அன்னம்

கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண  காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை மரங்கள். சுவரின் அதே உயரத்தில் தண்டவாளத்தில் இடமிருந்து வலமாக நகர்ந்து மூடும், இடைவெளிகள் ஏதுமற்ற  அடர்நீல வண்ண இரும்புக் கதவு.  அடுத்து வலது சுவரோரம் ஷெட்டின் கீழ் ஆட்டோ முதல் கார் வேன் என வாகனங்கள் ஒன்றன் அருகே ஒன்றென நின்றிருந்தன. இப்புறம் ஷெட்டின் கீழ் கும்பலாக பெண்கள். இளம்பெண்கள் நின்றபடி மொபைலை விரலால் சுரண்டிக்கொண்டிருக்க. சற்றே முதிய பெண்கள் பாலிமர் சேர்களில் அமர்ந்தபடி மயானத்துக்குள் சென்றுவிட்ட சொந்தத்தின் கதையை பேசி ஓசையின்றி அழுது கண்கள் கலங்கி  மூக்கு சிவந்திருந்தார்கள். நான் நின்றிருந்த பால் பூத்திலிருந்து சொந்தம் ஒன்று யார் யாருக்கு டீ யார் யாருக்கு காப்பி என்று எதிர் புறம் நோக்கி கேட்டது. மெல்லிய போக்குவரத்து இரைச்சலை கடந்து, எதிர்புறம் சென்று நான்கடி இடைவெளி மட்டும் திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்தேன். 

கதவருகே இடதுபுறம் யாருமற்ற காவலாளி அறையின் உள்ளே சிகப்பு ஒளியில் எண்மக்கடிகாரம் மாலை நாலு முப்பதையும் தேதி மாத வருடத்தையும் ஒளிர வைத்துக்கொண்டிருந்த்தது. திரும்பினால் திகைப்பூட்டும் வண்ணம் இரண்டு அல்லது அதற்கு மேலான  ஏக்கர் பசுமைப் புல்வெளி ஒன்று கண் முன் விரிந்தது. உள்ளே காம்பௌண்டு சுவரை ஒட்டி சீரான இடைவெளியில் பொன் கொன்றை மரங்கள். அதன்கீழே ஆங்காங்கே மூவர் அமரும் வகையில், காப்பிக்கொட்டை வண்ணத்தில் பழைய பிரிட்டிஷ் பாணி வளைவுகள் கொண்ட அப்படி வடிவமைக்கப்பட்ட மர இருக்கை. அருகே பழைய பிரிட்டிஷ் பாணி தூண் விளக்கு. சந்தன வண்ண நடைபாதை.

நன்கு பராமரிக்கப்படும் பசும்புல் வெளி. மொத்த வளாகத்தையும் கூட்டல் குறி போல வந்து இணைக்கும் சொர சொரக்கும் சருமம் கொண்ட சந்தன வண்ண டைல்ஸ் பாதை. அதன் இருபுறமும் சீரான இடைவெளியில் குட்டை வாழைப்பூ வண்ண க்ரோடன்கள். வலது புறமும் இடது புறமும் இரண்டிரண்டு விசாலமான அந்திம கிரியை மண்டபங்கள். ஒட்டி குளியலறை கழிவறை. அருகே வரை சொர்க்கரதம் வந்து சேர மைய வாசலில் அன்றி பின்புறமாக வந்து இணையும் வழிகள். கூட்டல் குறி மையத்தில், வட்ட வடிவ கருப்பு மார்பிள் களத்தில், வட்ட வடிவில் கவிழ்த்தி வைத்த கூம்பு கூரையுடன் மின்தகன மண்டபம். கூம்பின் மத்தியில் பூலோகத்தில் துவங்கி, பித்ரு லோகத்தில் சென்று முடியும் புகை போக்கி. மண்டபத்தை ஒட்டி இடதுபுறம் அந்த மண்டபம் போட்ட குட்டி போல அதே வடிவில் ஒரு குட்டி அறை. அலுவலகம். அலுவலகம் அருகே சுத்திகரிக்கப்பட்டு குளிர்விக்கப்பட்ட குடிநீர் நல்கும் இயந்திரம்.. வலதுபுறம் இன்னும்  ரயில்வே ஸ்டேஷனில் காணாமல் போகாத அதன் இரட்டை தம்பி போல ஊழியர்கள் அறை. பின்னால் சிறிய குடோன். எல்லாமே மென் நீல வண்ணத்தில் சிகப்பு கூரையுடன்.  தகன மண்டபத்தின் முன்னே ஒரு தலைகீழ் மண்டபம்  கண்ணாடித் திடல்  தடாகத்தில் பிரதிபலிக்க, அதை இரண்டு மூக்கு சிவந்த வெள்ளை  நீள் கழுத்து பங்களா வாத்துக்கள் நீந்தி நீந்தி அலைக்கழித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றின் மீதும் டிசம்பர் மாலையின் மெல்லிய குளிர் போர்த்தி இருந்தது.

தகன மையத்தின் ஷட்டர் மூடி இருக்க, மேலே முகப்பில் மயானப் பெயர்  பித்தளை பிரும்மாண்ட எழுத்துக்களில் பொன் முலாம் கொண்டு ஒளிர்ந்தது. மோட்சம். அதன் கீழே சிறிய எவர் சில்வர் எழுத்துக்களில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்டிருந்தது. தகன மையத்தின் முன்னால் சிறிய மண்டபத்தில் அடுத்து தகனம் காணப்போகும் ஆச்சி பச்சைப் புடவை கட்டி மங்கலக்கோலத்தில் சடங்குகள் எல்லாம் முடிந்து எவர்சில்வர் ஸ்ட்ரக்சர் டேபிளில் காத்திருந்தார். மஞ்சள் முகத்தில் நிறைந்த குங்கும பொட்டு. சுமங்கலி சாவு. டேபிள் கீழே எஞ்சிய இறுதிச் சடங்குப் பொருட்கள் .புகையும் கொத்து வத்திகள் தாங்கிய வாழைப்பழ சீப்பு. அருகே வீசேரில் மொட்டைத் தலைப் பெரியவர் .கணவராக  இருக்கலாம் உதடு அசைவில் ‘’என்னை தனியா விட்டுட்டு போய்ட்டியே’’ என்பதை உணர முடிந்தது. ஆனால் ஏதோ குறைந்தது. சுற்றிலும் ஏழெட்டு பேர். சொந்தங்கள். சில அழுகைகள். குடிபோதையில் உக்கிரமான கோபத்தில் ஏதோ சில பேச்சுக்கள் கெட்டவார்த்தை வசவுகள் . அவர்களின் தலைமை போதையாய் தார் மாலை போல துண்டு போட்டு வேட்டியை டப்பா கட்டு கட்டி நின்றிருந்தது, (அல்லது நிற்கும் முயற்சியில்) ஒரு கல்லாபொட்டி சிங்காரம். பக்கத்து அந்திமக்கிரியை மண்டபத்தில் தலைமகன் மொட்டை அடிக்கப்பட்டு    அதே கோலத்தில் சொந்தங்கள் ஆறுதல் சொல்ல அழுது குலுங்கிக்கொண்டிருந்தார். சட்டை இல்லாத, புது வெள்ளை வேட்டி, புதுக் குளியல், நெற்றியில் ஈர விபூதி பட்டை உலர்ந்து வெண்மை கொள்ளத் துவங்க நிற்கும் சிலர். அதே கோலத்தில் பேரன்கள். எல்லோரும் ஏதோ குறைய அல்லது மீண்டும் மீண்டும் சுழலும் ஏதோ ஒன்றில் சிக்கி  நின்றிருந்தனர். அப்போதுதான் போதத்தில் விழுந்தது எங்கிருந்தோ வந்து சுழன்று பரவி வியாபித்திருந்த அந்தப் பெண் குரல்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க…

எங்கோ மறைந்திருக்கும் தரமான ஒலிபெருக்கிகள் வழியே எங்கிருந்து என்று அறியா வண்ணம் வானிலிருந்து இறங்கி சூழ்ந்து இறுக்கும் குரல்.

அலுவலகம் சென்றேன். ஒரு பையன் அனேகமாக ப்ளஸ்டூ படிக்கலாம் பம்மி அமர்ந்திருந்தான். விசாரித்தேன் . அப்பா இப்போ வந்திருவாரு என்றான்.

‘’இதேதான் சொல்லிட்டு இருக்கான் ஒரு மணி நேரமா… டேய் வரட்டும் உங்கப்பன் கிழிச்சு தொங்க போட்டுடறேன். காசு மொத்ததும் அட்வான்சா வாங்கிக்க தெறிது… வேலைய மட்டும் ஒழுங்கா செய்ய தெரியாதா…வரட்டும்…’’

புளித்த வாடை வீசும் வாயுடன் உறுமியபடி  என் தோளருகே நின்று தள்ளாடினார்  ‘’சாவுல காசுக்கு அலையுற பயலுக…’’ கல்லாபொட்டி.

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை…

வரிசையாக அமர்ந்திருந்த மூன்று மொட்டையர்களும், ஆச்சியை சுற்றி நின்றவர்களும் புதிய கண்ணீர் கதறலுக்கு நகர்ந்தார்கள். நான் மெல்ல கடிகார சுற்றில் மண்டபத்தை சுற்றி வந்தேன். ஊழியர் அறை திறந்திருக்க வாசலில் சாம்பலும் காப்பிக்கொட்டை வண்ணமும் கலந்த,நன்கு வளர்ந்த பங்களா வாத்து ஒன்று நின்றிருந்தது. தடாகத்தில் நீந்துவன எம்ப்டன் வகை வாத்துக்கள். இது ஆப்ரிக்க வாத்து  அல்லது கலப்பு வகை வாத்து. உராக் உராக் என்றபடி என்னை உறுத்த  அதை தொட்டுப் பார்க்க நெருங்கினேன்.

உராக் உராக் என்றபடி சுழன்று யாருக்கோ தகவல் சொல்லும் பாவனையில் நீள் கழுத்தை திருப்பி உள்ளே ஓடியது. உள்ளிருந்து முன்நரை ஓடிய, பெரிய மூக்குத்தி அணிந்த மெலிந்த அம்மாள் ஒருவர் எட்டிப் பார்த்தார். புடவை மேல் மென் நீல ஆம்பளசட்டை அணிந்திருந்தார். பாக்கெட்டில் மோட்சம்.

‘’அதான் …அஞ்சு மணிக்குதான் ஆபரேட்டர் வருவார்ன்னு ஆகிப்போச்சுல்ல  அப்பறம் என்ன திரும்ப திரும்ப …’’ என்றார் முகத்தில் வருவித்துக்கொண்ட எரிச்சலுடன்.

‘’அதில்லம்மா… இந்த வாத்து… அழகா இருக்கு அத பாக்க வந்தேன்’’ என்றேன். உள்ளே ஒரு இல்லம் ஒன்று இயங்கிக் கொண்டிருப்பதனான அடையாளங்கள். 

அம்மாள் சட்டென சகஜமானார் ‘’அதும் பேரு அன்னத்தாயி…எங்க அம்மா பேருதான் வெச்சேன்’’  அவர் சிரிப்பு அவரை அக்கணமே அணுக்கம் கொள்ளச் செய்தது.

நான் உள்ளே எட்டு வைத்தேன், வாத்து  கிரா கிரா என்றபடி எனக்கும் அம்மாளுக்கும் இடையே வந்து நின்று கொண்டது.

‘’காவல் காக்கும்…நல்லா ‘’ என்றபடி அலமாரியில் இருந்து ஒரு குத்து ஈர அரிசியை எடுத்து அதன் முன் வைத்தார். நீண்ட கழுத்து விநோதமாக வளைய அரிசி பொருக்கி அண்ணாந்து கெக் கெக் என்றபடி விழுங்கியது.

‘’வாய்க்கரிசியா’’

‘’அப்பரோங் …பெரிய சாவெல்லாம் வந்தா வாய்கரிசி போட்டு முடிக்கவே முக்கா மன்நேரம்  ஆய்டும் …பெருக்குனா அஞ்சாறு கிலோ தேறும்’’

‘’என்னலாம் சாப்டும்’’

‘’நான் திங்கிற எல்லாத்தையும் போடுவேன்…. அதுவும் திங்கும்’’

‘’சொன்ன பேச்சி கேக்குமா’’

‘’ஆங்… கொயந்த மாதிரி… காவல் காக்கும், பசிச்சா கூப்பிடும். நா உம்முன்னு இருந்தா அதுக்கு புடிக்காது என் அம்மா மாதிரியேதான் அதும்’’

‘’அது ஏன் உங்களையே சுத்தி வருது, அதுக்கு ஜோடி இல்லையா’’

‘’அது முட்ட பொறிச்சப்போ என்னதான் மொதல்ல பாத்திச்சி அது தொட்டு எம் பின்னாலதான் சுத்தி சுத்தி வரும்… ஜோடி இருந்துச்சி மூணு மாசம் முந்தி கழிச்சல்ல போய்டிச்சி’’

முன்பு ஒரு சமயம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பொருட்டு இத்தகு இடங்களுக்கு சென்று,அதன் பணியாளர்களை பேட்டி கண்டிருக்கிறேன். அவர்களை எவ்வாறு இயல்பாக பேச வைப்பது, பேச்சில் இயல்பாக அவர்களின் வாழ்க்கை சூழல் எழுந்து வரும் வகையில் எவ்வாறு உரையாடலை நகர்த்துவது என்பதிலெல்லாம் கொஞ்சம் பயிற்சி கொண்டிருந்தேன்.

இங்கே இதன் ஊழியர்கள் நால்வர் மட்டுமே. மேனஜர், ஆபரேட்டர், ஸ்வீப்பர், வாட்ச் மேன். மேலதிக வேலைக்கு ஆட்கள் வந்து செல்வார்கள். பதவிகள் தான் வேறு ஆனால் ஆபரேடர் பணி தவிர எல்லா வேலையும் எல்லோரும் செய்வார்கள் .இந்த சந்தோசம் இங்கே மூன்று ஆண்டுகளாக பணி புரிகிறார். செங்கல் சூளை கொத்தடிமை வாழ்விலிருந்து அவரை மீட்டு இந்த க்ளப் அவருக்கு இந்த வேலையை தந்திருக்கிறது. கணவர் மீண்டும் சூளை வேலைக்கே செல்கிறார். எட்டாவதும் பத்தாவதும் படிக்கும் இரு மகள்கள். க்ளப் படிக்க வைக்கிறது. மையத்தின் ஊழியர் நால்வர்க்கும் இருக்க இலவச குவார்ட்டர்ஸ் பிள்ளைகளுக்கு இலவச கல்வி இரண்டும் வழங்கி இருக்கிறது.

‘’பொதுவா சுடுகாட்டுக்கு பொம்பளைங்க வரக்கூடாதுன்னு சொல்லுவாங்களே’’

‘’ஆமா…அது சுடுகாடுக்குதானே…’’

நல்ல பதில். அவர் பின்னால்  மின் தகன அடுப்பு எவ்விதம் இயங்கும் என்பது குறித்த சித்திரங்கள். இடது புற  அலமாரியில் வரிசையாக பக்கிட்டுகள்.

‘’என்ன அதெல்லாம்’’

‘’வந்து எரிப்பாங்க…அதுல அஸ்திய வாங்காமலே போய்ற குடும்பமெல்லாம் உண்டு. எல்லாமே பத்திரமா இங்க பேர் அட்ரஸ் போட்டு எடுத்து வெப்போம்’’

கல்லா பொட்டி வந்து எட்டிப் பார்த்துவிட்டு போனார்.

‘’என்னாவாம் இவனுக பிரச்சன’’

‘’அப்போ நீ … அவுங்க ஆளு இல்லியா… சர்தான்… அவங்களுக்கு மூணு நாலு கு நேரம் கொடுத்தது. ஆனா அவனுக வந்ததே நாலு மணிக்குதான். கேட்டா உங்க வண்டிலதான் வந்தோம்.உங்க வண்டி பஞ்சர். மாத்து டயர் இல்லாம இப்பிடி  ஒரு வண்டி. சரி பண்ணி இங்க வர நேரமாகி போச்சி அது எங்க தப்பு இல்ல உங்க தப்புதான் அப்டின்குறான். ஆபரேட்டர் உள்ள இருக்க அடுப்புல சின்ன வேலை பாக்க ஒரு பொருள எடுத்துட்டு போயிருக்கு. அஞ்சு ஆருக்கு அடுத்த பொணம்வரும் அது கூட இத சேத்து எரிக்கலாம்.அதுக்குள்ளே இந்த பொருள சரி பண்ணி எடுத்தாறேன் அப்டின்னு போயிருக்கு. இவனுக…. செத்தவுங்க சாமி…. அத எப்புடி காக்க வெக்கிறீங்கன்னு  கூப்பாடு போடுறானுங்க. வாட்ச்மான் வண்டி எடுத்துனு இட்டார போயிருக்கு.’’

‘’நான் பேசவா… அவங்க கிட்ட’’

‘’என்னான்னு… சொல்லி பாத்தாச்சி… நீ வேற … திமிரு புடிச்சதுவோ. வர்ரறது இன்னா சாதியோ கருமமோ இன்னொரு பொணத்தோட சாமிய  எரிக்க கூடாது அப்டின்னு அலப்பர குடுக்குதுவோ’’

நான் அந்த முகங்களைப் பார்க்க நடந்தேன்.

மரணத்தினால் சில கோபங்கள் போகும்

மரணத்தினால் சில சாபங்கள் மாறும்…

அலுவலகத்தில் யாரோ வந்திருக்க, கூச்சல் களேபரம் உச்ச கதியில் நிகழ துவங்கியது.

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்…

களேபரங்கள் கூச்சல்கள் அழுகை குரல்கள் அனைத்தையும் மிஞ்சி எழுந்தது கல்லாபொட்டி குரல் 

‘’…த்தா பாட்ட நிறுத்துடா…. இங்க இன்னா படமா காட்றாங்க’’

சட்டென பாட்டு நிற்க, ஒரே கணத்தில் அத்தனை அலங்கோல ஒலிகளும் காதில் விழுந்தன. ஆ.மாதவனின் நாயனம் கதைக்குள் நிற்கிறேனானா என்ன… ஆபரேடர் ஏதோ சமாதானம் பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் அவனைக் கண்டேன். அதுவரை அங்கில்லாதவன். அப்போதுதான் வருபவன்.

நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத் தக்கவன். பூக்கள் செறிந்த சாயம் போன பச்சை வண்ண பிரிண்டட் கைலி. கை வைத்த சிமின்ட் விளம்பரம் போட்ட மஞ்சள் பனியன். இடது தோளில் ரோஸ் வண்ண அழுக்கு துண்டு எண்ணை கானா கலைந்த தலை முள் முள்ளாக மீசை .முள் நரைத்த தாடி. இரு கைகளையும் விரித்தபடி செருப்பணியாத கால்கள் தப் தப் என அறைய  “அம்மோ… ” என்று அலறியபடி ஓடிவந்தான். மடேர் என முகம் அறைபட அவன் ஆச்சி முன் விழுந்த ஒலியை,முதுகுத் தண்டில் ஒரு சொடுக்குடன் உணர்ந்தேன்.

மாறி மாறி தரையிலும் தலையிலும் அறைந்து கொண்டான்.

‘’பெத்த அம்ம வாரியலக்கொண்டு அடிச்சு பத்தினாளே…. எஞ் சாமி ..என் தெய்வமே… என்ன புள்ளயா பாத்துக்கிட்டியே…. இப்டி என்ன அனாதயாக்கிட்டு போய்டியே எஞ் ச்சாமி….’’

அவனது திடீர் வரவில், ஓலத்தில்  மொத்த கூட்டமும் அனைத்தையும் மறந்து ஸ்தம்பித்து அவனையே பார்த்தது.

‘’எனக்கு சோறு போட்டியே தாயே ….எனக்கும் சோறு போட்டியே… எம் பசிக்கும் மேல …அள்ளி அள்ளி வெச்சியே….எஞ் ச்சாமி… இனிமே எங்க போவேன்..’’

தரையில் ஒருக்களித்து விழுந்து வலது கையால் தரையை மாறி மாறி அறைந்தான். எல்லோரும் அதே போல ஸ்தம்பித்தே நின்றிருக்க…இடைவெளி வழியே ஓடிவந்தது சந்தோசம் வளர்க்கும் வாத்து. கிராக் கிராக் என உச்ச தொண்டையில் கத்தியபடி, தலைகீழ் பெண்டுலம் போல அசைந்தபடி விழுந்து கிடந்தவனை சுற்றி சுற்றி வந்து கால்களை தப் தப் என அடித்துக் கொண்டது.

கிராக்… கிராக்… கிராக்… கிராக்….

ஸ்தம்பித்திருந்த கூட்டத்தில் சலனம் உண்டாக்கிப் பிளந்து  ஓடி வந்த கல்லாபொட்டி வாத்தை எட்டி உதைத்தான்.. 

‘’தா நக்கல் பண்றீங்களாடா…’’

வாத்து ஹிக் என்ற ஒலியுடன் தரையில் தூர  போய் விழுந்து காலுதைத்து  சுழன்று எழுந்து, ஐயையோ என்றபடி ஓடிவந்து கொண்டிருந்த சந்தோசத்தை நோக்கி ஓடியது. பாதியில் பதறி திரும்ப ஓடி வந்தது.

‘’நாயே… நாயே… குடிகாரத் தூம… அது இன்னா பண்ணிச்சாம் உன்னிய…பாருடா தூம… அளவேண்டாமுனு சொல்லுதுடா அது’’ என்றாள் அழுகையில் குரல் நடுங்க.

எல்லோரும் பார்த்தோம்.

கிராக் கிராக் கிராக் என்றபடி கீழே கிடந்தவனையே சுற்றி சுற்றி வந்து தக் தக் என்று கால்களை உதைத்து விநோதமாக கழுத்தை வளைத்து அவன் முகமருகே முகத்தை மீண்டும் மீண்டும் கொண்டு சென்றது.

தலையை அண்ணாந்து அடிவயிற்றிலிருந்த்து விராக் வராக் என்றபடியே நின்றிருந்த அன்னத்தைப் பார்த்தேன். அன்னம்.அன்னம்

மெல்ல மனத்துக்குள் சொல்லிப் பார்த்தேன்

‘’அன்னத்தாயி’’

‘’எனக்கும் சோறு போட்டியே…  இனிமே யாரு இருக்கா …’’ அவன் இன்னமும் உச்சம் குறையாமல் தரையை அறைந்து அழுதுகொண்டு இருந்தான்,  பொன் மாலை வெய்யில் பூசிய மின் தகன மையத்தின்  ஷட்டர் மெல்ல உயரத் துவங்கியது.

1 comment for “அன்னம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...