பட்டவன்

அங்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். நானும் நடேசனும். நிறைந்த நிலவு. சீவிடுகளின் சத்தம். எப்பொழுதும் போல ஊரும் கரம்பையும்  வேறு வேறாவதன் அதிசயத்தை அப்பொழுதும் புதியதென உணர்ந்தேன். இரவுகளில் இந்த வேறுபாடு இன்னும் கூடுதலாக தெரிகிறது. விளக்குகள் அனைந்து ஊரே உறங்குவது போலவும் வயல்வெளி எதையோ நோக்கி திறந்திருப்பது போலவும் உள்ளது.  வானத்திலிருந்து பறவைகள் கிளைக்கு வருவது போல, நல்ல விவசாயிகள் வயல்களில் இருந்து வீடுகளுக்கு போகிறார்கள்.

“அப்பாவ இன்னும் காணும். வயலுக்கு போனவரு இன்னும் வல்ல. அம்மா ஒரு கெடுத்தம் உன்னையும் அழைச்சுக்கிட்டு  போய்த்து பாத்துட்டு வர சொன்னுச்சு. அதான் அத்தான் நீயும் வா பொய்த்து வந்துருவம்” என்று நடசேன் வந்து அழைத்ததும் நானும் கிளம்பி சென்றேன். சாப்பிட்டு முடித்து கைகழுவி பைக்கை எடுக்க போனேன். “இல்ல வாத்தான் சும்மா அப்புடியே பேசிட்டு  நடந்தே பொய்த்து வருவம்” என்று   அழைத்து போனான். ஒரே தெருவின் இரு  வேறு சாலைகளில் எங்கள் இருவரின் வீடுகள். நடசேன் என் அத்தை மகன். கிட்னன் மாமா ஏற்கனவே மாரடைப்பு வந்தவர் என்பதனால் இந்த இரவில் இப்படி அழைத்து செல்கிறான்.  அவனில் எந்த பதட்டமும் இல்லை. கைலாம்பை ஒளிர விட்டபடி மிக நிதானமாக நடந்தான். ஒன்றின் வெளிச்சமே போதுமானதாய் இருந்தது என்பதால்  என்னுடையதை அணைத்து வைத்திருந்தேன். இறங்கி நின்ற இரவை எங்கள் கைலாம்பு ஊடிருத்து வழிகாட்ட இருவரும் இரவினுள்  நுழைந்தபடி இருந்தோம். 

இறங்கி நின்றிருந்தது முழு நிலவு. எத்தனை முறை வந்த ஆற்றங்கரை. நம் குரலே நமக்கு கேட்க்கும்  நிசப்தம்,  இரவுமட்டுமே  தரக்கூடிய அனுக்கம். வலது புறம் தூலமாக உடன் வரும் இரவென ஆறு. அதற்க்குள் கெண்டையும் கெளுத்தியும் கட்லாவும் விராவும் என  நீந்தி திரியும் மின்னாத மீன்கள். இடதுபுற வயல்வெளியில் காற்றில் அசையும் இரவாக கண்ணுக்கு தெரியும் நாத்துக்கள். மேலே நாம் காணாத போதும் அங்கிருந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள். இரவுகளில் வயல்வெளியை பார்த்துவிட்டு பகலில் பார்ப்பது உடனிருந்த பெண்ணை மறுநாள் பார்ப்பது போலத்தான். 

இறுக்கம் தளரும் இடங்கள்தான் வெளிகள். அனல் காற்று வான்போய் குலிர்வது போல, விந்து வெளியேரி முட்டைக்குள் செல்வது போல வயல்வெளி  விடுதலையை அளிக்கிறது. எல்லோர் கதைகளையும் புழக்கடைகளில் எழுதி காற்றில் பரப்பும் நிலைபடி  கண்களுக்கு  வயல் துவங்கும் இடம்தான் எல்லை. ஊருக்குள் நாம் சுமப்பது இங்குவந்து இறக்கி வைக்கும் பெரும் மூச்சுகளை. 

கோயிலில் அமர்ந்து பழகியவனை போல தனிமையில் வயலில்  இருந்து பழகிவிட்டவன் பிறகு வேறு எதனுடனும் பொருந்த முடியாமல் ஆகிவிடுவதை இந்த சிறு வாழ் நாளில் பல முறை பார்த்துவிட்டேன். காலம் சென்ற என் தாத்தா அவருடைய அறுபது வயதிலிருந்து எழுபது வயதுவரை எங்கள் போர்செட்டில் தனிமையில் தங்கியிருந்தார். இரண்டு வேளைகள் உணவை என் அப்பா கொண்டுபோய் கொடுப்பார். விடுமுறைகளில்  நானோ தம்பியோ  செல்வோம். அந்த காலங்களில் என் தாத்தா தீபாவளி பொங்கல் மற்றும் ஊரில் ஏதேனும் கெட்டது  போன்ற  நாட்களில் மட்டும்தான் ஊருக்குள் வருவார். நல்லதுகள் எங்களுக்கு அவ்வளவாக முக்கியமாக இருந்ததில்லை. ஓரிரு தினங்கள் இருந்துவிட்டு நான் நடக்கும் இதே கரை வழியாக இந்த வயலுக்கு வந்துவிடுவார். என் சிறுவயதில் எத்தனை மாமாக்கள் சித்தப்பாக்கள் என் வயதைதாண்டிய   துயரங்களை சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள், ஊருக்குள் மிரட்டுபவர்கள் தன்னந்தனிமையில் இங்கே   ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். கோயில்களை போல வயல் மனிதனை ஏதோ செய்கிறது. தவறிய என் அப்பா, காலையில் புல் அறுக்கும் பழக்கம் ஒன்றுக்காகவே மாடு  வளர்த்தார்.  இப்பொழுது தினம்தோறும் காலை நான் புல் அறுத்து போடுகிறேன். வீட்டுவாசல் பூவரசமரத்தடியில்  இன்று கட்டியிருக்கும் அதே மாடு என்னை அவர் என நினைத்துக்கொண்டு விட்டது. அதுதான் என் தம்பிக்கு வரவில்லை. யாருடைய துயரம் பெரியது என்ற போட்டியில் இறங்கியவர்கள் வெல்வதே இல்லை.

சிலரை அழுக இறைவன் அனுமதிப்பதில்லை. அவர்கள் உடனே பொறுப்பேற்று வெற்றிடங்களை நிரப்பியாக வேண்டும். அத்தகையவர்களுக்கு இழப்பு என்பது ஒரு இக்கட்டு. அவர்கள் மீள முடியா துயர சுழலிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள். அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. தம்பி மாட்டிக்கொண்டான். அவனுக்கு துயரப்பட அவகாசம் கிடைத்தது. அமர அண்ணன் என ஒரு கிளை கிடைத்தேன். இப்படி ஆகிவிட்டான். உண்மையில் எங்களை சிறுவயதில் பார்த்தவர்கள், நான் அவனை போலும் அவன் என்னை போலவும் ஆகியிருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். என் தந்தையின் இறப்புக்கு முன் நான் பித்தன் போல காதலித்து திரிந்த பெண்ணின்  பெயர் இன்று ஏதோ பாடல் போல ஒலிக்கிறது. அப்பா இறந்த அன்று தம்பி எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாதவன்  போலிருந்தான். தம்பி அழுகாமல் அதை வாழ்க்கை மொத்ததுக்குமாக சேர்த்து வைத்து கொண்டான். நான் உடைந்து நொறுங்கி அழுதேன். பெண்களை போல பாடி ஒப்பாரி வைத்தேன். அம்மாவும் வைத்தாள். “இனி ஒலைகள்ல கொரைக்கனுமோ நீ உண்ண பருக்கைகள. கோதும் போல கேசமிருக்க. துயில் போல முகமிருக்க. பாவிபய ஊரு. பாலா போன ஊரு. பச்ச மல உண்ண எடுத்து முழுங்கிருக்கே.  ஒன்ன கை நீட்டி அடுச்சவன கண்டமால கட்டுமா. அத பாத்து நின்ன ஊர காவேரி கொண்டு போவுமா”.

கிட்னன் மாமா வீட்டு போர்செட்டை  நெருங்கி கொண்டிருந்தோம்.  இந்த ஆற்றங்கரையில் இருந்து பிரிந்து இடது புறம் செல்லும் கோயில்தோப்பு வாய்க்கால் கரையில் சற்று தூரம் சென்றால் முதலில் வருவது அவர்களின் போர்செட், அடுத்து வருவது எங்களுடையது. இவ்வளவு விஷயங்களை யோசித்து பேசி கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் மாமா இறந்திருந்தால் நான் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை குறித்து என் மனம் அடுக்கி கொண்டிருந்தது. நடேசனை பார்த்தால் நிதானம் மீறி அழகூடியவன் என்றோ அவனை பார்க்க உடன் ஒரு ஆள் வேண்டும் என்றோ  தோன்றவில்லை. ஆனால் இது போன்ற தருணங்களில் எல்லாவற்றிற்கும் மனதளவில் தயாராகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.

ஒரு வேலை செய்தி கெட்ட செய்தியாக இருந்தால், ஊரில் யாரையும் அழைத்து பைக் கொண்டு வர சொல்ல வேண்டும். அல்லது ஒரு காராக வர சொல்ல வேண்டும். அதன் பின் மாமாவை காரில் ஏற்றி கொண்டு போகவேண்டும். வாசலில் கார் வந்து நின்றாலே அத்தையின் மனம் தவறான செய்தியைத்தான் யூகிக்கும். அத்தையும் கெளரியும் கிடந்து அழ தெரு பெண்கள் கூடுவார்கள். ஐஸ் பெட்டிக்கும் போக்கஸ்விளக்குக்கும் சாமியானா பந்தலுக்கும் ஆள் சொல்வார்கள் அல்லது போன் அடிப்பார்கள். தப்படிக்க ஆள் சொல்லிவிடப்படும். உறவுக்காரர்களின் எண்களை ஒருவர் வாங்கி ஒவ்வொருவராக போன் அடித்து தகவல் சொல்ல துவங்குவார். விடியும் வரை விடிந்தபின் என அம்பாஸ்டார் கார்களில் பைக்கில் டாடா எஸியில்  என மக்கள் வந்தபடியே இருப்பார்கள். மூங்கில், வெடிக்காத குருத்து பாலை, எளனி வெட்ட ஆள் செல்லும். பானை பூ வெடி மாலை ஒவ்வொன்றுக்கும் ஆட்கள் செல்வார்கள். 

ஊரில் கடைக்காரரை எழுப்பி தகவல் சொல்லப்பட்டு பத்தி சாம்ரானி போன்ற சாமான்கள் வாங்கப்படும். பிளாஸ்டிக்  நாற்காலிகள் வந்து இறங்கும். செய்தியை அலோன்ஸ்  செய்ய ஒருவர் அம்பாசிட்டர் காரில் குழாய்கள் கட்டி மைக்கோடு கிளம்பி இருப்பார். அவர் சொல்ல வேண்டிய தகவல்களை இன்னொருவர் எழுதி கொடுப்பார். சாவு முதல் யாராவது  போடுவார்கள். பங்காளி ஒருவர் மஞ்சள் பையில் பணத்தையும் கணக்கு வழக்கு நோட்டையும் வைத்து கொண்டு மொத்த நிகழ்வையும் நிர்வகிப்பார். ஆட்கள் மாலையோடு வந்தபடி இருப்பார்கள். கொட்டும், கூட்டமும் வரும்பொழுது பிணம் சுற்றி அமர்ந்த பெண்கள் கூட்டம் அலை போல அழுதடங்கும். பாசிப்பயிறு கஞ்சி, டீ, காப்பி, கலர். வெத்தலை சீவல் தாம்பலம் எடுத்து நீட்டும் இளைஞர்கள்.  அதில் சீவலை மட்டும் நுனி விரலால் எடுத்துரசி நாற்காலிகளில் வந்தமரும் பெரிய மனிதர்கள். 

வேட்டி மூடி  உறவு முறைகள் ஒன்பது பேர் குளிந்து நனைந்த உடையில் கால் இடர, வேட்டியினால்  மூடி கொண்டுவரும் ஒன்பது குடம் நீர், அந்த ஒன்பது பேரிலும் திருநீர் பூச்சு, இறந்தவரின் கடைசி குளியல், புறங்கைகள் வைக்கும் நல்லெண்ணையும் சீயக்காயும். நெய்பந்தம் பிடிக்கும் பேரப்பிள்ளைகள். முன்னும் பின்னும் கூட்டம் செல்ல நடக்கும் கடைசி ஊர்வலம். கொட்டு சத்தம்.  சாலையை நிறைத்திருக்கும் செவ்வந்தியும் கோழிக்கொண்டைகளும்.  சுடுகாட்டில் வாய்கரிசி, பொண் அரிசி,  வேட்டியில் விழும் சில்லரை காசுகள். பிணம், அதன்மேல் சுள்ளிகள் ராட்டி அதன் மேல் வைக்கோல், அதன்மேல் சேரு பூச்சு.  கொல்லிவைக்க போவபனின்   தோளில் பானை வைத்து சுற்றொன்றுக்கு ஒரு பொத்தல் என மூன்று சுற்றுக்கு மூன்று பொத்தலிட பானையில் வெளியேரும் நீரை கைகளால் அசைத்தப்படி சுற்றுக்கு ஒரு பங்காளியோ உறவு முறையோ உடன் இணைய அவர்கள் வாய் சொல்லும் “கைலாசம் வைக்குண்டம் சொக்க லோகம்”. ஓங்கி உடைக்கப்படும்  பானை. 


சந்தன குச்சியாள் கால்மாட்டில் கொள்ளியிட்டு மழித்த தலையும் நனைந்த வேட்டியுமாக கால் இடர கையில் அறுவா உடன் சென்ற சாலைவழி திரும்பி வருவான் கொள்ளியிட்டவன்.  வந்து சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என உணவு. அடுத்த நாள் துரையேத்துவது, எட்டாம் துக்கம்.  ஒவ்வொரு நாளும் போடும் சாம்புரானி. பலகாரம் பழவகைகள். பத்தாம் நாள் படையல். பதினைந்தாம் நாள் படத்திறப்பு. பதினாராம் நாள் திருவையாத்தில் கருமாதி. ஒரு வருடத்திற்க்கு தீபாவளி படையல் பொங்கல் படையல். தலைமுறைகளுக்கு சாமி அறையில் ஒரு பீடம்.

நாங்கள் போர்செட்டை அடைந்திருந்தோம். வரப்பில் நடந்துவரும் காலடி சத்தம் கேட்டு எங்களுக்கு காதில் விழும்படி கிட்னன் மாமா கனைத்தார். நாங்கள் வரும் காரணத்தை அறிந்திருக்கிறார். நடேசன் மடையை மாற்றி விட்டு  வருவதாக சொல்லி இடது புறம் வரப்பில் திரும்பி சென்றான். மாமா, கைத்து கட்டிலை போர்செட்டுக்கு வெளியே மாமரத்தடியில் போட்டு படுத்திருந்தார். அவர் கண் பார்க்கும் திசையில் நிலவு. அருகே சென்று கட்டிலில் அமர்ந்தேன். மாமா எழுந்து அமர்ந்தார். தலைக்கு சுருட்டி வைத்திருந்த துண்டை எடுத்து மடித்து தன் துடையில் விரித்து போட்டார். கட்டிலின் கால்மாட்டிலிருந்த வெத்தலை பொட்டலத்தை எடுத்து துடையில் வைத்து விரித்தார். “ரவைக்கு இங்குனையே படுக்கையா” என்றேன். “ஆமா”. “பனி நல்லா ஏறங்குதே”. “இது ஒரு பனியா” என்று அந்த பேச்சை முடித்தார். வெத்தலை சீவலை வாயில் போட்டு மென்றபடி கையில் புகையிலையை எடுத்து கொண்டு திறந்த பொட்டலத்தை என்னிடம் நீட்டினார். சீவலை வாயில் போட்டு மென்று, வெத்தலை காம்பு கில்லி புடைத்த நரம்புகள் எடுத்து சுன்னாம்பிட்டு தடவி மடித்து வாயில் இட்டு, சீவலையும் வெத்தலையும் மென்று மசித்து பந்தாக்கினேன். அதற்குள் நடேசன் வந்தான். மாமாவிடம் விடைபெற்றேன் அவர் “அஹாம்”  என அடிதொண்டையில் கனைத்து விடையனுப்பினார்.

வரப்பில் சில எட்டுகள் நடந்தபின் வாயில் சேர்ந்திருந்த சாற்றை பொளிச்சென வயலுக்குள் நீட்டி துப்பி கையில் சுருட்டி வைத்திருந்த புகையிலையை வாயிலுள்ள மசியலுடன் வைத்து உருண்டையாக்கி அதக்கி கொண்டேன். மாமா தான் இந்த பழக்கத்தை எனக்கு பழக்கப்படுத்தினார். அப்பா இறந்து கல்லூரி படிப்பை நிறுத்தி அன்றுதான் நான் முதல் நாள் வயலுக்கு வந்திருந்தேன். மாமா எங்களுக்காக அந்த போகத்தை நட்டு கொடுத்திருந்தார். நேராகா இந்த போர்செட்டுக்குதான் வந்தேன். இதே மாமரத்தடியில் அமர்ந்து தூக்கு குவளையில் பழையது சாப்பிட்டு கொண்டிந்தார். அதன் மூடியில் அவிச்சமிளகாயும் நார்த்தங்கா ஊறுகாயும். சாப்பிட்டு முடித்து வாளியை கழுவி வயலுக்குள் உற்றிவிட்டு வேறு இடத்தில் அமர்ந்து பொட்டலத்தை பிரித்து வெத்தலை போட்டார். பின் என்னிடம் நீட்டி “போட்ரா” என்றார். கையில் வாங்கி பொட்டலத்தை ஒன்றுடன் ஒன்று பொருந்தாத கருவிகளை பார்ப்பவன் போல பார்த்துக் கொண்டிருந்தேன். ‘மொதல்ல இத போடு அடுத்து இத போடு’ ‘அப்புடி இல்ல இப்புடி’ என்று அதை எனக்கு முறையாக சொல்லிக் கொடுத்தார்.  

நானும் நடேசனும் திரும்பி வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஊருக்குள் செல்லும் பொழுதெல்லாம் உண்டாகும் பதட்டம் கூடிவிட்டிருந்தது. உடனிருக்கும் மனிதரின் மெளனம் பிறரை  நிலையிழக்க செய்கிறது. அதுவரை பேச்சு கொடுக்க முயற்ச்சித்து கொண்டிருந்த  நடேசனிடம் ஒற்றை வார்த்தை பதில்கள் கூறி விலகி கொண்டிருந்தேன். அதனால் சட்டென்று துளைப்பது போல ஒரு கேள்வியை கேட்டான். 

“ஏன் அத்தான் இப்படி சோகமாவே இருக்க”

“ஏளி..நான் எங்கெடா அப்படி இருக்கன் பெசாமா இருடா”

“இல்லத்தான் நெசமுளேதான் சொல்லறன். உன்ன பாக்கயில அப்புடிதான் இருக்கு. சட்டுன்னு இந்த இரண்டு வருசத்துல ஆளே மாறிபோய்த்த. எங்க அம்மாவும் அப்பாவும் எப்பொவும் உன் கல்யாண பேச்சுதான். நீ தான் அப்பறம் பண்ணிப்போம்ங்குறியான்”

“ம்ம”

“என்னத்தான் “ம்ம்” “ம்ம்” ங்குற. இப்ப என்ன சொல்லவர அவனுவோல வெட்டனுங்குரியா. சொல்லு. அந்த ஒரு பயல வெட்டுனா போதுமா இல்ல அவனுவோ அத்தன பேரையும் வெட்டனுமா. எதாவது பன்னும்னா அத சொல்லு. சும்மா இப்புடி இருந்துட்டிருந்தா பாக்குறோளுக்கும் கஸ்டம் ஒனக்கும் கஸ்டம். வெட்டனும்னா சொல்லு நான் வாரன் வெட்டுவம். எங்க அப்பா கெடக்குராரு. நீயும் இப்படி இருக்க. ஒன் தம்பியும் இப்புடி இருக்கான் உங்க வீட்டுக்கே இப்பொல்லாம் நான் வாரதில்ல பாத்தில்ல”

“ஏளி…அதெல்லாம் ஒன்னும்மில்ல. அதெல்லாம் மறுந்து எத்தனாலா ஆச்சு. இப்ப வந்து பேசிட்டு இருக்க” என்று சொல்லி பேச்சை முடித்தேன்.

ஆற்றங்கரை சென்று தெருவின் தார்சாலையில் சேரும் இறக்கம் வழியாக நாங்கள் ஊருக்குள்  நுழைந்தோம். நடேசனுக்கு என் தம்பியை விட ஒரு வயது குறைவு. அவனும் நானும் சிறு வயது முதல்  எத்தனையோ இடங்களுக்கு ஊர்களுக்கு இதுபோல் ஒன்றாக போயிருப்போம். ‘அத்தான் அத்தான்’ என எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். ஆனால் அப்பா இறந்த இந்த மூன்று வருடங்களில் சேர்ந்தார்போல் இவ்வளவு சொற்களை இன்றுதான் பேசுகிறான். உறவினர்கள் காளைகளுடன் என்றுமிருக்கும் அறையடி விலகத்துடன்தான் என்னிடம் பழகினார்கள். பிறர் முற்றிலும் விலகியிருந்தனர். நடேசன் நான் ஏதோ தாளாத துயரத்தில் இருப்பதை போல பேசினான். 


ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்கும் அளவுக்கு கூட எனக்கு நேரம் இல்லை. என் நாள் வேலைகளால் நிறைந்திருக்கிறது. வேலையை கொண்டு நாம் மறப்பது எத்தனையோ. காலை எழுந்ததும் மாடுகளை மாற்றி கட்டிவிட்டு வயலுக்கு, அங்கு தண்ணிபாச்சுவது களைபறிப்பது என காலத்துக்கு தகுந்த வேலை இருக்கும். இப்பொழுது போர் செட்டில் கத்திரிக்காயும் வெண்டைக்காயும் போட்டிருக்கிறேன். போர் செட்டில் மண்புளுக்களை கொண்டு உரம் தயாரிக்கிறேன். வீட்டுக்கு சென்று காலை உணவு முடித்து விட்டு மீண்டும் வயல்.  பின் வீட்டுக்கு மதிய உணவு. வயலுக்கு வந்து தூக்கம். மாலை வயலில் வேலை இருக்கும், அப்படியே முழுவதும் சுற்று சுற்றி வருவேன். சில தினங்கள் கடை தெருவுக்கு செல்வது ரேசன் கடைக்கு செல்வது போன்ற வேலைகள் இருக்கும்.  இடையே நல்லது கெட்டதுகளுக்கு செல்லவேண்டும். அப்பாவின் இடத்திலிருந்து செய்ய வேண்டிய செய்வனைகள் முறைமைகள் செய்ய இருக்கும். என்னை பற்றி எண்ணலாம் என்பதையே  நான் மறந்துவிட்டிருக்கும் நாட்கள் இவை. பழகிய பாதையில் செல்லும் மாட்டு வண்டியில் ஓட்டுபவன் படுத்து தூங்கலாம். இந்த முன்று நான்கு வருடங்களாக நாட்கள் அப்படிதான் சென்று கொண்டிருக்கின்றன.  

உண்மையிலேயே நான் துயரமாக இல்லை. என் அப்பாவை பற்றிய எண்ணம் எல்லாம் எனக்கு வருவதே இல்லை. அவரின் பொருட்டு என் தம்பி இத்தனை துயரப்பட, எனக்கு அப்படி எதுவும் இல்லையே என்று சில சமயங்களில் குற்ற உணர்ச்சி மட்டும்தான் அடைகிறேன். பின் ஏன் நடேசன் அப்படி சொல்கிறான்.  அவனால் தாங்கிக்கொள்ள முடியாதது என்னிடம் இல்லாத இளமையை. வினோத் தான் அதை என்னிடம் முதலில் சொன்னவன். அவன் சொன்னபின்தான் நானே கூட அதை கவனித்தேன். வினோத் சிறுவன் ஆறாவதோ ஏழாவதோ படிக்கிறான். எல்லா இளைஞர்களுக்கும் ஏனோ அவனை பிடிக்கும். பைக்கில் ஏத்தி கொண்டு அவனை ஊர் ஊராக அழைத்து செல்வார்கள். எல்லாவற்றையும் அவனிடம் பேசுவார்கள். பெரிய ஆட்கள் கூட அவனுடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.  பெண்களுக்கு அவனை கண்டால் கடைகளில் வாங்க வேண்டிய பொருட்களின், தங்கள் வீட்டுக்கு வர சொல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பெண்களின் நினைவு வரும். அவனும் எந்த  வேலைளையும் தட்டுவதில்லை.  அனைவரிடமும் விட விட பேசிக்கொண்டிருப்பான். பேசும் போது அவன் முகம் உடனிருப்பவரின் வயதையும் அனுபவத்தையும் போலவே இருக்கும். தங்களை அவன் விரும்புகிறானா என்பதில் சந்தேகம் கொண்டவர்கள் அவனுடன் பழகும் துவக்கத்தில் அவனை வெறுத்து பின் நண்பர் ஆவார்கள். பெரியவர்களும் இளைஞர்களும் அப்படி எல்லா சிறுவர்களையும் தங்கள் உலகுக்குள் அனுமதிப்பதில்லை. ஏனோ வினோத் போன்ற சிலரை மட்டும் அனுமதிக்கிறார்கள்.  முகத்தை தூக்கி மேலே நிகழும் வாழ்க்கையை  அந்த சிறுவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்பதனாலா.

அப்பா இறந்த இந்த ஆண்டுகளில் நான் கொண்ட ஒரே ஆசை வினோத்துடன் எப்படியும் நண்பன் ஆக வேண்டும் என்பதுதான். அது உண்மையில் பெரிய காரியமில்லை. அவன் பள்ளியோடத்து கிரவுண்டில் விளையாடி கொண்டிருக்கும் போதோ, காளியம்மன் கோயில் வாசல்மரத்தடி திண்ணையிலோ, நாளுரோடு சந்திகரையிலோ, பாலகடையிலோ நண்பர்களோடோ இளைஞர்களோடோ அமர்ந்திருக்கையில் “வாடா வினோத்து அம்மாபேட்ட வரைக்கும் போய்த்து வருவம்” “வடுவூர் வரைக்கும் பொய்த்து வருவம்” “தஞ்சாவூர் வரைக்கும்” “மன்னார்குடி  வரைக்கும்” இப்படி சொன்னால் போதும் விடைபெற்று உடன் சைக்கிளோ பைக்கோ ஏறி  வந்துக்கொண்டே இருப்பான். அவனுக்கு அவ்வளவு எளிமையாக இருக்கும் அது எனக்கு அப்படி இல்லை. “வா வினோத்து பொய்த்து வருவம்” என்ற வார்த்தையை சொல்ல எனக்கு ஒரு ஆண்டுகாலம் தேவைப்பட்டது. கற்பனைகளில் பல வகைகளில் நிகழ்த்தி பார்த்திருந்த அந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டே இருந்தேன். வினோத், எந்நேரமும் சிரிப்பு, உலகமே தன்னுடையது போன்ற நடை, பொழுதெல்லாம் விளையாட்டு. கபடி, வாலிபால், கிரிக்கெட். ஆற்றிலும் குளத்திலும் மணிக்கணக்காக நீச்சல். ஆற்றில் தன்னந்தனியாக நீந்தி விளையாடும் ஒருவனை நான் பார்த்திருக்கிறேன் என்றால் அது அவன் மட்டும்தான். பைக்கிலும் சைக்கிளிலும் பின் இருக்கையில் அமர்ந்து யாருக்கும் இணையனாக அவன் செல்வதையும் வருவதையும் சாலைகளில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  ஊரின் எல்லா நல்லது கெட்டது வீடுகளிலும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிப்பான்.  சற்று நேரத்துக்கு முன் சாவடியில் பார்த்தவனை இன்னொருவருடன் கடைத்தெருவில் பார்க்க முடியும். வயலுக்கு, யார் வீட்டுக்காவது  நடக்கும் நடவுக்கு இவன் சைக்கிளில் சோரு கொண்டுபோய் கொண்டிருப்பான்  அல்லது பைக்கில் வயல் உரிமையாளனின் பின்னால் அமர்ந்து உணவு பாத்திரங்களை பிடித்து கொண்டிருப்பான். நெல் போடும் கொள்முதல் இடங்களில் இருப்பான். 

அன்று பக்கத்து தெருவில் ஒரு துக்கம். நாங்கள் கொட்டிகொண்டுவர வேண்டும். நான் அந்த துக்க வீட்டில்தான் இருந்தேன். என் பங்காளி மூத்தவர் ஒருவர் என்னை அழைத்து சென்று ஐந்து மாலைகள் கட்டி கொண்டுவரும்படி சொன்னாார். நான்  அங்கு  நாற்காலிகளை எடுத்து போட்டு கொண்டிருந்த வினோத்தை பார்த்தேன். பார்த்த கணமே அவனும் என்னை பார்த்தான். கைசுட்டி வா என்று அழைத்தேன். நா குலற அவன் விழிகளை சந்திக்க முடியாதவனாய் “வா விதோத்து…வடுவூர் வரைக்கும் பொய்த்து வந்துருவம்…அஞ்சு மால கட்டியாரனுமா..நீ பின்னாடி வச்சுட்டு உக்காந்துக்க”என்றேன். சென்று பைக்கை எடுத்தேன், அவன் ஒரு ஆட்டு ஆட்டி ஏறி அமர்ந்தான். பைக்கை எடுத்து  விரைந்தேன். ஏதிரே துக்கத்துக்கு வரும் ஆட்கள் நடந்தும் பைக்கிலும் டாடா எஸ்சியிலும் வந்து கொண்டிருந்தார்கள். அடுத்த தெருவில் கூட்டம் குறைந்தது. பின் ஊர் முடிந்து வயல்வெளியில் நரம்பு போல சாலை. காற்று வயிறு வழியாக சென்று முதுகு புறம் சட்டையை புடைக்க செய்து சட்டை படபடத்தது. நானே பேச்சுகுடுத்தேன். 

“எத்தனாது படிக்குற வினோத்து”
“நானா ஏழாவுது ன்னே”
“எங்க”
“இங்கதான் நம்பஊரு  ஹைஸ்கூல்”
“இவன் உங்க அண்ணன் என்ன பன்னறான், எங்குனையோ வெளியூர்ல படிக்கிறான்னு சொன்னவோ”
“ஆம்ம ன்ன..மெட்டாரஸ். வர வாரம் வரானாம். பய பொய்த்து ஆளே மாறிட்டான். ஒரே ஸ்டைலு. என்னகு ரெண்டு லோயரு எடுத்தாடான்னு சொன்னன்”
“ம்ம ம்ம்”
“உங்க தம்பி  ராமு  இவன்லாம் ஒன்னாம்தான் ரூம் எடுத்து  தங்கிருக்கவோ”
“ராமு எனக்கு அண்ணடா. எங்க பெரியப்பா மொவன். என்னவிட அது மூப்பு”
“நிஜமாவா ன்னே”
“ஆமா..வினோத்து எனகும் அதுக்கும் ரெண்டு மூனு  வயசு வித்தியாசம் இருக்கும்”

அன்றைக்கு பின் நாங்கள் ஒன்றாக வேறு எங்கும் செல்லவில்லை. கொஞ்ச நாட்கள் பார்த்தால் புன்னகைத்துக் கொண்டோம். அதன் பின் அதுவும் நின்றுபோனது. அந்த நாள் வழியாக யாருடைய ஏற்புக்கும் ஏங்காதவனாக எந்த இழப்புனர்வும் அற்றவனாக ஆனேன். ஆனால் அவன் ஏன் அப்படி என் வயதை கூடுதலாக மதிப்பிட்டான் என்பதை குறித்து மட்டும் கவனிக்க துவங்கினேன். என் அம்மா நான் சாப்பிடும் பொழுது அதுவும் சாப்பிடுவதில்லை, பரிமாறிவிட்டு பார்த்தபடி அமர்ந்திருக்கிறது. கடையில் உக்காந்து வெத்தலை சீவல் போட போனால் மரியாதை கொடுத்து பெரியவர்கள் சற்று நகர்ந்து உக்காருகிறார்கள். நல்லதுகளிலும் கெட்டதுகளிலும் எனக்கு கொடுக்கப்படும் வேலைகள் எதுவும் இளைஞர்களுக்கு உரியது அல்ல. திருவிழாக்களின் சில முடிவுகளில் என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள். வயலில்  விதை எப்பொழுது விடலாம் என்று கிட்னன் மாமா என்னிடம் ஒரு வார்த்தை கேட்கிறார். அதன் பின்தான் கண்ணாடிகளில் என்னை கவனித்தேன். கட்டம் போட்ட கைளியும் அரக்கை சட்டையும் அனிந்து கடைத்தெருக்கு உர மூட்டை எடுக்க வருகிறேன். தோளில்  துண்டு வந்து விட்டது. பூட்கட்டும் பங்கு கிராப்பும் வைத்து பீர் குடித்து கொண்டு கல்லூரியில் பூண்டி புஸ்பமாலா கொண்டாடியவன் இல்லை நான் இனி. எந்த ஏக்கமுமின்றி அதை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

“வரன்த்தான்” என்று சொல்லி சந்திகரையில் பிரிந்து வீட்டுக்கு சென்றான் நடேசன்.  நான் எங்கள் வீட்டின் வாசலில் நுழைந்ததும் அம்மாவின் கனைப்பொளி கேட்டது. நான் வீட்டின்முன் கதவை திறந்து டார்ச்சு லைட்டை அடித்தபடி வெத்தலசீவல் பொட்டலத்தை வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து எடுத்து கொண்டு கதவை சாத்திவிட்டு வாசலில் கிடக்கும் நாற்காலியில் வந்து அமர்ந்தேன். நிலவு உச்சியை தாண்டி ஏறி சென்று கொண்டிருந்தது. அதன் ஒளியை வாங்கி மிண்ணும் மேகநுனிகள். வெத்தலை பொட்டலத்தை பிரித்தபடி “தினேஷா”  என்று தம்பியை அழைத்தேன். அவன் “ம்ம்” என்றான். மணி பனிரெண்டாகியும் இன்னும் அவன் தூங்கவில்லை. கிட்னன் மாமா கோயில்களுக்கும் தர்காவுக்கும் அழைத்து சென்றுவந்து பார்த்துவிட்டார். எல்லோரும் சொல்கிறார்களே என்று சொல்லி  நானும் மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று பார்த்தேன். அவர்கள் கொடுக்கும் மாத்திரையை இவன் உண்பதில்லை. உணவில் கலந்து கொடுக்கலாமா என்று அம்மா கேட்டதற்க்கு மறுத்துவிட்டேன். அவன் நம்புவது என்னை மட்டும்தான். காற்றையும் வெளியையும் கூட அவன் நம்புவது இல்லை. யாரோ திரும்பி வரமுடியாத இடத்தில் கொண்டு போய் விடும்படி யோசனை சொன்ன செய்தி மட்டும் என் காதுக்கு வந்தது. சொன்னவர் யார் என்று தெரியவில்லை. அவனால் ஒழுங்காக பேச முடியவில்லை. நா குளரி நடுங்கும் கைகளால் முகத்தை தேய்த்து கொண்டுதான்  பேசுகிறான். பேசுவதை மறந்துவிடுகிறான். தனி அறை ஒரு கண்ணாடி நம் ஆழத்தை நிகழவிட்டு அதை நமக்கே காட்டுகிறது.  அம்மா அவன் துணிகளை துவைத்து போடுவதை நிறுத்திவிட்டாள். நான் தான் துவைத்து போடுகிறேன். துனி முழுவதும் விந்தின் வீச்சமும் கரையும். நான் அவனை அடிப்பதே இல்லை. ஆனால் இப்பொழுது வேறு வழியின்றி அடிக்க துவங்கியிருக்கிறேன். இரவுகளில் வந்து  அச்சமாக இருக்கிறது என்று சொல்லி என்னை எழுப்பும் அளவுக்கு சென்றுவிட்டான். வயல் வெளிகளை தவிற வேறு எங்கு என்றாலும் இவனுடைய  நினைப்பாக உள்ளது. அங்கும் இந்த அழகை இவன் காண்பதில்லையே என்ற எண்ணம். 


என்னை பார்ப்பவர்கள் எல்லாம் இவனை குறித்து விசாரிக்கிறார்கள். அழிவின் இறுதி விளிம்பில்  நிற்க்கிறான். சில தினங்களுக்கு முன் கிளை ஒன்றை கொடுத்து தலைகழிக்க சொன்னேன். ஒரு கையில் கிளையும் மறுக்கையில் அருவாளுமாக மெளனமாக நின்றான். நான் சொன்ன செய்தி அவனுக்கு செல்லவில்லையா, அல்லது அவன் மனம் சொல்வதை உடல் அறியவில்லையா தெரியவில்லை.  ஓங்கி உதைத்தேன். கீழே விழுந்தவனை தூக்கி நிறுத்தி மடார் மடார் என அறைந்தேன். வெத்தலை சாற்றை முகத்தில் உமிழ்ந்தேன், அதன் மீதே அறைந்தேன். “நாரா தேவுடியா மொவன அழியபொரடா. ஒன்மில்லாம போப்பரடா குச்சிகாரி மொவன. கண்ணு தெரிதா இல்லையாடா நாரா தேவுடியா மெவன அழியபோரடா . அழியபோப்போர. அழிஞ்சு ஒன்னுமில்லாம போப்போரடா”. கைக்கும் காலுக்கும்  வந்த வாகில் எல்லாம் அடியும் உதையும் அவன் மேல் விழுந்தது. நான் விரும்பியதெல்லாம் ஒன்றுதான். திருப்பி அடிக்க முயன்றால் அல்லது ஒரு சிறு முறை முறைத்தால் போதும் அவன் பிழைத்து கொள்வான். ஆனால் அம்மாவும் ஊராரும்  வந்து மறைக்கும் வரை தடுக்க கூட செய்யாமல் இன்னும் வேண்டும் என்பவனை போல அடிவாங்கி கிடந்தான். இன்று நடேசன் கேட்டதை கூட கேட்டுப்பார்த்தேன். இங்கிருந்து எந்த செய்தியும் உள்ளே செல்லவில்லை.

இவன் மீண்டு உயிர் வாழ வேண்டும் என்றால் நான் இல்லாமல் ஆக வேண்டும். நான் தந்தையை தேடுவது போல ஒவ்வொரு செயலிலும் இவன் என்னை தேடவேண்டும். என்னால் ஒரு பயிர் சீழ்கட்டி அழுகுவதை பார்க்க முடியவில்லை. எங்கே செல்வேன். இப்படியே வயல் வெளிக்கு. கூத்த பெருமா கோயிலிலோ ஐயனார் கோவிலிலோ சென்று அமர்ந்துவிட முடியாதா. இன்னும் பெரிய கோயில்களில் போயி அமர்ந்துவிட முடியாதா. இல்லை வயல்கள் வழியாக சென்று கொண்டே இருக்கட்டுமா. அல்லது நகரத்தில் ஏதோ இடத்திற்க்கு சென்றாவது பிழைக்கிறேன். நிலையாக ஒரு இடத்தில் இருந்தேதான் ஆக வேண்டுமா. நிலைக்கொண்ட இடத்தை காத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா. பூமியில்  வெட்டவெளியில் சிங்கங்களால்தான் அச்சமின்றி நடக்கமுடியும்.  பறவையால் பயமின்றி வானில்தான் பறக்க முடியும். மரத்தில்தான் துயிலமுடியும். சிறைப்பட்டவர்கள்தான் பறவை பறப்பதை வியக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு பட்டவருக்கு கிடாவெட்டி சாமி கும்பிடுவதை காரணமாக கொண்டு ஐந்தாறு பேரால் அடிக்கப்பட்டார் அப்பா. முதன்மையாக முன்னின்று அடித்தவர் ஒருவர். ஊரின் சந்திக்கரையில். நாலு தெரு சந்திக்கும் இடம். தடுக்க சென்றவர்களுக்கும், செய்தி கேட்டு தாக்க சென்ற என் பெரியப்பாவுக்கும் அடி. முன்பே திட்டமிட்ட சண்டை. கிடைத்த கம்பு மட்டைகள் கொண்டு அப்பாவுக்கு அடி. ஊர் கூடி தடுத்து அப்பாவை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். அடித்தவர்கள் வேறு யாருமில்லை, ஒரே சாதிக்குள் வர கூடிய ஒரே பட்டப்பெயருக்குள் வரக்கூடிய வேறு குடும்ப பெயரை உடையவர்கள். பட்டவருக்கு எதுவோ யார் எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை குறித்த சண்டை.

நான் செமஸ்டர் தேர்வு முடித்து சைக்கிளில் வீட்டுக்கு வந்தேன். வீடு முழுவதும் சைக்கிள்கள் பைக்குகள். அத்தை மாமா பெரியப்பா சித்தப்பா பங்காளிகள் உறவுமுறைகள் என அனைவரும் கூடி இருந்தார்கள். என் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். தலையில் சிறுகட்டும் இடதுகை முழம் கொட்டாச்சியில் சிறு கட்டும் போடப்பட்டிருந்தது. அவரை சுற்றி நாற்காலியில் வெள்ள சட்ட வேட்டி பெரியவர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சைக்கிளை நிறுத்தி வாசலுக்கு வந்ததும் நிலைபடியோரம் அமர்ந்திருந்த அம்மா கண்களில் நீர் துளிர்க்க என்னை வா என உடல் மொழியால் அழைத்துவிட்டு வீட்டுக்குள் போனாள். கூடத்தில் பானையை கொண்டு வந்து வைத்தாள், அடுத்து தட்டை வைத்து என்னை அமர சொல்லி விட்டு குழம்பு எடுக்க போனாள். நான் அமராமல் அப்படியே நின்று “என்னன்னு சொல்லுமா மொதல்ல” என்றேன். அவள் அமர்ந்தாள். உடன் அமர்ந்தேன். உணவை போட்டாள். அதை கிளறிக் கொண்டே அவள் சொல்வதையெல்லாம் கேட்டேன்.  பின் எழுந்து வெளியே வந்தேன். கேஸ் குடுக்கலாமா என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டார்கள். என் ஒன்றுவிட்ட பெரியப்பா ஒருவர் திருப்பி அடிப்பதே சரி, இல்லை என்றால் இது நீண்டு கொண்டே போகும் என்று சொன்னார். நானும் அப்படியே நினைத்தேன். என் தம்பி பள்ளியில் இருந்து வருவதுவரை காத்திருக்கலாம் என்ற முடிவுடன் காத்திருந்தேன். என் பங்காளி வீடுகளில் இருந்து பெரியப்பா ஒருவர் என்னை தனியா அழைத்து “நீ எதுவும் வெட்டுவன்னு  நிக்காத அப்புடின்னா உங்க அப்பனும் நாங்களும் பாத்துப்போம்” என்றார். நான் வழக்கமாக கடைத்தெருக்களில் நின்றால் கூட மிரட்ட கூடியவர் அவர். ஆனால் அவர் சொல்லும்வரை வெட்டலாம் என்ற சாத்தியம் இருப்பதை யோசித்திருக்க கூட இல்லை. என் இன்னொரு பெரியப்பா பையனும் அவ்வாரே சொன்னான் “நானா இருந்திருந்தா இந்நேரம் வெட்டிருப்பன்” என்று.

அப்பா என்னையும் தம்பியையும் தவிர ஆட்டு மாட்டை கூட அடிக்கமாட்டார். தனியறையில் இருந்த எனக்கு கண்களிலிருந்து நீர் வடிந்தபடி இருந்தது. கேஸ் குடுப்பதாக முடிவாகி கூட்டம் கலைந்து சென்றது. திண்ணையில் அப்பா அமர்ந்திருக்க அதன் மறுவிளிம்பில் சென்று நான் அமர்ந்தேன். 

“அப்பா”
“ம்ம் சொல்லுப்பா”
“வெட்டிபுடுவம்பா”
“ஏளி என்ன பேசுர வாயில அடி. உன்ன வேற மாதிரி நெனச்சா எல்லாரு மாறியும் பேசிட்டு இருக்க”
பலமான அழுகையுடன் “யப்பா வெடிப்புடுவம்ப்பா வாப்பா” என்று நான் சொன்ன  அடுத்த கனத்தில் என் அருகே வந்துவிட்டிருந்தார். இருபத்தோரு வயது இளைஞனான என்னை அனைத்துக்கொண்டார். “இத்தல்லாம் ஒரு விசியமோ இல்லடா. பெசமா இரு”

அந்த பிரச்சனை  கேஸ் கொடுத்து ஸ்டேசனிலும் ஊரிலுமாக நிகழ்ந்த இரண்டு முன்று பஞ்சாயத்துகளுடன் நிறைவுக்கு வந்தது. பட்டவருக்கு யார் எதை முதலில் செய்யவேண்டும், கிடா வெட்டு வேண்டும் என்ற தீர்மானங்களும் தீர்மானிக்கப்பட்டது. அப்பாவுக்கு ஏற்கனவே சக்கரை நோயும் உயர் ரெத்த அழுத்தமும் இருந்தது. அதனால் அடுத்த ஒன்றை ஆண்டுகளில் அப்பா மாரடைப்பால் இறந்தார். ஆனால் அப்பா இறந்ததர்க்கு காரணம் அந்த சண்டைதான் என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருந்தது. அன்று எனக்கு முக்கியமா பட்ட அந்த சண்டையும் பிரச்சினையும் இன்று அப்படி படவில்லை. இந்த ஆண்டு பட்டவருக்கு சாமி கும்பிட்ட போது அப்பாவின் இடத்தில் இருந்து நான்தான் அனைத்தையும் செய்தேன். அக்கறையில் காட்டுக்குள் இருந்த சிறிய மேடைதான் வழிபாட்டு இடம். அது அவருடைய சமாதி அமைந்த நினைவிடம். அதன் மேல் சின்ன கல்லில் மாடம்.  பட்டவருக்கு உருவம் இல்லை. அந்த மேடைமேல் படையல்கள் படைக்கபடும். எங்கள் பட்டவருக்கு உரிமையானவர்கள் ஒரு பட்டப்பெயருக்குக்குள் வரக்கூடிய ஒம்பது பத்து  பெரும் குடும்பங்கள், ஒவ்வொன்றுக்கும் ஒரு குடும்ப பெயர்.  அவற்றில் ஒன்றுக்குள் குறைந்தது பத்திருபது முப்பது என குடும்பங்கள், அவர்களுக்குள்  பெரிய வீடு நடு வீடு சின்ன வீடு அதற்க்கு அடுத்தகட்ட வீடுகள்  என்ற பிரிவினைகள் அதற்க்கு கூட சில சமையங்களில் பெயர்கள். 


முதிலில் இந்த குடும்பங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்திலிருந்து பிறந்து பிரிந்தது, அந்த அண்ணன் தம்பிகளிலிருந்து அடுத்த கிளை பிரிந்தது. அந்த முதல் தந்தை காடாக கிடந்த இந்த நிலத்தை வயலாக்கி வாழ்க்கையை உண்டாக்கி இருப்பார். அரும்பாடு பெரும்பாடு பட்டவர். அவரின் நினைவு பட்டவராக வழிபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடியில்  இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கும்பிடப்படும் சாமியில் உண்டாகும் சண்டைகள்  இவை. இந்த வாழ்க்கை முறையில் இது நிகழ்ந்துதான் தீரும். வேளிகளும் வரப்புகளும் பிரித்த அகங்களில்  உண்டாகும் அழுத்தம் அதையது. இந்த பகையும் தீர்வும் அடங்க இன்னும் பெரிய தெய்வங்கள் இந்த மண்ணில் இறங்க வேண்டும்.  நான் விலகிவிட்டாலும் அந்த சண்டையும் அதை ஒட்டிய அப்பாவின் இறப்பும்  தம்பியைத்தான் ஆழமாக பாதித்திருக்க வேண்டும்.

வெற்றிலை சாற்றை துப்பிவிட்டு நாற்காலியில் இருந்து எழுந்தேன். அதன் கையில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டு கொண்டேன். கிழட்டி விட்டிருந்த செருப்பை போட்டுக்கொண்டேன். கைலாம்பை ஒளிரவிட்டு நடந்தேன். அம்மா கனைத்தாள். பூவரச மரத்தடியிலிருந்து மாடு அழைத்தது. நடந்து சந்திக்கரையை அடைந்தேன். சற்று முன் நானும் நடேசனும் வந்தவழியே திரும்பி நடந்தேன். இடதுபுறம் நான் கடந்து செல்லும் வீடுதான் என் அப்பாவை அடித்தவரின் அதற்க்கு காரணமாக அமைந்தவரின் வீடு. அவர் மனைவி அம்மா பிள்ளைகள் என அனைவரும் துயின்று கொண்டிருக்கிறார்கள். ஓட்டு வீடு. கைலாம்பு இருக்கிறது. எண்ணம்தான் ஆயுதம். வேண்டாம். ஏன். இல்லை வேண்டாம். தெரியவில்லை வேண்டாம்.

ஊர் சாலை சென்று முடிந்து ஆற்றங்கரைமேல் ஏறும் ஏற்றத்தில் ஏறி ஆற்றங்கரையை அடைந்தேன். ஒவ்வொறு முறையும் போல அகத்தில் வெளி நிறைக்கும் பரவசம். எடையற்ற மிதப்பு. உடல் சிளிர்க்கும் குளிரில் மயிர் கூச்செரிந்து உடலை உளுக்கி கொண்டே மூத்திரம் போனேன். துளிகள் என் கால் மீதே விழுந்தன. திறந்திருக்கும் வயல் வெளி நோக்கி நடக்க துவங்கினேன். வானம்  நதி என நினைவுறுத்துபவை இரவில் வீண்மீன்கள் காலையில் பறவைகள். என் கையிலிருந்த கைலாம்பு விட்டு விட்டு எரிந்தது. அதை தட்டி ஒழுங்காக ஏரியவைத்தேன். இதுதான் தம்பியின்  நிலை. பைத்தியாமாகி கொண்டிருப்பது என்பது விட்டு விட்டு எரியும் சுயத்தை கொண்டிருப்பது. எங்கே செல்கிறேன். சென்று கொண்டே இருக்க முடியாதா. திறந்த வெளிகளை நோக்கி. மனம் பொங்கி எழும் பரவசங்களை நோக்கி. வேறு ஒரு பெயரில் வேறு ஒரு அடையாளத்தில் முற்றிலும் வேறு ஒருவனாக இருக்க முடியாதா. அல்லது எங்காவது சென்று பிழைத்து மட்டுமாவது இருக்கிறேன். அவனை எங்காவது கொண்டுவிடுவதற்க்கு பதிலாக  நான் எங்காவது சென்றுவிடலாம் இல்லையா. நான் இல்லை என்றால் அவன் மீள்வான். நான் இல்லை என்றால் அவன் என்ன ஆவான் என்ற என்னுடைய அச்சம்தான் அவனை இப்படி ஆக்கியுள்ளது. மீள முயல்வதன்றி அவனுக்கு அப்பொழுது வேறு வழியில்லை. மீளவில்லை என்றாலும் என் இருப்பு அவனுக்கு அந்த வாய்ப்பை மறுக்கிறது. ஒன்றுமே வேண்டாம் நான் செய்யும் ஒவ்வொன்றிலும் என் தந்தையை தேடியது போல அவன் அண்ணனை தேடினால் போதும் மீண்டு விடுவான். சரி, எதுவுமே வேண்டாம், எனக்கு இங்கிருந்து கிளம்பி செல்ல பிடித்திருக்கிறது. ஆகையால் கிளம்புகிறேன். நான் பிழைக்க வேண்டும் அதனால் கிளம்புகிறேன். போதும், தோள்கள் வலிக்கிறது அதனால் கிளம்புகிறேன். ஏதோ ஒன்று கிளம்புகிறேன். இந்த ஆற்றங்கரையில் இன்னும் அரைமைல் நடந்தால் தார்ச்சாலை.

போர்செட்டை பார்ப்பான். வரப்புகளில் நடப்பான். வாய்க்கால் நீரை வருடும் புல் தோகைகள், அதன் நுனிபோக சுனைகளில் பல ஆயிரம் பனித்துளிகள். நீரடியில் மேகம் என மெல்ல நகரும் மென் மணல் துகள்கள். பூசனி பூத்து நிற்க்கும் நிறைந்த மார்கழி இது. வயல் போர்த்தி நிற்க்கும் பனி. பனி நீரின் ஒளியில் மின்னி மறையபோகும் சிலந்தி  வலைகள். பனி, தொலைவில் திரையென தெரிந்து அருகில் மென்புகையென ஆகும் மாயம். கிழக்கில் கதிரவன் எழுவான். விடியும். படலம் என பனி விலகி துளிகளில் மின்னும் கோடி கதிர்கள் எழும். வானில் பறக்கும் வெண்கொக்கு கூட்டத்தில் சிறகோர செங்கதிர். பொன் நிறத்தில் மின்னும் வெண்மேக விளிம்புகள். அனைத்தையும் பார்ப்பான் அவன் நாளை. பட்டசெடி துளிர்ப்பது போல சாய்ந்த பயிர் நிமிர்வது போல அவன் மீள்வான். மாமா வெத்தலை பொட்டலத்துடன் அவனை அழைத்துக்கொள்வார். நான் விட்டு செல்லும் இளம் நாற்றங்கால் அவன் கண்களின் கருணை கோரி பெருகும். நான் செல்கிறேன். 


 
***

1 comment for “பட்டவன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...