ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார்.
வானொலிக் கலைஞர், செய்தியாளர், ஊடகவியலாளர், விமர்சகர் என பல முகங்கள் இருந்தாலும் ந. பாலபாஸ்கரன் ஆய்வாளராகவே தன்னை முன்வைப்பவர். காலத்தோடு புதையுண்டுபோன செய்திகளையும் தகவல்களையும் மூலைமுடுக்கெல்லாம் தேடித் துருவி எடுத்து கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வழங்கியவர். எஸ். அரசரத்தினம், கே.எஸ். சாந்து, டாக்டர் அ. வீரமணி உள்ளிட்ட மிகச் சிலருக்குப் பிறகு மலேசிய – சிங்கை தமிழர்களின் சமூக வரலாற்றை எழுதியவர்களின் முக்கியமானவர்.
2011ஆம் ஆண்டுவாக்கில் பாலபாஸ்கரனை முதன்முறையாக சந்தித்த நினைவு. ‘தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை’ நூலை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் முரசு குறித்த தகவல்களுக்காக என்னைத் தொடர்புகொண்டார். எள்ளலும் துணிச்சலும் மிகுந்த விமர்சனங்களாலும் சமரசங்கள் செய்துகொள்ளதாகப் போக்கினாலும் அவர் குறித்த எதிர்மறையான கருத்துகளே பொதுவெளியில் உலவியதால் ஒருவித தயக்கத்துடனே அவரைச் சந்தித்தேன். அவரின் ஆழ்ந்த அறிவும் அவர் பேச்சில் தொணித்த சமூக அக்கறையும், ஆய்வுகளுக்காக அவர் மேற்கொண்ட உழைப்பும் ஆச்சரியப்படுத்தின. வெளியில் உலாவும் அவர்குறித்த எதிர்மறையான கருத்துகள் எல்லாம் அவரது அறிவின்மீதான பயத்தினால் உருவாகியிருக்குமோ எனத் தோன்றியது.
ஞானிகளிடமும் அறிஞர்களிடமும் கலைஞர்களிடமும் உள்ள பத்து சிறுவனின் கண்களையே அவரும் கொண்டிருந்தார். கிடைப்பதற்கு அரிதான தமிழ் முரசின் முதல் நாள் பிரதி, 1935ஆம் ஆண்டு இதழ்களின் நகல் தொகுப்பு, கோ.சா.வெளியிட்ட ‘இந்தியன் டெய்லி மெயில்’ ஆங்கிலப் பத்திரிகையின் தொகுப்பு போன்றவற்றை பார்த்த கணத்தில் அதனை நான் உணர்ந்தேன். உணர்ச்சிபொங்க பிறந்த குழந்தையைத் முதன்முதலில் தொட்டுத் தூக்குவதுபோல் இருகைகளிலும் ஏந்திக் குதூகலித்தார். புதையலைக் கண்டடைந்தவனின் ஆர்வம், வியப்பு, மகிழ்ச்சி எல்லாம் கலந்தோர் உணர்வு அவர் முகமெங்கும் பொங்கிப் பிரவகித்தது. அறிவின் சுமையை ஏற்றிக்கொள்ளாமல் அந்தச் சிறுவனின் மனம் படைத்தவரிடம் உரையாட அதன் பின்னர் தடை இருக்கவில்லை.
மலேசிய வருகை
புதுச்சேரியின் கதிர்காமம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் ஆயிரத்து தொள்ளாயிரமாமம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில் தமிழகத்திலிருந்து பினாங்கு, மேடான், சிங்கப்பூர், சிலோன் என்று ஆசிய – தென்கிழக்காசியாவெங்கும் துணி வணிகம் செய்தார். கைலி அவரது முக்கிய வணிகப்பொருள். வணிகம் வெற்றியடைய, கிராமத்திலிருந்த தம்பி நடராஜனையும் பினாங்கிற்கு அழைத்தார். பினாங்கு, கூலிம் பகுதிகளில் மொத்தமாகவும் சில்லறையாகவும் துணி வணிகம் தழைத்தது. ‘கூலிம் ஸ்டோர்’ கடை சிறப்பாக நடக்க, குடும்பத்தை அழைத்தார் நடராஜன். அம்மா மீனாட்சி, சகோதரிகள் பரிமளா, மஞ்சுளா ஆகியோருடன் மே 6, 1941ல் பிறந்த பாலபாஸ்கரன் தனது 10வது வயதில் கூலிம் வந்தார்.
தொடக்கநிலைப் படிப்பை புதுச்சேரியில் படித்திருந்த பாலபாஸ்கரன், பிரிட்டிஷ் இங்கிலிஷ் ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட கூலிமின் ஆகப் பழைய பள்ளியான சுல்தான் பட்லிஷா பள்ளியில் மூன்றாம் படிவம் வரை படித்தார். சீனியர் கேம்பிரிட்ஜ் கல்வியை புக்கிட் மெர்தாஜாம் ஹை ஸ்கூலில் முடித்தார். பிறகு செர்டாங் ஆங்கிலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார்.
பள்ளிக் காலத்தில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர் பாலபாஸ்கரன். ஓட்டப் பந்தயங்களிலும் பூப்பந்து விளையாட்டுகளிலும் விருதுகள் வாங்கியுள்ளார்.
இதே காலகட்டத்தில்தான் பாலபாஸ்கரனுக்கு இலக்கியத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. பாலபாஸ்கரன் ஊடகம், இலக்கியத் துறையில் செயல்படத்தொடங்கிய 1960கள் சிங்கப்பூர்- மலேசியாவில் இலக்கியமும் கலைகளும் தழைத்து வளரத் தொடங்கியிருந்தன. தனித்தன்மையான மலாயா – சிங்கப்பூர் இலக்கியம் தோன்றி வளர்ந்த காலமும் இதுதான். ஏராளமான இதழ்களும் சஞ்சிகைகளும் தோன்றி மறைந்து, தமிழ் நேசனும் தமிழ் முரசும் கொம்புசீவிக்கொண்டு பத்திரிகைத் துறையில் சாதனை படைத்துக்கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் சிங்கப்பூர் – மலேசிய தமிழ் வானொலிகள் ஒலிபரப்புத் துறையில் களத்தில் இறங்கி செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கலைஞரின் முத்தாரம் இதழில் திருக்குறள் பற்றிய பாலபாஸ்கரனின் முதல் எழுத்து 1962ல் வெளியானது. தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் பல கட்டுரைகள் எழுதினார். மேடைப் பேச்சுகளிலும் ஈடுபாடு காட்டியுள்ளார். கோலாலம்பூர் பாரதியார் விழாவுக்காக பாரதியாரின் சில பாடல்களைப் பேராசிரியர் ச. சிங்காரவேலு, விரிவுரையாளர் பி. பழநியப்பன் ஆகியோருடன் சேர்ந்து மலாயில் மொழிபெயர்த்து அச்சிட்டுள்ளார்.
மொழியின் மீதான ஆர்வம் அவரை வானொலி பக்கம் இழுத்தது. தாமஸ் மேத்தியூ, ரெ.கார்த்திகேசு, பைரோஜி நாராயணன், முகம்மது ஹனீப் என பெயர் பெற்ற தமிழ் வானொலிக் கலைஞர்கள் பலரால் ரேடியோ மலேசியா சிறப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்த 1963இல் வானொலியில் ஒலிபரப்பு உதவியாளராகச் சேர்ந்தார் பாலபாஸ்கரன். வானொலிக்காக நடப்புவிவகார செய்திகளுடன் சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதினார். மொழிபெயர்ப்பு, நேரடி வர்ணனை, நிகழ்ச்சி தயாரிப்பு, கலப்படம், நாடக விழா என பல பணிகளையும் அவர் சிறந்து விளங்கினார். அக்காலத்தில் அவரது தனித்த வசீகரக் குரலுக்கைக் கேட்கவே ஆயிரக்கணக்கானவர்கள் வானொலிச் செய்தியைக் கேட்டதாகச் சொல்லிக்கேட்டதுண்டு.
ந. பாலபாஸ்கரன் கலைஞனுக்கே உரிய மனக்கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் கொண்டவர் என்பதை என அவரது நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் காண முடிகிறது. தன் வாழ்க்கை குறித்த முடிவுகளை அவர் சிந்தித்த விதம் புரிந்துகொள்ள முடியாதது.
வானொலியில் பிரபலமான அறிவிப்பாளராக வளர்ந்த சமயம்தான் அவருக்கு கல்வியின் மீது கவனம் சென்றது. மலாயா பல்கலைக்கழத்தில் 1968ல் பொருளியல் பட்டக்கல்வியைத் தொடங்கினார். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது 1969ல் மே கலவரம் மூண்டது. அச்சமயத்தில் ஏற்பட்ட விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, மனம்போன போக்கில் அலைந்தார். கடலூர் பெருமதூரைச் சேர்ந்த கிரிஜா வேலாயுதத்தை 1971ல் தேதி மணமுடித்தார். மீண்டும் சில காலம் கழித்து 1970களில் மலாயாப் மலாயாப் பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் சேர்ந்து இளங்கலை (பி ஏ ஹானர்ஸ்), முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். முதுநிலைப் பட்டக்கல்வியை முடித்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளகப் பணிபுரியத் தொடங்கி, வாழ்க்கை சற்று நிலைப்பட்டதும் 1976இல் மனைவியையும் மகள் பிரபாவதியையும் கோலாலம்பூர் அழைத்தார். விசாகன், விமலன் இரு மகன்களும் கோலாலம்பூரில் பிறந்தனர். பட்டப்படிப்பை மீண்டும் தொடங்கிய காலத்தில் பகுதி நேரமாக வானொலியிலும் பணியாற்றியவர் இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கினார். மலேசிய தமிழ் எழுத்தாளர் கழகத்தில் துணைத்தலைவராகவும் அவர் செயலாற்றினார். தமிழ் நேசன் பத்திரிகையிலும் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார்.
எல்லாம் சிறிது காலம்தான். அவரது கலைமனம் எப்போதும் புதிய சவால்களைத் தேடிக்கொண்டே இருப்பது.
தன் தந்தையைப்போல, தனது சிறுபிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பாலபாஸ்கரன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். 1982ஆம் ஆண்டின் கடைசியில் சிங்கப்பூர் வந்த இவர், சிங்கப்பூர் மீடியாகார்ப் தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். மூத்த தயாரிப்பாளாரக 2000ல் ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து செய்தித் துறையில் ஈடுபட்டிருந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமான மெகாஸ்டாரில் 2004 முதல் 2008 வரை பணியாற்றினார். அந்நிறுவனம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு உள்ளூர், வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த ‘30 நிமிடங்கள்’ நடப்பு விவகார நிகழ்ச்சி ஒன்றை பாலபாஸ்கரன் எழுத்தில் தயாரித்தது. எளிமையும் பொருள்செறிவும் கொண்ட அந்நிகழ்ச்சி, நான்கு ஆண்டும் நடப்பு விவகாரப் பிரிவில் சிறந்த எழுத்துப் படைப்பு விருதை வென்றது.
கல்வியியல் ஆய்வு
ந. பாலபாஸ்கரனின் முதுகலைப் பட்ட ஆய்வான ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ (1995) இந்நாட்டில் சிறுகதை எழுத்து குறித்த ஆய்வுக்கு அப்பால் பல தகவல்களைச் சொல்லும் நூல். டாக்டர் இரா தண்டாயுதம் மேற்பார்வையாளராகவும் டாக்டர் கைலாசபதி அயலகக் கணிப்பாளராகவும் இருந்த இந்த ஆய்வுக்காக மலேசியாவில் 1930 முதல் 1970கள் வரை வெளியான சிறியதும் பெரியதுமான 70 சிறுகதைத் தொகுதிகளை ஆய்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் எவரும் இத்தகைய ஆய்வைச் செய்திருக்கவில்லை. அச்சிட்ட நூல்களும் அதிகம் இல்லை. எங்கெல்லாமோ அலைந்து, எளிதில் கிடைக்காத நூல்களையும் பத்திரிகைகளையும் கதைகளைக் கண்டெடுத்து ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைக்காக 200 எழுத்தாளர்களின் 630 கதைகள் ஆய்வு செய்திருக்கிறார். 1942 முதல் 1945 நடுப்பகுதி வரை ஜப்பானிய கொடுங்கோல் ஆட்சியிலும் தமிழ் இலக்கியம் குறிப்பாக சிறுகதைகள் ஏராளமாக பிரசுரமாகின என்ற விவரத்தை இந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது. சுதந்திர இந்தியா, சந்திரோதயம், யுவபாரதம் ஆகிய 3 இதழ்களில் மொத்தம் 47 கதைகள் வெளிவந்ததைக் குறிப்பிட்டு, தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் சிங்கப்பூரின் தனித்துவப் பங்களிப்பாக இந்தக் கதைகளைக் கருதவேண்டும் என பாலபாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய நவீன இலக்கியம் குறித்த தரமான ஆய்வுக்கு முன்னோடியாகவே இந்நூல் பாலபாஸ்கரனை நினைவுகூர வைக்கிறது. மலாயாவின் முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு 1930இல் சிங்கப்பூரில் அச்சடித்து வெளியிடப்பட்டது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த ஆய்வு. யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையா எழுதிய ‘நவரச கதாமஞ்சரி : இவை இனிய கற்பிதக் கதைகள்’ என்ற அந்த நூல் சிங்கப்பூரில் கோ.சாரங்கபாணி முன்னுரையுடன் வெளிவந்தது. இந்த நாட்டில் தொடக்ககாலத்தில் தமிழ் மக்களின் சிந்தனைகள், பிறகு ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நிலைப்பாடு, அவர்களின் வாழ்க்கைப்பாடுகள், மாறி வந்த பண்புநெறிகள் என சமூகத்தின் போக்கையும் சிந்தனை, அடையாள உருவாக்கத்தையும் இந்த ஆய்வின் வழி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆய்வை விரிவுபடுத்து ‘The Malaysian Tamil Short Stories 1930-1980 – A Critical Study’ என்ற ஆங்கில நூலை 2006ல் வெளியிட்டார். அடிக்குறிப்புகளில், இங்கு வெளிவந்த நூல்கள், இதழ்கள் குறித்த அரிய தகவல்களையும் கொண்டிருக்கும் தமிழ், ஆங்கில நூல்கள் இரண்டும் சிங்கப்பூர் -மலாயாவின் இலக்கியம், சமூக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கான முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
நூல்கள்
ந. பாலபாஸ்கரன் எழுதியவைகளில் தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்தது ‘தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை’ என்ற ஆய்வு நூலாகும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலான தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது. கோ. சாரங்கபாணியின் பத்திரிகை பாணியையும் முரசின் சமுதாயப் பணிகளையும் ஆராய்ந்து இந்த நூலை விரிவாக எழுதினார் பாலபாஸ்கரன்.
மின்னிலக்கமாக்கப்படாத பழைய பத்திரிகைகளை மைக்ரோ பிலிமில் ஒவ்வொன்றாகப் போட்டு தட்டித்தட்டி, கோ.சாவின் முக்கிய தலையங்களை தேர்வு செய்து கையால் எழுதி, பிரதி எடுத்தார். மேலும் இதுவரை யாரும் அறியாத ஏராளமான தகவல்களுடன், கோ.சாரங்கபாணியைப் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் நூலைத் தொகுத்தார். இதுவரை எவரும் செய்யாத பணி இது.
நூல் வெளிவந்தபோது ஆவலாக எடுத்து வாசித்தேன். சமூகத்தோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த இந்த வட்டாரத்தின் தலைவரான கோ.சாரங்கபாணி, தமிழ் முரசைத் துணையாகக்கொண்டு வாய்ப்பு வசதியற்ற தமிழர்களின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்தார் என்பதே நூலின் சாரமாக இருந்தது. அதை ஆதாரங்களுடன் வலுவாக நிறுவியிருந்தார். கூடவே, கோ.சா தவறவிட்டவற்றையும் தன் சமரசமற்ற விமர்சன எழுத்துபாணியில் எடுத்துச் சொல்லியிருந்தார் பாலபாஸ்கரன்.
2018இல் தமிழின் சிறந்த அ-புனைவுக்காக சிங்கப்பூர் இலக்கியப் பரிசை இந்நூல் வென்றபோது அவரது நீண்ட கால கடும் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.
ந. பாலபாஸ்கரனுக்கு விடுபட்ட வரலாற்றுத் தகவல்களைத் தேடிச் செல்வதில் ஆர்வம் அதிகம். இடைவெளிகளைத் தகுந்த தரவுகளுடன் இட்டு நிரப்பி வரலாற்றை முழுமை செய்யும் பங்கினை தன் வாழ்நாள் முழுவதும் வழங்கி வந்துள்ளார். மலேசிய – சிங்கை இலக்கியத்தின் இடைவெளிகளிலும் அவர் புகுந்து சென்று ஒன்பது கட்டுரைகள், ஐந்து சந்திப்புகள் எனத் தொகுத்துக்கொடுத்த ‘சிங்கப்பூர் – மலேசிய தமிழ் இலக்கியத் தடம் – சில திருப்பம்’ இன்னொரு முக்கிய நூல். சிங்கப்பூர் மலேசியா தொடர்பான இலக்கிய, சமூக, வரலாற்றுத் தகவல்களை மையமாகக்கொண்ட நூல். இணையத்தளத்தில் அவர் எழுதிவெளியிட்டிருந்த கட்டுரைகளைச் செறிவாக்கி, புதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலை வெளியிட்டார்.
இலக்கியத்தைச் சமூகத்துடன் பொருத்திப் பார்க்கும் பாலபாஸ்கரன், ஏற்கெனவே உள்ள ஆய்வுகள், சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் தான் படித்த எண்ணற்ற ஆங்கில, தமிழ் நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகளையும் தன் மனக்குறிப்புகளையும் கொண்டு மலேசிய – சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய, சமூக, வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு மலாயா மக்களின் எழுத்துப் பாதையை திசைதிருப்பிய விதம், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கோலாலம்பூரில் வெளியீடு கண்ட நிகழ்வு, 1912ல் வித்துவான் எஸ்.எல்.மாதவராவ் முதலியாரை ஆசிரியராகக்கொண்டு தொடங்கப்பட்ட ‘பினாங்கு ஞானாச்சாரியன் Daily News’ பற்றிய தகவல்கள், சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுக்க தமிழ் நேசனும் தமிழ் முரசும் முன்னெடுத்த முயற்சிகள், சி.வி.குப்புசாமியும் கு. அழகிரிசாமியும் மலாயாத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்கு என ஒவ்வொரு கட்டுரையும் இன்னும் பல ஆய்வுகளுக்கு வழிக்கோலுபவை. மேலும் ந.பழனிவேலு, வி.டி அரசு, நா.கோவிந்தசாமி, எம்.கே. நாராயணன், இராம கண்ணபிரான், பி. கிருஷ்ணன் ஆகியோரிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட நேர்காணல்களையும் இந்நூலில் தொகுத்துள்ளார்.
தேடல்கள் சர்ச்சைகள்
ந. பாலபாஸ்கரனின் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் 1910 முதல் 1980 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டவை. பத்திரிகை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று எல்லா முக்கியத் துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள பாலபாஸ்கரன், ஒவ்வொருதுறையிலும் அடிநுனி காண இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வந்திருக்கிறார். எனவே பொத்தாம்பொதுவாக வைக்கப்பட்ட வரலாற்றில் இருந்தும் கருத்துகளில் இருந்தும் அவர் முரண்பட்ட இடங்கள் ஏராளம். அப்படி அவர் முன் வைக்கும் கருத்துகள் பல சர்ச்சையாகியுள்ளன. சிலவகை கருத்துகள் மலேசிய – சிங்கை இலக்கியப் போக்கை மாற்றி அமைத்துள்ளன.
சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் 25வது ஆண்டு நிறைவு மலருக்காக சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது. அமரர் நா கோவிந்தசாமி நினைவையொட்டி ‘நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘எது முதல் சிறுகதை? அது எங்கே இருக்கிறது?’ என்ற தலைப்பில் பாலபாஸ்கரன் ஒரு கட்டுரையை படைத்தார். அதில், சிங்கை நேசன் ஆசிரியர் மகுதூம் சாயுபு 1888ல் விநோத சம்பாஷணை என்று தலைப்பிட்டு எழுதிய சில சம்பாஷணைகளை தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று நா.கோவிந்தசாமி நிறுவியதை சிறுகதை இலக்கணம், வரலாற்று போன்றவற்றை மேற்கோள்காட்டி மறுத்ததுடன், பொதுஜனமித்திரன் எனும் சிங்கப்பூரில் வெளிவந்த பத்திரிகையில் 1924 மே 28ஆம் தேதி ‘வெளிவந்த பாவத்தில் சம்பளம் மரணம்’ எனும் சிறுகதையே இவ்வட்டாரத்தில் வெளிவந்த முதல் கதை என்று வலுயுறுத்தியுள்ளார்.
இப்படி ந. பாலபாஸ்கரன் அழுத்தமாக முன் வைக்கும் கருத்துகளுக்குப் பின்னால் உள்ள அவரது உழைப்பு ஆச்சரியமானது.
2012ல் அருண் செங்குட்டுவன், சையத் அப்துல்லா ஆகினோருடன் இணைந்து V R Nathan : Community Servant Extraordinary இவர் எழுதிய நூலில் சிங்கப்பூரின் ஆரம்ப காலத் தமிழரின் சமய வாழ்க்கை பற்றிய அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.
1875 முதல் 1941 வரை சிங்கப்பூரில் தமிழில் ஐம்பது ஏடுகளும், 1883 முதல் 1941 வரை மலாயாவில் அறுபது ஏடுகளும் வந்திருக்கின்றன என்பதை பெயர் விவரங்களுடன் முறையாகப் பட்டியலிட்டவர் பாலபாஸ்கரன். அதுபோல முறையான பதிவுகளோ, சேமிப்போ இல்லாத ஒரு சூழலில் 100 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட இதழ்களையும் சஞ்சிகைகளையும் தேடிப் பிடித்து ஆய்வு கட்டுரைகள் எழுதினார்.
கல்வியியல் ஆய்வான ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ நூலைப்போல் மற்ற நூல்களிலும் அடிக்குறிப்புகளும் பின்குறிப்புகளும் இல்லாததை சிலர் விமர்சனமாகச் சுட்டுவதுண்டு. ந. பாலபாஸ்கரனிடம் வேறு வகையான மன உணர்வுகளே இருந்தன. தான் வாழும் காலத்துக்குள் ஒருவகைப் பாமரத்தன்மையோடு எல்லாத் தகவல்களையும் திரட்டித் தரவேண்டும். தம் நூல்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் கனமான ஆய்வுகள் நிகழ வேண்டும் என விரும்பினார். எனவே எங்கிருந்தெல்லாமோ தகவல்களைத் தேடி எழுதிக்கொண்டே இருந்தார்.
இந்நாட்டில் வெளியான அத்தனை பத்திரிகைகள் குறித்த தகவல்களையும் திரட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் பாலபாஸ்கரன். லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமல் போனது தமிழ் ஆய்வுலகின் துரதிஷ்டம்.
இடையறாப் பணிகள்
பாலபாஸ்கரனின் ஆவணப்பட இயக்கத்துக்காக அவரைச் சந்தித்தபோது தொடர் பணிகளால் தன்னை இயக்கிக்கொண்டே இருந்தார்.
ஆய்வு, ஊடகம், விமர்சனம், எழுத்து என்று இறுதிவரையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டிருக்கும் பாலபாஸ்கரன், தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுதி வைக்காமல் தொலைத்தவர்கள் என்பதை அடிக்கடி குறிப்பிட்டார். ஆனால் தன்னைப் பற்றிய குறிப்புகளை அவர் எங்குமே எழுதி வைக்காதது அந்த ஆவணப்படத் தயாரிப்பில் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அந்த ஆவணப்படத்தில் அவர் பேசவில்லை. 2012ல் அவருக்கு தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அறுவை சிகிச்சைக்குப் பின் பெரும் பலமாக இருந்த குரலை இழந்தார். நோய் வாய்ப்பட்ட உடலை முதுமையும் மெல்ல மெல்ல வாட்டத் தொடங்கியது. கூரிய அறிவும் தீட்டிய சொல்லும் கொண்ட, தனித்திருக்கும் மனிதரான அவர் ஓய்வுபெற்று, நோய்வாய்ப்பட்டதும் மேலும் தனிமையானார். எனினும், குரல் இழப்பு பற்றியோ, நோய் வேதனை குறித்தோ, உலகம் அறைக்குள் சுருங்கிவிட்டதை நினைத்தோ அவர் வேதனைப்பட்டதில்லை. உடல்வலிகளை அவர் பெரிபடுத்தியதில்லை. அந்த 10 ஆண்டு காலத்தில் அதிக துடிப்போடு இயங்கினார். இரு முக்கிய நூல்களை வெளியிட்டார். பல கட்டுரைகளை இணையத்தளத்தில் எழுதினார். 2020இல் மனைவியின் இறப்புக்குப் பின்னர் உடலும் மனமும் மிகவும் சோர்ந்தபோதும், ‘சிங்கப்பூர் சுகப் பிரசவம் அல்ல’ எனும் நூலை நிறைவுசெய்தார்.
சிங்கப்பூர்- மலேசியாவில் தமிழர்களின் பங்களிப்புக்குக் கிடைக்க வேண்டிய உரிய இடத்தை, ஆய்வுகளால் பெற்றுத்தர வேண்டும் என்பதில் இறுதிவரையில் விடாப்பிடியாக உழைத்தவர் பாலபாஸ்கரன். ஓய்வு எடுங்கள் என்று குடும்பத்தினர் சொல்லும்போதெல்லாம், “எழுதுவதுதான் நான் விரும்புவது, அதுதான் எனக்கு ஓய்வு” என்பார். குரலை இழந்தபோது, வாய்வார்த்தையாகச் சொல்லமுடியாததை எல்லாம் கணினியில் அச்சேற்றிக்கொண்டே இருந்தார். ஏராளமாக எழுதியபோதிலும் எல்லாவற்றையும் உடனே நூலாக்கிவிட அவர் அவசரப்படவில்லை. எதையும் எளிதில் சமரசம் செய்துகொள்ளாதவர் தன் நூல் தயாரிப்பிலும் அவ்வாறே இருந்தார். தான் எதிர்பார்க்கும் தரத்தில் நூல் வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால், அவர் தீவிரமாக எழுதத் தொடங்கியிருந்த கடந்த 12 ஆண்டு காலத்தில் இரு நூல்களையே வெளியிட முடிந்தது. இன்னும் குறைந்தது நான்கு நூல்களுக்கான தரவுகளை அவர் தயாராக வைத்திருந்தார்.
சிங்கப்பூர் -மலேசியாவில் பத்திரிகை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் ஆகிய ஐந்து வடிவங்களின் தொடக்கமும் வளர்ச்சியும் விரிவாக எழுதப்பட்ட ‘வாழவந்தவர் எழுதி வைத்தனர்: வரலாற்றில் ஏறிவிட்டனர்’ நூல் வெளிவர இருப்பதாக ‘சிங்கப்பூர் – மலேசிய தமிழ் இலக்கியத் தடம் – சில திருப்பம்’ நூலில் அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Early Tamil Printing (books and periodicals) in Singapore and Malaysia; The Indian Mutiny in Singapore in 1915; The Origin and Growth of the Tamil Nesan and the Tamil Murasu ஆகிய தலைப்புகளிலும் நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.
எழுத்தில் கடும் சித்தத்தையும் கறார் போக்கையும் கடைப்பிடித்தபோதும் கனிந்த மனத்துடனேயே அவர் மனிதர்கள் மீது அன்பு பாராட்டினார். எழுத்தையும் செயல்பாடுகளையும் சார்ந்த அவரது விமர்சனங்கள் இருக்கும்.
சிங்கப்பூரின் தமிழ் சமுதாயம், வரலாறு, அடிநாளைய தமிழ் மக்கள் குறித்து அவர் கொண்டிருந்த உள்ளார்ந்த அக்கறையே அவரின் ஆத்மபலம். இறுதிக்காலம் வரையில் முடிந்த அளவுக்கு தேடித் திரட்டிய தகவல்களை எழுதிப் பதிவாக்கும் ஊக்கத்தை அவருக்குத் தந்த சக்தி.
ந.பாலபாஸ்கரன் என்ற ஒரு தனி மனிதனை வாசிக்கும் போது ஒரு தலைமுறையின் நீண்ட வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. லதா எழுதியதிலிருந்து , ந. பாலபாஸ்கரனை முன்னுரையாக அறிந்து , அவரை தொடர்ந்து ஆராய்ந்தால் மறைக்கப்பட்ட பல வரலாறு வெளிவரும். ஒரு துறவியைப் போலவே விருப்பு வெறுப்பின்றி கடின உழைப்புடன் அவர் ஆராய்ந்ததை அறிந்து கொள்ள நாம் அவரின் உழைப்பில் இருபது சதவீதம் கூட செலவு செய்யப் போவதில்லை. ஆனால் அவரை தொடர்ந்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய அவரை விட 20 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டும். ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டது போல ஆய்வுக்கு இரண்டு அடிப்படைத் தகுதிகள் தேவை. சோம்பேறிக்கும், சோர்வுக்கும் இடமில்லை என்பது முதல் தகுதி. அந்த தகுதி இலக்கியத்திற்கும் பொருந்தும். நன்றி .