“இது என்ன புது சடங்கா இருக்குது. எங்க தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா யாருக்குமே இப்படிசெஞ்சதில்லை” என்றாள் சுந்தரி. “எரிச்சதுக்கு மறுநாள் பால் ஊத்தறதுக்கு சுடுகாட்டுக்கு போவாங்க. அங்க ஒரு பிடி சாம்பல எடுத்து ஒரு சொம்புல போட்டு துணியால மூடி கட்டிடுவாங்க. அப்பறம் நேரா சீறங்கப்பட்டணம் போயி கரைச்சிட்டு வந்துடுவாங்க. அதத்தான் நான் பார்த்திருக்கேன்”
வேலு உடனடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்துக்கொண்டான். அவள் முகத்தை அக்கணத்தில் அவனால் நேருக்குநேர் பார்க்க முடியவில்லை. பிறகு மெல்லிய குரலில் “சாகற நேரத்துல ஒரு ஆளு காசிக்கு போய் என் சாம்பல கங்கையில கரைச்சிடுப்பான்னு சொல்லும்போது முடியாதுன்னு சொல்ல மனசு வரலை” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான்.
அந்த இடைவெளியில் “ஆமா, சொல்றவங்க வாய்சுளுவா சொல்லிட்டு போயிட்டாங்க. அதுக்கு உண்டாவற செலவுக்கு இப்ப யாரு பணம் தருவா?” என்றபடி ஒரு கேள்வியை எழுப்பினாள் சுந்தரி.
உடனடியாக அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தான் வேலு. பள்ளிக்குச் செல்வதற்காக சீருடை அணிந்திருந்த பெரிய மகள், மற்ற இரு பிள்ளைகளுக்கும் சீருடையை அணிந்துகொள்ள உதவுவதை அவன் கண்கள் கவனித்தபடி இருந்தன.
அந்த அமைதியால் ஊக்கம் கொண்ட சுந்தரி ”காசிக்கு போய் வர்ரதுன்னா அல்சூருலேருந்து மெஜஸ்டிக் போய்வர்ர மாதிரின்னு நெனைச்சிட்டியா? போவ ரெண்டு நாளு வர ரெண்டு நாளு வேணும். செலவுக்கு பணமும் வேணும். தெரியுமா?” என்று கேட்டாள்.
அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை. மெளனமாக முகத்தைத் திருப்பி நடுவீட்டில் சுவரோரமாக ஒரு துணியால் சுற்றிவைக்கப்பட்டிருந்த வெண்கலச்செம்பின் பக்கமாக பார்வையைத் திருப்பினான் வேலு. அதற்குள்தான் சாம்பல் இருந்தது. அதற்குமேல் மாலையிட்ட அப்பாவின் படம். அருகில் ஒரு விளக்கு.
அவன் அப்பா நல்ல உறுதியான மனிதர். மார்க்கெட்டில் பல ஆண்டுகள் மூட்டை தூக்கி உரமேறிய உடல். அங்கே அரிசிமண்டி வைத்திருந்த ஜெயராமன் உடையார் அல்சூரில் ஒரு ரைஸ் மில்லைத் தொடங்கிய போது அப்பாவுக்கு மாதச்சம்பளம் பேசி தன்னோடேயே வைத்துக்கொண்டார். சாமராஜபேட்டையில் தங்கியிருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு அல்சூரில் வேறொரு வாடகை வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அப்பா. அவருடைய நேர்மையும் உழைப்பும் அவருக்கு மதிப்பைத் தேடிக் கொடுத்தது. முதலாளியோடும் அவர் குடும்பத்தாரோடும் பழகிப்பழகி பல விஷயங்களை அவர் தெரிந்துகொண்டார். அப்படி தெரிந்துகொண்ட பல விஷயங்களில் ஒன்றுதான் காசிப்பயணம்.
சுந்தரி அந்தச் சாம்பல் செம்பை உற்றுப் பார்த்தாள். அவளால் அதை ஒரு மனிதராகப் பார்க் கமுடியவில்லை. காசித் திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்றொரு வெறி மட்டும் அவளை ஆட்டிப்படைத்தது. “காசிக்கு போய் கங்கையில கரைச்சாதான் சாம்பல் கரையுமா? வேற இடத்துல கரையாதா?” என்று தொடங்கினாள்.
“ஏன் கரையாது? எங்க கரைச்சாலும் கரைஞ்சிதான் போவும். என்னமோ ஒரு நம்பிக்கை. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருக்காது. பரம்பரைக்கு புண்ணியம். அப்படி ஏதோ ஒன்னு. காலங்காலமா அந்த நம்பிக்கையோடு செய்யறவங்க உலகம் முழுக்க இருக்கறாங்கதான?” என்று பொதுவாகச் சொன்னான்.
“ஆமா” என்றபடி முகவாயை தோள்பக்கம் வளைத்து இடித்துக்கொண்டாள் சுந்தரி. அவளுக்கு வேலு சொன்னது புரியவில்லை. ஆனால்எரிச்சல் மட்டும் பெருகி வந்தது.
சுந்தரியோடு சுமுகமாக உரையாடுவது என்பதே முடியாத காரியம். எப்போதுமே ஒரு கசப்பு. எரிச்சல். வருத்தம். சுடுதண்ணீரை காலில் ஊற்றிக்கொண்டவளைப் போல கடுகடுவென்றுதான் அவளுடைய பேச்சு இருக்கும்.ஒரு கீரைக்கட்டு வாங்கிவரத் தெரியுதா? வெம்பிப்போன பழம் எது, நல்ல பழம் எதுன்னு பார்க்கும்போதே உங்களுக்கு தெரியாதா? ஆறு மணிக்கு வரச்சொன்னா ஏழு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்?என் பேச்சுக்கு ஒரு மதிப்பே இல்லையா? என்று எதைத் தொடங்கினாலும் எரிச்சலோடுதான் தொடங்குவாள்.
“சரியோ தப்போ? என்னமோ ஒன்னு. வயசான மனுஷன். எவ்ளோ செலவு பண்ணியாச்சி. இன்னும் கொஞ்சம் செலவுசெஞ்சி அவருடைய கடைசி ஆசையை நிறைவேத்தி வைக்கறதுல நமக்கு என்ன நஷ்டம் வந்துடப்போவுது?”
“நஷ்டமே கெடையாது. எல்லாமே இந்த ஊட்டுல லாபக்கணக்குதான். பத்து பன்னெண்டு வருஷமா அதைத்தான் பாக்கறனே. தெரியாதா என்ன?”
“செலவு என்ன நம்ம கேட்டுகிட்டா வருது? தானா வருது. வந்தா கடன ஒடன வாங்கி சமாளிக்க வேண்டிதுதான்”
“அது சரி. ஏற்கனவே சாவு எடுக்க செஞ்ச செலவையே கணக்கு பார்த்து முடியலை. அன்னைக்கு என் காதுல போட்டிருந்த கம்மல வாங்கி போய் அடகு வச்சி பணம் வாங்கியாந்தது ஞாபகம் இருக்குதில்ல?”
“இருக்குது. இருக்குது. நான் என்ன இல்லைன்னா சொன்னேன்? இப்ப எதுக்கு அத சொல்லி குத்திக் காட்டற? செலவோடு செலவா இதயும் செஞ்சி முடிச்சிடணும்னுதான் சொன்னேன். அப்பதான் நிம்மதியா இருக்கும்.”
“இனிமேல கழட்டி கொடுக்க என்ன இருக்குது? தாலியைத்தான் கழட்டி கொடுக்கணும்?”
“ஐயோ, காலங்கார்த்தால ஏன் இப்படி அபசகுனமா பேசற நீ?ஒன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா? வாழற பொம்பளைமாதிரியா பேசற?”
ஒரு வேகத்தில் சுந்தரியை அடிப்பதற்கு கையை ஓங்கிவிட்டான். ஆனால் அக்கணத்திலேயே மனம் மாறி நிறுத்திவிட்டான். ஓங்கிய கையால் தன் தலையிலேயே பட்பட்டென்று அடித்துக்கொண்டான். புத்தகப்பைகளோடு தயாராக நின்றிருந்த பிள்ளைகள் அக்காட்சியைப் பார்த்து மிரட்சியுற்று பின்வாங்குவதைப் பார்த்து அவசரமாக விலகி வந்து சுவரோரமாக வந்து உட்கார்ந்துகொண்டான்.
”எதுக்கு நிறுத்திட்ட? என்னயும் அடிச்சி கொன்னு சாம்பலாக்கிடு. தினம்தினமும் செத்து செத்து சாம்பலாவறதவிட ஒரேடியா போய் சேந்துடறேன்” என்று கூச்சலிட்டாள் சுந்தரி.
அவன் சோர்வுற்றவனாக உணர்ந்தான். விழியோரமாக திரண்ட கண்ணீர்த்துளியை விரலை உயர்த்தித் துடைத்தான் ”வாங்கடா பசங்களா, இந்த பேச்சு இன்னைக்கு ஓயாது. ஸ்கூலுக்கு நேரமாய்டுச்சி” என்றபடி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
சுந்தரி அவனைத் தொடர்ந்து பின்னாலேயே வந்தாள்.
“நீ காசிக்கு போய் கரைச்சாலும் சரி, ராமேஸ்வரத்துக்கு போய் கரைச்சாலும் சரி. சட்டுபுட்டுனு சீக்கிரம் முடி. நடு ஊட்டுல ரொம்ப நாள் வச்சிக்கறது சரியில்லை. சின்ன புள்ளைங்க இருக்கற ஊடு. அது ஞாபகத்துல இருக்கட்டும்”
அவன் அவள் பக்கம் திரும்பாமலேயே பிள்ளைகளுடைய புத்தகப்பைகளை வாங்கி சைக்கிள் ஹேண்ட்பாரில் இரு புறங்களிலும் மாட்டி தொங்கவிட்டான். பிறகு முன்பக்கமும் பின்பக்கமுமாக அவர்களை உட்காரவைத்துக்கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்றான்.
உயிரோடு இருந்த காலத்தில் அவன் அப்பா அவனிடம் பலமுறை கேட்டிருக்கிறார்.“எதுக்குடா அவ கூட சண்டை போட்டுகினே இருக்கிற? ஒரு நாளைக்காவது நிம்மதியா கஞ்சி குடிக்கறியா? உங்களுக்குள்ள எதுக்குடா சண்டை வருது? ஒங்கம்மாவும் நானும் முப்பது வருஷம் ஒன்னா வாழ்ந்திருக்கம்.ஒருநாள் கூட எங்களுக்குள்ள சண்டையே வந்ததில்லை தெரியுமா?”
“சண்டைலாம் எதுவுமில்லைப்பா”
“நீங்க ரெண்டு பேரும் ஒருத்தவங்கள பார்த்து ஒருத்தவங்க பேசிக்கறதுக்கு வேற என்னடா பேரு சொல்லறது?”
“அது ஒண்ணுமில்லைப்பா. சாதாரண விஷயம்தான். விட்டுத் தள்ளுங்கப்பா”
கடைசிவரை அவர்களுக்குள் நிகழும் மோதலுக்கான காரணத்தைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டான். அதைத் தெரிந்துகொண்டு அவர் மனவேதனைப்படுவதைவிட தெரியாமலேயே போவது நல்லது என்று அவன் முடிவுசெய்துவிட்டான்.
வேலுவின் அப்பாவும் சுந்தரியும் அப்பாவும் பால்யகால நண்பர்கள். ஒரு காலத்தில் இருவருடைய வீடுகளும் சாமராஜபேட்டையில் அருகருகில் இருந்தன. ஆரம்பத்தில் இருவரும் மார்க்கெட் கடைகளில் மூட்டை தூக்கியவர்கள். அப்பா அல்சூர் பக்கம் வந்த பிறகுதான் தொடர்புகள் குறைந்துவிட்டன. வேலுவுக்கு திருமணம் செய்துவைக்க பெண் பார்க்கத் தொடங்கி இரண்டு வருஷங்கள் பறந்துவிட்ட நிலையில் ஏதேதோ காரணங்களால் எந்த சம்பந்தமும் அமையாமல் போய்க்கொண்டே இருந்தது. பழைய நண்பன் என்கிற உரிமையில் சுந்தரியின் அப்பாவோடு பேசி திருமணத்தை நடத்திவைத்தார்.
மேடையில் மாலை மாற்றிக்கொள்ளும் சமயத்தில் வேலுவை சுந்தரி நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. குனிந்தவாக்கில் கைகளை மட்டும் உயர்த்தி மாலையை அவன் கழுத்தில் சூட்டினாள். அக்கணத்தில் புதுப்பெண்ணுக்குரிய வெட்கம் என அதை அவன் நினைத்துக்கொண்டான். ஆனால் அவள் முகத்தில் கொஞ்சம் கூட மலர்ச்சியே இல்லை என்பதை அவன் போகப்போகத்தான் கவனித்தான். விருந்து சமயத்தில் அருகில் அமர்ந்து சாப்பிடும்போது அவன் அதை உறுதி செய்துகொண்டான். அவள் கைவிரல்கள் இலையில் வைத்திருந்த சோற்றுக்குவியலில் அளைந்தபடியே இருந்தன.
அன்று பின்கட்டுக்குச் சென்று கைகழுவிவிட்டு திரும்பும்போது சுந்தரியின் அப்பா “வேலு தம்பி, ஒரு நிமிஷம். உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சொல்லிக்கொண்டே நெருங்கிவந்து அவனை நிறுத்தினார்.“சொல்லுங்க மாமா” என்றபடி கைக்குட்டையில் கைகளைத் துடைத்துக்கொண்டே நின்றான் வேலு.
“தம்பி, என் பையனுக்கு ஒன் பொண்ண தரியான்னு அப்பா கேட்டதும் ஒரு சந்தோஷத்துல எதையும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன். என் மனசுலயும் அப்படி ஒரு ஆசை இருந்ததுன்னு வச்சிக்கலாம். ஆனா என் பொண்ணு ரெண்டு மனசா இருந்தா. எங்கனா ஸ்கூல்ல வேலை செய்றவன், ஆபீஸ்ல வேலை செய்றவன் மாதிரி ஆளுங்கள கல்யாணம் செஞ்சிக்கணும்னு ஆசை போல. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லித்தான் ஏத்துக்க வச்சிருக்கேன். கொஞ்சம் மொரட்டுத்தனம் உள்ள பொண்ணுதான். ஆனா குணத்துல தங்கம். நீயே போகப்போக புரிஞ்சிக்குவ. விஷயத்தை யாரு காதுலயும் போடாம, நீதான் அவளை கொஞ்சம்கொஞ்சமா வழிக்கு கொண்டு வரணும்”
“பழகப்பழக தானாவே புரிஞ்சிக்கும் மாமா. நீங்க கவலைப்படாம இருங்க” என்று தன்னம்பிக்கையோடு சொன்னான் வேலு. ஆனால் அவள் மனசில் அடைத்துக்கொண்டிருக்கும் கசப்புகளை அவனால் கொஞ்சம் கூட அகற்றமுடியாமலேயே போய்விட்டது. வாய்ப்பேச்சுகளும் கருத்து மோதல்களும் தவிர்க்க முடியாததாகிவிட்டன.
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு திரும்பும்போது அவன் மனம் முழுக்க பணத்தைப் புரட்டும் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தது. யாரிடம் கடன் கேட்பது என்று புரியாமல் குழம்பினான். ஏற்கனவே அவன் பலரிடம் கைநீட்டி கடன் வாங்கியிருந்தான்.
சோமேஸ்வரர் கோவிலுக்கு அருகில் முதலாளியின் வீட்டைக் கடக்கும்போது அவரிடமே ஒரு வார்த்தை கேட்டுப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. கடையில் வைத்து கேட்பதைவிட, வீட்டில் சந்தித்து கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.மிதிவண்டியை அவர் வீட்டுக்கு அருகில் நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.முதலாளியின் மனைவி வந்து கதவைத் திறந்தார்.
“வா வேலு, எல்லாம் முடிஞ்சிதா?”
“முடிஞ்ச மாதிரிதாம்மா. ஒரு சின்ன வேலை மட்டும் பாக்கியிருக்குதுங்க”
அதற்குள் மேலாடையைப் போட்டுக்கொண்டபடி முதலாளியே வெளியே வந்தார்.“என்னடா அது சின்ன வேலை, பெரிய வேலைன்னு?” என்று கேட்டார். அவன் அவசரமாக அவருக்கு வணக்கம் சொன்னான்.
“அப்பா சாம்பல் இருக்குதுங்க. அத கரைச்சிட்டு வரணும்”
“அது என்னடா பெரிய வேலை. வழக்கமா எல்லாரும் செய்யற வேலைதான? அத செய்யறதுல உனக்கு என்ன கஷ்டம்?”
“அப்பாவுக்கு சாம்பல காசிக்கு கொண்டு போய் கங்கையில கரைக்கணும்னு ஒரு விருப்பம்”
“காசியிலயா? ஏன் அங்க?”
“என்னமோ அவருக்கு அப்படி ஒரு ஆசைங்க. உயிர் பிரியறதுக்கு முன்னாலதாங்க வாய்விட்டு சொன்னாரு”
“போக வர நெறய செலவாகுமே வேலு?”
“ஆமா. அதுக்காகத்தான் ஐயாவை பார்த்துட்டு போவலாம்ன்னு வந்தேன். ஒரு அஞ்சாயிரம் கொடுத்தீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும்”
“என்ன வேலு இது? என்னமோ அஞ்சு ரூபா கொடுன்னு கேக்கற மாதிரி ரொம்ப வாய்சுளுவா கேக்கறியே. அவ்ளோ பணத்துக்கு திடீர்னு நான் எங்க போவேன்? நம்ம பிசினெஸே ரொட்டேஷன்ல ஓடற பிசினெஸ்தான வேலு? ஒனக்குத் தெரியாததா?”
“ஒரு நாலாயிரம் கெடைச்சா கூட சமாளிச்சிக்குவன்”
“ஐயோ, உனக்கு நான் எப்படி புரிய வைக்கறதுன்னே தெரியலை. நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன். இருந்தா உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கப்போறேன், சொல்லு”
“எங்க எங்கயோ முட்டி மோதி பார்த்துட்டேங்க. எங்கயும் சாயல. ஒரு ரெண்டாயிரமாச்சிம் பார்த்து கொடுக்கணும்”
முதலாளி ஒரு கணம் எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன் “வேற எங்கயாவது முயற்சி செஞ்சி பாரு வேலு. ஒன் கூட்டாளி ஆளுங்ககிட்ட பேசி பொரட்டமுடியுமான்னு பாரு. சீக்கிரமா காரியத்த முடிச்சிட்டு கடைக்கு வந்து சேரு” என்று சொன்னபடி கையிலிருந்த துண்டை உதறியபடி நடந்து சென்று அருகிலிருந்த துணிக்கொடியில் விரித்துப் போட்டுவிட்டு உள்ளே சென்றார்.
வேலு ஏமாற்றத்துடன் முதலாளியின் மனைவியுடைய முகத்தைப் பார்த்தான்.
“ஒரே எடத்துல எதுக்கு எதிர்பார்க்கற வேலு? சாவுன்னு சேதி வந்ததும் ஐயா தானாவே ஒன்ன பார்த்து பணம் கொடுத்துட்டு வந்தாரில்லயா? அப்ப இருந்தது. கொடுத்தாரு. இப்ப இல்லை. என்ன செய்ய முடியும் சொல்லு? நாலு இடத்துக்கு போய் பாரு. எங்கயாவுது ஒரு இடத்துல கெடைக்கும்”
கண்பார்வையாலேயே போய்வா என்று சொல்லிவிட்டு அவரும் வீட்டுக்குள் போய்விட்டார்.
வேலுவுக்கு வீட்டுக்குச் செல்வதில் விருப்பமில்லை. கருமாதியைப்பற்றி யோசிப்பதா, காசியைப்பற்றி யோசிப்பதா என்று புரியாமல் குழம்பினான். ஐந்தாம் நாளோ ஏழாம் நாளோ தலையை மழித்துக்கொண்டு வந்து வீட்டில் எளிமையாக படைத்துவிட்டால் போதும், கருமாதி வேலை முடிந்துவிடும். செலவும் அதிகமில்லை. ஆனால் காசிப்பயணம் அப்படியில்லை. ஏராளமாக செலவு ஆகும். ஏதேதோ யோசனைகளில் மூழ்கியபடி சைக்கிளை மிதித்தான்.
மர்பி டவுன் சிக்னலில் நின்றிருந்த சமயத்தில் அவனுக்குப் பக்கத்தில் ஒரு காய்கறிகள் பரப்பிய ஒரு தள்ளுவண்டி வந்து நின்றது. அதைப் பார்த்ததும் அவன் சிங்காரத்தை நினைத்துக்கொண்டான். மர்பி டவுன் மார்க்கெட்டுக்குள் சென்று தேடினால் அவன் வண்டியைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று தோன்றியது. உடனே சைக்கிளிலிருந்து இறங்கி இடது பக்கமாக தள்ளிக்கொண்டு மார்க்கெட் பக்கமாகச் சென்றான். பாதையோரமாக சாக்குகளை விரித்து வைக்கப்பட்ட கடைகளும் தள்ளுவண்டிக்கடைகளும் பாதையை அடைத்துக்கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் போவதும் வருவதுமாக இருந்தது.
ஒரு வாதா மரத்தடியில் வண்டியை நிறுத்திவைத்திருந்த சிங்காரத்தைப் பார்த்ததும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. சிங்காரமும் அவனைப் பார்த்துவிட்டான். “வாடா வாடா, கடைக்குப் போவ ஆரம்பிச்சிட்டியா? கருமாதிய எப்படி என்னைக்கு வச்சிக்கலாம்னு திட்டம்?எல்லாரயும் கூப்பிட்டு செய்யப் போறியா, இல்ல ஊட்டோடயே செஞ்சி முடிச்சிக்கப் போறியா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் வந்தான்.
”அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்கேன் சிங்காரம்” என்று பெருமூச்சுடன் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து நின்றான். பணத்தேவையைப்பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னான். கடைசியில் “எப்படியாவது ஒரு ரெண்டாயிரம் ரூபா பொரட்டிக் குடுக்கமுடியுமா சிங்காரம்” என்று கேட்டான்.
“இந்த வண்டியில இருக்கற எல்லா சரக்கயும் வித்தாகூட என்னால ரெண்டாயிரம் ரூபா பொரட்ட முடியாது. எங்கிட்ட போய் ரெண்டாயிரத்த குடுன்னு சொன்னா, எங்க போவறது வேலு?”
“நீயும் என்ன மாதிரிதான சிங்காரம். உன்கிட்ட இருக்காதுன்னு எனக்குத் தெரியாதா? எங்கயாச்சும் பொரட்டிக் குடுப்பேன்னுதான் கேட்டேன்”
“என்னை நம்பி யாருடா இங்க கடன் கொடுப்பாங்க? நகை ஏதாச்சிம் இருந்தாலாவது அடகு வச்சி வாங்கலாம். ஒரு நம்பிக்கையில குடுப்பானுங்க.”
“சுந்தரி போட்டிருந்த கம்மல அடகு வச்சித்தான் சாவு எடுக்கற செலவை சமாளிச்சோம். இப்போ மறுபடியும் நகைக்கு எங்க போகறது சிங்காரம்? இங்க ஒரு நம்பிக்கையில கைமாத்தா கொடுக்கறவங்க யாரும் இல்லையா?”
“நம்பிக்கையா? இங்கயா? நல்லா கேட்ட போ. பணம்ங்கற பேச்சு வந்துட்டா போதும், ஒவ்வொருத்தன் மூஞ்சியும் ஒவ்வொரு மாதிரி மாறிடும். அண்ணன் தம்பியானாலும் வாயும் வயிறும் வேறதான?”
“வட்டிக்குன்னா கொடுக்கமாட்டாங்களா?”
”கொடுப்பாங்க வேலு. ஆனா உன்னால டெய்லி வட்டி கட்டமுடியுமா?”
“டெய்லியா?”
“இங்க இருக்கற சிஸ்டம் அந்த மாதிரிதான். நூறு ரூபா வாங்கினா, டெய்லி சாயங்காலம் அசல் கணக்குல பத்து ரூபா, வட்டிக் கணக்குல பத்து ரூபா கொடுக்கணும். உன்னால முடியுமா?”
“ஐயோ. அப்ப பணம் கெடைக்காதா? போன வருஷம் புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட ஆயிரம் ரூபா பணம் கொறையுதுன்னு சொன்ன சமயத்துல நீதான் கொடுத்த. அந்த மாதிரி கெடைக்கும்னு நெனச்சிட்டு வந்தேன்.”
“என்னப்பா வேலு நீ? புரியாம பேசறியே. அது என் சொந்தப் பணம். அப்ப கையில இருந்தது. குடுத்தேன். இப்ப இல்லயே? என்ன செய்ய முடியும், சொல்லு?”
இரண்டு நாட்கள் ஓய்வே இல்லாமல் நெருக்கமான நண்பர்களை அவரவர்களுடைய வீட்டுக்கே தேடிச் சென்று பார்த்தான். அவனால் எங்கும் பணத்தைப் புரட்டமுடியவில்லை. “நானும் ஒன்ன மாதிரி தாளம்போடற ஆளுதானப்பா. இப்படி திடுதிப்புனு வந்து கேட்டா எங்க போகறது, சொல்லு” என்றார் ஒருவர். “என்னமோ நூறு எரநூறுன்னா எப்படியாவது பாடுபட்டு கொடுக்கலாம். திடீர்னு ஆயிரக்கணக்குல கேட்டா எங்கப்பா போவறது?” என்றார் இன்னொருவர். இப்படி ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பணம் மட்டும் புரளவில்லை.
ஐந்தாம் நாள் மொட்டையடித்துக்கொண்டு வந்து வீட்டோடு கருமாதிப்படையலை முடித்துக்கொண்டான். பிறகு அந்தச் சாம்பல் கலயத்தை ஒரு துணியில் வைத்து கட்டி மூடினான். எவருடைய கண்பார்வையிலும் படாதபடி வைப்பதற்குவீட்டுக்குள்ளும் இடமில்லை. வெளியேயும் இடமில்லை. வத்திப்பெட்டிகளை அடுக்கியதுபோல அடுத்தடுத்து வீடுகள் இருந்தன. வேறு வழியில்லாமல் ஸ்டூல் மீது ஏறி பரணில் ஓரமாக கை படாத இடமாகப் பார்த்து கலயத்தை வைத்துவிட்டு இறங்கினான் வேலு.
“கொண்டு போய் எங்கனா கரைச்சிட்டு வராம அத எதுக்கு அங்க வைக்கற?” என்று சத்தமாகக் கேட்டாள் சுந்தரி.
“எங்கயாவது கரைச்சிட்டு வா, கரைச்சிட்டு வான்னு சொன்னா எங்க போவறது சுந்தரி?நானும் பணத்துக்கு முட்டாத இடமில்லை. கேக்காத ஆளில்லை. எங்கயும் சாயமாட்டுது. நான் என்ன செய்யறது, சொல்லு” என்றான். ”தற்சமயத்துக்கு உடனே கெளம்பறதுலாம் முடியாத கதைன்னு தோணுது. ரெண்டுமூனு மாசத்துக்குள்ள பணத்த சேத்துகிட்டு காசிக்கு போய் வந்துக்கலாம். அதுவரைக்கும் இங்கயே இருக்கட்டும்”
“எப்படியாவது போ. நான் சொல்றது என்னைக்குத்தான் ஒன் தலையில ஏறியிருக்குது?” என்று முனுமுணுத்துக்கொண்டே போய்விட்டாள் சுந்தரி. அவன் அமைதியாக கடைக்குச் சென்றான்.
அடுத்த ஒரு மாசத்துக்குள்ளாவது எப்படியாவது பணத்தைப் புரட்டியெடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று திரும்பி வரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் வேலு. ஆனால் அது நடக்கவில்லை. அவன் படும் அவஸ்தைகளைப் பார்த்து மனவருத்தம் கொண்ட கணக்குப்பிள்ளை, அடுத்த மாதம் பத்தாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றை எடுக்கப் போவதாகவும் அதிலிருந்து ஒரு தொகையை எடுத்து அவனுக்குக் கடனாகக் கொடுப்பதாகவும் நம்பிக்கையூட்டினார். அவனும் அது கைக்குக் கிடைத்துவிடும் என உறுதியாக நம்பி ஏதேதோ கனவுகளில் மூழ்கியிருந்தான். ஆனால் கணக்குப்பிள்ளை சீட்டு எடுக்கிற சமயத்தில் அவர் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கிற அளவுக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. ஏதோ சிறுநீரகப்பிரச்சினை. அந்தச் சீட்டுப்பணம் முழுமையாகவே அவருக்குத் தேவைப்பட்டது. “வேற எங்கனா பாத்துக்கலாம் சார். நீங்க மொதல்ல ஆஸ்பத்திரி வேலையை பாருங்க” என்று சொல்லிவிட்டான் வேலு. மாதங்கள் உருண்டுகொண்டிருந்ததே தவிர பணத்தைத் திரட்டும் முயற்சியில் அவன் தோற்றுக்கொண்டே இருந்தான்.
காசிக்குப் போகும் பயணத்தை தள்ளிவைப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்னும் கவலை நாள்தோறும் அரித்தது. பரண்மீது வைக்கப்பட்டிருந்த கலயத்தின் மீது பார்வை விழும்போதெல்லாம் காதருகே அப்பாவின் குரல் ஒலிப்பதுபோலத் தோன்றியது.
நாளுக்குநாள் சுந்தரியின் முனகல்கள் பெருகிக்கொண்டே சென்றன. அவனால் எதையுமே சுந்தரியிடம் சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. காலையில் புறப்பட்டுச் சென்றால் இரவு வரைக்கும் கடைவேலையே சரியாக இருந்தது. மாதாமாதம் அவன் வாங்கி வருகிற சம்பளத்தில் செலவுபோக மிச்சம் பிடிக்கிற பணம் புதிதுபுதிதாக உருவாகும் தேவைகளைச் சமாளிப்பதில் வேகவேகமாக கரைந்துபோனது.
ஒருமுறை பெரிய பெண்ணுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து விட்டது. பத்து நாட்களுக்கு மேல் வைத்தியம் பார்த்ததில் அதுவரை சேமித்த பணம் முழுக்க செலவாகிவிட்டது. இன்னொரு முறை சின்ன பையன் பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டான். அந்தக் கையை சரிப்படுத்த வைத்தியம் பார்த்ததில் செலவுக்கணக்கு எகிறிவிட்டது.
எல்லாச் சிரமங்களுக்கும் அந்தச் சாம்பல்தான் காரணமென்ற எண்ணம் சுந்தரியின் மனத்தில் கொதித்துக்கொண்டிருந்தது. எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் முடிவில் அந்த சாம்பலைப்பற்றி எரிச்சலோடு பேசினாள். ஏதோ இயலாமையின் வேதனை அவளை அப்படி பேச வைக்கிறது என நினைத்து, அவள் சொற்களுக்கு அவன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.கேட்டும் கேட்காதவனைப்போல நடந்துகொண்டான்.
ஒரு நாள் காலையில் அவன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்து வேலைக்குப் புறப்படும் நேரத்தில் “தோ தோன்னு ஆறு மாசம் ஓடி போச்சி. இதுக்கு என்னைக்குத்தான் ஒரு முடிவு கட்டப்போற?” என்று பேச்சைத் தொடங்கினாள்.
ஏதோ சிந்தனையில் “எதுக்கு?” என்று கேள்விக்குறியோடு அவள் முகத்தைப் பார்த்தான் வேலு. அந்தக் கேள்வி அவளை உசுப்பிவிட்டது.
”இன்னும் எவ்ளோ காலத்துக்கு இந்த சாம்பல ஊட்டுக்குள்ளயே வச்சி அழகு பாத்துகிட்டிருப்ப? இது என்ன வீடா, சுடுகாடா? அத ஊட்டுக்குள்ள வச்சதிலேருந்து எல்லாமே தப்பு தப்பா நடக்குதே, அது எதுவும் உனக்கு புரியலையா? என்னதான் அதுக்கு முடிவு?”
அவள் போட்ட சத்தத்தால் அவனால் உடனடியாக எதுவும் பேச முடியவில்லை. எல்லாமே அக்கணத்தில் நினைவுக்கு வந்துவிட்டது. பெருமூச்சுடன் நிமிர்ந்து அந்த சாம்பல் செம்பு கிடக்கும் பரணைப் பார்த்தான்.
“இந்த சாம்பல வச்சிகிட்டு என்னால இந்த ஊட்டுல நிம்மதியா ஒரு வாய் தண்ணி கூட குடிக்கமுடியலை. நாளைக்கு என்ன ஆகுமோ, நாளைக்கு மறுநாள் என்ன ஆகுமோன்னு நெனச்சி நெனச்சி தூக்கமே இல்லாம போயிடுச்சி.”
“உனக்குத் தெரியாதா சுந்தரி, நானும் பணத்துக்கு முயற்சி செஞ்சிகிட்டேதான இருக்கேன். எங்கயும் பொரளமாட்டுது. என்ன செய்யமுடியும் சொல்லு”
“இந்த கதையே வேணாம் சாமி. ஒவ்வொரு நாளும் நீ சொல்றத கேட்டுக்கேட்டு என் காது புளிச்சி போச்சி. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது. வர அமாவாசைக்குள்ள இதுக்கு ஒரு வழி செஞ்சாவணும். இல்லைன்னா நானே இத கொண்டு போயி எங்கனா கண்காணாத இடத்துல வீசிட்டு வந்துருவேன்.”
சுந்தரியின் வேகத்தைப் பார்த்து வேலு உண்மையிலேயே நடுங்கிப்போனான்.“அவசரப்படாத சுந்தரி. இத்தன நாள் பொறுத்துட்டோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கக்கூடாதா?” என்று தணிந்த குரலில் சொன்னான்.
“இங்க பாரு. உனக்கே நல்லா தெரியும். எல்லா நாளும் நான் ஒரே மாதிரி இருக்கமாட்டேன். என்னைக்காவது ஒரு நாள் புள்ளைங்க தூங்கும்போது மண்ணெண்னய ஊத்தி கொளுத்திட்டு நானும் கொளுத்திக்குவேன். வேணும்ன்னா எங்க சாம்பலயும் சேத்து எடுத்தும்போயி மொத்தமா காசியில கரைச்சிக்கோ”
அவளுடைய தீர்மானமான குரல் அவனை நிலைகுலைய வைத்தது. பற்களைக் கடித்துக்கொண்டு அமைதியை வரவழைத்துக்கொண்டான். “இன்னும் ரெண்டு மாசம் போனா தீபாவளிக்கு கடையில போனஸ் கெடைக்கும் சுந்தரி. அப்ப கண்டிப்பா காசி வேலையை முடிச்சிட்டு வந்துருவேன். அது வரைக்கும் பொறுத்துக்கமாட்டியா?” என்றான்.
“ஆமாமாம். உன்ன பத்தி எனக்கு தெரியாதா? இப்ப அப்படித்தான் சொல்லுவ. நாளைக்கு வேற ஏதாவது புதுசா காரணத்த கண்டுபுடிச்சி சொல்லுவ. இத்தன வருஷமா ஒன் கதையை கேட்டதெல்லாம் போதும், போ”
“அப்படியெல்லாம் ஆவாது சுந்தரி. தீபாவளி முடிஞ்சதும் காசியில கரைச்சிட்டு வரதுதான் மொதல் வேலை”
”அதெல்லாம் முடியவே முடியாது. முடிஞ்சா அமாசைக்குள்ள செஞ்சா செய்யி. இல்லைன்னா என்னால முடிஞ்சத நான் செஞ்சிக்குவேன். என்ன யாருமே தடுக்கமுடியாது.”
அவளுடைய குரலும் முகமும் அவனைத் திகைக்கவைத்தன. பேச்சை வளர்த்துக்கொண்டே செல்வது பிழை என உணர்ந்து அக்கணமே வீட்டைவிட்டு வெளியேறினான் வேலு.
அடுத்தநாள் சுந்தரி ஏதேனும் பேசக்கூடும் என அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. அவள் பேசாமல் இருந்ததுதான் அவன் நிம்மதியைக் குலைப்பதாக இருந்தது .அமாவாசை நெருங்க நெருங்க அது அச்சமாகவே மாறிவிட்டது.
ஒரு வேகத்தில் எதையும் செய்துவிடக் கூடியவள் அவள். இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் அவன் அதை நன்றாகவே தெரிந்துவைத்திருந்தான். வாய்வார்த்தையாகத்தானே சொன்னாள் என அவள் சொற்களை உதறமுடியவில்லை. அவளும் பிள்ளைகளும் எரிந்து கரிக்கட்டைகளாக கிடப்பதுபோல அடிக்கடி கனவுகள் வந்தன. இரவு நேரங்களில் திடீர் திடீரென விழிப்பு வந்து தவிக்கத் தொடங்கினான். விழித்ததுமே அவளையும் பிள்ளைகளையும் கண்கள் தேடின. அவர்கள் உறக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்த பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது.
மறுநாள் அமாவாசை என்கிற நிலையில் வழக்கம்போல அவன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்தான். ஸ்டூல் போட்டு ஏறி பரணிலிருந்த கலயத்தை எடுத்து ஒரு கைப்பைக்குள் போட்டான்.
அவன் நடவடிக்கைகளை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரி “இப்ப எதுக்கு அத எடுக்கற?” என்று சந்தேகத்தோடு கேட்டாள். அவள் பக்கம் திரும்பாமலேயே அவன் “இது இங்க இருக்கவும் வேணாம். இதனால யாரும் இங்க சாம்பலாவும் ஆவவேணாம். எல்லா நேரமும் கண்ணு முழிச்சி என்னால காவல் காக்கமுடியாது. வாழ்க்கையில நிம்மதியே இல்லாம போயிடுச்சி. என் போக்குல என்ன போக விடு நான் போய் கரைச்சிட்டு வரேன்” என்றான்.
“எங்க போறன்னு சொல்லிட்டு போ.”
“காசிக்கு போறேன்.போதுமா?”
“காசிக்கா? பணம்?”
“அது கெடைச்சிருந்தா அன்னைக்கே போயிருக்கமாட்டனா? எப்படியோ போய்ட்டு வரேன். ஒனக்கென்ன?”
”எப்படி போவ? அதத்தான் கேக்கறேன்”
“ரயில்ல போறவன்லாம் டிக்கட் எடுத்துட்டா போறானுங்க? அந்த மாதிரி நானும் போறேன். என் நேரம் நல்லா இருந்தா காசிக்கு போறேன். கெட்டதா இருந்தா ஜெயிலுக்கு போறேன்”
நின்றுகொண்டே இருந்தால் பேச்சு வளரும் என்ற எண்ணத்தில் சட்டென்று வேலு வீட்டைவிட்டு வெளியேறினான். “இங்க பாரு, சொல்றத கேளு ஒரு நிமிஷம்….” என்று சொல்லிக்கொண்டே பின்னால் வந்தாள் சுந்தரி. அவன் அவளை திரும்பிப் பார்க்கவே இல்லை. கதவருகில் கிடந்த காலணிகளை அணிந்துகொண்டு நடக்கத் தொடங்கினான்.
பேருந்து பிடித்து ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகும் கூட அவனுக்குள் இருந்த விசை அடங்கவில்லை. ஏதோ ஒரு அச்சமும் தீவிரமும் அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தன.
ஸ்டேஷன் கூடம் முழுதும் பிரயாணிகள் நிறைந்திருந்தனர். சுவர்மீது பெரிய திரையில் வந்து சேரும் அல்லது புறப்படும் வண்டிகளைப்பற்றிய தகவல்கள் எழுத்துகளாக நகர்ந்துகொண்டிருந்தன. காசிக்குப் போகும் வண்டி எது என்று அவனால் அதைப் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை. பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெரியவரிடம் சென்று கேட்டான். தன் கைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த அவர் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “காசிக்கா? வாரணாசி எக்ஸ்பிரஸ்தான? போயிடுச்சின்னு நெனைக்கறேன். ஒரு நிமிஷம் இருங்க” என்றபடி கைபேசியைத் திறந்து மேலும் கீழுமாக உருட்டிப் பார்த்தார். பிறகு “ஒம்பது மணிக்கே போயிடுச்சி.வேணும்ன்னா நீங்க ஒரு வேலை செய்யலாம். பகல் ஒன்னரை மணிக்கு கர்நாடகா எக்ஸ்பிரஸ் இருக்குது. அதுல டில்லி வரைக்கும் போயிட்டு, அங்கேருந்து காசிக்கு போகலாம்” என்றார்.
”ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்தான். மனம் அலைபாய்ந்தபடி இருந்தது. சுந்தரியின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்பதை அவனால் ஊகிக்கமுடியவில்லை. கடவுளே காப்பாற்று என்று மட்டும் சொல்லிக்கொண்டான். ஒன்றரை மணிக்கு இன்னும் நேரமிருக்கிறது, அவசரப்படவேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
அப்படி நினைத்தானே தவிர பத்தாவது நிமிடத்திலேயே இருக்கையிலிருந்து எழுந்துகொண்டான். வாசல்பக்கம் சென்றான். சிறிது நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்து டிக்கட் கொடுக்குமிடத்துக்குச் சென்றான். “டில்லி ட்ரெய்ன் எத்தனை மணிக்கு சார்?” என்று கேட்டான். அவர் நிமிர்ந்து பார்க்காமலேயே “ஒன்றரை மணிக்கு. கர்நாடகா எக்ஸ்பிரஸ்” என்றார். ”டிக்கட்டுக்கு எவ்வளவு சார்ஜ்?” என்று கேட்டபோதுதான் அவர் நிமிர்ந்து “எண்ணூத்தி அறுபது ரூபா” என்றார். அதைக் கேட்டதுமே அவன் தொண்டை உலர்ந்துவிட்டது. சத்தமே எழாத குரலி ”ஓகே. தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தான்.
பேண்ட் பையில் இருந்த நோட்டுகளையும் சில்லறைகளையும் எடுத்து ஒருமுறை எண்ணிப் பார்த்தான். சில்லறைகளும் நோட்டுகளுமாக நூற்றுப்பதினாறு ரூபாய் இருந்தது. பெருமூச்சோடு மீண்டும் பைக்குள் வைத்தான். டிக்கட் எடுக்காமல் செல்வதுதான் ஒரே வழி என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.
போகிறவர்களையும் வருகிறவர்களையும் நீண்ட நேரம் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியேறி பக்கத்தில் இருந்த பூங்கா வரைக்கும் நடந்துசென்று திரும்பி வந்தான். வெயில் கண்களைக் கூசியது. முதலாளியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. குறைந்தபட்சம் கணக்குப்பிள்ளையிடமாவது தகவலைச் சேர்த்திருக்கலாம். தன் அவசர புத்தியை நினைத்து மனத்துக்குள் சங்கடப்பட்டுக்கொண்டான். நிச்சயமாக வீட்டுக்கு ஆள் அனுப்பி அவர் விசாரிக்கக்கூடும். சுந்தரி என்ன பதில் சொல்லி அனுப்புவாளோ என்று நினைத்து தடுமாறினான்.
தொலைவில் மணிக்கூண்டில் மணி ஒன்றைக் காட்டியது. ஸ்டேஷனை நோக்கி மீண்டும் நடந்து வந்தான். நுழைவுக்கதவு வரைக்கும் சென்றான். முதல் நடைமேடையில் நின்றிருக்கும் ரயிலில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் பெயர் எழுதியிருப்பதை அவனால் படிக்க முடிந்தது. ஆயினும் சந்தேகம் கேட்பவனைப்போல வாசலோரமாக நின்றிருந்தவரிடம் ”இது டில்லி போற ட்ரெய்ன்தான?”, என்று கேட்டான். “எஸ்.எஸ்.ஒன்றரைக்கு எடுத்துருவாங்க. சீக்கிரம் போங்க” என்றார் அவர்.
அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தபடி ரயில் பெட்டிகளைப் பார்த்தான். எல்லாப் பெட்டிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. முன்பதிவு தேவைப்படாத பெட்டிகள் பின்னாலோ முன்னாலோ இருக்கக்கூடும். இந்தப் பெட்டியிலேயே இத்தனை கூட்டமென்றால் அந்தப் பெட்டியில் இருக்கும் கூட்டத்தை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.
ஒருவித சோர்வும் குற்ற உணர்ச்சியும் அவனை அழுத்தியது. உள்ளே நுழையவிடாமல் ஏதோ ஒரு எண்ணம் அவனைத் தடுத்தது. அதுவரை அவனுக்குள் விசைகொண்டிருந்த வேகம் தண்ணீர் பட்ட நெருப்பென அடங்கிவிட்டது.
மணி ஒன்றரை. உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் கையை அசைத்து விடைபெறுவதைப் பார்த்தான். அடுத்து சில கணங்களிலேயே ரயில் நகர்ந்துசெல்லத் தொடங்கியது. ஆழ்மனம் அவனை ரயிலைநோக்கிச் செல்லும்படி தூண்டிக்கொண்டே இருந்தது. இரும்புபோல கனத்திருந்த அவன் கால்களைக் கொண்டு அங்கிருந்து் ஓர் அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை.
கசப்பும் சலிப்புமாக ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தான். கையிலிருந்த பை கனப்பதுபோல இருந்தது. இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு சுந்தரியைப் பார்ப்பது என்று தோன்றியது. எதைஎதையோ நினைத்து குழம்பியபடி மனம்போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
வேர்வை வழிந்த நிலையில் நடந்துகொண்டிருந்த நிலையில் தன் மீது மோதி நகர்ந்த குளிர்ந்த காற்றின் ஈரத்தால் அவன் சற்றே இயல்புநிலைக்குத் திரும்பினான். அல்சூர் ஏரியைக் கடந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். எவ்வளவு நேரமாக நடந்தோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.
வட்டமான ஏரி. கரைநெடுக நின்றிருக்கும் மரங்கள். நடுவில் கோபுரம்போல பச்சைப்பசேலென உயர்ந்து நிற்கும் ஒரு பெரிய மரம். அந்தக் காற்றும் இதமும் அக்கணத்தில் அவனுக்குத் தேவையாக இருந்தது. சுற்றியும் கம்பிவேலி போட்டிருந்ததால் உள்ளே செல்லும் வழியைத் தேடிக் கண்டுபிடித்து சென்றான். மெல்லிய அளவில் அலைகள் மோதும் கரையோரமாக யாருமில்லாத ஒரு பெஞ்சில் அமர்ந்தபோது ஆறுதலாக இருந்தது. அக்கணத்தில் அவன் உடலும் மனமும் களைப்பை உணர்ந்தது.
கடையில் பகல்முழுதும் வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஓய்வில்லாமல் கடைமுகப்புக்கும் உள்ளறைக்கும் இடையில் ஓடியபடியே இருப்பவன் அவன். ஆனால் தன் உடலில் ஒருபோதும் அவன் களைப்பையே உணர்ந்ததில்லை. ஆனால் மெஜஸ்டிக் ஸ்டேஷனிலிருந்து வெகுதொலைவு வெயிலில் நடந்தே வந்ததில் அக்கணத்தில் களைப்பை உணர்ந்தான்.உட்கார்ந்த சிமெண்ட் பெஞ்சிலேயே பின்பக்கம் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
எழுந்தபோது பொழுது சாய்ந்துவிட்டிருந்தது. எவ்வளவு நேரம் தூங்கினோம் என்றே அவனுக்குத் தெரியவில்லை.அந்தி கவியும் வேளை. ஏரிக்கரையின் மேலே காக்கைகள் கூட்டமாக ஒரு திசையிலிருந்து மற்றொரு திசையை நோக்கிப் பறந்து சென்றன.வானத்தில் நிறம் மங்கத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் பூங்கா ஊஞ்சல்களில் சிறுவர்களும் சிறுமிகளும் சத்தமாக சிரித்தபடி ஆடிக்கொண்டிருந்தார்கள். உலா முடித்து கரைக்குத் திரும்பிய படகிலிருந்து ஒரு சுற்றுலாக்கூட்டம் இறங்கியது. பக்கத்திலேயே புதிய கூட்டம் ஏறுவதற்குத் தயாராக ஓரத்தில் நின்றது. “லாஸ்ட் ட்ரிப். லாஸ்ட் ட்ரிப். டிக்கட் வாங்கனவங்க எல்லாரும் சீக்கிரமா வாங்க. இனிமே ட்ரிப் கெடையாது” என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார் படகுக்காரர். சில கணங்களுக்குப் பிறகு டக்டக்டக் என எஞ்சின் உறுமத் தொடங்கி பின்பக்கத்திலிருந்து ஒரு கோடு போல புகை எழ, படகு ஏரிக்குள் நகரத் தொடங்கியது.
“வெளியூரா தம்பி? உக்காந்துகிட்டே தூங்கற அளவுக்கு களைச்சிருக்கீங்க? எங்க போயிட்டு வரீங்க?” என்று கேள்விகளைத் தொடுத்தபடியே பக்கத்தில் வந்து நின்ற பெரியவரை நிமிர்ந்து பார்த்தான் வேலு. அவர் சொற்கள் அவனை அடையவில்லை. அவன் மனம் முழுதும் சுந்தரியின் சொற்களே எதிரொலித்தபடி இருந்தன. எதுவும் கேட்காதவனைப்போல “ம்?” என்றபடி அவன் பெரியவரைப் பார்த்தான். அவர் மீண்டும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார். அடர்நீலத்தில் பேண்ட்டும் வெளிர்நீலத்தில் சட்டையுமாக சீருடையில் அவரைப் பார்த்ததுமே அவர் பூங்கா காவல்காரர் என்பது புரிந்துவிட்டது. புன்னகையோடு கைகளை உயர்த்தி நெட்டி முறித்துவிட்டு “நடந்து வந்த களைப்புல சட்டுனு தூக்கம் வந்துட்டுது” என்றான்.
“நீங்க உள்ள வரும்போதே பாத்தேன். வந்தீங்க. உக்காந்தீங்க. சட்டுனு எழுந்துபோய் ஏரிக்கு பக்கத்துல போய் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பார்த்தீங்க. அப்பறமா திரும்பி வந்து உக்காந்தீங்க. ஒரு ரவுண்டு முடிச்சி அடுத்த ரவுண்டு வரும்போது பார்த்தா, நல்லா தூங்கிட்டிருந்தீங்க. பெஞ்சுல படுத்து தூங்கற ஆளா இருந்திருந்தா எழுப்பியிருப்பேன். உக்காந்தவாக்குல இருந்ததால, சரின்னு நானும் விட்டுட்டு போயிட்டேன்.”
“ரொம்ப தூரம் வெயில்ல நடந்து வந்த களைப்புல உக்காந்ததும் என்னையறியாமலேயே தூக்கம் வந்துட்டுது.”
“வெளியூரா?”
ஒரு வேகத்தில் “ஆமாம்” என்று சொல்லத்தான் முதலில் தோன்றியது. பிறகு அந்த எண்ணத்தைத் தடுத்துக்கொண்டு “இல்லிங்க. இதே ஊருதான். இங்கதான். லட்சுமிபுரம்.”
“அப்படியா? நானு காக்ஸ் டவுன் தம்பி. சொந்த ஊரு ஆம்பூரு. இங்க நம்ம பையன் கூட இருக்கேன். அவன் ஆஸ்பத்திரியில வார்ட்பாயா இருக்கான். ஊருல ரெண்டு ஏக்கர் நெலம் இருக்குது. கடலை, பருத்தின்னு ஏதாவது போடுவேன். முந்தி மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியலை. ஆளுங்களும் முன்ன மாதிரி வேலைக்கு கிடைக்கறதில்லை. சொந்தக்காரங்க ஒருத்தர்கிட்டயே குத்தகைக்கு உட்டுட்டு இங்க வந்துட்டேன்.பையன்தான் யார்யாரயோ புடிச்சி ஏற்பாடு செஞ்சி எனக்கு இந்த வேலையை வாங்கி குடுத்தான்.”
“அம்பது அறுபது வருஷம் ஒரு ஊருல வாழ்ந்துட்டு, ஒரு கட்டாயத்துக்காக திடீர்னு ஒரு புது ஊருல வந்து வாழறது கஷ்டமா இல்லையா?”
“ஐய, இதுல என்ன தம்பி கஷ்டம் இருக்குது? எனக்கு ஆம்பூருல ஓடற தண்ணியும் பாலாறுதான். இதோ, இந்த ஏரியில ஓடற தண்ணியும் பாலாறுதான்.”
திடீரென ஒரு பந்து உருண்டோடி வந்து அந்தப் பெரியவரின் காலடியில் வந்து நின்றது. சில கணங்களில் இரு சிறுவர்கள் ஓடி வந்து அருகில் நின்றார்கள். பெரியவர் அந்தப் பந்தை குனிந்து எடுத்து அவர்களை நோக்கி வீசினார். அதை சரியாகப் பிடித்து கையில் ஏந்திய சிறுவன் “தாத்தா, தேங்க்ஸ்” என்று சொல்லிக்கொண்டே ஓடினான். சிரித்துக்கொண்டே “ஒரமா போடா பையா” என்று தாத்தா பதிலுக்குச் சத்தம் கொடுத்தார்.
”இப்படித்தான் நம்ம பேரன் கூட தஸ்புஸ்னு எதையாச்சிம் கத்திகினே ஓடுவான்”
அவர் பெருமையுடன் சொல்லிக்கொண்டே தன் நரைத்த மீசையை மெலிந்த விரல்களால் தடவினார்.
வேலு அவரைப் பார்த்தான். அவன் உள்ளம் சட்டென மலர்ந்துவிட்டது. பூங்காவுக்கு வரும் வரை அவன் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த எடை சட்டென அகன்றதுபோல இருந்தது.
“வாங்க, டீ சாப்பிடலாமா?” என்றபடி தன் கைப்பையோடு எழுந்தான் வேலு.
“ஓ. சாப்பிடலாமே . எங்க கேன்ட்டீன் டீ அருமையா இருக்கும்”
இருவரும் கேன்ட்டீனை நோக்கி நடந்தார்கள். அவரைப் பார்த்ததும் டீ மாஸ்டர் கொடுத்த வரவேற்பு ஆச்சரியமாக இருந்தது. வேலுவை ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு மாஸ்டருக்கு அருகில் சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்பினார் பெரியவர். சுவையான டீ.வேலுவுக்கு தன் களைப்பு போன இடமே தெரியவில்லை.
”உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க தம்பி?” என்று திடீரென பேச்சைத் தொடங்கினார் பெரியவர்.
“மூனு பேரு. ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன்”
“நல்லது. நல்லது. புள்ளைங்கதான் நமக்கு செல்வம் தம்பி. அவுங்கள நாம ஒருபோதும் பாரமா நினைக்கக்கூடாது. இந்த இடத்துக்குல்லாம் அழச்சிட்டு வந்து காட்டியிருக்கீங்களா?”
பெரியவருடைய கேள்வியைக் கேட்டு சங்கடத்தில் நெளிந்தான் வேலு. “இனிமேலத்தான் அழச்சிட்டு வரணும்” என்றான். பெரியவர் அவன் கை மீது கைவைத்து அழுத்திவிட்டு “அழச்சிட்டு வந்து எல்லாத்தம் காட்டு தம்பி. எந்தெந்த ஊருலேருந்தோ வந்து இந்த அல்சூர் ஏரிய பாத்துட்டு போறாங்க. இங்க பக்கத்துல லட்சுமிபுரத்துல இருக்கறவங்க பாக்கலைன்னா என்ன அர்த்தம்?” என்றார். சரி என்பதுபோல தலையசைத்துக்கொண்டான் வேலு.
கேன்ட்டீனிலிருந்து வெளியே வரும்போது ஒரு தடித்த பெண்மணி எதிரில் வந்து நின்றாள்.“என்ன தாத்தா? இங்கியா இருக்க நீ? உன்ன எங்க எல்லாம் தேடிட்டிருக்கேன் தெரியுமா?” என்று சத்தமாகக் கேட்டாள்.
”என்ன எதுக்கும்மா நீ தேடணும்? இங்கதான் நின்னுட்டிருந்தேன் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு இப்பதான் உள்ள போய் வந்தேன். என்ன சேதி சொல்லு?” என்று தாத்தா அவளை நோக்கித் திரும்பினார்.
“ஐய, நான் என்ன உங்கிட்ட கதை பேசறதுக்கா தேடனன்? அங்க மேஸ்திரி வந்து நிக்கறாரு பாரு. அவருக்கு எஞ்சின் ரூம் சாவி வேணுமாம்.கேக்கறாரு. எடுத்துட்டு போ”
“எதுக்கு சாவி? எல்லா பாத்திகளுக்கும் தண்ணிவிட்டு இப்பத்தான நிறுத்திட்டு வந்தேன்”
“யாருக்குத் தெரியும்? என்னமோ கேக்கறாரு. எடுத்துட்டு போ. நான் கெளம்பறேன். எனக்கு டூட்டி முடிஞ்சிட்டுது”
அவள் திரும்பி கேன்ட்டீன் பக்கமாக நடந்து சென்றாள்.
”ஒரு நிமிஷம் தம்பி, போயிட்டு வந்துடறேன். வந்து என் கதையை முழுசா சொல்றேன்” என்று வேலுவைப் பார்த்துச் சொன்னார் பெரியவர். பிறகு பூங்காவின் கடைசிவிளிம்பில் இருந்த எஞ்சின் ரூமை நோக்கி நடந்து சென்றார். முதுமையின் சாயலே தெரியாத அந்த நடையை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் வேலு. அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் நடப்பதையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
ஏரியைச் சுற்றி வந்த படகு கரையில் நின்றதும் பிரயாணிகள் ஆரவாரத்தோடு இறங்கி நடந்தார்கள். எஞ்சினை நிறுத்திய படகோட்டி படகை மெதுவாக ஓரமாக இழுத்துச் சென்று அதன் கயிற்றை அருகிலிருந்த தூணோடு இணைத்துக் கட்டிவிட்டு நடந்தார்.
வேலு மெதுவாக கரையை நோக்கிச் சென்றான். ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி கடைசிப் படிக்கட்டில் அமர்ந்தான்.ஏரி நீரில் கால்களை நனைத்தான். உடல் சிலிர்த்தது.
பொழுது சரியச்சரிய தண்ணீர்ப்பரப்பின் நிறம் மாறியபடி இருந்தது. தண்ணீரின் குளுமை உடல்முழுதும் ஏறிப் படரப்படர, அவனுக்குள் தன் அப்பாவின் முகம் நிறைந்து வந்தது.
ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தான். அருகில் எவரும் இல்லை. எல்லோரும் தொலைவில் இருந்தனர். தன் கைப்பையில் இருந்த கலயத்தைத் திறந்து அந்தச் சாம்பலை தண்ணீரில் கொட்டினான். நீர்ப்பரப்பில் ஒரு கரிய வண்ணத்திட்டு போல முதல்கணம் நிலைத்து மறுகணமே அச்சாம்பல் கரைந்து மறைந்தது.
அடுத்து கையிலிருந்த கலயத்தையும் தண்ணீரில் மிதக்கவிட்டான் வேலு. இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறிமாறி வளைந்த கலயத்தின் வாய்க்குள் நீர் புகுந்துசென்று நிரம்பியது. ஒருகணம் செங்குத்தான மலரெனத் தோன்றிய கலயம் மெல்ல மெல்ல நீருக்குள் மூழ்கியது.
நன்றி பாவண்ணன் அய்யா. ஒரு நெகிழ்வான கதை, என் பரபரப்பான நாளை இழுத்து அரைமணி நேரம் நிறுத்தி வைத்துவிட்டது.
நம்மை பெற்று வளர்த்து நாம் வளர்ந்ததும் தளர்ந்து வாழ்க்கை முடியும் கடைசியில் ஆசையொன்றைச் சொல்லிவிட்டு கண்மூடிவிடும் பெற்றொரின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போகும் பிள்ளைகளின் நிலையை அவர்கள் மனதின் உள் கிடப்பவைகளை ஐயா பாவண்ணன் அவர்கள் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
தந்தையின் ஆசையின்படி
திருமணம் எவர்க்கும் நிம்மதி இல்லை
வாழ்க்கையின் யதார்த்தம்