கோயில் வாசலில் சட்டையை முந்தித் தள்ளியத் தொப்பை வைத்திருக்கும் தன் நண்பன் மகேன் ராவோடு காத்திருந்தான் தமிழ்செல்வம். மௌன சிரிப்புடன், வெட்கப்பட்டு, கீழே குனிந்தப்படி அவனைக் கடந்தாள் தமிழ்செல்வி. அவளுக்கு முன்பே மாப்பிள்ளை யாரென்பது காட்டப்பட்டிருக்க வேண்டும். நேற்று இரவே இந்த தமிழைப் போலவே எல்லாத் தகவலையும் சமூக ஊடகங்களின் வழியாக அந்த தமிழும் ஆராய்ந்திருப்பாள்.
அம்மா வேகமாக அவன் அருகில் வந்து ஏதோ பேசினாள்.
விமானம் தரையிறங்கும் இரைச்சலுடன் ‘ஹலோ… மைக் டெஸ்டிங்… ஹலோ மைக் டெஸ்டிங்… ஒன் டூ த்ரீ… ஓம் சக்தி…’ என்று ஒலிவாங்கியில் கத்திய இளைஞனை மனதில் கறுவிக்கொண்டான் தமிழ்ச்செல்வம். “இவதான்டா பொண்ணு” என அம்மா சொல்லியிருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.
அம்மா திருமணத்திற்கு பெண் பார்த்ததாகச் சொன்னார். ஜாதகம் எல்லாம் சரியாகவுள்ளதாகவும் சொன்னார். முப்பத்து நான்கு வயதாகி விட்டது. இனி யாரை காட்டினாலும் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அம்மா முன் கூட்டியே ஜாதகம் பார்த்து விட்டாள் என்பது அவனுக்கு புரிந்தது. தங்கை வேறு அம்மா பார்த்தப் பெண்ணின் பெயரை குறிப்பிட்டு முக நூலில் பார்க்கச் சொன்னாள். இனி காலம் கடத்த எந்த காரணமும் இல்லை. முக நூலில் தமிழ்செல்வி என்ற அவள் பெயரில் நுழைந்தான். அவளைப் பார்த்தபோது உண்மையில் அவனுக்கு அது மகிழ்ச்சியாகவே இருந்தது. அம்மா தன்னை ஏமாற்றவில்லை என எண்ணிக்கொண்டான். எல்லா படங்களிலும் பக்தி மார்க்கமாகத் தெரிந்தாள் தமிழ்ச்செல்வி. அதுதான் அம்மாவைக் கவர்ந்திருக்கும் என நினைத்துக்கொண்டான்.
தமிழ்ச்செல்விக்குத் தெரியாமல் அவளைப் புகைப்படம் எடுக்கலாமா எனக் குறுகுறுத்தது. தமிழ்ச்செல்வியை அவன் முன்னமே அறிவான்.
***
அவளைச் சந்தித்தது தற்செயலானது. அது சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. அது ஓர் அபூர்வ சந்திப்பு என்றுதான் அவன் மனம் சொல்கிறது.
மகேன் ராவ் அழைத்தபோது அவனும் உற்சாகமாகவே கோயிலுக்குக் கிழம்பினான்.
வியர்வையில் மினுக்கிய பூசாரி, பெண்களையெல்லாம் வந்து கும்மி அடிக்கச் சொன்னார். அப்போதுதான் தமிழ்ச்செல்வி அவன் பார்வையில் பட்டாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடினாள். மற்றவர்களின் கும்மியில் உள்ள செயற்கைத்தனம் இவளின் கும்மியில் இல்லை. இடுப்பு மட்டும் தனியாக சுழன்றாடியது. வலது கீழ் பக்கவாட்டில் ஒரு கை தட்டல். அதே வேகத்தோடு இடது மேல் நோக்கி இன்னொரு முறை கால் மாற்றி துள்ளித் துள்ளி குதித்தாள். முக பாவனைகளும் கும்மியோடு இணைந்ததைப் பார்க்கவும் அசத்தலாக இருந்தது. அந்த அசைவுகள் அவனுக்கு வெகுவாக பரிச்சயமாகி மாதிரி இருந்தன. கொஞ்ச நேரத்தில் மனதில் பளிச்சிட்டது… பிரிட்னி மாதிரியே அசைவுகள். ‘கிம்மி போர்… கிம்மி கிம்மி கிம்மி கிம்மி கிம்மி…’ பாடல் பின்னனியில் ஒலித்தால் பிரிட்னி மாதிரியே தெரிவாள். பிரிட்னி கும்மியடித்து ஆடினால் எப்படியிருப்பாள்… அவனுக்கு சந்தேகமே இல்லை… இதோ இப்படிதான் இருப்பாள். கிம்மி போர்… கிம்மி கிம்மி கிம்மி…பாடல்தான் அப்போது அவன் மனதில் ஒலித்தது. கிம்மியும், கும்மியும் ஒன்றினைந்ததால் ஈருடலான தமிழ்செல்வியும் பிரிட்னி ஸ்பியர்ஸ்ஸும் ஓருயிரானார்கள். அவன் வியந்து போய் அந்த ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்றுதான் கொடி ஏற்றம். தீமிதிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. தினம் வந்து ஆடுவாளா என்று மறு நாளும் கோவிலுக்குக் கிளம்பினான். எல்லாவற்றுக்கும் பிரிட்னிதான் காரணம். பிரிட்னி அவன் வாழ்வில் நுழைந்த கதை சுவாரசியமானது.
என்.டி.வி செவன் என்ற தனியார் அலைவரிசையில் தணிக்கைச் செய்த பிரிட்னியின் ஆடலையும் பாடலையும் பின் புறம் பெருத்திருக்கும் தன் வீட்டுத் தொலைக்காட்சியில்தான் முதலில் பார்த்தான். அவள் குரலின் அதிர்வலைகள் தென்கிழக்காசியாவிலுள்ள, இராஜேந்திர சோழன் கொண்ட கடாரம் மாநிலத்தில், தோட்டத் துண்டாடலை வரலாற்றிலிருந்து மறைக்கக் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமான் வீட்டில் வசிக்கும் தமிழ்செல்வத்தையும் விட்டு வைக்கவில்லை. அவள் இடுப்பை இயல்பாக சுழற்றுவதைப் பார்த்த பிறகு அவளின் ஆட்டத்திற்கும் ரசிகனானான். பாப் இசை வரலாற்றில் தனி நட்சத்திரமாக மின்னும் பிரிட்னியின், குரலொலியால் போதை ஏற்றியவுடன்தான் தமிழ் செல்வத்தின் காலை இனிதாகத் தொடங்கும். இடை நிலைப்பள்ளியில், படிவம் மூன்றில் நுழையும் போதே பிரிட்னியும் அவனின் மன உலகில் நுழைந்தாள். அவனின் சொப்பன ஸ்கலித நாட்களில், பிரிட்னியின் இனிமையான குரல் எப்போதும் அவனுள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. இசையோடு சேர்ந்த அவளின் குரலும் அவனுள் விடாமல் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன.
ஏதோ வினோத இசைக் கருவியிலிருந்து வெளிவரும் நாதம் போன்ற அவளின் குரல் மட்டுமே தமிழ்செல்வத்தின் முதல் ஈர்ப்பு. புல்லாங்குழலிருந்து அற்புதமான இசை வெளிவருவது போலவே பிரிட்னியின் குரலிலிருந்து அற்புதமான பாப் பாடல்கள் வெளிவருவதாக அவன் நம்பினான். பின் நாட்களில் அவளின் குரல் தாலாட்டாமல் அவன் தூங்க மாட்டான் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. ‘ஹிட் மீ பேபி ஓன் மோர் டைம்’ என்று வகுப்பில் தன்னையறியாமல் அழுத்தமாக வெளியே கொட்டிய ஆழ்மன உணர்ச்சிகள் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. பிரிட்னி யாரென்பது தெரியாத வகுப்புத் தோழர்களுக்கு தமிழ்செல்வம் ஒரு ஜோக்கராக தெரிந்தான்.
‘நாம் பிரிட்னி ஸ்பியர்ஸ் வயிற்றில்தான்
பம்பரங்கள் விட வேண்டும்
ஐநா சபை அங்கே
வா அப்பில் செய்யலாம்.’
அந்தக் காலகட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படப் பாடலிலும் பிரிட்னியின் பெயர் இடம் பெற்றதை சகப் பள்ளித் தோழர்கள் யாரும் அவனைப் போல கவனித்திருக்கவில்லை, என்பதைக் கொண்டு அவன் அதை உறுதி செய்துக்கொண்டான். அது அவனுக்கு ஒருவகையில் நிம்மதியாகக் கூட இருந்தது. பிரிட்னி தனக்கு மட்டுமானவள் என ரகசியம் காத்தான்.
தன்னிடம் சொற்பமான சேகரிப்பில் இருந்த பணத்தில், பிரிட்னி பாடல் டிவிடி ஒன்றை வாங்கி பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொண்டிருந்தான். ஸ்பீடி வீடியோ ஸ்டோரில் அந்த டிவிடி வாங்கும் போது பிரிட்னியின் இடுப்பளவு போஸ்டர் ஒன்று இலவசமாக கிடைத்தது. அந்தப் படத்தில் தமிழ்ப் பெண்கள் மாதிரியே பிரிட்னி, இரட்டை பூரான் ஜடைப் பின்னி, அதில் இளஞ்சிவப்பு ரிப்பன் கட்டியிருந்தாள். அந்த போஸ்டரை உற்சாகமாக தன் அறைக் கதவின் உள்பக்கத்தில் ஒட்டிவைத்துக் கொண்டான்.
ஒரு நாள் முடிவெட்டிக் கொள்ள சென்ற கடையில் ‘கெலெக்சி’ என்ற பொழுதுபோக்கு இதழ் கண்ணில் பட்டது. பிரிட்னியின் படங்களும் செய்திகளும் கெலக்ஸியில் அதிகம் வருவதை தெரிந்து கொண்டு மாதம் இருமுறை வெளிவரும் அந்த இதழை கடமையாக வாங்கினான். அதில் வந்த செய்திகளை திக்கித் தினறி படித்து புரிந்து கொண்டான். அவளை அறிய ஆங்கிலத்தை சுயமாகவே கற்றான். ‘பிரிட்னியைப் போல முக அமைப்பை மாற்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரையன் ரே என்ற இளைஞர் இதுவரை 90 காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். மூக்கு, உதடு , தலை மயிர், உடல் எடை என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே போகிறார். பல லட்சக்கணக்கான டாலர்கள் செலவழித்துள்ளார்.’ என்ற செய்தியை அவன் கத்தரித்து தன் அறையில் அழகாகப் பிரேம் போட்டு ஒட்டிவைத்துக்கொண்டான்.
சீன வம்சாவளிய சேர்ந்த அவன் ஆங்கில ஆசிரியையின் மனம் கவர்ந்த மாணவனானாதெல்லாம் பிரிட்னியின் தயவால்தான். பள்ளியில் ஆங்கிலப் பாடத்தை மட்டும் மிக கவனமுடன் கற்றான். பிரிட்னியின் புரியாதப் பாடல் வரிகளுக்கு ஆங்கில-தமிழ் அகராதியைப் புரட்டி குறித்து வைப்பான். கேலக்ஸி தவிர இன்னும் இசை குறித்த பல ஆங்கில சஞ்சிகைகளை விடாமல் வாங்கி பிரிட்னி குறித்த செய்திகளைக் கத்தரித்து வைத்தான். அவன் கத்தரித்து ஒட்டியவை நாளடைவில் பிரிட்னி குறித்த தனி புத்தகமாகவே மாறிவிட்டது. தமிழ் இதழ்களிலும் அவன் பிரிட்னியைப் பற்றி அராய்ந்துள்ளான். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்ச் சினிமா நடிகைகளுக்கு பெரிய இடம் ஒதுக்கிவிட்டு எப்போதாவது பிரிட்னி குறித்த கிசு கிசு செய்திகள் மட்டுமே தாங்கி வரும் தமிழ் பத்திரிக்கைகள் அவனுக்கு எரிச்சல் மூட்டின.
அவன் தேடிய, புரியாத ஆங்கிலத்திலுள்ள பாடல் வரிகளின் நேரடி தமிழ் அர்த்தங்கள் பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளாக இருந்தன. ஆனால் ஆங்கிலத்தில் அந்தப் பாடல் வரிகள் கெட்ட வார்த்தைக்கான அருவருப்பைத் தருவதில்லை. ‘இட்ஸ் பிரிட்னி பிச்’ என்று தொடங்கிய ‘பிளக்கவுட்’ ஆல்பத்தின் பாடலில் ‘பிச்’ என்ற சொல்லுக்கு பொருள் தேடியபோது ‘பெண் நாய், அவலட்சனமானவள், அருவருக்கதக்கவள், ஒழுக்கம் தவறியப் பெண், நடத்தைக் கெட்டவள்’ என்றாக இருந்தன. அவ்வரிகளால் அவனுக்கு எந்த அருவருப்பான உணர்வும் எழுந்ததில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியால் நினைத்த இடத்திலேயே பிரிட்னியின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது. நினைத்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகளையும் இணையத்தில் பார்த்து பரவசப் பட்டான். பிரிட்னியின் ரசிகர்கள் உற்சாகம் கொண்டு தாங்களும் சேர்ந்து பிரிட்னியின் கலை நிகழ்ச்சியில் எல்லாவற்றையும் மறந்து மருளாட்டமாகவே ஆடி, கைத்தட்டி, விழுந்து புரண்டு குதுகலிப்பதை கொஞ்சம் பொறாமையுடந்தான் பார்த்தான். ‘பிரீத் ஓன் மி’ போன்ற ‘ரொமாண்டிக்’ பாடல்களில் கட்டிலறை முத்தங்கள் மேடையில் பரிமாறப்படுவதால், உள் நாட்டில் பிரிட்னியின் கலை நிகழ்ச்சிக்குத் தடை இருந்தது, இசை என்பது மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது என்பதைப் போல தூரத்துக்கும் அப்பாற்பட்டது எனத் தனக்குள் சொல்லிக்கொள்வான். பிரிட்னியை ஓர் அந்தரங்கமானக் கொண்டாட்டமாக உணர்ந்தான். அதில் யாரையும் மூக்கை நுழைக்க தமிழ்செல்வம் அனுமதிப்பதில்லை.
அவ்வப்போது ஏற்பட்ட சொப்பன ஸ்கலிதத்திற்கு அவன் பிரிட்னியைக் குறைச் சொல்லவில்லை. ஆனால் பிரிட்னி குறித்த பல்வேறான கிசுகிசுக்களும் அவனை எட்டவே செய்தன.
பிரிட்னி தன்னைக் கட்டாயப்படுத்தி பல முறை உடலுறவு வைத்து கொண்டதாக பிரிட்னியின் பாதுகாவலரில் ஒருவன் காவல்துறையில் புகார் கொடுத்த செய்தி பரபரப்பாக பரவியது.
அது உலகம் முழுக்க தலைப்பு செய்தியாக வந்தது. ஆனால், அந்தச் செய்தியால் பிரிட்னியின் ரசிகர்கள் யாரும் கோபமே கொள்ளவில்லை தமிழையும் சேர்த்து. பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சதியாகவே தமிழ்செல்வம் உட்பட பலர் இந்த வழக்கைப் பார்த்தனர். பிரிட்னியின் பணத்தைச் சட்டத்தின் முன்னாலேயே பகல் கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காகவே இவ்வாறான புகார் அளிக்கபட்டது என்று அவளின் உள்ளூர் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வக்காலத்து வாங்கினார்கள். உலக ரசிகர்களோ கொதித்தெழுந்து, கொச்சை வார்த்தைகளால் அந்த பாதுகாவலனைத் உயிரோடு பொரித்து எடுத்தார்கள்.
பிரிட்னி தலைமுறையினரில் யாரும் கட்சியே தாவுவதில்லை. அவர்களுக்கு அவள் இசைக்காக பிறந்த இசை தேவதை. அவளை இது போன்ற அர்பமான அவதூறுகள் ஒன்றும் செய்துவிடாது. ஒரு இசைக் கருவியில் இருந்து பிறக்கும் நாதம் போன்ற அவளின் குரல் எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடும்.
அவள் இசையோடு ஒத்திசைந்து விட்டவள் என்பதை தமிழ் செல்வம் முன்பே புரிந்து கொண்டுவிட்டான். பிரிட்னி ஸ்பியர்ஸ் இசைக்காவே மனத்தைத் பலியிட்டவள். நடனத்திற்கு தன் உடலையும், அரோக்கியத்தையும் பலியிட்டவள். இசை தேவதையின் கோடிக்கணக்கான ஆசிர்வாதங்களே பிரிட்னியின் இன்றைய கோடிக்கணக்கான ரசிகர்கள். அவளின் குரலே இசை, நடனமே பிரபஞ்ச இயக்கம். பிரிட்னியோடு ஒரு தனித் தலைமுறையே உருவானது. தமிழ் செல்வம் தன்னை ‘பிரிட்னி ஜெனரேஷன்’ என்று சொல்லிக் கொள்வதில் கர்வம் கொண்டான்.
இன்றும் அவனது அறையில் நான்கு மூலைகளிலும் பிரிட்னியின் படங்கள் பெரிய அளவில் கண்ணாடிக்குள் தொங்குகின்றன. அறைக் கதவிற்குப் பின் புறம் இப்போது புதிய போஸ்டர் ஒட்டி நிற்கிறது. அது சீன தேசத்திலிருந்து வந்தது. ஒவ்வொரு படங்களிலும் அவளின் கலை நிகழ்ச்சியில் ஆடல் பாடல் காட்சிகள். இந்தப் படங்களைப் பார்க்கும் போது அவன் அன்றைய வேலை அழுத்தத்திலிருந்து விடுபட்டான். மனம் மகிழ்ச்சியால் உற்சாகம் அடையும் போது அவனின் உடலும் அதற்கு இசைந்து விடும். உடல் சரியில்லாத காலங்களில் பிரிட்னியின் பாடல்கள் இவனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடும்.
‘லேடி காகா, பியான்சே, ரிஹானா, கேட்டி பெர்ரி, டேலர் ஸ்விஃப்ட், ஜெனிஃபர் லோபஸ்’, என தமிழ்ச் செல்வத்தைப் பார்த்து அவன் நண்பர்கள் சிலரும் ஆங்கிலப் பாடகிகள் பெயர்களை உச்சரிக்கத் தொடங்கிய காலங்கள் உண்டு. அவர்களில் சிலர் முன்பு அவனை ஜோக்கர் என்று நகைத்தவர்கள்தான். அப்போதெல்லாம் தமிழ்ச்செல்வம் தனக்குள் சிரித்துக்கொள்வான். எல்லா வெள்ளைக்காரிகளைப் போல பிரிட்னியின் முகம் இருப்பதில்லை. அவளின் கண்களின் இமையும் புருவமும் மட்டும் மை அடித்த மாதிரி கருப்பு நிறத்தில் மின்னும். ஆனால், பாடல் காட்சிகளில் அவளோடு ஒத்திசைந்து ஆடும் விரித்தக் கூந்தல் மட்டும் எல்லா வெள்ளைக்காரிகள் மாதிரி இயற்கையான பொன் நிறத்தில் மினுக்கும். இதையெல்லாம், தமிழ்செல்வம் அணுவாக ஆராய்ச்சி செய்து காரணங்கள் தெரியாமல் இதயத்தில் குறிப்பு மட்டும் எடுப்பான். ஒரு முறை அவள் மொட்டை அடித்து ஆடி, கலை நிகழ்ச்சியில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவன் இன்னும் மீள வில்லை. மொட்டை தலை பிரிட்னியும் அவனைக் கவரவே செய்தாள்.
தன் அறையுள்ளே நுழைய யாரையும் அவன் அனுமதிப்பதில்லை.
பிரிட்னியின் மேலுல்ல அன்பால் தன் அறையைத் தானே சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருப்பான். அவனின் அறையில் அவனுக்காகவே சோனி 3டி ப்ளூ-ரே ஹோம் தியேட்டரி சிஸ்டத்தை வைத்திருக்கிறான். இந்த ஹோம் தியேட்டிரில் வரும் 4 ஸ்பீக்கர்களைத் தரையில் நிறுத்தி வைத்திருக்கிறான். இந்த ஹோம் தியேட்டரில் இரைச்சல் இருக்காது. அதனால் இது வழங்கும் பிரிட்னியின் பாடல் மிகத் தெளிவாக அதே நேரத்தில் அதிரடியாக ஒலிக்கும். அறையின் நடுவே நவீன சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சில நேரம் சுவற்றில் உள்ள பிரிட்னியின் படங்களைப் பார்த்தபடி கேட்பான். பல நேரம் கண்களை மூடிய படியே பிரிட்னியின் இசை ஆல்பத்தில் ஒத்திசைவான். அந்த ‘ஆடியோ ரூம்’ அவனது ஆன்மாவை நிரப்பியே வந்துள்ளது. எல்லாமே மனதில் ஊறிய நெடுநாள் திட்டங்கள். பிரிட்னிக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலே வைத்திருந்தான். வேலைக்குச் சேர்ந்த பின் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி தனக்கு தானே பெருமை பட்டுக் கொண்டான்.
சோனி ஃபூல் எச்டி டீவியை காலத்திற்கு ஏற்ப தன் அறையின் சுவற்றில் மாற்றினான். பிரிட்னியின் ஆல்பம் உள் நாட்டில் தனிக்கைச் செய்யப்படுவதால் இணையச் சந்தை வழியில் அதிக விலை கொடுத்து வாங்கி வரிசைப் படுத்தினான். வாழ்க்கைக் குறித்து அவனின் ஆழ் மனத்தின் கேள்விகள் இரண்டு! இசைக்கு ஏது மொழி? கலைக்கு ஏன் தணிக்கை ?
பிரிட்னி பெயரைச் சொல்லும்போதெல்லாம் மகனுக்கு ஏதோ கிருத்துவ பேய் பிடித்துவிட்டதென்றும் அவன் மதம் மாறி திருமணம் செய்துக்கொள்வானோ எனும் பயமும் அவன் அம்மாவுக்கு வந்தது. என்பதுகளில் தோட்டத்திலிருந்த போது புதிதாக மதம் மாறிய குடும்பம் அவர்கள் வீட்டின் முன்பு வளர்ந்த வேப்ப மரத்தை தங்களுக்கு ஆகாதென்று வெட்டி எறிந்தார்கள். இதனால் தோட்டத்தில் சர்ச்சை, வாக்கு வாதம், முகச் சுழிப்பு என்ற போர் மூண்டது. அதன் பாதிப்பு தமிழின் அம்மாவிடம் இன்னமும் இருக்கின்றது.
இரவில் நினைவில் ஒளிந்திருந்த அவள் எதையோ பிடித்து வெளியே வருவாள். ‘உன்னைத் திருப்தி படுத்தவே நான் பிறந்தேன்…’ என்ற பாடலைப் பாடுவாள். அவன் அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் எல்லா தமிழ் அம்மாக்களையும் போல விளக்குமாறு பிஞ்சிடும்.
‘பிரிட்னி….’
‘வெளக்குமாறு…’
‘பிரிட்னி…’
‘வெளக்குமாறு…’
பிரிட்னியைப் போலவே ஒருத்தியை மணக்க வேண்டும். அதுவும் இந்து பெண்ணாக இருக்க வேண்டும் என்றுதான் கோவில் திருவிழாவில் கோரிக்கை வைக்க தமிழ் நினைத்திருந்தான். மகேன் ராவ் அழைத்தபோது உடனே சென்றதற்கு அதுவே முதல் காரணம். அங்கு தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் அவளையே அவன் அம்மா பார்த்து வைத்துள்ளதும் ஆச்சரியமான திருப்பங்கள்.
அவன் திருமணம் குறித்து யோசிக்க அம்மாதான் காரணம்.
அவன் நண்பர்கள் எல்லோரும் திருமணம் செய்து விட்டார்கள். ஆனால் இவன் மனதிலும் பகல் கனவிலும் பிரிட்னி தான் ஒரே நம்பிக்கையாக இருந்தாள். கூடிய விரைவில் திருமணம் செய்ய துடிக்கும் வயதும், அதன் உணர்ச்சிகளும் கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க பிரிட்னி மட்டுமே துணையிருந்தாள். அவனின் அம்மா, எப்போதும் தன் மகனின் திருமணத் தடையைக் குறித்து புலம்பாத ஆள் இல்லை. இந்த ஆண்டு அம்மன் கோயில் திருவிழாவில் தீச்சட்டியும், மடிப் பிச்சையும் எடுப்பதாகவும் தமிழுக்காக வேண்டிக் கொண்டிருந்தார். மகேன் தழிழ்செல்வத்தைப் பார்க்க அவன் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் தமிழின் திருமணத் தடையைக் குறித்து சொல்லி அம்மா புலம்புவார். அந்தப் புலம்பலைக் கடந்தே தமிழ்செல்வத்தை மகேன் பார்க்க இயலும்.
“உங்க அம்மா யார்கிட்ட எத பேசினாலும், ஒனக்கு இன்னும் பொண்ணு அமையாத டாப்பிக் கண்டிப்பா வந்திடும். நீ எந்த டாப்பிக் பத்தி பேசனாலும் பிரிட்னி கண்டிப்பா வந்து தல முடிய விரிச்சி போட்டு ஆடுவா…” இவ்வாறு மனக்குரலில் முனுமுனுத்துக் கொண்டே மகேன், தமிழ்செல்வத்தின் வீட்டை விட்டு வெளியேறுவான்.
அம்மாவின் எல்லா வேண்டுதல்களும் தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் கைக்கூடுவதாகத் தோன்றியது. அதனாலேயே மறுநாளும் அவளைப் பார்க்க ஆவலாகக் கோயிலுக்குச் சென்றான்.
இன்று அவள் பாவாடை தாவணியில் அதிக கவர்ச்சியில் வந்திருந்தாள். முகமெல்லாம் மின்னியது. கண்களின் இமைகளும் மின்னியது. இன்று அவள் கும்மி அடிக்காதது அவனுக்கு பெரிய ஏமாற்றம். நெற்றியில் ஐந்து காசு அளவில் அழகாக கருப்பு நிற பொட்டு வைத்திருந்தவள், கழுத்தில் கருப்பு கயிற்றில் மின்னிய பொட்டு ஒன்றையும் கட்டியிருந்தாள். பிரிட்னியின் தீவிர ரசிகன் பிரிட்னியின் சாயலில் பார்த்தவளை மீண்டும் மீண்டும் பார்க்கவே பரி தவித்தான்.
அவள் கழுத்தில் கருப்பு கயிற்றில் கட்டியிருந்த பொட்டு குறித்து தன் நண்பன் மகேனிடம் கேட்டான்.
“எனக்கும் சரியா தெரியல மச்சி. எங்க பாட்டிக்கிட்ட கேட்டா சொல்லுவாங்க…”
அன்றிரவு மகேன் புலனத்தில் குரல் பதிவை அனுப்பினான்.
“அது வந்து மச்சி, மூனு விதமா எங்க பாட்டி சொன்னாங்க. அதில புதுசா கடங்கட்டு பொட்டுன்னு சொன்னாங்கெ. அதான் புதுசா இருந்துச்சு.”
“என்னாட புதுசா இருக்கு…”
‘அதாண்டா… அந்த காலத்தில செட்டியார், முதலையார் கிட்ட ரொம்ப கடன் வாங்கனவங்க, இனிமே கடனே வாங்க கூடாது, கடன்லாம் சீக்கிரமா கட்டிடனும்ன்னு கங்கணங் கட்டி சாமிக்கிட்ட வேண்டி பொட்டு கட்டுவாங்கலாம். ஆனா, இப்ப அதெல்லாம் யாரும் செய்யறதில்லையாம். அது அந்த காலத்திலையாம்”
மறு நாள் கோயில் வாசலில், அவள் ஆட்டத்தை பார்க்க தயாரானான். அவளை காணவில்லை. இளைஞர்கள் தங்களை மறந்து உருமியோடு கலந்திருந்தார்கள். ‘அங்கே இடி முழங்குது’ என்று இடியோடு பாடல் தொடங்கியது. உருமியின் ஒவ்வொரு அடியால் கீழே ஆங்காங்கே ஓட்டையாகவும், கிழிந்தும் கிடந்த சிமெண்ட் தரையும், மேலே தகரக்கூரையும் அதிர்ந்தது.
அவனுக்கு பின்னாலிருந்து குரலில் இடியோசைக் கேட்டது. அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தான்.
அவள்தான். உடன் ஓர் அம்மையாரும் கைகளைத் தட்டிக்கொண்டும் வாயில் இடியோசையை எழுப்பிக் கொண்டும் அந்த இடத்தையே அதிரடித்தார்கள். அந்த அம்மையார் முகமுழுக்க மஞ்சலை அப்பி, சிவப்பு நிறத்தில் நெற்றியில் ஐம்பது காசு அளவில் பொட்டு வைத்திருந்தார். தொண்டைக் குழியில் பத்து காசு அளவில் அதே நிறத்தில் பொட்டு. ஷிரிடி சாய் பாபா மாதிரி தலையில் ஆரஞ்சு வண்ணத்தில் துணி கட்டியிருந்தார்.
உருமியின் வேகம் கூடிய போது அந்த அம்மையார் அசைவின்றி நின்றார். ஒரே கதறலில் உருமியின் ஓசைக்கு ஈடுக்கொடுத்தாள். நீட்டிய நாக்கை உள்ளே இழுக்கவில்லை. இறுக்கிக் கட்டியிருந்த துணி வேகமாக ஆட்டிய தலையிலிருந்து விடுதலைப் பெற்றது. வேகமாக நடந்து போய் வட்டமாக உருமி அடித்தவர்களின் குழுவின் நடுவில் நின்றாள். உருமியின் இசைக்கு ஏற்ற மாதிரி அவரின் ஆட்டம் வளைந்து கொடுத்தது. பிரிட்னியின் சாயல் கொண்டவள், கைகளைத் தட்டியப்படி அம்மையாரின் ஆட்டத்திற்குப் பாராட்டு கொடுத்தாள். அம்மையாரோடு சேர்ந்து நின்ற இடத்திலேயே அசைந்து மகிழ்ந்தாள். அந்த அம்மையார் அவளின் அம்மாவாக இருக்கக் கூடும் என தமிழ்செல்வம் மனத்தில் ஊகித்திருந்தான்.
வயது பேதமின்றி, தங்களை மறந்த பல பெண்கள் புடவை நழுவியதையும், துப்பட்டா பறந்ததையும், டிசர்ட் உடலை இருக்கி இடுப்புக்கு சற்று மேலேறியதையும் பற்றியப் பிரக்ஞை எதுவுமின்றி மருள் வந்து பக்தி பரவசத்தில் ஆடினார்கள். பிஞ்சு குழந்தைகளின் கால்களை மிதித்தது கூட தெரியாமல் ஆடிகொண்டே நாகப் புற்றை நோக்கினார்கள். அவனுக்கு திடீரென பிரிட்னி கலை நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.
அங்கே அதுவரை பாடிக்கொண்டிருந்த பட்டுத் துணித் தலைப்பாகை இளைஞனின் ஒலிவாங்கியைப் பிடிங்கி, ஒரு பெரியவர் “யம்மா… பொம்பலைங்க முன்னால வந்து புடிங்கம்மா… தயவு செஞ்சி பொம்பல புள்ளிங்க முன்னால வந்து புடிங்கம்மா…” என்று கோபமும் தன் வயதுக்கானக் கரகரப்பானக் குரலும் கலந்தப்படி வெளிப்படுத்தினார். ஏதோ தயக்கத்தால் ஆடிய பெண்களைப் பிடிக்கவும் அவர்களின் நழுவிய உடையை சரி செய்யவும் ஆண்கள் பின் வாங்கினார்கள்.
“படிச்சவங்க ஏண்டா சாமி வந்து ஆட மாட்டறாங்க” என்று பின் நகர்ந்தபடி மகேன், தமிழ்செல்வத்துடன் காதோடு காது வைத்துக் கேட்டான்.
“படிச்சவங்க சாமியாராவாங்க… படிக்காதவங்க சாமியாடுவாங்க…” என்று தமிழ்செல்வம் சொன்ன பதிலைக் கேட்டு நின்றான் மகேன் ராவ்.
வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் புகுந்தான். ஒரு முறை வீட்டின் வரவேற்பு அறையில் பிரிட்னி டிவிடி பாடலை பார்த்ததற்கு வீட்டிலுள்ள அனைத்து குடும்ப உறுப்பினரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். ‘இந்த மாதிரி கூத்தை உன் ரூம்புக்குள்ளாரயே போட்டு கேளு…’ என அப்பா அறிவுரை கூறினார். எரிச்சலுடன் தனது கைபேசியை எடுத்தான். ‘இஃப் யூ சீக் அமி’ பாடலின் உடையில் பிரிட்னி சிரித்து கொண்டிருந்த தொடுதிரை மறைந்தது. ‘உமனைசர்’ பாடலை ஆப்பிள் மியூசிக்கில் தட்டினான். பிறகு பிரிட்னியின் வலையொளியில் புகுந்தான்.
நினைவுகள் பலவாராக மோதின.
தினம் தினம் பிரிட்னி தனது அருகிலும், தன் பக்கத்திலும் , சில நேரம் தன் மேலும் படுத்திருப்பதை அவன் ஆபாசமில்லாமல் உணர்வான். அவளின் குரலோசையின் மேல் தொடங்கிய ஈர்ப்பு, பின் அவளின் நடனத்தில் அவனும் சேர்ந்து ஓரளவு ஆடினான். பிரிட்னியின் குரலிசையிலும் நடனத்திலும் இவன் உலகம் மறந்து கிடப்பதை பார்த்தவர்கள், அவளின் நாய் குதறிய அரை குறை ஆடையை ரசிக்க தானே நீ பிரிட்னியைப் பார்க்கிறாய் என்பார்கள். பிரிட்னியின் குரலும், நடனமும் அவளை ரசிக்க பயன் படுத்தும் பொய் காரணங்கள் என்பார்கள்.
அன்று இரவுதான் தங்கை மாலினி வழி அம்மா பெண் பார்த்துள்ள செய்தி வந்தது. முகநூல் முகவரியையும் மாலினி கொடுத்து ‘டீட்டேய்ல் தெரிஞ்சிக்க’ என்றாள். வீட்டில் ஒரு திருமணம் நடக்கப் போகும் குதூகலம் அவள் முகத்தில் பரவியிருந்தது.
அவள் புகைப்படத்தை முகநூலில் பார்த்தபோது பொதுவாக வீட்டில் தன் அப்பா அடிக்கடி பார்த்து ரசிக்கும் எம்.ஜி.ஆர் படங்களில்தான் இப்படியான திருப்பங்கள் நடக்கும் என எண்ணிக்கொண்டான். இது எப்படி சாத்தியமானது என நினைத்து ஒன்றும் புரியாமல் குழம்பினான். இவளை ஏற்பதா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் உரிமை தனக்குள்ளதாக அவன் நம்பவில்லை.
பிரிட்னியின் டுவிட்டரில் நுழைந்தான். பிறகுதான் தூக்கம் வரும். ‘வாழ்வின் வெற்றி என்பது ஒரு குறிக்கோளை அடைவதில் இல்லை. நீ நீயாக இருப்பதால் அடையும் மகிழ்ச்சியில் உள்ளது!’ என்ற அவளின் டிவிட்டர் பதிவைப் படித்தான். காதல் சின்னத்தை தட்டியவுடன் அது வெடித்து சிவப்பு நிறமானது. தினமும் பதிவுகளுக்கு தான் லைக் செய்வது பிரிட்னிக்கு தெரியுமா? ஐந்து கோடிக்கு மேலாக அவளைப் பின் தொடர்கிறார்கள் டிவிட்டரில். அதில் தன்னை எப்படி கண்டுக்கொள்வாள். அந்த கேள்வியுடன் கண்களை மூடினான்.
தூக்கம் வரவில்லை. அதனால் கனவும் வரவில்லை. மனத்தின் பின்னணியில் பிரிட்னியின் குரலிசை மட்டுமே துணை நின்றது.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு, மூடிய கண்களினுள் தன் மனதை பார்க்கும் ஒளியில்லாத அறையில் தமிழ் செல்வி வந்து டிக் டாக்கில் ஆடினாள்.
‘ஐ மிஸ் அமெரிக்கன் டிரீம்
சின்ஸ் ஐ வாஸ் செவன்டின்
டோன்ட் மேட்டர் இஃப் ஐ ஸ்தேப் ஒன் த சீன்….’
என்று தொடங்கும் ‘பீஸ் ஆஃப் மி’ பாடலைப் பாடினாள். குரலோசை மட்டும் பிரிட்னியுடையதுதான்.
ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு எந்த பெண்ணின் ஜாதகமும் பொருந்தவில்லை. பொருந்திய ஒரு சில ஜாதகமும் சனியின் பார்வையைச் சுட்டிக் காட்டி பெண் வீட்டார் புறக்கணித்தார்கள். ஆனால் இவளுடைய ஜாதகம் பொருந்துவதாகத்தான் அம்மா சொன்னார். இந்த வயதில் பிரிட்னி மாதிரியே ஒருத்தி கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கும் போது ‘லக்கி’ பாடல் மனதின் பின்னணியில் ஒலித்தது. இத்தனை நாள் எல்லா ஜாதகமும் தட்டிப் போனது இதற்குதானோ என தோன்றியது.
அதிகாலையிலேயே குழப்பமாக கண் விழித்து, அறையிலுள்ள பிரிட்னியின் போஸ்டர்களைப் பார்த்தான். இந்த போஸ்டர்களை வீட்டின் வரவேற்பு அறையில் மாட்டிய போது வீடு இழவுவீடானது.
‘நடுவூட்ல இப்படி ஒரு போஸ்டரா…, பொம்பல புள்ளிங்க இருக்கிற வூட்டுல…’ என்று அம்மா வார்த்தைகளால் செருப்பால் அடித்தாள். பிரிட்னியை ரசிக்க அவர்களுக்கு பல தடைகள் உள்ளன. ஆனால் அவனுக்கு இதுவரை இல்லை. திருமணமானால் அறையில் கூட பிரிட்னி இருப்பாலா அல்லது எதாவது சாமி படமாகி விடுமா? தன் அறையோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள போகின்றவளுக்கு பிரிட்னி பற்றி எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அவள் முக நூல் முழுக்க எல்லா அவதாரத்திலும் அம்மன் படங்கள். அவனது முக நூல் முழுக்க பிரிட்னியின் நடன அசைவுகளின் அவதாரங்கள்.
தனக்கு பிரிட்னியைப் பிடிக்கிற மாதிரி தமிழ்செல்விக்கு வேறு எதோ பிடித்திருந்தால், தான் ஏன் தடுக்க வேண்டும். அவரவர் வாழ்வில், அவரவர் ரசனை குறித்து கேள்வி கேட்பதை முதலில் ஒழிக்க வேண்டும். அது தனியுரிமை என்றவாறு அவனுக்குள் சமாதானமடைந்தான்.
அவளை மணக்க சம்மதம் சொன்னான். ஆனால் முதலில் தான் அவளிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டான். அவன் அம்மாவிற்கும் அதில் மகிழ்ச்சிதான்.
‘புடிக்காமயிருந்தா சொல்லியிருப்பான்… செல்வியின் மேல ஆச இல்லாமலா இவன் பேசனும்னுன்ணு சொல்றான்’. தங்கையிடம் மெதுவாக சொன்னாள் அம்மா.
‘அதான் மா, சம்மதம் சொல்வாராம். ஆனா பாத்து பேசனும்னு சொல்வாராம். பேசி பாத்து சம்மதம் சொல்றேன்னு சொல்ல வேண்டியதானே..’ தங்கை மாலினி அம்மாவிடம் மெதுவாக சொல்லி சிரித்தாள்.
தன் வாழ்நாளில், தமிழ்செல்வத்துக்கு, பிரிட்னி மாதிரி எந்த பெண்ணும் இதுவரை தெரிந்ததில்லையே. இவள் மட்டும் எங்கிருந்து வந்தாள். சக்தியுள்ள கோவில் என்று அனைவரும் சொன்ன கோவிலில் முதல் முறையாக கோரிக்கை வைத்த பலனாக இருக்குமா என்றெண்ணிக் கொண்டான்.
தனக்கொரு பெண் பிள்ளை பிறந்தாள், பிரிட்னி என்று பெயர் வைப்பதாக கொண்டுள்ள ஆசை நிறைவேறுமா..? தமிழ்செல்வி தன் அம்மாவோடு கூட்டுச் சேர்ந்து எதற்கு கிறித்தவ பெயர் என்று சண்டையிடுவாளா…?!
அம்மாவின் குரல் கேட்டது.
“அது நல்ல புள்ளைங்கெ. நா எல்லாத்தையும் சாரதா கிட்ட பேசிட்டென். அவளே எப்படியாச்சும் மகளெ கரைசேக்க நினைக்கிறா. நம்ம குடும்பத்து மேலே அவ நம்பிக்க வச்சிருக்கா. பொண்ணு நல்ல பொண்ணு. அடக்கமா இருக்கா. நல்லா மரியாதையா பேசுவா. நல்ல பக்தி பொண்ணுக்கு. அவுங்க அப்பன் குடிக்கார நாயிக்கிட்ட இருந்து எப்படியாச்சும் அவளெ காப்பாத்தனுன்னே இருக்கா! போன வாரங்கூட பாருங்க சாரதா புருஷன் அந்த குடிக்கார மயிராண்டி குடிக்க காசில்லாம ஒருத்தன் கிட்ட எனக்கு மக இருக்கா. நீ தண்ணீ வாங்கி குடு. அவள உங் கூட படுக்க வைக்கிறேன்னு ஒரு பிட்டடிக்கிற தெரு நாயெ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டானாம். சாரதா ஜாட்டு கம்ப எடுத்து வெரட்டி அடிச்சிருக்கா. பாவம் செல்வி. வெடியெ வெடியெ அழுதுச்சாம். இனிமேல இப்படி யாராச்சும் வந்தானுங்கலா வெஷம் குடிச்சி செத்துறுவேன்னு சொல்லிட்டாளாம். பாவம் பாருங்க. நம்பளுக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. வயச பத்தியல்லாம் சொல்லிட்டேன். அதெல்லாம் பிரச்சனயில்லனிட்டா. செல்விய நல்லா பாத்துகிட்டா போதும்னீட்டா. எங்கம்மா அந்த கருமாரியம்மா தான் உங்கங்கிட்ட அனுப்பியிருக்கான்னு சொல்லிக்கிட்டே அழுதுட்டா சாரதா.”
“அப்பன் காரனுங்க பாரு பட்டத்தண்ணீ அடிச்சதும் மாமா வேலக் கூட பாக்குரானுங்க. அந்த நாயி பேச்ச கேட்டு இந்த ஜாமா அடிக்கிற நாய்ங்க வரானுங்க பாரு. நல்லா ஒழைக்கிற வயசுல அவனுங்களுக்கு புத்திய பாரு. நாய் பீ தின்ற புத்திக்காரனுங்க. எனக்கென்னம்மோ அந்த புள்ளைய இப்பவே கூட்டிட்டு வந்திடலாம்னு தோனுது. இவனுக்கும் எத்தன பொண்ண பாத்தோம். இந்தப் பொண்ணு நல்லா லட்சணமா இருக்கா. இந்த மாதிரி கஷ்டப்பட்டு வளர பிள்ளைங்க குடும்பத்த நல்லா பாத்துக்குவாங்க…” அப்பாவின் குரலும் எதிரொலித்தது.
‘எஸ்டேட்டை’ விட்டு வெளியேறி பல ஆண்டுகளானாலும் இவர்களின் பேச்சு நடை அந்த ‘எஸ்டேட்டை’ விட்டு இன்னும் வெளியேற வில்லை என்பதை தமிழ்செல்வம் தெரிந்தே வைத்துள்ளான். அதனால்தான் அம்மாவும், அப்பாவும் பேசிக்கொள்ளும் போதும், தங்கையையும், தன்னையும், வேறு யாரையும் திட்டும் போதும் வெளிபடும் சிறு சிறு கெட்ட வார்த்தைகள் இவனுக்கு அருவருப்பாகவே இல்லை.
இரவில் கோயிலில் அவளை அறிமுகம் செய்ய போவதாகவும் பேசியது அவனுக்கு கேட்டது. அவனும் தயாரானான். மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கும் இவன் வயதை ஒத்த மகேன் சொல்ல, முதன் முதலாக ஜீன்ஸை விட்டான். நீல நிறத்தில் ஜிப்பா சட்டை அணிந்தான்.
***
தீமிதி திருவிழா நெருங்கி விட்டதால் குலைத் தள்ளிய வாழைமரம், பச்சைக் கூந்தலென்று கோயில் களைகட்டியிருந்தது. அன்னதானம் முடிந்ததும் இருவரும் பார்த்துக் கொள்வதாகத் திட்டம். பள்ளக்கில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த நான்கு தலைமுறையைப் பார்த்திருக்கும் அம்மன் சிலையைத் தூக்கியவர்கள் கோவிலை மூன்று முறை சுற்றியதும் , ஊஞ்சலில் தாலாட்ட சிலையைக் கிழே இறக்கினார்கள். உஞ்சலுக்குக் அருகில் கொண்டு வரும்போது தொட்டிலை ஆட்டுவது போல வலது , இடதாக அசைந்துக் கொண்டு வருவதை கண்டு அனைவரும் கைகூப்பி அருள் பெற வணங்கினார்கள். தமிழ்செல்வம் மட்டும் தமிழ்செல்வியைப் பார்த்தான். பிரிட்னியின் ஜாடை கொஞ்சம் இவளிடம் இருப்பது போல மீண்டும் உணர்ந்தான். அவனே தன் கற்பனையில் வரைந்தான். தலையில் கொஞ்சம் இறுக்கியப்படியும், கொஞ்சம் விரித்தப்படியும் இருந்த கூந்தலில் அழகாகக் கொஞ்சமாக இரண்டை ஜடைப்போலவே தொங்கியது மல்லிகைப் பூச்சரம். அந்த ஸ்டைல் அவனை கவர்ந்தது. இவளுக்கும் ‘பேபி ஓன் மோர் டைம்’யில் பிரிட்னி போட்டிருந்த இரட்டை ஜடையைத் தன் கையால் போட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்று மனதிற்குள் நினைத்து புன்னகையித்தான்.
தங்க நிறத்தில் சிறிய ஜரிகை பார்டர் கொண்ட கேரளா புடவையைக் கட்டியிருந்தாள். ஊதா நிறத்தில் ஜாக்கெட் கைகளின் நடு முட்டிவரை நீண்டிருந்தது. வசீகரிக்கும் அழகுடன் இருந்த அவள், கைகூப்பி தன் அம்மாவுடன் கும்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளும் தன்னைப் பார்ப்பாளா என்று துடித்தான்.
தமிழ்செல்வி கண்களை மூடிய படி உருமியின் ஓசையின் அதிர்வில் தன்னை மறந்திருந்தாள். உடுக்கையும் பலமாக ஒலியெழுப்பியது. ஏதோ மனக்குறையை அம்மனிடம் சொல்லி மனதிலே அழுகிறாள். அவனின் பார்வையில், அவரைத் தனக்குப் பிடித்தது போல அவருக்கும் தன்னைப் பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறாள். வலது, இடது என்று லேசாக கும்பிட்டப்படி கைகளுடன் அசைந்தாடினாள். பிறகு முன்னும் பின்னும் என்று உடலை அசைக்கத் தொடங்கினாள். கும்பிட்ட கைகளை அப்படியே மேலே தூக்கி நாகமாக படமெடுத்தாள். அவளின் ஆங்காரமான குரலை கேட்டதும் உருமியின் வேகத்தை பட்டுத் தலைப்பாகைக் கட்டியிருந்தவர்கள் கூட்டினார்கள். ஒன்றை நாக்கை இரட்டை நாக்கு பாம்பு போல நீட்டியும் இழுத்தும் கொண்டவள் உக்கிரமாகி கீழே படுத்து தரையில் உருண்டு புறண்டாள். கட்டியிருந்த புடவை அவளை விட்டு நழுவியதை அவளின் அம்மா சரி செய்தாள். எழுந்து மண்டியிட்டவாறு சிமெண்ட் தரையைப் பலமுறைக் கொத்தினாள். தமிழ் செல்வத்தின் அம்மா பிடிக்க முயன்றார். என்னதான் பிடித்தாலும் இவள் மல்லுக்கு நின்றாள். உதவிக்கு இரு பெண்கள் ஓடி வந்து பிடித்தார்கள். அவளைப் பிடிக்கத் தொட்டவர்கள் மின்சாரத்தைத் தொட்ட மாதிரி அவள் போல மனித பாம்பாக நெளிந்தும், வளைந்தும் தரையில் உருண்டும் மஞ்சள் கொட்டப்பட்டிருந்த நாகப் புற்றை நோக்கி ஊர்ந்து சென்றார்கள். வட்டமாக உருமி அடித்தவர்களின், தலைவன் இதுவரைப் பாடியப் பாடலிலிருந்து சம்பந்தம் இல்லாமல் வரிகளை மாற்றினான்.
‘ஆடு பாம்பே… விளையாடு பாம்பே … ஆடு பாம்பே விளையாடு பாம்பே…’
அவன் பாடினான் என்று சொல்லக்கூடாது. அலறினான் என்றே சொல்ல வேண்டும். அதையும் ஒரு கூட்டம் ரசித்து பக்தி பரவசத்தில் மருள் வராமலேயே ஆடியது. கொஞ்ச நேரத்தில் பாட்டை மாற்றினான்.
‘அன்னை தெரிகின்றாள்….. என் அன்னை தெரிகின்றாள்…’
தொண்டை கிழிந்து போகும் அளவிற்கு கத்திக் கதறினான். தமிழ்செல்வியின் நெற்றியில் தன் கட்டை விரலினால் அவளின் அம்மா அழுத்தி மேல் நோக்கி விபூதி வைத்தும் அடங்காமல் மீண்டும் மீண்டும் தரையில் உருண்டாள். அவளின் அலறலோடு சேர்ந்து, கொஞ்சமாக கட்டியிருந்த கூந்தலும் அலறிக் கொண்டே விரிந்தாடி முகத்தை மூடியது. அம்மன் சிலைக்குப் பக்கவாட்டிலிருந்த நாகப் புற்றைக் கைக்கூப்பி வணங்கினார் தமிழ்செல்வியின் அம்மா. பிறகு அங்கு ஓடி செம்பிலிருந்தப் பாலை எடுத்து வந்தார். தமிழ்செல்வி வாய் படாமல் நாக்கால் நக்கியப்படியே உறிஞ்சினாள். சூடத் தட்டில் நெருப்பு அனலாக எரிந்தது. அவளின் அம்மா ஒரு சூடத்தைக் கொழுத்தி வாயை இன்னும் அதிகமாக திறந்து நீட்டிய நாக்கில் சுடராக எரிந்தாடிய சூடத்தை வைத்தார். வாயை மூடி சூடத்தின் நெருப்பாட்டத்தை அடக்கியவள் மயங்கி விழுந்தாள்.
அவளைத் தூக்கிக் கொண்டு கோயில் ஓரமாக சுவற்றில் சாய்ந்தப் படி காலை நீட்டி உட்கார வைத்தார்கள். அவளின் அம்மாவும் அருகில் சென்று அவளின் களைந்திருந்தப் புடவையை சரி செய்தார். களைந்தக் கூந்தலைக் கட்டிவிட்டார். பால் தெறித்துக் கிடந்த முகத்தைத் துடைத்து விட்டார். மகளின் கால்கள் இரண்டையும் நன்றாக நீட்டும் படி செய்து, பிடித்து விட்டார்.
பதற்றத்திலிருந்த தமிழ்ச்செல்வம் அம்மாவைப் பார்த்தான். ‘வாடா’ என்பதுபோல பாவனைச் செய்துவிட்டு மாலினியை அழைத்துக் கொண்டு விடுவிடுவென நடந்தார்.
வீட்டிற்கு நுழையும்போது அம்மாவின் முகம் ஏமாற்றமாக இருந்தது. மாமாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். “பக்தி இருக்கட்டும்… அதுக்குனு இப்படியா? செறி வராதுண்ணே.. வேற எடந்தான் பாக்கனும்” எனச் சொல்லிக்கொண்டே தமிழ்ச்செல்வத்தைப் பார்த்தார்.
“நாதான் அப்பவே சம்மதம் சொல்லிட்டேனே…. எனக்கு தெரியாதா” என்று அம்மா முகத்தைப் நேருக்கு நேர் பார்க்காமல் மாலினியின் முகத்தைப் பார்த்து பாதி விழுங்கிய வார்த்தைகளுடன் தன் அறைக்குள் நுழைந்தான். வேகமாக சாத்திய கதவின் படார் ஓசை அவனது அம்மாவின் கோபத்தை சீண்டி விட்டது. ஏதோ உரத்து பேசுவது கேட்டது.
அம்மாவின் சொற்கள் காதுக்குள் நுழைவதை அவன் விரும்பவில்லை. பிரிட்னியின் பாடல் ஒன்றை ஹெர்போட் போட்டுக் கொண்டு கேட்கத் தொடங்கியிருந்தான். பிரிட்னி, அவன் மனக்கண்களில் பாம்பு போல நெளிந்து ஆடிக் கொண்டிருந்தாள்.
அருமை அருமை அருமை!!!
‘பிரிட்னி’ நிகழ்கால சிறுகதைகளில் அருமையான கதை.இது நம் சமூக சிக்கல்களை பிரதிபலிக்கும் சமூகச் சிறுகதையாகவும், இன்றைய இளைஞர்களின் நடுத்தர அதற்கும் கீழான வாழ்க்கை சூழலை கண்முன் கொண்டுவருவதாக அமைந்துள்ளதும் சிறப்பு.
நேர்த்தியான கதாபாத்திரங்கள், கதைத்தொடக்கம், உச்சம், முடிவு எனும் சிறுகதை அமைப்பும், கதைக்களமும், சிறந்த முறையில் கையாளப்பட்டுள்ளன.
பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கோ, நாக கன்னி தமிழ்ச்செல்வி எங்கோ. இருப்பினும் இருவரையும் இக்கதை வழியாக ஒரே கோட்டுக்குள் கொண்டு வந்த விதம் மிக அழகு. துவக்கம் முதல் விடாது வாசிக்க வைப்பதிலேயே கதைசொல்லி வெற்றி பெற்று விட்டார்.
சீன வம்சாவளியில் வந்த தமிழ்ச்செல்வம் என்று ஓரிடத்தில் சுட்டப்படுவது தேவையற்றது. எழுத்துப் பிழைகள் கவனிக்கப்பட்டிருக்கலாம்.
சுதந்திரன் சார்..//சீன வம்சாவளிய சேர்ந்த அவன் ஆங்கில ஆசிரியையின்…// என்றுதான் இருக்கிறது. தமிழ்ச்செல்வத்தின் ஆங்கில ஆசிரியர் சீனர் என்பது அதன் பொருள். நன்றி
Sirappu
பிரிட்னியை படித்து முடித்து விட்டேன். மிகவும் நீண்ட கதைதான். 22 பக்கங்கள் இருக்கும் போல.
அழகான நுணுக்கமாக ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.
பிரட்னியும் தமிழ்ச்செல்வியும் ஏதோ பல வித்தத்தில் ஒத்துப் போகின்றார்கள் அதனாலேயே தமிழ்ச்செல்வம் அவளை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கின்றானா அல்லது வேறு வழி இல்லாமல் சம்மதிக்கின்றானா, அது வேறு விசயம்.
ஒரு பிரிட்னி பிரியரால்தான் இப்படி ஒரு கதையை படைக்க இயலும்.
எனக்கே பிரட்னிப் பற்றி ஒன்றும் தெரியாது. கேள்விப்பட்டதோடு சரி. ?
சிறுகதையை கையாண்ட விதம் அழகு. Flashbackக்கை தினிக்காமல் தெரியாத வண்ணம் வழங்கியது நன்று.
தமிழை திருமணம் செய்த பின், தமிழ் என்ன பாடுப்படப் போகின்றானோ.
எம். பிரபு, பெந்தோங்.
அவன் விரும்பியது தமிழ்ச்செல்வியை அல்ல. பிரிட்னியை., அந்த அளவுக்கு அவன் பித்தேறியிருக்கிறான். சமூகத்தில் நான் தமிழ்ச்செல்வன் போன்ற பாத்திரங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ்ச்செல்வன். கொஞ்சம் அபூர்வமான கேரேக்டர். சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கிறது..