‘மெய் இன்று கண்டேனடா,
முகமன்று போலின்றி
நிறமாறிப் போனதை
கண்டேனடா.
சொல்லெல்லாம் எரிக்க எரிக்க
உளமெல்லாம் கசக்க கசக்க
நுதல் சுருங்கும் தருணமெல்லாம் கண்டேனடா!
மா தவம் நீங்கிட வந்தேனடா! அயோத்தி வந்தேனடா!ஐயம் என்மேனி கண்டாயோடா!
கொடுந்தீ சொல்லும் கேளடா’உச்சஸ்தாயில் சீதையின் குரல். சிவந்த கனலின் நிழல் போலசெந்துணிச்சுருளைகள் முன்னே படர, காந்தள் மலரின் இதழ் போல சுருள்கள் பறக்க, இடையே போய் சீதை நின்றாள்
‘மானுடன், நான் என் செய்வேன்
தேவன் எனும் நாடகம் பூண்டி
பொய்வேடம் பூடும் அற்ப மானுடன்
நான் என் செய்வேன்,
நீயே சொல்லடி பேதைபெண்ணே.
நாட்டுக்குள்ளே போய் வந்தவன்
எத்தனை சொல்லு கேட்டேன், எத்தனை சொல்லு கேட்டேன்
நான்என் செய்வேன்.
பொன்னின் சோதியும், போதியின் நாற்றமும்
எரியும் தழல்தான் அறியுமோ!
தீநாவின் சீரல் குன்றி
நீயும் வந்தால், அந்நாவும் அடங்கும்
எந்நாவும் தணியும்.
தகிடத் தகிடத் தகிடந்தோம் தகிடத் தகிடத் தகிடந்தோம்’ நடுக்கத்தோடு ராமனின் குரல்.
வெயில் முகத்தில் அறையவும் அரண்டு எந்திருத்தார். கோழை கண் இமைகளின் முனைகளை இறுக்கிப் பிடிக்க, அவை திறக்க மறுக்கவும் ஆட்காட்டிவிரல்களை நீட்டி எடுத்தவர்.சழுவை வடிந்த வாயை மணிக்கட்டை தாண்டி நீண்டிருந்த சட்டையால் துடைத்தார். மங்கலாய்ச்சாலையில் பள்ளிச் சீருடையில் குழந்தைகள் அம்மாவின் கைப்பிடித்து வேகமாய் செல்வது தெரிந்தது.அதில், அதேவழக்கமான சுருட்டைமுடி தெற்றுப்பல் சிறுமி அவரைப் பார்த்து சிரித்தாள். அவருக்கு கொஞ்சம் ஆசுவாசம் தான் வழக்கமான நடைமேடையில் கிடக்கிறார் அல்லவா! இருபது வருடங்களாக ஒரேயிடம், எல்லா நாளுமே முற்றுப் பெறா ஒன்றாகிவிட்டது. இதற்கு முன்னர் வேறொரு கடை. மெல்ல எழுந்து தள்ளாடி தள்ளாடி டக்கர் மதுக்கடைக்குச் சென்றார்.
“பாட்டா வெள்ளன எந்திச்சு வந்துட்டிரே, கடைக்குள்ள படுக்க என்ன நோக்காடாம்.”உள்ளே, படுத்திருந்த சினிமா போஸ்டரை மடித்தபடியே சப்ளையர் ஆறுமுகம் கேட்டான்.
அவருக்கு பசி வயிற்றிலே தாளம் போட்டது. எதுவும் பேசாமல் வழக்கமாய் துணிமணிகளை வைக்கும் இடத்தில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தார், அடுத்த நாள் காலைக்குரிய உணவை அங்கே வைப்பது தினசரி பழக்கம். நேற்றைக்கு கிடைத்தது பிரியாணி.பொட்டலத்தை விரிக்கும் போதே கெட்டுபோன வாடை வந்தது. இருந்தாலும், சால்னாவை ஊற்றி அள்ளித் தின்றார். தொண்டையில் இறங்கிய கவளம் மெல்ல மெல்ல வயிற்றை நிறைத்தது.
“பாட்டா, காலைல நாலு இட்லி வாங்கிக் கேட்டா தர மாட்டேனா? பாதி நாள் ஊசிப் போனதா திங்கயே. நீரு ஒரு தினுசுதான். பேச மட்டும் வாய தொறக்காதையும்.”ஆறுமுகம் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அதைக் காதில் கேட்டது போல காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தார். மூலையில் இருந்த நாற்றம் பிடித்த கழிவறைக்குச் சென்று கைகழுவி வெளியே வந்தவர், கீழே கிடந்த பாதி தண்ணீர் நிரம்பியிருந்த போத்தலை எடுத்து மடக் மடக்கென்று குடித்தார். அவசரத்தில் வாய் நிரப்பிய நீர் தளும்பி நாடி வழியே தாடியில் இறங்கியது. ஒரு பீடியைப் பற்றவைத்து, வாரியலை எடுத்து பெரிய அறையை பெருக்க ஆரம்பித்தார். காலிப் பாட்டில்களை பொருக்கி சாக்குப் பையில் போட்டார். அதில் ஒன்றில் கால்வாசி மிச்சமிருக்க, அதைத் திறந்து குடித்தார். பின், லைசால் கலந்து தரையைத் துடைத்தார். அகர்பத்தி கொளுத்தி நான்கு மூலையிலும் வைத்தார். மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது, மின்விசிறியை ஓடச் செய்து தனித்தனியே கிடந்த மேஜைகளை இணைத்துப் போட்டு அதிலேறி ஒருக்களித்துப் படுத்து, கண் அயர்ந்தார்.
காசில்லாமல் கிடைத்த ஏவலாளி, வியாபார நேரத்தில் சமையல் கூடத்திலும் கூடமாட நிற்பார். பாரில் யாராவது குடித்து சர்த்தித்தால் உடனே சுத்தம் செய்வார். அவருக்கு தேவையெல்லாம் காலை ஒரு கட்டிங், மீதியை குடிப்பவர்களின் அருகே சென்று தலையைச் சொரிந்து, பாட்டு பாடி, உடலை மெல்ல அசைத்து நடனம் ஆடி எப்படியாவது வாங்கிவிடுவார். பெரும்பாலும் டி. எம். எஸ் பாடல்களைத் தான் அன்றைய மனநிலையில் தேர்ந்தெடுத்து பாடுவார். சோகப் பாடல்களை பாடும் போது சிரிப்பார், காதல் பாடல்களை பாடும் போது அழுவார். முதலாளி இவரை எதுவும் சொல்வதில்லை. அவர் எப்போதும் கடைக்கு வந்தாலும் இவரைப் பார்த்துப் பேசாமல் சென்ற நாளில்லை. அவருக்கு வயது எழுபதுக்கு மேலாகிறது. அவர் இவரை அண்ணன் எனச் சொல்வதாலே இவரின் வயது உத்தேசமாக இதுதான் என மற்றவர்கள் நினைத்தனர்.
***
குமரேசனுக்கு பத்து வயதிருக்கும் போது மயிர் கூச்செரிய அந்த நாடகத்தை முதன் முதலில் பார்த்தான். உமையபங்கநேரி நாடகசபையில், மின்விளக்குகள் அலங்கரிக்க, பட்டுவண்ண துணிகள் சலசலக்க திரை விரிந்தது. முன்னே கடல்மணல் அரித்துப் போடப்பட்டிருந்த தரையில் முட்டங்காலில் எழும்பி ஆண்கள் விசிலடிப்பதும், பெண்கள் அப்பக்கம் திரும்பி, தலையைத் தாழ்த்தி தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் அவனுக்குப் பிடித்திருந்தது. விரித்து மடக்கும் இரும்பு நாற்காலியில் அன்றைக்குத் தான் அமர்கிறான். குண்டியை எம்பி எம்பி நாடக மேடையில் ஆட்கள் அங்குமிங்கும் நடப்பதைப் பார்த்து குதூகலித்தபடியிருந்தான். ஆர்மோனியப் பெட்டியை ஒருவர் தூக்கி வரவும், கூட்டத்தில் கூச்சல் கூடியது. தபேலாவும் வர இன்னும் சத்தம் கூடியது. பக்கத்தில் அப்பா நுணுக்கமாக வெற்றிலை நுனியை விரல்களால் கிள்ளி, வெற்றிலையின் பின்நரம்பில் சுண்ணாம்பு தேய்த்து, கோரைப் பாக்கு சீவலையும், போயிலையும் சேர்த்து மடக்கி இடது வாயில் திணித்தார்.
வண்ணவிளக்குகள் விட்டுவிட்டு எறிய நாடகம் ஆரம்பித்தது. கண் முன்னே நடப்பதெல்லாம் ஒரு கனவைப் போல விரிந்தது. காட்சிகள் மாற மாற அவனுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி. கடைசியில் ராமன் அரசனுக்குரிய ஆடையின்றி தலைக் கவிழ்த்து நின்றிருந்தான். சீதை முகத்தில் சிவப்பு வண்ண விளக்கின் வெளிச்சம் குவிந்திருக்க கைகளை பிசைந்தபடி எதிரே நின்றாள். ராமன் தாழ்ந்த குரலில் பாட, சீதை எதிர்த்து ஆங்காரமாகப் பாடினாள். சட்டென்று கருஞ்சிவப்பு நிற துணிகள் பரந்து விரிய, சீதை அதில் இறங்கினாள். ராமன் தலைச் சுற்றி கீழே விழுந்தான்.
நாடகம் முடிந்ததும் குமரேசனின் அப்பா சுப்பையா அவனை நாடகக் கொட்டகைக்கு பின்னால் அழைத்துச் சென்றார். ராமன் பாதி அலங்காரத்தில் பீடியை பற்ற வைத்துக் கொண்டிருந்தார். தீக்குச்சி அணைந்து அணைந்து போகவும், “சின்னசாமி, இங்க வாடே”, என்றார். உள்ளேயிருந்து ஒல்லியான தேகமுடைய ஒருவர் ஓடிவந்து தீப்பெட்டியில் நெருப்பை பற்றவைத்துக் கொடுத்தார்.
சுப்பையா அவரின் அருகில் செல்லவும், “அண்ணாச்சி. இதாக்கும் ஆர்ட்டு, தத்ரூவமா இருந்துச்சு. பாட்டுலயே நடுங்கி நடுங்கி ஒவ்வொரு பாவமா பிடிச்சு பொழிச்சிட்டீருவே. கண்ணெல்லாம் நெறைஞ்சு போச்சு. இதாக்கும் ஜீவிதம், வேற என்ன மயித்துக்குங்கேன். யாராக்கும் சீத வேஷம் கட்டினது? எங்க அம்மையாணையாச் சொல்லுகேன். தொண்டைக்குழி வரண்டுப் போச்சு. என்னவாக்கும் இது, முன்ன நடக்கது நாடகம் தான் தெரியி, ஆனாலும் எல்லுக்கூடல்லாம் துடிக்குவே. நீ சரியானப்பட்ட ஆளுதான்,”சொல்லிக் கொண்டே சுப்பையா ராமனின் கைகளை பிடித்து இரண்டு நூறு ரூபாய் தாள்களைத் திணித்தார்.
“வாத்தியாரே, என்னவாக்கும் இது. இவ்வளவு பைசாவ திணிக்கேறு.” புன்னைகையோடு உடலும் நெளிய நின்றார் அண்ணாச்சி.
“நாடகம் நல்லபடியா நடக்கணும்ன்னா, முன்ன இருக்க சனங்கள நடிக்கப்பட்டவன் உள்ள இழுக்கணும். உடம்ப தாளத்துக்கேப்ப அசைக்கது, பாவம் பிடிச்சு அடித்தொண்டல பாடது மாத்திரம் கெடையாது. அவனவனுக்க நெஞ்சுக்கூட்டுல துடிக்க உசுரு இருக்கே, அதில இருந்து பாத்திரத்த பிடிச்சு மேல எழும்பி உக்கிரம் ஆகணும். உக்கிரம்ன்னா கோபம் மாத்திரம் இல்ல வாத்தியாரே. அதாக்கும் உச்சம், மேடைல சிரிக்கிற சிரிப்புல, அழுகைல, அருவருப்புல, ஆத்திரத்துல, சாந்தத்துல, கரிசனத்துல நெஞ்சுல இருந்த வரப்பட்ட நெஜம், ஆத்மார்த்தம் இருக்கணும். அதெல்லாம், லேசுப்பட்ட காரியமும் இல்ல, எத்தற வருஷம் நாடகம் போட்டுருப்பேன். ஒவ்வொரு மேடைல நின்னாக்கும் அந்த உலகாண்டப் பெருமாள் எனக்கு அருளக் கொடுத்தான். இன்னா நிக்காம்லா, இந்தப் பய. நீறு கிட்ட நின்னு பாக்கணும். கண்ணு என்ன எரிச்சிடும் போல. கைய நீட்டி கடைசில என்ன கேக்கான் பாரு கேள்வி. ஆம்பளயா நீ, கட்டுனவள சந்தேகப்படுகன்னு. அங்க ராமனா நடுங்குகேன், எம் பொஞ்சாதி எனக்க முன்ன நின்னு கேட்டது மாரியாக்கும் இருந்துச்சு. எனக்க கண்ணுமுழியெல்லாம் நெறஞ்சு வழிஞ்சே, அத்தனையும் நெசம். இவனுக்க கூட அந்த மேடைல நின்னதே, இந்த ஜென்ம புண்ணியமாக்கும். ராமனாவே இருந்தாலும் அந்தக் கேள்விக்கு நடுங்கித் தான் ஆகணும். கொரலும் கூடச் சேந்து அப்படியே அதே லயத்துல ஒலிக்கு. நம்ம சுடலைமுத்து மொவன் கிருஷ்ணன்ட்ட பேசணும். திறம உள்ள பய. நம்ம ஆளு ஒருத்தன் இப்போ சினிமால பாகவதர் கூட, சின்னப்பா கூட சரிக்கு சமமா நடிக்கான். ஆளுக்கு ஆளு உபகாரம் பண்ணணுலாம்டே”, அண்ணாச்சி சொல்லவும் அருகில் இருந்த ஒல்லி ஆசாமி, அண்ணாச்சியின் காலை நெடுநாண் கிடையாக மார்பு தரையைத் தொட வணங்கினார்.
“ஆனா, ஒங்களயும் சொல்லணும். கம்பன் தவறவிட்ட முக்கியமான உணர்ச்சித் தருணமாக்கும் இது. வடக்க இதுல பல கதைகள் இருக்கு. இருந்தாலும், இன்னைக்கு கண்டது ராமன மனசுக்கு இன்னும் நெருக்கமாக்குகு. அவனும் நம்மள மாதிரி மனுஷன் தான். மண்டைக்கு வழியில்லாம இப்படி பண்ணி போட்டான் இல்லையா?” சுப்பையா கேட்க,
“இதுல என்ன இருக்கு. கலைக்கு ஒரு தர்மம் இருக்கு, அது எனக்க ஆசான் கத்துக் கொடுத்தது. கத்துக்கிட்டத காட்டுறது மட்டும் வித்தையில்ல. அதுல ஒனக்குன்னு ஒரு நேக்கு இருக்கணும், பார்வை இருக்கணும். அதாக்கும் சமாச்சாரம், அதப் பிடிக்கணும். சொல்லிக்கொடுத்து பண்ணுறது நமக்கு சரிப்பட்டு வராது. ஒருக்கா, காரைக்குடில ஒரு நாடகம் போட போனப்போ. பர்மால இருந்த ஒரு செட்டியாரு நாடகம் பாக்க வந்திருந்தாறு, அன்னைக்கு போட்டது, ராமன் சூர்ப்பனகை லெட்சுமணன் வாரப்பட்ட நேரம், அப்போ சுதாகரன்னு ஒருத்தராக்கும் வசனம் எழுதிக் கொடுத்தாரு. அவராக்கும் சொன்னது, சூர்ப்பனகை மேல மட்டும் தப்பு இல்ல, ராமனும் சரிக்கு சமமா அவள நளியடிச்சி, கிண்டல் பண்ணி அவளத் தூண்டி விட்டுருக்கான். அத நாங்க சிரிப்பும், நளியும் கலந்து நடிக்கோம். முன்ன இருந்த ஜனத்துக்கெல்லாம், சூர்ப்பனகைக்க மூக்க லெட்சுமணன் அறுக்கும் போது ஒரே கோபம், பொம்பளைகளெல்லாம் அழுக. நாடகம் முடிக்கவும் உங்கள மாதிரி அந்த செட்டியாரு எனக்க கையப் பிடிச்சு ஒரே அழுகை, மனுஷனுக்க கொணம் இருக்கே, யாரும் அறியாத்தது. அவருக்கு என்ன பிரச்சனையோ! அப்போ பேச்சுவாக்குல பர்மா பக்கத்துல கம்போடியான்னு ஒரு நாடு இருக்காம், அதுல ராமாயணத்துல பல கதை இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சாரு. அனுமானுக்கு அதுல ஒண்ணுல ஆயிரம் பொண்டாட்டியாம், சொல்லிச் சிரிக்காரு, இங்கன அனுமன் பிரம்மச்சாரி, அங்கன மன்மதனாக்கும். ராமனும், அங்க இருக்கவன் தான் நம்மள்ள ஒருத்தன். இன்னைக்கு போட்டது ஏகதேசம் நாம அறிஞ்ச கதைதான். இனி ஒவ்வொன்னா ஒத்திகை பாக்கணும். சொல்லுக்கு கம்பன்னு பேராசான் தொணைக்கு நிக்கான். கூடவே நமக்கு ஏத்த ஆளு இருக்கான்ல” அண்ணாச்சி சொல்லிவிட்டு சின்னசாமியைப் பார்க்க, அவன் வெட்கத்தில் தலைக்குனிந்து நின்றான்.
சுப்பையாவும் கண்கள் நிறைய அவர்களையே வெறித்துக் கொண்டு நின்றார். குமரேசன் அந்த ஒல்லி ஆசாமியையே புரியாமல் பார்த்தான். அண்ணாச்சிக்கு காரணம் புரியவும், “சின்ன பயலுக்கு புரியல. நீ பாத்தேலா நாடகம். நல்லாருந்துச்சா, இந்த அண்ணன்தான் சீதை வேஷம் கட்டுனது”. அவன் கண்கள் விரிய ஆச்சர்யத்தோடு சின்னசாமியைப் பார்த்தான். சுப்பையாவும் அண்ணாச்சியும் சிலநேரம் வேறு கதைகளில் போய் உள்ளம் கனிக்க சிரித்து சிரித்து ஓய்த்தார்கள்.
பிறகு, வந்தவர்கள் செல்லவும் அண்ணாச்சியும் சின்னசாமியும் அங்கேயே நின்றிருந்தார்கள்.சின்னசாமி அரிதாரத்தைக் கலைத்து விட்டு வந்திருந்தான். அண்ணாச்சி அவனை தட்டிக் கொடுத்தார், “மெயின் வேஷம் மொதத் தடவ கட்டுன மாறி இல்லப்போ. ஒங்க அய்யா ஒன்ன இங்கக் கொண்டுவிடப்பையே தெரியும். மொகத்துல தெரியும்டே அந்தவொளி. நல்லா இருப்ப. எம் மனசாரச் சொல்லுகேன்”. அண்ணாச்சி சொன்னவுடன் சின்னசாமியின் கண்கள் கலங்கியது.
சின்னசாமி, அண்ணாச்சியோடு உமையபங்கநேரி நாடக சபாவின் எல்லா நாடகங்களிலும் அவருக்கு இணையாக எல்லா வேடங்களையும் பூண்டான். பாஞ்சாலியாய் கூந்தல் அவிழ கௌரவர் சபையில் சபதம் இடுவான், சாவித்திரியாய் எமனை மறித்து மன்றாடுவான், சந்திரமதியாய் இறந்த மகன் முன்னே சுடுகாட்டில் அழுதுபுரள்வான். ஒப்பனையும் ஆடைகளும் சேர்ந்ததும் அங்கே சின்னசாமி இல்லாமல் போவான். சில மேடைகளில் அவன் பெண் என்றெண்ணியே ஒப்பனையை கலைக்க செல்கையில் ஆண்கள் கூட்டம் மொய்க்கும், விஷயம் தெரித்ததும் மூக்கறுந்து போவார்கள். உண்மையில் அவனின் நிறமும், முக லட்சணமும் பெண்வேடம் புரிய உதவின. ஒல்லி தேகம் பூசலானது போல் மாறினாலும், அவனுக்குள் இன்னும் அண்ணாச்சியும் முன் நிற்கும் போது, உடல் நடுங்குவதை எத்தனை வேடம் போட்டவன் ஆனாலும் மறைக்க இயலவில்லை.
“இன்னும் காலு குளிர் காய்ச்சலு பிடிச்சவன் மாரிலாடே நடுங்குகு. இதுக்கு ஒரே வழிதான் இருக்கு, கேட்டியா. மேடைல பாடி பாடி நடிச்சாலும், நெசத்துல ஒருத்தி வந்தா தான் தீருமாக்கும்.”
“பொம்பள வேஷம் கட்டுறவன, யாரு கல்யாணம் செய்வா? பொறத்த நான் நடக்கத வச்சு கூட உள்ளவனே கிண்டுவான். எனக்கு அதுலாம் சரிப்பட்டு வராதையா. ஒங்க கூட கடைசி காலம் வர வருவேன். பொறவு பின்பாட்டு, வேஷம் கட்டிவிடதுன்னு நமக்கு பல வேலை தெரியும். எப்படியும் பொழச்சுப்பேன். ஒரு வயித்து கஞ்சிக்கே படாதபாடு பட்டவன், இப்போ மூணு நேரமும் மனசு நெரம்பியாக்கும் திங்கேன். இது போறாதா.”
“சரியில்லடே, கலைல இருக்கப்பட்டவனுக்கு ஒரு ஒழுங்கு வேணும். அந்த ஒழுங்கு தனியா இருக்கப்பட்டவன்ட்ட செலப்பம் இருக்காது, இன்னைக்கு நீ இருக்குன்னு சொல்லுவ, ஆனா ஒத்தக்கட்டையா கெடக்கது, கலையத் தாண்டி மத்த சப்பட்ட வெஷயத்துல கொண்டு நிறுத்திரும். எனக்க வயசுல எத்தற பேர கண்டுட்டேன், ஒன்னு குடி, கஞ்சான்னு போயி நின்னான். இல்ல பரக்குடில போய் நின்னான். கடைசில சீரழிஞ்சு போனான். ஒனக்க கதியும் அப்படியாகணும்ன்னு நெனைக்கியோ! எனக்க கணக்குல குடும்பம் வேணும், அதாக்கும் வாழ்க்கைய நேராக்கும்.”
அண்ணாச்சியின் தலைமையிலே உமையபங்கநேரி சோழராஜா கோவில் முருகன் சன்னதியில் திருமணம் நடக்க வீடும் தனியாய் பார்த்து அமர்த்தினார்கள். அவளின் அப்பா நாடக சபாவில் தையல் வேலை செய்தார். ரதியில் சாயல் அவள், பின்முதுகின் முனை எட்டும் வரை கருங்கூந்தல். சின்னசாமிக்கோ அவளோடு நடக்கும் போதெல்லாம் நெஞ்சு குறுகுறுக்கும், பத்து அடியை கால்கள் எட்டும் ஒவ்வொரு முறையும் அவள் முகத்தைப் பார்ப்பான். அவளும் முகம் மலர,
“இப்போ நாம நடக்கணுமா? இல்ல இங்கனயே ஒருத்தர் மொகத்த மாறி மாறி பாத்துக்கிட்டே நிக்கணுமா?”, அவள் சொல்லவும் பிடரி தாண்டி வளர்ந்திருக்கும் நீள்முடியை கோதியபடியே நாணி நடப்பான். நாடகமும் வாரம் முழுக்க இருக்க அண்ணாச்சி கை நிறைய அள்ளிக் கொடுத்தார். கிடைப்பதை அப்படியே கொடுப்பான்.
“ரதியாக்கும் நீ,
இந்திரன் சபை காணா
ரதியாக்கும் நீ,
ரம்பையும், மேனகையும், ஊர்வசியும்
மார்பு பொறாது போவர்
நின் திருமுகம் கண்டால்.”
இரவுகளில் அவளின் முன் குரலெடுத்துப் பாடுவான். அவளும் ரசித்துக் கேட்பாள். சிலநேரம் நளினத்தோடு அவள் முன் நடந்து காட்டுவான், “வேஷம் கட்டி நடக்கது வேற, இது என்னவாக்கும். இனி இப்படி பண்ணக்கூடாது.” பொய்க் கோபம் கொள்வாள்.
அண்ணாச்சியின் முன் அவனின் நடுக்கமும் போனது, நாடகத்திலும் அவன் பாவமும், மோனமும் கூடித் திளைத்தது.நாகர்கோயிலுக்கு கிருஷ்ணன் வந்த போது அண்ணாச்சியைப் பார்க்க வந்திருந்தார். “அண்ணாச்சி, சொகமா? நாடகம்லாம் நல்ல போகுதுன்னு கேள்விப்பட்டேன். அப்படியே வில்லுப்பாட்டையும் கொண்டு போகணும். ரெண்டயும் விட்டுடக்கூடாது. எனக்கும் இப்போ சொல்லும் களியும் ஒன்னா இருக்கப் போய் காலம் ஓடுகு. கேட்டியலா,” சொல்லவும், அண்ணாச்சி உடலைக் குழைத்தபடி சிரித்தார்.
சின்னசாமியும் அருகில் நிற்க, அண்ணாச்சி, “கிருஷ்ணா, ஒரு உபகாரம் ஒன்னு கேப்பேன். ஒங்கிட்ட கேட்டா இல்லைன்னா சொல்லப்போற,” கேட்டார்.
“நான் என்னைக்கு இல்லைன்னு சொன்னேன். அதும் நீங்க கேட்டு.”
“இன்னா நிக்கான்லா, நடிப்பும் பாட்டும் பிரமாதமா வருகு. சரஸ்வதிக்க அனுக்கிரகம். நாடகத்தோட இவன் நின்னுறக் கூடாது,” அவர் சொல்லிமுடிக்கவும் கிருஷ்ணன் திரும்பி சின்னச்சாமியைப் பார்த்தார். “கேமராக்கு பிடிச்ச மொகம் தான். மனுஷன விட, அதுக்காக்கும் மொத பிடிக்கணும், பொறவுதான் மனுஷன்,” சொல்லிமுடிக்கவும் சுற்றியிருந்தவர்களும் உரக்கச் சிரித்தார்கள்.
மாறி மாறி அண்ணாச்சியையும் சின்னசாமியையும் பார்த்துவிட்டு, “மருமொவனே, நம்ம மெட்ராஸ் அட்ரஸ அண்ணாச்சிட்ட கொடு.” எதிரே நின்றுகொண்டிருந்த கருத்த முறுக்கு மீசைக்கார இளைஞனிடம் சொன்னார். “அண்ணாச்சி,ஆருன்னு ஆளு பிடி கிடைக்கலயா, நம்ம அக்கா பாஞ்சாலிக்க மகன், எங்க அப்பாக்க பேரத்தான் பாதி இவனுக்கும் உட்டுருக்கு. எப்படி பேரச் சொல்லி கூப்பிட, அப்புறம் பணம் வந்ததும் அப்பன் பேரச் சொல்லுகான் பாரு பவுசு பிடிச்ச கிருஷ்ணன்னு, நான் போனப்பொறவு நம்ம ஆளுகளே சொல்லும். அதுவும் பாதி பேரு.” மீண்டும் அதே சிரிப்பலை.
சின்னசாமிக்கு தலைகால் புரியவில்லை, நாடக சபாவில் கூட நடிப்பவர், இசைக் கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் எல்லோரிடமும் சொன்னான். வீட்டிலும் நாடகத்திலும் எவ்வித பிரச்சனையுமில்லாமல் மகிழ்ச்சியாக நாட்கள் கடந்து போனது. அண்ணாச்சி வற்புறுத்தி மெட்ராஸ் போகச் சொல்ல, அடிக்கடி அங்கேயும் போய் வந்தான். அண்ணாச்சியும் வெளியூர்களில் நாடகம் போட அங்கேயும் சென்றான். மாதத்தில் சிலநாட்களே ஊரில் இருக்க முடிந்தது. தட்டுவீடு கட்டினான். மனைவியின் கழுத்தில் காசுமாலை, காதில் மாட்டி அணிய ஊரின் கண்ணெல்லாம் அவர்கள் மேல் காய்ந்தது.
சின்னசாமி ஊருக்கு வந்தபோதுதான் அவள் கர்ப்பமாக இருப்பதே தெரியும், அன்றைக்கு அவன் கால்கள் தரையிலே இல்லை. நண்பர்கள் வற்புறுத்த மதுவிருந்தும் கொடுத்தான். புதிய பழக்கம் கொஞ்சம் குடித்தவுடன் தலைச் சுற்ற, நண்பர்கள் தொடர்ந்து குடிக்கவும் அங்கே படுத்துக் கொண்டான்.
“இவன் என்னத்துக்கு கெடந்து துடிக்கான். எதோ இவந்தான் அப்பன் மாறி”
“மாசத்துல பாதி நாளு வெளியூருல தான் கெடக்கான். அப்புறம் எப்படி, எனக்கும் அந்த சந்தேகம் உண்டு மக்கா.”
“இன்னொன்னு இவனால மத்தது முடியுமா? ஏம்ல சிரிக்கேங்க”
கண்கள் மூடிக்கிடந்தாலும், காதுகள் விழித்தே இருந்தன. அவர்கள் பேசி முடிக்கும் வரையிலும் அசைவில்லாமல் கிடந்தான். அவன் இதயம் பொசுங்கிய வாசம் நாசி தாண்டி பெரும்வீச்சமாய் அவனைச் சுருட்டியது. நெருப்பின் தழல்கள் தாமரை இதழாய் விரிய அதன் நட்டநடுவிலே கங்காகிப் புகைந்தான். எழுந்து ஓர் நொடியில் வீட்டிற்கு ஓடினான்.
அண்ணாச்சியிடம் மனைவியைக் காரணம் காட்டி நாடகத்திற்கு செல்வதைக் குறைத்தான். வீட்டிலே இருப்பதும் அயர்ச்சியாக இருக்க அடிக்கடி வெளியே செல்வான். அவன் நடக்கையில் பின்னால் யார் எது பேசினாலும், அவன் மனம் ஒன்றிலே நிலைக் கொண்டிருந்தது. இரவெல்லாம் உறங்காமல் நீண்டு போனது. மனைவியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பான். சில நாடகத்திற்கு அண்ணாச்சி இவன் இல்லாமல் செல்வதில்லை. அவரின் வார்த்தைக்கு உண்டான மதிப்பிற்கு அதற்கு மட்டும் சென்று வருவான். அப்போதெல்லாம் ஊரார் இவனைக் கண்டால் நளியாக சிரிப்பதைப் போலத் தோன்றும்.
ஊர் முழுக்க ஆண்களும் பெண்களும் முண்டியடித்து நாடக மேடையைச் சுற்றி நின்றனர். அவன் அன்றைக்கு ராமர் வேடம் தரித்திருந்தான். பின்னாலே அண்ணாச்சி சாதாரண ஆடையில் இருந்தார். “அண்ணாச்சி, இன்னைக்கு என்ன புதுசா ராமர் வேஷம் நான் போட்டுருக்கேன்,” அண்ணாச்சி எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றார். “எத்தற நாள் ராமர் இல்லாம இருந்திருக்கா? தப்பு பண்ணாம எப்படி இருந்திருப்பா? அவள எப்படி கற்புக்கரசின்னு சொல்ல முடியும்.,” ஊர்மக்கள் கத்தினர். அவன் புரியாமல் விழித்தான். அவன் கண்களில் நீர் தாரைத் தாரையாக வடிந்தது. சட்டென்று மின்னல் வெட்டியது போல தீயின் நாக்குகள் வெறிக்கொண்டு எழ ஆரம்பித்தன. “இதாக்கும் சரி, நெருப்புல எறங்கி காட்டட்டும், நாங்க ஒத்துக்கிடுகோம்.” மீண்டும் அதே கூச்சல் அவனுக்கு யார் சீதை வேடம் பூண்டது எனத் தெரியவில்லை. பின்னால் அவன் அறிந்த முகம் வீங்கிய வயிற்றோடு வந்தாள். அவனின் சப்தநாடியும் அடங்கிப்போனது. அவனால் உடலை அசைக்க முடியவில்லை, வாய் திறக்க மறுத்தது, கண்களை மூட முயற்சித்தும் இமைகள் நகர மறுத்தன. மெல்ல வந்தவள், தீயில் பாதம் பதித்தாள்.
கண் விழிக்கையில், உடல் வியர்த்தது. பக்கத்தில் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். வயிற்றில் சேலை விலக அங்கேயே பார்த்தான். அதில் ஏதோவொன்று அசைவது தெரியவும், எழுந்து வெளியே ஓடினான்.
***
டக்கர் மதுக்கடையில் இரவானாலே கூட்டம் மொய்க்கும் பெரிய நகரத்தில் ஓரளவுக்கு இங்கு மட்டுமே மதுக்கூடம் சுத்தமாக இருப்பதும் ஓர் காரணம். அன்றைக்கு முதலாளி தாமதமாகத்தான் வந்தார், வழக்கமாய் ஆறு மணிக்கே வந்துவிடுவார். அவர் இருந்தால் சண்டை சச்சரவுகளை சீக்கிரம் சரிக்கட்டி விடுவார், இரவு கடையை அடைத்ததும் மூத்த மகன் காரில் வந்து அப்பாவை அழைத்துச் செல்வான். இரண்டு நாள் முன்னர் தான் குடும்பத்தோடு சொந்த ஊர் சென்று திரும்பி வந்திருந்தார். சப்ளையர் ஆறுமுகம் கண்ணில் படவும், அவனை அழைத்தார்.
“முத்துசாமி அண்ணன எங்கடே, கண்டா வரச் சொல்லு”
“ஐயா, பாட்டாக்கு இன்னைக்கு சுருதி கூடிப்போய் நிக்கு ஆட்டமும் பாட்டமும் தான். வரச் சொல்லுகேன்,” அவன் செல்லவும், மெல்ல மதுக்கூடத்திற்கு வந்தார்.ஓர் மதுக் கோப்பைகள் நிறைந்த மேஜையின் அருகில் துள்ளி ஆடிக்கொண்டிருந்தார். ஆறுமுகம் சென்று அவரை அழைத்து விஷயத்தைச் சொல்லவும் முதலாளியின் அறை அருகே வந்தார். இருவரும் முகம் நோக்காமல் தலையைக் கவிழ்த்தபடியே நின்றனர்.
“அண்ணே, ரெண்டு நாளைக்க முன்னாடி குடும்பத்துல ஒருகல்யாணம் நாரோயிலுக்கு போயிருந்தேன். எத்தற தடவையோ போயிருக்கேன். ஆனா அன்னைக்கு ஒங்க சம்சாரத்தயும் மகனையும் பாத்தேன். ஒங்க பேத்தியத்தான் என் சகலபாடிக்க மகன் கட்டியிருக்கான், அவங்க கல்யாணத்துக்கு தான் போனேன். அன்னைக்கு குடும்பத்த பத்தி விசாரிக்கவும்தான் ஒங்க பேரு, ஓடிப்போனது, இப்போ உயிரோடி இருக்காரோ! இல்லையோ! தெரியாதுன்னு சொன்னாங்க. எனக்கு கஷ்டமாயிடிச்சு. ஒங்கள விட சின்ன வயசுதான் இருந்தாலும் சொல்லுகேன். ஒருவாட்டி போய்ட்டு வந்திரக் கூடாதா? இல்ல நீங்க இங்கத்தான் இருக்கேன்னு சொன்னா போதும். என்ன அனுமதிச்சா நானே சொல்லுகேன்,” குமரேசன் சொல்லி முடித்ததும் முத்துசாமி எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.
இரவு கடையைச் சாத்தும் வரையிலும் குமரேசனுக்கும் நெஞ்செல்லாம் புழுக்கமாக இருந்தது. கடையின் வெளியே வந்தார். மதுக்கடையின் நடையில் முத்துசாமி அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் எழுந்து அருகே வந்தார்.
“அங்க எல்லோரும் சவுக்கியமா இருக்காங்கல்ல?” குரல் கட்டியிருந்தது.
“எல்லோரும் சொகமா, செட்டில் ஆயிதான் இருக்காங்க. நீங்க ஒருவாட்டி போயிட்டு வந்தாதான் என்ன?”
“போக முடியாது. அத ஒங்கிட்ட சொன்னாலும் புரியாது. இது எனக்க விதி.”
“சரி, இதுவரைக்கு நான் கேட்டதில்ல. எதுக்கு ஓடி வரணும்.”
“நான் என்ன ராமன்னா நினச்ச,” சொல்லிவிட்டு முத்துசாமி வழக்கமாய் படுக்கும் நடைமேடைக்கு நடந்தார்.
குமரேசனுக்கு நாடகத்தில் ராமன் பாடும் கடைசி பாடல் காதில் ஒலித்தது.
“துஞ்சாதாரே துஞ்சாதாரே
பொருக்காதாரே பொருக்காதாரே
உய்வழி அறியா மூடன் நானே
செவிவழி சேதி
பொய் மொழியாகி
நன்வழி மறுத்து
பேய்வழி சேர்ந்தேன்.
துஞ்சாதாரே துஞ்சாதாரே
பொருக்காதாரே பொருக்காதாரே
ராமன் எனும் மூடன் நானே”