இதனைச் சொல்லலாம். ஒரு தத்துவத்தை அல்லது நீதியைச் சொல்ல எழுதப்படுவது கதை. கதையின் அத்தனை கூறுகளும் நீதியை வலியுறுத்தவே முனைப்புக் கொள்கின்றன. அதன் பொருட்டே அத்தனை காட்சிகளும் வடிவமைக்கப்படுகின்றன. கதை எழுத்தாளனுக்கு நீதி மனதில் இருப்பதால் அதை விட்டு எங்கும் விலக மாட்டான். அதனால்தான் கதைகள் மாணவர்களுக்கு ஏற்றவையாக உள்ளன. சிறுகதையில் கரு விவாதிக்கப்பட்டு எழுத்தாளனால் தத்துவம் கண்டடையப்படுகிறது. எழுத்தாளன் ஒரு சிக்கலான வாழ்வின் தருணத்தை உருவாக்கி அதனுள் விவாதித்துத் தனித்த உண்மையை அடைகிறான். கதை தான் நம்புவதைச் சொல்ல எழுதப்படுவதல்ல. தான் நம்புவதை தனக்குள் விவாதித்துப் பார்க்க எழுதப்படுகிறது.

அத்தர் தொகுப்பில் உள்ள ‘அத்தர்’, ‘புறப்பாடு’ ஆகியவைச் சூஃபி தத்துவத்தை உள்வாங்கிய கதைகள். இவ்விரு சிறுகதைகளுமே கவித்துவமான மொழியால் பரவலாகக் கவனம் பெற்றவை. முதல் கதையில் அத்தர் தயாராகும் நுட்பமும் இரண்டாம் கதையில் ‘ஸமா’ நடனமும் மையமானவை. அங்கிருந்து சூஃபிகளின் தத்துவம் இறையனுபவம் என விரிபவை. குறிப்பாக ‘புறப்பாடு’ கதையில் அகமத் காணும் மாந்திரீக உலகமும் அதையொட்டி நடக்கும் வணிகமும் வாசகனைப் பிடிவாதமாகக் கதைக்குள் இழுத்துச் செல்பவை. சூஃபிஸம் இக்கதைகளின் மையமாக இருப்பதுபோலவே இவ்விரு கதைகளின் உடலும் நேர்கோடற்ற தன்மையில்தான் சொல்லப்பட்டுள்ளன.   

இவ்விரு கதைகளை வாசித்தபோது கேரம் போட்டில் காய்களை அடித்துக் கலைப்பதுதான் சட்டென எனக்கு நினைவுக்கு வந்தன. எவ்வளவு கலைத்ததாகக் காட்டப்பட்டாலும் அவை போட்டின் சட்டகத்துக்குள்தான் அடங்கியுள்ளன. அந்தச் சட்டகத்திற்குள் அடங்க வேண்டும் என்ற பிரஞ்சையோடுதான் காய்களும் கலைக்கப்பட்டிருந்தன.

இவ்விரு கதைகளிலும் உள்ள பலவீனமாகச் சூஃபி தத்துவத்தை மனதில் உள்வாங்கிக்கொண்டு, அதை நிறுவ கதையை வடிப்பதில் உள்ள ஆசிரியர் குறுக்கீடுகளை முதன்மையான காரணமாகச் சொல்லலாம். ‘பூக்களை எத்தனை முறை கசக்கினாலும் அது வாசனையை மட்டுமே கொடுப்பதுபோல, மனிதன் வாழ்வில் அலைக்கழிக்கப்படும்போது அவனிடமுள்ள மலர்கள் கசக்கப்பட்டு அவனும் உலகுக்கு தூய பங்களிப்பை வழங்குவான்’ என அத்தரின் இறுதி வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதுபோல ‘புறப்பாடு’ சிறுகதையில் ‘உலகியலை விட்டுவிலகுவது அல்ல ஆன்மிகம்; விலகலில் பெற்ற பலனை மீண்டும் உலகுக்கு வழங்குவது’ எனச் சொல்ல வருகிறார்.

புனைவு குறித்துப் பிரபலமாகச் சொல்லப்படும் விதி, அது சொல்வதல்ல காட்டுவது என்பதுதான். இவ்விரு கதைகளிலும் வரும் சூஃபி ஞானிகள் வழி அதன் மைய கருத்துகள் சொல்லப்படும்போது வாசகனால் மேற்கொண்டு அதில் அடைவதற்கு ஒன்றும் இல்லாமல் போகிறது.

***

‘அத்தர்’ ரியாஸை அடையாளப்படுத்தும் தொகுப்பு. சிங்கப்பூர் போன்ற தேசத்தில் இப்படி ஒரு தொகுப்பு வரும்போது அது உரையாடலுக்கான பொருளாக மாற வேண்டும். பல வாசிப்புகளின் வழி அக்கதைகளைப் பேசுபொருளாக்க வேண்டும். நல்ல நூல்களை அடையாளம் காணத் தவறும்போது சிங்கப்பூர் இலக்கியத்தின் தனித்தன்மையும் சிறப்பும் பின்னடைய வாய்ப்புண்டு. குறிப்பாக, சந்தை உத்திகளால் அல்லாதவை கொண்டாடப்படும் சூழலில், புதிய வாசகர்கள் வளர்ந்து வரவும், கனிந்த வாசகர்களின் ஏற்புக்கும் நல்ல நூல்கள் குறித்த தொடர் உரையாடல்கள் மிகத் தேவையாக உள்ளன.

1 comment for “அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

  1. Mohamed Razmi
    March 1, 2023 at 2:18 pm

    தரமான விமர்சனம். ரியாசுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...