வீடு திரும்புதல்

இரண்டு, மூன்று மாதமாகவே எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தைத் திறக்கலாம் என்று பேச்சு இருந்தது. கடைசியில் உண்மையாகிவிட்டது. தினம் இருபது பேராக வரச் சொல்லியிருந்தார்கள். இன்றுபிரசாத்தின் முறை. பிரசாத் ஒரு பி. பி. ஓ ஊழியர்.

அலுவலக வாகனத்தில் ஏறியவுடனே ஓட்டுநர் ‘குட் மார்னிங்’ வைத்து ‘வெல்கம் சார்’ என்று கூறி ஒரு சாக்லேட்டும் கொடுத்தார். ஓட்டுநர் பெயர் பாஸ்கரன். ஐந்து நட்சத்திர ஓட்டுநர். இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர். இந்தத் தகவல்களெல்லாம் செயலியிலேயே வந்து விடுகின்றன. நிச்சயம் அறுபது வயதுக்கு மேலிருக்கும். கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னுடைய மூன்று வாகனங்களில் இரண்டை மாதத்தவணை கட்டமுடியாமல் விற்றுவிட்டுச் சொந்த ஊருக்குச் சென்றதையும், ஓட்டுநர்கள் பலரும் இருந்த ஒற்றை வாகனத்தையும் விற்றுவிட்டுக் குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்ததையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஒரு நோயி, இதுவரைக்கும் நான் சம்பாதிச்ச மொத்தக்காசையும் கொண்டுக்கிட்டுப் போயிடுச்சு.  இத்தனைக்கும் அது எனக்கு வரல, பாத்துக்கிடுங்க” என சளியின் குலுங்கலோடு சத்தமாகச் சிரித்தார் பாஸ்கரன்.

பிரசாத்துக்குப் பாவமாகத்தான்  இருந்தது.

“ஏதோ அந்த மட்டுக்குத் தப்பிச்சீங்க… எங்க வீட்டுல ரெண்டு டெத்தாயிப்போச்சு… ”

“அய்யோ… பேசிக்கிட்டே கோடு போட மறந்துட்டேன். இந்தாங்க. ஒங்க கோடை இதுல பதிவு பண்ணுங்க.. ”  என்று கைபேசியைக் கொடுத்தார்.    

“என்ன கோடு?”

“ஒங்களுக்கு மெசேஜ் வந்துருக்கும் பாருங்க.. ”

பிரசாத்திற்குப் பழைய விஷயங்களே மறந்துபோய் விட்டிருந்தது. தேடிக்கண்டுபிடித்துக் கோடை இடுவதற்குள் அடுத்த ஊழியரே ஏறிவிட்டார். அந்த இளைஞர் உடனே கோடினைத் தட்டச்சிக் கொடுத்துவிட்டார். 

“சரிதான்… நீங்களும் நம்மளமாதிரித் தானா?” ‘கல்’ லென்று சத்தமாகச் சிரித்தார் பாஸ்கரன்.

“நிறைய மாறிப்போச்சு சார்.இப்ப போட்ட கோடுதான் ஆபிசுல இறங்கும்போதும் போடணும். வீட்டுக்குப் போகும்போது ரெண்டு கோடு. ஆபீசுல ஏறும்போது  ஒண்ணு. வீட்டுல இறங்கும்போது வேறகோடு” என்றவர் குரலைத் தாழ்த்தி “எனக்கு மொபைல்ல எழுத்தெல்லாம் படிக்க முடியாது பாத்துக்கிடுங்க. அதான் எம்ப்ளாயீசையே போட்டுறச் சொல்லுறது,  என்ன சொல்லுறீங்க?”

‘போய்யா போ’ என்று எதுவும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பிரசாத். எடுத்த எடுப்பிலேயே ஓட்டுநர் அந்தப் பையன் முன்னால் இப்படிப் பேசியதும் ஒரே சமயத்தில் எரிச்சலும் தன் மேல் கழிவிரக்கமும் ஏற்பட்டது. ஆனாலும் அதென்னவோ உண்மைதான்.

அடுத்து ஒரு பெண் ஊழியர் ஏறுவதற்காக மடிப்பாக்கம் ராம்நகரில் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வீட்டுக்குப் பக்கத்தில் காலியிடத்தில் நிறைய ஆளுயரத்திற்குக் கோரைப்புற்கள். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலிருக்கும் அதே புல்தான். இந்தச் சுற்றுவட்டாரத்தில் எங்கும் பார்க்கலாம். நடுவே தேங்கியுள்ள தண்ணீரில், ஏதோ அபூர்வப்பறவையினங்களைப்போல தலையை நீட்டிக்கொண்டு ஆங்காங்கே பாதி மூழ்கிய ‘பீர்’ பாட்டில்கள். மழைக்காலத்தில் ஒரு முறை இதே இடத்தில் சின்னத் தலையணை அளவில் ஒரு ஆமையைக் கூடப் பார்த்திருக்கிறார் பிரசாத். 

பிரசாத் இந்த நிலையில் இருப்பதற்கே நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறார். காலை நாலு மணிக்குத் தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு முடியும் ஆஸ்திரேலிய வேலை நேரம், முழு இரவும் வேலை செய்யும் அமெரிக்க வேலை நேரம் வரை நேரம் கெட்ட நேரத்தில் வேலை செய்து, சாப்பிட்டு, தூங்கி இருக்க வேண்டிய எடையைவிட பத்து கிலோ கூடுதலானதுதான் மிச்சம். ‘பைக்’கிலிருந்து விழுந்து கையை உடைத்துக் கொண்டது, ‘பைல்ஸ் ஆப்பரேஷன்’ என்று பலதும் பார்த்தாகிவிட்டது. பதவி உயர்வு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நேரங்களில் வாய்ப்பு நழுவிப்போனது, வாய்ப்பு வந்தபோது உயரதிகாரியிடம் சண்டையிட்டது எனப் பல காரணங்கள். தூக்கம் தொலைந்து போனது. எந்த மருத்துவரிடம் போவதென்று தெரியாமல் ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மாத்திரைகளைத் தொடர்ச்சியாகத் தின்று, நடைப்பிணமாக ஆகி… கடைசி மூன்று வருடங்களாக ஒரு ஐரோப்பிய வேலை நேர ‘பிராசஸி’ல் ஒதுங்கிவிட்டிருந்தார்.

வெளியே சில கூழைக்கடாப் பறவைகள் வானில் மிதந்து கொண்டிருந்தன. இரண்டு புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம். தூரத்தில் வலதுபுறம் ‘சென்னை ஒன்’ வளாகத்தின் பிரம்மாண்டமான பழைய கட்டிடம் தெரிந்தது. அந்த வளாகத்திலேயே அதைவிட பிரம்மாண்டமாக இரண்டு பெரிய கட்டடங்கள் புதிதாக முளைத்திருந்தன. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம்பேர் வேலை பார்க்குமிடம். இதைப்போல எத்தனை தொழில்நுட்பப் பூங்காக்கள் பழைய மகாபலிபுரம் சாலையெங்கும். இந்தக் கட்டிடங்களெல்லாம் மனிதர்கள் திரும்ப வருவார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்குமா? இடதுபுறம் சமீபத்திய மழையில் முளைத்த பசும்புல் போர்த்திக்கொண்டு ‘வாகமனா’க நடித்துக்கொண்டிருந்தது பெருங்குடி குப்பைமேடு. ‘சென்னை ஒன்’ னைக் கடந்தபோது, அங்கு தான் ஒரு ‘ஹீரோ’வைப் போல வலம் வந்த நாட்களை ஏக்கத்தோடு நினைத்துக்கொண்டார் பிரசாத். ம்ம்ம்…

இப்போது வேலை பார்க்கும் ‘ப்ராசஸி’ல்கூட வேலை பார்ப்பவர்களெல்லாம் சின்ன வயதுக்காரர்கள். இவர் மேலதிகாரியே இவரைவிட பத்து வயது சிறியவர்தான். வேலை செய்யும் தளத்திலேயே வயதானவர் இவர்தான். அது பல இடங்களில் குறிப்புணர்த்தப்படும். மின்தூக்கியில் செல்லும்போதும் எல்லாருடைய கண்களும் தன்மேல் இருப்பதைப் பிரசாத்தால் பார்க்காமலே உணர முடியும். அவருடைய நண்பர்கள் வட்டத்தில் பட்டயக் கணக்காயர்களாகப் பலர் இருக்கிறார்கள். போய்ச் சேரலாம்தான். சம்பளம் இதில் பாதிதான் கிடைக்கும். சரிதான்… இன்னொரு நான்கு வருடம் எட்டு மாதம் இந்த முள்கிரீடத்தைச் சுமந்துதான் ஆக வேண்டும். 

தான் என்ன செய்திருந்தால் தன்னுடைய வாழ்க்கை இப்போது உள்ளதைவிட மேம்பட்டதாக இருந்திருக்கும்? ஒருவேளை சின்ன வயதில் தன்னுடைய ‘டேபிள் டென்னிஸ்’ திறமை கண்டறியப்பட்டிருந்து அந்த வழியில் சரியான ஊக்குவிப்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை சிறப்பாக ஆகியிருக்குமோ?

பிரசாத் தனக்கு அப்படி ஒரு திறமை இருந்ததைக் கண்டறிந்ததே ஒரு விபத்துதான். அதுகூட முப்பது வயதில்தான் நடந்தது. ஒரு ‘ஆடிட்’ வேலைக்காக விஜயவாடா சென்று, ஆந்திரா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபொழுது பஞ்சாபிலிருந்து ‘இன்ஸ்டலேஷன்’க்காக வந்திருந்த பொறியாளர்கள் விளையாடிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒருவனுக்கு ‘ட்ரங்கால்’ வரவும் உள்ளே சென்றுவிட்டான். இவரை விளையாடச் சொன்னான் இன்னொரு பொறியாளன். பிரசாத் ‘சர்வீஸ்’ போட்டார். அவனால் தொடக்கூட முடியவில்லை, மின்னல் வேகத்தில் பறந்தது பந்து. தொடர்ந்து ஐந்து சர்வீஸ்களும் அப்படியே. “ஆர் யூ எ ப்ரோ?” என்றான். அன்றைக்குத்தான் ‘டேபிள் டென்னிஸ்’ ஆட்டத்தையே முதன்முதலாகப் பார்க்கிறார் பிரசாத். அந்தச் சர்வீசும் கூட இப்போது உள்ளே போனானே ‘ட்ரங்கால்’ பேச, அவன் போட்டதைப் பார்த்து அதேபோலப் போட்டதுதான். ம்ம்ம்.… நடக்கிறகாலத்தில் எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால்… அப்படியும் சொல்வதற்கில்லை. முப்பது வயதில் திருமணம் முடிந்து முதல் குழந்தையும் பிறந்துவிட்டிருந்தது பிரசாத்துக்கு. இன்றைக்கு வயதான ‘கன்னிப்பையன்’களைப் பார்க்கையில் அதுவே நல்லூழாகத் தோன்றியது.

பாஸ்கரன் சொன்னது போல பலப்பல மாற்றங்கள். ‘மவுண்ட்’ ரோடில் போய்க் கொண்டிருந்தது போல நாலுமடங்கு வாகனங்கள் பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ‘ஓ. எம். ஆர்’ரில் சென்று கொண்டிருந்தன.  பயணத்தின்போது ஊழியர்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்பதைச் சற்றுநேரம் கழித்தே கவனித்தார் பிரசாத். எல்லோரும் குனிந்ததலை நிமிராமல் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரசாத்தும் வெளியுலகைக் கண்ணால் விழுங்கிக்கொண்டிருந்தார்.

கடைசியாக வேலை செய்தபோது தன்னுடைய இருக்கை எங்கிருந்தது என்று எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை பிரசாத்துக்கு. யாரிடம் கேட்பது? ரொம்ப நேரம் கழித்து, தன்னுடைய அலுவலகமே எதிர்சாரியிலிருந்த பத்துமாடிக் கட்டிடத்திற்கு மாறிவிட்டிருந்தது என்கிற மின்னஞ்சல் நினைவுக்கு வந்ததும், “அட.. கிழட்டுக்.. ” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டார்.  ‘லெக்கிங்ஸ்’சுகளில் கலர் கலர் தொடைகள் அதிர இருச்சக்கர வாகனங்களில் பெண்கள் கடந்துபோனார்கள்.  

புதுக்கட்டடத்திலும் இனிப்பு கொடுத்து வரவேற்றார்கள். வரவேற்பறையில் சுகந்தம் மணக்க, கண்கள் நிறைத்தொரு பெண்கள் கூட்டம். ஒரு இருபது பேர் இருப்பார்கள். முதல் நாள் வேலையில் சேர வந்து சான்றிதழ்களோடு காத்திருக்கிறார்கள். என்னதான் அரிக்குமிடத்தை சொரிந்து கொள்ள முடியாத முகபாவத்தோடு வீட்டிலிருந்து படியிறங்கினாலும், அலுவலகத்துக்குள் நுழையும்பொழுது பஞ்சுமிட்டாயைப் பார்த்த குழந்தையைப் போல ஒரு சிரிப்பு பிரசாத் முகத்திலும் வந்து உறைகிறதென்றால்… அங்கு இவர்களெல்லாம் இருக்கிறார்கள் என்று பொருள். “ம்ம்ம்… பசங்கள்லாம் துறுதுறுன்னு வேலை செய்வாங்க..” என்று நினைத்துக் கொண்டார் பிரசாத்.  

ஒருவழியாகத் தன்னுடைய ‘ஆர் டி ஓ’ (Return to office) வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு ‘சீட்டு’க்கு வந்துசேர மேலும் ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. கோவிட் காலத்தில் வெறும் குரலாக மட்டுமே அறிமுகமாகியிருந்த பலரையும் நேரில் காண்பது ‘த்ரில்’லாக இருந்தது. அவர்களின் குரலுக்கும் உடலுக்குமான பொருத்தமின்மையை நினைத்துச் சிரித்துக்கொண்டார். அநேகமாகப் பிரசாத் உட்பட பழைய ஆட்கள் அனைவருமே நன்றாகப் பருத்துவிட்டிருந்தார்கள். ‘டீம் ஹடில்’ ல் வீடடங்கு காலத்தில் தாம் பெற்ற மற்றும் இழந்த விஷயங்களைப் பற்றி எல்லோரும் பேசினார்கள். பிரசாத் தனக்கு ஜாதகம் பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்ட விதத்தைப் பற்றிப் பேசினார். முக்கியமான வேலைகளையெல்லாம் வரிசையாக முடித்துவிட்டு நிமிர்ந்து பார்ப்பதற்குள் மதிய உணவு நேரம் வந்துவிட்டது. 

பிரசாத் அவருடைய பழைய மேனேஜர் ஆராவமுதனுடன் சாப்பிடச் சென்றார். அவருக்குப் பிரசாத் வயதுதான் இருக்கும். அவர்  தான் காசிக்குச் சென்று தன்னுடைய இறந்துபோன பெற்றோர்களுக்குத் திவசம் போட்டதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அவங்க மேட்டர் பண்ணும்போது தொந்தரவு பண்ணினத்துக்கெல்லாம் பிராயச்சித்தம் பண்ணினேன்யா. என்னென்னல்லாம் இருக்குங்கறே?”

“அப்ப இந்த ‘கோவிட் ஜெனெரேஷன்’ அதெல்லாம் கட்டாயம் பண்ணனும் சார்.. என்ன சொல்றீங்க?”

“ரொம்ப…….. அனுபவிச்சுருக்கபோல…”

“அய்யய்யோ… ” என்று சிரித்தார் பிரசாத்.

சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த உணவகத்திற்குச் சென்று என்னென்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தார். கடலைமிட்டாய் வாங்கலாம் என்று சில்லரையைத் தேடினார். அதைப்பார்த்த கடைக்காரப்  பெண் “சார்… நோ கேஷ், இந்த ‘ஆப்’ இன்ஸ்டால் பண்ணிருங்க… ” என்று சுவரொட்டியைக் காட்டினாள். பிரசாத்துக்கு வெறுப்பாக இருந்தது. இருப்பது இந்த ஒரே கடைதான். வெளியே டீ குடிக்கச் சென்றாலும் ஒரு கிலோமீட்டராவது நடந்தால்தான் கடை. தலையெழுத்தை நொந்துகொண்டு ‘ஆப்’பை தரவிறக்க ஆரம்பித்தார். எத்தனை ‘ஆப்பு’களோ… அத்தனை ‘பாஸ்வேர்ட்’கள். எட்டிலிருந்து பதினைந்து எழுத்துக்கள் அல்லது எண்கள். ஒரு ‘கேபிடல்’ எழுத்து. இத்தனை சிறப்புக்குறிகள்…  அவைகளை இட்டு முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. பிரசாத்துக்கு அவர் வேலை சார்ந்தே பல செயலிகளுக்கான ‘பாஸ்வேர்ட்’களை நினைவில் வைத்திருக்க வேண்டியிருந்தது. பல செயலிகளுக்கு மாதமொருமுறை ‘பாஸ்வேர்ட்’ மாற்ற வேண்டும். அப்போதெல்லாம் கண்கலங்கி விடுவார் பிரசாத். எங்கோ படித்திருந்தார் ‘உங்களுக்குப் பிடித்த பாடல்வரிகளைப் ‘பாஸ்வேர்ட்’ ஆக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று. அதுதான் கொஞ்சம் கைகொடுத்தது. செயலி சுற்றிக்கொண்டே இருந்தது.. ‘இன்டர்நெட்’ வேகமும் குறைவு. “அட… ஒங்க ஆப்புல என்… ” என்று திட்டிக்கொண்டிருந்த போது “பிரசாத்ஜி… ஒங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. நான் ஆர்டர் பண்றேன்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார்.

“யோவ்.. வெங்கட்டு.. இங்க என்ன பண்ற?” என்று அவனைத் தோளோடு சேர்த்து இறுக்கிக் கொண்டார் பிரசாத்.

“ஆச்சுஜி… நான் ஜாயின் பண்ணி ஒரு வருஷம் இருக்கும்… ‘பைனான்சியல் ரிப்போர்டிங்’ல டைரக்டர் ஆ இருக்கேன்… ”

இவரைவிட பத்து வயது சிறியவன். இவர் எட்ட முடியாத ஒரு உயரத்தில் இருக்கிறான். “என்னது?” சற்று திகைத்துப் பார்த்துவிட்டு “சொல்லு.. சொல்லு… ” என்றார்.

“கை எப்பிடி இருக்கு? ஓகேவா? நல்லவேளை ரைட்ஹாண்ட்… நீங்க லெப்ட்லதான ஆடுவீங்க.. ”

வேலை நேரம் முடிந்து நீண்ட நேரம் ‘டேபிள் டென்னிஸ்’ விளையாட வேண்டுமென்றுதான் அவர் ‘பைக்’ கில் வர ஆரம்பித்ததே. அப்போதுதான் கீழே விழுந்து வலது கை மணிக்கட்டு எலும்பு முறிவு.

“என்ன ஆடுனேன் போ… ‘பேட்’டைத் தொட்டு மூணு வருசமாச்சு இன்னைக்கி யார் வேண்ணாலும் அடிக்கலாம் என்ன.. சரி.. ஒரு கடலைமிட்டாய் போடு”

“ஒண்ணு என்ன ஒண்ணு… நாலு போடறேன் ஜி”

வெங்கடேஷ் பாலசுந்தரம். பிரசாத் ‘சென்னை ஒன்’னில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஐந்து வருடங்களுக்கு முன் பழக்கம். ஆறு தளங்களில் வெவ்வேறு நிறுவனங்கள்.  வெங்கட் இவருடைய நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஆனால் அங்கு இவருடைய டேபிள் டென்னிஸ் பார்ட்னர். அன்றைக்குப் பத்தாயிரம் பேர் வேலை செய்த இடம். அங்கு குறைந்தது ஒரு நூறு பேராவது  டி டி விளையாடுவார்கள். பிரசாத்துக்கு ஈடுகொடுத்து விளையாடக்கூடியவர்கள் என்று ஒரு பத்து பேரைச் சொல்லலாம். அதில் ஒருவன் இந்த வெங்கட். அவர்களில் ஒரே ஒருவர்கூட பிரசாத்தை வென்றதில்லை. அதாவது தீவிரமாக ஆடும்போது. “நான் என்னுடைய விளையாட்டைக் கற்றுக்கொண்டது என்னைவிட சுமாராக ஆடுபவர்களிடம் விளையாடும்போதுதான்” என்பார் பிரசாத். அப்போதுதான் புதுப்புது ‘ஷாட்’டுகளைப் பயிற்சி செய்வார். அப்போது தோற்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை கணக்குக் கிடையாது. 

“ஜோவோட ஆடுனீங்களே ஒரு ஆட்டம்.… மறக்க முடியுமா? ‘சென்னை ஒன்’னையே கதற விட்டீங்களே ஜி, ரெண்டுபேரும் ”

பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் மறந்திருக்க முடியாத அந்த ஆட்டம் நடந்து முடிந்து நான்கு வருடங்களாகிவிட்டிருந்தது.

‘புட் கோர்ட்’டில் மசால் தோசை சாப்பிட்ட பின்பு, தூரத்தில் பிரசாத் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “ஒரு நட்சத்திர ‘பிங் பாங்’ ஆட்டக்காரரைப் பார்க்க விருப்பமா?” எனக் கேட்டு ஜோவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் வெங்கட். பிரசாத்தும் வெள்ளைக்காரன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதால் முழுத் திறமையையும் காட்டி ஆடிக்கொண்டிருந்தார். “கேன் வி பிளே பர் பியூ மினிட்ஸ், இப் யு டோன்ட் மைண்ட்?” என்று பிரசாத்தின் ஆட்டத்தைப் பார்த்தபின் ஜோ கேட்காமலிருந்திருந்தால்தான் ஆச்சரியம். இருவரும் ஒரு பத்து நிமிடம் ஆடியிருப்பார்கள். 

“ஹாய், ஐம் ஜோ அல்டெப்லி. கால் மீ ஜோ. யு வேர் அமேசிங்…. ” என்று இழுக்க வெங்கட் பிரசாத் என்றவுடன் “பிரசாத்… பிரசாத்” என்றான். வெங்கட்டின் ‘கிளையண்ட்’. முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவிலிருந்து வந்திருகிறான். ‘டேபிள் டென்னிஸ்’ தேசிய அளவில் ஆடியிருக்கிறான். ஏற்கனவே பிரசாத்திடம் இவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான் வெங்கட்.

வெங்கட் சும்மா இல்லாமல் ஜோவிடம் “ஹி இஸ் பிரசாத். பெஸ்ட் பிளேயர் எவர் ப்ளேய்ட் இன் திஸ்  டேபிள்” என்றான்.

“தென் ஐ வுட் லைக் டு சேஞ் தட் ஸ்டேட்மென்ட். கேன் யு ப்ளீஸ் அரேஞ் எ மேட்ச் டுமாரோ… வித் பிரசாத்… வெங்கட்… ?”

“ஸ்யூர் ஜோ.. ஈவினிங் சிக்ஸ்… ஓகே பார் யூ.. வி ஹவ் மீட்டிங் டில் பைவ் தேர்ட்டி”

“நான் பத்து நிமிஷத்துல வந்துர்றேன் ஜி. எங்கயும் போயிராதீங்க” என்று பிரசாத்திடம் சொல்லிவிட்டு ஜோவுடன் சென்றுவிட்டான் வெங்கட்.

பத்து நிமிட ஆட்டத்திலேயே அவன் தேசிய அளவில் ஆடியிருப்பதற்கான சான்று இருந்தது. நன்றாகத்தான் ஆடுகிறான். “ ஒருவேளை ஜெயித்து அவன் சொன்னதுபோல ‘ஸ்டேட்மென்ட்’ட  மாத்திருவானோ? இந்த வெங்கட் வேற… என்னைக் கூடக் கேட்காமல் ‘ஆறு மணி’ என்று ‘பிக்ஸ்’ பண்ண இவன் யார்?”

ஆனால், அவர் வேலை செய்யும் ‘ப்ராசஸ்’ அப்போது ‘ரிவெர்ஸ் ட்ரான்சிஷன்’னில் இருந்தது. அதாவது வேலை ‘கிளையண்ட்’திடமே திரும்ப ஒப்படைக்கப்படும். ஆனால் யாரையும் வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள். வேறு ‘ப்ராசஸ்’ சில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த நாட்களில் வேலை குறைவுதான். அநேகமாக ஐந்து மணிக்குப் பிறகு வேலை இருக்காது. இதை வெங்கட்டிடமும் கூறியிருக்கிறார். இருந்தாலும்…

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் வெங்கட் வந்து சேர்ந்தான்.

“யோவ். வெங்கட்டு, தோசையைச் சாப்பிட்டுப் போய்ச்சேர வேண்டியதுதான… இங்க ஏன் கூட்டிட்டு வந்த…. ? இப்ப யாருய்யா இவனை ஜெயிக்கிறது? வசம்… மா கோர்த்துவிட்ட பாரு?”

“யாருஜி.. உங்களை ஜெயிக்கச் சொன்னது?”

“என்ன… து?”

“ஒரே ஒரு சின்ன ஹெல்ப்ஜி. அப்பிடிப் பாக்காதீங்க… கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க.… நாளைக்கி நடக்குற மேட்சுல நீங்க தோக்கணும். பிரதருக்கு பண்ணற ஹெல்பா நெனச்சு செய்யுங்க. அதாவது பிரதர்ஸுக்கு… நாளைக்கழிச்சு ஒரு  ‘காண்ட்ராக்ட் ரினீவல்’ சைன் பண்றான் ஜோ. அத நம்பிதான்  எங்க ‘வெர்டிக்கல்’ல இருக்குற ரெண்டாயிரம் பேரோட பியூச்சரும் இருக்கு.  ரெண்டாயிரம் பேர் ஃலைப் ஒங்க கைல இருக்குன்னு நெனச்சு ஆடுங்க, அதாவது ஆடாம இருங்க. ரெண்டாவது கேம் மட்டும் ஜெயிங்க. அது மட்டும் கட்டாயம் ஜெயிக்கணும். ஆனா அது மட்டும்தான் ஜெயிக்கணும். மொத கேமும் மூணாவது கேமும் அவன்தான் ஜெயிக்கணும். ஒங்கள பெரிய லெவெல்ல கவனிச்சிறலாம் ஜி. எங்க டைரக்டரும் உங்க கிட்ட பேசறேன்னிருக்காரு. கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க ஜி… ”

பிரசாத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவரே முழுகப் போகிற ஓட்டைப் படகில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இவன் கப்பலைக் காப்பாற்று என்கிறான்.

“அவன் ஜெயிக்கணும்… அதே சமயத்துல நீங்க முழுசா தோத்த மாதிரியும் இருக்கக் கூடாது.”

“ஸ்பூன வெச்சது எடுத்தது தெரியப்படாது, நெய் உள்ளே போயிருக்கணும்” என்று ‘நியோக’ முறையைப் பற்றிக் கூறிய ஆராவமுதனின் முகம் நினைவுக்கு வந்து சிரித்துக் கொண்டார் பிரசாத்.

“யோவ்… அவன் ஆடுற ஆட்டத்தைப் பாத்தா, அவனே ஜெயிச்சுருவான்னுதான் தோணுது”

“அந்தச் சந்தேகமே இருக்கக் கூடாது ஜி. அவன் ஜெயிக்கணும்னா ஒங்க ஒத்துழைப்பில்லாம முடியாது. ‘பூமராங் ‘ எதுவும் போட்டுறாம ஆடுங்க. ‘ஸ்பெஷல் ஷாட்’ டெல்லாம் ஆடிராதீங்க.”  

‘பூமராங்’ என்பது பிரசாத்தின் முக்கியமான ஆயுதம். அர்ஜுனனுக்குப் பாசுபதம் போல. இவர் கையிலிருந்து பந்து கிளம்பிச் சென்றால் எதிராளியின் டேபிளை முத்தமிட்டுவிட்டுச் சரியாகத் தொண்ணூறு டிகிரியில் விலகிப் பறக்கும். எதிராளி பார்ப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியாது. இங்கு அதைப் பயன்படுத்தக் கூட அவருக்கு வாய்ப்பளிக்கும் எதிரிகள் இல்லை. இருந்தாலும் அவ்வப்போது பயிற்சி செய்து கொள்வார்.

“மொத்தத்துல தூக்காம ஓக்கச் சொல்ற” என்று நினைத்துச் சிரித்துக்கொண்டார் பிரசாத்.

“ஜி.. சிரிக்காதீங்க ஜி. இவ்வளவு தூரம் சொல்றேன், நம்பமாட்றீங்க பாருங்க?”

“அப்பிடியில்ல… வெங்கட்டு, சரி ஜெயிச்சா மட்டும் ‘சைன்’ பண்ணிருவானா?”

“ஜி.. அவன் ‘சைன்’ பண்றதுக்கு எங்க சைடுலேர்ந்து என்னென்ன செய்யணுமோ, நாங்க எல்லாம் செஞ்சுட்டோம் ஜி. இந்த ஒரு விஷயத்துல ‘நெகடிவ்’ ஆயிடுச்சுன்னா, கண்டிப்பா அவன் மனசுல ஒரு கொற இருக்கும் . எங்களுக்குப் பாதகமா போற வாய்ப்பு அதிகம்… நீங்க மனசு வெச்சா..” ‘

“சரி.. வெங்கட்டு. இவ்வளவு தூரம் சொல்ற.. உனக்காக இல்லேன்னாலும் அந்த ரெண்டாயிரம் பேருக்காவது கட்டாயம் தோக்குறேன். நாளைக்குச் சாயங்காலம் ஆறு மணிக்குப் பாக்கலாம்” என்று விடைபெற்றுக் கொண்டார் பிரசாத்.

“கரெக்ட்டா.. பைவ் தர்ட்டிக்கி என் கால் வரும் ஜி.. பை”

சிறிது நேரத்தில் வெங்கட்டுடைய டைரக்டரும் பேசினார். இது மூன்று வருடங்களுக்கான ‘ரின்யூவல்’ என்றும், எல்லாம் ஒழுங்காக நடந்தால் இன்னும் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும், எனவே அவன் பெறக்கூடிய வெற்றி குறைந்த பட்சம் ‘காண்ட்ராக்ட் சைன்’ பண்ணும் வரையாவது மறக்கக் கூடாத வெற்றியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார்.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என்று பிரசாத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. மனது ஒரே நேரத்தில் குதூகலமாகவும் பதட்டமாகவும் இருந்தது. நம்மளுக்கு இவ்வளவு ‘டிமாண்டா..?’ ஏனோ கர்ணன் நினைவுக்கு வந்தான்.

பிரசாத்துக்குச் சில அறக்குழப்பங்கள் இருந்தன. தன்னைத்தானே சில கேள்விகள் கேட்டுக் கொண்டார். “ நான் வேலை செய்யும் கம்பெனிக்குத் துரோகம் செய்கிறேனா? சுயலாபத்திற்காக ஏதும் செய்கிறேனா? கண்டிப்பாக இல்லை. என்னுடைய தோல்வியின் மூலம் நம் நாட்டைச் சேர்ந்த இரண்டாயிரம் பேருடைய வேலையைக் காப்பாற்றுகிறேன். இன்னொரு ஆயிரம் பேருடைய வேலைக்குக் காரணமாக இருக்கப்போகிறேன். நடத்துடா… ” என்று கூறிக் கொண்டார்.

மறுநாள் மாலை சொன்னது போலவே சரியாக ஐந்தரை மணிக்குக் கைபேசியில் அழைத்தான் வெங்கட். “ஜி.. நாங்க வந்துருவோம் இன்னும் பத்து நிமிஷத்துல. பத்துநிமிஷம் முன்னாலேயே வந்துருங்க.. நம்ம பேசுனதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் ஜி. தயவு செய்து.. ஓக்கேவா.”

பிரசாத் போகும்போது வெங்கட்டும் ஜோவும் ‘சும்மா’ ஆடிக் கொண்டிருந்தார்கள். வெங்கட்
விலகிக்கொள்ள, பிரசாத்தும் ஜோவும் சிறிதுநேரம் ‘ரேலி’ ஆடினார்கள்.

நடுவர் ‘வெங்கட்’ ஆட்டத்தைச் சரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க ‘டாஸ்’ வென்ற பிரசாத் முதலில் ‘செர்வ்’ செய்தார். ஜோவுக்குமே நல்ல ‘போர்டு கண்ட்ரோல்’ இருந்தது பிரசாத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து விளையாடுவானாக இருக்கும். அவ்வளவு பொறுப்பான பதவியில் இருக்கும் அவன் இதற்கு நேரம் அளிப்பது ஆச்சரியமாக இருந்தது பிரசாத்துக்கு. ஒவ்வொரு ‘பாயிண்ட்’டையும் இருவருமே போராடித்தான் பெற முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெங்கட் வேலை செய்யும் நிறுவன ஊழியர்களின் கூட்டம் ஏறிக் கொண்டிருந்தது. பிரசாத் திடீரென்று வேகமெடுத்து ஐந்து ‘பாயிண்ட்’ லீடிங்கில் 18-13 என்றிருந்தார். பிரசாத்தின் வேகத்தைப் பார்த்து ‘ஜோ’வுக்கு எப்படியோ ‘வெங்கட்’டுக்குத்தான் வயிற்றைக் கலக்கியது. நல்ல வேளையாக அடுத்த ஐந்து பாய்ண்டுகளை ‘ஜோ’வே எடுத்தான். ஜோவுடைய ஒவ்வொரு ‘ஷாட்’டுக்கும் ஒரே கத்தலும் கூச்சலுமாக இருந்தது. “டே.. பாவிகளா.. உங்களுக்காகத்தாண்டா நானும் ஆடுறேன்.. ” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார் பிரசாத். 18-18 ‘ட்யூஸ்’.

அடுத்து பிரசாத்துக்கு ‘அட்வான்ட்டேஜ்’ வந்ததும் வெங்கட்டுக்கு உயிரே இல்லை. நல்ல வேளையாக அந்தப் ‘பாய்ண்டை’ ஜோ எடுக்க, வெங்கட் சற்று நிம்மதியானான். அடுத்த ‘பாய்ண்’டை பிரசாத்தே எடுத்து அந்த நிம்மதியைக் குலைத்தார். அடுத்த இரண்டு ‘பாய்ண்டு’களை ஜோ எடுத்தால்தான் அவன் ஜெயிக்க முடியும். அடுத்த சர்வீஸ்சை ‘லூஸ்’ ஆகப் போட்டார். ஒரு நீண்ட ‘ராலி’க்குப் பிறகு, ஜோ ‘ஸ்மாஷ்’ செய்து ஒரு பாயிண்ட் எடுத்தான். அடுத்த ஜோவின் ஷாட்டை நன்றாக உயரத்தில் ‘டாஸ்’ செய்தார். சரியாக ஒரு ‘இன்ச்’ டேபிளுக்கு வெளியே விழுந்தது பந்து. முதல் ‘கேமி’ல் ஜோ வெற்றி. அவன் முகத்தில் ஒரே சிரிப்பு.

வெங்கட்டின் ‘ஸ்கிரிப்ட்’ படி அடுத்த  ‘கேமி’ல் பிரசாத் வெற்றி பெற வேண்டும். பிரசாத்துக்கு நிம்மதியாக இருந்தது. இது பிரச்சினையில்லை. எடுத்த எடுப்பிலேயே  கிடு கிடுவென்று ஐந்து புள்ளிகள் முன்னால் சென்று விட்டார். அவன் பக்கத்தில் வர வர எப்போதும் இரண்டு புள்ளிகள் முன்னால் இருப்பதுபோலப் பார்த்துக் கொண்டார்.  பந்தை எந்தக் கோணத்தில் டேபிளின் எந்த மூலைக்கு, எதிராளி தொடமுடியாத வண்ணம் அனுப்ப வேண்டுமென்று விரல்களுக்கு மூளையிலிருந்து செய்தி பறந்த வண்ணமிருந்தது. இரண்டாவது ‘கேம்’மில் 21-15 என்று எளிதாக வென்றார் பிரசாத். தலைமை ‘செக்யூரிட்டி’ அதிகாரி வந்து என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தார். வெங்கட் அவரிடம் பேசி விளக்கிக் கொண்டிருந்தான்.           

சிறிய இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது ‘கேம்’ ஆரம்பித்தது. தொடமுடியாத வேகத்தில் பந்து பறக்கும் ‘ஸ்மாஷ்’, ‘ரிட்டன் ஸ்மாஷ்’ முதல்  ‘ட்ராப் வாலி’, ‘ஸ்லைஸ்’, ‘ ஸ்பின்’, ‘லாப்’ என்று டேபிள் டென்னிஸில் இதுவரை விளையாடப்பட்ட ‘ஷாட்டு’கள் போக அவரவர் தனித்திறமையைக் காட்டும் ‘ஷாட்டு’களையும் ஆடி ஒருவரை ஒருவர் அசரடித்துக் கொண்டிருந்தனர். பிரசாத் ஜோவை இரண்டு ‘பாயிண்ட்’கள் முன்னாலே போகவிட்டுப் போகவிட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். நடுவிலே ஒரு முறை ‘பூமராங் செர்வ்’ போட்டார் பிரசாத். ஜோ “வாவ்” என்று கைத்தட்ட, வெங்கட் “எதுக்கு ஜி?” என்பது போல  இடது பக்கம் தலையைச் சாய்த்து கண்ணை மூடி தலையைக் கவிழ்த்துக் கொண்டான். பிரசாத்துக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் பிரசாத்தின் ரசிகர் கூட்டமும் சேர்ந்துவிட்டிருந்ததால் ஒவ்வொரு ‘பாய்ண்டு’க்கும் கிளம்பிய ஆர்ப்பரிப்பில் அந்தத் தளமே அதிர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் டேபிளை விட்டு ஆறடி விலகி நின்றிருந்தனர். ‘ஸ்மாஷ்’ பொறி பறந்து கொண்டிருந்தது. தள்ளியிருந்து பார்க்கும்போது எல்லோருடைய கழுத்தும் ‘ஸ்விட்ச்’ போட்டாற்போல, பந்தின் வேகத்திற்கு  இடமும் வலமும் மாறிமாறித்  திரும்பிக் கொண்டிருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது. மட்டையை லேசாகக் கீழ் நோக்கி வளைத்துப் பந்தின் வளைபாதையைக் கிடைமட்டமாக மாற்றிக் கொண்டே  கொஞ்சம் கொஞ்சமாக ‘டேபி’ளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார் பிரசாத். அவரோடு விளையாடியவர்களுக்குத் தெரியும் அவர் என்ன செய்யப்போகிறார் என்று.. “பிரசா.… த்” என்று கத்தினான் அது தெரிந்த ஒருவன். மட்டையை டேபிளுக்குக் கீழே ஒரு உதறு, இடது தோளை வலிப்பு வந்ததுபோல ஒரு சுண்டு, என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் பந்து ‘டேபிளி’ல் பட்டு ஜோவைக் கடந்து சென்றது. இதெல்லாம் அவருடைய சொந்தச் சரக்கு. தொடர்ந்து விளையாடும் ஒவ்வொருவனுக்கும் அவன் மட்டுமே விளையாட முடிவதான பிரத்தியேகமான ஒரு ‘ஷாட்’ டாவது இருக்கும் என்பார் பிரசாத். அந்த ‘ராலி’ மட்டும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீண்டது. முடிந்ததும் மட்டையை ‘டேபிளி’ல் வைத்துவிட்டுக் கைத் தட்டிக் கொண்டிருந்தான் ஜோ.

“யு வேர் ஆஸம்மென்.… தட் டிஃபென்சிவ் லாப்.… யு ஜஸ்ட் கில்ட் மீ… ” என்றான் ஜோ  ‘மேட்ச்’ முடிந்த பிறகு. 21-19, 15-21, 21-19 என்று ஜெயித்திருந்தான் ஜோ.

மறுநாள் ‘ரின்யூவல் காண்ட்ராக்ட்’ சைன் ஆனதும், ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரசாத்துக்கு அமர்க்களமான விருந்தளித்தான் வெங்கட். அவனுடைய டைரக்டரும் வந்திருந்தார்.

வெங்கட் வாங்கிக்கொடுத்த கடலை மிட்டாயைப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டு “உலகத்துலயே தோத்ததுக்கு அப்பிடிப் ‘பார்ட்டி’ குடுத்தவன், நீ ஒரு ஆள்தான்யா!” என்றார் பிரசாத்.        

“ஜி.. மூணாவது கேம் ‘ட்யூஸ்’ ‘அட்வான்ட்டேஜ்’ னு போய்ட்டிருக்கு, எனக்கு அல்லு இல்ல.. நெஜமாவே மரண பயத்தைக்காட்டிட்டீங்க ஜி.. ”

“ஒங்க டைரக்டர் தான்யா கேட்டாரு, அவன் மறக்க முடியாத மாதிரி ஒரு ‘வின்’ குடுன்னு, கஷ்டப்பட்டு ஜெயிச்சாதான் மறக்காது இல்லையா? அதான் அப்பிடி ஒரு ‘டஃப்’ குடுத்தேன்”
     

“நானும் நீங்க பாப்பீங்க ஏதாவது சிக்னல் பண்ணலாம்னு பாத்தா, நீங்க என்னய கண்டுக்கவே இல்லை. ”

“காரணமாத்தான்… அவன் ஆளுங்க  மாட்சை வீடியோ  எடுக்குறாங்க.… ஏதாவது கவனிச்சுட்டான்னு வையி.. எல்லாருக்கும் கஷ்டம்… வீடியோ பேஸ்புக்ல ‘அப்லோட்’ பண்ணிருந்தானே.. நான் உன் மூஞ்சியைத்தான் பாத்துட்டே இருந்தேன். செம காமெடி. சிரிப்பா வந்துச்சு… ”

“ஏன் வராது…? அவனும் சூப்பரா ஆடுனான்ல ஜி… ”

“நல்ல வேளை… அவன் நல்லா ஆடி என் வேலைய ‘ஈஸி’ பண்ணிட்டான்… யப்பா… விளையாடுறத விட நடிக்கிறது கஷ்டம்டாப்பா..… அதுவும் நடிக்கிறேங்கிறது தெரியாம நடிக்கிறது” ‘

“சரிஜி… வாங்க.. ஒரு மேட்ச் போடலாம்… நடிக்காம ஜெயிங்க.. பாக்கலாம்..”

“இங்க டேபிள் போட்டுருக்கானா…எங்க?” என்று சுற்றிப் பார்த்தவர் தூரத்தில் ‘டேபிளை’ப் பார்த்து மலர்ந்துவிட்டார்.

“ஜி… நம்பமாட்டிங்க… உங்க பேரு இங்க டி டி வெளாடுற எல்லாருக்கும் தெரியும்… எல்லார்ட்டயும் சொல்லி வெச்சுருக்கேன்… ”

 
“அண்ணனை அசிங்கப்படுத்திப் பாக்கறதுல அப்பிடி ஒரு ஆனந்த..ம்….. அண்ணனை ஜெயிக்கிறவங்கள்லாம் வரிசையா வாங்க.… ” என்றவாறே டேபிளை நோக்கி அநேகமாக ஓடினார் பிரசாத்.

வெங்கட் இரண்டு மட்டைகளும், பந்துகளும் முதுகுப்பையில் வைத்திருந்தான்.அவரிடம் ஒரு மட்டையைக் கொடுத்தான். மூன்று வருடம் கழித்து மட்டையைப் பிடிக்கிறார் பிரசாத். முதல் சர்வீஸை சரியாகப் போடவேண்டுமே என்ற பயத்தில் பொறுமையாகப் போட்டார். வெங்கட்டின் ‘ரிட்டன்’னையும் சரியாக எடுத்தார். அதுவே சந்தோஷமாக இருந்தது. ஆட ஆடத்தான் தெரிந்தது. மூன்று வருட இடைவெளியில் மூளைக்கும் விரல்களுக்குமான தகவல் பரிமாற்றக் கம்பிகள் அநேகமாக அறுந்துவிட்டிருந்தன. ‘போர்ட் கண்ட்ரோல்’ போய்விட்டிருந்தது. பல ஷாட்டுகளும் ‘அவுட்’ டுக்கே சென்றது. ஆச்சரியமாக ஒரே ஒரு முறை ‘பூமராங்’ சரியாக வந்தது. “ஆரம்பிச்சிட்டீங்களா ஜி” என்றான் வெங்கட். பத்து நிமிடம்தான் ஆடியிருப்பார்கள்.  “நிறைய வேலை இருக்கு வெங்கட்டு.. கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டார் பிரசாத்.

“நான் குடுத்த ராக்கெட் வெச்சுருக்கீங்களா ஜி…” வேலை விஷயமாகச் சீனா சென்றிருந்தபோது ஒரு விலையுயர்ந்த மட்டையை வாங்கி பிரசாத்துக்குப் பரிசளித்திருந்தான் வெங்கட். “கொண்டாங்க ஜி.. தெனம் லஞ்ச் இண்டெர்வல்ல ஆடலாம். ஒங்களெல்லாம் இப்ப ஜெயிச்சாதான் உண்டு. ஒரு வாரம் ஆடிட்டீங்கன்னா ஒங்களெல்லாம் தொட முடியுமா… ”

கிளம்பும் வரை தொடர்ந்து ‘மீட்டிங்குகள்’. நிமிர முடியாத வேலை.   

“பிரசாத், பத்து மணிக்கு ஒரு ‘மீட்டிங்’ இருக்கு ‘டாம்’ மோட. இன்வைட் அனுப்பிச்சிருக்கேன். ஜாயின் பண்ணிரு. குரூப்புக்கு எம் ஓ எம் அனுப்பிச்சுரு.. எனக்கு இன்னொரு கால் கிளாஷ் ஆகுது” என்றார் மேனேஜர் ராம்.

முன்பெல்லாம், எவ்வளவு நேரமானாலும் இருந்து ‘மீட்டிங் அட்டென்ட்’ பண்ணிவிட்டு, ‘கேப் ரீஸ்கெட்யூல்’ பண்ணிவிட்டு மெதுவாகத்தான் வீட்டுக்குப்போக வேண்டும். இப்போது மடிக்கணினி மற்றும் கைபேசியின் தயவால் இருந்த இடத்திலிருந்தபடியே வேலை நடக்கிறது.     

எட்டு மணிக்கு வேலை நேரம் முடிந்தாலும், எல்லோரையும் ஏற்றிக் கொண்டு கிளம்ப எட்டரை ஆகிவிட்டது. வெங்கட்டு கொடுத்த கடலைமிட்டாயை வாயில் அதக்கிக் கொண்டார் பிரசாத். எல்லோரும் கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். பிரசாத்தான் கடைசி இறக்கம். அவருக்கு முன்னால் ஐந்து பேர். இப்போதே பசித்தது. கண்ணை மூடிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் முழிப்புத் தட்டியபோது ‘சென்னை ஒன்’ சிக்னலில் வண்டி நின்றிருந்தது. இரவு நேர வேலைக்குச் செல்பவர்களின் வாகனங்கள் வரிசைகட்டி உள்ளே சென்று கொண்டிருந்தன. எத்தனை பெண்கள்? அங்கு மினுங்கிக் கொண்டிருந்த ஐந்தாவது தளத்தை நிமிர்ந்து பார்த்தார் பிரசாத். அங்குதான் புதிதாக வந்திருந்த ‘பிராசஸில்’ வேலையில் சேர்ந்திருந்த ஆயிரம் பேரும் வேலை செய்வதாகக் கூறியிருந்தான் வெங்கட்டு. பிரசாத்துக்குப் பெருமையாக இருந்தது. “நாம வேலை வாங்கிக்குடுத்த பசங்க?” ஆனால் இந்தப் பெருமையைத் தவிர தான் பெற்றது என்ன? அன்றைக்கே ஒரு ‘டீல்’ பேசி வெங்கட்டின் கம்பெனியில் நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருக்கலாமோ? ‘ஜோ’ மேட்ச் முடிந்தவுடன் வெங்கட்டுக்குப் பொது மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. அவனுடைய ‘டைரக்டர்’ மேலும் ஒருபடி நகர்ந்திருந்தார். இன்றைக்கு வெங்கட்டு பிரசாத்தின் கம்பெனியிலேயே ‘டைரக்டர்’. ஒரு கோடிக்கு மேல் சம்பளம் இருக்கும். நாளைக்கு சி. ஈ. ஓ வாகவும் ஆவானாக இருக்கும். ஜோவையும் என்னையும் மோதவிட்டு நடுவராக இருந்தே ஜெயித்திருக்கிறான் என்றால்… அந்தப் ‘பார்ட்டி’ அவன் ஜெயித்ததற்குத்தான் கொடுத்திருக்கிறான். ம்ம்… அதது கட்டத்துல இருக்கணும்…. ஒரு முறை வெங்கட்டின் ஜாதகத்தை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் பிரசாத்.

இரவுச் சாப்பாடும்கூட கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். வீட்டில்போய் உடனே சாப்பிட்டுவிட்டுப் படுக்க வேண்டாம், முடிந்தால் கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் விளையாடக்கூட செய்யலாம், ஏதாவது ஜிம்மில் சேர்ந்து உடம்பைக் குறைக்க வழி செய்ய வேண்டும், என்று ஏதேதோ நினைத்துக்கொண்டார் பிரசாத். ஊழியர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறை கதவு சாத்தப்படும்போதும் திடுக்கிட்டு எழுந்து கொண்டார். அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொண்டார். ‘டாம்’முடைய காலுக்குள் வீடு போய்விடலாம் என்று தோன்றியது. வீடு வந்து சேர்ந்து பாஸ்கரன் எழுப்பியபோதுதான் நன்றாகத் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது.

“சார் பாவம், நல்லா தூங்கிட்டீங்க?”

இறங்கும்போது குறியீட்டு எண்ணைப் பதிவிட்டுவிட்டு, பாஸ்கரனிடம் “சாப்பிட்டீங்களா?” என்றார்.

“இல்ல சார், இந்தா வீட்டுக்குப்போய்த்தான்… ”

“அப்புறம் என்ன, காலைலதான…? ”

“இல்ல சா…ர், ராமானுஜம் ஐ டி பார்க் ஒரு மணி ‘ட்ராப்’. டி எல் எப் மூணு மணி பிக்கப். அப்புறம் காலைல உங்க ஷிப்ட். நடுவுல காத்திருக்கிற நேரத்துல தூங்கிக்கிற வேண்டியதுதான். நெறைய விட்டாச்சு சார், விட்டதைப் பிடிக்கணும்ல. என்ன சொல்றீங்க…? ”

“கண்டிப்பா… குட் நைட்… இந்தாங்க?’

“எதுக்கு சார்?” என்று சிரித்துக் கொண்டே பிரசாத் கொடுத்த கடலைமிட்டாய்களை வாங்கிக் கொண்டார் பாஸ்கரன்.

‘டாம்’ முடைய மீட்டிங்கிற்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாக வெங்கட் பரிசளித்த ‘சைனா’ மட்டையைத் தேடியெடுத்து ‘பேக்’கில் வைத்துக் கொண்டார் பிரசாத்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...